என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து மீண்டும் தங்கம் விலை உயரத்தொடங்கி இருக்கிறது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    தங்கம் விலை கடந்த சில நாட்களாக யாரும் எட்டிப்பிடிக்க முடியாத நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் ரூ.50 ஆயிரத்தை கடந்த நிலையில், தொடர்ந்து விலை அதிகரித்து கொண்டே வந்து, கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி ஒரு பவுன் ரூ.55 ஆயிரத்தையும் கடந்து வரலாறு காணாத உச்சத்தை அப்போது பதிவு செய்தது.

    அதன் பின்னர், மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், அதன் விலையும் சரியத்தொடங்கியது. ஒரு கட்டத்தில் ரூ.50 ஆயிரத்துக்கும் கீழ் வந்துவிடும் என நினைத்து கொண்டிருந்த நேரத்தில், ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து மீண்டும் விலை உயரத்தொடங்கி இருக்கிறது.

    தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகத்திலேயே இருந்த நிலையில், கடந்த மாதம் 21-ந் தேதி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதன் தொடர்ச்சியாகவும் விலை உயர்ந்து, ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை பதிவு செய்து வருகிறது.

    சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரன் ரூ.56 ஆயிரத்துக்கு 640-க்கு விற்பனையானது.

    இந்நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.7,050-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • ஏன் இப்படியெல்லாம் செய்கிறார் என்று நாங்கள் முழுமையாக அறிந்தாக வேண்டும்
    • அங்கு பணியாற்றும் மருத்துவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

    கோவையில் ஆன்மீக குரு ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் ஈஷா யோகா மையத்தில் பெண்கள் சந்நியாசம் மேற்கொள்ள மூளைச்சலவை செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அவ்வாறு ஈஷா மையத்தில் தங்கியிருக்கும் தனது இரு மகள்களை மீட்டுத் தரக் கோரி கோவை வேளாண் பல்கலை.யில் பேராசிரியராக பணியாற்றி வரும் காமராஜ் என்பவர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்குதல் செய்திருந்தனர்.

    இந்த மனு நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் வி.சிவஞானம் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் ஆஜரான காமராஜின் பெண்கள் இருவரும் தங்கள் விருப்பத்தின் பேரிலேயே ஈஷா மையத்தில் உள்ளதாகக் கூறினார்.

    இதைத்தொடர்ந்து பேசிய நீதிபதிகள், தனது மகளுக்குத் திருமணம் செய்து வைத்து அவரை வாழ்க்கையில் நல்லபடியாக செட்டில்   ஆக்கிய ஜக்கி வாசுதேவ் மற்ற இளம் பெண்களின் தலையை மொட்டையடித்துக்கொள்ள ஊக்குவிப்பது ஏன்? அவர் இப்படிச் செய்வதற்குக் காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினர். மேலும் துறவியாகத் தன்னை கூறிக்கொள்ளும் ஒருவர் ஏன் இப்படியெல்லாம் செய்கிறார் என்று நாங்கள் முழுமையாக அறிந்தாக வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

     

    இதற்கிடையே மனுதாரரின் வழக்கறிஞர் பேசுகையில், ஈஷா அறக்கட்டளை தொடர்பாக பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகவும், சமீபத்தில் அங்கு பணியாற்றும் மருத்துவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். எனவே ஈஷா அறக்கட்டளை தொடர்பான அனைத்து வழக்குகளையும் பட்டியலிட்டு, அக்டோபர் 4-ம் தேதிக்குள் அரசு வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

    • ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வேண்டிக் கொள்கிறேன்.
    • ரஜினிகாந்த் குணமடைய வேண்டுகிறேன்.

    நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை கிரீம்ஸ் ரோட்டில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அவர் அனுமதிக்கப்பட்டார். இன்று அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கவர்னர் ஆன் என்.ரவி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நடிகர் ரஜினிகாந்த் விரைவாகவும் சீராகவும் குணமடைய உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வேண்டிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • திராவிடமணி திருச்சி மத்திய சிறையில் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
    • இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் உறுதிசெய்யுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.

    அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    திருச்சி மாவட்டம் பழூரைச் சேர்ந்த திராவிடமணி என்பவர், திருச்சி மத்திய சிறையில் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    விடியா திமுக ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் என்பது தொடர்கதையாகிவிட்ட நிலையில், காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லும் விடியா திமுக முதல்வரோ, தன் வாரிசுக்கு முடி சூட்டுவதில் மட்டும் கவனம் செலுத்துவது கண்டனத்திற்குரியது.

    உயிரிழந்த திராவிடமணியின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கவும், மரணம் குறித்த உண்மைக் காரணத்தைக் கண்டறிந்து, தொடர்புள்ளோர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் உறுதிசெய்யுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • சென்னை குடிநீர் வாரியத்துக்கு ஆண்டுதோறும் 2 முறை பொதுமக்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி செலுத்தி வருகிறார்கள்.
    • இன்று முதல் வரும் 30-ந்தேதி வரையில் முழுமையாக வரி செலுத்துவோருக்கு முதன் முறையாக 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை குடிநீர் வாரியத்துக்கு ஆண்டுதோறும் 2 முறை பொதுமக்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி செலுத்தி வருகிறார்கள். உரிய காலக்கட்டத்தில் வரியை செலுத்துவோர்களை ஊக்குவிக்கும் வகையில், இன்று முதல் (1-ந்தேதி) வரும் 30-ந்தேதி வரையில் முழுமையாக வரி செலுத்துவோருக்கு முதன் முறையாக 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இந்த முறை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

    எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது 2024-25-ம் ஆண்டுக்கான 2-வது அரையாண்டுக்கான வரியை முழுமையாக செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகையாக அதாவது அதிகபட்சம் ரூ.1,500 வரையில் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆஞ்சியோகிராமை விட அதி நவீன அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக தகவல்.
    • சிறுநீரகம் அருகே ஏற்பட்ட கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக தகவல்.

    வேட்டையன் படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூலி படத்தில் நடித்து வருகிறார். நேற்றிரவு அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    செரிமானம் பிரச்சனை மற்றும் கடுமையான வயிற்று வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. பல்வேறு பரிசோதனைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல் வெளியானது.

    இந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆஞ்சியோகிராமை விட 70 வயதை கடந்தவர்களுக்கு செய்யப்படும் அதி நவீன அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.

    மற்றொரு தகவல்படி அவருக்கு சிறுநீரகம் அருகே ஏற்பட்ட கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ரஜினிக்கு தொடையிலிருந்து சதையை எடுத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அப்பல்லோ மூத்த மருத்துவர்கள் மூவர் இந்த அறுவை சிகிச்சையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • இந்திய விமானப்படையின் விமானப்படை தின விமான கண்காட்சி தாம்பரம் மற்றும் மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது.
    • விமான நிலைய வான்தடம் 15 நிமிடங்கள் முதல் 2 மணிநேரம் வரை பல்வேறு இடைவெளிகளில் மூடப்படும்.

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகத்தின் சார்பில் இந்திய விமானப்படை வான் சாகச நிகழ்ச்சி காரணமாக விமான பயணிகளுக்கு முன்னறிவிப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இந்திய விமானப்படையின் விமானப்படை தின விமான கண்காட்சி தாம்பரம் மற்றும் மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 8-ந் தேதி வரை சென்னை சர்வதேச விமான பயண அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி விமான நிலைய வான்தடம் 15 நிமிடங்கள் முதல் 2 மணிநேரம் வரை பல்வேறு இடைவெளிகளில் மூடப்படும் விரிவான அட்டவணையை பகிர்ந்துள்ளது. இன்று பகல் 1.45 மணி முதல் மாலை 3.15 வரை மூடப்படும். நாளை காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், 3-ந் தேதி காலை 10.45 மணி முதல் காலை 11 மணி வரையிலும், 4-ந் தேதி காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், 5-ந் தேதி பகல் 2 மணியில் இருந்து மாலை 3 மணி வரையிலும், 6-ந் தேதி காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் காலை 10.45 மணி முதல் 11 மணி வரையிலும் விமான ஓடுபாதை மூடப்படும். இந்த மாற்றங்களுக்கு பயணிகளின் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவர்களுடன் இணைந்து தூய்மைப் பணியை மேற்கொண்டார்.
    • கிண்டி காந்தி மண்டபத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி.

    சென்னை:

    நாளை காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 7 மணிக்கு கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்துக்கு சென்று அங்குள்ள காந்தி சிலையை தண்ணீர் ஊற்றி தனது கையால் சுத்தப்படுத்தினார். அதன் பிறகு தரையையும் 'மாப்' பயன் படுத்தி சுத்தப் படுத்தினார். குப்பைகளை அகற்றினார்

    அதன் பிறகு காந்தி மண்டபம் வளாகம் முழுவதும் சென்று தனது கையால் குப்பைகளை அகற்றிய அவர் ஒரு வாளியில் சேகரித்தார்.


    கவர்னர் ஆர்.என்.ரவியுடன் தன்னார் வலர்கள் சுமார் 300 பேர் இணைந்து காந்தி மண்டபம் வளாகம் முழுவதும் சென்று குப்பைகளை அகற்றி னார்கள். காலை 7 மணியில் இருந்து 8 மணி வரை கவர்னர் இந்த பணியில் ஈடுபட்டார்.

    முன்னதாக `தூய்மையே சேவை' என்ற உறுதிமொழி யையும் ஏற்றுக் கொண்டார். கவர்னர் ஆர்.என்.ரவியின் இந்த செயல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

    • கூலி படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதி.
    • கடுமையான வயிற்று வலி காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்.

    நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதனைத் தொடர்ந்து கூலி என்ற படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்திற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    ரஜினிகாந்துக்கு மருத்துவமனையில் பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட இருக்கிறது. பரிசோதனைக்குப்பின் அவர் டிஸ்சார்ஜ் ஆவார் எனத் தெரிகிறது.

    செரிமானம் பிரச்சனை மற்றும் கடுமையான வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்.

    எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்கின்றன.
    • ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதேபோல சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்கின்றன. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு சமையல் மற்றும் வணிக சிலிண்டர் விலையை மாற்றியமைக்கும். அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,

    வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 48 ரூபாய் அதிகரித்து ரூ.1,903 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 38 ரூபாய் விலை அதிகரித்து இருந்த நிலையில், இந்த மாதமும் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 818 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.

    • வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை வழியாக செல்லலாம்.
    • ஊர்வலம் செல்லும் பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

    சென்னை:

    திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை பூக்கடை பகுதியிலிருந்து புறப்பட்டு திருப்பதிக்கு நாளை (புதன்கிழமை) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளது. இதையடுத்து, ஊர்வலம் செல்லும் பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

    இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    * காலை 8 முதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை என்.எஸ்.சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் ஈ.வே.ரா சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலையை பயன்படுத்தலாம்.

    * பிற்பகல் 3 மணி முதல் ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் பேசின் பிரிஜ் சாலை, மின்ட் வழியாக பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலையை பயன்படுத்தலாம். மேலும், ஈ.வே.ரா சாலை, முத்துசாமி சாலை மற்றும் ராஜாஜி சாலைகளை பயன்படுத்தலாம்.

    * திருப்பதி திருக்குடை ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும்போது சூளை ரவுண்டானவில் இருந்து டெமலஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை வழியாக செல்லலாம்.

    * ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் வரும்போது மசூதி பாயின்டிலிருந்து சூளை ரவுண்டான நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

    * திருக்குடை ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் வரும்போது நாரயணாகுரு சாலை ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

    * திருப்பதி திருக்குடை ஊர்வலம் அவதான பாப்பையா சாலை வரும்போது பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக செல்லலாம்.

    * ஊர்வலம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வரும்போது டவ்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் நாரயண குரு சாலை வழியாக செல்லலாம்.

    * ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பை அடையும்போது மில்லர்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பிரிக்ளின் சாலை வழியாக ஓட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

    * திருப்பதி திருக்குடை ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பில் வரும்போது கொன்னூர் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஓட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் மேடவாக்கம் குளம் சாலை வழியாக செல்லலாம்.

    * ஊர்வலம் கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் அடையும்போது ஓட்டேரி சந்திப்பு மற்றும் மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து கொன்னூர் நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் ஓட்டேரி சந்திப்பிலிருந்து குக்ஸ் சாலை வழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து வி.பி.காலணி (தெற்கு) தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாக செல்லலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றும் பணியை மாநகராட்சி தொடங்கி உள்ளது.
    • பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி ஆணையர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிளக்ஸ் பேனர்களை அகற்ற மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இதன்படி 15 மண்டலங்களிலும் பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

    வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி ஆணையர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்றும் பணியை மாநகராட்சி தொடங்கி உள்ளது.

    ×