என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ந்தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
- அக்டோபர் 6-ந்தேதி பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சி மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ந்தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, 92-வது இந்திய விமானப்படை தினத்தையொட்டி, அக்டோபர் 6-ந்தேதி காலை 11 மணியளவில் பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது.
இதில் அனைத்து வகை போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், சாரங் மற்றும் சூரியகிரண் வான்சாகச குழுக்கள் பங்கேற்கின்றன. இந்த சாகச நிகழ்ச்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படுவர்.
இந்நிலையில் இந்திய விமானப்படை தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் நடைபெறும் விமானப்படை வான்வெளி சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக அக்.6-ந்தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார்.
- மாதம்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம்.
- ஸ்ரீ வைஷ்ணவி தேவி அலங்காரம் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாதம்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி புரட்டாசி மாதத்திற்கான அமாவாசை விழா நேற்று நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம், பஞ்சாமிர்தம், இளநீர், தேன், பன்னீர் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள் பாலித்தனர்.
உற்சவ அம்மனுக்கு ஸ்ரீ வைஷ்ணவி தேவி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிர காரத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இரவு 11 மணி அளவில் அங்கிருந்த அம்மன் பம்பை, மேளம் முழங்க வடக்கு வாசல் வழியாக கொண்டு செல்லப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் கட்டப்ப பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்தார்.
பின்பு பூசாரிகள் பக்தி பாடல்கள் பாடினர். இரவு 12 மணி அளவில் அம்மனுக்கு அர்ச்சனையும், மகா தீபாரா ணையும் நடைபெற்றவுடன் ஊஞ்சல் உற்சவம் முடிவடைந்து அம்மன் மீண்டும் கோவிலின் உள்ளே சென்றார்.
விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரியில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
- சூரியனை கோள்கள் சுற்றி வருவது போல் ஏராளமான வால் நட்சத்திரங்களும் வலம் வருகின்றன.
- சூரியனை நீள்வட்டபாதைகளில் ஒவ்வொரு கோள்களும் சுற்றி வருகின்றன.
ஊட்டி:
நவீன அறிவியல் நாள்தோறும் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் மனிதனால் தொடமுடியாத இயற்கையின் பாகங்கள் எத்தனையோ உள்ளன.
அவை ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் அள்ளித் தருபவை என்பது தான் சுவாரசியம். அதில் ஒன்று வானில் தோன்றும் வால்நட்சத்திரங்கள். சூரியனை கோள்கள் சுற்றி வருவது போல் ஏராளமான வால்நட்சத்திரங்களும் வலம் வருகின்றன.
சூரியனை நீள்வட்டபாதைகளில் ஒவ்வொரு கோள்களும் சுற்றி வருகின்றன. அதேபோல் தூசி, கற்கள், பனிக்கட்டி உள்ளிட்டவை இணைந்த ஏராளமான கலவைகளும் சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. இதனை தான் வால்நட்சத்திரம் என்கிறோம்.
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி மாலை 6 மணியளவில் மேற்குதொடர்ச்சி மலையொட்டிய ஊட்டியில் மேற்கு வானப்பகுதியில் அரிய வால்நட்சத்திரம் ஒன்று தென்பட்டுள்ளது.
10 நிமிடங்கள் வானில் தென்பட்ட இந்த வால்நட்சத்திரமானது நன்றாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. இதனை வெறும் கண்ணால் பார்க்க முடிந்தது. ஆனால் அது என்ன என்பது பலருக்கும் தெரியவில்லை. ஏதோ ஒரு இயற்கை நிகழ்வு அல்லது வானவில் என்று மட்டுமே நினைத்தனர்.
ஆனால் நாசா ஆராய்ச்சியாளரான ஜனார்த்தன் நஞ்சுண்டன் என்பவர் தான் இது இயற்கை நிகழ்வு அல்ல. வானில் தென்பட்டது 80 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அரிய வால்நட்சத்திரம் என தெரிவித்துள்ளார்.
ஊட்டியில் உள்ள மேற்கு வானத்தில் கடந்த 1-ந் தேதி மாலை நேரத்தில் ஒரு அரிய நிகழ்வு காணப்பட்டது. இது வழக்கமான இயற்கை நிகழ்வாக இருக்கும் என்று நினைத்தேன்.
மேலும் அது வானவில் நிறங்களை போன்று பல வண்ணங்களில் இருந்ததால் அது வானவில்லாக இருக்கும் என்று தான் நான் முதலில் நினைத்திருந்தேன்.
ஆனால் ஆராய்ச்சி செய்து பார்த்த பின்னர் தான் ஊட்டியில் தென்பட்டது 80 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய வால்நட்சத்திரம் என்பது தெரியவந்தது. இந்த வால்நட்சத்திரமானது பூமியில் இருந்து 129.6 மில்லியன் கி.மீ தொலைவில் இருந்தது.
மாலை 6 மணியளவில் வானில் தெரிந்த வால்நட்சத்திரமானது 10 நிமிடங்கள் வானவில் அழகாக ஒளிர்ந்து கொண்டிருந்தது.
கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 9-ந் தேதி சீனாவில் இந்த அரிய வால்நட்சத்திரம் தெரிந்ததை சீனாவில் உள்ள பர்பிள் மவுண்டன் அப்சர்வேட்டரி கண்டுபிடித்தது. மேலும் சீனாவை சேர்ந்த வானியல் புகைப்பட நிபுணரான உபேந்திரா பின்னெல்லி என்பவர் இதனை புகைப்படம் எடுத்து உறுதி செய்துள்ளார். ஒரு மாதத்திற்கு பிறகு தென் ஆப்பிரிக்காவில் தெரிந்தது. தற்போது இது மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியான நீலகிரியில் தெரியவந்துள்ளது.
இந்த வால் நட்சத்திரமானது சூரியன் வருவதற்கு முந்தைய நேரத்திலோ அல்லது சூரியன் மறையும் நேரத்திலோ தெரியும்.
இந்த வால்நட்சத்திரமானது மீண்டும் வருகிற 12-ந் தேதி வானில் தென்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு சவரிமுத்து புகார் அளித்தார்.
- சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்-பழனி சாலை பைபாஸ் பகுதியில் நைனார் முகமது தெருவில் வசித்து வருபவர் சவரிமுத்து. இவர் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஸ்டெல்லா. இவரும் ஜம்புளியம்பட்டி அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது ஒரே மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணத்திற்காக ஜவுளி எடுக்க குடும்பத்துடன் திருச்சிக்கு சென்றனர்.
இரவு 11 மணியளவில் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் உள்ளே இருந்த கதவின் பூட்டும் கம்பியால் நெளிக்கப்பட்டு திறந்து கிடந்தது. பீரோவில் மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 100 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு சவரிமுத்து புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி. பிரதீப் தலைமையில் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த பகுதியில் மொத்தம் 10 வீடுகள் மட்டுமே உள்ளன. ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதை கவனித்தும், இவர்கள் வீட்டில் திருமணத்திற்கு நகைகள் இருப்பதை நோட்டமிட்டும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர். மேலும் மோப்பநாயை வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு டாக்டர் வீட்டில் 100 பவுன் நகை மற்றும் ரூ.பல லட்சம் ரொக்கம் கொள்ளை போனது. அந்த வழக்கில் இதுவரை கொள்ளையர்கள் பிடிபடாத நிலையில் தற்போது மீண்டும் ஒரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்துக்கு சென்றது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி கடந்த ஜூலை மாதம் குறைக்கப்பட்ட பிறகு, அதன் விலை குறையத் தொடங்கியது. அதற்கு முன்னதாக தாறுமாறாக விலை அதிகரித்து வந்ததால், விலை குறைந்தது இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதலை கொடுத்தது.
அதன் பின்னர், அமெரிக்க பெடரல் வங்கி வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை குறைத்தது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஐரோப்பா நாடுகளின் மத்திய வங்கியும், அதே நடைமுறையை கையில் எடுத்தது.

இந்த காரணங்களால் குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்துக்கு சென்றது. அந்த வகையில் கடந்த மாதம் (செப்டம்பர்) 23-ந்தேதியில் இருந்து புதிய உச்சத்தில் தங்கம் பயணித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 24-ந்தேதி ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்தையும் தொட்டது. தொடர்ந்து அதிகரித்து, கடந்த மாதம் 27-ந்தேதி ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்து 800 என்ற நிலைக்கு வந்தது. விலை மேலும் உயர்ந்தால், ரூ.57 ஆயிரத்தையும் தாண்டும் என பேசப்பட்ட நிலையில், கடந்த மாதம் 28-ந்தேதியில் இருந்து விலை சற்று குறைந்தது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று சவரன் ரூ.56 ஆயிரத்து 800-க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.56 ஆயிரத்து 880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,110-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.101-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்கனவே ரஷிய-உக்ரைன், இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் பதற்ற காலங்களில், பெரு முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக முதலீடுகளை குவித்ததால், அப்போது அதன் விலை எகிறியது. தற்போது இஸ்ரேல்-ஈரான் இடையே போர் பதற்றச்சூழல் இருப்பதால், தங்கம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவே சொல்லப்படுகிறது.
- ஒரு சில தனியார் பள்ளிகள் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகின்றன.
- விதிமுறையை மீறி வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
சென்னை:
அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை கடந்த மாதம் 28-ந் தேதி முதல் விடப்பட்டது. வருகிற 7-ந் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. காலாண்டு விடுமுறை 9 நாட்கள் கிடைத்ததால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் ஒரு சில தனியார் பள்ளிகள் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகின்றன.
காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது, மீறினால் அந்த பள்ளிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித் துறை எச்சரித்து இருந்தது.
இந்த நிலையில் சென்னை தாம்பரம், மேடவாக்கம், நாமக்கல், ராசிபுரம், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சில தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தி வருவதாகவும் இதில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என வற்புறுத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
தனியார் பள்ளிகளின் இந்த நடவடிக்கை பெற்றோர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சிறப்பு பாட வேளை குறித்த அட்டவணையை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இதுபற்றி பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, கல்வித் துறையின் எச்சரிக்கையை மதிக்காமல் சில தனியார் பள்ளிகள் இணைய வழியில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துவதாக புகார்கள் வந்தால், விதிமுறையை மீறி வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- அரசு ஒரு உயர் மட்ட நிபுணர் குழுவை அமைத்து பாலத்தின் உறுதிதன்மையை ஆய்வு செய்ய வேண்டும்.
- பொதுமக்களுக்கு அதிகமாக சிரமம் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் போக்குவரத்தினை ஒழுங்கு செய்ய வேண்டும்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-
மார்த்தாண்டம் மேம்பாலம் மீண்டும் பழுதடைந்துள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினருடன் கலந்து கொண்டேன். மேலும் இது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மாற்று நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தினேன்.

கடந்தமுறை போன்று இம்முறையும் தற்காலிகமாக பணிகள் செய்து போக்குவரத்திற்கு பாலத்தை திறந்து விடுவதை தவிர்த்து, அரசு ஒரு உயர் மட்ட நிபுணர் குழுவை அமைத்து பாலத்தின் உறுதிதன்மையை ஆய்வு செய்ய வேண்டும். அவர்களின் ஆய்வு அறிக்கையை ஆராய்ந்து அதன் பின்னர் இந்த பாலத்தினை பழுது பார்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

அதுவரை பொதுமக்களுக்கு அதிகமாக சிரமம் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் போக்குவரத்தினை ஒழுங்கு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட கமிட்டிகள் சார்பில் நாகர்கோவில், வேற்கிளம்பி மற்றும் குளச்சல் பகுதிகளில் நடைபெற்ற தேசிய விழிப்புணர்வு நடைபயணங்களில் கலந்து கொண்டேன்.
- கொலை வழக்கில் வடசென்னையை சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்திரன் உள்பட மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
- 3-வது குற்றவாளியாக நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் பெயர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி பெரம்பூரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கடந்த ஆண்டு சென்னை பட்டினப்பாக்கத்தில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையிலேயே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பதாக முதலில் தகவல்கள் வெளியானது.
இதுதொடர்பாக ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு உள்பட 10 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்துக்கு பின்னணியில் மிகப்பெரிய சதி திட்டம் தீட்டப்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து இந்த கொலை வழக்கில் வடசென்னையை சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்திரன் உள்பட மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 25 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பெண் தாதா அஞ்சலை, நாகேந்திரனின் மகனான இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் அஸ்வத்தாமன் ஆகியோர் கைதானவர்களில் முக்கியமானவர்கள் ஆவா்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி சம்பவ செந்தில், வக்கீல் மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இருவரையும் தேடிக் கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெளிநாடுகளில் பதுங்கியுள்ள இவர்களை கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை தனிப்படை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் எழும்பூர் கோர்ட்டில் 5ஆயிரம் பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். அதில் போலீசில் சிக்காமல் தலைமறைவாக உள்ள சம்பவ செந்தில், மொட்டை கிருஷ்ணன் ஆகியோரது பெயர்கள் உள்பட 30 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
முதல் குற்றவாளியாக நாகேந்திரன் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 2-வது குற்றவாளியாக சம்பவ செந்தில், 3-வது குற்றவாளியாக நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இது தவிர ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 28 பேரின் பங்கு என்ன? என்பது பற்றியும் குற்றப்பத்திரிகையில் விரிவான தகவல்கள் இடம்பெற்று உள்ளன.
ஆம்ஸ்ட்ராங்குடன் இளைஞர் காங்கிரஸ் பிரமுகரான அஸ்வத்தாமனுக்கு ஏற்பட்டிருந்த பகை, ஆற்காடு சுரேஷ் கொலையான அவரது தம்பி பொன்னை பாலுவுடன் ஏற்பட்டிருந்த முன் விரோதம், உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பொன்னை பாலு மற்றும் அவனது கூட்டாளிகள் ஓராண்டாக திட்டம் போட்டு செயல்பட்டிருந்தனர். அது தொடர்பான தகவல்கள் முழுமையாக இடம் பெற்றுள்ளன.
இவர்களோடு வடசென்னையை சேர்ந்த பெண் தாதா அஞ்சலை மற்றும் ரவுடிக்கும்பலை சேர்ந்தவர்கள் செய்த பண உதவி மற்றும் ரவுடிகள் வெடிகுண்டுகளை வாங்கி கொடுத்தது போன்ற தகவல்களும் உள்ளன.
ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு 3 மாதங்கள் ஆகும் நிலையில் திட்டமிட்டபடி போலீசார் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறார்கள்.
இதை தொடர்ந்து வழக்கு விசாரணை எழும்பூர் கோர்ட்டில் தொடர்ச்சியாக நடத்தப்பட உள்ளது.
இந்த விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வாங்கி கொடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் ஆம்ஸ்ட்ராங் வழக்கு மீண்டும் வேகமெடுத்துள்ளது.
- திருமாவளவனை பொறுத்தவரை அவர் ஒரு முடிவு எடுத்தால் அதில் உறுதியாக இருப்பார் என்று எங்கள் எல்லோருக்கும் தெரியும்.
- ஒருகாலத்தில் குடும்ப கட்டுப்பாடு என்றால் பாவமாக கருதப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நேற்று மாலை நடைபெற்றது.
இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:
திமுக சார்பில் நானும் டிகேஎஸ்.இளங்கோவனும் வந்து இருக்கிறோம். இது எதை காட்டுகிறது என்றால் தளபதிக்கும் திருமாவளவனுக்கும் உள்ள நெருக்கத்தையும் தொடர்பையும் எந்த சக்தியாலும் முறியடிக்க முடியாது என்பதை இந்த மாநாடு நிரூபித்துக்கொண்டு இருக்கிறது.
திருமாவளவனை பொறுத்தவரை அவர் ஒரு முடிவு எடுத்தால் அதில் உறுதியாக இருப்பார் என்று எங்கள் எல்லோருக்கும் தெரியும்.
இங்கு பேசிய அனைத்து தலைவர்களும் மதுவின் கொடுமையை சொன்னார்கள். அதில் கருத்து வேறுபாடு கிடையாது.
திமுக தலைவர் கலைஞர் மது விலக்கை தள்ளிவைக்கும்போதே ஒரு கருத்தை சொன்னார்.
மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் அது பிரசாரத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் மக்கள் மத்தியிலே எழுச்சியை உண்டாக்க வேண்டும் என்று சொல்லி, 1971-ல் எங்கள் கட்சியின் பொருளாளராக இருந்த அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்கள் தலைமையில் குழுவை அமைத்து அந்த குழு நாடு முழுவதும் பிரசாரம் செய்யும் என்று சொன்னார். அதற்கு பின்னால் நடந்தவற்றை சொல்ல நேரம் போதாது.
ஆனால் மீண்டும் அந்த பிரசாரத்தை செய்ய வேண்டும் என்ற முடிவினை திருமாவளவன் இன்று கையில் எடுத்து இருக்கிறார்.
இங்கு வந்திருக்கும் ஒவ்வொரு மகளிரும், கூட்டத்தில் உள்ள ஒவ்வொரு சிறுத்தையும் திருமாவளவனை வைத்துக்கொண்டு ஒரு உறுதிமொழியை எடுக்க வேண்டும்.
இந்த மாநாடு கலைந்து செல்லும்போது நாம் ஒவ்வொருவரும் ஒரு 10 பேரையாவது குடிப்பவர்களை மனமாற்றம் செய்வோம் என்ற உறுதிபாட்டை எடுக்கின்ற மாநாடாக இது அமைந்தால் கடைகளை யாரும் மூட வேண்டிய அவசியமில்லை. கடைகள் தானாக மூடி விடும்.
ஒருகாலத்தில் குடும்ப கட்டுப்பாடு என்றால் பாவமாக கருதப்பட்டது.
ஆனால் குடும்ப கட்டுப்பாடு முதலில் 3, பின்னர் 2, அதன் பின்னர் நாம் இருவர் நமக்கு ஒருவர், இன்று நாம் இருவர் நமக்கேன் இன்னொருவர் என்று தமிழ்நாட்டில் குடும்ப கட்டுப்பாடு வெற்றி பெற்று இருக்கிறது என்றால் அதற்கு காரணம் பிரசாரம். விளம்பரம் அதைத்தான் செய்ய வேண்டும் என்று கூறினார்.
- மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்.
- போலீசாருக்கும், விசிக தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தமிழ்நாடு உள்பட தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், தேசிய மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது.
இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கி, மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாட்டில் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். மேலும் மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் வந்திருந்தனர்.
இதற்கிடையே, பெண் காவலரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் தள்ளிவிட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மாநாடு ஆரம்பித்ததும் ஒரு பகுதியில் அதிகளவில் கூடிய தொண்டர்கள் அங்கு அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகளை உடைத்தெறிந்து மாநாட்டு மேடையை நோக்கி செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும், விசிக தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளுமுள்ளில் பெண் காவலர்களுக்கும் சிக்கிக் கொண்டனர்.
மேலும், தடை செய்யப்பட்ட பகுதியில் சென்ற காரை வழிமறித்த பெண் காவலரை விசிகவின் பெண் மற்றும் ஆண் நிர்வாகிகளும் சேர்ந்து பணி செய்ய விடாமல் தடுத்து தள்ளி விட்ட சம்பவமும் நடந்துள்ளது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நேற்று மாலை நடைபெற்றது.
- இந்த மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மது ஒழிப்பு மாநாடு நடத்தும் திருமாவளவன் காந்தியை தவிர்த்துவிட்டு காமராஜருக்கு மட்டும் அஞ்சலி செலுத்தி சென்றது ஏன்? என்று நேற்று தமிழிசை கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இதற்கு பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க சென்றபோது, கவர்னர் வந்த பின்னர் மாலை அணிவிக்க சொன்னார்கள். நான் உளுந்தூர்பேட்டைக்கு செல்ல நேரமாகிவிடும் என்பதால், காமராஜர் மண்டபத்தில் எல்லா மாலையையும் வைத்துவிட்டு, அவருக்கு வீரவணக்கம் செலுத்தி வந்தேன்.
ஆனால் முன்னாள் கவர்னர் தமிழிசை, திருமாவளவன் காந்தியை அவமதித்துவிட்டார், காந்தி மதுஒழிப்புக்கு போராடியவர் அவருக்கு இவர் மரியாதை செய்யவில்லை.
மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார். காந்தியின் கொள்கைக்கே எதிராக இருக்குமோ என்று சொல்கிறார்.
அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால், திருமாவளவன் தினந்தோறும் பாட்டிலை திறக்க கூடியவர் என்று சொல்கிறார்.
அக்கா தமிழிசை நீங்கள் குடிக்க மாட்டீர்கள், உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்காது என்று நம்புகிறேன். உங்களை போன்றுதான் நானும், எனக்கு அந்த பழக்கம் இல்லை.
அயல்நாடுகளுக்கு பயணம்செய்துள்ளேன் என் வாழ்நாளில் ஒரு முறை கூட அதை தொட்டதில்லை. இதை தமிழிசைக்கு சொல்ல கடமைப்பட்டுள்ளேன். காந்தி சிலைக்கு மாலை போடக்கூடாது என்று தடுத்தது காவல்துறை. கவர்னர் வந்த பின்னர் மாலைபோட வேண்டும் என்று சொன்னது காவல்துறை தான் என்று தெரிவித்துள்ளார்.
- மாநாட்டுக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் பணிகளை விரைவுபடுத்த விஜய் உத்தரவிட்டு உள்ளார்.
- மாநாட்டில் ஆண்கள், பெண்கள் அமருவதற்கு தனித்தனி வரிசை, இருக்கை அமைக்கப்படுகிறது.
சென்னை:
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாநாடு தொடர்பாக மாவட்ட தலைவர்களை சந்தித்து பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
மாநாட்டுக்கு மாவட்ட வாரியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களை அழைத்து வர வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்காக மாவட்டம், வட்ட வாரியாக குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் மாநாட்டுக்கு தொண்டர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து, மீண்டும் பாதுகாப்பாக அனுப்பி வைக்க கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் பதிவெண் விவரங்கள் கட்சி தலைமை சேகரித்து வருகிறது.
இந்த நிலையில், மாநாட்டுக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் பணிகளை விரைவுபடுத்த விஜய் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி மாநாட்டு பந்தல் கால் நடும் விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் காலை 4 மணி முதல் 6 மணிக்குள் பந்தல் கால் நடப்படுகிறது. இதில் விஜய் பங்கேற்க இருக்கிறார். நிகழ்ச்சி முடிந்ததும், மாநாட்டுக்கான பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி, மேடை அமைக்கும் பணிகள் தொடங்குகிறது.
மாநாட்டில் ஆண்கள், பெண்கள் அமருவதற்கு தனித்தனி வரிசை, இருக்கை அமைக்கப்படுகிறது. போதுமான அளவு கழிவறை, உணவருந்தும் இடம், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்படுகிறது. மாநாட்டில் 3 வழிப்பாதைகள் அமைக்கப்படுகிறது. தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ குழுவுடன் கூடிய வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.






