என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மது ஒழிப்பு மாநாடு- திருமாவளவன் vs ஆர்.எஸ்.பாரதி
    X

    மது ஒழிப்பு மாநாடு- திருமாவளவன் vs ஆர்.எஸ்.பாரதி

    • திருமாவளவனை பொறுத்தவரை அவர் ஒரு முடிவு எடுத்தால் அதில் உறுதியாக இருப்பார் என்று எங்கள் எல்லோருக்கும் தெரியும்.
    • ஒருகாலத்தில் குடும்ப கட்டுப்பாடு என்றால் பாவமாக கருதப்பட்டது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நேற்று மாலை நடைபெற்றது.

    இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:

    திமுக சார்பில் நானும் டிகேஎஸ்.இளங்கோவனும் வந்து இருக்கிறோம். இது எதை காட்டுகிறது என்றால் தளபதிக்கும் திருமாவளவனுக்கும் உள்ள நெருக்கத்தையும் தொடர்பையும் எந்த சக்தியாலும் முறியடிக்க முடியாது என்பதை இந்த மாநாடு நிரூபித்துக்கொண்டு இருக்கிறது.

    திருமாவளவனை பொறுத்தவரை அவர் ஒரு முடிவு எடுத்தால் அதில் உறுதியாக இருப்பார் என்று எங்கள் எல்லோருக்கும் தெரியும்.

    இங்கு பேசிய அனைத்து தலைவர்களும் மதுவின் கொடுமையை சொன்னார்கள். அதில் கருத்து வேறுபாடு கிடையாது.

    திமுக தலைவர் கலைஞர் மது விலக்கை தள்ளிவைக்கும்போதே ஒரு கருத்தை சொன்னார்.

    மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் அது பிரசாரத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் மக்கள் மத்தியிலே எழுச்சியை உண்டாக்க வேண்டும் என்று சொல்லி, 1971-ல் எங்கள் கட்சியின் பொருளாளராக இருந்த அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்கள் தலைமையில் குழுவை அமைத்து அந்த குழு நாடு முழுவதும் பிரசாரம் செய்யும் என்று சொன்னார். அதற்கு பின்னால் நடந்தவற்றை சொல்ல நேரம் போதாது.

    ஆனால் மீண்டும் அந்த பிரசாரத்தை செய்ய வேண்டும் என்ற முடிவினை திருமாவளவன் இன்று கையில் எடுத்து இருக்கிறார்.

    இங்கு வந்திருக்கும் ஒவ்வொரு மகளிரும், கூட்டத்தில் உள்ள ஒவ்வொரு சிறுத்தையும் திருமாவளவனை வைத்துக்கொண்டு ஒரு உறுதிமொழியை எடுக்க வேண்டும்.

    இந்த மாநாடு கலைந்து செல்லும்போது நாம் ஒவ்வொருவரும் ஒரு 10 பேரையாவது குடிப்பவர்களை மனமாற்றம் செய்வோம் என்ற உறுதிபாட்டை எடுக்கின்ற மாநாடாக இது அமைந்தால் கடைகளை யாரும் மூட வேண்டிய அவசியமில்லை. கடைகள் தானாக மூடி விடும்.

    ஒருகாலத்தில் குடும்ப கட்டுப்பாடு என்றால் பாவமாக கருதப்பட்டது.

    ஆனால் குடும்ப கட்டுப்பாடு முதலில் 3, பின்னர் 2, அதன் பின்னர் நாம் இருவர் நமக்கு ஒருவர், இன்று நாம் இருவர் நமக்கேன் இன்னொருவர் என்று தமிழ்நாட்டில் குடும்ப கட்டுப்பாடு வெற்றி பெற்று இருக்கிறது என்றால் அதற்கு காரணம் பிரசாரம். விளம்பரம் அதைத்தான் செய்ய வேண்டும் என்று கூறினார்.

    Next Story
    ×