என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மின்சார துறையையும் இந்த அரசு உடனடியாக துரித பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.
    • மக்களுக்குத் தேவையான இடவசதி, மருத்துவ வசதி என அனைத்தையும் தயார் நிலையில் வைத்து மழைக்காலத்தில் மக்களை காக்க வேண்டியது இந்த அரசின் கடமை.

    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச்செய லாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    4 ஆண்டுக்காலம் ஆட்சியில் இருக்கும் தி.மு.க. அரசு 4 ஆண்டு காலமும் மழை வெள்ளம் ஏற்படும்போது 96 சதவீதம் வேலைகள் நிறைவு பெற்று விட்டதாக சொல்லும். ஆனால் அரசு இன்றைக்கு வரைக்கும் எந்தவித வேலைகளையும் முடித்ததாக தெரியவில்லை. மழைநீர் வடிகால் திட்டமோ, மெட்ரோ திட்டமோ இன்று வரை 100 சதவீதம் முடியவில்லை.

    எனவே சாலையில் செல்பவர்கள் இரண்டு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்களில் செல்பவர்கள் என அனைவருமே பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஏற்கனவே 3 உயிர்கள் மழை தேங்கி இருக்கும் குழியில் விழுந்து இறந்ததாக செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது.

    மின்சார துறையையும் இந்த அரசு உடனடியாக துரித பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். எங்கெல்லாம் மின்வெட்டு பாதிப்பு, மின்கம்பங்கள் சாய்வதும், உயர் மின்அழுத்த கம்பிகள் அறுந்து விழுவதையும் உடனடியாக கண்காணித்து மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பாதுகாக்க வேண்டும்.

    மக்களுக்குத் தேவையான இடவசதி, மருத்துவ வசதி என அனைத்தையும் தயார் நிலையில் வைத்து மழைக்காலத்தில் மக்களை காக்க வேண்டியது இந்த அரசின் கடமை.

    தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள், மழைநீரால் பாதிக்கப்பட்டவர்கள் தே.மு.தி.க. அலுவலகத்தை நீங்கள் தங்க பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு வேண்டிய உணவுகள் அங்கு வழங்கப்படும்.

    தே.மு.தி.க.வைச் சேர்ந்த அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அவரவர்கள் இருக்கும் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவியை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இன்று மாலை முதல் நாளை நள்ளிரவு வரை கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.
    • கடற்கரைகளுக்கு பொதுமக்கள் யாரும் செல்லவேண்டாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் ஐதராபாத்தில் உள்ளது. தற்போது தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்காய்ஸ் எனப்படும் அந்த மையம் கடல் சீற்றம் குறித்த எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

    அதன்படி இன்று மாலை முதல் நாளை நள்ளிரவு வரை நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் அலையின் சீற்றம் மிக அதிகமாக இருக்கும்.

    இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு அலையும் 18 முதல் 22 நொடி நேரம் வரை இருக்கவும், 1.2 முதல் 2 மீட்டர் உயரம் வரை எழும்பவும் வாய்ப்புள்ளது. எனவே கடற்கரையோரம் வசிப்பவர்கள் போதிய முன் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

    படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்திட வேண்டும். கடற்கரைகளுக்கு பொதுமக்கள் யாரும் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது.
    • சென்னையில் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் கண்காணிப்பு நடவடிக்கை குறித்து அவர் துணை முதல்வர் ஆய்வு செய்தார்.

    சென்னை:

    தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும், சில இடங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    சென்னை எழும்பூர், புதுப்பேட்டை, அண்ணாசாலை, மயிலாப்பூர், மந்தைவெளி, ஆர்.ஏ.புரம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகம் ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

    சென்னையில் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் கண்காணிப்பு நடவடிக்கை குறித்து அவர் ஆய்வு செய்தார்.

    சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் மீட்பு பணிகள் குறித்து துணை முதலமைச்சர் ஆய்வு செய்தார். மழை பாதிப்பு குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோரும் ஆய்வு செய்தனர்.

    • பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், நாகை மீன்வளத்துறை மூலம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்துள்ள ஆறுக்காட்டு துறை, கோடியக்கரை ஆகிய கிராமங்களில் இருந்து நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்ற விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் அவசர, அவசரமாக இன்று காலை கரை திரும்பி வருகின்றனர்.

    சுமார் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் அவசர, அவசரமாக கரை திரும்பியதால் மீன்கள் எதுவும் இன்றி ஏமாற்றத்துடன் வந்தடைந்தனர்.

    மேலும், இதன் எதிரொலியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வில்லை. இதனால் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    • நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    கோவை:

    கோவையில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    நேற்றுமுன்தினம் மாலையில் பலத்த மழை பெய்ததால் பல இடங்களில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர்.

    தொடர்ந்து நேற்று மாலையும் கோவை மாநகர பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகள் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

    கோவை மாநகரில் வடவள்ளி, மருதமலை, தடாகம், கவுண்டம்பாளையம், சிவானந்தா காலனி, ரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. மற்ற இடங்களில் சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் கொட்டி தீர்த்தது.

    மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனியில் இருந்து, சிவானந்தா காலனி வழியாக காந்திபுரம் வரும் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது.

    பலத்த மழை காரணமாக அந்த சுரங்கப்பாதையில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வது தடைபட்டது.

    இதற்கிடையே கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு 24 பயணிகளுடன் புறப்பட்ட அரசு பஸ் பாலத்தில் சிக்கியது. பஸ்சுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதால், பயணிகள் வெளியில் வரமுடியாமல் தவித்தனர்.

    தீயணைப்பு துறையினர் வந்து, பயணிகளை மீட்டனர். பஸ்சை கிரேன் மூலம் மீட்டு வெளியில் கொண்டு வந்தனர்.

    இந்த மழைக்கு கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பாரதி பார்க் ரோட்டில் மரம் முறிந்து விழுந்தது. அந்த நேரத்தில் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்லாததால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

    கோவை புலியகுளம் பகுதியில் உள்ள மீனா எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளுக்குள் சாலையோரம் நின்றிருந்த மரம் ஒன்று முறிந்து சாலையில் நின்றிருந்த 2 கார்கள் மீது விழுந்தது.

    தகவல் அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றி கார்களை மீட்டனர்.

    காந்திபுரம் பகுதியிலும் மரம் ஒன்று முறிந்து விழுந்தது.

    கனமழைக்கு தடாகம் பகுதியில் சாலையோரத்தில் உள்ள செங்கல் சூளையில் வைக்கப்பட்டிருந்த புகைபோக்கி இடிந்து சாலையில் விழுந்தது. இதனால் ஆனைகட்டி-கோவை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த மின் கம்பங்கள், மின்மாற்றிகளும் சேதம் அடைந்தன. பல்வேறு துறை ஊழியர்கள் விரைந்து வந்து சாலையில் கிடந்த செங்கல்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

    பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளிலும் மாலையில் கனமழை பெய்தது. மழையால் விஜயபுரம், புளியம்பட்டி பகுதிகளில் சாலையோரம் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

    பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் ஆழியாறு போலீஸ் நிலையம் அருகே மரம் சாய்ந்து ரோட்டில் விழுந்தது. அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

    இதேபோல் மேட்டுப்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர், அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக குளம், குட்டைகள், ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பல குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன.

    நீலகிரி மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

    குன்னூர் அருகே உள்ள சின்ன வண்டிச்சோலை- பேரட்டி சாலையில் மரங்கள் விழுந்து மின் கம்பிகள் சேதம் அடைந்தது. மின் ஊழியர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

    குன்னூர் அருகே உள்ள பாய்ஸ் கம்பெனி, நல்லப்பன் தெருவில் பால்ராஜ் என்பவர் வீட்டின் மீது ராட்சத மரம் விழுந்ததில் வீடு சேதம் அடைந்தது.

    பெள்ளட்டி மட்டம், கேத்தி பகுதிகளிலும் மழை பெய்தது. தொடர் மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது.

    ஊட்டி, கோத்தகிரி, கூடலூர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையால் ஊட்டியில் காலநிலையும் மாறி விட்டது. இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. வாகன ஓட்டிகளுக்கு சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்கின்றனர். 

    • காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து இருக்கிறது.
    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.

    தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும், சில இடங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு உருவானது. இது இரண்டு நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதி மற்றும் புதுச்சேரி நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து இருக்கிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையோரம் அடுத்த 2 தினங்களுக்கு நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • ஆய்வுக்காக தூக்குப்பாலமானது 17 மீட்டர் உயரத்திற்கு முழுவதுமாக திறக்கப்பட்டது.
    • ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே ரெயில் பாதை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் இருந்து வருகிறது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் மையப் பகுதியில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான திறந்து மூடும் தூக்குப்பாலம் உள்ளது.

    இந்த பாலத்தில் பல்வேறு சோதனைகள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்தநிலையில், புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்ய சென்னையில் இருந்து தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசிக் கிஷோர், மண்டபம் வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்தார். நேற்று காலை மண்டபம் ரெயில் நிலையம் வந்த அவர், கார் மூலமாக மண்டபம் கேம்ப் ஹெலிகாப்டர் தளம் அருகே உள்ள இடத்தை பார்வையிட்டார்.

    தொடர்ந்து பாம்பன் வந்த அவர், டிராலியில் அமர்ந்து புதிய ரெயில் பாலத்தை பார்வையிட்டார்.

    பாலத்தின் மையப்பகுதியில் உள்ள செங்குத்து வடிவிலான தூக்குப்பாலத்தையும் பார்வையிட்டார். பின்னர் லிப்ட் மூலமாக தூக்குப்பாலத்தின் மேல் பகுதிக்கு சென்றார். இதைத்தொடர்ந்து ஆய்வுக்காக தூக்குப்பாலமானது 17 மீட்டர் உயரத்திற்கு முழுவதுமாக திறக்கப்பட்டது. பின்னர் மீண்டும் மூடப்பட்டது.

    இதைதொடர்ந்து தெற்கு ரெயில்வே கூடுதல் பொதுமேலாளர் கவுசிக் கிஷோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாம்பன் புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்துள்ளேன். ரெயில்வே பாதுகாப்பு ஆணையர், ஆய்வு செய்த பின்னர் புதிய ரெயில் பாலம் திறக்கப்படும் தேதி குறித்து முடிவு செய்யப்படும். இம்மாதத்திற்குள் பாம்பன் புதிய ரெயில் பாலம் திறக்கப்படும்.

    ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே ரெயில் பாதை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் இருந்து வருகிறது. அதற்கான பணி நடந்து வருகிறது. பழைய பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தை மிகவும் பாதுகாப்பாக அகற்றி அதை ராமேசுவரம் அல்லது மண்டபத்தில் நினைவுச்சின்னமாக வைக்கலாமா? என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா மற்றும் ஆர்.வி.என்.எல். அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    நேற்று தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர், மண்டபம் கேம்ப் பகுதியில் உள்ள இடத்தையும் ஆய்வு செய்தார். எனவே, அந்த இடத்தில் பாலத்தின் திறப்பு விழா நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.

    • வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களுக்கு அபராதம் விதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • கடந்த முறை மழை பெய்தபோது பல கார்கள் வெள்ளத்தில் மூழ்கின.

    வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னைக்கு 'மஞ்சள் எச்சரிக்கை' விடப்பட்டுள்ளது.

    சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ள நிலையில், வாகன ஓட்டிகள் வேளச்சேரி மேம்பாலத்தில் வரிசையாக தங்களது கார்களை நிறுத்திவைத்தனர்.

    வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களுக்கு அபராதம் விதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதையடுத்து அபராதம் விதிக்கப்படவில்லை என்றும் அதுபோன்ற வதந்திகள் பரவுவதாக தாம்பரம் காவல் சரகத்தில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.

     

    சென்னைக்கு இன்று மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி மேம்பாலத்தில் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த முறை மழை பெய்தபோது பல கார்கள் வெள்ளத்தில் மூழ்கின.

    இந்நிலையில் வேளச்சேரி மேம்பாலத்தில் 500-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது எந்தவித அச்சமும் இன்றி கார் பார்க்கிங் செய்து வருகிறார்கள்.

    • சென்னை எழும்பூர், புதுப்பேட்டை, அண்ணாசாலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
    • வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வளத்துறை சார்பில் 38 மாவட்டங்களுக்கு அதிகாரிகளை நியமனம்.

    சென்னை:

    வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

    இதைத்தொடர்ந்து சென்னை எழும்பூர், புதுப்பேட்டை, அண்ணாசாலை, மயிலாப்பூர், மந்தைவெளி, ஆர்.ஏ.புரம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வளத்துறை சார்பில் 38 மாவட்டங்களுக்கு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    செயற்பொறியாளர் நிலையில் 38 பொறியாளர்களை மாவட்ட ஒருங்கிணைப்பு அலவலராக நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    • தங்களது சங்கத்தை பதிவு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
    • இந்த வழக்கிற்கு தமிழ்நாடு அரசும், தொழிற்சங்கங்கள் பதிவாளர், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் ஆகியோர் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு இருந்தார்.

    சென்னை:

    ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், தங்களது சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பம் செய்தனர். ஆனால், இந்த கோரிக்கையை ஏற்கப்படவில்லை.

    இதையடுத்து, தங்களது சங்கத்தை பதிவு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த 30-ந்தேதி நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கிற்கு தமிழ்நாடு அரசும், தொழிற்சங்கங்கள் பதிவாளர், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் ஆகியோர் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு இருந்தார்.

    இந்த நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக உடனே விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி மஞ்சுளா முன்பு மூத்த வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் நேற்று ஆஜராகி கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உத்தரவிட்டார்.

    • காற்றின் வேகமானது 35 கி.மீ - 65 கி.மீ வரை வீசக்கூடும்.
    • மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பாக நாகை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மிக அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக நாகை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 3500-க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகள் கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

    மீன்வளத் துறையினரின் உத்தரவின் பெயரில் ஏற்கனவே கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரைத் திரும்பி வருகின்றனர்.

    காற்றின் வேகமானது 35 கி.மீ - 65 கி.மீ வரை வீசக்கூடும். மேலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாகை மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பருவமழையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
    • இந்த எண்கள் 24 மணி நேரமும் செயல்படக்கூடியதாகும்.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ஏற்கனவே கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குமரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகின்றன. இதற்கிடையே பருவமழையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    இதுதொடர்பாக குமரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் கலெக்டர் அழகுமீனா முன்னிலையில் அரசுத்துறை அதிகாரிகளுடன் மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டது.

    இந்த நிலையில், மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காகவும், மழையால் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் 1077, 04652 231077 மற்றும் 93840 56205 ஆகிய அவரச உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் அழகுமீனா அறிவித்துள்ளார். இந்த எண்கள் 24 மணி நேரமும் செயல்படக்கூடியதாகும்.

    ×