என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
    • அனைத்து பாசன குளங்களும் நிரம்பி வழிகின்றன.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்க்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த நிலையில் வங்க கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளதால் குமரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

    இந்த நிலையில் கலெக்டர் அழகு மீனாவும் குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின்போது செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

    அனைத்து துறை அதிகாரிகளும் பருவமழை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர நீர் நிலைகள் பகுதியில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் நீர் நிலைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே குமரி மாவட் டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. எனவே பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதன்படி நேற்று மாலை பேச்சிப்பாறை அணையில் இருந்து 250 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. மதகுகள் வழியாக 551 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணையின் நீர்மட்டம் 43.75 அடியாக உள்ளது. அணைக்கு 566 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறையிலிருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதையடுத்து கோதையாறு, தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்றும் தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைகளின் நீர்மட்டத்தை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அணையில் இருந்து கூடுதல் தண்ணீரை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு பலகை வைக்கப் பட்டுள்ளது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 64.12 அடியாக உள்ளது. அணைக்கு 285 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 160 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    சிற்றாறு 1-அணையின் நீர்மட்டம் 14.24 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 14.58 அடியாகவும் உள்ளது. மாம்பழத்துறை அணை நீர்மட்டம் 50.11 அடியாகவும், முக்கடல் அணை நீர்மட்டம் 17.10 அடியாகமும், பொய்கை நீர்மட்டம் 14.80 அடியாகவும் உள்ளது.

    மாவட்டம் முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசன குளங்களும் நிரம்பி வழிகின்றன. குளங்களின் நீர்மட் டத்தையும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். சில குளங்களின் கரைப்பகுதியை பலப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மழை எச்சரிக்கை காரணமாக காளிகேசத்திற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று வனத்துறை அறிவித்துள்ளது. மேலும் அந்த கோவிலில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கருவாடு கூடத்தில் சோதனை நடத்தினர்.
    • விரலிமஞ்சள் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா மட்டுமின்றி பீடி இலை, பயோ டீசல், விரலி மஞ்சள் உள்ளிட்ட பொருட்களும் சட்டவிரோதமாக கடத்தப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் கடற்கரை பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் தாளமுத்துநகர் கோமாஸ்புரம் சுனாமி காலனியில் ஒரு கருவாடு கூடத்தில் ஏராளமான விரலிமஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கருவாடு கூடத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு தலா 40 கிலோ எடை கொண்ட 60 மூட்டைகளில் விரலிமஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இவற்றை தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும்.

    இதைத்தொடர்ந்து விரலிமஞ்சள் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த விரலிமஞ்சள் மூட்டைகளை இலங்கைக்கு கடத்த முயன்றவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னையில் மழை வெள்ள மீட்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
    • மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

    சென்னை:

    சென்னையில் நேற்றிரவு முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இன்று காலையிலும் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்க தொடங்கி உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால் நகரில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மழை நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களை நேரில் சென்று மழை பாதிப்புகளை ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தி இருந்தார்.

    அதன்படி அவர்கள் நகரில் பல பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் கொட்டித் தீர்க்கும் கன மழையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் களத்தில் இறங்கி மழை பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார்.

    வடசென்னை பகுதிக்கு சென்ற அவர் அங்குள்ள யானைக்கவுனி பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டார்.

    யானைக்கவுனி மேம்பாலம் செல்லக்கூடிய பகுதியில் அங்குள்ள கால்வாயில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார்.

    ஏற்கனவே அந்த கால்வாய் தூர்வாரப்பட்டிருந்த நிலையில், தற்போது அதிக மழை பெய்வதால் கால்வாயில் தண்ணீர் செல்வதற்கு தடை ஏற்படாமல் இருப்பதற்காக தொடர்ந்து பணிகள் நடைபெற்று வந்தது. அவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அது மட்டுமின்றி அங்குள்ள பகுதிகளையும் நடந்து சென்று பார்வையிட்டார்.

    அவருக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் அங்கு நடைபெறும் பணிகளை விவரித்து கூறினர்.

    அதன் பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசின்பிரிட்ஜ் மேம்பாலம் பகுதிக்கு சென்று பார்த்தார். தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரை விரைந்து அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அதன் பிறகு புளியந்தோப்பு பகுதிக்கு சென்று அங்குள்ள கால்வாயை பார்வையிட்டார். அங்கு பணியாற்றி வந்த மாநகராட்சி ஊழியர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். அங்கிருந்த தூய்மை பணியாளர்களிடமும் சகஜமாக பேசினார்.

    அப்போது அங்குள்ள ஒரு டீக்கடைக்கு அவர்களை அழைத்து சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தூய்மை பணியாளர்களுக்கு பிஸ்கட், டீ வாங்கி கொடுத்தார். அந்த கடையில் அமர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் டீ குடித்தார்.

    இதைத் தொடர்ந்து கொளத்தூர் திரு.வி.க.நகர், வில்லிவாக்கம் தொகுதிகளுக்கு சென்றும் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றனர்.

    • தமிழகத்தில் மூன்று நாட்கள் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.
    • மீனவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டு திரும்ப பெறப்பட்டது.

    மண்டபம்:

    தெற்கு வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து தமிழகத்தில் மூன்று நாட்கள் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதையடுத்து வங்கக் கடல், பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கனமழை அல்லது மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    அதனால் மண்டபம் விசைப்படகு, நாட்டுப்படகுகளை பாதுகாப்பாக வைத்திருக்கவும் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடி தொழிலுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், இன்று (15-ந்தேதி) அனுமதி சீட்டு வழங்கப்படமாட்டாது எனவும் மீன் வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் தெரிவித்தார்.

    முன்னதாக மீனவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டது.

    அதன்பேரில் மண்டபம், பாம்பன், மூக்கையூர், ராமேசுவரம், ஏர்வாடி, கீழக்கரை உள்ளிட்ட 30-க்கும் மேற் பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தங்களது விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நங்கூர மிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.

    மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் ராமேசுவரம் பகுதி மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட் டது. மேலும் அதனை சார்ந்துள்ள பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பை சந்தித்துள்ளனர். மீன்பிடி வர்த்தகமும் பாதிக்கப்பட்டது.

    • அப்துல் கலாம் அவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்து, கடந்த ஆண்டு திறந்து வைத்தோம்.
    • கல்வியின் துணைக்கொண்டு-அறிவிற் சிறந்து விளங்கி, நமது இளைஞர்கள் அவருக்குப் பெருமை சேர்த்திட வேண்டும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    கல்வியும், நெஞ்சில் கனவும், அதை நனவாக்கத் தேவையான கடும் உழைப்பும் இருந்தால் உயர்வு நம்மைத் தேடி வரும் என்ற ஊக்கத்தை இளைஞர்களிடம் விதைத்த நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று! நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், அப்துல் கலாம் அவர்களுக்கு அவர் பயின்று-பயிற்றுவித்த அண்ணா பல்கலைக்கழகத்தில் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்து, கடந்த ஆண்டு திறந்து வைத்தோம்.

    அறிவியல் வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவர் நலன் ஆகியவற்றுக்குப் பாடுபடும் தமிழர்களுக்கு, ஆண்டுதோறும் விடுதலை நாளில் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் விருது" வழங்கி வருகிறோம். நமது இளைஞர்கள் காணும் கனவுகள் மெய்ப்படத்தான் "நான் முதல்வன்" உள்ளிட்ட திட்டங்களை நமது திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது. கல்வியின் துணைக்கொண்டு-அறிவிற் சிறந்து விளங்கி, நமது இளைஞர்கள் அவருக்குப் பெருமை சேர்த்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுளளார்.

    • பார்க்கிங் அனுமதிக்க வேண்டியது இல்லை என்று எல்லா மெட்ரோ நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
    • மழைக் காலத்தில் கடும் சிரமங்களை தாண்டித்தான் வாகனங்களில் பயணிகள் வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகள் வாகனங்களை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு பயணிப்பார்கள். இதற்கு இரு சக்கர வாகனங்களுக்கு 12 மணி நேரத்துக்கு ரூ.30-ம், கார்களுக்கு ரூ.50-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் கடந்த ஆண்டு மழையின் போது முட்டளவு வெள்ளம் வாகன நிறுத்துமிடத்தில் தேங்கியது. இதனால் பார்க்கிங் மூடப்பட்டது.

    இந்த முறை முன் கூட்டியே நிபந்தனைகளை விதித்துள்ளது. பார்க்கிங் அனுமதிக்க வேண்டியது இல்லை என்று எல்லா மெட்ரோ நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    அதையும் மீறி வாகனங்களை நிறுத்த வரும் பயணிகளிடம் மழையால் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் நிர்வாகம் பொறுப்பு கிடையாது என்பதை தெரிவித்து அதற்கு ஒத்துக்கொண்டால் மட்டும் வாகனங்களை அனுமதிக்கும் படியும் அவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களின் பதிவு எண், உரிமையாளரின் மொபைல் எண் ஆகியவற்றை பதிவு செய்து கொள்ளும்படியும் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

    இந்த நடைமுறைப்படியே அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் வாகனங்களை அனுமதிக்கிறார்கள்.

    ஏற்கனவே பார்க்கிங்கில் கட்டணம் செலுத்தி வாகனங்களை நிறுத்தினாலும் அதில் ஏற்படும் சேதங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது என்று தங்களுக்கு சாதகமாக நிரந்தர விதியை வகுத்து வைத்துள்ளார்கள்.

    மழைக் காலத்தில் கடும் சிரமங்களை தாண்டித்தான் வாகனங்களில் பயணிகள் வருகிறார்கள். அவ்வாறு வருபவர்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு பயணிக்கலாம் என்ற நம்பிக்கையில் வருகிறார்கள்.

    அவர்களிடம் இயற்கையான மழை பீதியை போல் இப்படி ஒரு செயற்கை பீதியையும் ஏற்படுத்துவது ஏன்? என்று பயணிகள் ஆதங்கப்பட்டனர்.

    • தனியார் பாதுகாப்புப் படை, காவல் துறை வழங்கியுள்ள நெறிமுறைகளை உள்ளடக்கித் தங்கள் பணிகளை மேற்கொள்வர்.
    • நமது வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்குத் தேவையான ஒலி, ஒளி வடிவக் காணொலிக் காட்சிக்கான தயாரிப்பு பணிகளையும் மேற்கொள்வர்.

    சென்னை:

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் மாநாடு வருகிற 27-ந்தேதி விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை என்ற இடத்தில் நடைபெற இருக்கிறது.

    இதையொட்டி 85 ஏக்கர் நிலப்பரப்பில் மாநாட்டு பந்தல் அமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    மாநாட்டு பணிகளுக்காக வரவேற்பு குழு, உணவு, போக்குவரத்து குழு, வாகன நிறுத்த குழு உள்பட 27 சிறப்பு குழுவை கட்சி தலைவர் விஜய் நியமனம் செய்து உள்ளார்.

    இந்த நிலையில் மாநாடு பணிகளுக்கென மேலும் 3 குழுக்களை விஜய் நியமனம் செய்துள்ளார். இது தொடர்பாக கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நம் கட்சி தலைவரின் அறிவுறுத்தலின்படி மாநில மாநாட்டின் பணிகளை மேற்கொள்ள, தொழில்நுட்ப பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை ஒருங்கிணைக்கும் குழு, தன்னார்வர்கள் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் காணொலிக் கண்காட்சி அமைப்புக் குழு என 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தொழில்நுட்ப பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமை நிர்வாகிகள் இருவரும் அடங்கிய சிறப்பு பிரிவு, மாநாட்டில் தலைவரின் பிரத்யேகப் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டு உள்ள தனியார் பாதுகாவல் படையினரை மேற்பார்வை செய்வர். இத்தனியார் பாதுகாப்புப் படை, காவல் துறை வழங்கியுள்ள நெறிமுறைகளை உள்ளடக்கித் தங்கள் பணிகளை மேற்கொள்வர்.

    மேலும் இந்தக் குழுவின் தலைமை நிர்வாகிகள், முழு மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழுவின் வழிகாட்டுதலின் படி, தனியார் பாதுகாவல் படையின் உதவியுடன் வழி காட்டும் குழு, பாதுகாப்புக் குழு, போக்குவரத்துக் குழு, வாகன நிறுத்தக் குழு, கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை, சீருடை அணிந்த தன்னார்வலர்கள் குழுக்கள் பலவற்றையும் ஒருங்கிணைத்து அவற்றிற்கான நெறிமுறைகளைச் செவ்வனே செயல்படுத்தும் கூடுதல் பணியினையும் ஆற்றுவர்.

    கழக தலைமை நிலையச் செயலகத்தின் ஆலோசனை மறறும் வழிகாட்டுதலின்படி, நமது வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்குத் தேவையான ஒலி, ஒளி வடிவக் காணொலிக் காட்சிக்கான தயாரிப்பு பணிகளையும் மேற்கொள்வர்.

    இத்துடன் மாநிலம் முழுவதும் இருந்து மாநாட்டிற்கு வருகை தரும் கழக தோழர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உதவி புரியும் வகையில் சீருடை அணிந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை ஒருங்கிணைத்துச் செயல்பட வைக்கும் பணிகளில் அதற்கென தனியாக அமைக்கப்பட்டிருக்கும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்புக் குழு ஈடுபடும்.

    காணொலி கண்காட்சி அமைப்புக் குழுவானது தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியாகப் பரிணாமம் அடைவதற்கு முன்பு, ரசிகர் மன்றமாக இருந்து நற்பணி மன்றமாகி, பின்னர் தளபதி மக்கள் இயக்கமாக வளர்ந்து பல்லாண்டுகளாக தமிழக மக்களுக்கு உறுதுணையாக நின்று ஆற்றிய பல்வேறு நலத்திட்டப் பணிகள் குறித்த காணொலி கண்காட்சி அமைப்பதற்கான பணிகளை கவனிக்கும்.

    தன்னர்வலர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக நிரஞ்சனும் உறுப்பினர்களாக 101 பேரும் காணொலி கண்காட்சி அமைப்பு குழு தலைவராக வேல்முருகனும் 5 உறுப்பினர்களும் தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் 90 உறுப்பினர்களும் செயல்பட இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    • தினசரி மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு இந்த ரெயில் புறப்படுகிறது.
    • மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி ரெயில் நிலையம் வரை ரெயில் பாதையில் 16 குகைகள், 216 வளைவுகள், 250 பாலங்கள் உள்ளன.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    தினசரி மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு இந்த ரெயில் புறப்படுகிறது. இந்த ரெயிலில் பயணம் செய்ய ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1899 ஜூன் 15 முதல் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலை ரெயில் இயக்கப்பட்டது. 1908 அக்டோபர் 15 முதல் ஊட்டி ரெயில் நிலையம் வரை ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டது.

    இதனால் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15-ந் தேதி நீலகிரி மலை ரெயில் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி ரெயில் நிலையம் வரை ரெயில் பாதையில் 16 குகைகள், 216 வளைவுகள், 250 பாலங்கள் உள்ளன.

    ஆசியாவிலேயே மிக செங்குத்தான மீட்டர்கேஜ் ரெயில் பாதைகளில் மிகவும் நீளமானது என்பது இதன் சிறப்பு அம்சம். நீலகிரி மலை ரெயிலை யுனெஸ்கோ நிறுவனம் 2005 ஜூலை 15-ல் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.

    இந்நிலையில் இன்று 116-வது ஆண்டு விழாவை முன்னிட்டு ரெயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    • அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிமியான்மலையில் 13 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
    • கோடம்பாக்கம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டையில் தலா 8 செ.மீ. மழை பெய்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிமியான்மலையில் 13 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    கும்மிடிப்பூண்டி, எண்ணூரில் தலா 10 செ.மீ. சென்னை மணலி, மலர் காலனி, திரு.வி.க. நகர், பொன்னேரி, ராயபுரம் தலா 9 செ.மீ. சென்னை கலெக்டர் அலுவலகம், கோடம்பாக்கம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டையில் தலா 8 செ.மீ. மழை பெய்துள்ளது.

    • காதலனிடம் இருந்து பிரித்தால் தற்கொலை செய்வேன் என மிரட்டியதாக தெரிகிறது.
    • எதுவாக இருந்தாலும் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருச்சி:

    திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவரங்கபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி வித்யா. இந்த தம்பதியரின் மகள் கோபிகா (வயது 17 ). இவர் பிளஸ் 2 வரை படித்துள்ளார்.

    ராமசந்திரன்-வித்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதனால் வித்யா மகள் கோபிகாவுடன் தனியாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் கோபிகாவுக்கும் திருப்பைஞ்ஞீலீ அடுத்துள்ள மூவராயன் பாளையம் மேலூர் கிராமத்தை சேர்ந்த வரதராஜ்-தனலெட்சுமி தம்பதியரின் மகன் நவீனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. வரதராஜ் வடக்கு சித்தாம்பூர் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் கோபிகா மற்றும் நவீன் இருவரும் மண்ணச்சநல்லூரில் உள்ள அரசு பள்ளியில் வந்த போது பத்தாம் வகுப்பில் இருந்து காதலித்து வந்துள்ளனர். மேலும் 12-ம் வகுப்பை முடித்தவுடன் நவீன் கோபிகாவை அழைத்து கொண்டு பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார். கோபிகாவும் நவீன் வீட்டிற்கு அடிக்கடி சென்று வர இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் கோபிகாவின் தாயார் வித்யா இருவரையும் நேரில் கண்டித்துள்ளார். இதையடுத்து கோபிகா தாயாருடன் வாக்குவாதம் செய்து காதலன் நவீனுடன் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் வித்யா மேலூர் சென்று ரெண்டு பேரும் மேஜர், எனவே இது சட்டப்படி தவறு என அறிவுரை கூறி மகளை அழைத்து வந்தார். பின்னர் ஒரு வாரம் கழித்து மீண்டும் காதலனை தேடி சென்று விட்டார். பின்னர் மீண்டும் வித்யா தனது மகளை வீட்டுக்கு அழைத்து வந்தார்.

    அதன் பின்னர் மீண்டும் காதலனை தேடிச்சென்ற கோபிகா தன்னை காதலனிடம் இருந்து பிரித்தால் தற்கொலை செய்வேன் என மிரட்டியதாக தெரிகிறது.

    இதனால் பயந்து போன தாயார் மகளின் விருப்பத்திற்கு அவரை விட்டு விட்டார்.

    இதையடுத்து நவீன் தன்னை நாடி வந்த காதலிகாக ஶ்ரீரங்கம் பூ மார்க்கெட்டில் மாலை கட்டும் வேலைக்கு சேர்ந்து வேலை செய்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் 3 மாதம் ஒன்றாக இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று நவீன் தீபாவளி பண்டிகைக்காக ஆடை எடுக்க திருச்சிக்கு சென்றுவிட்டார். நவீனின் பாட்டி வயல் வேலைக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வந்தார். வீட்டின் கதவை திறந்தபோது வீட்டில் உள்ள மின் விசிறியில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியவாறு கோபிகா பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து பாட்டி கத்தி கூச்சலிட்டு அழுதார். அக்கம்பக்கத்தினர் வந்து தூக்கில் தொங்கியவாறு பிணமாக இருந்த கோபிகாவை மீட்டனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த மண்ணச்சநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரி மற்றும் போலீசார் ராமஜெயம் உள்ளிட்டோர் கோபிகாவின் உடலை கைப்பற்றி ஶ்ரீரங்கம் அரசு மருத்துவமருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

    கோபிகா தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீஷ்வரி விசாரணை நடத்தி வருகிறார்.

    இதனிடையே வித்யா தனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாக புகார் அளித்தார். மேலும் அவரது உறவினர்கள் மணச்சநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உண்மையை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து விசாரணை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,

    அக்கம் பக்கத்தில் விசாரித்த போது நவீன்-கோபிகா ஆகியோருக்கு இடையே எந்த தகராறும் ஏற்பட்டதில்லை என தெரிவித்தனர். நேற்று கோபிகா தனது தாயாரை செல்போனில் தொடர்பு கொண்டு தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறியுள்ளார்.

    அதன் பின்னர் நவீன் வெளியே சென்ற நேரத்தில் அவர் தற்கொலை செய்ததாக தெரிகிறது. எதுவாக இருந்தாலும் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காதலனுடன் வசித்து வந்த சிறுமி மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் மணச்சநல்லூர் மற்றும் மேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
    • சென்னையில் சுமார் 10,000 பேர் தங்கும் வகையில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.

    வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகம் ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

    கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சென்னை முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் எந்த இடத்திலும் மின்தடை ஏற்படவில்லை.

    * பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

    * சென்னையில் 20 சுரங்கப்பாதைகளில் வாகன போக்குவரத்து உள்ளது. சென்னையில் 2 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்துக்கு தற்காலிக தடை.

    * சிவகங்கையில் நேற்று 13.4 செ.மீ, விருதுநகரில் 7 செ.மீ. மழை பெய்த நிலையிலும் எந்த சிக்கலும் ஏற்படவில்லை.

    * சென்னையில் 80, மற்ற மாவட்டங்களில் 130 படகுகள் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் 631 உட்பட மொத்தம் 931 மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

    * சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் 300 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.

    * சென்னையில் சுமார் 10,000 பேர் தங்கும் வகையில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.

    * கடந்த முறை போன்ற இந்த முறை செல்போன் டவர் பிரச்சனை ஏதும் தற்போது வரை ஏற்படவில்லை.

    * * மழை எச்சரிக்கை குறித்து ஆய்வு செய்த பின்பு பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளிப்பது குறித்து இன்று மாலைக்குள் முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று கூறினார்.

    • தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.
    • தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    சென்னை:

    வங்கக் கடலில் உருவாகி உள்ள புயல் சின்னம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதையொட்டி இந்த 4 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வீடுகளில் இருந்தபடியே வேலை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த 4 மாவட்டங்களுக்கும் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மழையை எதிர்கொள்ள நேற்று மாலையில் இருந்தே மக்கள் தயாரானார்கள்.

    தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி குவிப்பதில் ஆர்வம் காட்டினார்கள். இதனால் பள்ளிகளில் மாலைநேர சிறப்பு வகுப்புகளும் ரத்து செய்யப்பட்டு மாணவ-மாணவிகள் முன்கூட்டியே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


    இந்த நிலையில் நேற்று மாலையில் இருந்தே கனமழைக்கான அறிகுறிகள் தென்பட்டன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் சூறைக்காற்று வீசியது.

    பின்னர் இரவில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. பலத்த காற்றும் வீசியது. இப்படி இடி-மின்னலுடன் விடிய பெய்து கொண்டே இருந்தது.

    தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என அனைத்து பகுதிகளிலுமே பலத்த மழை பெய்தது.

    இன்று காலையிலும் கனமழை பெய்தது. 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டிருந்ததால் காலை 6 மணிக்கு இருள் சூழ்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மழையும் பெய்ய தொடங்கியது.

    இந்த மழை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் பலத்த மழையாக பெய்தது. விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்த மழை சுமார் 1½ மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது.

    அதன் பிறகு சற்று ஓய்ந்த மழை மீண்டும் பெய்தது. பகலில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

    மெட்ரோ ரெயில்கள் பணிகள் நடைபெற்று வரும் இடங்களிலும் மழைநீர் வடிகால் வழியாக தண்ணீர் செல்ல முடியாத இடங்களிலும் தண்ணீர் சூழ்ந்தது.

    கோயம்பேடு மெட்ரோ பாலத்துக்கு கீழே பூந்தமல்லி நெடுஞ்சாலையையொட் டிய பகுதியில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அங்கிருந்து பாரிமுனை நோக்கி செல்லும் வழியிலும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சில இடங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது.

    புரசைவாக்கம் ரித்தட்கன் ரோட்டில் வழக்கம் போல தண்ணீர் தேங்கி நின்றது. ஒவ்வொரு மழைக்கும் இந்த சாலையில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையான ஒன்றாகும். அதன்படி இன்றும் மழைநீர் தேங்கி இருந்தது.

    அயனாவரம் நூர்ஓட்டல் பஸ் நிறுத்தத்தில் இருந்து சிக்னல் வரை சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். அயனாவரம் இ.எஸ்.ஐ.அரசு ஆஸ்பத்திரி அருகே தண்ணீர் செல்ல வழியின்றி குளம்போல் தேங்கி நிற்கிறது.


    புரசைவாக்கம் பழைய மோட்சம் தியேட்டர் அருகே முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. மழை நீருடன் கழிவுநீரும் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தண்ணீரில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாகனங்களும் மெதுவாக ஊர்ந்து சென்றன.

    அழகப்பா சாலையில் தாஷப்பிரகாஷ் பஸ் நிறுத் தம் அருகே சாலையே தெரி யாத அளவுக்கு மழைநீர் தேங்கி நின்றது. கழிவுநீரும் சேர்ந்து உள்ளதால் கருப்பு நிறமாக காட்சி அளிக்கிறது. இதனால் பஸ்நிறுத்தத்தில் இறங்கி செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    அண்ணாநகர் அண்ணா ஆர்ச் அருகே அரசு சித்த மருத்துவமனை நுழைவு வாயிலில் தேங்கி இருந்த மழைநீரை கடந்து செல்வதற்கு நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டனர். கிண்டி, நுங்கம்பாக்கம் ரெயில் நிலையங்களை சுற்றி உள்ள பகுதிகளும் மழை நீரால் சூழ்ந்திருந்தன.

    தி.நகரில் உள்ள தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் நலச்சங்க கட்டிட பகுதியிலும், தி.நகர் பஸ் நிலயத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் தேங்கிய மழை நீரால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    பெரியமேடு, வேப்பேரி, கீழ்ப்பாக்கம் ஆம்ஸ்ரோடு, மயிலாப்பூர், கோட்டூர்புரம், அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி, ஐஸ்அவுஸ் உள்ளிட்ட இடங்களிலும் தேங்கிய மழைநீரில் சிக்கி மோட்டார் சைக்கிள்கள் பழுதானது.

    ராயபுரம், ஆட்டுத தொட்டி, பழைய வண்ணா ரப்பேட்டை, தண்டையார் பேட்டை ஸ்டான்லி நகர், வண்ணாரப்பேட்டை போஜராஜன் தெரு, கேணியம்மன் நகர், திரு வொற்றியூர், மணலி, மாதவரம், வடபெரும்பாக்கம் போன்ற இடங்களிலும் சாலையில் தேங்கிய மழை நீரில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் மெதுவாக சென்றதை காண முடிந்தது.

    50-க்கும் மேற்பட்ட சாலைகளில் குளம் போல மழைநீர் தேங்கியது.

    இன்று அதிகாலையில் வீசிய சூறைக்காற்றில் சென்னை மாநகரில் 3 இடங்களில் மரங்கள் சாய்ந்தன. தி.நகர் பர்கிட் சாலையில் பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.

    அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றினார்கள்.


    சூளைமேடு நெல்சன் மாணிக்கம் ரோடு, நுங்கம்பாக்கம் வீரபத்திரன் தெரு ஆகிய இடங்களிலும் மரங்கள் சாய்ந்தன. இந்த மரங்களையும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸ் பேரிடர் மீட்பு குழுவினர் ஆகியோர் வெட்டி அப்புறப் படுத்தினார்கள்.

    இதன் காரணமாக இந்த 3 சாலைகளிலும் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரங்கள் அகற்றப்பட்ட பின்னர் சாலையில் போக்குவரத்து சீரானது.

    சென்னையில் நேற்று இரவு பெய்த மழையால் சுரங்க பாதைகளிலும் தண்ணீர் தேங்கியது. இதில் சேத்துப்பட்டு, பெரம்பூர், சுரங்கப் பாதைகளில் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டனர்.

    20-க்கும் மேற்பட்ட சுரங்கப் பாதைகளில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப் பட்டிருந்தது. பெரம்பூர், சேத்துப்பட்டு சுரங்கப்பாதைகளிலும் மழைநீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.


    இதேபோன்று தாம்பரம், ஆவடி சுற்று வட்டாரப் பகுதிகளிலும் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் கடும் பாதிப்புக்குள்ளானார்கள்.

    நாளையும் மழை நீடிக்கும் என் தெரிவிக்கப்பட்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் முழு வீச்சில் களம் இறங்கியுள்ளனர்.

    ×