என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வீட்டுக்கு சென்ற பெண் ஆசிரியர், நடந்த விவரத்தை தனது சகோதரரிடம் தெரிவித்துள்ளார்.
    • பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிக விடுப்பு எடுத்து பள்ளிக்கு வரவில்லை.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் விசாலப்பட்டு அடுத்த பெரிய மோட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட பூனை குட்டி பள்ளம் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் தற்காலிக பணியாளராக 28 வயது ஆசிரியர் பணியாற்றி வருகிறார்.

    இவரது கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் பலியானதை தொடர்ந்து தற்போது அவர் தனது சகோதரர் வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று அந்த பெண் ஆசிரியர் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு செல்ல தயாராகினார். அப்போது அங்கு சென்ற அந்த பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர், பெண் ஆசிரியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். பின்னர் வீட்டுக்கு சென்ற பெண் ஆசிரியர், நடந்த விவரத்தை தனது சகோதரரிடம் தெரிவித்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை 9 மணி அளவில் பள்ளி திறந்ததும், பெண் ஆசிரியரின் சகோதரர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை முன்கூட்டியே அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிக விடுப்பு எடுத்து பள்ளிக்கு வரவில்லை. இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், வட்டார உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அசோக் குமார், பெரிய மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் கமல் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விரைந்து சென்று அவர்களிடம் சமரசம் பேசினர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • வடகிழக்கு பருவமழை அக்டோபர் 2-வது வாரம் தொடங்கும் என ஏற்கனவே தகவல் வெளியானது.
    • இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை அக்டோபர் இரண்டாவது வாரம் தொடங்கும் என ஏற்கனவே தகவல் வெளியானது.

    இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக என வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவமழை முழுவதும் நிறைவுபெற்று, வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் பெரும்பாலான இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளது.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

    • போராட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் மற்றும் மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு ஆதரவு அளித்தது.
    • நூற்றுக்கும் மேலான மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    சென்னை, அக். 15-

    கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இளம் மருத்துவர் சங்கம் நாடு முழுவதும் இன்று உண்ணா விரதப் போராட்டத்தை நடத்தியது. தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் இந்திய மருத்துவ சங்கங்களில் இந்த போராட்டம் நடந்தது.

    இந்த போராட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் மற்றும் மருத்துவ மாணவர்கள் கூட்டமைப்பு ஆதரவு அளித்தது. தாம்பரத்தில் உள்ள இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் முதுகலை மருத்துவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

    இதற்கு ஐ.எம்.ஏ. தமிழ் நாடு மாநில தலைவர் அபுல்ஹசன் தலைமை தாங்கினார். நூற்றுக்கும் மேலான மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டத் தில் கலந்து கொண்டனர்.

    • 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
    • குழு தலைவர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் விவரம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சி துறை, நெடுஞ்சாலை, மின்சாரம் உள்ளிட்ட 11 துறையைச் சார்ந்த அலுவலர்களைக் கொண்டு 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த குழுவினர் பருவமழை காலங்களில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் தங்கி இருந்து மீட்பு பணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. மண்டலக் குழுக்களின் குழு தலைவர்களின் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் விவரம் பின்வருமாறு...

    காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகள் (வார்டு 1-25) -நவிந்திரன் (ஆணையர்,காஞ்சிபுரம் மாநகராட்சி) 7397372823,

    காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகள் (வார்டு 26-51)-ஆசிக்அலி(உதவி ஆட்சியர்) 9445000413,

    சிறுகாவேரிபாக்கம் மற்றும் திருப்புக்குழி குறுவட்டம்-வெற்றிவேல்(மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர்) 9080682288,

    பரந்தூர், சிட்டியம்பாக்கம் மற்றும் கோவிந்தவாடி குறுவட்டம்-ஜோதிசங்கர்(மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர்) 9443098567,

    வாலாஜாபாத் பேரூராட்சி மற்றும் குறுவட்டம்-தங்கவேலு (உதவி திட்ட அலுவலர்) 7402606009,

    தென்னேரி குறுவட்டம்-பாலமுருகன்(மாவட்ட ஆய்வு குழு அலுவலர்) 9444227190, மாகரல் குறுவட்டம்-தனலட்சுமி(மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அலுவலர்) 7338801259,

    உத்திரமேரூர் பேரூராட்சி மற்றும் குறுவட்டம்-கந்தன்(திட்ட அலுவலர்) 9840989921,

    திருப்புலிவனம், களியாம்பூண்டி குறு வட்டம்-சத்தியதேவி(மண்டல மேலாளர்) 9150057181,

    சாலவாக்கம் அரும்புலியூர் மற்றும் குண்ணவாக்கம் குறுவட்டம்-பாக்கியலட்சுமி (தனித்துணை ஆட்சியர்) 8220438216,

    ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி மற்றும் குறுவட்டம்-ஜெகதிசன்(மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவியாளர்)-7402606004,

    மதுரமங்கலம், சுங்குவார்சத்திரம் குறுவட்டம்-லதா(உதவி இயக்குநர்)-8925809212,

    வல்லம் மற்றும் தண்டலம் குறுவட்டம்-பிச்சாண்டி(திட்ட அலுவலர், மகளிர் திட்டம்) 944094280

    படப்பை குறுவட்டம்-தண்டபாணி(உதவி இயக்குநர்,பஞ்சாயத்து)-7402606005,

    படப்பை குறுவட்டம்-வேதநாயகம் (மாவட்ட ஊராட்சி செயலர்) 7402606007,

    செரப்பணஞ்சேரி குறுவட்டம், மணிமங்கலம்-சுரேஷ்(நேர்முக உதவியாளர் (கணக்கு))9442745251,

    கொளப்பாக்கம் குறுவட்டம் (மௌலிவாக்கம், கொளுத்துவாஞ்சேரி, கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், ஐயப்பந்தாங்கல், தெள்ளியகரம், பரணிப்புத்தூர், சின்னப்பணிச்சேரி, பெரியப்பணிச்சேரி, சீனிவாசபுரம்) -.பாலாஜி (மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்) 9445000168,

    திருமுடிவாக்கம் மற்றும் பூந்தண்டலம் பஞ்சாயத்து- சக்திகாவியா(மாவட்டகுழந்தைகள்பாதுகாப்புஅலுவலர்) 6369131607,


    மாங்காடு குறுவட்டம் (கொல்லச்சேரி, மலையம்பாக்கம், கொழுமுனிவாக்கம், தரப்பா க்கம், இரண்டாம்கட்டளை, தண்டலம், கோவூர் சிக்கராயபுரம், மூன்றாம் கட்டளை பகுதிகள்)-உமாசங்கர்(உதவிதிட்ட அலுவலர்(வீடுகள்)7402606006,

    மாங்காடு நகராட்சி பகுதிகள் -சரவணகண்ணன் (வருவாய் கோட்டாட்சியர்) 9444964899,

    குன்றத்தூர்நகராட்சி- சீனிவாசன் (மாவட்ட பிற்படுத்தபட்டோர் நலஅலுவலர்)9445477826 மற்றும் பேரிடர் தொடர்பான விவரங்களுக்கு தொலைபேசி எண்கள் 044-27237107, வாட்ஸ் அப்எண் 8056221077 தொடர்பு கொள்ளலாம்.

    இதற்கிடையே பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் தொடர்பான பாதிப்புகள் மற்றும் தீர்வுகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

    இதில் காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பு அமைச்சரான காந்தி கலந்துகொண்டு அனைத்து துறை சார்ந்த ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது அமைச்சர் காந்தி கூறும்போது,வரதராஜபுரம் பகுதியில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு அங்கு 24 மணி நேரமும் அலுவலர்கள் பணியில் இருப்பார்கள்.

    மாவட்டத்தில் 276 ஜே.சி.பி.எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகளும் செயல்படும் என்றார்.

    அப்போது செல்வம் எம்.பி.,எம்.எல்.ஏ.க்கள் சுந்தர்,எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

    • புரசைவாக்கம் பழைய மோட்சம் தியேட்டர் அருகே முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது.
    • இன்று காலையில் இருந்தே மிரட்ட தொடங்கிய கனமழை நேரம் செல்ல செல்ல அதிகரித்தது.

    சென்னை:

    வங்கக் கடலில் உருவாகி உள்ள புயல் சின்னம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்சு' எச்சரிக்கையும் நாளை 'சிவப்பு' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இன்று கனமழையும் நாளை மிக கனமழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலையில் இருந்தே மழைக்கான அறிகுறிகள் காணப்பட்டன. பலத்த காற்றும் வீசியது.

    இரவு 8 மணியில் இருந்து மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு முழுவதும் சூறைக்காற்றுடன் விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையில் அது கனமழையாக மாறியது.

    அதிகாலை 3 மணியில் இருந்தே விட்டு விட்டு பெய்த மழை காலை 9 மணிக்கு பின்னர் வெளுத்து வாங்கியது. தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை என அனைத்து பகுதிகளிலும் அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது. 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டிருந்ததால் இருள் சூழ்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மழையும் கொட்டியது.

    இந்த மழை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் பலத்த மழையாக பெய்தது. விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்த மழை சுமார் 1½ மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது. அதன் பிறகு சற்று ஓய்ந்த மழை மீண்டும் பெய்தது. பகலில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

    மெட்ரோ ரெயில்கள் பணிகள் நடைபெற்று வரும் இடங்களிலும் மழைநீர் வடிகால் வழியாக தண்ணீர் செல்ல முடியாத இடங்களிலும் தண்ணீர் சூழ்ந்தது.

    கோயம்பேடு மெட்ரோ பாலத்துக்கு கீழே பூந்தமல்லி நெடுஞ்சாலையையொட்டிய பகுதியில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அங்கிருந்து பாரிமுனை நோக்கி செல்லும் வழியிலும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சில இடங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது.

    புரசைவாக்கம் ரித்தட்கன் ரோட்டில் வழக்கம் போல தண்ணீர் தேங்கி நின்றது. ஒவ்வொரு மழைக்கும் இந்த சாலையில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையான ஒன்றாகும். அதன்படி இன்றும் மழைநீர் தேங்கி இருந்தது.



    அயனாவரம் நூர் ஓட்டல் பஸ் நிறுத்தத்தில் இருந்து சிக்னல் வரை சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். அயனாவரம் இ.எஸ்.ஐ. அரசு ஆஸ்பத்திரி அருகே தண்ணீர் செல்ல வழியின்றி குளம்போல் தேங்கி நிற்கிறது.

    புரசைவாக்கம் பழைய மோட்சம் தியேட்டர் அருகே முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. மழை நீருடன் கழிவுநீரும் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தண்ணீரில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாகனங்களும் மெதுவாக ஊர்ந்து சென்றன.

    அழகப்பா சாலையில் தாஷப்பிரகாஷ் பஸ் நிறுத்தம் அருகே சாலையே தெரியாத அளவுக்கு மழைநீர் தேங்கி நின்றது. கழிவுநீரும் சேர்ந்து உள்ளதால் கருப்பு நிறமாக காட்சி அளிக்கிறது. இதனால் பஸ் நிறுத்தத்தில் இறங்கி செல்லும் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    அண்ணாநகர் அண்ணா ஆர்ச் அருகே அரசு சித்த மருத்துவமனை நுழைவு வாயிலில் தேங்கி இருந்த மழைநீரை கடந்து செல்வதற்கு நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டனர். கிண்டி, நுங்கம்பாக்கம் ரெயில் நிலையங்களை சுற்றி உள்ள பகுதிகளும் மழை நீரால் சூழ்ந்திருந்தன. தி.நகரில் உள்ள தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் நலச்சங்க கட்டிட பகுதியிலும், தி.நகர் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    பெரியமேடு, வேப்பேரி, கீழ்ப்பாக்கம் ஆம்ஸ்ரோடு, மயிலாப்பூர், கோட்டூர்புரம், அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி, ஐஸ்அவுஸ் உள்ளிட்ட இடங்களிலும் தேங்கிய மழைநீரில் சிக்கி மோட்டார் சைக்கிள்கள் பழுதானது.

    ராயபுரம், ஆட்டுத்தொட்டி, பழைய வண்ணாரப்பேட்டை, தண்டையார் பேட்டை ஸ்டான்லி நகர், வண்ணாரப்பேட்டை போஜராஜன் தெரு, கேணியம்மன் நகர், திருவொற்றியூர், மணலி, மாதவரம், வடபெரும்பாக்கம் போன்ற இடங்களிலும் சாலையில் தேங்கிய மழை நீரில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் மெதுவாக சென்றதை காண முடிந்தது.



    இன்று காலையில் இருந்தே மிரட்ட தொடங்கிய கனமழை நேரம் செல்ல செல்ல அதிகரித்தது. குறிப்பாக காலை 9 மணிக்கு பிறகு மழை வெளுத்து வாங்கியது. பகலில் சூரியன் தலைகாட்டாத நிலையில் இருள் சூழ்ந்தபடியே காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் விளக்குகளை எரியவிட்ட படியே சென்றனர்.

    தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் தாழ்வான இடங்கள் பலவற்றில் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது. காலையில் இருந்தே பெய்த கனமழை காரணமாக சென்னை மாநகரின் பல பகுதிகள் இன்று வெள்ளக்காடாகவே காட்சி அளித்தன. இதனால் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் சூழ்ந்தது.

    இப்படி தேங்கிய மழை வெள்ளத்தால் இன்று காலையில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். சென்னை மாநகரில் முக்கிய சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதந்தன.

    இப்படி சாலைகளில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி அதிகாரிகள் மோட்டார் மூலமாக வெளியேற்றிக் கொண்டே இருந்தனர்.

    ஆனால் மழை பெய்து கொண்டே இருந்ததால் தேங்கிய தண்ணீரை வெளியேற்றுவதில் அதிகாரிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். மயிலாப்பூர், ராயப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட தென் சென்னை பகுதிகள், வண்ணாரப்பேட்டை, ராயபுரம், கொடுங்கையூர், மாதவரம், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களிலும் அண்ணாநகர், முகப்பேர், திருமங்கலம் உள்ளிட்ட இடங்களிலும் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இப்படி இன்று பகலில் வெளுத்து வாங்கிய மழையால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடந்தனர். 300-க்கும் மேற்பட்ட சாலைகளில் குளம் போல மழைநீர் தேங்கியது.

    வில்லிவாக்கம், அம்பத்தூரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. ஓட்டேரி, அயனாவரம், கொன்னூர் நெடுஞ்சாலை, பச்சைக்கல் வீராசாமி தெரு, ஐ.சி.எப்., சென்னை பாட்டை சாலை, வில்லிவாக்கம், சிட்கோநகர், நாதமுனி, திருமங்கலம் சாலை, சி.டி.எச். சாலையில், சென்னை கொரட்டூர் முதல் அம்பத்தூர் ஓ.டி. பஸ் நிலையம் வரை சாலையின் இருபுறமும் சுமார் 2 அடிக்கு மேல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. இதேபோன்று அம்பத்தூர் பட்டரைவாக்கம் சாலை, டிடிபி சாலை, கள்ளிக்குப்பம், மாதனாங்குப்பம், டீச்சர்ஸ் காலனி, மாதாங்குப்பம் மெயின் ரோடு, புதூர், பானு நகர், ஞானமூர்த்தி நகர், பட்டரைவாக்கம் பால் பண்ணை சாலை, அம்பத்தூர் தொழிற்பேட்டை சுற்றி உள்ள தொழிற்சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை காரணமாக வெள்ளநீர் புகுந்து உள்ளது. தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன

    வேளச்சேரி ரெயில் நிலையத்துக்கு பின்புறத்தில் இருந்து தரமணி அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் செல்லும் 100 அடி சாலையில் இருபுறமும் மழைநீர் கால்வாய்களை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் இன்று பெய்த பலத்த மழையால் அந்த சாலையில் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது. மழை நீர் கால்வாய் வழியாக தண்ணீர் செல்லாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதேபோன்று மேடவாக்கம் பிரதான சாலையிலும் மழைநீர் தேங்கியுள்ளது. ஓ.எம்.ஆர். சாலையில் சிறுசேரி வரை மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெறுவதால் அப்பகுதியில் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் அதிக அளவில் தேங்கி உள்ளது.

    வேளச்சேரி நேருநகர், காமராஜர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பளவுக்கு தண்ணீா் சூழ்ந்துள்ளது.

    இன்று அதிகாலையில் வீசிய சூறைக்காற்றில் சென்னை மாநகரில் 3 இடங்களில் மரங்கள் சாய்ந்தன. தி.நகர் பர்கிட் சாலையில் பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.

    அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றினார்கள்.

    சூளைமேடு நெல்சன் மாணிக்கம் ரோடு, நுங்கம்பாக்கம் வீரபத்திரன் தெரு ஆகிய இடங்களிலும் மரங்கள் சாய்ந்தன. இந்த மரங்களையும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸ் பேரிடர் மீட்பு குழுவினர் ஆகியோர் வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.

    இதன் காரணமாக இந்த 3 சாலைகளிலும் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரங்கள் அகற்றப்பட்ட பின்னர் சாலையில் போக்குவரத்து சீரானது.

    சென்னையில் நேற்று இரவு பெய்த மழையால் சுரங்க பாதைகளிலும் தண்ணீர் தேங்கியது. இதில் சேத்துப்பட்டு, பெரம்பூர், சுரங்கப் பாதைகளில் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டனர். 20-க்கும் மேற்பட்ட சுரங்கப் பாதைகளில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்டிருந்தது. பெரம்பூர், சேத்துப்பட்டு சுரங்கப்பாதைகளிலும் மழைநீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.

    இதேபோன்று தாம்பரம், ஆவடி சுற்று வட்டாரப் பகுதிகளிலும் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் கடும் பாதிப்புக்குள்ளானார்கள். நாளையும் மழை நீடிக்கும் என் தெரிவிக்கப்பட்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் முழு வீச்சில் களம் இறங்கியுள்ளனர்.

    • தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் நாளை 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    * சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதிகனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    * கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    * ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இன்று மிக கனமழை வாய்ப்பு உள்ளது.

    * தமிழகத்தில் நாளை 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    * ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

    • பருவ மழை, பேரிடர் கால நிவாரண நிதிகளை மத்திய அரசு ஒருபோதும் தமிழகத்திற்கு வழங்கியது இல்லை.
    • ஜிஎஸ்டி வரி வசூலித்த தொகைகளை கூட வழங்கவில்லை.

    தஞ்சாவூா்:

    ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை டெல்டா மாவட்டமாக அறிவிக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். டெல்டாவை பாலைவனமாக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கொண்டு வரக்கூடாது.

    ஓ.என்.ஜி.சி புதிய எண்ணெய் கிணறு தோண்ட கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த 2018 ஆம் ஆண்டு அம்மாபேட்டை பஸ் நிலையம் முன்பு தாளாண்மை உழவர் இயக்க தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ் தேசிய பேரியக்கம் தலைவர் மணியரசன் உள்ளிட்ட பலர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் திருநாவுக்கரசு, திருமாவளவன், வேல்முருகன் , மணியரசன் உள்ளிட்ட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஒருங்கிணைந்த தஞ்சாவூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் இந்த வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று தஞ்சாவூர் கோர்ட்டில் ஆஜரானார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த மாதம் 15-ந் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.

    வழக்கில் ஆஜராகி விட்டு வெளியே வந்த வேல்முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஓ.என்.ஜி.சி புதிய எண்ணெய் கிணறுகள் தோண்ட கூடாது என்பதை வலியுறுத்தி அம்மாபேட்டையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினோம். இதற்கு அப்போதைய அ.தி.மு.க அரசு எங்கள் மீது வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில் இன்று தஞ்சாவூர் கோர்ட்டில் ஆஜரானேன். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை வாங்கபட்டது. சம்மன் அனுப்பப்பட்டதால் நான் ஆஜர் ஆனேன்.

    பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

    மக்கள் பிரச்சனைக்காக போராடியவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் 1000-க்கும் மேற்பட்ட வழக்குகளை திமுக அரசு திரும்ப பெற்றது.

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னர் பெய்த கனமழையில் 5 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண தொகையை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

    கள்ளச்சாராய மரணத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டது. ஆனால் மின்கம்பம் சீரமைக்கும் பணியில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தவருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. மனித உயிர் விலை மதிக்க முடியாதது. நிவாரணம் என்பது ஒரே மாதிரியாக வகுக்க வேண்டும். குறைந்தது ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவித்து ஒரே மாதிரியாக வழங்க வேண்டும். இதில் பாகுபாடுக்கூடாது.

    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் துரித நடவடிக்கை எடுக்க 15-க்கும் மேற்பட்ட அமைச்சசர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். எனவே நியமிக்கப்பட்ட அனைவரும் துரிதமாக பணி செய்து இயற்கை பேரிடர்களில் இருந்து மக்களை காக்க வேண்டும்.

    பருவ மழை, பேரிடர் கால நிவாரண நிதிகளை மத்திய அரசு ஒருபோதும் தமிழகத்திற்கு வழங்கியது இல்லை. ஜிஎஸ்டி வரி வசூலித்த தொகைகளை கூட வழங்கவில்லை. எனவே தமிழக அரசே உரிய நிதிகளை ஒதுக்கி வழங்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயம், நீர்வளத்தை பாதிக்கும் எந்த தொழிற்சாலையும் கொண்டு வரக்கூடாது. இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசால் தமிழ் ஈழ மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், முடிந்தவரையிலும், அடுத்த சில நாட்களுக்கு, பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வது நன்று.
    • பொதுமக்கள், அவசியமற்ற பணிகளுக்காக வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதுமே பல மாவட்டங்களிலும் மழைப்பொழிவு காணப்படுகிறது. மேலும், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

    குறிப்பாக, கடந்த ஆண்டுகளில், வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், முடிந்தவரையிலும், அடுத்த சில நாட்களுக்கு, பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வது நன்று. தமிழக அரசு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு, பாதுகாப்பான தங்குமிடம், உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

    மேலும், சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 90% அளவு நிறைவு பெற்றிருப்பதாக, அமைச்சர்களும், சென்னை மாநகராட்சி மேயர் அவர்களும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கூறி வருவதால், கடந்த ஆண்டுகளை நினைவில் கொண்டு, தண்ணீர் தேங்கிக் கிடக்கும் சாலைகளில் செல்லும்போது, பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செல்லுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

    கனமழை இன்னும் சில நாட்களுக்குத் தொடர வாய்ப்பிருப்பதால், பொதுமக்கள், அவசியமற்ற பணிகளுக்காக வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். மேலும், மின்சாரம் தொடர்பான பொருள்களைக் கையாளும்போதும், நீர்நிலைகளிலும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீர் நிலைகளில் இறங்க முற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

    அனைவரும் பாதுகாப்பாக இருப்போம். பருவமழையைப் பாதிப்பின்றி எதிர்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

    • ஸ்ரீ சவுடாம்பிகா தெருவில் கைத்தறி கூடத்தை பார்வையிடுகிறார்.
    • பெரியார் பல்கலைக்கழகத்தின் 23-வது பட்டமளிப்பு விழா நாளை நடக்கிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரியில் உள்ள சுமங்கலி திருமண மண்டபத்தில் அனைத்து இந்திய நெசவாளர்கள் நலச்சங்கம் சார்பில் சிறந்த நெசவாளர்களை கவுரவிக்கும் விழா இன்று மதியம் நடைபெறுகிறது.

    இதில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறந்த நெசவாளர்களை கவுரவித்து பேசுகிறார். இதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்தார்.

    இதனை தொடர்ந்து வட பத்ரகாளியம்மன் கோவில் மற்றும் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

    முன்னதாக மேச்சேரியில் தர்மபுரி மெயின்ரோட்டில் உள்ள ஸ்ரீ சவுடாம்பிகா தெருவில் கைத்தறி கூடத்தை பார்வையிடுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சேலம் பெரியார் பல்கலைக் கழகம் வருகிறார். அங்கு அவர் இரவில் தங்குகிறார்.

    தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழகத்தின் 23-வது பட்டமளிப்பு விழா நாளை (16-ந் தேதி) காலை 10.30 மணி அளவில் பெரியார் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நடக்கிறது.

    இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். அவருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொள்கிறார்.

    விழாவில் முனைவர் பட்ட ஆய்வு நிறைவு செய்துள்ள 288 மாணவர்களுக்கும், பெரியார் பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் அறிவியல் நிறைஞர், முதுகலை, இளங்கலை பாடங்களில் முதலிடம் பிடித்த 107 மாணவர்களுக்கும் தங்க பதக்கத்துடன் சான்றிதழை விழா மேடையில் கவர்னர் ஆர்.என்.ரவி வழங்குகிறார்.

    2023-2024-ம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் விழாவில் பட்டங்களை பெற உள்ளனர். பெரியார் பல்கலைக்கழக துறைகளில் முதுகலை பாடப்பிரிவில் முதலிடம் பிடித்த 32 மாணவர்களுக்கும், இளங்கலை பாடப் பிரிவில் 2 மாணவர்களுக்கும், இணைவு பெற்ற கல்லூரிகளில் முதுகலை பாடப்பிரிவில் 30 மாணவர்களுக்கும், இளங்கலை பாடப்பிரிவில் 43 மாணவர்களுக்கும் தங்கப் பதக்கத்துடன் சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.

    விழாவில் முதன்மை விருந்தினராக மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ஸ்ரீராம் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார்.

    சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த 46 ஆயிரத்து 365 மாணவர்களும், பெரியார் பல்கலைக்கழக துறைகளில் படித்த 1,018 மாணவர்களும், பெரியார் தொலைநிலை கல்வி நிறுவனங்களில் படித்த 1,077 மாணவர்களும் பட்டங்களை பெற உள்ளனர்.

    இதற்கான ஏற்பாடுகளை துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன், பதிவாளர் (பொறுப்பு) விஸ்வநாத மூர்த்தி, தேர்வாணையர் (பொறுப்பு) கதிரவன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர். கவர்னர் வருகை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    • கடலோர மாவட்டங்களில் உள்ள ஆவின் பால் விநியோக மையங்களில் மொத்தம் 20 ஆயிரம் கிலோ பால் பவுடா் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
    • மக்களுக்கு நேரடியாக பால் விநியோகம் செய்ய 250 வாகனங்களும் தயாா் நிலையில் உள்ளன.

    சென்னை:

    கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் வங்கக்கடலில் உருவான 'மிக்ஜாம்' புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித் தீா்த்தது. இதன் எதிரொலியாக சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், அத்தியாவசிய உணவுப் பொருளான பால் மற்றும் பால் பவுடா் பல இடங்களில் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா். ரூ.40 மதிப்புடைய ஒரு லிட்டா் பால் அந்த நேரத்தில் சில இடங்களில் ரூ.200-க்கும் அதிகமாக விற்பனையானது.

    இதைத்தொடர்ந்து இந்த பருவமழை காலத்தில் இது போன்ற சிக்கல்களைத் தவிா்ப்பதற்காக ஆவின் நிறுவனம் அனைத்து வகையான முன்னேற்பாட்டுப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

    இதுகுறித்து ஆவின் அதிகாரி ஒருவா் கூறியதாவது:-

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், கன்னியாகுமரி முதல் சென்னை வரை அனைத்து கடலோர மாவட்டங்களிலும் ஆவின் பால் மற்றும் பால் பவுடா் எந்த தடையுமின்றி விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடலோர மாவட்டங்களில் உள்ள ஆவின் பால் விநியோக மையங்களில் மொத்தம் 20 ஆயிரம் கிலோ பால் பவுடா் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், 90 நாட்கள் கெடாமல் இருக்கும் பால் பாக்கெட்டுகள் மொத்தம் 50 ஆயிரம் லிட்டா் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மக்களுக்கு நேரடியாக பால் விநியோகம் செய்ய 250 வாகனங்களும் தயாா் நிலையில் உள்ளன. இதில் குறிப்பாக சென்னையில் பால், பால்பவுடா் ஆகியவை கூடுதலாக தேவைப்படும் பட்சத்தில், அம்பத்தூா் மற்றும் சோழிங்கநல்லூா் பால் பண்ணைகளில் இருந்து தடையின்றி விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம், அப்பகுதி மக்களின் தேவைகளை பூா்த்தி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

    • ஜான்தங்கத்தை நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
    • ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணியை தொடங்கி வைத்து சர்ச்சை.

    சென்னை:

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக பொறுப்பு வகித்த தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. அங்கு நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணியை தொடங்கி வைத்தது சர்ச்சையானது.

    இதையடுத்து அவரை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

    இந்த நிலையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தின் தற்காலிக பொறுப்பாளராக கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜான்தங்கத்தை நியமித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

    • மின்கம்பம் போன்றவற்றில் கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம்.
    • அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி வருகிறது. இதேபோல செங்கல்பட்டு மாவட்டத்திலும் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் பொதுமக்கள் கனமழையின்போது ஏரி, குளங்களுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டு உள்ள அறிவிப்பில்,

    பொதுமக்கள் யாரும் கனமழையின்போது ஆறு, குளங்கள், ஏரி போன்ற ஆழமான நீர் நிலைகள் உள்ள பகுதிக்கு செல்லவேண்டாம். மின்கம்பம் போன்றவற்றில் கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம். அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டாம். மழைவெள்ள பாதிப்பு குறித்து பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 044-27427412,044-27427414, வாட்ஸ்அப்-9444272345 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளார்.

    ×