ஆசிரியைக்கு பாலியல் தொல்லை- தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளி முற்றுகை

வீட்டுக்கு சென்ற பெண் ஆசிரியர், நடந்த விவரத்தை தனது சகோதரரிடம் தெரிவித்துள்ளார். பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிக விடுப்பு எடுத்து பள்ளிக்கு வரவில்லை.
ஆசிரியைக்கு பாலியல் தொல்லை- தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளி முற்றுகை
Published on

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் விசாலப்பட்டு அடுத்த பெரிய மோட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட பூனை குட்டி பள்ளம் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் தற்காலிக பணியாளராக 28 வயது ஆசிரியர் பணியாற்றி வருகிறார்.

இவரது கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் பலியானதை தொடர்ந்து தற்போது அவர் தனது சகோதரர் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று அந்த பெண் ஆசிரியர் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு செல்ல தயாராகினார். அப்போது அங்கு சென்ற அந்த பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர், பெண் ஆசிரியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். பின்னர் வீட்டுக்கு சென்ற பெண் ஆசிரியர், நடந்த விவரத்தை தனது சகோதரரிடம் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை 9 மணி அளவில் பள்ளி திறந்ததும், பெண் ஆசிரியரின் சகோதரர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை முன்கூட்டியே அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் தற்காலிக விடுப்பு எடுத்து பள்ளிக்கு வரவில்லை. இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், வட்டார உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அசோக் குமார், பெரிய மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் கமல் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விரைந்து சென்று அவர்களிடம் சமரசம் பேசினர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

X

Maalai Malar
www.maalaimalar.com