என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 3 டன் அளவுள்ள காய்கறி, பழங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
    • நாளை வரை நிறைமணி காட்சியை பக்தர்கள் கண்டுகளிக்கலாம்.

    திருவேற்காடு:

    திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தில் நிறைமணி காட்சி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டும் நேற்று முதல் 3 நாட்கள் நிறைமணி காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி கோவில் கருவறை மற்றும் முன்பகுதியில் பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள், தானியங்கள், எண்ணெய், மூலிகை தாவரங்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பந்தல் முழுவதும் தோரணமாக கட்டி தொங்க விடப்பட்டிருந்தது.

    இந்த தோரணங்களை பார்ப்பதற்கு அழகாகவும், கண்ணுக்கு குளிர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது. மக்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும், மழை பெய்து செழிக்கவும், ஜீவ ராசிகள் அனைத்தும் பசி, பட்டினி, பஞ்சம் இல்லாமல் வாழ வேண்டும்.

    இயற்கை வளங்கள் பெருக வேண்டும். விவசாயம் தழைக்க வேண்டும் என்பதற்காக இந்த நிறைமணி காட்சி அமைக்கப்படுகிறது.

    சுமார் 3 டன் அளவுள்ள காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் இதற்காக பயன்படுத்தப் பட்டுள்ளன. நாளை (வெள்ளிக்கிழமை) வரை இந்த நிறைமணி காட்சியை பக்தர்கள் கண்டுகளிக்கலாம்.

    கடைசி நாளில் இங்கு தொங்கவிடப்பட்டுள்ள பொருட்களை ஒன்று சேர்த்து கூட்டாஞ்சோறு செய்து அம்மனுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும்.

    இதையொட்டி மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றது. நிறைமணி காட்சி பார்ப்பதற்கு தொங்கும் தோட்டம் போல் காட்சி அளித்தது.

    பக்தர்கள் நிறைமணி காட்சியில் தொங்கவிடப்பட்டிருந்த பழங்கள், காய்கறிகளை தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    • திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
    • கோவிலில் கிரிவலம் செல்ல வந்த பக்தர்கள் ஏராளமானோர் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் முதல் நாளன்று பவுர்ணமி வந்தது. தொடர்ந்து 2-வது பவுர்ணமியும் இந்த புரட்டாசி மாதத்தின் நிறைவையொட்டி வந்துள்ளது. அதாவது நேற்று இரவு 8 மணியளவில் பவுர்ணமி தொடங்கி புரட்டாசி மாதத்தின் நிறைவு நாளான 31-ந் தேதியான இன்று (வியாழக்கிழமை) மாலை 5.38 மணியளவில் நிறைவடைகின்றது.

    இந்த நிலையில் திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும், இன்றும் திருவண்ணாமலைக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டு இருந்தது. இதனால் கிரிவலம் வருவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    இருப்பினும் நேற்று மாலையில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். இரவு 8 மணிக்கு மேல் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இருப்பினும் மழையின் காரணத்தினால் வழக்கத்தை விட கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    மேலும் கோவிலில் கிரிவலம் செல்ல வந்த பக்தர்கள் ஏராளமானோர் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. போலீசார் திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதையில் தொடர்ந்து ரோந்து பணியிலும், போக்குவரத்தை சீர் செய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.

    • மழை உருவாகும் வானிலைச் சூழல்களையும், காற்று இயக்கங்களையும் பொறுத்து பொதுவாக 9 பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
    • தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 14 மாவட்டங்கள் கடற்கரைகளை கொண்டுள்ளன.

    மகிழ்ச்சியோடு கொண்டாடி வரவேற்க வேண்டிய மழையை, சென்னை மக்கள் மட்டும் அச்சத்துடன் எதிர்கொள்கின்றனர். ஏனென்றால் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் மழை கொட்டி தீர்க்கிறது. அதற்கு என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் மழையை பற்றி முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

    மழை என்பது ஒரு இயற்கை சுழற்சியால் நடக்கிறது. கடல், ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகளில் இருந்து நீர் சூரியனின் வெப்பத்தால் ஆவியாகி வளிமண்டலத்தில் சேருகிறது. அங்கு குளிர்ந்து நீர்த்துளிகளாக மாறி மேகங்களை உருவாக்குகிறது. மேகங்கள் கனமாக மாறி மழையாக விழுகின்றன.

    மழை உருவாகும் வானிலைச் சூழல்களையும், காற்று இயக்கங்களையும் பொறுத்து பொதுவாக 9 பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அதில் முதலாவது 'பருவ மழை'. அதாவது ஜூன் முதல் செப்டம்பர் வரை தெற்கு-மேற்கு பருவ மழையும் மற்றும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவ மழையும் பெய்யும் காலங்களாகும். இந்தியாவில் இதுதான் முக்கிய மழைக்காலம் ஆகும். இந்த மழையை நம்பி தான் விவசாய பணிகள் எல்லாம் நடக்கின்றன.

    2-வது இடைமழை. அதாவது வெப்பமான இடங்களில் காற்று மேலே சென்று குளிர்ந்து நீர்த்துளிகளாக மாறும்போது உருவாகும் மழை. இது பொதுவாக வெப்ப மண்டலங்களில், கோடைகாலங்களில் மாலையில் நிகழும். 3-வது மலைமழை. அதாவது மலைகளின் அடிப்பகுதியில் உள்ள காற்று மேலே சென்று குளிர்வதால் மழையாக மாறும் மழை. இது மலையோரப் பகுதிகளில் அதிகமாக காணப்படும்.

    4-வது இடிமுழக்க மழை. மின்னல், இடியுடன் கூடிய, வலுவான மழையாகும். இது கடுமையான வானிலைச் செயல்பாடுகளால் உருவாகும், பொதுவாக வெப்பமான பகுதிகளில் அல்லது பருவநிலை மாற்றங்கள் அதிகமாக உள்ள இடங்களில் இது அடிக்கடி ஏற்படுகிறது. 5-வது, சுழல்புயல் மழை. இது புயலினால் ஏற்படும் மழை. சுழல்புயல் என்பது கடலில் உருவாகி, கடல் நீர் மேலே உயர்ந்து, காற்றழுத்தம் குறைவதால் உண்டாகும் ஒரு பெரிய நிகழ்வு. இதன் காரணமாக பலமுறை திடீர் மழை, பெரும் காற்று மற்றும் கடலோரப் பகுதிகளில் அதிக மழை பொழியும்.

    6-வது, இடையிலான மழை. இது வெப்பமான காற்று மற்றும் குளிர் காற்று சந்திக்கும் பகுதியில் உருவாகும் மழை. இது மிதவெப்ப மண்டலங்களில் காணப்படும். 7-வது சிறுகாற்று மழை. இது மெல்லிய, சிறிய நீர்த்துளிகள் மெதுவாக மழையாக விழும் ஒரு மழை வகையாகும். இந்த மழையில் நீர்த்துளிகள் பரவலாக கிடைக்கின்றன, ஆனால் அவை மிகச் சிறியதாகவும், மெதுவாகவும் இருக்கும். இது பொதுவாக வெப்பநிலை குறைவாக இருக்கும் நாட்களில் அல்லது மிதமான குளிர்ந்த காற்று மண்டலங்களின் மூலம் கிடைக்கும்.

    8-வது நிச்சயமில்லாத மழை. இது பருவம் இல்லாத நேரங்களில் திடீரென்று பெய்யும் மழை. ஒன்பதாவது திடீர் மழை. இது மிக குறுகிய நேரத்தில் அதிகமான நீர் விழும் மழை, இது பேரழிவுகளை உருவாக்கும்.

    இந்த மழை வகைகளில் மிகவும் பேராபத்தானது சுழல்புயல் மழை மற்றும் திடீர் மழை தான். அதில் சென்னையில் இதற்கு முன்பும், இப்போதும் பெய்வது சுழல்புயல் மழை தான். இது கடலில் ஏற்படும் புயலால் அதிகளவு மழை பொழிவு இருக்கிறது. திடீர் மழை என்பது வயநாட்டில் பாதிப்பினை ஏற்படுத்திய மழை தான்.

    சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் ஒவ்வொரு முறையும் வங்கக்கடலில் ஏற்படும் சுழல் புயல் மழையால் பாதிக்கப்படுகின்றன.

    தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 14 மாவட்டங்கள் கடற்கரைகளை கொண்டுள்ளன. அதில் சென்னை உள்பட 13 மாவட்டங்கள் வங்கக்கடல் பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்கள் ஆகும். கன்னியாகுமரி மட்டும் வங்கக்கடல், இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக் கடலோரங்களை உள்ளடக்கி உள்ளது.

    வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருவாகி, இயற்கையாகவே சென்னை மற்றும் ஆந்திரா, ஒடிசா ஆகிய பகுதிகளில் தான் கரையை கடக்கிறது. இதுதான் சென்னையில் அதிக மழை பொழிவுக்கு முக்கிய காரணம்.

    கடந்த காலங்களில் வங்கக்கடலில் உருவாகும் புயல்கள் ஆந்திரா மற்றும் ஒடிசாவில் தான் கரையை கடந்து வந்தன. ஆனால் பருவ நிலை மாற்றத்தால் கடந்த 20 ஆண்டுகளாக சென்னையிலும் கரையை கடக்கிறது. அதனால் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கிறது. பொதுவாக புயல் கரையை கடக்கும்போது அந்த நகரங்களில் 10 முதல் 30 செ.மீட்டர் கூட மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

    தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மழையால் ஏற்படும் பாதிப்பு மற்ற மாவட்டங்களிலும் எதிரொலிக்கிறது. அதேவேளையில் பிற மாவட்டங்களில் இதே மழை பெய்தாலும், அவை கவனம் ஈர்க்கப்படுவதில்லை.

    • கடைசி மெட்ரோ ரெயில் இரவு 11 மணிக்கு புறப்படும்.
    • வண்ணாரப்பேட்டை முதல் ஆலந்தூர் வரையில் 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மெட்ரோ ரெயில் சேவைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் வார நாள் அட்டவணையின்படி வழக்கம் போல் இயக்கப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். அதன்படி, அனைத்து முனையங்களில் இருந்தும் முதல் மெட்ரோ ரெயில் காலை 5 மணிக்கு புறப்படும்.

    கடைசி மெட்ரோ ரெயில் இரவு 11 மணிக்கு புறப்படும். சென்னை சென்டிரல் முதல் பரங்கிமலை வரையிலும், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையில் 6 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயங்கும். வண்ணாரப்பேட்டை முதல் ஆலந்தூர் வரையில் 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரியாக உமர் அப்துல்லா பதவி ஏற்றார்.
    • அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக உமர் அப்துல்லா பதவியேற்றுக் கொண்டார்.

    இந்நிலையில், முதல் மந்திரியாக பொறுப்பேற்ற உமர் அப்துல்லாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

    ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ள உமர் அப்துல்லாவுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா பதவியேற்பு நிகழ்ச்சிக்கு எனக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக கண்காணிப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளதால், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரான கனிமொழியை என் சார்பாகவும், கழகத்தின் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவிக்க அனுப்பி வைத்தேன்.

    இந்தியத் துணைக் கண்டத்தில் தென் முனையில் உள்ள தமிழ்நாடும், வடமுனையில் உள்ள ஜம்மு காஷ்மீரமும் உரக்கக் குரலெழுப்பும் மாநில உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயகப் போராட்டத்தில் இணைந்து பயணிப்போம், வெற்றி காண்போம் என தெரிவித்துள்ளார்.

    • திமுக அரசும், அமைச்சர்களும் கமிஷன், கலெக்ஷன் மட்டுமே பார்க்கிறார்கள். மக்களை பார்ப்பதில்லை.
    • மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் வரும் சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு பதிலடி கொடுப்பார்கள்.

    மதுரை:

    வீரபாண்டிய கட்டபொம்மனின் 225-வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலைக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ கூறியதாவது:

    அ.தி.மு.க. ஆட்சியில் பருவ மழைகளையும் புயல்களையும் சிறப்பாக எதிர்கொண்டு மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தோம். ஆனால் தி.மு.க. அரசு மக்களுக்கு எதையும் செய்யவில்லை.

    மழை நேரத்தில் முதல்வர் ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் போட்டோ சூட் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

    தி.மு.க. அரசும், அமைச்சர்களும் கமிஷன், கலெக்ஷன் மட்டுமே பார்க்கிறார்கள். மக்களை பார்ப்பதில்லை.

    மழையால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள். அமைச்சர் மூர்த்தி கூட மதுரையில் அவர் தொகுதியில் தான் ஆய்வு செய்கிறார்.

    புது காதலன், புது காதலி போல தமிழக அரசும், ஆளுநர் உள்ளனர். ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள மாட்டோம் என ஆளுநருக்கு எதிராக செயல்பட்ட தி.மு.க, தற்போது ஆளுநரோடு இணக்கமாக இருக்கிறார்கள்.

    முதல்வர் ஸ்டாலின் திடீரென டெல்லிக்கு செல்கிறார், பிரதமரை சந்திக்கிறார். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்குகிறார்கள் ஏதோ தேன்நிலவு போல நடக்கிறது.

    ஆளுநர் எப்போதும் அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டி மக்களின் குறைகளை எடுத்துச் சொல்வார். ஆனால் ஆளுநர் தற்போது மாறி இருக்கிறார் என தெரிவித்தார்.

    சென்னை மழையை முன்னிட்டு தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை பணிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இன்று சென்னையில் எங்கும் மழை பெய்யவில்லை.
    • இதனால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டது.

    சென்னை:

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை தெற்கு ஆந்திராவில் நெல்லூர்- புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    அதனால் இன்று சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று எங்கும் மழை பெய்யவில்லை என்பதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது.

    இம்மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சென்னையில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பைச் சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.

    இதேபோல, திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் மழை நிவாரண முகாம்களாக உள்ள பள்ளிகள் மட்டும் இயங்காது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.

    • இன்று சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது.
    • இன்று சென்னையில் எங்கும் மழை பெய்யவில்லை.

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    நாளை அதிகாலை தெற்கு ஆந்திராவில் நெல்லூர்- புதுச்சேரி இடையே இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    அதனால் இன்று சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று சென்னையில் எங்கும் பரவலாக மழை பெய்யவில்லை.

    இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது.

    இம்மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் கரையை கடக்காததால் ரெட் அலர்ட்.
    • முன்னெச்சரிக்கையுடன் இருப்பதற்காக ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று மதியம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து கிழக்கு தென்கிழக்கே 280 கி.மீ. தூரத்தில் உள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 15 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

    நாளை அதிகாலை தெற்கு ஆந்திராவில் நெல்லூர்- புதுச்சேரி இடையே இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை.

    ரெட் அலர்ட் எச்சரிக்கையுடன் இருப்பதற்காக விடுக்கப்படுகிறது. ஒரு சில மணி நேரத்திற்கு இந்த ரெட் அலர்ட் அல்ல. 24 மணி நேரத்திற்கும் கொடுக்கப்படுகிறது. இன்னும் கரையை கடக்கவில்லை என்பதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது.
    • ஏற்காடு மஞ்சகுட்டை கிராமம் செல்லும் மலைப்பாதையில் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து மின் கம்பி மீது விழுந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் முழுவதும் சாரல் மழையாக நீடித்தது.

    குறிப்பாக சேலம் மாநகரில் நேற்று காலை முதலே விட்டு விட்டு மழை பெய்த படி இருந்தது. இரவில் மழை குறைந்தது. குறிப்பாக மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான வீரகனூர், கரியகோவில் பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.

    மேலும் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், சிற்றோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் வயல்வெளிகள் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. இதனால் விவசாய பயிர்களும் செழித்து வளரும் நிலையில், கால்நடைகளுக்கும் தேவையான தீவணங்கள் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மழையை தொடர்ந்து சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். நேற்று பெய்த தொடர் மழையை யொட்டி சேலம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று காலை முதல் இரவு முழுவதும் மழை பெய்தது.

    இந்நிலையில் இன்று காலை ஏற்காடு மஞ்சகுட்டை கிராமம் செல்லும் மலைப்பாதையில் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து மின் கம்பி மீது விழுந்தது.

    இதில் மின்கம்பம் உடைந்து சாலையின் குறுக்கே விழுந்ததால் மின்சார கம்பிகளும் சாலையில் விழுந்தது. மரம் சாலையின் குறுக்கே கிடந்ததால் சுமார் 2 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள 32 கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அந்த பகுதி மக்கள் தவித்து வருகிறார்கள்.

    சாலையில் விழுந்த மரத்தை நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் ஏற்காட்டில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காப்பி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக வீரகனூரில் 28 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் 16.9, ஏற்காடு 5.8, வாழப்பாடி 11.2, ஆனைமடுவு 5, ஆத்தூர் 7.8, கெங்கவல்லி 12, தம்மம்பட்டி 13, ஏத்தாப்பூர் 8.கரியகோவில் 21, நத்தக்கரை 21, சங்ககிரி 1.4, எடப்பாடி 2.4, மேட்டூர் 5.2, ஓமலூர் 19, டேனீஸ்பேட்டை 6 மி.மீ. மாவட்டம் முழுவதும் 183.7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அதிகனமழையிலும் பெரிய பாதிப்பு இல்லை.
    • இரவில் இருந்த மழைநீர் காலையில் வடிந்த ஆதங்கத்தில் அதிமுகவினர் உள்ளனர்.

    சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் வளாகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அதிகனமழையிலும் பெரிய பாதிப்பு இல்லை.

    * தமிழக அரசின் நடவடிக்கையால் தண்ணீர் தேங்காமல் வெள்ளச்சேரி வேளச்சேரியாக மாறி உள்ளது.

    * கடந்தாண்டு மழையின்போது ஏற்பட்ட பாதிப்பால் பாடம் கற்று இந்தாண்டு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * சென்னையில் நேற்று ஒரே நாளில் 17 முதல் 20 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    * அதிகனமழை பெய்த போதிலும் சென்னையில் 4 மணி நேரத்தில் மழைநீர் வடிந்துள்ளது.

    * அதிமுக ஆட்சியில் அடையாற்றில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

    * மழைநீர் வடிகால் பணிகளில் சில அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டாலும் அதனை நிறைவு செய்தது திமுக அரசுதான்.

    * பல இடங்களில் நான் ஆய்வு செய்தேன் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. அதிமுக வேண்டுமென்றே குற்றம் சாட்டுகிறது.

    * இரவில் இருந்த மழைநீர் காலையில் வடிந்த ஆதங்கத்தில் அதிமுகவினர் உள்ளனர்.

    * தமிழக அரசின் பணியை மக்களே பாராட்டுகின்றனர் என்று அவர் கூறினார்.

    • கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை சேமிக்கும் வகையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீராணம் ஏரியில் தண்ணீரை சேமித்து வருகின்றனர்.
    • வீராணம் ஏரியில் 47.5 அடி அளவிற்கு தண்ணீர் இருப்பு வைத்துக் கொள்ளலாம்.

    கடலூர்:

    வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் கல்லணையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதனால் கீழணையின் மொத்த நீர்மட்டமான 9 அடியில் தற்போது அணை 8.5 அடியை எட்டியது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வருவதாலும், தொடர் மழை காரணமாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் தற்போது கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க கொள்ளிடம் கரையோரம் வசிக்கும் கிராம மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை சேமிக்கும் வகையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீராணம் ஏரியில் தண்ணீரை சேமித்து வருகின்றனர்.

    வீராணம் ஏரியில் 47.5 அடி அளவிற்கு தண்ணீர் இருப்பு வைத்துக் கொள்ளலாம். அதன்படி ஏற்கனவே 44 அடி தண்ணீர் இருந்து வந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரில் வீராணம் ஏரிக்கு 2 அடி தண்ணீர் நிரப்பி தற்போது 46 அடி தண்ணீர் கொள்ளளவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் வீராணம் ஏரியிலிருந்து வடவாறு வழியாக சேத்தியாத்தோப்பு அணைக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு தற்போது 7.5 அடி முழு கொள்ளளவு எட்டப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் சேத்தியாதோப்பு அணையில் இருந்து 3வாய்க்கால் வழியாக பரங்கிப்பேட்டை பகுதிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகின்றது. இதன் மூலம் அந்த பகுதியில் விவசாய பணிகளுக்கு தண்ணீர் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் தொடர் மழை காரணமாக ஆறுகள், ஏரிகள் போன்றவற்றை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

    ×