என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இந்த ஆண்டு நவம்பர் 2-ந்தேதி தொடங்கி 8-ந்தேதி வரை கந்தசஷ்டி விழா நடைபெற உள்ளது.
- பக்தர்களின் வசதிக்காக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் ஸ்தலத்தில் தான், முருகப் பெருமான் சூரனை வதம் செய்து தேவர்களை காத்ததுடன், தன்னை நோக்கி தவம் செய்த குரு பகவானுக்கும் காட்சி அளித்தார் என்பதால் கந்த சஷ்டி விழாவிற்குரிய தலமாக திருச்செந்தூர் கருதப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் கந்தசஷ்டி விழாவும், சூரசம்ஹாரமும் நடைபெற்றாலும், திருச்செந்தூர் நடைபெறும் சூரசம்ஹாரத்தை காணவே லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் கூடுவது வழக்கம்.
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் இந்த ஆண்டு நவம்பர் 2-ந்தேதி தொடங்கி 8-ந்தேதி வரை கந்தசஷ்டி விழா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வருகிற 7-ந்தேதியும், முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவம் 8-ந்தேதியும் நடைபெற உள்ளது. இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் இத்தலத்திற்கு வருகை தர உள்ளனர். இதனால் பக்தர்களின் வசதிக்காக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு செய்தார்.
பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட கூடாரம், சூரசம்ஹாரம் நடைபெற உள்ள இடங்கள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் ஆய்வாளர் அஜய் சீனிவாசன், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, கோவில் தக்கார் அருள்முருகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
- தக்காளி தோட்டத்தில் 2 யானைகள் புகுந்து தோட்டத்தை காலல் மிதித்து நாசம் செய்துள்ளன.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 10 காட்டு யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன.
இந்நிலையில் சந்தனப்பள்ளி, தல்சூர் ஆகிய கிராமங்களில் 2 யானைகள் முகாமிட்டு ராகி பயிர்களை நாசம் செய்துள்ளன. விவசாயிகள் பட்டாசு வெடித்து விரட்டியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து அருகில் உள்ள குருபட்டி கிராமத்தில் மூர்த்தி என்பருடைய 3 ஏக்கர் தக்காளி தோட்டத்தில் 2 யானைகள் புகுந்து தோட்டத்தை காலல் மிதித்து நாசம் செய்துள்ளன.
இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் சேதமடைந்த தாக்காளி, ராகி தோட்டங்களை பார்வையிட்டனர். தக்காளி விலை சற்று உயர்ந்துள்ள நிலையில் யானைகள் அட்டகாசத்தால் தக்காளி தோட்டம் நாசமடைந்து உள்ளதால் விவசாயி மூர்த்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வனத்துறையினரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், இந்த பகுதியில் சுற்றித்திரியும் யானைகளை கர்நாடகா வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாநாட்டு திடலை சுற்றி பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
- மாநாட்டிற்கு சுமார் 3 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரையுலக உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி, முதல் மாநாட்டை அறிவித்துள்ளார்.
அதன்படி, அந்த மாநாடு கொள்கை விளக்கத் திருவிழா என்று குறிப்பிட்டு பிரமாண்டமாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நாளை நடைபெறுகிறது.
விஜய் எந்த மாதிரியான அரசியலை முன்னெடுக்கப்போகிறார் என்று பலரும் கேள்விகளை அவரை நோக்கி வீசி வந்த சூழலில், மாநாட்டு திடலில் இடம் பெற்றுள்ள கட்-அவுட்கள் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
மேடையின் இடது புறத்தில் பெரியார், காமராஜர், அம்பேத்கர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் வேலு நாச்சியார், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலை அம்மாள் ஆகியோரது கட்-அவுட்கள் இடம் பெற்றுள்ளது. அவர்களுக்கு பின்னால் தலைமைச்செயலகம் இடம் பெற்றுள்ளது.

இதில் பெண்களுக்கு என்று முதல் முறையாக தனி அங்கீகாரத்தை இந்த மாநாடு அளித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாக உள்ளது. மேலும் மேடையின் வலதுபுறம் தமிழ் அன்னை, சேர, சோழ, பாண்டியர்கள் மற்றும் அவர்களுடன் விஜய் நிற்பது போன்ற கட்-அவுட்களும் மாநாட்டு திடலில் கம்பீரமாக காட்சி தருகின்றன. மாநாட்டு திடலில் நுழைவாயில் இரு புறமும் விஜய் கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டு திடலில் 100 அடி உயரமுள்ள கொடிக்கம்பம் நேற்று காலை நடப்பட்டது. இந்த கம்பத்தில் 20 அடி நீளமும், 30 அடி அகலமும் கொண்ட கொடி பறக்க விடப்படுகிறது. கயிறு வைத்து இழுத்தும், ரிமோட் மூலமாகவும் இந்த கம்பத்தில் கொடியை ஏற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் அதிகளவு தொண்டர்கள் கூடுவதால் தொழில்நுட்ப சாதனங்கள் இயங்குவதற்கு ஏற்ற வகையில் தற்காலிக செல்போன் டவர் ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி, வெகுதொலைவில் இருந்து மாநாட்டை பார்க்கும் வகையில் பெரிய டிஜிட்டல் திரைகள் அமைக்கும் பணி, 100-க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள், 350 நடமாடும் கழிவறைகள் அமைப்பது என்று அனைத்து வித பணிகளும் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
மாநாட்டு திடலில் காவல் துறை அளிக்கும் பாதுகாப்புடன் 150-க்கும் மேற்பட்ட தனியார் பாதுகாவலர்கள் படை, துபாயில் இருந்து 1000 பவுன்சர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். பவுன்சர்களிடம் அவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று விஜய் வலியுறுத்தி உள்ளார்.
மாநாட்டு திடலை சுற்றி பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மாநாட்டு திடலில் தற்போது வரை பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கான இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கும் இன்று மாநாட்டு திடலில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அனைவரும் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரை பிரபலங்கள் அதிகம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் மாநாட்டு திடலில் கேரவன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டிற்கு சுமார் 3 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்.
மாநாடு நடைபெறும் இடத்திற்கு போலீசார் ஜீப்கள், பஸ்கள் மூலம் வரத்தொடங்கி உள்ளனர்.
- கடந்த ஜூன் மாதம் வரை ஒழுங்கின்றி வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை, அதற்குப் பிறகு கடந்த 118 நாட்களாக வழங்கப்படவில்லை.
- ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய ரூ.1.05 கோடி வீதம் பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் நிறுவனம் பாக்கி வைக்கிறது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் 2 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 35 லட்சம் லிட்டர் பாலை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் கொள்முதல் செய்கிறது.
உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு லிட்டருக்கு ரூ.3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக அரசு அறிவித்தது. அப்போது முதல் கடந்த ஜூன் மாதம் வரை ஒழுங்கின்றி வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை, அதற்குப் பிறகு கடந்த 118 நாட்களாக வழங்கப்படவில்லை.
ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய ரூ.1.05 கோடி வீதம் பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் நிறுவனம் பாக்கி வைக்கிறது. இந்தத் தொகை இப்போது ரூ.125 கோடிக்கும் கூடுதலாக அதிகரித்திருக்கிறது.
தீப ஒளியைக் கொண்டாட அவர்களுக்கு பணம் தேவை. இதைக் கருத்தில் கொண்டு பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.125 கோடி நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க ஆவின் நிறுவனத்திற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
கால் நடைகளுக்கான தீவனம் உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்து விட்ட நிலையில், பசும்பாலுக்கு 1 லிட்டருக்கு ரூ.45, எருமை பாலுக்கு ரூ.54 என பால் கொள்முதல் விலையை உயர்த்துவதற்கும் தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- குளிர்ந்த காற்று வீச அதனை தொடர்ந்து மதுரை மாநகர் முழுவதும் கனமழை பெய்தது.
- கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் மதுரையில் பலத்த மழை கொட்டியது.
மதுரை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவான 'டானா' புயல் காரணமாக கடந்த சில நாட்களாக காற்றின் மாறுபாட்டால் தென் மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகலில் மதுரை மாநகரை கருமேகங்கள் சூழ்ந்தன. குளிர்ந்த காற்று வீச அதனை தொடர்ந்து மதுரை மாநகர் முழுவதும் கனமழை பெய்தது.
மாலை 3 மணி முதல் 3.15 மணி வரை பலத்த மழை கொட்டித் தீர்த்தது. திடீரென பெய்த பேய் மழையால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். விளக்குத்தூண், தெற்கு மாசி வீதி, கீழவாசல், காமராஜர் சாலை, டவுன்ஹால் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் தீபாவளி வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
பண்டிகைக்கு பொருட்கள் வாங்க வந்தவர்கள் சிரமம் அடைந்தனர். அடை மழை காரணமாக மதுரை நகரில் உள்ள ஆத்திக்குளம் கண்மாயில் அதிக நீர்வரத்து ஏற்பட்டது. கரை பலவீனமாக இருந்தால் சிறிது நேரத்தில் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. இதேபோல் புளியங்குளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.
இதனால் செல்லூர், அய்யர் பங்களா, ஆத்திக்குளம், நரிமேடு, கோசாகுளம், சர்வேயர் காலனி, ஆனையூர், பொதும்பு, குலமங்கலம், மகாத்மா காந்தி நகர், விஸ்வநாதபுரம், இன்கம்டாக்ஸ் காலனி ரோடு, முல்லை நகர், கூடல் நகர் உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ள நீர் புகுந்தது. சாலைகள் மற்றும் தெருக்களில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் சென்றது. பல தெருக்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. பொதுமக்கள் முக்கிய ஆவணங்களை எடுத்து கொண்டு அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியேறினார். வீடுகளுக்குள் புகுந்த வெள்ளத்தால் குழந்தைகள், வயதானவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

இதேபோல் மதுரை புறநகர் பகுதிகளான ஒத்தக்கடை, நரசிங்கம், ராஜகம்பீரம், கொடிக்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. கண்மாயிலுக்கு செல்லும் ஓடைகளில் தண்ணீர் நிரம்பி அருகில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்தது. பல பகுதிகளில் மின்தடையும் ஏற்பட்டது.
மாலையில் தொடங்கிய மழை இரவு 8 மணி வரை பரவலாக பெய்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கின. வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
பல மணி நேரம் ஆகியும் மாநகராட்சி மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். தண்ணீர் புகுந்ததால் வீட்டுக்குள் செல்ல முடியாமல் அவர்கள் வெளியிலேயே பல மணி நேரம் காத்திருந்தனர்.
இரவு 8 மணி வரை அருகில் உள்ள ஆத்திகுளம் கண்மாயிலிருந்து தொடர்ந்து தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டே இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கடேசன் எம்.பி., கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களை அருகில் உள்ள 4 அரசு பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அங்கு அவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.
மதுரை மாநகரில் நேற்று வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்துள்ளது. 1955-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது ஒரே நாளில் மட்டும் 11 சென்டிமீட்டர் மழை மதுரை மாநகரில் பதிவாகி உள்ளது. குறிப்பாக நேற்று மாலை ஒரு மணி நேரத்தில் மதுரை மாநகரில் மட்டும் 4.5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. குறைந்த மணி நேரத்தில் அதிகனமழை பெய்ததால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் மதுரையில் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக செல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்திருந்தது. அந்த தண்ணீரே வடியாத நிலையில் நேற்று பெய்த மழையால் மீண்டும் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை வரை செல்லூர், அய்யர்பங்களா, நரிமேடு, ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தண்ணீர் வடியாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகம் தண்ணீரை வெளியேற்றும் பணியை முடுக்கி விட்டுள்ளது. நவீன மின் மோட்டார்கள் மூலம் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மதுரை மாநகர மக்களுக்கு இந்த பருவ
மழையால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
இதனிடையே இன்று காலை பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடியவில்லை. இதன் காரணமாக வடக்கு மற்றும் மேற்கு வருவாய் வட்டங்களில் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
- சம்பந்தப்பட்ட மருத்துவமனை 10 நாட்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டது.
- வெளிநாட்டில் இருப்பதால் உதவியாளர் மூலமாக தனது தரப்பு வருத்தத்தை கடித்ததின் மூலமாக தெரிவித்துள்ளார்.
சென்னையை சேர்ந்த யூடியூபர் இர்பான் - ஆசிபா தம்பதிக்கு, ஜூலை 24-ந்தேதி தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும் போது, அறுவை சிகிச்சை அறையில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை, இர்பான் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ சர்ச்சையான நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனை 10 நாட்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. மேலும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
அதேபோல, பிரசவம் பார்த்த டாக்டர் நிவேதிதா மற்றும் இர்பான் மீது நடவடிக்கை எடுக்கும்படி, செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு, மருத்துவ ஊரக நல பணிகள் துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக இர்பானுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம் தொடர்பாக வருத்தம் தெரிவித்து மருத்துவத்துறைக்கு இர்பான் கடிதம் அனுப்பியுள்ளார். வெளிநாட்டில் இருப்பதால் உதவியாளர் மூலமாக தனது தரப்பு வருத்தத்தை கடித்தத்தின் மூலமாக தெரிவித்துள்ளார்.
அதில், எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை என்றும் மருத்துவ சட்டங்களை மதிப்பதாகவும் இர்பான் குறிப்பிட்டுள்ளார்.
- இறுதி நாளான 11-ந்தேதி வரை தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் வயநாடு தொகுதியில் தேர்தல் பணியாற்றிட உள்ளார்கள்.
- எனது தேர்தல் பிரசாரம் வருகிற 2, 3 ஆகிய தேதிகளில் தொடங்கப்பட உள்ளது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வெற்றிக்காக தேர்தல் பணியாற்றிட எனது தலைமையில் முன்னாள் தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 45 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நியமித்துள்ளோம். அடுத்த மாதம் 2-ந்தேதி முதல் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான 11-ந்தேதி மாலை வரை இந்த தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் வயநாடு தொகுதியில் தேர்தல் பணியாற்றிட உள்ளார்கள். எனது தேர்தல் பிரசாரம் வருகிற 2, 3 ஆகிய தேதிகளில் தொடங்கப்பட உள்ளது.

பாராளுமன்ற இடைத்தேர்தலில் பிரியங்காவின் வெற்றிக்கு பணியாற்றிட விருப்பம் உள்ள தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் கமிட்டியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், முன்னணி அமைப்புகள், இதர துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் தமிழக காங்கிரசால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களோடு இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். தேர்தல் பணியாற்ற விருப்பம் உள்ள நமது இயக்க நண்பர்கள் தங்களுடைய விருப்பத்தை தமிழக காங்கிரஸ் தலைமையகத்திற்கு தெரிவிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- அழகர் தனது குடும்பத்தினருடன் கீழ மட்டையான் கிராமத்தில் நடைபெற்ற புரட்டாசி பொங்கல் திருவிழாவுக்கு சென்றார்.
- கணவர் மற்றும் மகனை காணவில்லை என மனைவி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்
சோழவந்தான்:
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேல மட்டையான் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர் (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
சம்பவத்தன்று அழகர் தனது குடும்பத்தினருடன் கீழ மட்டையான் கிராமத்தில் நடைபெற்ற புரட்டாசி பொங்கல் திருவிழாவுக்கு சென்றார்.
பின்னர் அழகர் தனது 4 வயது மகன் ஜெகதீஸ்வரனை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள கண்மாய்க்கு குளிக்கச் சென்றார். அப்போது மகன் தனக்கு நீச்சல் கற்றுத்தருமாறு கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து அழகரும் தனது மகனுக்கு கண்மாயில் நீச்சல் கற்றுக் கொடுத்தார். அப்போது 2 பேரும் ஆழமான பகுதியில் சென்று சிக்கியுள்ளனர். சேறும் சகதியுமாக இருந்ததால் அவர்களால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. 2 பேரும் சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.
இதனிடையே கணவர் மற்றும் மகனை காணவில்லை என மனைவி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.
இன்று காலை கீழ மட்டையான் கண்மாயில் அழகர், ஜெகதீஸ்வரன் உடல்கள் மிதந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கிராமத்தினர் உடனே காடுபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் தந்தை, மகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக 2 பேரின் உடல்களை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவுக்கு வந்தவர்கள் கண்மாயில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பண்டிகை காலங்களில் வாகனங்கள் தொடர்ச்சியாக வருவதால் சுங்கச்சாவடிகளில் நெரிசல் ஏற்பட்டு பலமணி நேரம் பயணம் தடைபடுகிறது.
- குறிப்பாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை சுட்டி காட்டப்பட்டுள்ளது.
சென்னை:
தீபாவளி பண்டிகை 31-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய மக்கள் ஆயத்தமாகி விட்டனர்.
பஸ், ரெயில்கள் நிரம்பி விட்டதால் அரசு சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய 1.25 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். வெளியூர் பயணம் 28-ந்தேதி முதல் அதிகரிக்கும் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர சொந்தமாக கார்களிலும் பயணம் செய்கிறார்கள்.
சென்னையில் இருந்து 29,30-ந் தேதிகளில் அதிக வாகனங்கள் செல்லக்கூடும். மேலும் சிறப்பு பஸ்களும் ஆயிரக்கணக்கில் இயக்கப்படுவதால் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்று போலீசார் கருதுகிறார்கள்.
பாஸ்ட் டிராக் கட்டண முறை இருந்தாலும் பண்டிகை காலங்களில் வாகனங்கள் தொடர்ச்சியாக வருவதால் சுங்கச்சாவடிகளில் நெரிசல் ஏற்பட்டு பலமணி நேரம் பயணம் தடைபடுகிறது.
அதனை கருத்தில் கொண்டு வாகன நெரிசல் ஏற்பட்டால் இலவசமாக அனுமதிக்கலாம் என்று சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் இல்லாமல் அனுமதிக்கவும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
பண்டிகை காலங்களில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என தமிழக அரசு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் வலியுறுத்தியது. குறிப்பாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை சுட்டி காட்டப்பட்டுள்ளது.
அதனை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்று விட்டு திரும்பும் போதும் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் பல மைல் தூரத்திற்கு அணிவகுத்து நிற்பதால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியவில்லை.
இதனை கருத்தில் கொண்டு சுங்கச்சாவடிகள் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் வாகன நெரிசல் ஏற்பட்டால் இலவசமாக அனுமதிக்கலாம் எனவும், சுங்கச்சாவடிகளில் கூடுதலாக ஊழியர்களை நியமித்து வாகனங்கள் நெரிசல் இல்லாமல் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- களக்காடு சுற்றுவட்டாரத்தில் 29.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
- தென்காசி நகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 20 மில்லிமீட்டர் மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று நெல்லை, தென்காசி மாவட்டத்தில் காலையில் இருந்து மாலை வரையிலும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலை முதல் வெயில் அடித்தது
நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதனால் களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து நேற்று சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் நீர்வரத்து சற்று குறைந்துள்ளதால் தலையணையின் கீழ் பகுதியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
களக்காடு சுற்றுவட்டாரத்தில் 29.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இரவு வரையிலும் நீடித்த மழையினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக நாங்குநேரியில் 51 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மூலக்கரைப்பட்டியில் 25 மில்லிமீட்டரும், கன்னடியன் கால்வாய் பகுதியில் 13 மில்லிமீட்டரும் மழை பெய்தது. சேரன்மகாதேவியில் 9.6 மில்லிமீட்டர், அம்பையில் 8 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மாவட்டத்தின் மற்ற பகுதியில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.
அணைகளை பொறுத்தவரை சேர்வலாறு, பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பரவலாக பெய்தது. அந்த அணை பகுதிகளில் தலா 10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 92.55 அடியாக இருந்த நிலையில் இன்று சுமார் 1 அடி அதிகரித்து 93.40 அடியை எட்டியுள்ளது. பிற்பகல் 94 அடிரைய எட்டியது.
அந்த அணைக்கு நேற்று காலை வரை வினாடிக்கு 288 கனஅடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில் தொடர்மழையால் இன்று காலை நிலவரப்படி 1,185 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேர்வலாறு அணை நீர்மட்டம் 104.49 அடியாக இருந்த நிலையில் இன்று நீர்வரத்து காரணமாக ஒரே நாளில் 2 1/4 அடி உயர்ந்து 106.82 அடியை எட்டியுள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 63.70 அடியாக உள்ளது. அகஸ்தியர் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் மக்கள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நாலுமுக்கு எஸ்டேட்டில் 46 மில்லிமீட்டரும், ஊத்து பகுதியில் 42 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 40 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாஞ்சோலை சுற்றுவட்டாரத்தில் 31 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. இதனிடையே இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள நடத்தகூடாது என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று காலையில் தொடங்கி இரவு வரையிலும் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. சில இடங்களில் இடி-மின்னலுடன் மாலை நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் 38 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.
தென்காசி நகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 20 மில்லிமீட்டர் மழை பெய்தது. ஆயக்குடி, சிவகிரி பகுதிகளிலும் கனமழை பெய்ததால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் லேசான சாரல் மழை பெய்தது.
அணைகளை பொறுத்தவரை கடனா மற்றும் ராமநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியது. ராமநதியில் 24 மில்லிமீட்டரும், கடனா அணையில் 17 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. கடனா அணை நீர்மட்டம் இன்று 1 1/2 அடி உயர்ந்து 42 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 55.50 அடியாகவும் இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகள் நீர் இருப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்டத்தின் மிகச்சிறிய அணையான குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. இன்று காலை வரை அங்கு 32.6 மில்லிமீட்டர் மழை பெய்தது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 73 அடியாக உள்ளது. அந்த அணை பகுதியில் நேற்று 17 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. அணைக்கு வரும் 40 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மேலும் கனமழை எச்சரிக்கையால் தென்காசி மாவட்டத்திலும் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என தனியார் பள்ளிகளுக்கு கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 9 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. குலசேகரன்பட்டினம் மற்றும் காயல்பட்டினத்தில் தலா 4 மில்லிமீட்டரும், சாத்தான்குளத்தில் 8.6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
- எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம்.
- வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,
வணக்கம்.
பெயரைப் போல சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன்.
காரணம், எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம். ஆகவே, மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன்.
அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும். போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன். நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள். அப்படித்தான் வரவேண்டும்.
நாளை (27-10-2024) நமது மாநாட்டில் சந்திப்போம்.
மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்.
தோழமையுடன்,
உங்கள் விஜய்
என்று தெரிவித்துள்ளார்.
- கடந்த ஒரு வாரமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
- அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
சேலம்:
கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை தீவிரமாக பெய்து வருவதால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இதே போல் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 31 ஆயிரத்து 575 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று 33 ஆயிரத்து 148 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் 104.76 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 7500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் அது 2500 கனஅடியாக குறைக்கப்பட்டது.
மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தொடர்ந்து 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது அணையில் 71.14 டி.எம்.சி..தண்ணீர் இருப்பு உள்ளது.






