என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மதுரையில் அமைச்சர்கள் தொடர்ந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
- அனைத்து ஊர்களிலும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மதுரையில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
* மதுரையில் அமைச்சர்கள் தொடர்ந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
* 8 இடங்களில் வெள்ளம் தேங்கி உள்ளது. வெள்ளத்தை அகற்றும் பணி நடந்து வருகிறது.
* அனைத்து ஊர்களிலும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன.
மகளிர் உரிமைத்தொகை மாதந்தோறும் கடன் பெற்று திமுக அரசு வழங்கி வருவதாக இபிஎஸ் கூறி வருகிறாரே என்ற கேள்விக்கு,
தினமும் பத்திரிகையில் பெயர் வர வேண்டும் என்பதற்காக தவறான குற்றச்சாட்டுகளை இபிஎஸ் கூறி வருகிறார் என்று அவர் கூறினார்.
- நாளை மாலை 3 மணி அளவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
- வரவேற்புரை முடிந்ததும் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மாநாடு பற்றிய விளக்க உரையாற்றுகிறார்.
விக்கிரவாண்டி:
நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) விக்கிரவாண்டியில் நடக்கிறது.
இதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் உருவாக்கப்பட்டு
உள்ளது. சுமார் ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
முதல் முறையாக மக்கள் மத்தியில் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு மக்கள் மத்தியில் நேரடியாக அவரை பார்க்கும் ஆர்வமும், அவரது பேச்சை கேட்கும் ஆர்வமும் அதிகரித்துள்ளது.
ஆனால் அவர் இதுவரை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது, நிர்வாகிகளுடன் கலந்துரையாடுவது போன்ற நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொண்டுள்ளார். இவை அனைத்தும் அரங்க நிகழ்ச்சிகளால் நடந்து இருக்கிறது.
இப்போதுதான் முதல் முறையாக பொதுமக்கள் மத்தியில் விஜய் உரையாற்றப்போகிறார். எனவே இந்த மாநாடு மற்றும் அவரது பேச்சு பற்றி மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே தனது கட்சியின் கொள்கைகள், கட்சி கொடியின் நிறம் பற்றிய விளக்கம் மற்றும் எதிர்கால செயல்திட்டம், 2026 தேர்தல் பற்றியும் அறிவிக்கப்போவதாக கூறி உள்ளார். எனவே நாளை அவர் அறிவிக்கப்போவதுதான் கட்சியை அடுத்தக்கட்டத்துக்கு அழைத்து செல்லும் என்பதால் பொதுமக்களையும், பல்வேறு அரசியல் கட்சியினரையும் உற்றுநோக்க வைத்துள்ளது.
நாளை காலையில் இருந்தே தொண்டர்கள் வந்து குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விக்கிரவாண்டியில் கடுமையான வெயில் அடிப்பதால் தாராளமாக குடி தண்ணீர் அனைவருக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நாளை மாலை 3 மணி அளவில் மானாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
மாலை 4 மணியளவில் மாநாட்டு திடல் முன்பு தங்கியிருக்கும் வீட்டில் இருந்து விஜய் தனிப்பாதை வழியாக மாநாட்டு மேடைக்கு அழைத்து வரப்படுகிறார். அப்போது மேடையில் கட்சி பாடல் ஒலிபரப்பப்படுகிறது.
மேடைக்கு வந்ததும் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார். இதையடுத்து மாநாடு தொடங்குகிறது. வரவேற்புரை முடிந்ததும் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மாநாடு பற்றிய விளக்க உரையாற்றுகிறார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சிறப்புரையாற்ற உள்ளார். அவரது உரை மாநாட்டு எழுச்சி உரையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சுமார் ஒரு மணி நேரம் பேசுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் பேச்சின் போது முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் தமிழக வெற்றிக் கழக முக்கிய பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். முக்கிய அறிவிப்புகளுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், எதிர்கால லட்சியங்கள், திட்டங்களையும் விஜய் தொண்டர்களிடம் விளக்கமாக எடுத்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் பேச்சை தொண்டர்கள் முழுமையாக கேட்க வேண்டும் என்பதற்காக மாநாட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மாநாட்டின் கடைசி வரிசையில் இருப்பவர்களுக்கும் அவரது பேச்சு கேட்க வேண்டும் என்பதற்காக 175 அடி அகலத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் திரண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்களும் தன்னை நேரில் பார்க்க வேண்டும் என்பதற்காக மேடையின் முன்பு இருந்து மக்கள் கூட்டத்தின் நடுவில் 800 மீட்டர் தூரத்துக்கு பிரத்யேக நடைமேடை அமைக்கப்பட்டுஉள்ளது.
அந்த நடைமேடையில் நடந்தபடியும் அவர் பேச ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது. அப்போது அவர் மீது லேசர் ஒளிக்கற்றைகள் விழவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
- முதலமைச்சர் மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
- இதுவரை 19 ஆயிரத்து 229 கோடி ரூபாய் செலவிடப்பட்டு இப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, நந்தனத்திலுள்ள சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமையகத்தில், சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட்சி காலத்தில் 2007-ம் ஆண்டு தமிழ்நாடு அரசும் - ஒன்றிய அரசும் இணைந்து மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகளை தொடங்கினோம்.
22 ஆயிரத்து 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 54.1 கிலோ மீட்டர் நீளத்திற்கு 2 வழித்தடங்களில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தினால் சென்னை மக்கள் பெரும் பயனடைந்து வருகின்றனர். நாள்தோறும் 3 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேல் பயணிகளுக்கு பலனளித்து இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு 3 வழித் தடங்களில் இந்த மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறோம். இதுவரை 19 ஆயிரத்து 229 கோடி ரூபாய் செலவிடப்பட்டு இப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
மெட்ரோ ரெயில் திட்டத்தின் முதல் கட்டம் செயல்படுத்தப்பட்ட அதே முறையில் இரண்டாவது கட்டப் பணிகளும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று நான் பலமுறை வலியுறுத்திய கோரிக்கையை ஏற்று, அதற்கான ஒப்புதலை அண்மையில் அளித்த பிரதமருக்கும் - ஒன்றிய அரசுக்கும் முதற்கண் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இரண்டாவது கட்டத்திற்கான பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். இப்பணிகளை முடிக்க இலக்கிடப்பட்டுள்ள கால வரையறைக்குள் இந்தப் பணிகளை முடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எனது அரசும், அலுவலர்களும் மேற்கொண்டு வருகின்றனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி வாரியாக மக்களை சந்தித்து மனுக்களை பெற்று வருகிறோம்.
- எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியிலேயே தற்போது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்துள்ளன.
சேலம்:
சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டமன்றத் தேர்தலின் போது பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து இதுவரை 90 சதவீத மனுக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி வாரியாக மக்களை சந்தித்து மனுக்களை பெற்று வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் அமைச்சராகவும், முதலமைச்சராகவும் இருந்த எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியிலேயே தற்போது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்துள்ளன.
அவர் தனது தொகுதிக்கு கூட எதுவும் செய்யவில்லை. தற்போது தேர்தல் ஜூரம் வந்துவிட்டதால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உளறிக் கொண்டிருக்கிறார். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து முதலமைச்சர் வழியில் மக்கள் பணிகளில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மருத்துவ முகாம்கள் 20 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
- தலைமைச் செயலாளர், பேரிடர் மேலாண்மை ஆணையர் ஆகியோர் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலை தளத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
மதுரை மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து, உடனடியாக அங்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற் கொள்வதற்காக வணிக வரித்துறை அமைச்சர் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆகியோரை அனுப்பி வைத்தேன்.

மேலும், மதுரை மாவட்ட கலெக்டரையும் தொடர்பு கொண்டு கள நிலவரம் குறித்து அறிந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளேன்.
குடியிருப்புப் பகுதிகளில் மழைநீரை வடிய வைக்க ராட்சத மின் மோட்டார்களும் பொறியாளர்களும் பணியாளர்களும் அருகில் உள்ள நகராட்சிகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவ முகாம்கள் 20 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் தேவையான வசதிகளுடன் மூன்று முகாம்களில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப் பட்டுள்ளனர். மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலர் நேற்றே அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

தலைமைச் செயலாளர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ஆகியோர் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மதுரை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இயல்பு நிலையைக் கொண்டு வரப் போர்க்கால அடிப்படையில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- நான் சிறிய வயதில் இருந்தே விஜய்யின் தீவிர ரசிகை.
- நாளை விஜய் பேச்சை நேரில் கேட்பதற்காக மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறேன்.
சென்னை:
விஜய் மாநாட்டுக்கு தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இருந்து தொண்டர்கள் நிர்வாகிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இது மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ரசிகர், ரசிகைகள், கட்சி தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு இன்று காலை வந்துள்ளனர்.
மாநாட்டுக்கு பெங்களூருவில் இருந்து வந்த மோகன பிரியா, மோனிகா, ஐசு ஆகியோர் கையில் தளபதி என டாட்டூ குத்தி விக்கிரவாண்டிக்கு வந்தனர்.
வங்கியில் பணிபுரியும் மோகனப்பிரியா என்பவர் கூறியதாவது:-
நான் சிறிய வயதில் இருந்தே விஜய்யின் தீவிர ரசிகை. அவர் கட்சி தொடங்கியதும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். கண்டிப்பாக அரசியலில் விஜய் பெரிய சாதனை படைப்பார்.
மக்களுக்காக பல நல்ல சேவைகளை செய்வார் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அவர் அரசியல் கட்சி தொடங்கிய உடனே பெங்களூரு முகவரியில் இருந்து சென்னை பெரம்பூரில் உள்ள எனது பாட்டி வீட்டு முகவரிக்கு எனது முகவரியை மாற்றி விட்டேன். பெங்களூருவில் இருந்து இன்று காலை மாநாடு திடலை வந்து பார்க்கும்போது பிரமித்து விட்டேன். அந்த அளவுக்கு மாநாடு பந்தல் சிறப்பாக இருக்கிறது.
நாளை விஜய் பேச்சை நேரில் கேட்பதற்காக மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- தொடர்ந்து மழை பெய்தாலும், அதனை எதிர்கொள்வதற்கு ஏதுவாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவான 'டானா' புயல் காரணமாக கடந்த சில நாட்களாக காற்றின் மாறுபாட்டால் தென் மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகலில் மதுரை மாநகரை கருமேகங்கள் சூழ்ந்தன. குளிர்ந்த காற்று வீச அதனை தொடர்ந்து மதுரை மாநகர் முழுவதும் கனமழை பெய்தது. நேற்று மாலை தொடங்கிய கனமழை இரவு வரை பெய்துள்ளது.
குறிப்பாக மதுரை மாநகரில் நேற்று வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்துள்ளது. 1955-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது ஒரே நாளில் மட்டும் 11 சென்டிமீட்டர் மழை மதுரை மாநகரில் பதிவாகி உள்ளது. குறிப்பாக நேற்று மாலை ஒரு மணி நேரத்தில் மதுரை மாநகரில் மட்டும் 4.5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. குறைந்த மணி நேரத்தில் அதிகனமழை பெய்ததால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தும், வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மதுரையில் கனமழை பாதிப்பு குறித்து காணொலிக் காட்சி வாயிலாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, தொடர்ந்து மழை பெய்தாலும், அதனை எதிர்கொள்வதற்கு ஏதுவாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்களை, தேவை இருப்பின் தற்காலிக நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினார்.
சட்டமன்ற - பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயல்பட்டு மழைத்தொடர்பாக மதுரை மக்கள் முன் வைக்கின்ற கோரிக்கைகளுக்கு தீர்வு காணுமாறு ஆலோசனை வழங்கினார்.
- செல்லூர் கண்மாய், ஆத்திக்குளம், புளியங்குளம் கண்மாய்கள் தூர்வாரப்படவில்லை.
- குடும்பத்துடன் முகாம்களில் தங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நட
வடிக்கையாக கால்வாய்கள் தூர்வாருதல், கண்மாய் கரைகளை பலப்படுத்துதல், வெள்ளம் பாதிக்கும் பகுதிகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றன.
ஆனால் மதுரை மாவட்டத்தில் பருவகால முன்னேற்பாடு பணிகளுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளது.
இதுகுறித்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறியதாவது:-
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரையை தவிர்த்து சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. இதையடுத்து அங்கு பல்வேறு முன்னேற்பாடுகள் நடைபெற்றன. ஆனால் அதனை பார்த்தாவது மதுரையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கலாம். ஆனால் மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் இந்த விவகாரத்தில் மெத்தனமாக இருந்தது.
கடந்த காலங்களில் மதுரை வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கனமழை பெய்தபோது கண்மாய்கள், கால்வாய்கள் நிரம்பி தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. அப்போதே அதிகாரிகள் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று வெள்ள பாதிப்பு ஏற்பட்டு இருக்காது.
செல்லூர் கண்மாய், ஆத்திக்குளம், புளியங்குளம் கண்மாய்கள் தூர்வாரப்படவில்லை. இதனால் குறைந்த நேரத்தில் பெய்தமழையால் தண்ணீர் நிரம்பி குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. நகரில் உள்ள கால்வாய்களும் தூர்வாரப்படவில்லை. இதனால் மழைநீர் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் முற்றிலும் தடைபட்டது.
குறிப்பாக செல்லூர் கண்மாய் மற்றும் அங்கிருந்து வைகை ஆற்றுக்கு தண்ணீர் செல்லும் முக்கிய கால்வாயான பந்தல்குடி கால்வாய் தூர்வாரப்படாததால் குப்பை கூளமாகவும், செடிகொடி மரங்கள் வளர்ந்தும் காணப்பட்டது. மழை தொடங்கி தண்ணீர் குடியிருப்புகளை சூழ்ந்த பின்னரே மாநகராட்சி அதிகாரிகள் அவசர அவசரமாக குப்பைகளை அகற்றுதல் போன்ற தற்காலிக பணிகளை மட்டும் மேற்கொண்டனர்.
நேற்று பெய்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மின்சாதன பொருட்கள் பழுதடைந்து உள்ளன. இதனால் எங்களுக்கு பொருளாதார ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
செல்லூர், அய்யர் பங்களா, முல்லை நகர், கூடல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் வெள்ள நீர் புகுவதற்கு முக்கிய காரணமாகி விட்டது. மழை காலம் தொடங்குவதற்குள் சில மணி நேரம் கால்வாய்களை தூர்வாரி இருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. இப்போது குடும்பத்துடன் முகாம்களில் தங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சைக்கிள் பேரணியின்போது வழி நெடுகிலும் பல்வேறு இடங்களில் மரக்கன்று நடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- விக்கிரவாண்டியில் மிதிவண்டி பேரணி நிறைவு பெறுகிறது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சௌந்தரராஜா. இவர் சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, பூஜை, தெறி, தர்மதுரை, றெக்க, கத்தி சண்டை, பிகில் மற்றும் பல்வேறு படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிகில் படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்த பிறகு அவருக்கு நெருக்கமான இவர், நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளில் சௌந்தரராஜா ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெயர் அறிவிக்கப்பட்டு, கட்சி கொடி அறிமுகம் செய்யப்பட்ட மறுநாளே தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியுடன் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சென்ற நடிகர் சௌந்தரராஜா கோவில் சன்னதியில் கட்சி கொடியை வைத்து சிறப்பு பூஜைகளை செய்தார். மேலும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் குறித்து தொலைகாட்சி விவாதங்களிலும் தொடர்ச்சியாக பேசி வருகிறார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை (அக்டோபர் 27) விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. மாநாட்டையொட்டி நடிகர் சௌந்தரராஜா மற்றும் அவரது மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பில் சைக்கிள் பேரணி சென்னையில் இருந்து விக்கிரவாண்டி நோக்கி புறப்பட்டது.

நடிகர் சௌந்தரராஜா தலைமையில் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையை சேர்ந்த நிர்வாகிகள் சென்னையில் இருந்து விக்கிரவாண்டிக்கு சைக்கிளிலேயே பயணம் செய்கின்றனர். சென்னையில் இருந்து புறப்பட்டுள்ள சைக்கிள் பேரணியின்போது வழி நெடுகிலும் பல்வேறு இடங்களில் மரக்கன்று நடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விக்கிரவாண்டியில் சைக்கிள் பேரணி நிறைவு பெறுகிறது.
பேரணியை முடித்துக்கொண்டதும் நடிகர் சௌந்தரராஜா தலைமையில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையை சேர்ந்த 250 பேர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
- மத்திய அரசின் திட்டங்களை ராஜதந்திரத்துடன் செயல்பட்டு முழுமையாக வாங்கி தந்தவர் எடப்பாடி பழனிசாமி.
- மத்திய அரசு ஆணையின்படியே, அமைச்சர் பொன்முடியின் துறை மாற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி:
அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கிருஷ்ணகிரியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
போதையின் பாதையில் இளைஞர்கள் சென்று விடக்கூடாது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். இது குறித்து அறிவுரை வழங்க அவருக்கு தகுதியில்லை.
அதேபோல, கடந்தகால அ.தி.மு.க., அரசு மத்திய அரசிடம் தமிழகத்தை அடமானம் வைத்து விட்டதாகவும் பேசியுள்ளார்.
ஆனால் அ.தி.மு.க., அரசுதான் தமிழகத்தின் மதிப்பை உயர்த்தியது. அதனால்தான் மத்திய அரசு பல்வேறு துறைகளில் தமிழகத்திற்கு முதலிடம் வழங்கியது.
மத்திய அரசின் திட்டங்களை ராஜதந்திரத்துடன் செயல்பட்டு முழுமையாக வாங்கி தந்தவர் எடப்பாடி பழனிசாமி.
ஆனால் தமிழகத்தில் 4 ஆண்டு ஆட்சி நடத்திவரும் தி.மு.க., அரசு அப்படியில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு குறித்து மேடையில் வீராப்பாக பேசிவிட்டு, தனியறையில் மோடியிடம் மண்டியிட்டு, மெட்ரோ திட்டத்திற்கு நிதி பெற்றுள்ளார். மத்திய அரசு ஆணையின்படியே, அமைச்சர் பொன்முடியின் துறை மாற்றப்பட்டது.
கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் தொடங்கப்பட்ட எண்ணேகொள்புதூர் வலது, இடது புற கால்வாய் நீட்டிப்பு பணி மந்தமாகியுள்ளது. நிதி ஒதுக்கவில்லை, நிலங்கள் கையகப்படுத்தப்படவில்லை.
இது குறித்து கலெக்டரிடம் தெரிவித்து சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு கடிதம் எழுதுமாறு வலியுறுத்தியுள்ளேன்.
தமிழக வெற்றிக்கழக மாநாட்டை முன்னிட்டு பெரியார் கட்அவுட் வைத்துள்ளனர். அவரில்லாமல் தமிழகத்தில் அரசியல் நடத்த முடியாது. மாநாடு நடத்தும் விஜய்-க்கு வாழ்த்துகள்.
கடந்த காலங்களில் ஆந்திராவில் சிரஞ்சீவி இது போன்று பிரமாண்ட மாநாடு நடத்தி கட்சி தொடங்கினார். தற்போது நடிகர் விஜய்யும் அதேபோன்று மாநாடு நடத்துகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- குடோனில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரக்கட்டைகள் இருந்துள்ளது.
- மரக்கட்டை என்பதால் தீ கொழுந்துவிட்டு வேகமாக எரிந்தது.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள வாத்தியார் குடியிருப்பை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). இவருக்கு திருச்செந்தூர்-காயல்பட்டினம் சாலையில் வீரபாண்டியன்பட்டினம் அருகே மரக்கடை குடோன் உள்ளது.
இந்த குடோனில் தேக்கு, வேங்கை, கோங்கு போன்ற விலை உயர்ந்த மரங்கள் வெட்டி தயார் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த குடோனில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரக்கட்டைகள் இருந்துள்ளது.

இன்று அதிகாலை சுமார் 3.30 மணிக்கு அந்த குடோனில் திடீரென தீ பிடித்துள்ளது. குடோனில் யாரும் இல்லாததால், தீ விபத்தை பார்த்த நபர் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவம் குறித்து திருச்செந்தூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த திருச்செந்தூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முடியாமல் திணறினர்.
இதனால் சாத்தான்குளம் தீயணைப்பு துறையினர், டி.சி.டபிள்யூ. தனியார் தொழிற்சாலை தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டது. மரக்கட்டை என்பதால் தீ கொழுந்துவிட்டு வேகமாக எரிந்தது. சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. ஆனால் குடோனில் இருந்த அனைத்து மரக்கட்டைகளும் முற்றிலுமாக தீயில் எரிந்து நாசமாகியது. இதன் மதிப்பு பல கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து ஏற்பட்டது எப்படி? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாற்றுத்திறனாளிகளை பாதுகாப்பாக அழைத்து அமர வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- பெண்கள் வீட்டில் எவ்வளவு பாதுகாப்பாக இருப்பார்களோ அதைவிட இந்த மாநாட்டு திடலில் பாதுகாப்பை அளிப்போம்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி, முதல் மாநாட்டை அறிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
மாநாட்டின் பாதுகாப்பு மேலாண்மை குழு கூறுகையில்,
* பெண்களுக்கு என்று தனியாக ஒரு பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
* மாற்றுத்திறனாளிகளை பாதுகாப்பாக அழைத்து அமர வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* பார்க்கிங் வசதி செய்துள்ளோம். எவ்வளவு வாகனங்கள் வந்தாலும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பார்க்கிங் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* ஒரு லட்சம் பேருக்கு மேல் வந்தாலும் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கான உணவுகள் தயார் செய்யப்படுகிறது.
* மகளிருக்கான பாதுகாப்பிற்கு மகளிர் அணியை சேர்ந்தவர்களை வைத்தே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* பெண்கள் வீட்டில் எவ்வளவு பாதுகாப்பாக இருப்பார்களோ அதைவிட இந்த மாநாட்டு திடலில் பாதுகாப்பை அளிப்போம் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் விக்கிரவாண்டியில் உள்ள அச்சுத ஆஞ்சநேயர் ஆலயத்தில் வழிபாடு செய்தார்.






