என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரையில் மழை"

    • வானத்தை பிளந்து தண்ணீரை கொட்டியது போல் சுமார் 2 மணி நேரம் இடைவிடாத கனமழை காரணமாக மதுரையின் முக்கிய பகுதிகள் வெள்ளம் கரைபுரண்டு ஆறுகள் போல மாறின.
    • சாலைகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் ஓடியதால் பொதுமக்கள் வாகனங்களை இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

    மதுரை:

    மதுரையில் கடந்த சில நாட்களாக அக்னி வெயில் வாட்டி வதைத்து வந்தது. ஆனாலும் மாலை நேரங்களில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டாலும் சில இடங்களில் மட்டும் மழை சாரல் போல பெய்து விட்டு நின்று விடும். இது மதுரையில் கடந்த சில நாட்களாக காணப்படும் நிகழ்வாக இருந்தது.

    இந்த நிலையில் நேற்று காலையும் மதுரையில் வழக்கம் போல வெயில் வாட்டி வதைத்தது. மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழைக்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனாலும் ஒரு சில இடங்களில் இடி முழக்கங்கள் கேட்டாலும் மழை வருமா? என்று சந்தேகமே மேலோங்கி காணப்பட்டது. இதற்கிடையே மதுரை சிம்மக்கல், பெரியார் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 8 மணி அளவில் சாரல் போல மழை பெய்ய தொடங்கியது.

    இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்திருந்த நிலையில் 9 மணி அளவில் மதுரையில் பெரும்பாலான இடங்களில் பலத்த இடி-மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. வானத்தை பிளந்து தண்ணீரை கொட்டியது போல் சுமார் 2 மணி நேரம் இடைவிடாத கனமழை காரணமாக மதுரையின் முக்கிய பகுதிகள் வெள்ளம் கரைபுரண்டு ஆறுகள் போல மாறின. சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் அலைகள் தோன்றி கடல் போல் காட்சியளித்தது.

    இதில் குறிப்பாக பெரியார் பஸ் நிலைய பகுதி குளம் போல வெள்ளக்காடாக மாறியது. சிம்மக்கல், தெற்கு வாசல், மாசி வீதிகள், ஆவணிமூல வீதிகள், நேதாஜி ரோடு, திண்டுக்கல் ரோடு, தல்லாகுளம், கோரிப்பாளையம் அண்ணா நகர், காளவாசல், அரசரடி, கூடல் புதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. ஆங்காங்கே சாலை ஓரங்களில் மரங்களும் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்தது.

    இரவு 9 மணிக்கு தொடங்கிய மழையால் நகர் பகுதி மற்றும் வணிகப் பகுதிகளில் பொருட்கள் வாங்குவதற்காக வந்த பொதுமக்கள் வீடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இரவு 11 மணியளவில் மழை ஓரளவுக்கு குறைந்த உடன் பொதுமக்கள் வாகனங்களை எடுத்துக்கொண்டு வீடுகளுக்கு புறப்பட்டனர்.

    ஆனால் சாலைகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் ஓடியதால் பொதுமக்கள் வாகனங்களை இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. மேலும் பைக், மொபட் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் நீரில் மூழ்கியதால் அவற்றை இயக்குவதில் பொதுமக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளானார்கள். வாகன பழுது காரணமாக இருசக்கர வாகனங்களுடன் நள்ளிரவில் சாலைகளில் காத்திருந்த வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    மேலும் கர்டர் பாலம் பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததால் அதில் கேரளா மாநில சுற்றுலா பஸ் ஒன்று சிக்கியது. உடனே அதிலிருந்த சுற்றுலா பயணிகள் இறக்கி விடப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இன்று காலை பேருந்து மீட்கப்பட்டு பயணிகள் புறப்பட்டனர்.

    பழங்காநத்தம், திருப்பரங்குன்றம், தத்தனேரி சுரங்க பாலங்களில் மழைநீர் முழுமையாக சூழ்ந்ததால் அந்த வழியாகவும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் கனமழை காரணமாக மதுரையின் பல்வேறு இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    தெப்பக்குளம் உள்ளிட்ட சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்தது. இதனால் அப்பகுதிகளில் பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு அடைந்தனர். உடனடியாக மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கையில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    இன்று காலை வரை மழை நீர் தேங்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். சுமார் 2 மணி நேரம் மதுரையில் வருணபகவான் வானத்தை திறந்து ஊற்றிய கனமழையால் நேற்று இரவு மதுரையின் அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாகவே காட்சியளித்தது.

    மதுரை நகர் மற்றும் வடக்கு பகுதியில் நேற்று ஒரே நாள் இரவில் 12 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • வீட்டின் கிழக்குப் பகுதியில் இருந்த மதில் சுவர் இடிந்து வெளிப்புறமாக விழுந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்து உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுத்து மின்சாரத்தை துண்டிக்க செய்தனர்.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. சோழவந்தான் ஆர்.சி. பள்ளி எதிரில் உள்ள வண்ணான் தெருவில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இதில் அங்கு தனியாக வசித்து வந்த யோசனை (வயது 60), அவரது மனைவி சித்ரா (55) ஆகியோரது வீட்டின் மதில் சுவர் நள்ளிரவு 12 மணிக்கு மேல் மடமடமென்று இடியும் சத்தம் கேட்டது.

    இதையடுத்து அவர்கள் இருவரும் அலறி அடித்துக் கொண்டு எழுந்து பார்த்தனர். அப்போது வீட்டின் கிழக்குப் பகுதியில் இருந்த மதில் சுவர் இடிந்து வெளிப்புறமாக விழுந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த தம்பதியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    பின்னர் அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்து உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுத்து மின்சாரத்தை துண்டிக்க செய்தனர். மேலும் இடிந்து விழுந்த வீட்டின் சுவர் பழமையானது. உடனடியாக தாமதிக்காமல் மீதமுள்ள பகுதியையும் இடித்து அகற்ற வேண்டும் என்றும், அவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் வீடு கட்ட உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்த வார்டு கவுன்சிலர் நிஷா கௌதமராஜா பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    • தொடர்ந்து மழை பெய்தாலும், அதனை எதிர்கொள்வதற்கு ஏதுவாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவான 'டானா' புயல் காரணமாக கடந்த சில நாட்களாக காற்றின் மாறுபாட்டால் தென் மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகலில் மதுரை மாநகரை கருமேகங்கள் சூழ்ந்தன. குளிர்ந்த காற்று வீச அதனை தொடர்ந்து மதுரை மாநகர் முழுவதும் கனமழை பெய்தது. நேற்று மாலை தொடங்கிய கனமழை இரவு வரை பெய்துள்ளது.

    குறிப்பாக மதுரை மாநகரில் நேற்று வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்துள்ளது. 1955-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது ஒரே நாளில் மட்டும் 11 சென்டிமீட்டர் மழை மதுரை மாநகரில் பதிவாகி உள்ளது. குறிப்பாக நேற்று மாலை ஒரு மணி நேரத்தில் மதுரை மாநகரில் மட்டும் 4.5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. குறைந்த மணி நேரத்தில் அதிகனமழை பெய்ததால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தும், வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், மதுரையில் கனமழை பாதிப்பு குறித்து காணொலிக் காட்சி வாயிலாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

    அப்போது, தொடர்ந்து மழை பெய்தாலும், அதனை எதிர்கொள்வதற்கு ஏதுவாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்களை, தேவை இருப்பின் தற்காலிக நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினார்.

    சட்டமன்ற - பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயல்பட்டு மழைத்தொடர்பாக மதுரை மக்கள் முன் வைக்கின்ற கோரிக்கைகளுக்கு தீர்வு காணுமாறு ஆலோசனை வழங்கினார். 

    • தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து தாழ்வானப் பகுதிகளில் தண்ணீர் தேங்கிய நிலையில் மக்கள் அதிக சிரமத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள்.
    • மதுரை மாநகர மக்கள் மழையால் தண்ணீர் தேங்கிய நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு மதுரையில் பெய்திருக்கும் கனமழையால் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்ற உடனடி பணிகளை, அவசியப் பணிகளை மேற்கொண்டு மதுரை மக்களைப் பாதுகாக்க வேண்டும். மேலும் தொடர் மழையின் தாக்கத்தில் இருந்து பொது மக்களைப் பாதுகாக்க தொடர் நடவடிக்கை தேவை. தமிழக அரசு மதுரை உள்ளிட்ட மற்றப் பகுதிகளில் மழை பெய்ததால் ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து பொது மக்களைப் பாதுகாக்க வேண்டும்.

    தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து தாழ்வானப் பகுதிகளில் தண்ணீர் தேங்கிய நிலையில் மக்கள் அதிக சிரமத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள்.

    குறிப்பாக மதுரை மாநகர மக்கள் மழையால் தண்ணீர் தேங்கிய நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மதுரை மாநகர மக்களுக்கு மாநகராட்சி பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு, நிவாரணம் கொடுத்து அவர்களுக்கு உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×