என் மலர்
உள்ளூர் செய்திகள்

வானத்தை பிளந்து கொட்டியது: 2 மணி நேர கனமழையால் வெள்ளக்காடான மதுரை
- வானத்தை பிளந்து தண்ணீரை கொட்டியது போல் சுமார் 2 மணி நேரம் இடைவிடாத கனமழை காரணமாக மதுரையின் முக்கிய பகுதிகள் வெள்ளம் கரைபுரண்டு ஆறுகள் போல மாறின.
- சாலைகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் ஓடியதால் பொதுமக்கள் வாகனங்களை இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
மதுரை:
மதுரையில் கடந்த சில நாட்களாக அக்னி வெயில் வாட்டி வதைத்து வந்தது. ஆனாலும் மாலை நேரங்களில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டாலும் சில இடங்களில் மட்டும் மழை சாரல் போல பெய்து விட்டு நின்று விடும். இது மதுரையில் கடந்த சில நாட்களாக காணப்படும் நிகழ்வாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று காலையும் மதுரையில் வழக்கம் போல வெயில் வாட்டி வதைத்தது. மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழைக்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனாலும் ஒரு சில இடங்களில் இடி முழக்கங்கள் கேட்டாலும் மழை வருமா? என்று சந்தேகமே மேலோங்கி காணப்பட்டது. இதற்கிடையே மதுரை சிம்மக்கல், பெரியார் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 8 மணி அளவில் சாரல் போல மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்திருந்த நிலையில் 9 மணி அளவில் மதுரையில் பெரும்பாலான இடங்களில் பலத்த இடி-மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. வானத்தை பிளந்து தண்ணீரை கொட்டியது போல் சுமார் 2 மணி நேரம் இடைவிடாத கனமழை காரணமாக மதுரையின் முக்கிய பகுதிகள் வெள்ளம் கரைபுரண்டு ஆறுகள் போல மாறின. சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் அலைகள் தோன்றி கடல் போல் காட்சியளித்தது.
இதில் குறிப்பாக பெரியார் பஸ் நிலைய பகுதி குளம் போல வெள்ளக்காடாக மாறியது. சிம்மக்கல், தெற்கு வாசல், மாசி வீதிகள், ஆவணிமூல வீதிகள், நேதாஜி ரோடு, திண்டுக்கல் ரோடு, தல்லாகுளம், கோரிப்பாளையம் அண்ணா நகர், காளவாசல், அரசரடி, கூடல் புதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. ஆங்காங்கே சாலை ஓரங்களில் மரங்களும் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்தது.
இரவு 9 மணிக்கு தொடங்கிய மழையால் நகர் பகுதி மற்றும் வணிகப் பகுதிகளில் பொருட்கள் வாங்குவதற்காக வந்த பொதுமக்கள் வீடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இரவு 11 மணியளவில் மழை ஓரளவுக்கு குறைந்த உடன் பொதுமக்கள் வாகனங்களை எடுத்துக்கொண்டு வீடுகளுக்கு புறப்பட்டனர்.
ஆனால் சாலைகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் ஓடியதால் பொதுமக்கள் வாகனங்களை இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. மேலும் பைக், மொபட் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் நீரில் மூழ்கியதால் அவற்றை இயக்குவதில் பொதுமக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளானார்கள். வாகன பழுது காரணமாக இருசக்கர வாகனங்களுடன் நள்ளிரவில் சாலைகளில் காத்திருந்த வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
மேலும் கர்டர் பாலம் பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததால் அதில் கேரளா மாநில சுற்றுலா பஸ் ஒன்று சிக்கியது. உடனே அதிலிருந்த சுற்றுலா பயணிகள் இறக்கி விடப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இன்று காலை பேருந்து மீட்கப்பட்டு பயணிகள் புறப்பட்டனர்.
பழங்காநத்தம், திருப்பரங்குன்றம், தத்தனேரி சுரங்க பாலங்களில் மழைநீர் முழுமையாக சூழ்ந்ததால் அந்த வழியாகவும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும் கனமழை காரணமாக மதுரையின் பல்வேறு இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
தெப்பக்குளம் உள்ளிட்ட சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்தது. இதனால் அப்பகுதிகளில் பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு அடைந்தனர். உடனடியாக மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கையில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இன்று காலை வரை மழை நீர் தேங்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். சுமார் 2 மணி நேரம் மதுரையில் வருணபகவான் வானத்தை திறந்து ஊற்றிய கனமழையால் நேற்று இரவு மதுரையின் அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாகவே காட்சியளித்தது.
மதுரை நகர் மற்றும் வடக்கு பகுதியில் நேற்று ஒரே நாள் இரவில் 12 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.






