என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 544 புதிய நியாய விலை கடைகள் றக்கப்பட்டுள்ளது.
- வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் மேலூர் தொகுதி சின்ன கற்பூரம்பட்டி கிராமத்தில் புதிய ரேஷன் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது, மேலூர் தொகுதியில் புதிய பகுதி நேர நியாய விலை கடைகள் அமைத்து தர வேண்டும் என்ற கேள்விக்கு அமைச்சர் பெரியகருப்பன் பதில் அளித்து கூறியதாவது:-
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 544 புதிய நியாய விலை கடைகளும், 1,126 புதிய பகுதி நேர நியாய விலை கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மொத்தம் 1,670 புதிய நியாய விலை கடைகள் தொடங்கப்பட்டுள்ளது. வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் மேலூர் தொகுதி சின்ன கற்பூரம்பட்டி கிராமத்தில் புதிய ரேஷன் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டெல்டா மாவட்டப் பகுதிகளில் நெற்பயிர்கள் பெருமளவு சேதமடைந்தது.
- பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவித்த நிவாரண உதவிகள் போதுமானதல்ல என்பதை உணர்ந்து அதனை உயர்த்தி வழங்க வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நடப்பு ஆண்டிற்கான பருவ மழைக்காலத்தில் மாநிலத்தில் ஆங்காங்கே மழை, கனமழை, அதி கனமழை பெய்ததால் பல்வேறு மாவட்டங்களில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதற்கான காரணங்களில் ஒன்று முறையாக நீர்நிலைகளை பாதுகாக்க தவறியது தான் என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
டெல்டா மாவட்டப் பகுதிகளில் நெற்பயிர்கள் பெருமளவு சேதமடைந்தது. சில இடங்களில் பாலங்கள் இடிந்து விட்டன. போக்குவரத்துக்கு பாதிப்பு. மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
இது போன்ற ஒரு சூழல் ஏற்படக்கூடாது என நினைத்த நிலையில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி சில மாவட்டங்களில் மழையும், சில மாவட்டங்களில் கனமழையும், சில மாவட்டங்களில் அதி கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
எனவே தமிழக அரசு மீண்டும் மழையால் மாநிலத்தில் உள்ள விவசாயப்பயிர்களும், பொதுமக்களும் பாதிக்கப்படாமல் இருக்க முன்னேற்பாடான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் தமிழக அரசு ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவித்த நிவாரண உதவிகள் போதுமானதல்ல என்பதை உணர்ந்து அதனை உயர்த்தி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.
- நாயக்கர்பட்டி, வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த ஒரு மாதமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு இந்துஸ்தான் நிறுவனத்துக்கு ஏல அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அரிட்டாப்பட்டி ஏற்கனவே பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும்.
எனவே டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என அரிட்டாப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த முத்து வேல்பட்டி, கிடாரிபட்டி, எட்டிமங்கலம், செட்டி யார்பட்டி, நாயக்கர்பட்டி, வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த ஒரு மாதமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழக சட்டசபையில் மதுரை டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து மதுரை மாவட்டம் வெள்ளிமலையாண்டி கோவில் அருகே போராட்டம் நடத்திய மக்கள், தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியதை வரவேற்று இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினர்.
- நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு சென்னை மாவட்டத்தில் தான் மிக அதிகமாக இருக்கிறது.
- பெண்களும், குழந்தைகளும் நுரையீரல் புற்று நோய்க்கு ஆளாகின்றனர்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும் பான்மையான மாவட்டங்களில் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனம் வெளியிட்டுள்ள 2019-ம் ஆண்டின் தமிழ்நாடு புற்று நோய் பதிவேட்டு திட்டத்திற்கான அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 3500-4000 பேருக்கு நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு சென்னை மாவட்டத்தில் தான் மிக அதிகமாக இருக்கிறது. சென்னையில் வாழும் ஒரு லட்சம் பேரில் 8.1 பேர் இந்த நோய்க்கு ஆளாகி உள்ளனர்.
பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்யும் சட்டம் 2008-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி நடை முறைப்படுத்தப்பட்ட நிலையில், அன்றிலிருந்து கடந்த மார்ச் 31-ம் நாள் வரையிலான பதினைந்தரை ஆண்டுகளில் 3.89 லட்சம் பேர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.6.83 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் புகை பிடிப்பதை தமிழக அரசு தடுக்கத் தவறியதால் தான், பெண்களும், குழந்தைகளும் நுரையீரல் புற்று நோய்க்கு ஆளாகின்றனர். அலட்சியம், செயலற்ற தன்மை போன்ற தமிழ்நாடு அரசின் குற்றத்திற்கு அப்பாவி மக்கள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்? இனியும் இந்தக் கொடுமை நீடிக்கக் கூடாது.
எனவே, தமிழ்நாட்டின் பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை மிகக் கடுமையாக செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்து கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- மத்திய அரசு வழக்கம்போல் தமிழக மக்களை வஞ்சித்துள்ளது.
- அரசியல் எதுவும் பேச வேண்டாம் என அவரிடம் முன்னரே தெரிவித்தேன்.
இன்றைக்கு கூடிய சட்டப் பேரவை கூட்டத்தைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்திற்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.
முன்னதாக சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறியதாகக் குற்றம்சாட்டப்பட்ட விசிக துணை பொதுச் செயலாளலர் ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், பெஞ்சல் புயலால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. நிவாரணம் வழங்காமல் மத்திய அரசு வழக்கம்போல் தமிழக மக்களை வஞ்சித்துள்ளது. புயல் நிவாரண நிதியாக நாங்கள் [விடுதலை சிறுத்தைகள்] ரூ.10 கோடி வழங்கியுள்ளோம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அவருக்கு நாங்கள் தொடர்ந்து அறிவுறுத்தல் செய்தோம்.
பல முறை ஆதவ் அர்ஜுனாவுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. அவரின் அண்மை பேச்சு கட்சியின் நம்பகத்தன்மைக்கு ஊரு விளைவிக்கும் வகையில் இருந்தது. எனது அறிவுறுத்தலை மீறி ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். அரசியல் எதுவும் பேச வேண்டாம் என அவரிடம் முன்னரே தெரிவித்தேன்.
ஆதவ்வின் பேச்சு என் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கி உள்ளது. திமுகவிடம் இருந்து எந்த அழுத்தமும் எனக்கில்லை. நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை என்ற எனது முடிவு சுதந்திரமானது. தவெகவுடனும் விஜய் உடனும் விசிகவுக்கு எந்த மோதலும் இல்லை என்று தெரிவித்தார்.
- கேளிக்கைகள் வரி விதிக்கவும், வசூலிக்கவும் அதிகாரமளிக்கவும் வரைமுறை இல்லை.
- அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி எதிர்ப்பு தெரிவித்தார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரி திருத்த சட்ட முன் வடிவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரி சட்டமானது அதில் குறிப்பிட்டுள்ள கேளிக்கைகள் மற்றும் பொழுதுபோக்குகள் மீது வரி விதிப்பதற்கும், வசூலிப்பதற்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்குகிறது.
ஆனால் கல்வி நிறுவனம் உள்ளடங்களாக எந்த ஒரு நிறுவனத்தாலும் அனுமதிக்கான கட்டணத்தின் பேரில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி, நாடகம், காட்சி அல்லது ஏதேனும் பிற நிகழ்ச்சிகள் மீது கேளிக்கைகள் வரி விதிக்கவும், வசூலிக்கவும் அதிகாரமளிக்கவும் எந்த ஒரு வரைமுறையும் இல்லை.
எனவே மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கும் அனுமதிக்கான கட்டணம் ஒவ்வொன்றின் மீதும் 10 விழுக்காடு வீதத்தில் கேளிக்கைகள் வரி விதிப்பதற்கும் வசூலிப்பதற்கும் தகுந்தவாறு சட்டத்தை திருத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி எந்த ஒரு கல்வி நிறுவனம் அல்லது நிறுவனம் சங்கம், குழுமம் எந்த பெயரிலும் அழைக்கப்படும் நபர்களின் பிற கழகம் ஆகியவை இதில் அடங்கும்.
இதன் வளாகத்தில் அல்லது நுழைவு சீட்டு, பங்களிப்பு, சந்தா எந்த வகையிலும் வசூலிக்கப்படும் கட்டணங்கள் மற்றும் அனுமதிக்கான கட்டணம் வாங்கப்படும் கல்வி நிறுவன இடங்களில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீத கேளிக்கை வரி உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்ட மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிர்ப்பதாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
- நான் முதல்வராக உள்ளவரை இந்த திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டேன்.
- டங்ஸ்டன் சுரங்க திட்டம் வந்தால் ராஜினாமா செய்யவும் தயார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மதுரை டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிரான தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். இதன் மீது அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
எடப்பாடி பழனிசாமி:- டங்ஸ்டன் சுரங்க ஏலம் விடப்பட்டு 10 மாத காலம் நீங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்:- டங்ஸ்டன் சுரங்க அனுமதியை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் கேட்கிறார். பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் இதை கடுமையாக எதிர்த்துள்ளனர். அது மட்டுமின்றி மதுரை பகுதியில் இந்த சுரங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியபோது அமைச்சர் மூர்த்தி அவர்களை பார்த்து போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். சுரங்க ஏலத்தை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி வலியுறுத்தி இருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி:- நீங்கள் கடிதம் எப்போது எழுதினீர்கள். பிரச்சினை வந்த பிறகு இப்போது தானே எழுதி இருக்கிறீர்கள். இது மக்கள் பிரச்சினை. நீங்கள் தீர்மானம் கொண்டு வந்தால் நாங்கள் எதுவும் சொல்லக்கூடாதா? அப்ப டியே தலையாட்டி விட்டு போக வேண்டுமா? சுரங்க ஏலம் ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு 10 மாதமாக என்ன செய்தீர்கள்? அதைத் தான் நான் கேட்கிறேன்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்:- பாராளுமன்றத்தில் எங்கள் எம்.பி.க்கள் இதை எதிர்த்து குரல் கொடுத்து இருக்கிறார்கள். தெரியவில்லை என்று சொன்னால் எப்படி? நாங்கள் கடிதம் எழுதி இருக்கிறோம்.
எடப்பாடி பழனிசாமி:- சுரங்க ஏலம் வரும் போது ஒப்பந்தம் போடப்பட்டு 10 மாத காலம் என்ன செய்தீர்கள்? அப்போதே தடுத்து நிறுத்தி இருக்கலாமே? ஏன் செய்யவில்லை?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்:- பாராளுமன்ற அவையை ஒத்தி வைக்கிற அளவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளோம். பாராளுமன்றம் இப்போது தொடர்ந்து நடக்கவில்லை. கிடைக்கிற நேரத்தை பயன்படுத்தி பேசி இருக்கிறோம். பாராளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் தரப்பில் அப்போதே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் பேசி முடித்த பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசும்போது, உங்களின் பார்வையில் நாங்கள் சுரங்க விவகாரத்தில் அலட்சியமாக இருந்ததாக தெரியலாம். ஆனால் அது போன்று நாங்கள் எந்த அலட்சியத்தையும் காட்டவில்லை. எங்களது எதிர்ப்பை கடுமையாகவே பதிவு செய்துள்ளோம். டங்ஸ்டன் திட்டத்தை தடுத்தே தீருவோம். ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.
திரும்ப திரும்ப தெளிவாக சொல்கிறேன். நான் முதல்வராக உள்ளவரை இந்த திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டேன்.
டங்ஸ்டன் சுரங்க திட்டம் வந்தால் ராஜினாமா செய்யவும் தயார். டங்ஸ்டன் சுரங்கம் அமையும் சூழல் ஏற்பட்டால் நான் முதல்வர் பொறுப்பில் இருக்க மாட்டேன்.
எனவே இந்த தீர்மானத்துக்கு நீங்கள் (அ.தி.மு.க.) ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதன் பிறகு பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் அ.தி.மு.க. பொறுத்துக் கொள்ளாது. எனவே இந்த தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்கிறது என்றார்.
- மின் நிலையம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
- மின் கம்பிகளை புதைவட கம்பிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?
சென்னை:
சட்ட சபையில் இன்று கேள்வி நேரத்தின் போது மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. மாதவரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மின் கம்பிகளை புதைவட கம்பிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மாதவரம் தொகுதியில் 4 துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு 3 துணை மின் நிலையம் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்பளிப்பு வழங்கப்பட்டு உள்ளது.
மீதமுள்ள ஒரு துணை மின் நிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.
மதுரை மாவட்டம் கப்பலூர் தொழிற்பேட்டையில் மின் நுகர்வு அதிகமாக இருக்கும் காரணத்தினால் துணை மின் நிலையம் மற்றும் மின் மாற்றிகளை மாற்றி அமைக்கப்படுமா என்று உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்கையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் 3 துணை மின் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் 3½ ஆண்டுகளில் 71,145 மின் மாற்றிகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது என்றார்.
- 20 அரிய கனிம வள சட்டம் 2023 ஆம் ஆண்டிலேயே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
- அப்போதே திமுக எம்பிக்கள் தடுத்திருக்க வேண்டும்
இன்று நடந்த தமிழக சட்டசபை கூட்டத்தின் பின் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சட்டசபை வளாகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 20 அரிய கனிம வள சட்டம் 2023 ஆம் ஆண்டிலேயே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதை அப்போதே திமுக எம்பிக்கள் தடுத்திருக்க வேண்டும்.
டங்ஸ்டன் சுரங்க ஏலம் கடந்த 9 மாதங்கள் முன்பே நடந்து முடிந்தது. ஆனால் கடந்த 9 மாதமாக தமிழக அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு எந்த கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை.
ஆரம்பத்திலேயே பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருக்க வேண்டும். ஆனால் மழுப்பலான பதிலைத்தான் திமுக அரசு அளித்துக்கொண்டிருக்கிறது.
அரசு அலட்சியமாக இருந்தது என எடுத்துக் கூறினால் அனைவர்க்கும் கோபம் வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
- 500-க்கும் மேற்பட்டோர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- வேளாண் மண்டலமாக்கிட சட்டம் இயற்ற வேண்டும்.
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு இந்துஸ்தான் நிறுவனத்துக்கு ஏல அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அரிட்டாப்பட்டி ஏற்கனவே பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும்.
எனவே டங்ஸ்டன் சுரங்கத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என அரிட்டாப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த முத்து வேல்பட்டி, கிடாரிபட்டி, எட்டிமங்கலம், செட்டி யார்பட்டி, நாயக்கர்பட்டி, வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த ஒரு மாதமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக மேலூர் பகுதி விவசாயிகள், வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் இன்று காலை மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் பெண்கள், விவசாயிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் திரண்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சுரங்க ஏல திட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். தொன்மையான தொல்லியல் சின்னங்கள்-பல்லுயிர் சூழல்கள் அடங்கியுள்ள மதுரை மாவட்டத்தை பாரம்பரிய தமிழ் பண்பாட்டு மண்டலமாக அறிவித்திட வேண்டும்.
முல்லை பெரியாறு பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கிட சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். போராட்டத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- விசிக கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் செய்யப்பட்டார்.
- தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்றது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இன்று தொடங்கிய சட்டசபை கூட்டத்தில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இன்றைய பேரவை கூட்டத்தைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்திற்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தார்.
முன்னதாக தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதாக குற்றம்சாட்டப்பட்ட விசிக துணை பொதுச் செயலாளலர் ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
- சோனியா காந்தியின் பிறந்த தினத்தில் அவரை வணங்கி மகிழ்கிறேன்.
- தொலைநோக்கு திட்டங்கள் என்றும் சரித்திர புத்தகங்களில் இடம் பெற்றிருக்கும்.
கன்னியாகுமமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
உலகம் போற்றும் மாதரசி அன்னை சோனியா காந்தியின் பிறந்த தினத்தில் அவரை வணங்கி மகிழ்கிறேன்.
இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், ஒவ்வொரு குடிமகனின் உரிமைகளுக்காகவும் அவர் முன்வைத்த தொலைநோக்கு திட்டங்கள் என்றும் சரித்திர புத்தகங்களில் இடம் பெற்றிருக்கும்.
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த அவர்கள் மேற்கொண்ட கடின உழைப்புக்கு காங்கிரஸ் பேரியக்க தோழர்கள் அனைவரும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






