என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஐயப்ப பக்தர்கள் 200-க்கும் மேற்ப்பட்டோர் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- சப்த கன்னிமார் தெய்வங்களாக பாவித்து வழிபாடு நடத்தினார்கள்.
இடையகோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள பலக்கனூத்தில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதம் இருந்து பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
இதையொட்டி அதே ஊரைச் சேர்ந்த 7 வயது முதல் 10 வயது வரை உள்ள 7 சிறுமிகளை தேர்வு செய்து அவர்களை சப்த கன்னிமார் தெய்வங்களாக பாவித்து வழிபாடு நடத்தினார்கள்.
கடந்த 7 நாட்களுக்கு முன்பு சப்தகன்னிகளாக 7 சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை சப்தகன்னிமார் தெய்வங்களாக பாவிக்கப்பட்டு, மஞ்சள் உடை அணிவித்து கையில் காப்பு கட்டி நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.
பின்னர் சிறுமிகள் கோவிலில் தங்க வைக்கப்பட்டு சுவாமிகளுக்கு பூஜை நடத்துவது போன்று அவர்களுக்கு காலை, மாலை நேரங்களில் சிறப்பு ஆராதனை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் விழாவின் 7ம் நாளான நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஊர் எல்லையில் இருந்து சப்த கன்னிகளான 7 சிறுமிகளை நெய் விளக்கு ஏந்தி மேள தாளம் முழுங்க ஊர்வலமாக முக்கிய வீதியின் வழியாக மாரியம்மன் கோவிலுக்கு அழைத்துவரப்பட்டது.
அதை தொடர்ந்து பூக்குழி இறங்குவதற்காக ஆழி வளர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் இரவு சப்த கன்னிமார்கள் 7 சிறுமிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு குருசாமிகள் வீரப்பன், ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் ஐயப்ப பக்தர்கள் 200-க்கும் மேற்ப்பட்டோர் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது சுவாமி ஐயப்பன் பஜனை பாடல்களை பாடியபடி பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பத்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி, திண்டுக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏரளமான ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
- சைபர் கிரைம் போலீசார் கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த மற்றும் வந்து சென்ற செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தினர்.
- சேமலைக்கவுண்டம்பாளையத்திற்கு அருகாமையில் உள்ள 20 க்கும் மேற்பட்ட ஊர்களை போலீசார் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம், அவிநாசி பாளையம் அடுத்த சேமலை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி (வயது 75). இவரது மனைவி அலமேலு (73), மகன் செந்தில்குமார் (46) . கடந்த மாதம் 28-ந்தேதி இரவு சேமலைகவுண்டம்பாளையம் தோட்டத்து வீட்டிற்கு வந்த கும்பல் 3 பேரையும் இரும்பு ராடால் தாக்கி கொடூரமாக கொலை செய்துவிட்டு 8 பவுன் தங்க நகையை திருடி சென்றனர். இந்த கொலை சம்பவம் குறித்து அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
கொலையாளிகளை பிடிக்க 16 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை பிடிக்க பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தினர், உறவினர்களின் கைரேகைகளை சேகரித்து விசாரித்தனர். 2011 ம் ஆண்டு முதல் ஆதாய கொலை வழக்கில் தொடர்புடையவர்களின் பட்டியலை சேகரித்தும் விசாரித்தனர்.
சென்னிமலை ஆதாயக்கொலையில் தொடர்புடையவர்களின் நெருங்கியவர்கள் யாரேனும் இந்த கொலையை அரங்கேற்றியிருக்கலாமா? என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டது. மேலும், கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய 856 பேரின் பட்டியலை சேகரித்து விசாரித்தனர். பல்வேறு பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட சிசிடிவி., கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
சைபர் கிரைம் போலீசார் கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த மற்றும் வந்து சென்ற செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தினர். மேலும் சேமலைக்கவுண்டம்பாளையத்திற்கு அருகாமையில் உள்ள 20 க்கும் மேற்பட்ட ஊர்களை போலீசார் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். அந்த ஊர்களில் வழக்கு உள்ளவர்களின் விபரங்களை சேகரித்து விசாரணை நடத்தினர்.
உறவினர்கள் போல் யாரேனும் சந்தேகத்திற்கிடமாக வந்து சென்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது. ரோட்டோரம் கம்பளி, போர்வை விற்பனை செய்பவர்களிடம் கைரேகை ஆதார் விபரங்களை பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால் கொலை நடந்து 18 நாட்களை கடந்தும் இதில் தொடர்புடையவர்களை நெருங்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். தோட்டத்து வீட்டில் சி.சி.டி.வி. கேமரா இல்லாததால் கொலையாளிகள் எளிதில் தப்பியுள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க கோவை சரக டி.ஐ.ஜி., செந்தில்குமார், திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா ஆகியோர் முழு நேரமும் பல்லடத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வடமாநில கொள்ளை கும்பல் இதில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் தனிப்படையை சேர்ந்த ஒரு குழுவினர் வடமாநிலங்களில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொங்கலூர் சேமலைகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த தொழிலாளி பால்ராஜ் ( 45) என்பவர் குடும்பத்தோடு வந்து மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
படுகொலை செய்யப்பட்ட தெய்வசிகாமணி தோட்டத்தில் எனது தந்தை சுப்பன் வேலை செய்து வந்ததால், நான் அடிக்கடி மருந்து அடிப்பது உள்ளிட்ட வேலைக்கு சென்று வந்தேன். இந்த கொலை சம்பவம் தொடர்பாக என்னை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். போலீசார் அடிக்கடி அழைத்து சென்று, நான் தான் காரணம் எனக்கூறி துன்புறுத்துகிறார்கள். வாக்குமூலம் கொடுக்கவும் மிரட்டி நிர்ப்பந்திக்கிறார்கள்.
மேலும் எனது மனைவி, அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வருகிறார். அவரை வேலையில் இருந்து நீக்கி விடுவோம் எனவும் மிரட்டுகிறார்கள். எனவே எங்களை மிரட்டும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குடும்பத்திற்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
- ஊடகங்கள் வெளியிடும் செய்திகளெல்லாம் பொய்யா? அல்லது நீங்கள் கூறுவது அப்பட்டமான பொய்யா?
- உங்கள் பார்வையில் மழை வெள்ள பாதிப்பின் அளவு கோல் என்ன? விளக்கினால் நல்லது.
சென்னை:
முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடியில் மழையால் பாதிப்பில்லை என்று கூறும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களே ஊடகங்கள் வெளியிடும் செய்திகளெல்லாம் பொய்யா? அல்லது நீங்கள் கூறுவது அப்பட்டமான பொய்யா?
முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து கொண்டு மழையால் பாதிப்பில்லை என்று மக்களை ஏமாற்றுவது தான் திராவிட மாடல் ஆட்சியா?
மழை வெள்ள பாதிப்பால் மக்கள் பரிதவித்து கொண்டிருக்கும் போது மழையால் பாதிப்பில்லை என்று கூறுகிறீர்களே உங்கள் பார்வையில் மழை வெள்ள பாதிப்பின் அளவு கோல் என்ன? விளக்கினால் நல்லது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- கைவினைக் கலைஞர்கள் கைத்திறன் போட்டியை, ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
- வெற்றி பெரும் மாணவ, மாணவியருக்கு, தலா 2,000 ரூபாய் ரொக்க பரிசு.
மாமல்லபுரம்:
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் பூம்புகார் நிறுவனமானது, மாமல்லபுரம் அரசு கட்டிட, சிற்பக்கலைக் கல்லுாரி மாணவர்களிடம், அடுத்த தலைமுறை கைவினைக் கலைஞர்கள் கைத்திறன் போட்டியை, ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
இந்த போட்டியில் வெற்றி பெரும் மாணவ, மாணவியருக்கு, தலா 2,000 ரூபாய் ரொக்க பரிசு மற்றும் வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் ஆகியவை வழங்குவது வழக்கம்.

2023-2024-ம் ஆண்டிற்கான போட்டியாக ஓவியம், கற்சிற்பம், மரச்சிற்பம், சுதைச்சிற்பம், உலோக சிற்பம் ஆகிய பிரிவுகளில், 40 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

இதில் 25 பேர் கலைத் திறனாளியாக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் ராமன், பூம்புகார் நிறுவன மாமல்லபுரம் மேலாளர் வேலு ஆகியோர் போட்டிகளின் செயல்பாட்டை கண்காணித்தனர்.
- தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் மாற்றமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் ஏறுவதும், குறைவதுமாக இருந்தது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.7,140-க்கும் ஒரு சவரன் ரூ.57,120-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
15-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,120
14-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,120
13-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,840
12-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,280
11-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,280
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
15-12-2024- ஒரு கிராம் ரூ. 100
14-12-2024- ஒரு கிராம் ரூ. 100
13-12-2024- ஒரு கிராம் ரூ. 101
12-12-2024- ஒரு கிராம் ரூ. 104
11-12-2024- ஒரு கிராம் ரூ. 103
- 6-வது ஆண்டாக அணையில் தீப வழிபாடு மேற்கொண்டனர்.
- ஓடையில் வரும் மழை நீரை நம்பி 6,040 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே 24.75 அடி கொள்ளளவு கொண்ட வட்டமலை அணை உள்ளது. போதிய நீர்வரத்து இல்லாத இடத்தில் கட்டப்பட்ட இந்த அணைக்கு நிரந்தரமாக நீர் வழங்க தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர்ந்து 6-வது ஆண்டாக விவசாயிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் அணையில் தீப வழிபாடு மேற்கொண்டனர். மொத்தம் 10 ஆயிரத்து 8 தீபங்கள் ஏற்றப்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
1980-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணையின் இரண்டு கால்வாய்கள் மூலம் 6,040 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஓடையில் வரும் மழை நீரை நம்பி அணை கட்டப்பட்டதால் கடந்த 43 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே பாசனத்திற்காக அணை திறக்கப்பட்டுள்ளது.
பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன வாய்க்கால் மூலம் அணைக்கு தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப வேண்டும். அணை பகுதியில் வளர்ந்து கிடக்கும் சீமை கருவேல மரங்களை தொடர்ந்து வெட்ட வேண்டும். அணையை அசுத்தப்படுத்தி அருகில் உள்ள அரசு மதுபான கடையை மாற்ற வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டியும் விளக்குகள் ஏற்றப்பட்டன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் பேசிய வீடியோ பதிவை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தனர்.
- தனிப்படை போலீசார் ஸ்ரீரங்கத்தில் ரங்கராஜனை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
சென்னை:
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். ஆன்மிக சொற்பொழிவாளரான இவர், 'நமது கோவில்கள்' என்ற பெயரில் 'யூடியூப்' சேனல் வைத்துள்ளார். இதில் அவர், மத ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பரபரப்பு கருத்துகளை தெரிவித்து வீடியோ வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அவர், 'ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளுக்கு நடந்த அபசாரங்கள்' என்ற தலைப்பில் தனது யூடியூப் சேனலில் கடந்த வாரம் சர்ச்சைக்குரிய வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.
தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு தகவல்களை பரப்பிய ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 'ஆன்லைன்' மூலம் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்த புகார் மனு மீது போலீஸ் கமிஷனர் அருண், சென்னை மத்திய குற்றப்பிரிவு 'சைபர் கிரைம்' போலீசார் விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் பேசிய வீடியோ பதிவை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் அவர், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியிருப்பது உறுதியானது.
இதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது 'சைபர் கிரைம்' போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் ஸ்ரீரங்கத்தில் ரங்கராஜனை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். பின்னர் அவரை, சென்னை அழைத்து வந்தனர்.
- அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது.
- தற்போது அணையில் 90.64 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் மழையின் தீவிரத்தை பொறுத்து அவ்வப்போது நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 148 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 118.21 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது.
தற்போது அணையில் 90.64 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து இதே அளவில் இருந்தால் இன்னும் ஒரு வாரத்தில் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 7 ஆயிரத்து கனஅடி தண்ணீர் வந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்துள்ளது.
- மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து காவிரி ஆற்றில் பாய்ந்து ஓடுகிறது.
ஒகேனக்கல்:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, கேரட்டி, பிலிகுண்டுலு, ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 7 ஆயிரத்து கனஅடி தண்ணீர் வந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்துள்ளது.
இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 7,500 கனஅடியாக அதிகரித்து வந்தது.
இதன் காரணமாக மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து காவிரி ஆற்றில் பாய்ந்து ஓடுகிறது.
காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- வருகிற 19-தேதி வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு.
- நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாட்டில் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நேற்றே காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவில்லை. இந்த நிலையில், இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் வருகிற 19-தேதி வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாட்டில் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
12 முதல் 20 செ.மீ. வரை கனமழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் 2 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இறந்த நிலையில் பூரான் ஒன்று இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
- டீக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அக்கரகாரப்பட்டியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 34). கூலித்தொழிலாளி. நேற்று இவர், அக்கரகாரப்பட்டியில் நிலக்கோட்டை-மதுரை சாலையில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்றார். பின்னர் கடையில் 4 உளுந்த வடை மற்றும் 3 பருப்பு வடை பார்சல் வாங்கினார்.
அந்த வடைகளை தனது அக்காள் அழகு ராணியிடம் ஜெயபிரகாஷ் கொடுத்தார். இதையடுத்து அழகு ராணி மற்றும் அவரது குழந்தைகள் 3 உளுந்த வடைகளையும் சாப்பிட்டனர். தொடர்ந்து பருப்பு வடையை எடுத்து 2 ஆக அழகுராணி பிரித்தார். அதற்குள் இறந்த நிலையில் பூரான் ஒன்று இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து அழகுராணி மற்றும் குழந்தைகள் வாந்தி எடுத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலக்கோட்டையில் டீ கடையில் வாங்கிய ஒரு வடையில் பிளேடு இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே நிலக்கோட்டை பகுதியில் உள்ள டீக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு.
- புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு.
தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவி வ்ந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நேற்றே காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவில்லை. இந்த நிலையில், இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யும்.
இதேபோன்று தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






