என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 2 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
    • காரைக்கால் பகுதியிலும் 7 மணி வரை இடி மின்னலூடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதன்படி சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 2 மாவட்டங்களில் 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

    இதை தவிர காரைக்கால் பகுதியிலும் 7 மணி வரை இடி மின்னலூடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    • யார் எந்த கட்சிக்கு சென்றாலும் 2026-ல் கண்டிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும்.
    • தமிழ்நாட்டில் கூட்டணியை பொறுத்துதான் ஆட்சி அமையும் என எப்போதும் சொல்லமுடியாது.

    மதுரையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், 

    "பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக ஆட்சி அமைக்கவில்லை என்பது உண்மைக்கு புறம்பானது. இந்த கூற்று ஏற்றுகொள்ள முடியாதது. தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அல்ல, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைய வேண்டும் என்றுதான் அமித்ஷா கூறியுள்ளார்.

    அதிமுகவின் உட்கட்சி பூசல் என்பது வெறும் கண்துடைப்பு. தேர்தல் அறிக்கையில் என்ன சொன்னார்கள், அதை நிறைவேற்றினார்களா? என்பதைத்தான் பார்க்கவேண்டும். திமுக வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதா? எல்லா இடங்களிலும் போதைப்பொருள். இதையெல்லாம் தாண்டி மக்கள் ஓட்டுப் போடுவார்களா?

    யார் எந்த கட்சிக்கு சென்றாலும் 2026-ல் கண்டிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும். மக்கள் மனதில் மாற்றம் வந்துள்ளது. பீகார் போல இங்கும் மாற்றம் நிகழும். திமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்கள் அனைத்தும் எங்களுக்குதான் வரும். தமிழ்நாட்டில் கூட்டணியை பொறுத்துதான் ஆட்சி அமையும் என எப்போதும் சொல்லமுடியாது. எண்பது வரலாறுகளில் கூட்டணி இல்லாமல் எம்ஜிஆர் எவ்வாறு வெற்றிப்பெற்றார்? அண்ணாமலை எங்கள் கட்சியில் இருந்தவர்.

    கட்சியின் மாநிலத்தலைவராக இருந்தவர். அவர் தனிக்கட்சி ஆரம்பிக்கமாட்டார். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் எடப்பாடி தலைமையில் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம். கலவரத்தை தூண்டக்கூடிய கதாநாயகனாக சு.வெங்கடேசன் இருப்பார் என சந்தேகமாக இருக்கிறது. அப்படி கலவரம் நிகழ்ந்தால் சு. வெங்கடேசன்தான் பொறுப்பு. தீபம் ஏற்றுவதில் சு. வெங்கடேசனுக்கோ, அவரது குடும்பத்திற்கோ, அவர்சார்ந்த கட்சிக்கோ எதாவது பிரச்சனை இருக்கிறதா?" என தெரிவித்தார். 

    • தனியார் நிறுவனம் ஒன்று டெண்டர் எடுத்திருப்பதாக கூறி எங்களுக்கு வரும் காலிபாட்டில்களை தடுத்து எடுத்து செல்கின்றனர்.
    • நீதிமன்ற உத்தரவின்படி காலிபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை வரவேற்கிறோம்.

    திருப்பூர்:

    காலி மதுபாட்டில்களை திருப்பி கொடுத்தால் ரூ.10 பெற்றுக்கொள்ளலாம் என்ற திட்டம், திருப்பூர் உள்பட ஒரு சில மாவட்டங்களில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை பார் உரிமையாளர்கள் வரவேற்றாலும், அதை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், பல்வேறு குளறுபடி நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பார் உரிமையாளர்கள், இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் டாஸ்மாக் மதுக்கூட உரிமம் பெற்று தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலிபாட்டில்களை சேகரித்து கொள்ளும் உரிமம் பெற்று வருகிறோம். தற்போது எங்கள் கடையில் சேகரமாகும் பாட்டில்களை தனியார் நிறுவனம் ஒன்று டெண்டர் எடுத்திருப்பதாக கூறி எங்களுக்கு வரும் காலிபாட்டில்களை தடுத்து எடுத்து செல்கின்றனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

    எங்களுக்கு உரிமம் இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில், எங்களது வியாபார நஷ்டத்தை சரி செய்து, சுமூகமான வியாபாரம் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நீதிமன்ற உத்தரவின்படி காலிபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை வரவேற்கிறோம். அதே நேரம் காலிபாட்டில்களால் ஏற்படும் நஷ்டத்தை மட்டும் ஈடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டு கடற்கரையை நோக்கி மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் தற்போது நகர்கிறது.
    • கனமழை தொடர்பாக சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

    சென்னை அருகே வங்கக்கடலில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 12 மணி நேரம் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டு கடற்கரையை நோக்கி மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் தற்போது நகர்கிறது.

    கடற்கரை நோக்கி வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இரவு சென்னை - புதுச்சேரி இடையே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் நேற்று காலையில் இருந்தே மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

    சென்னையில் மழையின் தாக்கம் மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக உதயநிதி ஆய்வு மேற்கொண்டார். கனமழை தொடர்பாக சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

    • தினத்தந்தி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர்.சுகுமாருக்கு 2024-ம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதிற்கு தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்டார்.
    • முத்தமிழறிஞர் கலைஞருடன் 40 ஆண்டுகளுக்கு மேல் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் 2024-ம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதினை 50 ஆண்டுகளாக இதழியல் துறையில் பணியாற்றி நிறைந்த அனுபவம் பெற் றுள்ள தினத்தந்தி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர்.சுகுமாருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2021-22-ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையின் போது, இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் 'கலைஞர் எழுதுகோல் விருது' மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், கடந்த 2021-ம் ஆண்டிற்கான 'கலைஞர் எழுதுகோல் விருது' மூத்த பத்திரிக்கையாளர் ஐ.சண்முகநாதனுக்கும், 2022-ஆம் ஆண்டிற்கான 'கலைஞர் எழுதுகோல் விருது' மூத்த பத்திரிக்கையாளர் வி.என்.சாமிக்கும் 2023-ம் ஆண்டிற்கான 'கலைஞர் எழுதுகோல் விருது' நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கும், அதே ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, சிறப்பினமாக மகளிர் ஒருவருக்கும் 'கலைஞர் எழுதுகோல் விருது' வழங்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து சுகிதா சாரங்கராஜிக்கும் வழங்கப்பட்டது.

    அவற்றின் தொடர்ச்சியாக, 50 ஆண்டுகளாக இதழியல் துறையில் பணியாற்றி நிறைந்த அனுபவம் பெற்றுள்ள தினத்தந்தி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர்.சுகுமாருக்கு 2024-ம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதிற்கு தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்டார்.

    டி.இ.ஆர்.சுகுமார் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாகத் திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உள்ளிட்ட எண்ணற்ற அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்து நேர்முகமாகப் பேட்டிகண்டு சுவையான செய்திகளை மக்களுக்கு வழங்கியவர் ஆவார். தினத்தந்தி நாளிதழில் நாள்தோறும் அவர் எழுதி வரும் "தலையங்கம்", வாரம் ஒருமுறை "பேனா மன்னன்" என்ற பெயரில் வாசகர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்து வரும் பதில்களும் மக்களிடம் பெரிதும் வரவேற்பு பெற்று உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் டி.இ.ஆர்.சுகுமார், உலக அளவில் சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், துபாய், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்ற பல்வேறு சிறப்பான நிகழ்வுகளின்போது, அந்தந்த நாடுகளுக்குச் சென்று, செய்திகளைத் திரட்டி, தினத்தந்தி வாயிலாகத் தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள சிறப்பான இதழியல் துறை அனுபவங்களையும் கொண்டுள்ளார். அத்துடன் முத்தமிழறிஞர் கலைஞருடன் 40 ஆண்டுகளுக்கு மேல் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்.

    இதழியல் துறையில் 50 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடனும் நேர்த்தியுடனும் நேர்மையுடனும் நெஞ்சுறுதியோடும் தினத்தந்தி நாளிதழின் நிர்வாக ஆசிரியராகத் தொடர்ந்து பணியாற்றிவரும் டி.இ.ஆர். சுகுமாருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றையதினம் 2024-ம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் 5 லட்சம் ரூபாய் பொற்கிழி ஆகியவற்றை வழங்கிச் சிறப்பித்தார்.

    இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர் (செய்தி) செல்வராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு அச்சகப் பணியாளர்களுக்கு தண்டையார்பேட்டை - காமராஜர் நகரில் நவீன வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
    • குடியிருப்புகளுக்கு தேவையான மின் இணைப்பு, மின்தூக்கி வசதி, தீயணைப்பு உபகரணம், குடிநீர் வசதி, கழிவுநீர் இணைப்பு, உட்புற அணுகு சாலை, தெரு விளக்கு, சுற்றுச் சுவர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2022-2023-ம் ஆண்டுக்கான எழுது பொருள் மற்றும் அச்சுத் துறை மானியக் கோரிக்கையில், அரசு அச்சகப் பணியாளர்களுக்கு சென்னை, தண்டையார்பேட்டை - காமராஜர் நகரில் நவீன வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னை, தண்டையார்பேட்டை, காமராஜர் நகரில் 39 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் 79 ஆயிரம் சதுரடி பரப்பளவில், 96 குடியிருப்புகளுடன், தரை மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர் குடியிருப்பினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, பணியாளர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டிற்கான ஆணைகளை வழங்கினார்.

    இக்குடியிருப்பின் தரைத்தளத்தில் வாகன நிறுத்துமிடம், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுதளம், முதல் தளம் முதல் 6-ம் தளம் வரை உள்ள ஒவ்வொரு குடியிருப்பும் தலா 450 சதுரடியுடன், குடியிருப்புகளுக்கு தேவையான மின் இணைப்பு, மின்தூக்கி வசதி, தீயணைப்பு உபகரணம், குடிநீர் வசதி, கழிவுநீர் இணைப்பு, உட்புற அணுகு சாலை, தெரு விளக்கு, சுற்றுச் சுவர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகள் பிறரைச்சாராமல் தன்னம்பிக்கையுடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இவ்வரசு மேற்கொண்டு வருகின்றது.
    • மக்கள் நலனுக்கான கொள்கைகளை தீர்மானித்து முடிவெடுக்கும் அதிகாரத்தையும் மாற்றுத் திறனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வருடமும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படும் டிசம்பர் 3-ம் நாளில், மாற்றுத் திறனாளிகளுக்கான சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் மாநில விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது.

    மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமை மற்றும் சம வாய்ப்புகள் வழங்கி அவர்கள் சமுதாயத்தில் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு ஏற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    ஆண்டுதோறும் இந்நாளில் ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் முக்கிய உறுதிமொழி வெளியிடப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் அதாவது "மாற்றுத் திறனாளிகளை உள்ளடக்கிய சமுதாயம் வளர சமூக ஏற்றம் மலரும்" என அறிவித்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டே இவ்வரசும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் எனும் உன்னத கொள்கையின் அடிப்படையில் இல்லம் தேடி உதவி வழங்கும் வகையில், உலக வங்கியின் கடன் உதவி மூலம் செயல்படுத்தப்படும் 'தமிழ்நாடு உரிமைகள் திட்டம்' மூலம் மாற்றுத் திறனாளிகள் பயனடைய பல்வேறு துறைகளின் சேவைகளை ஒருங்கிணைத்து, மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் பகுதிகளிலேயே மறுவாழ்வு சேவைகள் அனைத்தும் கிடைக்கும் வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மாற்றுத்திறனாளிகள் தேவைகளை கணக்கெடுப்பின் மூலம் கண்டறிந்து, பயனாளிகளுக்கு வயது மற்றும் உடல் நலத்திற்கு ஏற்ற சிகிச்சைகள் மற்றும் விருப்பத்திற்கு ஏற்ற நவீன உதவி உபகரணங்களை தன்னிறைவு எய்தும் வகையில் வழங்கி, மாற்றுத்திறனாளிகள் பிறரைச்சாராமல் தன்னம்பிக்கையுடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இவ்வரசு மேற்கொண்டு வருகின்றது.

    மேலும், மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதார மேம்பாட்டுக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கியும், அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் நகர்ப்புறம் மற்றும் கிராமங்களில் வீட்டு மனைகள் மற்றும் வீடுகளை ஒதுக்கியும், மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையில் ஏற்றம் காண சமுதாயத்தை உருவாக்கும் நடவடிக்கைகளையும் இவ்வரசு மேற்கொண்டு வருகிறது.

    மேலும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதித்துவம் பெறும் வகையில், தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன முறையில் உறுப்பினர்களாக்கும் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, மக்கள் நலனுக்கான கொள்கைகளை தீர்மானித்து முடிவெடுக்கும் அதிகாரத்தையும் மாற்றுத் திறனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறாக, மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கி, அவர்களின் வாழ்வு மென்மேலும் ஒளிமயமாகத் திகழ நாம் அனைவரும் பாடுபடுவோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • வனவிலங்குகளுக்கு அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி ஜானகிராமன் அலறி துடித்தார்.
    • படுகாயமடைந்த லோகேசை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஒடுகத்தூர்:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே உள்ள ராமநாயினி குப்பத்தை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது55), விவசாயி. இவரது மனைவி மல்லிகா(50). இவரது மகன்கள் விகாஷ் (25), லோகேஷ் (23), ஜீவா (22).

    லோகேஷ் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து இருந்தார். விகாஷ், ஜீவா ஆகியோர் சொந்த ஊரிலேயே ஜானகிராமனுக்கு உதவியாக நர்சரி கார்டன் வைத்து விற்பனை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்றிரவு ஜானகிராமன் மற்றும் அவரது மகன்கள் விவசாய நிலத்திற்கு சென்றனர். அப்போது வனவிலங்குகளுக்கு அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி ஜானகிராமன் அலறி துடித்தார். இதனை பார்த்த 3 மகன்களும் தந்தையை காப்பாற்ற முயற்சி செய்தனர். அப்போது 3 மகன்களும் மின் வேலியில் சிக்கி கொண்டனர்.

    சிறிது நேரத்தில் ஜானகிராமன், விகாஷ், ஜீவா ஆகிய 3 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். லோகேஷ் படுகாயமடைந்தார்.

    இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர், 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் படுகாயமடைந்த லோகேசை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு நிலத்தில் சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி அமைத்த பக்கத்து நிலத்தை சேர்ந்த சங்கர் (52), விவசாயி என்பவரை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை குப்பம்பட்டு கிராமத்தில் இருந்த அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சென்னை அருகே வங்கக்கடலில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 12 மணி நேரம் நீடிக்கும்.
    • வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை அருகே வங்கக்கடலில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 12 மணி நேரம் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டு கடற்கரையை நோக்கி மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் தற்போது நகர்கிறது.

    கடற்கரை நோக்கி வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இரவு சென்னை - புதுச்சேரி இடையே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் நாளை மிக கனமழை (ஆரஞ்ச் அலர்ட்) பெய்யும். சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்று முதல் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • 2 அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் அதி கனமழை பெய்தது.

    இதனால் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. அதேபோல் மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளிலும் வரலாறு காணாத மழை அளவு பதிவானது.

    இதனால் மணிமுத்தாறு அருவியில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 23-ந்தேதி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

    அன்றைய தினமே பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட அகஸ்தியர் அருவியில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் அகஸ்தியர் அருவிக்கு சூழல் சுற்றுலாவின் பொருட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து 2 அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டது.

    இதனிடையே கடந்த 2 நாட்களாக மழை இல்லாமல் வெயில் அடிக்க தொடங்கி உள்ளதால், அருவிகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் இன்று முதல் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் 9 நாட்கள் தடைக்கு பின்னர் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டனர்.

    அதேநேரம் அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவி பகுதியில் வரும் தண்ணீர் வரத்து குளிப்பதற்கு ஏதுவாக இல்லாததால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. அதேநேரம் அருவியை பார்வையிட அனுமதி வழங்கி வனத்துறை உத்தரவிட்டுள்ளது. 

    • பொதுநல வழக்கு தொடர்ந்து, அதன் மூலம் பணம் பறிக்கும் நிலை உள்ளது.
    • வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த பூல்பாண்டி என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு காரைக்குடி நகராட்சியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

    அந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், "பொதுநல வழக்கு தொடர்ந்து, அதன் மூலம் பணம் பறிக்கும் நிலை உள்ளது. அதுபோல பணம் கிடைத்தவுடன், பொதுநல வழக்கு திரும்பப் பெறப்படுகிறது. இது ஏற்கத்தக்கதல்ல. இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 4 ஆண்டுகளாகியும் வழக்கு நிலுவையிலே வைக்கப்பட்டிருக்கிறது.

    பொதுநல வழக்கை சிலரின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பயன்படுத்துவது அதிர்ச்சி அளிக்கிறது. அரசு அலுவலர்களும் இதில் நோட்டீஸ் கூட அனுப்பாமல் இருந்தது ஏற்கத்தக்கதல்ல. தற்போது தான் நோட்டீசே அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு பொதுநல வழக்கு என தொடர்ந்து ஆதாயம் பெற்றவுடன் திரும்ப பெரும் நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும். ஆகவே பொதுநல வழக்கை முறையான காரணம் இன்றி திரும்ப பெற அனுமதி கோரினால் அதிக அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து, மனுதாரர் 9-ந் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

    • எஸ்.ஐ.ஆரில் எந்தவிதமான குளறுபடியும் இல்லை.
    • எந்த தனிநபரை வைத்தும் எந்த கட்சியும் இல்லை.

    தென்காசி:

    ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற நோக்கத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையிலான கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பிணைப்பை வலுப்படுத்தும் விதமாக காசி தமிழ் சங்கமம் 4.0 என்ற நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது.

    இதையொட்டி தெற்கே உள்ள காசியாம் தென்காசியில் இருந்து வடக்கே உள்ள காசி நோக்கி அகத்திய முனிவர் வாகன பயணம் இன்று தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் காணொலி காட்சி மூலம் வாகன பயணத்தை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஜோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு, தென்காசி பா.ஜ.க. மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யா சாமி, தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ண முரளி என்கிற குட்டியப்பா எம்.எல்.ஏ., செல்வ மோகன்தாஸ் பாண்டியன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வாரணாசிக்கு புறப்பட்ட 15 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியை தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு எங்கு சென்றாலும் தமிழ் மொழி பற்றியும் அதன் கலாச்சாரத்தை பற்றியும் பெருமையாக பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். வாழும் பாண்டிய மன்னராக பாரத பிரதமர் செயல்பட்டு காசியில் தமிழ் சங்கம் மாநாட்டினை 4 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

    எஸ்.ஐ.ஆரில் எந்த விதமான குளறுபடியும் இல்லை. இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருக்கும் நிலையில், அவர்களை நீக்கி விடக்கூடாது என்பதற்காக தான் தி.மு.க. போராடுகிறது.

    மேலும், 50 வருட கால அ.தி.மு.க. ஆட்சியில் இருந்து விட்டு, அப்போது நல்லாட்சி இல்லாதது போல் தற்போது த.வெ.க.வின் மூலம் நல்லாட்சி கொடுப்பேன் என்று செங்கோட்டையன் கூறியுள்ளது வருத்தமாக உள்ளது.

    பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி மக்கள் சக்தியோடு உள்ளதால், பொங்கலுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணையும். அ.தி.மு.க.வில் இருந்து தற்போது செங்கோட்டையன் த.வெ.க.விற்கு சென்று உள்ள நிலையில், அங்கிருந்து எங்கு செல்வார் என்று தெரியாது.

    எந்த தனிநபரை வைத்தும் எந்த கட்சியும் இல்லை. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாள் கூட அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் சக்தி கை ஓங்கி தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

    ×