என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • மரைன் டிரைவ் பகுதியில் தடுப்பு சுவரை தாண்டி அலைகள் சீறி பாய்ந்தன.
    • தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் படையினரும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    மும்பை:

    தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி பிபர்ஜாய் புயலாக உருவெடுத்தது.

    இந்த புயலானது போர்பந்தருக்கு 340 கிலோ மீட்டர் தெற்கு, தென்மேற்கிலும், துவாரகாவுக்கு 400 கிலோ மீட்டர் தெற்கு-தென்மேற்கிலும் அதிதீவிர புயலாக மையம் கொண்டு உள்ளது.

    பிபோர்ஜோய் புயல் மணிக்கு 9 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்வதாகவும், வருகிற 15-ந் தேதி பிற்பகல் குஜராத்தின் மாண்ட்வி-பாகிஸ்தானின் கராச்சி இடையே சவுராஸ்டிரா கடல் பகுதியில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இந்த புயல் காரணமாக மும்பையில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. மரைன் டிரைவ் பகுதியில் தடுப்பு சுவரை தாண்டி அலைகள் சீறி பாய்ந்தன.

    மேலும் அங்குள்ள தாதர், தாராவி, சி.எஸ்.எம்.டி. உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்தது.

    பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக மும்பையில் விமான சேவை பாதிக்கப்பட்டது.

    4 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. விமானங்கள் வருவதும், புறப்பட்டுச் செல்வதும் 40 நிமிடம் தாமதமானது.

    பிபோர்ஜோய் புயலால் குஜராத் மாநிலத்துக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சவுராஸ்டிரா, கட்ச் ஆகிய கடற்கரை மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    கட்ச், ஜாம்நகர், மோர்பி, கிர்சோம்நாத், போர்பந்தர், தேவபூமி, துவாரகா ஆகிய 6 மாவட்டங்கள் புயலால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    இதனால் இந்த மாவட்டங்களில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் தற்காலிகமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    குஜராத் மாநில அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினரும், மாநில பேரிடர் படையினரும் தயார் நிலையில் 6 மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    • பா.ஜனதா அதன் சொந்த வலையில் சிக்கி உள்ளது.
    • உத்தவ் தாக்கரே மற்றும் உண்மையான சிவசேனா மீதான பயம் போகவில்லை.

    மும்பை :

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட் வந்து இருந்தார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், உத்தவ் தாக்கரேவிடம் பேச நானும், தேவேந்திர பட்னாவிசும் சென்றோம். அப்போது அவர் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக ஒத்துக்கொண்டார். ஆனால் தேர்தல் முடிவு வந்தவுடன் உத்தவ் தாக்கரே கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை. காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சோ்ந்து கொண்டார். ஆட்சியை கவிழ்த்ததாக எங்களை குற்றம் சாட்டுகிறாா்கள். நாங்கள் ஆட்சியை கவிழ்க்கவில்லை.

    உங்களின் நாடகத்தால் விரக்தி அடைந்த சிவசேனா தொண்டர்கள் தான் ஆட்சியை கவிழ்த்தனர். அவர்கள் தேசியவாத காங்கிரசுடன் இருக்க விரும்பவில்லை, எனவே விலகி வந்தனர், என பேசியிருந்தார்

    இந்தநிலையில் அவரது பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் பா.ஜனதா உத்தவ் தாக்கரேக்கு பயப்படுவதாக சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் சமூகவலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    "பா.ஜனதா உத்தவ் தாக்கரேக்கு பயப்படுவது நல்லது தான். அவர்கள் கட்சியை உடைத்தனர், கட்சியின் சின்னத்தையும், பெயரையும் துரோகிகளுக்கு கொடுத்தனர். தற்போதும் கூட அவர்களுக்கு உத்தவ் தாக்கரே மற்றும் உண்மையான சிவசேனா மீதான பயம் போகவில்லை.

    அமித்ஷா 20 நிமிடங்கள் பேசியுள்ளார். இதில் 7 நிமிடங்கள் அவர் உத்தவ் தாக்கரே பற்றி தான் பேசியுள்ளார். அவரது பேச்சு வேடிக்கையாக இருந்தது.

    அந்த கூட்டம் பா.ஜனதா மகா சம்பர்க் அபியானுக்காக நடந்ததா அல்லது உத்தவ் தாக்கரேயை விமர்சிக்க நடந்ததா என ஆச்சரியமாக உள்ளது. உத்தவ் தாக்கரேவிடம் கேட்ட கேள்விகளை பா.ஜனதா தங்களுக்குள் கேட்டு சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பா.ஜனதா அதன் சொந்த வலையில் சிக்கி உள்ளது.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    இதேபோல பரூக் அப்துல்லா, மெபூபா முப்தி, நிதிஷ்குமார், மாயாவதி, ஓம் பிரகாஷ் சவுதாலா ஆகியோருடன் பா.ஜனதா கூட்டணி வைத்த போது, இந்துத்வா எங்கு போனது என அமித்ஷாவுக்கு உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சியின் சட்டமேல் சபை எதிர்க்கட்சி தலைவர் அம்பாதாஸ் தன்வே கேள்வி எழுப்பி உள்ளார்.

    • மகாராஷ்டிராவில் முதன்முறையாக வார்காரிஸ் பக்தர்கள் மீது தடியடி
    • 75 பேருக்குப்பதில் அதிகமானோர் செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து சுமார் 22 கி.மீட்டர் தொலைவில் உள்ளது ஆலந்தி. இங்கு கிருஷ்ணரின் வடிவமாக பார்க்கப்படும் சுவாமி விதோபா திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு வார்காரி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

    கடந்த முறை ஏராளமான பக்தர்கள் ஒரே நேரத்தில் சென்றதால் நெரிசல் ஏற்பட்டது. இதனால் இந்த முறை 75 பேர் சென்று தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், ஒரே நேரத்தில் அதிகமானோர் செல்ல முயன்றதால் போலீசாருக்கும் வார்காரிஸ் பக்தர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதனால் போலீசார் பக்தர்கள் மீது தடியடி நடத்தினார்கள். வார்காரி பக்தர்கள் மீது தடியடி நடத்துவது, மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவே முதல் முறையாகும்.

    இந்த சம்பவத்திற்காக உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற எம்.பி. சஞ்சய் ராவத் ஆளுங்கட்சியை குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில் ''ஐயோ.. இந்துத்துவா அரசின் பாசாங்குகள் அம்பலமானது.. முகமூடி அவிழ்ந்தது. மகாராஷ்டிராவில் முகலாயர்கள் மறுஅவதாரம் எடுத்துள்ளனர்'' எனக்குறிப்பிட்டுள்ளார்.

    ''ஸ்ரீ ஷேத்ரா ஆலந்தியில் வார்காரி பக்தர்கள் மீது காவல்துறை தடியடி நடத்திய விதம் மிகவும் மூர்க்கத்தனமானது. மகான் ஞானேஸ்வர் மகாராஜ் முன்னிலையில் வார்காரிகளை அவமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. வார்காரி பிரிவினர் மீது அரசுக்கு ஏதேனும் பொறுப்பு இருக்கிறதா அல்லது இல்லையா?'' என தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    • குழந்தைக்கு பால் புகட்ட நர்சுகள் அனுமதிக்கவில்லை.
    • நள்ளிரவு 1 மணி அளவில் மீண்டும் குழந்தையை பார்க்க பிரியா காம்ளே சென்றார்.

    மும்பை :

    மும்பை பாண்டுப்பை சேர்ந்தவர் பிரியா காம்ப்ளே. நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக அங்குள்ள மாநகராட்சி சாவித்ரிபாய் புலே மகப்பேறு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி குழந்தைக்கு பால் புகட்ட பிரியா காம்ப்ளே தீவிர சிகிச்சை பிரிவுக்கு சென்றார். அங்கு குழந்தையின் வாயில் பிளாஸ்டிக் டேப் ஒட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் குழந்தைக்கு பால் புகட்ட நர்சுகள் அனுமதிக்கவில்லை. மறுநாள் காலை 8 மணிக்கு வரும்படி அவரிடம் கூறி அனுப்பினர். இதன்பின்னர் நள்ளிரவு 1 மணி அளவில் மீண்டும் குழந்தையை பார்க்க பிரியா காம்ளே சென்றார்.

    அப்போதும் தனது குழந்தையின் வாயில் ஒட்டிய டேப் அகற்றப்படாமல் இருந்ததை கண்டு நர்சிடம் விசாரித்தார். இதற்கு குழந்தை அழாமல் இருப்பதற்காக டேப் ஒட்டியதாக நர்ஸ் தெரிவித்தார். இதனை கேட்டு திகைத்துப்போன பிரியா காம்ப்ளே மற்ற குழந்தைகளையும் கவனித்தார். அங்கிருந்த மேலும் 3 குழந்தைகளுக்கும் இதே போன்று டேப் ஒட்டப்பட்டு இருந்தது.

    இதுபற்றி அவர் முன்னாள் கவுன்சிலர் ஜக்ருதி பாட்டீலிடம் தெரிவித்தார். அவர் ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் மாநகராட்சி உதவி கமிஷனரிடம் புகார் அளித்தார். குழந்தையின் உயிருக்கு ஆபத்தான செயலில் ஈடுபட்ட நர்சை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து மாநகராட்சி உத்தரவிட்டது.

    • தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் புதிய நியமனங்களை சரத் பவார் அறிவித்துள்ளார்.
    • வேட்பாளர்களை தேர்வு செய்யும் பெருமளவு அதிகாரம் சுப்ரியா சுலேவுக்கு கையில் இருக்கும்.

    புதுடெல்லி:

    தேசியவாத காங்கிரசின் 25-வது ஆண்டு நிறுவன நாள் விழா நேற்று டெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் சரத்பவார், கட்சியின் தேசிய செயல் தலைவர்களாக தனது மகள் சுப்ரியா சுலே எம்.பி. மற்றும் முன்னாள் மத்திய மந்திரி பிரபுல் பட்டேல் ஆகியோரை அறிவித்தார். தேர்தல் பணி, மாநிலங்களவை, மக்களவை பணிகள் பிரிக்கப்பட வேண்டும் என்பதற்காக, அவர்கள் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சுப்ரியா சுலேவை கட்சியின் மத்திய தேர்தல் குழு தலைவராகவும் சரத் பவார் நியமித்தார். தேர்தல் குழு தலைவர் என்பதால், தேர்தல் நேரங்களில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பெருமளவு அதிகாரம் சுப்ரியா சுலேவுக்கு கையில் இருக்கும். 

    சுப்ரியா சுலேக்கு மராட்டியம், அரியானா, பஞ்சாப் மாநில பொறுப்புகள் மற்றும் பெண்கள் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி பொறுப்புகளும் வழங்கப்பட்டு உள்ளன. பிரபுல் படேலுக்கு மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், ஜார்கண்ட், கோவா, மாநிலங்களவையின் பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.

    அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் புதிய நியமனங்களை சரத் பவார் அறிவித்துள்ளார். அதேசமயம், அவரது அண்ணன் மகனும் மகாராஷ்டிர சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான அஜித் பவாருக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கவில்லை. அவரது முன்னிலையிலேயே புதிய நியமனங்கள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • தீக்காயங்களுடன் ஐந்து பேர் மருத்துவுமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இன்று திடீரென தீ விபத்து ஏறு்பட்டது. அம்பர்நாத் எம்ஐடிசியில் உள்ள தொழிற்சாலையில் நைட்ரிக் ஆசிட் டேங்க் அருகே மாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக குடிமை அதிகாரி தெரிவித்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து அம்பர்நாத், ஆனந்த் நகர் மற்றும் உல்லாஸ் நகரில் இருந்து தலா இரண்டு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சுமார் ஒன்றரை மணி நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர் சூர்யகாந்த் ஜிமாட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், தீக்காயங்களுடன் ஐந்து பேர் மருத்துவுமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தானே குடிமை அமைப்பின் பேரிடர் கட்டுப்பாட்டு பிரிவு தலைவர் யாசின் தத்வி கூறினார்.

    மேலும், வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வர்ஷா கெய்க்வாட் கணிதத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர்.
    • மும்பை காங்கிரசை வலுப்படுத்தும் நோக்கில் வர்ஷா கெய்க்வாட் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    மும்பை :

    மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் வர்ஷா கெய்க்வாட் (வயது 48). இவர் மும்பை காங்கிரஸ் தலைவராக நேற்று நியமிக்கப்பட்டார்.

    இதன் மூலம் மும்பை காங்கிரஸ் தலைவராக இருந்த பாய் ஜக்தாப் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார்.

    புதிய தலைவர் வர்ஷா கெய்க்வாட் காங்கிரஸ் மூத்த தலைவராக விளங்கிய மறைந்த ஏக்நாத் கெய்க்வாட்டின் மகள் ஆவார். கடந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியின் போது கல்வி மந்திரியாக வர்ஷா கெய்க்வாட் பணியாற்றினார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார். மும்பை காங்கிரஸ் பிரிவின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் மும்பை மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் 6 பாராளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், அதில் ஒரு தொகுதியில் கூட கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில் மும்பை காங்கிரசை வலுப்படுத்தும் நோக்கில் வர்ஷா கெய்க்வாட் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    வர்ஷா கெய்க்வாட் கணிதத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர். அரசியலில் நுழைவதற்கு முன் சித்தார்த் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது
    • பா.ஜனதா ஆதரவு இல்லாமல் ஷிண்டேவால் முதல்வராக நீடிக்க முடியாது

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியை கைப்பற்றி, பா.ஜனதா துணையுடன் ஏக்நாக் ஷிண்டே முதல்வராக இருந்து வருகிறார். அவருடைய கட்சியனருக்கும் உத்தவ் தாக்கரே கட்சியினருக்கு இடையில் கருத்து மோதல்கள் இருந்து வருகிறது.

    பா.ஜனதாவின் பட்நாவிஸ் துணை முதல்வராக இருக்கிறார். மகாராஷ்டிரா மாநில மந்திரிசபை விரிவாக்கம் விரைவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது சலசலப்பு ஏற்படும் என உத்தவ் தாக்கரே கட்சியின் முக்கிய தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, சிவசேனாவின் நான்கு முக்கிய மந்திரிகளை நீக்குமாறு ஏக்நாத் ஷிண்டேயிடம் கேட்டுக்கொண்டதாக ராவத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சஞ்சய் ராவத் கூறுகையில் ''மந்திரிசபை மாற்றம் குறித்து அமித் ஷா சில தகவல்களை ஷிண்டேவிடம் தெரிவித்துள்ளார். விரிவாக்கம் அதன்படி நடைபெற்றால் ஷிண்டே, அவரது முக்கியமான நான்கு மந்திரிகளை நீக்க வேண்டியிருக்கும். இது என்னுடைய தகவல்'' எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஷிண்டேவின் சிவசேனா கட்சி செய்தி தொடர்பாளர் சஞ்சய் ஷிர்சத் கூறுகையில் ''மற்றவர்கள் விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் அவருடைய பழக்கமாக இது இருக்கலாம்'' என குறிப்பிட்டார்.

    ஒருவேளை முக்கிய மந்திரிகள் நீக்கப்பட்டால் சலசலப்பு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

    மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலின்போது உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, பாஜனதா கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. தேர்தலில் ஆட்சியமைப்பதற்கு தேவையான இடங்களை விட அதிகமான இடங்களை இந்தக் கூட்டணி பிடித்தது. என்றாலும், முதல் பதவி வேண்டும் என உத்தவ் தாக்கரே அடம் பிடித்ததால் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    அதன்பின் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சியமைத்தது. பின்னர் சிவசேனா கட்சியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் சிவசேனா கட்சியை கைப்பற்றி முதல்வர் பதவியையும் பெற்றுக்கொண்டார்.

    • புதிய நவி மும்பை விமான நிலையத்திற்கும் மும்பை விமான நிலையத்திற்கும் இடையே உள்ள தூரம் 40 கி.மீ ஆகும்.
    • புதிய விமான நிலையம் மகாராஷ்டிராவுக்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் முக்கியமானதாக இருக்கும் என்றார்.

    விமான போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு நவி மும்பையில் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட உள்ளது. புதிய விமான நிலையம் நவி மும்பையில் உள்ள உல்வேயில் மும்பை பெருநகரப் பகுதியின் மையத்தில் அமைக்கப்படுகிறது.

    இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலைய ஆபரேட்டர்களில் ஒன்றான அதானி விமான நிலையத்தால் இந்த விமான நிலையம் கட்டப்பட்டு நிர்வகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நான்கு கட்டங்களாக கட்டப்படவுள்ள இந்த விமான நிலையத்தை உலகின் மிகவும் ஆற்றல் திறன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு நிலையான வகையில் மாற்றும் திட்டம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    விமான நிலையத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களாக இருக்கும். விமான நிலையம் முழுவதும் சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்படும். இது பசுமை மின்சாரத்தையும் பரவலாகப் பயன்படுத்தும், அதில் பெரும்பகுதி சூரிய சக்தியை தளத்தில் உற்பத்தி செய்யும் என்று திட்டத்தை நிர்வகிக்கும் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    இந்தியாவின் தேசிய மலரான தாமரையால் ஈர்க்கப்பட்டு முனையம் வடிவமைக்கப்படுகிறது.

    நவி மும்பையில் 1160 ஹெக்டேர் பரப்பளவில் கட்டப்படும் சர்வதேச விமான நிலையம் முதல் இரண்டு கட்டங்கள் டிசம்பர் 2024க்குள் முடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணைத் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸுடன் இணைந்து, விமான நிலைய பணிகளை நேற்று ஆய்வு செய்தார்.

    தளத்தில் வான்வழி ஆய்வுக்குப் பிறகு, இரு தலைவர்களுக்கும் அதானி குழுமத்தின் பிரதிநிதிகள் விமான நிலையத்தின் அம்சங்கள் குறித்து விரிவான விளக்கத்தை அளித்தனர்.

    புதிய விமான நிலையம் மகாராஷ்டிராவுக்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் முக்கியமானதாக இருக்கும் என்றும் மும்பை விமான நிலையத்தின் நெரிசலை குறைக்கும் என்று முதல்வர் கூறினார்.

    • எங்களைப் பொருத்தவரை விஷாலின் 35 சதவீத மதிப்பெண் கூட பெரிய விஷயம்தான்.
    • பெற்றோரின் மனதைக் கவரும் பதிலைக் கண்டு இணையப் பயனர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. இதில், மும்பையைச் சேர்ந்த பெற்றோர் தங்களது மகன் விஷால் 6 பாடங்களிலும் 35 மதிப்பெண்களைப் பெற்று ஜஸ்ட் பாஸ் ஆனாதை நெகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளனர்.

    பொதுத்தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் உடனே மனமுடைந்து தற்கொலை செய்துக் கொள்ளும் சம்பவங்களுக்கு மத்தியில், இதுவும் பெரிய விஷயம் தானே என்று ஜஸ்ட் பாஸ் ஆன மகனை பாராட்டிய செயல் பெற்றோர்களுக்கும் எடுத்துக்காட்டாக உள்ளனர்.

    மராத்தி நடுநிலைப் பள்ளியில் படித்து 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர் எடுத்த 35 சதவீத மதிப்பெண்ணை பெருமையோடு காண்பித்த பெற்றோரின் வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் சரண் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், "மும்பையைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் தேர்வில் 35% மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆனால், சோகமாகவோ, கோபமாகவோ இருப்பதற்குப் பதிலாக, அவரது பெற்றோர்கள் அவரது வெற்றியைக் கொண்டாடினர்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, "குழந்தைகள் அதிக மதிப்பெண்கள் பெறுவதைத்தான் பல பெற்றோர் விரும்புகின்றனர். கொண்டாடுகின்றனர். ஆனால், எங்களைப் பொருத்தவரை விஷாலின் 35 சதவீத மதிப்பெண் கூட பெரிய விஷயம்தான்" என மாணவரின் தந்தை நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

    பெற்றோரின் மனதைக் கவரும் பதிலைக் கண்டு இணையப் பயனர்கள் இன்ப அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.

    • சரத்பவார் மகள் உள்பட பலர் போலீஸ் கமிஷனரிடம் புகார்
    • தபோல்கர் போன்று கொல்லப்படுவார் என மிரட்டல்

    நாடாளுமன்ற உறுப்பினரும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் குழு ஒன்று, மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் ஃப்ன்சல்கரிடம், சரத் பவாருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்தனர்.

    அப்புகாரில், மூட நம்பிக்கைகளுக்கு எதிராக போராடியவரான நரேந்திர தபோல்கர், 2013-ம் ஆகஸ்ட் 20ம்தேதி காலை நடைபயிற்சி மேற்கொள்ளும் பொழுது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    நரேந்திர தபோல்கருக்கு ஏற்பட்ட அதே கதிதான் சரத் பவாருக்கும் ஏற்படும்", என முகநூலில் கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது. இதுபற்றி உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

    அந்த பதிவுகளின் ஆதாரங்களையும் புகாருடன் இணைத்துள்ளனர்.

    காவல்துறை அதிகாரி இதுபற்றி கருத்து கூறுகையில், "நாங்கள் இந்த புகாரை தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். விசாரணையையும் தொடங்கி விட்டோம். இது சம்பந்தமாக தெற்கு பகுதி சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவிருக்கிறோம்", என தெரிவித்தார்.

    மூத்த அரசியல்வாதியான ஷரத் பவாருக்கு விடப்பட்ட கொலை மிரட்டல் மிகுந்த பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது. 82 வயதாகும் சரத் பவார்  ஒரு மூத்த அரசியல்வாதி. பல வருடங்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிறகு மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை நிறுவினார்.

    • ஒரு சில பாகங்களை நாய்களுக்கு மனோஜ் உணவாக போட்டு விட்டதால் மற்ற பாகங்கள் என்ன ஆனது என தெரியவில்லை.
    • தாலிகட்டாமல் வாழ்ந்தாலும் எங்களது வாழ்க்கை இனிமையாக சென்றது.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே 36 வயது காதலியை 56 வயதுடைய காதலர் மனோஜ் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி உறுப்புகளை குக்கரில் வேக வைத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    காதலியை கொன்றது குறித்து அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்து உள்ளார். போலீசாரிடம் அவர் கூறியதாவது:-

    எனக்கு சொந்த ஊர் போரி விலி ஆகும். 10 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தை இறந்து விட்டார். தாயும் இப்போது இல்லை. நான் கோரே பகுதியில் பால் பண்ணை வைத்து இருந்தேன். பல ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறை அதிகாரிகள் எனது பண்ணையை அகற்றி விட்டனர்.

    இதனால் போரி விலி மேற்கு பகுதியில் உள்ள ரேஷன்கடையில் வேலை பார்த்தேன். அந்த சமயம் நியூமும்பை வாஷி பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கு செல்வேன். 2010-ம்ஆண்டு மார்க்கெட்டில் அகமத் நகரை சேர்ந்த சரஸ்வதி வைத்யாவை பார்த்தேன். அவர் என்னிடம் தான் ஒரு அனாதை என்று கூறினார். இதனால் அவர் மேல் எனக்கு இரக்கம் ஏற்பட்டது. நானும் பெற்றோரை இழந்து தவித்ததால் சரஸ்வதி வைத்யாவை வீட்டில் வேலைக்கு உதவிக்காக அழைத்துச்சென்றேன்.

    நான் அவளை ஒரு மகள் போல பார்த்துக்கொண்டேன். நாளடைவில் அவள் என்னை காதலிக்க தொடங்கினாள். பின்னர் எங்களுக்குள் காதல் வளர்ந்தது. இதனால் கணவன்- மனைவி போல வாழ ஆசைப்பட்டு கடந்த 5 ஆண்டுக்கு முன்பு மீரா ரோட்டில் உள்ள கீதா அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினோம். 2 ஆண்டுகள் கழித்து அதே கட்டிடத்தில் 7- வது மாடியில் உள்ள வீட்டில் குடிபெயர்ந்தோம்.

    தாலிகட்டாமல் வாழ்ந்தாலும் எங்களது வாழ்க்கை இனிமையாக சென்றது. இந்த நிலையில் தான் எனக்கு வேலைபறிபோனது. வருமானத்துக்கும் கஷ்டப்பட்டோம். அப்போது தான் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் நான் நிம்மதி இழந்தேன். இதனால் அவளை விட்டு வைத்தால் நன்றாக இருக்காது என நினைத்தேன். கடந்த 4-ந்தேதி எங்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. உடனே நான் அவளை அடித்து உதைத்தேன். இதில் அவள் இறந்து விட்டாள்.

    பயந்து போன நான் என்ன செய்வது என தெரியாமல் விழித்தேன். அப்போது தான் டெல்லியில் காதலன் ஒருவர் காதலி ஷரத்தா வாக்கரை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்தது நினைவுக்கு வந்தது.நாமும் அதேபோல செய்தால் என்ன? என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. இதற்காக மரம் அறுக்கும் ரம்பம் மற்றும் கத்தியை வாங்கி வந்தேன்.

    சரஸ்வதி உடலை முதலில் 3 துண்டுகளாக வெட்டினேன். இதனால் வீடு முழுவதும் ரத்தம் வழிந்தது. அந்த ரத்தத்தை வாளியில் தண்ணீர் எடுத்து கழுவினேன்.

    உடல் உறுப்புகளை ரம்பம், கத்தியால் சிறிது சிறிதாக வெட்டி குக்கரில் வேக வைத்தேன்.அதனை வெந்நீரில் கழுவினேன். எங்கள் குடியிருப்புக்கு பக்கத்தில் தான் ரெயில்வே தண்டவாளம் உள்ளது.அங்கு எப்போதும் நாய்கள் நிறைய இருப்பதை பார்த்து இருக்கிறேன்.குக்கரில் வேக வைத்த உறுப்புகளை எடுத்துசென்று அந்த நாய்களுக்கு உணவாக போட்டேன். சம்பவத்தன்றும் நான் இதற்காக வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்தேன்.

    அந்த சமயம் அடுக்குமாடி குடியிருப்பு நுழைவுவாயிலில் நின்று கொண்டிருந்த போலீசார் என்னை கைது செய்து விட்டனர். அவர்களிடம் சரஸ்வதி விஷம் குடித்து விட்டு தற்கொலை செய்தாக கூறினேன். போலீசுக்கு பயந்து போய் தான் இதனை வெளியில் சொல்லாமல் அவள் உடலை துண்டு துண்டாக வெட்டினேன் என சொன்னேன். ஆனால் இதனை போலீசார் நம்பவில்லை. பின்னர் நான் சரஸ்வதியை கொன்றதை ஒப்புக்கொண்டேன்.

    இவ்வாறு மனோஜ் சனோ தனது வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் மனோஜ் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. தனக்கு எய்ட்ஸ் இருந்ததால் அதன் பாதிப்பு சரஸ்வதிக்கும் இருக்கும் என்றும் ஒருவேளை தான் இறந்து விட்டால் அவளுக்கு ஆதரவாக யார் இருப்பார்கள்? எனக்கருதியும் இந்த கொடூர கொலையை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் காதலி நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை தீர்த்துக்கட்டி இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. இப்படி பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    கைதான மனோஜ் சனோவை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். அவரை 16-ந்தேதி வரை போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த விசாரணையின் போது கொலைக்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியவரும்

    கொலையுண்ட சரஸ்வதியின் உடலை 20 துண்டுகளாக மனோஜ் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பாதி உடல் பாகங்களை தான் போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதனை போர்வை மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி போலீசார் எடுத்து சென்று ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஒரு சில பாகங்களை நாய்களுக்கு மனோஜ் உணவாக போட்டு விட்டதால் மற்ற பாகங்கள் என்ன ஆனது என தெரியவில்லை. அதனை கழிவறைக்குள் வீசி இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அந்த பாகங்களை தேடி கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    ×