என் மலர்
மகாராஷ்டிரா
- மிரா பயந்தர் மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் சில ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றியதாக கூறப்படுகிறது.
- மழை காலத்தின்போது வீடுகளில் இருந்து மக்களை ஏன் வெளியேற்றுகிறீர்கள் என மாநகராட்சி அதிகாரிகளிடம் தட்டிக் கேட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் மிரா பயந்தர் தொகுதியின் சுயேட்சை எம்.எல்.ஏ.வாக கீதா ஜெயின் உள்ளார். முன்னாள் பாரதிய ஜனதா மேயரான இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது சிவசேனா- பா.ஜனதா கூட்டணி ஆதரவு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் மிரா பயந்தர் மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் சில ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ.விடம் முறையிட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற கீதா ஜெயின் உரிய நோட்டீஸ் கொடுக்காமல் மழை காலத்தின்போது வீடுகளில் இருந்து மக்களை ஏன் வெளியேற்றுகிறீர்கள் என மாநகராட்சி அதிகாரிகளிடம் தட்டிக் கேட்டுள்ளார்.
அப்போது அதிகாரி ஒருவர் சிரித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசம் அடைந்த கீதா ஜெயின் பொதுமக்கள் முன்னிலையிலேயே அந்த அதிகாரியை கன்னத்தில் அறைந்தார்.
இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- முன்னாள் மாணவர் வழங்கிய நன்கொடைகளிலேயே மிகப்பெரிய நன்கொடை தொகை இதுதான்.
- தனது வாழ்க்கை பயணத்திற்கு மும்பை ஐஐடி அடித்தளம் அமைத்ததாக நந்தன் நிலேகனி தெரிவித்துள்ளார்.
பெங்களூரூவை தலைமையிடமாக கொண்ட பிரபல இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், இன்ஃபோஸிஸ். இது 1981ம் வருடம் 7 பொறியாளர்களால் உருவாக்கப்பட்டது. அந்த 7 பேர்களில் ஒருவரான அதன் இணை நிறுவனர், நந்தன் நிலேகனி, தான் உயர்கல்வி பயின்ற நிறுவனமான மும்பை இந்திய தொழில்நுட்ப கழகத்துடன் (IIT-Mumbai) தனக்குள்ள 50 ஆண்டுகால தொடர்பை குறிக்கும் வகையில் அந்நிறுவனத்திற்கு ரூ.315 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார்.
அவர் இக்கல்வி நிறுவனத்தில் 1973ம் ஆண்டு மின்பொறியியல் துறையில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலேகனி அளித்துள்ள நன்கொடையானது உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை வளர்ப்பதற்கும், பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ந்து வரும் பகுதிகளில் ஆராய்ச்சிகளைத் தூண்டும் நோக்கத்துடனும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே ஒரு முன்னாள் மாணவர், தான் படித்த கல்வி நிறுவனத்திற்கு வழங்கிய நன்கொடைகளிலேயே மிகப்பெரிய நன்கொடை தொகை இதுதான்.
இதுபற்றி நந்தன் நிலேகனி கூறும்போது, "மும்பை இந்திய தொழில்நுட்ப கழகம் எனது வாழ்க்கையில் ஒரு அடித்தளம் அமைத்து கொடுத்தது. எனது வாழ்வின் வளர்ச்சிக்கான ஆண்டுகளை வடிவமைத்து, எனது வாழ்க்கை பயணத்திற்கு அடித்தளம் அமைத்தது. இந்த மதிப்பிற்குரிய நிறுவனத்துடனான எனது 50 ஆண்டுகால தொடர்பை நான் கொண்டாடும் போது, எதிர்காலத்தில் அது முன்னோக்கிச் செல்வதற்கு எனது பங்களிப்பை கொடுக்க நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். இந்த நன்கொடை வெறும் நிதி பங்களிப்பு அல்ல; அதை விட அதிகம். இது எனக்கு நிறைய வழங்கிய இடத்திற்கு நான் அளிக்கும் ஒரு பதில் மரியாதை. மேலும், நாளை நம் உலகத்தை வடிவமைக்க போகும் மாணவர்களுக்கான ஒரு அர்ப்பணிப்பு" என கூறியிருக்கிறார்.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நிலேகனி மற்றும் மும்பை இந்திய தொழில்நுட்ப கழகத்தின் இயக்குனர் சுபாசிஸ் சவுத்ரி ஆகிய இருவரும் இன்று பெங்களூருவில் கையெழுத்திட்டனர்.
"இந்த வரலாற்று சிறப்புமிக்க நன்கொடை, மும்பை இந்திய தொழில்நுட்ப கழகத்தை உலகளாவிய தலைமைத்துவ பாதையில் கொண்டு செல்லும். புகழ்பெற்ற எங்களின் முன்னாள் மாணவர் நந்தன் நிலேகனி தொடர்ந்து இந்த கல்வி நிறுவனத்திற்கு அளித்து வரும் முன்னுதாரணமான பங்களிப்புகள் எங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நன்கொடையானது மும்பை இந்திய தொழில்நுட்ப கழகத்தின் வளர்ச்சியை நிச்சயமாக அதிகப்படுத்தும். மேலும் உலகளாவிய தலைமைக்கான பாதையில் வழிநடத்தும்" என்று சவுத்ரி கூறியிருக்கிறார்.
- சாக்கிநாகா சத் நகர் என்ற பகுதியில் வந்த போது ஓடும் ஆட்டோவில் இருவருக்கும் இடையே திடீர் வாக்கு வாதம் ஏற்பட்டது.
- இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு வந்தனர்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சாக்கிநாகா சண்டி விலி பகுதியை சேர்ந்தவர் தீபக்போர்ஸ் (வயது 33) லாரி டிரைவராக இருந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பஞ்ச்சீலா ஜாமீதர் (30) என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இது காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இருவரும் ஒரு ஆட்டோவில் காட்கோபர் என்ற இடத்துக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். சாக்கிநாகா சத் நகர் என்ற பகுதியில் வந்த போது ஓடும் ஆட்டோவில் இருவருக்கும் இடையே திடீர் வாக்கு வாதம் ஏற்பட்டது. இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு வந்தனர். வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த தீபக் போர்ஸ் தான் வைத்து இருந்த கத்தியை எடுத்து காதலி என்று கூட பார்க்காமல் பஞ்ச்சீலா கழுத்தை ஆட்டை அறுப்பது போல அறுத்தார்.
இதில் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்ட நிலையில் அவர் அலறியவாறு ஆட்டோவில் இருந்து கீழே குதித்தார். அவர் ரத்த வெள்ளத்தில் ரோட்டோரம் விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது பற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசாரும் அங்கு விரைந்து வந்தனர்.
இதனால் பயந்து போன தீபக் போர்சும் அதே கத்தியால் தன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். போலீசாரிடம் இருந்து அவர் தப்பிக்கவும் முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த பஞ்ச்சீலா மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காயம் அடைந்த தீபக் போர்ஸ் ஆகியோரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பஞ்ச்சீலா பரிதாபமாக இறந்தார். தீபக்கிற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் ஏன்? இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார் என தெரியவில்லை.
- கடந்த சில ஆண்டுகளாக எந்த இளம் வீரரையும் கேப்டனாக செயலாற்றும் அளவிற்கு உருவாக்கவில்லை.
- ஐ.பி.எல். மூலமாகவும், தொலைக்காட்சி உரிமம் மூலமாகவும் கோடிகளை குவிப்பது மட்டுமே சாதனையல்ல.
மும்பை:
லண்டன் ஓவல் மைதானத்தில் சமீபத்தில் நடந்த ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை இழந்தது. இந்த தோல்வியால் கேப்டன் ரோகித் சர்மா கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.
அவரது கிரிக்கெட் வாழ்க்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ரோகித் சர்மாவுக்கு பிறகு அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை.
இந்நிலையில் எதிர்கால கேப்டனை உருவாக்குவதில் தேர்வுகுழு உறுப்பினர்களுக்கு தொலைநோக்கு பார்வையில்லை என்று முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான திலீப் வெங்சர்க்கார் கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
கடந்த 6 முதல் 7 ஆண்டுகளாக நான் பார்த்த சில தேர்வாளர்களுக்கு தொலைநோக்கு பார்வையோ, விளையாட்டை பற்றிய ஆழமான அறிவோ அல்லது கிரிக்கெட் உணர்வோ இல்லை. 2021-ம் ஆண்டு பெரும்பாலான சீனியர் வீரர்கள் இங்கிலாந்தில் ஆடியபோது இலங்கை சுற்றுப்பயணத்தில் ஷிகர் தவானை கேப்டனாக நியமித்தனர்.
இது போன்ற தொடர்களில் தான் எதிர்கால கேப்டனை உருவாக்க முடியும். அதுதான் சிறந்த வழி. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எந்த இளம் வீரரையும் கேப்டனாக செயலாற்றும் அளவிற்கு உருவாக்கவில்லை.
ஐ.பி.எல். போட்டியை நடத்தினால் மட்டும் போதாது. மாற்று வீரர்கள் யார் தயாராக இருக்கிறார்கள்? ஐ.பி.எல். மூலமாகவும், தொலைக்காட்சி உரிமம் மூலமாகவும் கோடிகளை குவிப்பது மட்டுமே சாதனையல்ல.
இவ்வாறு வெங்சர்க்கார் கூறியுள்ளார்.
- அவுரங்கசீப்பை முகலாய பேரரசராக இந்திய முஸ்லிம்கள் அங்கீகரிக்கவில்லை என்றார்.
- மகாராஷ்டிர துணை முதல் மந்திரி பட்னாவிசின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது.
மும்பை:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நிறைவடைந்து 9 ஆண்டுகள் ஆகியுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் அகோலா நகரில் பா.ஜ.க. சார்பில் பொது பேரணி ஒன்று நடைபெற்றது. இதில் துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், நம்முடைய அரசர் சத்ரபதி சிவாஜி மகாராஜா மட்டுமே. நமக்கு மற்றொரு அரசர் கிடையாது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் அவுரங்கசீப் வழி வந்தவர்கள் அல்ல. அவுரங்கசீப் மற்றும் அவரது வழித்தோன்றல்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் ஆவர்.
இந்த நாட்டில் உள்ள, தேசிய கருத்துகளை கொண்டுள்ள ஒரு முஸ்லிம் ஒருபோதும் அவுரங்கசீப்பை ஏற்றுக்கொள்வதில்லை. அவர் சத்ரபதி சிவாஜி மகாராஜாவை மட்டுமே மதிப்பார் என தெரிவித்தார். துணை முதல் மந்திரியின் இந்தக் கூற்று அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
- மும்பையில் இருந்தாலும் ஒருமுறைகூட லோனாவாலாவுக்கு செல்லவில்லை.
- கொலை வழக்கில் இருந்து புத்திசாலித்தனமாக தப்பிவிட்டதாக அவினாஷ் பவார் நினைத்திருந்தார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள லோனாவாலா பகுதியில் கடந்த 1993ம் ஆண்டு ஒரு வீட்டில் கொலை-கொள்ளை நடந்தது. 55 வயது நபர் மற்றும் அவரது மனைவியை கொலை செய்துவிட்டு அவரது வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவினாஷ் பவார் (வயது 19) என்ற நபர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர். ஆனால் அவரோ போலீசின் கண்களில் சிக்கவில்லை.
வெளியூர் சென்று பெயரை மாற்றி தன்னைப்பற்றிய ரகசியங்களை மறைத்து வைத்திருந்த அவர், 30 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது வாயாலேயே உளறிக்கொட்டி போலீசில் சிக்கியிருக்கிறார்.
லோனாவாலாவில் கொள்ளையடித்த பின்னர் டெல்லிக்கு தப்பிச் சென்ற அவினாஷ் பவார், அங்கிருந்து அவுரங்காபாத்துக்கு சென்றுள்ளார். அங்கு பெயரை மாற்றி அமித் பவார் என்ற பெயரில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றுள்ளார். அங்கிருந்து பிம்ப்ரி-சின்ச்வாட் மற்றும் அகமதுநகர் சென்ற அவர், கடைசியாக மும்பை வந்து விக்ரோலியில் செட்டில் ஆகியுள்ளார். திருமணம் செய்து அவரது மனைவியை அரசியலில் ஈடுபடுத்தி சிறந்த அரசியல் வாழ்க்கையையும் உறுதி செய்திருக்கிறார்.
மும்பையில் இருந்தாலும் ஒருமுறைகூட லோனாவாலாவுக்கு செல்லவில்லை. தன் தாயாரையோ, மனைவியின் பெற்றோரையோ சந்திக்கவில்லை. இதனால் கொலை வழக்கில் இருந்து புத்திசாலித்தனமாக தப்பிவிட்டதாக அவினாஷ் பவார் நினைத்திருந்தார்.
ஆனால் அவரது கடந்த சில தினங்களுக்கு முன், தனது பகுதியைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து மது அருந்தியபோது, போதையில் பழைய சம்பவத்தை உளவிட்டார். 30 ஆண்டுகளுக்கு முன்பு கொலை கொள்ளையில் ஈடுபட்டதாக அவர் தெரிவிக்க.. இந்த விஷயம் காவல்துறையின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து அவரை கண்காணித்த மும்பை குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.
இதுபற்றி மும்பை குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையர் ராஜ் திலக் ரோஷன் கூறுகையில், "30 ஆண்டுகளுக்கு முன்பு லோனாவாலாவில் நடந்த இரட்டைக் கொலையில் அவினாஷ் பவார் குற்றவாளி. கொலை செய்யப்பட்டவர்கள் வயதான தம்பதிகள். அவர்களின் வீட்டிற்கு அருகில் அவினாஷ் பவார் கடை வைத்திருந்ததால் அவர்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்தார். தன்னுடன் மேலும் இரு நபர்களை சேர்த்து, அந்த வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டு, கொள்ளை சம்பவத்தின்போது தம்பதியரை கொன்றுள்ளார். மற்ற இரண்டு குற்றவாளிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், பவார் தப்பி ஓடி தனது பெயரை மாற்றிக் கொண்டார். தற்போது விக்ரோலியில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்" என தெரிவித்தார்.
- பா.ஜனதா மூன்று முக்கிய பணிகளை வரையறுத்துள்ளது.
- இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது.
நாக்பூர் :
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேசியதாவது:-
பா.ஜனதா மூன்று முக்கிய பணிகளை வரையறுத்துள்ளது. அதில் முதலாவது தேசியவாதம். இது எங்கள் கட்சியின் ஆன்மா. நாட்டின் எல்லை பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் நாடு பொருளாதார ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வலுபெற வேண்டும். இரண்டாவது நல்லாட்சி மற்றும் வளர்ச்சியுடன் முன்னேறி சுயசார்புடைய நாடாக மாற வேண்டும் என்பது பா.ஜனதாவின் விருப்பம்.
அதேபோல சமூக, பொருளாதார மற்றும் கல்வியில் பின்தங்கிய மற்றும் தலித்துகளுக்கு சேவை செய்வதே கட்சியின் 3-வது நோக்கம்.இந்த நாடு தனி நபருக்கோ, ஒரு சமூகத்திற்கோ, ஒரு மதத்திற்கோ சொந்தமானது அல்ல. இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது. நீதித்துறை, நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் ஊடகம் ஆகிய 4 தூண்களில் நிற்கும் ஜனநாயகத்தின் தாய் நாங்கள்.
எங்களுக்கு அரசியலமைப்பு என்பது பகவத் கீதை, பைபிள் மற்றும் குரான் போன்றதுபோன்றது. அதன் கொள்கைப்படி நமது சமுதாயத்தை வடிவமைத்தால், அனைவரும் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்க முடியும். ஒவ்வொரு தரப்பினரையும் மகிழ்ச்சியடைய செய்ய நாங்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த 3-ந் தேதி வரை தொடர்ச்சியாக 127 மணி நேரம் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
- நேபாள நாட்டை சேர்ந்த பந்தனா என்பவர் 126 மணி நேரம் தொடர்ச்சியாக நடனமாடியதே ஸ்ருஷ்டி முறியடித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஸ்ருஷ்டி சுதிர் ஜக்தீப். இவர் தொடர்ச்சியாக பல மணிநேரம் நடனமாடி கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்ச்சியில் ஈடுபட்டார். அதன்படி கடந்த மாதம் 29-ந் தேதி இந்த முயற்சியை தொடங்கிய அவர் கடந்த 3-ந் தேதி வரை தொடர்ச்சியாக 127 மணி நேரம் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு நேபாள நாட்டை சேர்ந்த பந்தனா என்பவர் 126 மணி நேரம் தொடர்ச்சியாக நடனமாடியதே கின்னஸ் சாதனையாக இருந்த நிலையில், அதனை ஸ்ருஷ்டி முறியடித்துள்ளார்.
இந்திய கலாசாரத்தை உலகிற்கு எடுத்து காட்டும் வகையில் கதக் நடன முறையை பின்பற்றி அவர் நடனமாடி சாதனை படைத்துள்ளார். இதற்காக தினமும் 4 மணி நேரம் தியான பயிற்சி, 3 மணி நேரம் உடற்பயிற்சி மற்றும் 6 மணி நேரம் நடன பயிற்சி மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
- இந்த இனக்கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
- மணிப்பூரில் தற்போது இரட்டை எஞ்சின் அரசு உள்ளது.
மும்பை :
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்-மந்திரி பைரன் சிங் தலைமையில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு பெரும்பான்மையினராக உள்ள மெய்தி சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதற்கு நாகா, குகி ஆகிய பழங்குடியின சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு வன்முறை தொடர்ந்து வருகிறது.
இதுவரை இந்த இனக்கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ஏராளமான வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இணைய சேவையும் முடக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் இம்பால் நகரில் உள்ள மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி ராஜ்குமார் ரஞ்சன் சிங் வீட்டை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலவர கும்பல் சூழ்ந்து தீ வைத்து எரித்தது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் மணிப்பூர் கலவரத்தில் பிரதமர் மோடி மவுனம் காத்து வருவதை மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்து உள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'சாம்னா'வின் தலையங்கத்தில் கூறி இருப்பதாவது:-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதலில் இந்துக்கள் இறந்துகொண்டு இருக்கும் வேளையில் இந்துத்வா என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சக்திவாய்ந்தவர்கள் கண்களை மூடிக்கொண்டு இருக்கின்றனர். ஏன் மணிப்பூரை சேர்ந்த இந்துக்கள் இந்துக்கள் இல்லையா?
ஒரே கட்சி மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தால் தான், ஆட்சி மற்றும் நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்த முடியும் என்று பா.ஜனதா கூறி வருகிறது. மணிப்பூரில் தற்போது இரட்டை எஞ்சின் அரசு உள்ளது.
அப்படியானால் மணிப்பூரில் ஏன் இந்த இரட்டை என்ஜின் அரசு தோல்வியடைந்தது?, மாநிலத்தில் அமைதியை இன்னும் நிலைநாட்ட முடியாததற்கு காரணம் என்ன? இந்த பயங்கரமான பிரச்சினை பற்றி பிரதமர் நரேந்திர மோடி ஒருவார்த்தை கூட பேச மறுப்பதற்கான காரணத்தை தெரிந்துகொள்ள வேண்டும். குகி பயங்கரவாதிகளுக்கு எங்கிருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கிடைக்கிறது என்பதை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- அஜித்பவாருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படவில்லை.
- அஜித்பவார் வருத்தம் அடைந்துள்ளதாக தகவல்கள் பரவின.
மும்பை :
தேசியவாத காங்கிரசில் சுப்ரியா சுலேக்கு தேசிய செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இருப்பினும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக உள்ள அஜித்பவாருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படவில்லை. இதற்கு அஜித்பவார் வருத்தம் அடைந்துள்ளதாக தகவல்கள் பரவின.
இதுபற்றி மும்பையில் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அளித்த சுப்ரியா சுலே எம்.பி., "யார்- யாருக்கு என்ன பொறுப்பு வழங்க வேண்டும் என்பது எங்களது உள்கட்சி விவகாரம்.
அஜித்பவார் மாநில அரசியலின் அமிதாப் பச்சன் போன்றவர். அஜித்பவார் செல்லும் இடங்களில் ஆட்டோகிராப் வாங்கவும், செல்பி எடுக்கவும் பலர் விரும்புகிறார்கள் " என்று குறிப்பிட்டார்.
- நமது நாட்டின் ஜனநாயக வரலாறை நாம் மறக்க கூடாது.
- நாட்டின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது.
மும்பை :
மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி நேற்று மராட்டிய மாநிலம் பண்டாராவில் நடந்த பிரதமர் மோடி அரசின் 9 ஆண்டு கால அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். விழாவில் அவர், பல ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீகாந்த் சிச்கர் என்ற தலைவர் அவரை காங்கிரசில் சேருமாறு அறிவுரை கூறியதை நிராகரித்தது குறித்து நினைவு கூர்ந்தார்.
இது தொடர்பாக நிதின் கட்காரி பேசியதாவது:-
ஸ்ரீகாந்த் சிச்கர் ஒருமுறை என்னிடம் 'நீ நல்ல கட்சி தொண்டன், தலைவன். நீ காங்கிரசில் சேர்ந்தால் உனக்கு நல்ல எதிர்காலம் உள்ளது' என்றார். நான் அவரிடம், நான் கிணற்றில் குதித்தாலும் குதிப்பேன், காங்கிரசில் சேரமாட்டேன் என்றேன். ஏனெனில் எனக்கு பா.ஜனதா மற்றும் அதன் சித்தாந்தத்தில் அதிக நம்பிக்கை இருந்தது. எனவே அதற்காக தொடந்து உழைப்பேன்.
காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டது முதல் அந்த கட்சி பல முறை உடைந்து உள்ளது. நமது நாட்டின் ஜனநாயக வரலாறை நாம் மறக்க கூடாது. கடந்த காலம் மூலம் நாம் எதிர்காலத்துக்கு கற்றுக்கொள்ள வேண்டும். தனது 60 ஆண்டுகால ஆட்சியின் போதும் வறுமையை ஒழிப்போம் என காங்கிரஸ் முழங்கி வந்தது. ஆனால் அவர்கள் தங்கள் சொந்த லாபத்துக்காக கல்வி நிறுவனங்களை தான் திறந்தார்கள். பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் நாடு பொருளாதாரத்தில் சிறந்த நிலையை அடைந்து உள்ளது. நாட்டின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது. காங்கிரஸ் 60 ஆண்டுகளில் செய்ததைவிட 2 மடங்கு அதிகமான நலத்திட்ட பணிகளை 9 ஆண்டில் பா.ஜனதா அரசு செய்து உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- விபத்தில் சம்பவ இடத்திலேயே அக்பர் கான் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
- சிறுவனின் தந்தை வங்கியில் மூத்த அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
மும்பை:
மும்பை நாக்பாடாவை சேர்ந்தவர் அக்பர் கான் (வயது47). கிராண்ட் ரோடு கிழக்கு பகுதியை சேர்ந்த பெண் கிரண் (35). இருவரும் காதலர்கள் என கூறப்படுகிறது. அக்பர் கான் சம்பவத்தன்று இரவு தனது பிறந்தநாளை கிரணுடன் கொண்டாட மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். இரவு முழுவதும் ஓட்டலில் விருந்து கொண்டாடி விட்டு அதிகாலை 5 மணி அளவில் கிர்காவ் கடற்கரை அருகே மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
அப்போது வலது பக்கமாக திரும்பிய போது வேகமாக வந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட காதல் ஜோடி 2 பேரும் பலத்த காயமடைந்தனர். விபத்தில் சம்பவ இடத்திலேயே அக்பர் கான் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அவரது காதலி கிரண் படுகாயமடைந்தார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரணை மீட்டு ஜே.ஜே. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிரண் உயிரிழந்தார்.
இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் பரேல் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய 12-ம் வகுப்பு மாணவர் என்று தெரியவந்தது. அவர் தனது நண்பருடன் காரில் சென்றுள்ளார். வீட்டில் நின்ற காரை பெற்றோரிடம் தெரிவிக்காமல் ஓட்டி சென்றபோது விபத்து நடந்து உள்ளது.
சிறுவனின் தந்தை வங்கியில் மூத்த அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






