என் மலர்
மகாராஷ்டிரா
- நதானி ஹைட்ஸ் சொசைட்டி எனும் குடியிருப்பு காலனியில் விலங்குகளை வெட்டுவதற்கு தடை கோரி வழக்கு
- உரிமம் வழங்கப்பட்டிருந்தால் மட்டுமே அந்த குடியிருப்பில் விலங்குகள் வெட்டப்படுவதை அனுமதிக்க வேண்டும்
இன்று பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையின்போது தெற்கு மும்பையில் உள்ள ஒரு குடியிருப்பு காலனியில், சட்டவிரோதமாக விலங்குகள் வெட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மும்பை மாநகராட்சி (BMC) அமைப்பிற்கு மும்பை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருக்கிறது.
நதானி ஹைட்ஸ் சொசைட்டி எனும் குடியிருப்பு காலனியில் விலங்குகளை வெட்டுவதை முழுமையாக தடை செய்யக்கோரி, அந்த குடியிருப்பு சங்கத்தை சேர்ந்த ஹரேஷ் ஜெயின் என்பவர் தாக்கல் செய்த மனுவை பெஞ்ச் விசாரித்தது.
வழக்கமான நீதிமன்ற நேரத்திற்குப் பிறகு நடைபெற்ற சிறப்பு அவசர விசாரணையில், நீதிபதிகள் ஜி.எஸ். குல்கர்னி மற்றும் ஜிதேந்திர ஜெயின் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், அனுமதி வழங்க வேண்டிய மாநகராட்சி அமைப்பினால் உரிமம் வழங்கப்பட்டிருந்தால் மட்டுமே அந்த குடியிருப்பில் விலங்குகள் வெட்டப்படுவதை அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.
அந்த இடத்தில் கால்நடைகளை வெட்டுவதற்கு மாநகராட்சி உரிமம் வழங்கியிருக்காத பட்சத்தில், மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினரின் உதவியுடன் கால்நடைகளை வெட்டுவதைத் தடுக்க சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.
பிருஹன் மும்பை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோயல் கார்லோஸ், விலங்குகளை வெட்டுவதற்கு முழுமையான தடைவிதிப்பது முடியாது என்று வாதாடினார். மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அந்த சங்க வளாகத்தை ஆய்வு செய்வார்கள் என்றும், ஏதேனும் விதிமீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கார்லோஸ் உறுதியளித்தார்.
பெஞ்ச் தனது உத்தரவில், ஒருவேளை ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகுந்த உதவியை வழங்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.
- 2022 மற்றும் 2021 ஆம் ஆண்டில், ஏரிகளில் முறையே 9.04 சதவீதம் மற்றும் 16.44 சதவீதம் நீர் இருப்பு இருந்தது.
- தண்ணீரைச் சேமிக்கவும், அதை நியாயமாகப் பயன்படுத்தவும் குடிமக்களுக்கு வேண்டுகோள்.
மும்பையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால், மும்பைக்கு தண்ணீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால், ஜூலை 1ம் தேதி முதல் 10 சதவீதம் குடிநீர் விநியோகத்தை குறைக்க நகர சிவில் அமைப்பு முடிவு செய்துள்ளது.
மும்பை, தானே மற்றும் நாசிக் மாவட்டங்களில் அமைந்துள்ள பாட்சா, அப்பர் வைதர்ணா, மிடில் வைதர்ணா, தன்சா, மோடக் சாகர், விஹார் மற்றும் துளசி ஆகிய ஏழு நீர்த்தேக்கங்களிலிருந்து 3,800 MLD (ஒரு நாளைக்கு மில்லியன் லிட்டர்) தண்ணீரை மும்பை பெறுகிறது.
இன்று காலை 6 மணி நிலவரப்படி ஏழு ஏரிகளில் 7.26 சதவீதம் இருப்பு இருந்ததாக குடிமை அமைப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.
அறிக்கையின்படி, 2022 மற்றும் 2021 ஆம் ஆண்டில், ஏரிகளில் முறையே 9.04 சதவீதம் மற்றும் 16.44 சதவீதம் நீர் இருப்பு இருந்தது.
இதுகுறித்து பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) கமிஷனர் இக்பால் சிங் சாஹல் கூறுகையில், " மும்பையில் ஜூலை 1ம் தேதி முதல் 10 சதவீதம் குடிநீர் விநியோகத்தை குறைக்கும் நடவடிக்கையை அமல்படுத்த பிஎம்சி முடிவு செய்துள்ளது. நகரத்திற்கு தண்ணீர் வழங்கும் ஏரிகளில் ஏழு சதவீத நீர் இருப்பு உள்ளது.
இதனால், தண்ணீரைச் சேமிக்கவும், அதை நியாயமாகப் பயன்படுத்தவும் குடிமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது" என்றார்.
- அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் சாந்தனுவை சுற்றி வளைத்து பிடித்தனர்.
- படுகாயம் அடைந்த பிரீத்திக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்தவர் பிரீத்தி ராம்சந்திரா. கல்லூரி மாணவியான இவர் நேற்று தனது உறவினர் ஒருவருடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். பெருங்கேட் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இவர்களை அதே பகுதியை சேர்ந்த சாந்தனு லட்சுமன் ஜாதவ் (வயது 22) என்ற வாலிபர் வழிமறித்து தனது கையில் இருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் இருவரையும் தாக்கினார். இதில் பிரீத்தியுடன் வந்த வாலிபர் காயம் அடைந்தார். உடனே அவர் அங்கிருந்து தப்பி ஓடியதும், சாந்தனு, பிரீத்தியை துரத்தி சென்று சரமாரியாக வெட்டினார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் சாந்தனுவை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்தனர். படுகாயம் அடைந்த பிரீத்திக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சாந்தனு ஓட, ஓட விரட்டி பிரீத்தியை தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயனர்கள் கண்டன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- மோடி ஒட்டுமொத்த இந்தியாவையும் அவரது குடும்பமாக நினைக்கிறார்.
- எனது வாழ்க்கை திறந்த புத்தகம்.
மும்பை :
வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சி தலைவர்கள் கடந்த 23-ந் தேதி 15 கட்சி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.
பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார். எதிர்க்கட்சி தலைவர்கள் தங்கள் குடும்பங்களை காப்பாற்றவே கூட்டத்தில் கலந்து கொண்டனர் என துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விமர்சித்தார்.
இதையடுத்து உத்தவ் தாக்கரே, தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா பட்னாவிஸ், சூதாட்ட தரகர் அனில் ஜெய்சிங்லானியின் மகள் அன்ஷிகா இடையேயான வாட்ஸ்அப் உரையாடல் பற்றி பேசி இருந்தார்.
இந்தநிலையில் சந்திராப்பூரில் நடந்த மோடி அரசின் 9 ஆண்டு சாதனை நிகழ்ச்சியில் தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:-
பிரதமர் மோடியின் பணி, குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள் தங்கள் வாரிசுகளை பாதுகாக்க ஒரே கூரையின் கீழ் பாட்னாவில் வரவைத்து உள்ளது.
மோடியை அகற்ற அல்ல, தங்கள் குடும்பங்களை காக்கவே அவர்கள் ஒன்று திரண்டனர். சோனியா காந்தி, சரத்பவார், உத்தவ் தாக்கரே போன்ற தலைவர்கள் நாட்டை பற்றி கவலைப்படுவார்களா?, அல்லது தங்கள் பிள்ளைகள் பற்றி கவலைப்படுவார்களா?.
மோடி ஒட்டுமொத்த இந்தியாவையும் அவரது குடும்பமாக நினைக்கிறார். நான் யாருடைய வேலையிலும் தலையிடுவது இல்லை. ஆனால் நான் நுழைந்தால் பாதியில் விடமாட்டேன். பாட்னாவில் நடந்த கூட்டம் குடும்ப கட்சிகளுடையது என நான் கூறினேன். ஆனால் நீங்கள் (உத்தவ் தாக்கரே) எனது மனைவியை பற்றி பேசுகிறீர்கள்.
நான் கண்ணாடி வீட்டில் இல்லை. ஆனால் கண்ணாடி வீட்டில் இருப்பவர்கள் மற்றவர்களின் வீடுகளின் மேல் கல்வீசக் கூடாது. எனது வாழ்க்கை திறந்த புத்தகம். உங்களுக்கு தைரியம் இருந்தால் உங்களின் குடும்ப சொத்துகளை பொதுவெளியில் வெளியிடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- விதிவிலக்காக தெலுங்கானா மாநிலத்தில் மட்டுமே 17 சதவீதம் வழக்கு பதியப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் 1,27,178 புகாரில் 2,806 மட்டுமே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை:
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 2022 ஜனவரி முதல் 2023 மே மாதம் வரை சிறுவர் ஆபாச படங்கள், சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்கள், கற்பழிப்பு, கும்பலால் பலாத்காரம், ஆன்லைன் மோசடி போன்ற பெறப்பட்ட சைபர் குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 20,99,618 புகார்கள் பெறப்பட்டது. ஆனால் இதில் 42, 868 புகார்களுக்கு மட்டுமே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2 சதவீதமே ஆகும்.
குறிப்பாக டெல்லியில் 2,16,739 புகார்கள் பெறப்பட்டுள்ளது. ஆனால் இதில் 1.2 சதவீதமே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,27,178 புகாரில் 2,806 மட்டுமே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோல் பல்வேறு மாநிலங்களிலும் சைபர் கிரைமில் ஏராளமான புகார் வந்தாலும் 3 சதவீதத்துக்கும் குறைவாகவே வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு விதிவிலக்காக தெலுங்கானா மாநிலத்தில் மட்டுமே 17 சதவீதம் வழக்கு பதியப்பட்டுள்ளது.
சைபர் கிரைமில் ஏராளமான புகார்கள் தெரிவித்தாலும் குறைவாக வழக்குபதிவு செய்து காரணம் குறித்து மும்பை முன்னாள் போலீஸ் கமிஷன் சிவானந்தன் கூறியதாவது:-
இத்துறையில் புகார்களை இன்ஸ்பெக்டர்கள் அதற்கு மேல் உள்ள அதிகாரிகள் மட்டுமே விசாரிக்க முடிவும். ஆனால் அதற்கு போதுமான அதிகாரிகள் இல்லை.
அதே வேளையில் அனைத்து இன்ஸ்பெக்டர்களும் சைபர் குற்றங்களை விசாரணை நடத்தும் அளவுக்கு தொழில் நுட்பம் சார்ந்தவர்கள் இல்லை என்பதும் மேலும் தொழில் நுட்ப சாதனங்களும் போதிய அளவில் இல்லாததால் இந்நிலை நீடிப்பதாக அவர் தெரிவித்தார்.
- டெல்லியில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- இடைவிடாது பெய்து வரும் மழையால் பல இடங்களில் நிலச்சரிவும், மரங்கள் முறிவும் ஏற்பட்டுள்ளது.
மும்பை:
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கும். கேரளாவில் ஜூன் 1-ந்தேதியும், வடமாநிலங்களில் 12-ந் தேதியும் தொடங்குவது வழக்கம்.
இந்த ஆண்டு கேரளாவில் தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை இப்போது வடமாநிலங்களில் வெளுத்து வாங்க தொடங்கி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கொலாபா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 86 மில்லி மீட்டர் மழை பெய்தது. நேற்றும் மாநிலம் எங்கும் பல பகுதிகளில் விடிய, விடிய பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
மும்பை காட்கோபர் பகுதியில் 3 மாடி கட்டிடம் தொடர் மழையால் இடிந்து விழுந்தது. இங்குள்ள அறைகளில் சிக்கி கொண்டவர்களை தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டனர்.
இதற்கிடையே மத்திய மகாராஷ்டிராவில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் குஜராத்தின் கட்ச் பகுதியில் ஏற்பட்டுள்ள சூறாவளி சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதையடுத்து மும்பையில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பேரிடர் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் இருக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான அசாமிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அசாமின் பர்பேடா, தரங்க், துப்ரி, கோல்பாரா, காம்ரூபா, லக்கிம்பூர், நல்பாரி, உதல்குரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பெய்த மழையால் இங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மேலும் இங்குள்ள பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது. இதையடுத்து இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதங்கள் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அசாம் முதல் மந்திரி ஹிமந்த் பிஸ்வா சர்மாவுடன் டெலிபோனில் ஆலோசனை நடத்தினார். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
அசாம் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ளும் என்றும் உறுதி அளித்தார்.
இதுபோல இமாச்சலா பிரதேசம், அரியானாவிலும் கடந்த சிலநாட்களாக மழை பெய்து வருகிறது. அரியானாவின் பஞ்ச்குலா பகுதியில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் கார் ஒன்று அடித்து செல்லப்பட்டது.
அந்த காரை கிராம மக்கள் கயிறுகட்டி இழுத்து மீட்டனர். அதில் இருந்த பெண்ணும் பத்திரமாக மீட்கப்பட்டார்.
தலைநகர் டெல்லியிலும் நேற்று பலத்த மழை பெய்தது. இன்றும், நாளையும் மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதையடுத்து டெல்லியில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்திலும் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. நைனி டால், பாகேஷ்வர், டெக்ராடூன், தெஹ்ரி, சம்பாவத் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இப்பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இடைவிடாது பெய்து வரும் மழையால் பல இடங்களில் நிலச்சரிவும், மரங்கள் முறிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் சார்தாம் செல்லும் யாத்ரீகர்கள் பயணத்தை ஒத்திவைக்குமாறு மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங்சாமி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அவர் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று அதிகாரிகளிடம் நிலவரங்களை கேட்டறிந்தார்.
இதற்கிடையே ருத்திர பிரயாக் மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50 வயது நபர் பரிதாபமாக இறந்தார். இதுபோல உத்திரகாசி மாவட்டத்தில் நாற்றுநடும் பணியில் ஈடுபட்டிருந்த வாலிபரும் மழைக்கு பலியானார். இதுதவிர மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
- செப்டம்பர் 30-ந் தேதி கடைசிநாள் என்பது கல்லில் எழுதப்பட்டது அல்ல.
- பொதுமக்கள் பீதியடைந்து வங்கிக்கு படையெடுக்க வேண்டாம்.
மும்பை :
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அவற்றை அச்சிடும் பணி, 2018-2019 நிதி ஆண்டிலேயே நிறுத்தப்பட்டது. அதனால், கடந்த மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த நோட்டுகளில் 2,000 ரூபாய் நோட்டுகள், வெறும் 10.8 சதவீதமாக இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.3 லட்சத்து 62 ஆயிரம் கோடி ஆகும்.
இதற்கிடையே, 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.
கடந்த 8-ந் தேதி நிருபர்களுக்கு பேட்டி அளித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், 50 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பி விட்டதாக கூறினார்.
இந்நிலையில், நேற்று ஒரு செய்தி நிறுவனத்துக்கு சக்திகாந்த தாஸ் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
கடந்த வார மத்தியில் இருந்த நிலவரப்படி, ரூ.2 லட்சத்து 41 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பி விட்டன. இவை மொத்த 2,000 ரூபாய் நோட்டுகளில், மூன்றில் இரண்டு பங்கை விட அதிகம். இவற்றில் 85 சதவீத நோட்டுகள் டெபாசிட்டாகவும், மற்றவை வேறு நோட்டுகளாக மாற்றிய வகையிலும் வந்துள்ளன.
செப்டம்பர் 30-ந் தேதி கடைசிநாள் என்பது கல்லில் எழுதப்பட்டது அல்ல. எனவே, பொதுமக்கள் பீதியடைந்து வங்கிக்கு படையெடுக்க வேண்டாம்.
நோட்டு வாபஸ் நடவடிக்கையால், நிதி ஸ்திரத்தன்மைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. பொதுமக்களின் நுகர்வு அதிகரித்து, அவர்கள் அதிக செலவு செய்ய வேண்டி இருக்கும் என்று சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. ஆனால், பொருளாதாரம் மீது எதிர்மறை தாக்கம் எதுவும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிவாஜிநகர் 90 அடி சாலை பகுதியில் 2 தொழிலாளர்கள் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுனர்.
- இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் போலீசில் புகார்.
பருவமழை தாமதமாகிய நிலையில், மும்பையில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. திடீரென பெய்த கனமழையால் சாலை எங்கும் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது.
குறிப்பாக, மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. அந்தேரி தகிசர் உள்ளிட்ட சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மூழ்கின.
இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் கோவண்டி, சிவாஜிநகர் 90 அடி சாலை பகுதியில் 2 தொழிலாளர்கள் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுனர்.
அப்போது அவர்கள் தவறி பாதாள சாக்கடைக்குள் விழுந்தனர். வெள்ளம் அவர்களை அடித்து சென்றது. அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் சாக்கடையில் விழுந்த 2 பேரையும் மீட்டு ராஜவாடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நடந்த பரிசோதனையில் 2 பேரும் ஏற்கனவே பலியானது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் தனியார் ஒப்பந்த தொழிலாளர் ராம்கிருஷ்ணா (25), சுதீர் தாஸ் (30) என்பது தெரியவந்தது.
இந்நிலையில், வடிகாலில் மூழ்கி இரண்டு தொழிலாளர்கள் இறந்த விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அளித்த புகாரின் பேரில், பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த பாதுகாப்பு உபகரணங்களும் வழங்காத தொழிலாளர் ஒப்பந்ததாரர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளதாக அதிகாரி கூறினார்.
- வயிற்றில் கை, கால்கள், பிறப்பு உறுப்பு மற்றும் சில பகுதிகள், தாடைகள் மற்றும் கை, கால்கள் ஆகியவற்றை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
- கடந்த 36 ஆண்டுகளாக தனது வயிற்றுக்குள் இரட்டை குழந்தைகளை சுமந்து கொண்டு இருப்பது தெரிய வந்தது.
நாக்பூர்:
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் சஞ்சு பகத்.
1963-ம் ஆண்டு பிறந்த இவருக்கு சிறு வயதில் இருந்தே வயிறு மிகவும் பெரிதாக காணப்பட்டது. என்றாலும் அவர் ஆரோக்கியமாகவே இருந்து வந்தார். 20 வயதாகும் வரை அவர் தனது பெரிய வயிற்றை பற்றி கவலைப்படவில்லை.
அப்பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் வேலை செய்து வந்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவரது வயிறு மேலும் மேலும் பெரிதாகி பலூன் போல காணப்பட்டது. என்றாலும் சஞ்சுபகத் தனது வீங்கிய வயிற்றை பற்றி கவலைப்படாமல் வேலையை தொடர்ந்து வந்தார்.
அவரது நண்பர்களும், அப்பகுதி மக்களும் சஞ்சுபகத்தை கர்ப்பிணி என கேலி-கிண்டல் செய்து வந்தனர். இது அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியது.
ஒரு கட்டத்தில் வயிறு வீக்கம் காரணமாக அவருக்கு சுவாச பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சுவாசிக்க முடியாமல் அவர் திணறினார். இதையடுத்து 1999-ம் ஆண்டு அவரை மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அஜய்மேத்தா, சஞ்சுபகத் கட்டியால் அவதிப்பட்டதாக கருதினார். அவரின் வயிற்றில் பெரிய கட்டி இருக்கலாம் என்று கருதிய டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.
அப்போது அவரது வயிற்றில் கை, கால்கள், பிறப்பு உறுப்பு மற்றும் சில பகுதிகள், தாடைகள் மற்றும் கை, கால்கள் ஆகியவற்றை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது 'மறைந்து போகும் இரட்டை நோய்க்குறி' என்று கருதினர். அதாவது அவரது இரட்டையர் கர்ப்ப காலத்தில் இறந்து விட்டதாக நினைத்தனர்.
ஆனால் பின்னர் நடந்த பரிசோதனை மற்றும் ஆய்வில் அவருக்கு இருக்கும் பாதிப்பு அரிதிலும் அரிய நோய் பாதிப்பான 'கருவில் கரு' என்று கண்டறியப்பட்டது. அவர் கடந்த 36 ஆண்டுகளாக தனது வயிற்றுக்குள் இரட்டை குழந்தைகளை சுமந்து கொண்டு இருப்பது தெரிய வந்தது.
இந்த வகை நோய் பாதிப்பு என்பது பிறக்காத இரட்டை குழந்தை உடலில் ஒரு ஒட்டுண்ணி போல வாழ்கிறது.
பின்னர் அந்த இரட்டை குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றினர். தனது வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட குழந்தைகளை சஞ்சு பார்க்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
- கட்சியின் நிறுவன அமைப்புக்கான தேர்தல் நடைமுறைகள் தொடங்கி உள்ளது.
- மாநில தலைவர் பதவிக்கான விருப்பத்தை அனைவரும் தெரிவிக்கலாம்.
மும்பை :
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன நாள் கூட்டம் நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் விருப்பம் இல்லை, கட்சி பணியாற்ற விரும்புவதாக கட்சியின் மூத்த தலைவர் அஜித்பவார் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் பதவிக்கு அவர் அடிபோடுவதாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் சகன் புஜ்பாலும் தனது பங்கிற்கு களத்தில் குதித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரான சகன் புஜ்பால் இதுகுறித்து நேற்று கூறியதாவது:-
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவரை தேசியவாத காங்கிரஸ் கட்சி மாநில பிரிவு தலைவர் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். நானும் மாநில பிரிவு தலைவராக பணியாற்ற விரும்புகிறேன். கட்சியில் சுனில் தத்காரே, ஜிதேந்திர அவாத், தனஞ்செய் முண்டே உள்ளிட்ட பல இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த தலைவர்கள் உள்ளனர்.
கட்சியின் நிறுவன அமைப்புக்கான தேர்தல் நடைமுறைகள் தொடங்கி உள்ளது. எனவே மாநில தலைவர் பதவிக்கான விருப்பத்தை அனைவரும் தெரிவிக்கலாம். இதில் தவறு எதுவும் இல்லை.
மராட்டிய மக்கள் தொகையில் 54 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளனர். எனவே கட்சியின் மாநில தலைவர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவராக இருந்தால் அவர்களை சென்றடைவது எளிதாக இருக்கும்.
தற்போது கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் 5 ஆண்டுகளாக பதவியில் இருக்கிறார். பா.ஜனதாவின் மாநில தலைவர்கள் சந்திரசேகர் பவன்குலே மற்றும் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் நானா படோலே ஆகியோர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள்.
கட்சி விதிகளின் படி கட்சியின் மாநில பிரிவு தலைவர் ஒரு ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவி சிறிய சமூகத்தை சேர்ந்தவருக்கு வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி 1999-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போது கட்சியின் முதல் மாநில பிரிவு தலைவராக இருந்தவர் சகன் புஜ்பால் என்பது குறிப்பிடத்தக்கது.
- தேசிய செயல் தலைவர் பதவி சுப்ரியா சுலேவுக்கு ஒதுக்கப்பட்டது.
- செயல் தலைவராக பிரபுல் படேல் நியமிக்கப்பட்டார்.
மும்பை :
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செயல் தலைவர் பதவி சமீபத்தில் கட்சி தலைவர் சரத்பவாரின் மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சுலேவுக்கு ஒதுக்கப்பட்டது. மற்றொரு செயல் தலைவராக பிரபுல் படேல் நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் கட்சியின் நிறுவன தின நிகழ்ச்சியில் மூத்த தலைவர் அஜித்பவார் "எனக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியில் விருப்பம் இல்லை. கட்சி பணி செய்யவே விரும்புகிறேன்" என்று பேசினார்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய செயல் தலைவர் சுப்ரியா சுலே கூறியதாவது:-
கட்சியில் உள்ள அதிகமான தலைவர்கள் தங்களை கட்சி பணியில் ஈடுபடுத்தி கொள்வது நல்லதுதான். கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் கட்சி அமைப்பில் பணியாற்றியவர்கள். அஜித்பவார் கட்சிபணி ஆற்றுவதாக தெரிவித்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
சேவை, கவுரவம் மற்றும் சுயமரியாதை ஆகியவை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இலக்குகள் ஆகும். ஒரு சகோதரியாக, எனது சகோதரர் அஜித்பவாரின் அனைத்து ஆசைகளும் நிறைவேற வாழ்த்துகளை கூறி கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் நிருபர்கள் அஜித்பவாருக்கு கட்சியில் மாநில அளவில் பதவி வழங்கப்படும் என்று வெளியாகும் தகவல் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "இது கட்சியின் உள் விவகாரம்" என்றார்.
அதேபோல கடந்த ஆண்டு சிவசேனாவில் அதிருப்தி அணி முயற்சி தோல்வி அடைந்திருந்தால் ஏக்நாத் ஷிண்டே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டு இருப்பார் என்று தீபக் கேசர்கர் கூறியது குறித்து கேட்டதற்கு பதில் அளித்த அவர், "அவர் (தீபக் கேசர்க்கர்) பேசுவது உண்மையாக இருந்தால், அது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது" என்றார்.
- மகாராஷ்டிர மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்
- தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக பவார் மகள் நியமிக்கப்பட்டார்
சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.-வும் மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சி தலைவராகவும் இருப்பவர் அஜித் பவார்.
மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 24-வது தொடக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:-
எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் நான் கடுமையாக நடந்து கொள்ளவில்லை என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. நான் ஒருபோதும் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட வேண்டும் என்று ஆர்வம் காட்டியது கிடையாது. ஆனால், கட்சி எம்.எல்.ஏ.க்கள் வற்புறுத்தியதால் அதை ஏற்றுக்கொண்டேன்.
கட்சி அமைப்பில் ஏதாவது ஒரு பதவியை எனக்கு ஒதுக்குங்கள். என்னிடம் ஒப்படைக்கப்படும் எந்தவொரு பொறுப்புக்கும், நியாயமாக பணியாற்றுவேன்'' என்றார்.
சமீபத்தில் சரத் பவார், தனது மகளும் மக்களவை எம்.பி.யுமான சுப்ரியா சுலேவை செயல் தலைவராக நியமனம் செய்தார். பிரபுல் பட்டேலை மற்ற மாநிலங்களுக்கான செயல் தலைவராக நியமித்திருந்தார்.
இந்த நிலையில் அஜித் பவாரின் இந்த பேச்சு, மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






