என் மலர்tooltip icon

    இமாச்சல பிரதேசம்

    • கனமழையைத் தொடர்ந்து ரெயில்வே பாலத்தின் தாங்கு சுவர் இடிந்து விழுந்தது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த ரெயில்வே பாலம் மூடப்பட்டது.

    இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்துவரும் நிலையில், காங்ரா பகுதியில் பாலத்தில் ரெயில் சென்றுகொண்டிருந்த போதே பாலத்தின் தாங்கு சுவர் இடிந்து விழுந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நல்வாய்ப்பாக தாங்கு சுவர் இடிந்து விழுந்த சமயத்தில் எந்த விபத்தும் ஏற்படவில்லை.

    இந்த சம்பவம் தொடர்பாக பேசிய காவல் கண்காணிப்பாளர் (SP) அசோக் ரத்தன், "அப்பகுதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ரெயில்வே பாலத்தின் தாங்கு சுவர் இடிந்து விழுந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த ரெயில்வே பாலம் மூடப்பட்டு ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளோம்" என்றார்.

    • ஹாட்டி சமூகத்தில் "ஜோடிதரன்" அல்லது "திரௌபதி பிரதா" என்று இந்த பலதார மணம் அறியப்படுகிறது.
    • பாரம்பரிய பஹாரி நாட்டுப்புற இசையுடன் நடனமாடி, மணமக்களை வாழ்த்தினர்.

    இமாச்சல பிரதேசத்தின் சர்மூர் மாவட்டத்தில் ட்ரான்ஸ்-கிரி என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வரும் ஹாட்டி சமூகத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் ஒரே பெண்ணை மணந்த நிகழ்வு நடந்துள்ளது.

    ஷில்லை கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் நேகி மற்றும் கபில் நேகி என்ற சகோதரர்கள், அருகிலுள்ள குன்ஹாட் கிராமத்தைச் சேர்ந்த சுனிதா சவுகான் என்ற பெண்ணை, குடும்பத்தினர் மற்றும் சமூகத்தின் முழு சம்மதத்துடன் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

    ஹாட்டி சமூகத்தில் "ஜோடிதரன்" அல்லது "திரௌபதி பிரதா" என்று அறியப்படும் இந்த பலதார திருமண வழக்கம், பொதுவாக ரகசியமாகப் பின்பற்றப்பட்டாலும், இந்த திருமணம் ஊரார் அறிய பிரமாண்டமாக நடந்துள்ளது.

    இந்த வழக்கம் குடும்ப ஒற்றுமையைப் பேணுவதற்கும், மூதாதையர் நிலத்தைப் பிரிப்பதைத் தடுப்பதற்கும், பெண்கள் விதவையாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் பின்பற்றப்படுகிறது.

    சகோதரர்களில் ஒருவரான பிரதீப் ஜல் சக்தி துறையிலும், கபில் வெளிநாட்டிலும் பணிபுரிகின்றனர். இருவரும் தங்கள் முடிவை பரஸ்பரமானது என்றும், தங்கள் வரலாற்றைப் பற்றி பெருமைப்படுவதாகவும் தெரிவித்தனர்.

    மணமகள் சுனிதா, "இது எனது தேர்வு. நான் ஒருபோதும் வற்புறுத்தப்படவில்லை" என்று தெரிவித்தார்.

    மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த திருமண விழாவில், அண்டை கிராமங்களைச் சேர்ந்த மக்களும் உறவினர்களும் பங்கேற்று, பாரம்பரிய பஹாரி நாட்டுப்புற இசையுடன் நடனமாடி, மணமக்களை வாழ்த்தினர். 

    • 184 பேர் காயமடைந்துள்ளனர், 35 பேர் காணாமல் போயுள்ளனர்.
    • 31 திடீர் வெள்ளங்கள், 22 மேக வெடிப்புகள் மற்றும் 18 நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன.

    இமாச்சல பிரதேசத்தில் ஜூன் 20 முதல் ஜூலை 14 வரை, மழை தொடர்பான சம்பவங்கள் மற்றும் சாலை விபத்துக்களில் மொத்தம் 105 பேர் உயிரிழந்துள்ளனர். 184 பேர் காயமடைந்துள்ளனர், 35 பேர் காணாமல் போயுள்ளனர்.

    இதில் மழை தொடர்பான சம்பவங்களால் 61 பேரும், சாலை விபத்துக்களால் 44 பேரும் உயிரிழந்துள்ளனர். மண்டி (17), காங்ரா (14) மற்றும் குல்லு (4) உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன. மேலும் பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. 

    கனமழை காரணமாக மாநிலத்தில் 786 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது என மாநில பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்துள்ளது. 199 சாலைகள் மூடப்பட்டுள்ளன.

     இந்த பருவமழையில், மாநிலத்தில் 31 திடீர் வெள்ளங்கள், 22 மேக வெடிப்புகள் மற்றும் 18 நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன.

    மண்டியில் 141 சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஜூன் 30 அன்று பெய்த கனமழையால் அடித்துச் செல்லப்பட்ட 27 பேரை தேடும் பணி இன்னும் நடைபெற்று வருகிறது.

    • கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக மூதாட்டி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
    • BNS சட்டத்தின் 64(2) (பாலியல் வன்கொடுமை) பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    இமாச்சலப் பிரதேசத்தில் தனது 65 வயது பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது பேரன் கைது செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    கணவர் இறந்த பிறகு தனியாக வசித்து வந்த மூதாட்டி அளித்த புகாரின் பேரில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

    ஜூலை 3 ஆம் தேதி மதியம் தனது பேரன் வீட்டிற்கு வந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்து, இந்த சம்பவம் குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக மூதாட்டி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    BNS சட்டத்தின் 64(2) (பாலியல் வன்கொடுமை), 332(B) (அத்துமீறி நுழைதல்) மற்றும் 351(3) (மிரட்டல்) பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    • மண்டி மாவட்டத்தில் உள்ள தரம்பூர் பகுதியில் உள்ள சியாதி கிராமம் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டது.
    • நிலச்சரிவில் கிராமத்தில் உள்ள பல வீடுகள் தரைமட்டமாகின.

    இமாச்சல பிரதேச மாநிலத்தை கனமழை புரட்டி போட்டது. மேகவெடிப்பு காரணமாக பெய்த பலத்த மழையால் நிலச்சரிவும் ஏற்பட்டது.

    ஜூன் 20ஆம் தேதி முதல் ஜூலை 6ஆம் தேதி வரை 19 முறை மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்தது.இதனால் 16 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக மண்டி பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

    ஜூன் 30 அன்று, நள்ளிரவில் மண்டி மாவட்டத்தில் உள்ள தரம்பூர் பகுதியில் உள்ள சியாதி கிராமம் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டது.

    நிலச்சரிவிற்கு முன்பு நள்ளிரவில் அங்கிருந்த ஒரு நாய் கடுமையாக குரைத்துள்ளது. நாயின் சத்தைதை கேட்டு முழித்த அதன் உரிமையாளர் வீட்டு சுவரில் விரிசல் விழுந்து தண்ணீர் உள்ளே வருவதை பார்த்துள்ளார்.

    உடனடியாக அவர் அந்த நல்லறவில் அந்த கிராமத்தில் உள்ளவர்களை எழுப்பி எச்சரித்துள்ளார். இதனால் கிராமத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமத்தில் உள்ள பல வீடுகள் தரைமட்டமாகின.

    நாயின் சத்தத்தால் சியாதி கிராமத்தின் 20 குடும்பங்களை சேர்ந்த 67 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்புயுள்ளனர். 

    • மேகவெடிப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டது.
    • ஜூன் 20 முதல் ஜூலை 6 வரை 19 முறை மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது.

    இமாச்சல பிரதேச மாநிலத்தை கனமழை புரட்டி போட்டது. கனமழை மட்டும் பெய்யவில்லை. மேகவெடிப்பு, நிலச்சரிவும் ஏற்பட்டது. குறிப்பாக மண்டி பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

    ஜூன் 20ஆம் தேதி முதல் ஜூலை 6ஆம் தேதி வரை 19 முறை மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 23 வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 16 நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    மேகவெடிப்பு, மழை வெள்ளம் காரணமாக மண்டி மாவட்டத்தில் உ்ள துனாங் நகரில் உள்ள மாநில கூட்டுறவு வங்கி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இரண்டு மாடி கட்டிடத்தின் கீழ் தளத்தில் வங்கி செயல்பட்டு வந்தது. மழை வெள்ளத்தால் வங்கியின் ஒரு கதவு முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இரண்டு கதவுகள் வளைந்து சேதமடைந்துள்ளது.

    மழை வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட குப்பைகள் மற்றும் கட்டிட இடிபாடுகள், சகதிகள் முதல் தளத்தை முற்றிலுமாக மூடியுள்ளது. இதனால் வங்கியில் உள்ள லட்சக்கணக்கான பணம் மற்றும் அடகு வைத்திருந்த நகைகள் என்னவானது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    துனாங்கில் உள்ள கூட்டுறவு வங்கியில் ஏராளமான வணிகர்கள், விவசாயிகள் கணக்கு வைத்துள்ளனர். தினசரி வரவு, செலவு மேற்கொண்டு வந்துள்ளனர். 8 ஆயிரம் மக்களுக்கு இந்த ஒரு வங்கிதான் எனக் கூறப்படுகிறது.

    இதனால் ஏராளமான பணம் மட்டும் இல்லாமல், அடது வைத்த நகைகள் ஏராளமான இருக்கும் என கருதப்படுகிறது. கதவு இல்லாமல் சகதியில் மூழ்கிக் கிடக்கும் வங்கியில் இருந்து நகைகளை கொள்ளையடிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

    இடிபாடுகளை அகற்றிய பிறகுதான் சேதம் குறித்து முழு விவரம் தெரியவரும்.

    • 15 வது தலாய் லாமாவைத் தேர்ந்தெடுக்க 'காடன் போட்ராங் டிரஸ்ட்' மட்டுமே அதிகாரம் கொண்டது
    • இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறினார்.

    திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா ஜூலை 6 ஆம் தேதி தனது 90 வது பிறந்தநாளை முன்னிட்டு தனது சீடர்களால் இமாச்சல பிரதேசத்தின் தரம்சாலாவில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டார்.  

    இதன்பின் சீடர்கள் மத்தியில் பேசிய அவர், "எனக்கு அவலோகிதேஸ்வரரின் ஆசிர்வாதம் இருக்கிறது. இதுவரை என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன். இன்னும் 30-40 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன்.

    உங்கள் பிரார்த்தனைகள் இதுவரை பலனளித்துள்ளன. நாம் நம் நாட்டை இழந்துவிட்டோம், இந்தியாவில் ஒரு அகதியாக, தர்மசாலாவில் வசிக்கும் மக்களுக்கு சேவை செய்ய முடிந்தது.

    நான் இன்னும் என்னால் முடிந்தவரை அவர்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்" என்று தலாய் லாமா கூறினார். இன்னும் சில ஆண்டுகள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும் என்பதற்கான தெய்வீக அறிகுறிகளைப் பெறுவதாக அவர் கூறினார். முன்னதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவதற்கு அளித்த பேட்டியில் 110 வயது வரை வாழ்வேன் என்று தலாய் லாமா கூறியிருந்தார். 

    மறுபுறம், தலாய் லாமா தனது வாரிசைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை குறித்து அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 15 வது தலாய் லாமாவைத் தேர்ந்தெடுக்க 'காடன் போட்ராங் டிரஸ்ட்' மட்டுமே அதிகாரம் கொண்டது என்று அதில் தெரிவித்தார்.

    2011 ஆம் ஆண்டில் தனது வாரிசைத் தேர்ந்தெடுப்பது குறித்து புத்த மதத் தலைவர்களுடன் விவாதித்ததாகவும், அவர்களின் நேர்மறையான கருத்தை பெற்றதாகவும் அவர் நினைவு கூர்ந்தார். இந்த விஷயத்தில் மற்ற சக்திகளின் தலையீட்டை பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்று அவர் சீனாவை மறைமுகமாக எச்சரித்தார்.

    திபெத்தின் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதற்காக சீனா நீண்ட காலமாக தலாய் லாமாவின் வாரிசைத் தேர்ந்தெடுப்பதில் தனது கட்டுப்பாட்டை நிறுவ முயற்சித்து வருகிறது.

    இதற்கிடையே தலாய் லாமாவின் வாரிசு அவரது சொந்த விருப்பப்படிதான் நியமிக்கப்பட வேண்டும் என்ற மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் கருத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இருதரப்பு உறவுகளுக்கு சேதம் ஏற்படாமல் இருக்க திபெத் தொடர்பான பிரச்சினைகளில் இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறினார்.   

    • பருவமழை தொடங்கியதில் இருந்து 14 முறை மேகவெடிப்பு.
    • சாலைகள், குடிநீர் திட்டங்கள், மின்சார வினியோகம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் பருவமழைக் காரணமாக ஏற்பட்ட மேகவெடிப்பு, மழை வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 69 பேர் உயிரிழந்த நிலையில், 37 பேரை காணவில்லை. 110 பேர் காயம் அடைந்துள்ளனர். 700 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் சுக்விந்தர்சிங் சுகு தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே மழையால் தத்தளித்து வரும் நிலையில், வருகிற 7ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தின் மண்டியில் உள்ள துனாக், பக்சயேத் ஆகியப் பகுதிகள் மிகப்பெரிய அளவில் சேதத்தை சந்தித்துள்ளன.

    பருவமழை தொடங்கியதில் இருந்து 14 மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சாலைகள், குடிநீர் திட்டங்கள், மின்சார வினியோகம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

    பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் அரசு நிற்பதாக சுகு உறுதி அளித்துள்ளார். மேலும், பாதிகப்பட்ட குடும்பங்களுக்கு தங்குமிடத்திற்கு வாடகையாக 5 ஆயிரம் வழங்கப்படும். தேடுதல் மற்றும் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

    • வெள்ளத்தில் சிக்கிய சுமார் 41 பேரை துணைப் பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டனர்.
    • மாநிலம் முழுவதும் 259 இணைப்புச் சாலைகள் மூடப்பட்டுள்ளன

    இமாலச்சல பிரதேசத்தில் தொடர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    கனமழை காரணமாக சிம்லா-சன்னி-கர்சோக் நெடுஞ்சாலை ஆறு போல் மாறியுள்ளது. பலத்த மழையின் விளைவாக, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. டஜன் கணக்கான வாகனங்கள் தண்ணீரில் சிக்கியதால் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

    இதற்கிடையில், பல பகுதிகளில் சாலைகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் வாகனப் போக்குவரத்திற்கு கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றன.

    மண்டி மாவட்டத்தின் கர்சோக் பிரிவில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் பலர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். பல வீடுகள் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

    வெள்ளத்தில் சிக்கிய சுமார் 41 பேரை மாவட்ட நிர்வாகம் மற்றும் துணைப் பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டனர்.

    குக்லாவில், 10 வீடுகள் மற்றும் ஒரு பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மண்டி மாவட்டத்தில் உள்ள 16 மெகாவாட் திறன் கொண்ட பதிகாரி நீர்மின் திட்டமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

    அதிக நீர் ஓட்டம் காரணமாக, பாண்டு அணையிலிருந்து 1,50,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆற்றங்கரைகளுக்கு வர வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதற்கிடையில், குல்லுவில் உள்ள 126 மெகாவாட் லார்ஜி நீர்மின் திட்ட பகுதியிலும் நீர் ஓட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. திங்கட்கிழமை சிம்லாவின் புறநகர்ப் பகுதியில் ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது . இருப்பினும், கட்டிடத்தில் இருந்த அனைவரும் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    கடந்த 10 நாட்களாக மாநிலம் முழுவதும் பெய்து வரும் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் பலர் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், மாநிலம் முழுவதும் 259 இணைப்புச் சாலைகள் மூடப்பட்டுள்ளன. மறுபுறம், மாநிலம் முழுவதும் 614 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன, மேலும் 144 இடங்களில் நீர் விநியோகம் தடைபட்டுள்ளது.

    • இமாச்சல பிரதேசத்தில் 17 பேர் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தனர்.
    • மழை வெள்ளத்தால் 300 கோடி ரூபாய் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

    சிம்லா:

    இமாச்சல பிரதேசத்தில் நடப்பு ஆண்டில் முன்கூட்டியே பருவமழை பெய்ய தொடங்கியது. இதனால் மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    இந்நிலையில், வருவாய், தோட்டக்கலை மற்றும் பழங்குடி வளர்ச்சித்துறை மந்திரி ஜெகத் சிங் நேகி கூறியதாவது:

    இமாச்சல பிரதேசத்தில் கடந்த ஒரு வாரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்தனர்.

    கடந்த 24 மணி நேரத்தில் கனமழையால் பல்வேறு பகுதிகளிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    நிலச்சரிவுகள், வெள்ள நீர் தேக்கம் மற்றும் மின் இணைப்பு, சாலை இணைப்பு போன்றவையும் பாதிக்கப்பட்டன.

    சமீபத்தில் தரம்சாலாவில் வெள்ளத்தில் 9 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். மழை வெள்ளத்தால் சுமார் 300 கோடி அளவுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

    • திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர்.
    • பல நகரங்களில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    நாடு முழுவதும் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கேரளா, மகாராஷ்டிரா மற்றும் வட மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள குலு பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டது. மேக வெடிப்பால் அங்கு கனமழை பெய்தது.

    இதனால் மலை ஓடைகள், ஆறுகள், காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பல வீடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

    கன்யாராவில் பகுதியில் உள்ள ஓடையின் அருகே அரசு நீர்மின் திட்ட பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அங்கு தற்காலிக குடில் அமைத்து தங்கியிருந்தனர்.

    அங்கு திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

    இதில் 2 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை.

    இந்த நிலையில் பல நகரங்களில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    • குல்லுவில் மேகவெடிப்பு காரணமாக 'ஜீவா' சிற்றாற்றில் திடீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • பாலம்பூர், ஜோகிந்தர்நகர், நஹான் ஆகிய பகுதிகளில் மிகக் கனமழை முதல் அதிக கனமழை பதிவாகியுள்ளது.

    இமாச்சலப் பிரதேசத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டு பெரும் சேதம் நிகழ்ந்துள்ளது.

    பார்வதி நதி ஆபத்தான அளவில் நிரம்பி வழிவதால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன.

    இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    குல்லுவில் மேகவெடிப்பு காரணமாக 'ஜீவா' சிற்றாற்றில் திடீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மறுபுறம், இந்துஸ்தான்-திபெத் தேசிய நெடுஞ்சாலையில் (NH 5) ஜக்ரியில் ஏற்பட்ட நிலச்சரிவு அந்தப் பாதையில் போக்குவரத்தைத் தடை செய்துள்ளது.

    வெள்ளம் காரணமாக காங்கிரா மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்தனர், 20 பேர் வரை அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குல்லுவில் 3 பேர் மாயமாகியுள்ளனர்.

    நிலச்சரிவு மற்றும் பனிப்பாறை உருகியதால் காசா-சம்தூ சாலை முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது.

    பாலம்பூர், ஜோகிந்தர்நகர், நஹான் ஆகிய பகுதிகளில் மிகக் கனமழை முதல் அதிக கனமழை பதிவாகியுள்ளது.

    காங்கிரா, மண்டி, சிம்லா, சிர்மௌர் ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அடுத்த 5 நாட்களுக்கு கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    ×