என் மலர்
இந்தியா

இன்னும் 30-40 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன்.. 90வது பிறந்தநாளை முன்னிட்டு தலாய் லாமா உரை
- 15 வது தலாய் லாமாவைத் தேர்ந்தெடுக்க 'காடன் போட்ராங் டிரஸ்ட்' மட்டுமே அதிகாரம் கொண்டது
- இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறினார்.
திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமா ஜூலை 6 ஆம் தேதி தனது 90 வது பிறந்தநாளை முன்னிட்டு தனது சீடர்களால் இமாச்சல பிரதேசத்தின் தரம்சாலாவில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டார்.
இதன்பின் சீடர்கள் மத்தியில் பேசிய அவர், "எனக்கு அவலோகிதேஸ்வரரின் ஆசிர்வாதம் இருக்கிறது. இதுவரை என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன். இன்னும் 30-40 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன்.
உங்கள் பிரார்த்தனைகள் இதுவரை பலனளித்துள்ளன. நாம் நம் நாட்டை இழந்துவிட்டோம், இந்தியாவில் ஒரு அகதியாக, தர்மசாலாவில் வசிக்கும் மக்களுக்கு சேவை செய்ய முடிந்தது.
நான் இன்னும் என்னால் முடிந்தவரை அவர்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்" என்று தலாய் லாமா கூறினார். இன்னும் சில ஆண்டுகள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும் என்பதற்கான தெய்வீக அறிகுறிகளைப் பெறுவதாக அவர் கூறினார். முன்னதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவதற்கு அளித்த பேட்டியில் 110 வயது வரை வாழ்வேன் என்று தலாய் லாமா கூறியிருந்தார்.
மறுபுறம், தலாய் லாமா தனது வாரிசைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை குறித்து அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 15 வது தலாய் லாமாவைத் தேர்ந்தெடுக்க 'காடன் போட்ராங் டிரஸ்ட்' மட்டுமே அதிகாரம் கொண்டது என்று அதில் தெரிவித்தார்.
2011 ஆம் ஆண்டில் தனது வாரிசைத் தேர்ந்தெடுப்பது குறித்து புத்த மதத் தலைவர்களுடன் விவாதித்ததாகவும், அவர்களின் நேர்மறையான கருத்தை பெற்றதாகவும் அவர் நினைவு கூர்ந்தார். இந்த விஷயத்தில் மற்ற சக்திகளின் தலையீட்டை பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்று அவர் சீனாவை மறைமுகமாக எச்சரித்தார்.
திபெத்தின் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதற்காக சீனா நீண்ட காலமாக தலாய் லாமாவின் வாரிசைத் தேர்ந்தெடுப்பதில் தனது கட்டுப்பாட்டை நிறுவ முயற்சித்து வருகிறது.
இதற்கிடையே தலாய் லாமாவின் வாரிசு அவரது சொந்த விருப்பப்படிதான் நியமிக்கப்பட வேண்டும் என்ற மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் கருத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இருதரப்பு உறவுகளுக்கு சேதம் ஏற்படாமல் இருக்க திபெத் தொடர்பான பிரச்சினைகளில் இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறினார்.