என் மலர்tooltip icon

    டெல்லி

    • உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
    • இதனால் இந்தியாவின் பதக்கம் பறிபோனது. இந்த விவகாரத்தால் நாடே கொதிப்படைந்துள்ளது.

    புதுடெல்லி:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

    ஆனால், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி திடீரென அறிவித்தது. இதனால் இந்தியாவின் பதக்கம் பறிபோனது. இந்த விவகாரத்தால் நாடே கொதிப்படைந்து இருக்கிறது.

    இந்த விவகாரம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. வினேஷ் போகத் தகுதிநீக்கம் விவகாரத்தில் யார் பின்னால் இருக்கிறார்கள் என்பதை அறிய விரும்புவதாக எதிர்க்கட்சிகள் குரலெழுப்பின. இந்தப் பிரச்சனையை எழுப்ப அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அனுமதிக்காததால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    இதற்கிடையே, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை அரியானா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என முன்னாள் முதல் மந்திரி பூபிந்தர் சிங் ஹூடா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தால் அரியானா சார்பில் அவரை ராஜ்யசபாவுக்கு அனுப்புவோம் என தெரிவித்தார்.

    இந்நிலையில், வினேஷ் போகத் ராஜ்யசபா உறுப்பினர் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராஜ்யசபா உறுப்பினராக 30 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வினேஷ் போகத்துக்கு ஆகஸ்ட் 25-ம் தேதி 30 வயதாகிறது.

    ராஜ்யசபா தேர்தல் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 21 ஆகும். எனவே வினேஷ் போகத்தால் வேட்புமனு தாக்கல் செய்யமுடியாது என்பதால் அவர் ராஜ்யசபா உறுப்பினர் பதவி பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.

    • பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
    • பட்டியலின பழங்குடியின மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரமளித்து கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது

    பட்டியலினத்தவா், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் சமூக பொருளாதார ரீதியில் மேம்பட்டவா்களுக்கான விலக்கு அளிக்கும் நடைமுறை (கிரீமி லேயா்) எதுவும் கொண்டுவரப்படாது என நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவானது இறுதிசெய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில்,

    அண்மையில் உச்சநீதிமன்றத்த்தில் தீர்ப்பில் உறுதிசெய்யப்பட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடா்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அரசமைப்பு சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவதில் என்.டி.ஏ தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது.

    அந்த வகையில், அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் ஆனால் அந்த இட ஒதுக்கீட்டில், சமூக பொருளாதார ரீதியில் மேம்பட்டவா்கள் பலன் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கும் நடைமுறை எதுவும் கொண்டுவரப்படாது. இதுவே மத்திய அமைச்சரவையின் முடிவாகும் என்று தெரிவித்தார்.

    முன்னதாக பட்டியலின பழங்குடியின மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரமளித்து கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் அந்த தீர்ப்பில். சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில் முன்னேறிய மக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான இட ஒதுக்கீடு பலன்களை ரத்து செய்வதற்கான கொள்கையை மாநிலங்கள் வகுத்திட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. 

    • குஜராத் மாநிலம் கிர் பகுதியில் அதிக சிங்கங்கள் வசிக்கின்றன.
    • சர்வதேச பிக் கேட் கூட்டணியை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

    உலக சிங்க தினத்தை முன்னிட்டு சிங்கங்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைவரின் முயற்சிகளையும் பிரதமர் மோடி பாராட்டினார். இதுதொடர்பாக சிங்கங்களின் சில பிரமிக்க வைக்கும் படங்களை பகிர்ந்துள்ள அவர் எக்ஸ் தளத்தில்,

    கம்பீரமான பெரிய பூனைகளைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

    இந்தியாவில் குஜராத் மாநிலம் கிர் பகுதியில் அதிக சிங்கங்கள் வசிக்கின்றன. பல ஆண்டுகளாக அதன் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இது ஒரு சிறந்த செய்தி.

    இந்த ஆண்டு பிப்ரவரியில், பெரிய பூனைகள் வசிக்கும் உலகின் அனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்கும் வகையில் சர்வதேச பிக் கேட் கூட்டணியை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

    இது நிலையான வளர்ச்சியை அதிகரிக்க ஒரு முழுமையான அணுகுமுறையை உருவாக்க முயல்கிறது மற்றும் இது சம்பந்தமாக சமூக முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிறது. இந்த முயற்சிக்கு உலகளவில் உற்சாகமான வரவேற்பு கிடைத்து வருகிறது.

    கம்பீரமான ஆசிய சிங்கத்தை பார்க்க அனைத்து வனவிலங்கு பிரியர்களையும் கிருக்கு அழைக்கிறேன். சிங்கத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளைக் காணவும், அதே நேரத்தில் குஜராத் மக்களின் விருந்தோம்பலை அனுபவிக்கவும் இது அனைவருக்கும் வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    • எதிர்காலத்தில் அவர், இந்தியாவுக்காக பல பதக்கங்களையும் பாராட்டுக்களையும் வெல்வார்.
    • அற்புதமான சாதனையை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடுகிறது.

    பாரிஸ் ஒலிம்பிக்ஸ்ல் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான மல்யுத்தம் (ஆண்கள் 57 கிலோ எடைபிரிவு பிரீஸ்டைல்) போட்டியில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் அமன் ஷெராவத், பியூர்டோரிகோவின் டேரியன் கிரஸ் உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமன் செஹ்ராவத் 13-5 என்ற புள்ளிக்கணக்கில் டேரியன் கிரஸை வீழ்த்தி வெண்கலப்பத்தக்கத்தை கைப்பற்றினார்.

    இந்த நிலையில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான பிரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இளம் மல்யுத்த வீரர்களில் ஒருவரான அவர், தனது முதல் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளார்.

    எதிர்காலத்தில் அவர், இந்தியாவுக்காக பல பதக்கங்களையும் பாராட்டுக்களையும் வெல்வார். அவரது வெற்றியின் மூலம், மல்யுத்தத்தில் ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லும் பாரம்பரியத்தை இந்தியா தொடர்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான பிரீஸ்டைல் மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்துக்கு வாழ்த்துகள். அவருடைய அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் தெளிவாகத் தெரிகிறது. இந்த அற்புதமான சாதனையை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

    • இந்திய சுதந்திர தினம் வருகிற 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
    • தேசியக்கொடியுடன் செல்பி எடுத்து harghartiranga.com தளத்தில் பகிர கேட்டுக்கொள்கிறேன்

    புதுடெல்லி:

    இந்திய சுதந்திர தினம் வருகிற 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுவதை கடந்த ஓரிரு ஆண்டுகளாக பிரதமர் மோடி ஊக்குவித்து வருகிறார். 'ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி' என்ற இந்த பிரசாரத்தை இந்த ஆண்டும் மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார். இதன் ஒரு பகுதியாக தனது எக்ஸ் தளத்தின் முகப்பு படமாக தேசியக்கொடியை வைத்து இருக்கிறார்.

    இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், 'சுதந்திர தினம் நெருங்கி வரும் நிலையில் 'ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி' என்ற பிரசாரத்தை மீண்டும் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவோம். எனது எக்ஸ் தள முகப்பு படமாக தேசியக்கொடியை வைத்து இருக்கிறேன். நீங்களும் அவ்வாறு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் தேசியக்கொடியுடன் செல்பி எடுத்து harghartiranga.com தளத்தில் பகிரவும் கேட்டுக்கொள்கிறேன்' என கேட்டுக்கொண்டு இருந்தார்.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள் மற்றும் பிற நிறுவனங்களில் தேசியக்கொடி ஏற்றுமாறும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார்.

    • பாராளுமன்ற கூட்டத்தொடர் திங்கட்கிழமை முடிவடைய இருந்த நிலையில் இன்றுடன் நிறைவடைந்தது.
    • பிரதமர் மோடி மற்றும் ஓம் பிர்லா தலைமையில் தேனீர் விருந்து நடைபெற்றது.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் (ஜூலை) 22-ந்தேதி தொடங்கியது. வரும் திங்கட்கிழமை வரை கூட்டத்தொடர் நடைபெற இருந்தது.

    ஆனால் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா இன்றுடன் சபை நிறைவடைவதாக அறிவித்து அத்துடன் தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைத்தார்.

    இந்த நிலையில் அறிவிக்கப்படாத தேனீர் விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மக்களவை கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த விருந்தில் சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். கனிமொழி எம்.பி., துரை வைகோ உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    ஷோபா ஒன்றில் ஓம் பிர்லா மற்றும் பிரதமர் அமர்ந்திருக்க, பிரதமருக்கு இடது பக்கம் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். வலது பக்கம் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.

    ராகுல் காந்தில் வந்தபோது பிரதமர் மோடியும் அவரும் பரஸ்பர நமஸ்காரம் (வாழ்த்து) தெரிவித்துக் கொண்டதாகவும், போட்டோவுக்கு இருவரும் புன்னகையுடன் போஸ் கொடுத்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்ததாக என்டிடிவி செயதி வெளியிட்டுள்ளது.

    மக்களவையில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி தாமரை வடிவிலான சக்கரவியூகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட ஆறு பேர் கட்டுப்படுத்துகிறார்கள். இவர்கள் அச்சம் என்ற சக்கரவியூகத்தில் மக்களை சிக்கவைத்துள்ளனர். தற்போதைய நிலையில் பாஜக எம்.பி.க்கள் கூட அச்சத்தில் உள்ளனர் என கடுமையாக விமர்சித்திருந்தார்.

    • பயணிகள் டிக்கெட் ரத்து செய்யும்போது அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும். அதை தனியாக கணக்கு வைத்துக்கொள்ளப்படாது.
    • 2018-19 முதல் 2022-23 வரை ரெயில்வேயின் மொத்த வருமானத்தில் தோராயமாக 5 சதவீதம் ஆகும்.

    பாராளுமன்றத்தில் சிபிஐ (எம்) எம்.பி. ஜான் பிரிட்டாஸ், ஃப்ளெக்சி கட்டணம், தட்கல் மற்றும் பிரீமியர் தட்கல், டிக்கெட் ரத்து ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள விரும்புவதாகவும், இந்த தகவல் கடந்த ஐந்தாண்டுகள் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

    அதன்அடிப்படையில் மத்திய ரெயில்வேத்துறை மந்திரி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

    அதில் "ஃப்ளெக்சி கட்டணம், தட்கல், பிரீமியர் தட்கல் டிக்கெட்டுகள் மூலம் 2018-19 முதல் 2022-23 வரை ரெயில்வேயின் மொத்த வருமானத்தில் தோராயமாக 5 சதவீதம் ஆகும்.

    பயணிகள் டிக்கெட் ரத்து செய்யும்போது அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும். அதை தனியாக கணக்கு வைத்துக்கொள்ளப்படாது.

    ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுக்கும்போது காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் டிக்கெட்டுகள் தானாகவே ரத்து செய்யப்படும்போது கிளெர்க்கேஜ் சார்ஜ் தவிர்த்து முழுமையாக டிக்கெட் கட்டணம் திரும்ப வழங்கப்படும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் டிக்கெட்டுகளுக்கு 60 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது.

    • மணீஷ் சிசோடியா கடந்த 17 மாதமாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
    • அவரை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தது.

    புதுடெல்லி:

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தது.

    மணீஷ் சிசோடியா சார்பில் தாக்கப்பட்ட செய்யப்பட்ட ஜாமின் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது. இதனால் அவர் கடந்த 17 மாதமாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    தனக்கு ஜாமின் வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மணீஷ் சிசோடியா மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் பி.ஆர். காவே மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மணீஷ் சிசோடியாவிற்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது.

    விசாரணையை தொடர்ந்து அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமின் வழங்கினர். மேலும், மணீஷ் சிசோடியா தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், 17 மாதங்களுக்கு பிறகு திகார் சிறையில் இருந்து இன்று மாலை மணீஷ் சிசோடியா வெளியே வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    • துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
    • மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை மனு பாக்கர் சந்தித்தார்.

    புதுடெல்லி:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இதில் 200-க்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். தற்போது ஒலிம்பிக் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 4 வெண்கலம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் என மொத்தம் 5 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது.

    துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கல பதக்கங்களை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், டெல்லி திரும்பிய மனுபாக்கர் பாராளுமன்றத்தின் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் அறையில் ராகுல் காந்தியை தனது குடும்பத்தினருடன் இன்று சந்தித்தார். அப்போது இரு வெண்கல பதக்கங்களை வென்ற மனு பாக்கருக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்ததுடன், அவர்களுக்கு இனிப்பும் வழங்கினார்.

    • டெல் அவிவ் நகருக்கான விமான சேவையை ஏர் இந்தியா ரத்து செய்துள்ளது.
    • 5 மாத இடைவெளிக்கு பிறகு மார்ச் 3-ம் தேதி ஏர் இந்தியா விமானசேவையை தொடங்கியது.

    புதுடெல்லி:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலை அடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதியில் இருந்து டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா தனது விமான சேவையை நிறுத்தியது. 5 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த மார்ச் 3-ம் தேதி டெல் அவிவ் நகருக்கு ஏர் இந்தியா மீண்டும் விமான சேவையை தொடங்கியது.

    ஈரானில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இதுவரை இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை என்றபோதும், அந்த நாட்டிற்கான விமான சேவைகளை பல நிறுவனங்கள் ரத்துசெய்யத் தொடங்கியுள்ளன.

    இதற்கிடையே, இந்தியாவில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் செல்லும் விமானங்கள் மற்றும் டெல் அவிவ் நகரில் இருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்கள் அனைத்தும் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது.

    இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் செல்லும் விமானங்கள் மற்றும் டெல் அவிவ் நகரில் இருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்கள் அனைத்தும் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மத்திய கிழக்கின் சில பகுதிகளில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு டெல் அவிவுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் எங்கள் விமானங்களின் திட்டமிடப்பட்ட பயணம் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

    • வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்து ஆய்வுசெய்ய கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் இதில் உள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

    இதை எதிர்த்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர், மசோதா குறித்து ஆய்வுசெய்ய கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளின் கோரிக்கையின்படி கூட்டுக்குழு அமைக்கப்படும் என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு நேற்று தெரிவித்தார்.

    இந்நிலையில், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்து ஆய்வுசெய்ய 31 பேர் கொண்ட கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு பிறப்பித்துள்ளார்.

    பா.ஜ.க.வின் ஜெகதாம்பிகா பால் தலைமையில் மசோதாவை ஆய்வுசெய்ய கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டுக் குழுவில் ஆ.ராசா, ஒவைசி, இம்ரான் மசூத், தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

    தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் இந்தக் குழுவில் உள்ளனர்.

    இந்த கூட்டுக் குழுவானது மசோதா குறித்து ஆய்வுசெய்து அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளில் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது.

    • நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஜூலை 23-ந்தேதி தாக்கல் செய்தார்.
    • எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 22-ந்தேதி தொடங்கியது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2024-2025-ம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை 23-ந்தேதி தாக்கல் செய்தார். அதன்பின் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.

    இந்த விவாதத்தின்போது ராகுல் காந்தி மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

    நேற்று வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

    இன்று மாநிலங்களவையில் ஜெயா பச்சன்- மாநிலங்களவை தலைவர் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டதில் ஒரு அமர்வுக்கு முன்னதாகவே பட்ஜெட் கூட்டம் நிறைவடைந்துள்ளது.

    ×