என் மலர்
டெல்லி
- திட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து 1 கோடி பெண்கள் ஏற்கெனவே லட்சாதிபதி சகோதரிகளாக மாறியுள்ளனர்.
- நாடு முழுவதும் 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் கிராமங்களில் வசிக்கும் 2 கோடி பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி அவர்களை தொழில் முனைவோராக உயர்த்தி லட்சாதிபதிகளாக்கும் 'லட்சாதிபதி சகோதரிகள்' எனப்படும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது அறிவித்தார்.
இந்த திட்டத்தின் கீழ், மகளிர் சுய உதவிக்குழுவில் அங்கம் வகிக்கும் பெண்களுக்கு, முதல் ஆண்டு ரூ.10 ஆயிரம் உதவித் தொகையும், அடுத்த 2 ஆண்டுகளில் அரசு உதவித்தொகையாக ரூ.12,500, வங்கிக் கடனாக ரூ.12,500-ம் வழங்கப்படும்.
இந்த உதவித் தொகையை பெற, பெண்கள் தொடங்க உள்ள சுய தொழில் குறித்த திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் பயனாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் டிரோன்களை இயக்குவது, பழுது பார்ப்பது, பிளம்பிங், எல்.இ.டி. பல்புகள் தயாரிப்பது போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து 1 கோடி பெண்கள் ஏற்கெனவே லட்சாதிபதி சகோதரிகளாக மாறியுள்ளனர். தற்போது நாடு முழுவதும் 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தியாவில் பெண்கள் தலைமையிலான மேம்பாட்டு அணுகுமுறை குறித்து கடந்த 2022-ம் ஆண்டு இந்தியா தலைமை தாங்கிய ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். அதில் சுயஉதவிக் குழு பெண்களின் பங்களிப்பை பாராட்டினார்.
சுய உதவிக் குழுவில் 10 லட்சம் பெண்கள் இணைந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வேளாண் தொழில்நுட்ப துறையின் புதியகொள்கையின் கீழ் டிரோன்களை இயக்கவும், பழுதுபார்க்கவும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மராட்டியம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி பிரதமர் மோடி இன்று காலை மராட்டிய மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மராட்டிய மாநிலம் ஜல்கான் நகரில் லட்சாதிபதி சகோதரிகள் திட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்று லட்சாதிபதி சகோதரிகளாக உயர்ந்த 11 லட்சம் பெண்களுக்கு பிரதமர் மோடி சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அதன் பின்னர் நாடு முழுவதிலும் உள்ள லட்சாதிபதி சகோதரிகளிடம் அவர் காணொலி மூலம் கலந்துரையாடினார்.
பின்னர் 4.3 லட்சம் சுய உதவி குழுக்களை சேர்ந்த 48 லட்சம் உறுப்பினர்கள் பயனடையும் வகையில் ரூ.2,500 கோடி சுழற்சி நிதியையும் அவர் வழங்கினார். மேலும் 2.35 லட்சம் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 25.8 லட்சம் பெண்களுக்கு ரூ.5,000 கோடி வங்கி கடனையும் பிரதமர் மோடி வழங்கினார்.
அதன் பின்னர் பிரதமர் மோடி ராஜஸ்தானுக்கு புறப்பட்டு சென்றார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரில் இன்று மாலை 4.30 மணிக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் 70-ம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்கிறார். ராஜஸ்தான் உயர்நீதிமன்ற அருங்காட்சியகத்தையும் அவர் திறந்து வைக்கிறார்.
- விண்வெளித் துறையில் இந்தியா முன்னேற்றம் அடைந்து வருகிறது.
- பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்கள் என்றார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இன்று தனது 113-வது உரையில் பிரதமர் கூறியதாவது:
விண்வெளித் துறையில் இந்தியா முன்னேற்றம் அடைந்து வருகிறது. 21-ம் நூற்றாண்டில் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க, பல நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
உதாரணமாக, ஆகஸ்ட் 23-ம் தேதி நாட்டு மக்கள் முதல் தேசிய விண்வெளி தினத்தைக் கொண்டாடினர். இது மீண்டும் சந்திரயான்-3 வெற்றியைக் கொண்டாட வழிவகுக்கிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தெற்குப் பகுதியில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய இடத்தை சிவசக்தி என பெயரிட்டு அழைக்கிறோம். இந்த சாதனையை படைத்த உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்கள். வீரர்களுக்கு பொதுமக்கள் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து உற்சாகப்படுத்த வேண்டும்.
சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்த பிறகு, அரசியல் பின்னணி இல்லாத ஒரு லட்சம் இளைஞர்களை அரசியல் கட்சியில் இணையுமாறு வலியுறுத்தினேன். என்னுடைய இந்தக் கருத்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது அரசியலில் நுழைய இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுதொடர்பாக நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடமிருந்து எனக்கு கடிதங்கள் வந்துள்ளன. சமூக வலைதளங்களிலும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. மக்கள் எனக்கு பலவிதமான ஆலோசனைகளை அனுப்பியுள்ளனர்.
சிலர் தங்கள் தாத்தா அல்லது பெற்றோரிடம் அரசியல் பாரம்பரியம் இல்லாததால் அவர்களால் அரசியலுக்கு வர முடியவில்லை. வம்ச அரசியல் ஒழிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்களும் அரசியலில் முன்னேற முடியும் என்று நம்புகிறேன். அவர்களின் அனுபவமும், ஆர்வமும் நாட்டுக்குப் பயனுள்ளதாக இருக்கும். அரசியலில் பின்னணி இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வருவது ஜனநாயகத்தை வலுப்படுத்தும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இளம் தொழில்முனைவோரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என தெரிவித்தார்.
- ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- இத்திட்டம் மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலனடைவார்கள் என தகவல்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (UPS) கீழ் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக 50%ஐ உறுதி செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதாவது, கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறும் வகையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.
25 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர், ஓய்வு பெறுவதற்கு முன் 12 மாதங்களில் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெற முடியும் என தெரிவித்துள்ளது.
ஓய்வூதியம் பெறும் ஊழியர் இறந்துவிட்டால், அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60 சதவீதம் அவரது குடும்பத்திற்கு, குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
10 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியருக்கு, குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் என்பிஎஸ், யுபிஎஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஓய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம் எனவும், இந்த புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் 2025ம் ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
- நேபாளம் விபத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது.
- நேபாளம் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.
நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் இந்தியர்கள் உள்பட 40 பேருடன் சென்ற பேருந்து ஒன்று நேற்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த பேருந்து பொக்ராவில் இருந்து காத்மண்டு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது நேற்று காலை 11.30 மணியளவில் மார்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 14 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
தொடர்ந்து, படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 11 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இதையடுத்து விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 27 ஆக இருந்த நிலையில், பிறகு பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது.
இந்நிலையில், நேபாளம் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், " நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் நடந்த விபத்தில் இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- இருநாடுகளும் போரை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வலியுறுத்தி வருகிறது.
- இதுதொடர்பாக இரு நாட்டு தலைவர்களிடமும் பிரதமர் மோடி நேரிலும் வலியுறுத்தினார்.
புதுடெல்லி:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரண்டரை ஆண்டு கடந்துள்ளது. இந்தப் போர் குறித்து இந்தியா கவலை தெரிவித்து வருகிறது.
இரு நாடுகளும் போரை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக இரு நாட்டு தலைவர்களிடமும் பிரதமர் மோடி நேரிலும் வலியுறுத்தினார்.
இதற்கிடையே, இத்தாலியில் கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடியைச் சந்தித்த ஜெலன்ஸ்கி, அவரை உக்ரைன் வருமாறு அழைப்பு விடுத்தார். இதை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். அதன்படி போலந்து, உக்ரைன் நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். இதற்காக கடந்த 22-ம் தேதி புறப்பட்டு போலந்து சென்ற அவர், அங்கே 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அதைத்தொடர்ந்து, ரெயில் மூலமாக உக்ரைனுக்குச் சென்றார். அங்கு உக்ரைன் அதிபரைச் சந்தித்துப் பேசினார். உக்ரைன் அதிபருடனான சந்திப்பின்போது, பிராந்தியத்தில் அமைதி திரும்ப இந்தியா உதவும் என உறுதி அளித்தார்.
இந்நிலையில், போலந்து மற்றும் உக்ரைன் பயணத்தை நிறைவுசெய்து பிரதமர் மோடி இன்று டெல்லி திரும்பினார். தனி விமானம் மூலம் டெல்லி பாலம் விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை அதிகாரிகள் வரவேற்றனர்.
- வினேஷ் போகத் ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியானது.
- காங்கிரசில் வினேஷ் போகத் இணைந்தால் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ மகளிர் மல்யுத்த போட்டியில் வினேஷ் போகத் அரையிறுதியில் வெற்றி பெற்றும், இறுதிக்கு போட்டிக்கு தகுதி பெற்ற பின்னர் அவர் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அவருக்கு பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் ஆதரவு தெரிவித்தனர்.
இதனையடுத்து சமீபத்தில் இந்தியா திரும்பிய வினேஷ் போகத்துக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அரியானா மாநில அரசு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தது.
வினேஷ் போகத் அரியானா மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அரியானாவில் முன்னாள் முதல்வரும் அம்மாநில எதிர்க்கட்சி தலைவருமான பூபிந்தர் சிங் ஹுடாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து வினேஷ் போகத் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தித்து பேசினர்.
வினேஷ் போகத்திடம் பேசிய பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பூபிந்தர் சிங் ஹுடா, "எங்கள் கட்சியில் இணைவது குறித்து வினேஷ் போகத் தான் முடிவு செய்யவேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைந்தால் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். முடிவு அவர் கையில் தான் உள்ளது" என்று தெரிவித்தார்.
அரியானா மாநிலத்தில் சட்டசபையின் பதவிக்காலம் வருகிற நவம்பரில் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்திற்கு அக்டோபர் 1-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஏர் இந்தியா விமான செயல் இயக்குநருக்கு 6 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
- விமான பயிற்சி இயக்குனருக்கு 3 லட்ச ரூபாய் அபராதம் விதித்து டிஜிசிஏ உத்தரவிட்டது.
புதுடெல்லி:
இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஏர் இந்தியாவும் ஒன்று. இந்த நிறுவனத்தின் விமானங்களில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தகுதிபெறாத விமானிகளைக் கொண்டு விமானத்தை இயக்கியதாக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 90 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஏர் இந்தியா விமான செயல் இயக்குநருக்கு 6 லட்ச ரூபாயும், விமான பயிற்சி இயக்குனருக்கு 3 லட்ச ரூபாயும் அபராதம் விதித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.
சிவில் விமான போக்குவரத்து இயக்குநகரத்திற்கு விமான நிறுவனங்கள் வழக்கமாக வழங்கும் அறிக்கையின்போது ஏர் இந்தியா நிறுவனம் தகுதிபெறாத விமானிகளை கொண்டு விமானத்தை இயக்கியது தெரியவந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏர் இந்தியாவிடம் விளக்கம் கேட்ட நிலையில், விமானத்தை தகுதிபெறாத விமானிகளைக் கொண்டு இயக்கியது உறுதியானது. இதனால் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 90 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து இயக்குநகரம் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் லண்டன் ஓட்டல் அறையில் ஏர் இந்தியாவில் பணியாற்றும் பெண் ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது நினைவிருக்கலாம்.
- ஆங்கிலேயர் ஆட்சியர்களால் தங்கள் காலனி ஆதிக்க நாடுகளல் அறிமுகப்படுத்தப்பட்டது.
- இனி இந்திய பாரம்பரிய உடையை அணிந்து கொள்ளலாம் என விளக்கம்.
மருத்துவ கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள மாநிலத்தின் பாரம்பரியத்திற்கு ஏற்ப பட்டமளிப்பு விழா ஆடையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு மருத்துவமனைகள் மற்றும் மத்திய அரசின் மருத்துவ கல்வி நிலையங்களுக்கு சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பட்டமளிப்பு விழாவின்போது அணியப்படும் கருப்பு நிற ஆடை, ஆங்கிலேயர் ஆட்சியர்களால் தங்கள் காலனி ஆதிக்க நாடுகளல் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதனால், இந்த காலனி ஆதிக்க நடைமுறை மாற்றப்பட வேண்டும் என்றும் பட்டமளிப்பு விழாவில் கருப்பு வண்ண ஆடைகளுக்கு பதிலாக இனி இந்திய பாரம்பரிய உடையை அணிந்து கொள்ளலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- ஆளுநரிடம் சமர்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களின் நகல்களை ஒருவாரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
- செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
புதுடெல்லி:
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
செந்தில் பாலாஜி மீதான விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களையும், ஆவணங்களின் நகல்களையும் சமர்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
ஆளுநரிடம் சமர்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களின் நகல்களை ஒருவாரத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
மேலும், செந்தில் பாலாஜி வழக்கில் நியமனம் செய்யப்பட்டுள்ள சிறப்பு அரசு வழக்கறிஞர் பெயரையும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய ஆணை பிறப்பித்தனர்.
இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை செப். 2ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
- சில மாநிலங்கள் தலா ஐந்து இடங்கள் என மொத்தம் 25 இடங்கள் தந்திருந்தால்....
- நாம் கடினமாக உழைக்க வேண்டும். வெற்றி முக்கியமானது. வெறும் வார்த்தைகளால் மட்டும் வெற்றி சாதனையை பெற முடியாது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 90 இடங்களுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கடும் நெருக்கடி கொடுத்தது. இதனால் பாஜக-வால் தனி மெஜாரிட்டி கிடைக்காமல் போனது.
காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றது. இந்தியா கூட்டணி 240 இடங்களில் வெற்றி பெற்றது. 32 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றிருந்தால் இந்தியா கூட்டணி ஆட்சியை பிடித்திருக்கும்.
இந்த நிலையில்தான் ஜம்மு-காஷ்மீர், அரியானா மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலிலும் வெற்றியை பெற இந்தியா கூட்டணி கடுமையாக உழைக்க தீர்மானித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்கார்ஜூன கார்கே, கட்சி தொண்டர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்களவை தேர்தில் நாம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் இருந்திருக்கலாம். ஆனால், இந்தியா கூட்டணி பல இடங்களில் வெற்றி பெற்றது. ஜம்மு-காஷ்மீர், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் மற்றும் மற்ற சில மாநிலங்கள் தலா ஐந்து இடங்கள் என மொத்தம் 25 இடங்கள் தந்திருந்தால் ராகுல் காந்தி பிரதமராகியிருப்பார்.
இதற்காகத்தான் நாம் கடினமாக உழைக்க வேண்டும். வெற்றி முக்கியமானது. வெறும் வார்த்தைகளால் மட்டும் வெற்றி சாதனையை பெற முடியாது. களப்பணியை செய்வதை தவிர்த்து நாம் பேசிக் கொண்டிருந்தால் அது நிறைவேறாது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து மீட்டெடுப்பதற்கு வெற்றி முக்கியமானது. வெற்றி பெற்றால் மீண்டும் மாநில அந்தஸ்து கிடைக்கும். வெற்றி பெற்றால் சட்ட மன்றம் திரும்பும். வெற்றி பெற்றால் மாவட்டம், ஊராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படும்
இவ்வாறு கார்கே தெரிவித்தார்.
- சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதற்கு நிதிஷ் குமார், சிராக் பஸ்வான் ஆதரவு.
- மக்களை தொகை கணக்கெடுப்பின்போது சாதியையும் கணக்கில் எடுத்துக் கொள் மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்.
பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மாநில அளவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்கள் நாடு தழுவிய சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றன.
இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சியான காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையிலேயே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தது.
ஆனால் பாஜக-வுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த விருப்பம் இல்லை. தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமார், சிராக் பஸ்வான் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் சாதிவாரி கணக்கெடுப்பின்போது சாதியையும் கணக்கில் எடுத்துக்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ள.
இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், ஆனால் இறுதி முடிவு ஏதும் எடுக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடைசியாக 2011-ம் ஆண்டு இந்தியளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பின் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படவில்லை.
- சிபிஐ திறப்பு விளக்கிக் கொண்டிருந்தபோது மேற்கு வங்காள போலீஸ் தரப்பில் ஆஜரான கபில் சிபில் சிரித்ததாகத் தெரிகிறது.
- இதனால் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா எரிச்சலடைந்தார்
கொல்கத்தா R.G கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் மாநில காவல் துறையின் விசாரணையில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கை சிபஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் கொல்கத்தா விரைந்த சிபிஐ குழுவினர் கடந்த சில நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், மேற்கு வங்காள போலீஸ் தரப்பில் வாதாட மூத்த வழக்கறிஞர் கபில் சிபிலும் வாதாடுகின்றனர்.
இந்த விவகாரத்தில் சிபிஐ தரப்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை முன்வைத்து சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பேசுகையில், 'கொல்கத்தா காவல் துறை சார்பில் பயன்படுத்தப்பட்டு வரும் தினசரி டைரியில் இந்த சம்பவம் தொடர்பாகக் காலை 10.10 மணிக்கு பதிவிடப்பட்டு இருக்கிறது. எனினும், அன்று மாலையில் தான் போலீசார் சம்பவ இடத்தை தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர்' என்று விளக்கிக்கொண்டிருந்தபோது மேற்கு வங்காள போலீஸ் தரப்பில் ஆஜரான கபில் சிபில் சிரித்ததாகத் தெரிகிறது.
இதனால் எரிச்சலடைந்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கபில் சிபிலை நோக்கி, 'ஒரு பெண் குரூரமான முறையிலும் கண்ணியக்குறைவான வகையிலும் உயிரிழந்துள்ளாள். அதற்காக குறைந்தபட்சம் சிரிக்காமலாவது இருங்கள்' என்று காட்டமாக பேசியுள்ளார்.






