என் மலர்tooltip icon

    டெல்லி

    • முதலில் 44 தொகுதிகளுக்கான பட்டியலை வெளியிட்டிருந்தது.
    • தற்போது 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25, அக்டோபர் 1-ந்தேதி என மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றன. இன்று காலை பாஜக 44 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

    அறிவித்த சுமார் ஒரு மணி நேரத்தில் அந்த வேட்பாளர் பட்டியலை திரும்பப் பெற்றது. அதற்குப்பதிலாக புதிய வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என பாஜக தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் தற்போது 15 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

    ராஜ்போராவில் ஸ்ரீஅர்ஷித் பாத், ஷோபியானில் ஸ்ரீஜாவித் அகமது காத்ரி, அனந்த்நாக் தொகுதியில் சயத் வாசாஹாத், தோடாவில்வில் ஸ்ரீ கஜாய் சிங் ராணா உள்ளிட்டோர் போட்யிடுகிறார்கள் என அறிவித்துள்ளது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடைசியாக 2014-ல் தேர்தல் நடைபெற்றது. பாஜக 25 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    காங்கிரஸ் கட்சி பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. தனது கோட்டையாக விளங்கும் ஜம்முவில் அந்த கூட்டணியின் திட்டத்தை முறியடிக்க பாஜக அனைத்து வகையிலான முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

    • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும்போது யூனியன் பிரதேசமாக லடாக் அறிவிக்கப்பட்டது.
    • இதுவரை இரண்டு மாவட்டங்கள் இருந்தன. இனிமேல் ஏழு மாவட்டங்களாக அதிகரிக்கும்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு 5-ந்தேதி ரத்து செய்யப்பட்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது.

    இந்த நிலையில் லடாக் மாவட்டங்களில் புதிதாக ஐந்து மாநிலங்கள் உருவாக்கப்படும் என உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜான்ஸ்கர், த்ராஸ், ஷாம், நும்பரா, சாங்தாங் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உருவாக்கப்படும்.

    வளர்ச்சியடைந்த மற்றும் வளமான லடாக்கை கட்டமைக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையில் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும், லடாக் மக்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்க மோடி தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

    யூனியன் பிரதேசமாக இருப்பதால் லடாக் மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    லடாக் யூனியன் பிரதேசம் தற்போ லே மற்றும் கார்கில் ஆகிய இரண்டு மாவட்டங்கள் மட்டும் உள்ளது. தற்போது ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதா இனிமேல் ஏழு மாவட்டங்களை கொண்டதாகும்.

    • காங்கிரஸ்- தேசிய மாநாடு கட்சி இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளது.
    • நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் தொகுதி பங்கீடு இழுபறி முடிவுக்கு வர வேண்டிய கட்டாயம்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1-ந்தேதி என மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ்- பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.

    90 தொகுதிகளிலும கூட்டணியாக போட்டியிடுவோம் என பரூக் அப்துல்லா ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி பெறவில்லை.

    காங்கிரஸ் மேலிடம் ஏற்கனவே தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் அதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளது. ஆனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உறுதி செய்யாததால் அறிவிப்பை தள்ளிப் போட்டுள்ளது.

    நாளையுடன் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. இதனால் உடனடியாக தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் மேலிடம் கே.சி. வேணுகோபால், சல்மான் குர்ஷித் ஆகியோரை ஜம்மு-காஷ்மீருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    இருவரும் தேசிய மாநாடு கட்சி தலைவர்கள் பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள. பேச்சுவார்த்தையின் இறுதியில் இரு கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும்.

    முன்னதாக, காங்கிரஸ் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் தேசிய தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பரூக் அப்துல்லா மற்றும் உமர் அப்துல்லா உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கூட்டணி உருவானது. ஆனால் தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வருகிறது.

    காஷ்மீர் பள்ளத்தாக்கில் காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து இடங்களை கொடுக்க தேசிய மாநாடு கட்சி தயாராக உள்ளது. ஜம்மு பகுதயிில் 28 முதல் 30 இடங்களை கொடுக்க தயாராக இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி தேசிய மாநாடு கட்சியின் கோட்டையாக விளங்கும் சில தொகுதிகளை கேட்பதாக தெரிகிறது.

    • ஜம்மு-காஷ்மீரில் 60 முதல் 70 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது.
    • கோட்டையாக விளங்கும் ஜம்முவில் காங்கிரஸ் கூட்டணியை முறியடிக்க திட்டம்.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25, அக்டோபர் 1-ந்தேதி என மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றன. இன்று காலை பாஜக 44 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்த நிலையில் அறிவித்த வேகத்தில் அந்த வேட்பாளர் பட்டியலை திரும்பப் பெற்றுள்ளது. அதற்குப்பதிலாக புதிய வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என பாஜக தெரிவித்துள்ளது.

    முன்னதாக, 44 இடங்களுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று காலை வெளியிட்டுள்ளது. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 15 இடங்களுக்கும், 2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் 10 இடங்களுக்கும் 3-ம் கட்ட தேர்தல் நடைபெறும் 19 இடங்களுக்கும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

    ஜம்முவில் உள்ள பாம்போர், ஷோபியான், அனந்த்நாக் மேற்கு, அனந்த்நாக் உள்ளிட்ட ஜம்மு பகுதி தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை வெளியிட்டது.

    அரவிந்த் குப்தா, யுத்வீர் சேதி முறையே ஜம்மு மேற்கு மற்றும் ஜம்மு கிழக்கு தொகுதி வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். தேவேந்திர சிங் ராணா நக்ரோட்டா தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். அர்ஷித் பாத் ராஜ்போரா தொகுதியிலும், ஜாவித் அகமது குவாத்ரி ஷோபியான் தொகுதியிலும், முகமது ரபீக் வாணி அனந்த்நாக் மேற்கு தொகுதியிலும், சயத் வசாஹாத் அனந்த்நாக் தொகுதியிலும், சுஷ்ரி ஷகுன் பரிஹார் கிஷ்த்வார் தொகுதியும், கஜய சிங் ராணா தோடா தொகுதியிலும் நிறுத்தப்படுவதாக தெரிவித்தது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடைசியாக 2014-ல் தேர்தல் நடைபெற்றது. பாஜக 25 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    காங்கிரஸ் கட்சி பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. தனது கோட்டையாக விளங்கும் ஜம்முவில் அந்த கூட்டணியின் திட்டத்தை முறியடிக்க பாஜக அனைத்து வகையிலான முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

    • ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தில் இருக்கும் 'யு' என்பது, மோடி அரசின் பல 'யு டர்ன்'களை குறிப்பிடுவதாகும்- கார்கே.
    • வாக்குறுதி அளித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தினீர்களா என்று நாட்டு மக்களுக்குச் சொல்லுங்கள்- ரவி சங்கர் பிரசாத்.

    கடந்த இரு தினங்களுக்கு முன் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஓய்வூதிய திட்டமானது, மத்திய அரசு ஊழியராக, குறைந்தபட்சம் 10 ஆண்டு பணியாற்றியவர்கள் தகுதியானவர்கள் என்று தெரிவித்துள்ளது. 10 ஆண்டு பணியாற்றிய ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10,000 வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    மத்திய அரசின் இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மால்லிகார்ஜூன கார்கே விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 'ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தில் இருக்கும் 'யு' என்பது, மோடி அரசின் பல 'யு டர்ன்'களை குறிப்பிடுவதாகவும், இன்டெக்சேசன் தொடர்பான பட்ஜெட் அறிவிப்பு, வக்பு மசோதாவை கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பியது, ஒலிபரப்பு மசோதா வாபஸ், லேட்ரல் என்ட்ரி வாபஸ், இப்போது ஒருமித்த ஓய்வூதியம் என அடுத்தடுத்து மத்திய அரசு தன் முடிவுகளில் இருந்து பின்வாங்கியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில் கார்கே-வின் விமர்சனத்திற்கு பா.ஜ.க. மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் பதில் கொடுத்துள்ளார். காங்கிரஸ் விமர்சனத்திற்கு ரவி சங்கர் பிரசாத் அளித்தள்ள பதில் வருமாறு:-

    இமாச்சல் பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு அதனை நிறைவேற்றாமல் காங்கிரஸ் தற்போது யு-டர்ன் அடித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய திட்டத்தை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்து வருகிறது. மக்கள் வாக்களித்து ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என பிரியங்கா தேர்தலின்போது வாக்குறுதி கொடுத்திருந்தார்.

    இந்த காங்கிரஸ் அறிவிப்புகளை மட்டும் வெளியிடுமா அல்லது அதையும் செயல்படுத்துமா? பொதுவாக காங்கிரசும், குறிப்பாக ராகுல் காந்தியும், இமாச்சலப் பிரதேசத்தில் வாக்குறுதி அளித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தினீர்களா என்று நாட்டு மக்களுக்குச் சொல்லுங்கள். வாக்குகளுக்காக பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களி ஏமாற்றி வருகின்றனர்.

    (மத்திய அரசு) ஊழியர்களின் கவலைகளைக் கேட்டு புரிந்துகொண்டு, அதுகுறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து, அர்த்தமுள்ள முடிவை எடுத்ததற்காக பிரதமர் மோடிக்காக பெருமைப்படுகிறோம். இதற்காக அரசுக்கு, குறிப்பாக பிரதமருக்கு கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

    ராகுல் காந்தி என்ன செய்கிறீர்கள்? நீங்கள் எவ்வளவுதான் பொய்யை உண்மை என மக்களை நம்பவைப்பீர்கள். எப்போதாவது உண்மையைச் சொல்லுங்கள். மேலும் நீங்கள் ஏதாவது சொன்னால், அதைச் செய்ய வேண்டும். உங்களால் முடியவில்லை என்றால் சொல்லக்கூடாது.

    கவனமாக பரிசீலித்த பிறகு முடிவுகளை எடுக்க வேண்டும். அடிமைத்தனம் இங்கு வேலை செய்யாது.

    இவ்வாறு ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

    • காங்கிரஸ்- தேசிய மாநாடு கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டி.
    • காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாஜக சுயேட்சை வேட்பாளர்களை ஆதரிக்க திட்டம்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25, அக்டோபர் 1-ந்தேதி என மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றன.

    காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு தேசிய கட்சிகளும் போட்டியிடுகின்றன. பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சியும், மெகபூபா முக்தியின் மக்கள் ஜனநாயக கட்சியும் முன்னணி மாநில கட்சிகளாக உள்ளன.

    90 தொகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாடு கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துவிட்டன. மெகபூபா முக்தி இந்த கூட்டணியில் இணைவாரா? எனத் தெரியவில்லை. பரூக் அப்துல்லா, மெகபூபா முக்தி கட்சியிடன் தேர்தலுக்கு முந்தைய அல்லது தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி என்ற கருத்தை புறந்தள்ளிவிடவில்லை.

    இதற்கிடையே பாஜக 60 முதல் 70 இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் அமித் ஷா, ஜே.பி. நட்டா உளளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தின்போது மக்களுக்கு மிகவும் அறிமுகமான பிரபலமானவர்களை வேட்பாளர்களாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    60 முதல் 70 தொகுதிகளில் போட்டியிடலாம் என்பதால் தனித்து களம் இறங்கிய பாஜக தீர்மானித்துள்ளது. இதனால் ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் மூன்று முனை போட்டி நிலவ வாய்ப்புள்ளது.

    மேலும், சொந்த கட்சி வேட்பாளர்களுக்குப் பதிலாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள வலுவான சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    2014-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்று முடிந்த பின் பாஜக ஆதரவுடன் மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சி அமைத்து. முஃப்தி முகமது சயீத் முதல்வரானார். அவர் 2016 ஜனவரி மாதம் காலமானார். அதனைத்தொடர்ந்து அவரது மகள் மெகபூபா முஃப்தி முதல்வரானார்.

    2018-ல் இருந்து மெகபூபா முப்திக்கு அளித்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றது. பின்னர் நவம்பர் மாதம் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதன்பின் தற்போதுதான் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

    • தத்தெடுக்கப்படும் சிறப்பு குழந்தைகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
    • ஆரோக்கியமான குழந்தைகளை தத்தெடுப்பதில் போட்டி நிலவுகிறது.

    புதுடெல்லி:

    தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட ஒரு ேகள்விக்கு மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் பதில் அளித்துள்ளது. அதன்படி, கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து 18 ஆயிரத்து 179 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளன. அவர்களில் சிறப்பு குழந்தைகள் எனப்படும் பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகள் வெறும் 1,404 பேர் மட்டுமே.

    தத்தெடுக்கப்படும் சிறப்பு குழந்தைகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இருப்பினும், அவர்கள் தத்தெடுக்கப்படும் விகிதம் இன்னும் குறைவாகவே இருக்கிறது. கடந்த மாதம் 5-ந் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் 420 சிறப்பு குழந்தைகள் தத்தெடுப்புக்கு காத்திருப்பதாக மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் தெரிவித்துள்ளது.

    அதே சமயத்தில், ஆரோக்கியமான குழந்தைகளை தத்தெடுப்பதில் போட்டி நிலவுகிறது. 19 மாநிலங்களில், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளில், தத்தெடுக்கப்படுவதற்கென யாருமே இல்லை. 2 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான குழந்தைகளில் 25 பேர் மட்டுமே தத்தெடுக்கப்படுவதற்கு காத்திருக்கின்றனர்.

    சிறிதளவு குறைபாடு இருந்தாலும், சிறப்பு குழந்தைகளை தத்தெடுக்க யாரும் முன்வருவது இல்லை என்று தெரிய வந்துள்ளது. அதே சமயத்தில், வெளிநாடுகளில் சிறப்பு குழந்தைகளை தத்தெடுப்பவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவதாக மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தின் முன்னாள் தலைவர் தீபக்குமார் சுட்டிக்காட்டினார்.

    தான் தலைவராக இருந்தபோது, ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் அதிகமாக தத்தெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

    • கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.
    • கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    இந்தியா முழுவதும் நாளை கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.

    இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜனாதிபதி விடுத்துள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    சக குடிமக்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஜென்மாஷ்டமி நாளில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வணங்குவோம்.

    பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக லட்சியங்களுக்கு நம்மை அர்ப்பணிக்க இந்த மகிழ்ச்சித் திருவிழா நம்மைத் தூண்டுகிறது,

    ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையிலான உரையாடல் முழு மனிதகுலத்திற்கும் உத்வேகம் மற்றும் அறிவொளியின் நித்திய ஆதாரமாகும்.

    நாட்டின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக உழைக்க உறுதியளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் மனு பாக்கர் இரு வெண்கலம் கைப்பற்றினார்.
    • இந்திய டி20 அணி கேப்டனாக சூர்யகுமார் நியமனம் செய்யப்பட்டார்.

    புதுடெல்லி:

    சமீபத்தில் நடந்த பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் வீராங்கனை இரு வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றி அசத்தினார்.

    இந்நிலையில், துப்பாக்கி சுடும் வீராங்கனையான மனு பாக்கர் கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவை சமீபத்தில் சந்தித்தார்.

    இதுதொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த மனுபாக்கர், இந்தியாவின் மிஸ்டர் 360 உடன் ஒரு புதிய விளையாட்டின் நுட்பங்களைக் கற்றுக்கொள்வது என தலைப்பிட்டுள்ளார்.

    மனு பாக்கர் பேட்டராகவும், சூர்யகுமார் யாதவ் துப்பாக்கி சுடும் வீரராகவும் போஸ் கொடுத்தனர். இரு வீரர்களுக்கு இடையிலான உரையாடல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    டி20 உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச், இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவியதுடன், கோப்பையை கைப்பற்றவும் உதவியது. இதனால் இந்திய டி20 அணி கேப்டனாக சூர்யகுமார் நியமிக்கப்பட்டார்.


    • நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
    • பிரதமர் மோடியின் ஆட்சியிடம் இருந்து 140 கோடி இந்தியர்களைப் பாதுகாப்போம் என்றார் கார்கே.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    மத்திய அரசு ஊழியராக குறைந்தபட்சம் 10 ஆண்டு பணியாற்றியவர்கள் ஓய்வூதியத்திற்கு தகுதிபெறுவர். 10 ஆண்டு பணியாற்றிய ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10,000 வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மத்திய அரசை சாடியுள்ளார்.

    இதுதொடர்பாக, கார்கே எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தில் இருக்கும் 'யு' என்பது மோடி அரசின் பல 'யு டர்ன்'களைக் குறிப்பிடுகிறது. பிரதமர் மோடியின் ஆட்சியிடம் இருந்து 140 கோடி இந்தியர்களைப் பாதுகாப்போம்.

    இன்டெக்சேசன் தொடர்பான பட்ஜெட் அறிவிப்பு, வக்பு மசோதாவை கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பியது, ஒலிபரப்பு மசோதா வாபஸ், லேட்ரல் என்ட்ரி வாபஸ், தற்போது ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என அடுத்தடுத்து மத்திய அரசு தன் முடிவுகளில் இருந்து பின்வாங்கி வருகிறது.

    கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதியன்று வெளியான முடிவுகள் மத்திய அரசின் அதிகாரத்தை வென்றுவிட்டன என பதிவிட்டுள்ளார்.

    • மாணவன் பையில் புத்தகங்களுக்கு பதிலாக துப்பாக்கி இருப்பதைக் கண்டு மிரண்டனர்.
    • இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் நஜப்கர் பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வரத் தொடங்கினர்.

    அப்போது ஒரு மாணவன் தயக்கத்துடன் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தான். இதைக் கண்ட பள்ளி நிர்வாகத்தினர், அந்த மாணவனை அழைத்தனர். அவன் வைத்திருந்த புத்தகப் பையை சோதனையிட்டனர். அந்தப் பையில் புத்தகங்களுக்கு பதிலாக துப்பாக்கி இருப்பதைக் கண்டு மிரண்டனர்.

    உடனே இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் துப்பாக்கியை வாங்கி பரிசோதித்தனர். விளையாட்டுப் பொருள் என நினைத்து அதை கொண்டு வந்ததாக மாணவன் கூறினான்.

    துப்பாக்கியைப் பறிமுதல் செய்த போலீசார் உடனே அதற்கான உரிமத்தை ரத்துசெய்யும் நடவடிக்கையில் இறங்கினர்.

    விசாரணையில், அந்த துப்பாக்கி மாணவனின் தந்தைக்குச் சொந்தமானது என்பதும், அவரது பெயரில் உரிமம் வாங்கப்பட்டுள்ளதும், சில மாதங்களுக்கு முன் மாணவனின் தந்தை காலமானதும் தெரிய வந்தது.

    புத்தகப் பையில் துப்பாக்கி கொண்டு வந்த மாணவனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • திட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து 1 கோடி பெண்கள் ஏற்கெனவே லட்சாதிபதி சகோதரிகளாக மாறியுள்ளனர்.
    • நாடு முழுவதும் 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் கிராமங்களில் வசிக்கும் 2 கோடி பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி அவர்களை தொழில் முனைவோராக உயர்த்தி லட்சாதிபதிகளாக்கும் 'லட்சாதிபதி சகோதரிகள்' எனப்படும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது அறிவித்தார்.

    இந்த திட்டத்தின் கீழ், மகளிர் சுய உதவிக்குழுவில் அங்கம் வகிக்கும் பெண்களுக்கு, முதல் ஆண்டு ரூ.10 ஆயிரம் உதவித் தொகையும், அடுத்த 2 ஆண்டுகளில் அரசு உதவித்தொகையாக ரூ.12,500, வங்கிக் கடனாக ரூ.12,500-ம் வழங்கப்படும்.

    இந்த உதவித் தொகையை பெற, பெண்கள் தொடங்க உள்ள சுய தொழில் குறித்த திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் பயனாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் டிரோன்களை இயக்குவது, பழுது பார்ப்பது, பிளம்பிங், எல்.இ.டி. பல்புகள் தயாரிப்பது போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

    இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து 1 கோடி பெண்கள் ஏற்கெனவே லட்சாதிபதி சகோதரிகளாக மாறியுள்ளனர். தற்போது நாடு முழுவதும் 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

    இந்தியாவில் பெண்கள் தலைமையிலான மேம்பாட்டு அணுகுமுறை குறித்து கடந்த 2022-ம் ஆண்டு இந்தியா தலைமை தாங்கிய ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். அதில் சுயஉதவிக் குழு பெண்களின் பங்களிப்பை பாராட்டினார்.

    சுய உதவிக் குழுவில் 10 லட்சம் பெண்கள் இணைந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வேளாண் தொழில்நுட்ப துறையின் புதியகொள்கையின் கீழ் டிரோன்களை இயக்கவும், பழுதுபார்க்கவும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மராட்டியம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    அதன்படி பிரதமர் மோடி இன்று காலை மராட்டிய மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மராட்டிய மாநிலம் ஜல்கான் நகரில் லட்சாதிபதி சகோதரிகள் திட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

    திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்று லட்சாதிபதி சகோதரிகளாக உயர்ந்த 11 லட்சம் பெண்களுக்கு பிரதமர் மோடி சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அதன் பின்னர் நாடு முழுவதிலும் உள்ள லட்சாதிபதி சகோதரிகளிடம் அவர் காணொலி மூலம் கலந்துரையாடினார்.

    பின்னர் 4.3 லட்சம் சுய உதவி குழுக்களை சேர்ந்த 48 லட்சம் உறுப்பினர்கள் பயனடையும் வகையில் ரூ.2,500 கோடி சுழற்சி நிதியையும் அவர் வழங்கினார். மேலும் 2.35 லட்சம் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 25.8 லட்சம் பெண்களுக்கு ரூ.5,000 கோடி வங்கி கடனையும் பிரதமர் மோடி வழங்கினார்.

    அதன் பின்னர் பிரதமர் மோடி ராஜஸ்தானுக்கு புறப்பட்டு சென்றார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரில் இன்று மாலை 4.30 மணிக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் 70-ம் ஆண்டு நிறைவுநாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்கிறார். ராஜஸ்தான் உயர்நீதிமன்ற அருங்காட்சியகத்தையும் அவர் திறந்து வைக்கிறார்.

    ×