என் மலர்tooltip icon

    டெல்லி

    • கூகுளின் கிளவுடு சேவைகளுக்கு அதானி குழுமம் தூய்மையான எரிசக்தியை வினியோகிக்க உள்ளது.
    • அடுத்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வர்த்தக உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் கூகுள் நிறுவனம் தனது 'கிளவுடு' செயல்பாடுகள் மற்றும் சேவைகளுக்கு தேவையான மின்சாரத்தை மின்தொகுப்பில் இருந்து கொள்முதல் செய்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் தூய்மையான எரிசக்தி மூலம் அனைத்து சேவைகளையும் வழங்க திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில், கூகுளின் கிளவுடு சேவைகளுக்கு அதானி குழுமம் தூய்மையான எரிசக்தியை வினியோகிக்க உள்ளது.

    குஜராத் மாநிலம் காவ்டா எரிசக்தி பூங்காவில் அமையும் புதிய சோலார் மற்றும் காற்றாலை கூட்டு திட்டத்தில் இருந்து கூகுளுக்கு 61.4 மெகாவாட் மின்சாரம் சப்ளை செய்யும். அந்த திட்டத்தில், அடுத்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வர்த்தக உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் பதற்றம்.
    • எண்ணெய் சப்ளை பாதிக்கப்படும் என பெரும்பாலான நாடுகள் அச்சம்.

    ஹிஸ்புல்லா தலைவரை இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தி கொலை செய்தது. இதற்குப் பதிலடியாக ஈரான் நேரடியாக கண்டம்விட்டு கண்டம் சென்று தாக்குதல் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேலுக்கான பாதுகாப்பை உறுதி செய்வோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    மேலும் ஈரான் எண்ணெய் ஆலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது குறித்து விவாதித்து வருகிறோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் சிரியா மீதும் தாக்குதல் தாக்குதல் நடத்தியுள்ளது.

    இதன்காரணமாக இஸ்ரேல்- ஈரான் இடையிலான பதற்றம் லெபனான், சிரியா வரை விரிவடைந்த நிலையில் மேலும் மேற்கு ஆசியா வரை இந்த பதற்றம் விரிவடையும் என அஞ்சப்படுகிறது.

    இந்த நிலையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் கேபினட் கமிட்டியுடன் பிரதமர் மோடி நேற்று அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உள்துறை மந்திரி, பாதுகாப்புத்துறை மந்திரி, வெளியுறவுத்தறை மந்திரி, நிதி மந்திரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்த கூட்டத்தில் இஸ்ரேல் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை வீசிய பிறகு மத்திய கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

    ஈரான்- இஸ்ரேல் இடையிலான தற்போதைய மோதல் மேற்கு ஆசியாவிற்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பதற்றத்தால் நாட்டின் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    வணிகம், போக்குவரத்து, கச்சா எண்ணெய், பெட்ரோல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

    மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் இராஜதந்திரம் மற்றும் உரையாடல் மூலமாக அனைத்துப் பிரச்சினைகளையும் அவசரமாகத் தீர்க்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. தற்போதைய மோதல் ஒரு பரந்த பிராந்திய பரிமாணத்தை எடுக்கக்கூடாது எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.

    • இதுதொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
    • கணவன்- மனைவி உறவில் தனிநபர் ஒப்புதல் இருந்ததா என்பதை கண்டறிவது கடினமான காரியம்.

    மனைவியை கணவன் பலவந்தத்தின்மூலம் பாலியல் வன்புணர்வு [Marital rape] செய்வதை குற்றமாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    மனைவியின் அனுமதியின்றி கட்டாயப்படுத்தி கணவன் உறவு வைத்துக்கொள்வதை பாலியல் பலாத்காரமாக கருத வேண்டும் எனக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் மீதான விசாரணையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இருவேறு மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கபட்டன.

    இதனால் இந்த பிரச்சனை உச்சநீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

    அதில், மனைவியின் அனுமதியை மீற செயல்பட கணவனுக்கு உரிமை இல்லை என்றாலும் அதை பாலியல் பலாத்காரமாக வரையறுப்பது மிகவும் கடுமையானது. மாறி வரும் சமூக சூழ்நிலையில் இதை அனுமதித்தால் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    கணவன்- மனைவி உறவில் தனிநபர் ஒப்புதல் இருந்ததா என்பதை கண்டறிவது கடினமான காரியம். எனவே கணவன் மனைவியை பலவந்தப்படுத்தி உறவு கொள்வதை பாலியல் பலாத்காரமாக அறுதியிட்டு தண்டனை வழங்குவது சமூக ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    • சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் அமெரிக்காவில் செயல்பட்டு வருகிறது.
    • இந்தியாவை மத சுதந்திரத்திற்கு எதிரான நாடாக அமெரிக்க வகைப்படுத்த வேண்டும் என்றது.

    புதுடெல்லி:

    அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் சமீபத்தில் அறிக்கை ஒன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், இந்தியாவில் மத சுதந்திரம் மோசமடைந்து வருவதாக குறிப்பிட்டிருந்தது. வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை பரப்பி இந்தியாவில் சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாக கூறப்பட்டு உள்ளது.

    இந்தியாவை மத சுதந்திரத்திற்கு எதிரான தொடர் அத்துமீறலில் ஈடுபடும் நாடாக அமெரிக்க அரசு வகைப்படுத்த வேண்டும்.

    2024-ல் இந்தியாவில் பல்வேறு தனிப்பட்ட நபர்கள் மீது நடத்தப்பட்ட கும்பல் வன்முறைகள், மத தலைவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்கள், மத வழிபாட்டு தலங்கள் இடிக்கப்பட்ட சம்பவங்களை சுட்டிக்காட்டி, அவை அனைத்தும் மத சுதந்திரத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அத்துமீறல்கள் என குறிப்பிட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த ஆணையத்தின் அறிக்கையை நிராகரித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்த அமைப்பு ஒரு தலைபட்சமாக அரசியல் நோக்கத்துடன் செயல்படுகிறது என குற்றம் சாட்டியது.

    இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், இந்த அமைப்பு அரசியல் திட்டத்துடன் செயல்படும் ஒருதலைபட்சமான அமைப்பு. இதன் அறிக்கையானது இந்தியா குறித்து பொய் தகவல்களை கூறுவதுடன், கட்டுக்கதைகளை ஊக்குவிக்கிறது. இதுபோன்ற அறிக்கைகளை தயாரிப்பதை விட்டுவிட்டு, அமெரிக்காவிற்குள் நடக்கும் மனித உரிமை பிரச்சனைகளில் கவனம் செலுத்தினால் அந்த அமைப்பு பயன்பெறும் என்றார்.

    • ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாளுக்கான ஊதியம் தீபாவளி போனசாக வழங்கப்படும்.
    • ஸ்டேஷன் மாஸ்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்டோர் பயன்பெறுவர்.

    புதுடெல்லி:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

    மொத்தம் 11.72 லட்சம் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையாக ரூ.2.028.57 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் தீபாவளி போனஸ் தொகையாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இதன்மூலம் லோகோ பைலட்டுகள், ஸ்டேஷன் மாஸ்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்டோர் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
    • இதில் மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கடந்த 2004-ம் ஆண்டு தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.

    அதன்பின், 2014-ம் ஆண்டு ஒடிசா மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன்மூலம் தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, ஒடிசா என 6 மொழிகள் செம்மொழி அந்தஸ்து பெற்றன.

    இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் வங்காளம், மராத்தி, பாலி, அசாமி, பராகீர் ஆகிய 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கிட ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    சிறப்பு மொழிகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதற்காக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

    பல ஆண்டு கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்மூலம் செம்மொழி அந்தஸ்து பெறும் மொழிகளின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

    • உச்ச நீதிமன்ற கேண்டீனில் வெங்காயம், பூண்டு சேர்க்காத சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்படும்.
    • இந்த அறிவிப்புக்கு வழக்கறிஞர்கள் அதிருப்தி தெரிவித்து உச்ச நீதிமன்ற பார் கவுன்சிலுக்கு கடிதம்

    நவராத்திரி தொடங்கியதால் உச்ச நீதிமன்ற கேண்டீனில் இறைச்சி உணவுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெங்காயம், பூண்டு சேர்க்காத சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்புக்கு வழக்கறிஞர்கள் அதிருப்தி தெரிவித்து உச்ச நீதிமன்ற பார் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

    உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் நவராத்திரி பண்டிகையை ஒட்டி காலம் காலமாக விரதம் கடைப்பிடித்து வருகின்றனர். வழக்கமாக, 9 நாட்களுக்கு விரதம் கடைப்பிடிக்கும் வழக்கறிஞர்கள் வீட்டில் இருந்தே உணவு எடுத்து வரும் நிலையில், முதல் முறையாக உச்ச நீதிமன்றத்தில் இந்நடைமுறையைப் பின்பற்றுவது தவறான முன்னுதாரணம் என அதிருப்தி தெரிவித்த வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். 

    • ஆட்கொணர்வு மனுவை இனிமேல் உச்சநீதிமன்றம் விசாரிக்கும்.
    • நிலவர அறிக்கையை தமிழ்நாடு காவல்துறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

    கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தனது 2 மகள்களை மீட்டுதருமாறு கூறி கோவையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானி காமராஜ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழக்கு தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

    மேலும் ஈஷா யோகா மையம் மீது எத்தனை குற்றவழக்குகள் உள்ளன? என்ற விவரங்களை போலீசார் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வருகிற 4-ந்தேதிக்கு (நாளை) தள்ளிவைத்தனர்.

    ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் போலீசார் ஈஷா யோகா மையத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுடன் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி அம்பிகாவும் சென்று விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கை விவரங்களை போலீசார் ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய இருந்தனர்.

    இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் ஈஷா யோகா மையம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர மனுவாக இன்றே விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் கோரிக்கை விடுத்தனர். தலைமை நீதிபதி அதை ஏற்றுக்கொண்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார்.

    விசாரணைியின்போது காணொலி காட்சி மூலமாக ஈஷா மையத்தில் உள்ள பெண் துறவி லதாவிடம் தலைமை நீதிபதி விசாரணை மேற்கொண்டார். அப்போது லதா, தன்னுடைய விருப்பத்தின் பேரிலேயே ஈஷா மையத்தில் தங்கியிருப்பதாக தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுகளை ஏற்று தமிழ்நாடு காவல்துறை ஈஷா யோகா மையத்தில் எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளார். அத்துடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஆட்கொணர்வு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.

    ஆட்கொணர்வு மனு தாக்கல் தொடர்பான பெண்கள், ஆசிரமத்தில் உள்ள பிற பெண்களுடன் ஆலோசனை நடத்தி அறிக்கை அளிக்க கோவை சட்ட சேவைகள் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. அத்துடன் நிலவர அறிக்கையை தமிழ்நாடு காவல்துறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அத்துடன் விசாரணையை அக்டோபர் 18-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

    • சாதிய அடிப்படையில் சிறையில் வசதிகளை ஏற்படுத்துவது, வேலை வழங்குவதை அனுமதிக்க முடியாது.
    • அரசியலமைப்பு சட்டங்கள் குடிமக்களின் கண்ணியம், சமத்துவத்தை நிலை நிறுத்த வேண்டும்.

    சிறைகளில் சாதி அடிப்படையிலான பிரிவினையை தடுப்பதற்கான முக்கியமான வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தனஞ்சய ஒய் சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் வழங்கிய தீர்ப்பில், சிறைகளில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் -பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான பாரபட்சமான நடைமுறைகளை எடுத்துரைத்தது.

    * சிறையில் குறிப்பிட்ட சாதியை சேர்ந்த கைதிகளை செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய வைப்பதை அனுமதிக்க முடியாது.

    * சாதிய அடிப்படையில் சிறையில் வசதிகளை ஏற்படுத்துவது, வேலை வழங்குவதை அனுமதிக்க முடியாது.

    * சாதிய அடிப்படையில் பாகுபாடு, வெறுப்பை விதைப்பது, அவமதிப்பு செய்வது காலனிய நிர்வாகத்தையே காட்டுகிறது.

    * சிறையில் உள்ள கைதிகளின் மன மற்றும் உடல் நலனை கருத்தில் கொண்டு கண்ணியத்துடனும் மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்.

    * அரசியலமைப்பு பிரிவு 14, 17, 21-ல் உள்ளிட்டவற்றை மீறும் வகையில் உள்ள கையேடுகளை உடனே மாநில அரசுகள் மாற்றியமைக்க ஆணை பிறப்பித்தது.

    * அரசியலமைப்பு சட்டங்கள் குடிமக்களின் கண்ணியம், சமத்துவத்தை நிலை நிறுத்த வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது.

    * சிறைகளில் சாதிய பாகுபாடு இல்லை என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அனைத்து சிறை விதிகளையும் 3 மாதத்துக்குள் மாற்ற வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

    • வரி விகிதங்களை மாற்றுவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
    • மருந்து விலை குறையும்- மின்சார வாகனங்கள் மீதான வரி அதிகரிக்கிறது.

    புதுடெல்லி:

    ஜி.எஸ்.டி. விகிதங்களில் சீர்திருத்தங்கள் கொண்டு வருவது குறித்து மந்திரிகள் குழு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மந்திரிகள் குழுவினர் பங்கேற்ற கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் சாமானிய மக்களுக்கு பலன் கிடைக்கும் வகையில் ஜி.எஸ்.டி. வரி விகிதத்தில் மாற்றங்கள் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக பொது மக்கள் பயன்படுத்தும் 100-க்கும் மேற்பட்ட பொருட்களின் வரி விகிதங்களை மாற்றுவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இதில் உணவு பொருட்களுக்கு விதிக்கப்படும் 12 சதவீத ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக குறைப்பது, மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள், விவசாயிகள் அதிகம் பயன்படுத்தும் டிராக்டர்கள் உள்ளிட்டவற்றிற்கான ஜி.எஸ்.டி. வரியை குறைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    வரி குறைக்கப்படும் பட்சத்தில் ஜி.எஸ்.டி. வருவாய் பாதிக்கப்படும் என்பதால் அதை ஈடுகட்ட சில பொருட்கள் மீதான வரியை உயர்த்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    இதன்படி சில டிராக்டர்களின் விலை 5 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மருந்துகளுக்கான வரி 5 சதவீதம் வரை குறைய உள்ளது. அதே நேரம் மின் வாகனங்களின் மீதான ஜி.எஸ்.டி. வரி அதிகரிக்கப்பட உள்ளது. இதனால் அந்த வாகனங்களின் விலை உயரும்.

    தற்போது மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதமாக உள்ளது. இது 12 சதவீதமாக குறையும் என தெரிகிறது. சிமென்ட் மீதான வரியில் மாற்றம் இருக்காது. அதே நேரம் அழகுசாதன பொருட்கள், குளிர்பானங்கள், சிகரெட், புகையிலை மீதான ஜி.எஸ்.டி. வரி உயர உள்ளது.

    இதுதொடர்பாக வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படுகிறது. இந்த முடிவுகள் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும். அதைத்தொடர்ந்து வரி விகிதங்களில் மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சர்ச்சையான கருத்துக்களை பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார்.
    • பல முறை சிந்தித்து கருத்துக்களை வெளியிட வேண்டும்.

    புதுடெல்லி:

    பா.ஜ.க. எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரணாவத் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    சமீபத்தில் விவசாயிகள் போராட்டம் மற்றும் ரத்து செய்யப்பட்ட 3 பண்ணை சட்டங்கள் தொடர்பாக கங்கனா ரணாவத் தெரிவித்த சர்ச்சையான கருத்துக்கள் நாடு முழுவதும் அவருக்கு எதிராக எதிர்ப்பை கிளப்பிய நிலையில் தனது கருத்துக்களை அவர் திரும்ப பெற்றுக் கொண்டார்.

    நேற்று மகாத்மா காந்தியின் பிறந்தநாள் மற்றும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டன.

    இந்த நிலையில் தேசப்பிதா மகாத்மா காந்தி என்று எழுதப்பட்ட காந்தியின் சிலை அருகே நின்றபடி நடிகை கங்கனா ரணாவத் ஒரு வீடியோ பதிவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

    அதில் இந்திய நாட்டில் தேசப்பிதாக்கள் இல்லை. அனைவரும் மகன்கள் தான். மகாத்மா காந்தியும், லால்பகதூர் சாஸ்திரியும் பாரத தாயின் ஆசி பெற்ற மகன்கள்... என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் மகாத்மா காந்தியின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சிறப்பான முறையில் முன்னெடுத்து வருவதாகவும் அவர் வாழ்த்து தெரி வித்துள்ளார்.

    தேசப்பிதா மகாத்மா காந்தி தொடர்பான கங்கனா ரணாவத்தின் இந்த சர்ச்சையான விமர்சனம் பல்வேறு தரப்பினர் மத்தியில் எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க.விலும் நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளன.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சுப்ரியா ஸ்ரீநேட் கருத்து தெரிவிக்கையில், மகாத்மா காந்தியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடிகை கங்கனா ரணாவத் தேசப்பிதா காந்தி மீது கேலியான விமர்சனத்தை வைத்துள்ளார்.

    மேலும் பா.ஜ.க.வில் கோட்சேயின் வழித்தோன்றல்கள் இது போன்று காந்திக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பது வழக்கம் என்றாலும் கோட்சேயின் பக்தர்களை பிரதமர் நரேந்திர மோடி எந்த வகையில் மன்னிக்கப் போகிறார்.

    மகாத்மா காந்தி தான் நாட்டின் தந்தை நாம் எல்லோரும் அவரது பிள்ளைகள் என்ற உயர்ந்த எண்ணத்தோடு ஒவ்வொரு இந்தியர்களும் மகாத்மா காந்திக்கு உரிய மரியாதை செலுத்தி வருகிறார்கள் என்றும் சுப்ரியா ஸ்ரீநேட் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

    பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. மூத்த தலைவர் மனோரஞ்சன் காலியாவும் கங்கனா ரணாவத்தின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றியுள்ளார்.

    மகாத்மா காந்தியின் 156-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது நடிகை கங்கனா ரணாவத் கூறிய சர்ச்சை கருத்து பதிவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள மனோரஞ்சன் காலியா நடிகை கங்கனாவின் அரசியல் பயணம் மிகக் குறுகியது.

    சர்ச்சை கருத்துக்களை அடிக்கடி கூறி பரபரப்பு ஏற்படுத்துவதை அவர் வழக்கமாக கொண்டிருக்கிறார் என்றும் தனது சமூக வலைதள பக்கத்தில் மனோ ரஞ்சன் காலியா தெரிவித்துள்ளார்.

    மேலும் அரசியல் அவரது முழு நேர துறை அல்ல, அரசியல் வாதிகள் பொறுப்புடனும், எச்சரிக்கையுடனும் பேச கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு முறை அல்ல பல முறை சிந்தித்து கருத்துக்களை வெளியிட வேண்டும்.

    ஆனால் நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சையான கருத்துக்களை பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார் அவரது செயல்பாடுகள் பா.ஜ.க.வுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

    கங்கனா ரணாவத்தின் மகாத்மா காந்தி தொடர்பான சர்ச்சை பதிவிற்கு காங்கிரஸ் மட்டுமின்றி பா.ஜ.க. தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் இமாச்சல பிரதேசம் மாண்டி தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட கங்கனா ரணாவத் தற்போது நடிகை மட்டுமல்ல, பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவரது கருத்துக்கள் இருக்க வேண்டும் என்பதை அவர் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் எதிர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • தேசத்திற்கு தந்தைகள் கிடையாது, மகன்கள் உள்ளனர்.
    • பாரத அன்னையின் இந்த மகன்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.

    அக்டோபர் 2-ந்தேதியான நேற்று காந்தி பிறந்த தினம் மற்றும் மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.

    லால் பகதூர் சாஸ்திரியின் 120-வது பிறந்தநாளையொட்டி நடிகையும், பா.ஜ.க. எம்.பி.யுமான கங்கனா ரானாவத் மரியாதை செலுத்தும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "தேசத்திற்கு தந்தைகள் கிடையாது, மகன்கள் உள்ளனர். பாரத அன்னையின் இந்த மகன்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்" எனத் தெரிவித்திருந்தார்.

    நேற்று மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி கங்கனா ரனாவத் இவ்வாறு சர்ச்சையான கருத்தை பதிவிட்டுள்ளார். மகாத்மா காந்தி நாட்டின் தேசத்தந்தை என்று அழைக்கப்படுகிறார். இதை மனதில் வைத்துதான் கங்கனா ரனாவத் அவ்வாறு பதிவிட்டிருக்கலாம் என சர்ச்சை எழுந்துள்ளது.

    ஏற்கனவே விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தெரிவித்த கருத்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. கங்கனா ரனாவத் தெரிவித்த கருத்தில் இருந்து விலகி நிற்பதாக பா.ஜ.க. தெிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×