என் மலர்tooltip icon

    டெல்லி

    • பூடானில் இந்தியா உதவியுடன் கட்டப்பட்ட நீர்மின் நிலையத்தை தொடங்கி வைக்கிறார்
    • பிரதமர் ஷெரிங் தோப்கேவையும் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தையும் நடத்த உள்ளார்.

    புதுடெல்லி:

    அண்டை நாடான பூடான், இந்தியாவுடன் சிறந்த நட்புறவை பேணி வருகிறது. இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் அந்த நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    பூடானில் 2 நாள் தங்கியிருக்கும் அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் முக்கியமாக பூடான் மன்னர் ஜிக்மே கேசர் வாங்சுக்குடன் சேர்ந்து இருதரப்பு உறவுகளை ஆய்வு செய்கிறார். மேலும் பிரதமர் ஷெரிங் தோப்கேவையும் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தையும் நடத்த உள்ளார்.

    இதைப்போல பூடானின் முன்னாள் மன்னர் ஜிக்மே வாங்சுக்கின் 70-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார். பிரதமரின் இந்தப் பயணத்தின்போது, பூடானில் இந்தியா உதவியுடன் கட்டப்பட்டுள்ள 1020 மெகாவாட் நீர் மின் நிலையத்தை அந்த நாட்டு மன்னருடன் சேர்ந்து திறந்து வைக்கிறார்.

    பிரதமரின் பயணம் இரு தரப்பு நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    • உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் எகிப்தில் நடந்து வருகின்றன.
    • தமிழகத்தின் இளவேனில் வாலறிவன்வெண்கலம் வென்றார்.

    கெய்ரோ:

    உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் எகிப்தில் நடந்து வருகின்றன. இதில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவன் (26), நேற்று நடந்த 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் சிறப்பாக செயல்பட்டார்.

    போட்டியின் இறுதி வரை முன்னணி வகித்த அவர் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் சரிவை சந்தித்து, 3-வது இடத்திற்கு சென்றார்.

    அவர் 232 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

    தென் கொரியாவின் பான் ஹியோஜின் முதல் இடமும், சீனாவின் வாங் ஜைபெய் 2-வது இடமும் பிடித்தனர்.

    உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற 3வது இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை என்ற பெருமையை இளவேனில் வாலறிவன் பெற்றுள்ளார். இதற்கு முன் அஞ்சும் மோடுகில் (2018), மெஹுலி கோஷ் (2023) ஆகியோர் பதக்கம் வென்றுள்ளனர்.

    • ரதாலா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள குடிசைப் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
    • தீ மளமளவௌ அப்பகுதி முழுவதும் பரவியதால் ஒரே புகை மண்டலமாகக் காட்சி அளித்தது.

    புதுடெல்லி:

    டெல்லி ரதாலா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள குடிசைப் பகுதியில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவௌ அப்பகுதி முழுவதும் பரவியதால் ஒரே புகை மண்டலமாகக் காட்சி அளித்தது.

    வீடுகளில் இருந்த கியாஸ் சிலிண்டர்களும் வெடித்துச் சிதறியது. இதனால் உயிருக்கு பயந்து பொதுமக்கள் தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு வெளியில் ஓடி வந்தனர்.

    தகவல் அறிந்ததும் 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 6 மணி நேரம் போராடி அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தீ விபத்தில் ஒருவர் இறந்தார். ஒரு குழந்தை படுகாயம் அடைந்தது. அந்த குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தீவிபத்தில் குடிசைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    • டிசம்பர் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருப்பப் பணிகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் கூடுகிறது.

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் இந்த பரிந்துரைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நடைபெறும் இந்த குளிர்கால கூட்டத் தொடரில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கூட்டத் தொடரின்போது, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் தேவை என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருப்பப் பணிகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அத்வானி ஜியின் வாழ்க்கை இந்தியாவின் முன்னேற்றத்தை வலுப்படுத்த அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
    • அத்வானி எப்போதும் தன்னலமற்ற கடமை உணர்வையும், உறுதியான கொள்கைகளையும் கொண்டுள்ளார்.

    பா.ஜ.க.வின் மூத்த தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானியின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    எல்.கே.அத்வானி ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உயர்ந்த தொலைநோக்குப் பார்வையும் அறிவுத்திறனும் கொண்ட ஒரு அரசியல்வாதியான அத்வானி ஜியின் வாழ்க்கை இந்தியாவின் முன்னேற்றத்தை வலுப்படுத்த அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

    அவர் எப்போதும் தன்னலமற்ற கடமை உணர்வையும், உறுதியான கொள்கைகளையும் கொண்டுள்ளார். அவரது பங்களிப்புகள் இந்தியாவின் ஜனநாயக மற்றும் கலாசார நிலப்பரப்பில் ஒரு அழியாத முத்திரையை பதித்துள்ளன. அவர் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

    • இந்தியா வருகை தொடர்பாக டிரம்ப் தெரிவித்த கருத்துகள் கவனிக்கத்தக்கவை.
    • இது குறித்து பகிர்வதற்கு எந்த தகவலும் இல்லை என வெளியுறவுத்துறை கூறியது.

    புதுடெல்லி:

    கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட பல நாடுகள் தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை சோதனை செய்து வரும் நிலையில், அமெரிக்கா மட்டும் அமைதியாக இருக்கமுடியாது. ஆகையால் நாங்களும் அணு ஆயுத சோதனையை மேற்கொள்வோம். இதுதொடர்பாக போர்த்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

    பாகிஸ்தானின் அணு ஆயுத சோதனை குறித்த டிரம்பின் கருத்தை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். உறுப்பு நாடுகளுக்கு இடையே முக்கிய விஷயங்கள் குறித்து பேசுவதற்கும், இந்தியா பசுபிக் பிராந்திய நலன் குறித்து விவாதிக்கவும் மதிப்புமிக்க தலமாக குவாட் அமைப்பை இந்தியா கருதுகிறது.

    குவாட் அமைப்பு தொடர்ந்து வளர்ச்சி பெறுகிறது. சமீபத்தில் மும்பையில் இந்திய கடலோர பாதுகாப்பு வாரம் நடந்தது. குவாட் துறைமுகம் தொடர்பான கருத்தரங்கமும் நடந்தது.

    இந்தியா வருகை தொடர்பாக டிரம்ப் தெரிவித்த கருத்துகள் கவனிக்கத்தக்கவை. இது குறித்து பகிர்வதற்கு எந்த தகவலும் இல்லை. இது குறித்து அறிந்ததும் உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

    கடந்த சில மாதங்களாக ரஷிய ராணுவத்தில் பல இந்தியர்கள் சேர்க்கப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்களை விரைவில் விடுவிக்கவும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், இந்த விஷயத்தை மீண்டும் ரஷிய அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றுள்ளோம்.

    எங்களுக்கு கிடைத்த தகவலின்படி 44 இந்தியர்கள் தற்போது ரஷிய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். ரஷிய தரப்புடன் தொடர்பில் இருக்கிறோம். இவர்களின் குடும்பங்களுடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். ரஷிய ராணுவத்தில் பணியாற்ற வழங்கப்படும் சலுகைகளில் இருந்து விலகி இருக்கவேண்டும் என்பதை தெளிவுபடுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

    • தெருநாய்களை கையாள வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
    • மாநில செயலாளர்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

    டெல்லியில் தெருநாய்கள் பிரச்சனை தொடர்பாக தாமாக முன்வந்து கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம் டெல்லி மட்டுமல்லாமல் நாடு முழுவதிலும் தெருநாய்களை கையாள வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

    அண்மையில் நடந்த விசாரணையில் இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் வாக்குமூலத்தை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி மாநில செயலாளர்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

    இந்நிலையில் தெருநாய்கள் பிரச்சனை தொடர்பான வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது பேசிய நீதிபதிகள், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து மற்றும் ரெயில் நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பிற பொது இடங்களில் உள்ள தெருநாய்களை பிடித்து முகாம்களில் அடைக்க வேண்டும். அங்கு தெருநாய்கள் நுழையாத வகையில் வேலி அமைக்க வேண்டும்.

    பொது இடங்களில் நாய்கள் நுழையாத வகையில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இந்த உத்தரவு பின்பற்றப்படுவதை உறுதி செய்ய அனைத்து மாநில அரசுகளும் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.  

    • ஷேக் ஹசீனாவை நாடு கடத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • யூனுஸ் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்கிறார்.

    தான் வாழ்வதற்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்கியதற்காக இந்திய மக்களுக்கு வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்துள்ளார்.

    மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து அவாமி லீக் ஆட்சிக் கவிழ்ந்து ஆகஸ்ட் 2024 இல் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி வந்தார்.

    வங்கதேசத்தில் தற்போது நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் ஆட்சி செய்கிறது.

    மக்கள் மீது படைகளை ஏவி தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட மனிதாபிமான மீறல் குற்றச்சாட்டுகளுக்காக அந்நாட்டு நீதிமன்றத்தில் ஷீக் ஹசீனா பல்வேறு வழக்குகள் விசாரணையில் உள்ளது.

    ஷேக் ஹசீனாவை நாடு கடத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கும் தடை விதிக்கப்பட்டது.

    அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வங்கதேசம் தேர்தல்களை சந்திக்கவுள்ள நிலையில், ஷேக் ஹசீனா யூனுஸ் அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

    ஷேக் ஹசீனாவின் ஆட்சியின் கீழ் வங்கதேசம் இந்தியாவுடன் சுமூகமான உறவில் இருந்த நிலையில் தற்போது முகமது யூனுஸ் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.

    இந்நிலையில் இந்திய அங்கில ஊடகத்திற்கு ஷேக் ஹசீனா அளித்த பேட்டியில், வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் முகமது யூனுஸின் நிலைப்பாடுதான் இந்தியாவுடனான வங்கதேச உறவுகள் மோசமடையக் காரணம்.

    யூனுஸ் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்கிறார். இது இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவை மோசமாக்கும்.

    சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல், சட்ட ரீதியான ஒடுக்குமுறைகள் இருநாடுகளுக்கு இடையேயான மோதல் போக்கிற்கு காரணம். இதுபோன்ற செயல்பாடுகளை வங்கதேச மக்கள் விரும்பவில்லை. இருநாடுகளிடையேயான உறவு மிகவும் ஆழமானது. இந்தியா எங்களின் உண்மையான நட்பு நாடு என்பதில் பெருமை கொள்கிறோம்.

    இத்தனை நாட்கள் பாதுகாப்பான அடைக்கலம் கொடுத்த இந்திய மக்களுக்கு நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

    ஆட்சியில் இருந்தபோது மக்களைத் தாக்க படைகளுக்கு நான் உத்தரவிட்டேன் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. இதை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும். இருப்பினும், வங்கதேசத்தில் இப்போது சுதந்திரமான நீதித்துறை அமைப்பு இல்லை.

    அவாமி லீக் கட்சி முறையற்ற காரணத்திற்காக தடை செய்யப்பட்டது. சட்டப்பூர்வமாக அதை எதிர்த்துப் போராடுவேன்" என்று தெரிவித்துள்ளார். 

    • இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.
    • இரண்டு என்ஜின்களுக்கும் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.

    அகமதாபாத்தில் 260 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானியை குறை கூற முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் கட்டுப்பாட்டை இழந்து, மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.

    விமானத்தின் தலைமை விமானியாக இருந்த சுமித் சபர்வாலும் விபத்தில் இறந்தார். விமானி எரிபொருள் ஸ்விட்சை அணைத்ததே விபத்துக்கு காரணம் என அமெரிக்க ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கூறப்பட்டு வந்தது.

    மேலும் இந்த ஆண்டு ஜூலை மாதம் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (ஏஏஐபி) வெளியிட்ட முதற்கட்ட அறிக்கையில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இரண்டு என்ஜின்களுக்கும் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.

    இரண்டு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் விரைவாக "கட்ஆஃப்" நிலைக்குச் சென்றதாக அறிக்கை கூறியது. சுமார் 10 வினாடிகளுக்குப் பிறகு, சுவிட்சுகள் மீண்டும் இயக்கப்பட்டன, ஆனால் என்ஜின்கள் ஏற்கனவே அணைந்து விமானம் விபத்துக்குள்ளானது என்று அறிக்கை கூறியது.

    இந்த அறிக்கையை எதிர்த்து சுமித் சபர்வால் தந்தை புஷ்கராஜ் சபர்வால் மற்றும் இந்திய விமானிகள் கூட்டமைப்பு (எஃப்ஐபி) இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.

    அவர்களின் மனுக்களை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இன்றைய விசாரணையில், ஏஏஐபி அறிக்கையுடன் உடன்படவில்லை என்றும் விமானியை குறை சொல்ல முடியாது என்றும் தெரிவித்தது.

    மேலும் இதுகுறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (டிஜிசிஏ) உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.  

    • பிரதமர் மோடி 'வந்தே மாதரம்' பாடலின் நினைவு தபால்தலை-நாணயத்தை வெளியிட்டார்.
    • இசை நிகழ்ச்சியை பிரதமர் மோடி பார்த்து இசைக்கு ஏற்றபடி தலையை அசைத்து ரசித்தார். கைகளை தட்டி தாளமும் போட்டார்.

    இந்திய சுதந்திர போராட்டத்தில் "வந்தே மாதரம்" பாடல் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும்.

    'வந்தே மாதரம்' பாடலை மேற்கு வங்காள கவிஞரான பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றியுள்ளார். இந்த பாடல் முதல் முதலாக 1875-ம் ஆண்டு நவம்பர் 7-ந்தேதி பங்காதர்ஷன் என்ற இலக்கிய இதழில் வெளியிடப்பட்டது.

    'வந்தே மாதரம்' பாடல் தேசத்தை தட்டி எழுப்பிய ஒரு உணர்வுப்பூர்வமான கீதம் ஆகும். 'வந்தே மாதரம்' தேசிய பாடலின் 150 ஆண்டு கள் கொண்டாட்டம் புது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கில் இன்று காலையில் நடைபெற்றது.

    இதில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி, வந்தே மாதரம் ஒற்றை நாதம், ஓராயிரம் வடிவங்கள் சிறப்பு பொருட் காட்சி, வந்தே மாதரம் வர லாறு குறித்த குறும்படம், கலாச்சார நிகழ்ச்சிகள், நினைவு அஞ்சல் தலை மற்றும் நாணயம் வெளியீட்டு விழா ஆகியவையும் நடந்தது.

    இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மத்திய அமைச்சர் கஜேந்தி ரசிங் ஷெகாவத், டெல்லி துணைநிலை ஆளுனர் வினய்குமார் சக்சேனா, டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் பங்கேற்ப தற்காக பிரதமர் மோடி காலை 9.30 மணியளவில் வந்தார். அங்கு நடைபெற்று வரும் பொருட்காட்சியில் வந்தே மாதரம் பாடலின் இசைத் தட்டுகள்இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு கால கட்டத்திலும் வந்தே மாதரம் பாடல் என்னென்ன இசைத் தட்டு வடிவங்களில் கிடைத்தன என்பது பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

    இதில் பலவிதமான இசைக் தட்டுகளும் இடம் பெற்றிருந்தன. அவை அனைத்தையும் பிரதமர் மோடி ஒவ்வொன்றாக பார்த்து அதனை பற்றி அறிந்து கொண்டார்.

    மேலும், வந்தே மாதரம் பாடல் கொண்ட இசைத் தட்டு ஒன்றை கிராம போன் மூலம் பிரதமர் மோடி ஒலிக்க விட்டார். கண்காட்சி யை பார்வையிட்ட பிறகு பிரதமர் மோடி காலை 9.50 மணியளவில் வந்தார். பின்னர் நிகழ்ச்சிகள் தொடங்கின. முதலில் 'வந்தே மாதரம்' பாடலை பாடகிகள் உணர்வுப்பூர்வமாக பாடினார்கள்.

    அவர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவருமே எழுந்து நின்று 'வந்தே மாதரம்' பாடலை பாடினார்கள். பாடல் முடிந்ததும் 'வந்தே மாதரம்' என அனைவரும் குரல் எழுப்பினார்கள்.

    அதன் பிறகு விழாவில் பிரதமர் மோடிக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் தெடர்ந்து ஒரு வருடம் கொண்டாடப்பட உள்ளது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    அதன் பிறகு 'வந்தே மாதரம்' பாடலின் 150 ஆண்டுகள் நினைவாக 150 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். பின்னர் "வந்தே மாதரம்" பாடலின் நினைவு தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். 

    பின்னர் 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு களை கொண்டாடும் வகையில் vandemataram 150.in என்ற இணையதளத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதில் பொது மக்கள் 'வந்தே மாதரம்' பாடலை தங்களின் தனித்து வமான குரலில் பாடி பதி வேற்றம் செய்வது தொடர் பான நடைமுறைகள் விளக் கப்பட்டன. பின்னர் 'வந்தே மாதரம்' பாடலின் தனித்துவ தத்தை விளக்கும் குறும் படம் ஒன்றும் வெளியிடப் பட்டது.

    அதனைத் தொடர்ந்து பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் இசைக் கலைஞர்கள் ஏராளமானோர் இசையமைக்க பாடகர்கள் மற்றும் 'வந்தே மாதரம்' பாடலின் முழு தொகுப்பையும் பாடினார்கள். அதை பிரதமர் மோடி பார்த்து இசைக்கு ஏற்றபடி தலையை அசைத்து ரசித்தார். கைகளை தட்டி தாளமும் போட்டார்.

    அதன் பிறகு பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது:-

    இந்தியாவின் சுதந்திர வேட்கைக்கான எழுச்சி யூட்டிய பாடல்களில் பிர தானமானது 'வந்தே மாதரம்' பாடலாகும். 'வந்தே மாதரம்' ஒரு பாடல் மட்டு மல்ல, அது ஒரு மந்திரமாகும். 'வந்தே மாதரம்' பாடல் இந்தியர்களுக்கு ஊக்க மளிக்கிறது. இந்தியர்களாகிய நாம் அடைய முடியாத இலக்குகள் என்று எதுவும் இல்லை.

    வந்தே மாதரம் இந்தியா வின் சுதந்திர போராட்டத் தின் குரலாக இருந்தது. வந்தே மாதரம் இந்தியாவின் ஒற்றுமையின் சின்னமாகும். ஏனென்றால் அது தலை முறைகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் எனது இந்திய சகோதர-சகோதரி களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 'வந்தே மாதரம்' பாடலின் 150 ஆண்டுகளை இன்று நாம் கொண்டாடும் வேளை யில் இது நமக்கு புதிய உத்வேகத்தை தருகிறது.

    மேலும், நாட்டு மக்களுக்கும் புதிய ஆற்றலை அளிக்கிறது. 'வந்தே மாதரத்தின் முக்கியமான உணர்வு பாரதம். இந்தியா ஒரு தேசமாக உருவானது. இந்தியாவின் கருத்துருவிற்கும், நாட்டின் சுதந்திரத்திற்கான ஏக்கத்துக்கும் பின்னால் உள்ள கருத்தியல் சக்தியை இந்த பாடல் உள்ளடக்கியுள்ளது.

    இதயத்தின் ஆழத்தில் இருந்தும், உணர்ச்சிகளில் இருந்தும் 'வந்தே மாதரம்' போன்ற ஒரு பாடல் வெளிப்படுகிறது. அடிமைத்தனத்தின் அந்த கால கட்டத்தில் 'வந்தே மாதரம்' பாடல் இந்திய சுதந்திரத்தின் பிரகடனத்தை பற்றியதாக மாறியது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    • தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தினமும் 1,500-க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகைகள் மற்றும் புறப்பாடுகளை கையாண்டு வருகிறது.

    இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாடு மையத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

    இது தொடர்பாக விமான நிலைய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இதை விரைவில் தீர்க்க விமான நிலைய நிர்வாகம் உள்பட அனைத்து தரப்பினரும் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. விமானப் பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    பயணிகளுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று தெரிவித்தது. தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெல்லி விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் குறித்த நேரத்தில் புறப்பட முடியவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் விமான நிலையத்தில் காத்து கிடந்தனர்.

    விமான நிறுவனங்கள் தங்கள் பயணிகளுக்கு உதவிகளை வழங்கின. மேலும் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் தங்கள் விமான நிலையைச் சரிபார்க்குமாறு பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் அறிவுறுத்தின.

    நேற்று மாலை டெல்லி விமான நிலையத்தில் சர்வர் செயலிழப்பு காரணமாக 20 விமானங்கள் தாமதமாக வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரெயில் நிலையங்களில் இருந்தும் நாய்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
    • மருத்துவமனை வளாகங்களில் இருந்தும் நாய்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

    பேருந்து நிலையங்களில் இருந்து நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

    ரெயில் நிலையங்களில் இருந்தும் நாய்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதேபோல், மருத்துவமனை வளாகங்களில் இருந்தும் நாய்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

    பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள நாய்களை பிடித்து முகாம்களில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் தெருநாய் பிரச்சனை அதிகரித்து வருவதை தடுக்க கோரிய வழக்கில் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×