என் மலர்tooltip icon

    பீகார்

    • பிரதமர் தேவையற்ற பிரச்சினைகள் குறித்து பேசுகிறார்.
    • ஊழல், பீகாரில் NDA அரசின் தவறான ஆட்சி குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    பீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் ஓய்வடைகிறது. இதனால் தலைவர்கள் பீகாரில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி சஹர்சாவில் நடைபெற தேர்தல் பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

    அப்போது பிரியங்கா காந்தி கூறியதாவது:-

    பீகார் தேர்தலுக்காக சலுகைகள் அறிவிப்பதற்கு முன் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 20 ஆண்டுகளில் பீகார் மாநிலத்திற்கு NDA என்ன செய்தது என்பது குறித்து முதலில் பதில் அளிக்க வேண்டும்.

    வேலையின்மை பெருகி வருவதாலும், வேலைவாய்ப்பு உருவாக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் பாஜகவின் கார்ப்பரேட் நண்பர்களுக்கு வழங்கப்படுவதாலும் பீகாரின் இளைஞர்கள் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    பிரதமர் தேவையற்ற பிரச்சினைகள் குறித்து பேசுகிறார். ஊழல், பீகாரில் NDA அரசின் தவறான ஆட்சி குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

    பீகாரை அவமதித்ததாக அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் பிரதமர் குற்றம் சாட்டுகிறார். அவர் புதிய அமைச்சகத்தை (அவமதிப்பு அமைச்சகம்) உருவாக்க வேண்டும்.

    பீகார் அரசை நடத்துவது பிரதமர், மத்திய தலைவர்கள்தான், நிதீஷ் குமார் அல்ல.

    அரசு அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மக்களின் வாக்குரிமையை பீகாரில் உள்ள NDA அச்சுறுத்துகிறது.

    இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.

    • தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி-காங்கிரசின் மகாபந்தன் கூட்டணி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
    • யார் சிறந்த முதலமைச்சர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று தேஜஸ்வி யாதவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    பீகார் மாநில சட்டசபைக்கு 2 கட்டமாக அடுத்த மாதம் 6 மற்றும் 11-ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரமாக பணியாற்றி வருகிறது.

    ஆட்சியைக் கைப்பற்றும் வேட்கையில் எதிர்க்கட்சியான தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி-காங்கிரசின் மகாபந்தன் கூட்டணி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    சட்டமன்ற தேர்தலை ஒட்டி தனியார் செய்தி தொலைக்காட்சி சேனலுக்கு தேஜஸ்வி யாதவ் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் இந்தியாவின் சிறந்த முதலமைச்சராக நீங்கள் யாரைக் கருதுகிறீர்கள்? சிலர் இன்னமும் மோடிஜியின் பெயரையும் சொல்கிறார்கள். சிலர் முலாயம் சிங்கின் பெயரைச் சொல்கிறார்கள். சிலர் அகிலேஷ் யாதவின் பெயரையும் சொல்கிறார்கள். சிலர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயரையும் சொல்கிறார்கள். ஆகையால் இப்போது இருப்பவர்களில் யார் சிறந்த முதலமைச்சர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த தேஜஸ்வி, "இப்போது இருப்பவர்களில் எனக்கு ஸ்டாலின் என்று தோன்றுகிறது. நம்முடைய (பீகார்) முதலமைச்சர் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளைக் கொண்டு வருவதை நான் பார்க்கவில்லை. முதலீட்டைக் கொண்டுவருவதற்காக அவர் எதுவும் செய்வதில்லை. ஆனால், ஸ்டாலின் அவர்கள் முயற்சி செய்கிறார். அவர் முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்துகிறார், முதலீடுகளைக் கொண்டு வருகிறார்" என்று தெரிவித்தார்.

    இந்த வீடியோவை திமுகவினர் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    • 56 அங்குல மார்பு இருப்பதாக பெருமை பேசும் நரேந்திர மோடி, ஆபரேஷன் சிந்தூர் போது டொனால்ட் டிரம்ப் அழைத்தபோது பயந்தார்.
    • மகாத்மா காந்தியைப் பாருங்கள், அவர் ஒல்லியாக தான் இருந்தார்.

    பீகார் தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தி நேற்று பேகுசராய் மற்றும் ககாரியா பகுதியில் பேரணி சென்று பிரசாரம் மேற்கொண்டார்.

    பிரசாரத்தில் பேசிய அவர், "பெரிய மார்பு இருப்பதால் மட்டும் நீங்கள் வலிமையானவராகிவிட மாட்டீர்கள். மகாத்மா காந்தியைப் பாருங்கள், அவர் ஒல்லியாக தான் இருந்தார், அந்தக் காலத்தின் வல்லரசான ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடினார்.

    ஆனால் 56 இன்ச் மார்பு இருப்பதாக பெருமை பேசும் நரேந்திர மோடி, ஆபரேஷன் சிந்தூர் போது டொனால்ட் டிரம்ப் அழைத்தபோது பயந்தார். பின்னர், பாகிஸ்தானுடனான இராணுவ மோதல் இரண்டு நாட்களுக்குள் முடிவுக்கு வந்தது.

    மோடி டிரம்பிற்கு பயப்படுவது மட்டுமல்லாமல், அம்பானி மற்றும் அதானி ஆகியோரால் ரிமோட் கண்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறார். 

    1971 ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரின் போது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை அமெரிக்கா அச்சுறுத்தியபோது, அவர் பயப்படவில்லை, சரியானதை செய்தார்.

    ஆனால் டிரம்ப் மோடியிடம் ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தச் சொன்னபோது, மோடி அதை நிறுத்தினார்" என்று விமர்சித்தார்.

    மேலும் மோடி அரசின் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு போன்ற முடிவுகள் சிறு வணிகங்களை அழித்து பெரிய வணிகர்களுக்கு பயனளிக்கும் நோக்கில் இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். 

    • தனது வழக்கமான வெள்ளை டீ-சர்ட் மற்றும் கருப்பு பேன்ட்டுடன், ராகுல் காந்தி ஏரியில் இறங்கி நீச்சல் அடித்தார்.
    • மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படும் மூன்று மாத கால இடைவெளியில், ஒவ்வொரு மீனவக் குடும்பத்துக்கும் தலா ரூ.5,000 நிதியுதவி வழங்கப்படும்.

    பீகார் சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வருகிற 6-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 2-வது கட்டமாக எஞ்சிய 122 இடங்களுக்கு 11-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    தேர்தலில் ஆளும் என்டிஏ கூட்டணி மற்றும் மகாபந்தன் (இந்தியா) கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது தேர்தல் பிரச்சாரத்தில் வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டுள்ளார்.

    பீகார் மாநிலம் பேகுசராய் பகுதியில் தனது வழக்கமான வெள்ளை டீ-சர்ட் மற்றும் கருப்பு பேன்ட்டுடன், ராகுல் காந்தி ஏரியில் இறங்கி நீச்சல் அடித்தார்.

    இடுப்பளவு தண்ணீரில் நின்றபடி அங்குள்ள உள்ளூர் மீனவர்களுடன் மீன்பிடித்து மகிழ்ந்தார். மேலும் அவர்களின் பிரச்சனைகள், எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ராகுல் வாகக் கேட்டறிந்தார்.

    இந்த புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த காங்கிரஸ், மீன் வளர்ப்புக்கு காப்பீட்டுத் திட்டம், மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படும் மூன்று மாத கால இடைவெளியில், ஒவ்வொரு மீனவக் குடும்பத்துக்கும் தலா ரூ.5,000 நிதியுதவி ஆகிய வாக்குறுதிகளை குறிப்பிட்டது.

     ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், "மீனவர்கள் பீகார் பொருளாதாரத்தின் மிக முக்கிய அங்கம். அவர்களின் உழைப்பும், தொழில் குறித்த ஆழமான புரிதலும் எனக்கு உத்வேகம் அளிக்கிறது. அவர்களின் உரிமை மற்றும் கௌரவத்திற்காக நான் உறுதுணையாக இருப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.  

    • ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றிக்குப் பிறகு நாடு பெருமிதம் கொண்டது.
    • ஆனால் காங்கிரசும் அதன் கூட்டாளியான ராஷ்டிரீய ஜனதா தளமும் அதை விரும்பவில்லை.

    பாட்னா:

    பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ராவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    காங்கிரஸ், ஆர்ஜேடி ஆகிய கட்சிகள் பீகாரின் அடையாளத்தை அழிக்க விரும்புகின்றன.

    வாக்காளர்கள் இரண்டு கட்சிகளைப் பற்றி விழிப்புடன் இருக்கவேண்டும்.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றிக்குப் பிறகு நாடு பெருமிதம் கொண்டது. ஆனால் காங்கிரசும் அதன் கூட்டாளியான ராஷ்டிரீய ஜனதா தளமும் அதை விரும்பவில்லை.

    பாகிஸ்தானில் குண்டுவெடிப்புகள் நடந்தன. ஆனால் காங்கிரஸ் அரச குடும்பத்தினர் தூக்கமில்லாத இரவுகளைக் கழித்தனர். சிந்தூர் நடவடிக்கையின் அதிர்ச்சியிலிருந்து பாகிஸ்தானும், காங்கிரஸ் ஆதரவாளர்களும் இன்னும் மீளவில்லை.

    ஜம்மு காஷ்மீரில் எந்த அரசாங்கமும் 370-வது பிரிவை ரத்துசெய்ய முடியாது. ஆனால் நான் ஒரு உத்தரவாதம் அளித்து அதைச் செய்தேன்.

    பீகார் விரைவில் கிழக்கு இந்தியாவின் ஜவுளி மற்றும் சுற்றுலாவின் முக்கிய மையமாக மாறும். பீகார் இளைஞர்கள் அனைவரும் சொந்த மாநிலத்தில் பணியாற்ற வேண்டும். மாநிலத்தை பெருமைப்படுத்த வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

    தேர்தலுக்கு பிறகு ஆர்.ஜே.டி. மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் மோதி கொள்ளும். ஆர்.ஜே.டி. கட்சியைச் சேர்ந்த தேஜஸ்வியை முதல் மந்திரி வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் விரும்பவில்லை. இரண்டு கட்சிகள் இடையே மிகப்பெரிய உட்கட்சி மோதல் நடந்து வருகிறது.

    மகா கூட்டணியின் தேர்தல் அறிக்கை பொய்களின் மூட்டையாக இருக்கிறது. பொய்கள், வஞ்சகம் மறறும் மக்களை ஏமாற்றுவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

    வரும் ஆண்டுகளில் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

    • தேர்தல் வரைக்கும் நீங்கள் கேட்கும் எல்லாத்தையும் செய்வதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.
    • ஆனால் தேர்தலுக்குப் பிறகு பீகாருக்கு வரவும் மாட்டார். உங்களுடைய பேச்சைக் கேட்கவும் மாட்டார்.

    பீகார் மாநிலத்தின் முதற்கட்ட தேர்தல் வருகிற வியாழக்கிழமை 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் இடங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித் ஷா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்தியா கூட்டணியின் ராகுல் காந்தி பெகுசாராய் என்ற இடத்தில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது தேர்தலுக்குப் பின்னர் மக்களின் பேச்சை பிரதமர் மோடி கேட்கமாட்டார் என விமர்சனம் செய்தார்.

    இது தொடர்பாக ராகுல் காந்தி பேசியதாவது:-

    நரேந்திர மோடி உரை நிகழ்த்துகிறார். பீகாருக்கு வருகிறார். வாக்குறுதிகள் தருகிறார். தேர்தல் வரைக்கும் நீங்கள் கேட்கும் எல்லாத்தையும் செய்வதாக சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் தேர்தலுக்குப் பிறகு பீகாருக்கு வரவும் மாட்டார். உங்களுடைய பேச்சைக் கேட்கவும் மாட்டார். வெறுமன வெளியேறிவிடுவார்.

    நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ, அதை இப்பொழுதே செய்யுங்கள் என நான் சொல்கிறேன். பிரதமர் மோடி வாக்குகளுக்காக எது வேண்டுமானாலும் செய்வார். நீங்கள் யோகா செய்யச் சொன்னால் சில ஆசனங்களை அவர் செய்வார். ஆனால் தேர்தலுக்கு பிறகு, அதானி மற்றும் அம்பானியால் அனைத்து பாடல்கள், நடனங்கள் நடத்தப்படும். இந்த எல்லா விசயங்களும் ஜஸ்ட் டிராமாதான்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    • பீகார் சட்டசபைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
    • தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 14-ம் தேதி எண்ணப்படுகின்றன.

    பாட்னா:

    பீகார் மாநில சட்டசபைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 14-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    ஜன் சுராஜ் கட்சியைச் சேர்ந்த பிரியதர்ஷி பியூஷ் மொகமா தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவருக்காக வாக்குகள் சேகரிக்க பிரசாரத்தில் ஈடுபடும் பணியில் துலார்சந்த் யாதவ் (75) ஈடுபட்டார். இவர் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் முன்னாள் மூத்த தொண்டர் மற்றும் உள்ளூர் தலைவராகவும் இருந்துள்ளார்.

    இந்நிலையில், அரசியல் குழுக்கள் இடையே நடந்த மோதலில் துலார்சந்த் நேற்று படுகொலை செய்யப்பட்டார்.

    விசாரணையில், முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் வேட்பாளர் ஆனந்த் குமார் சிங் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். மேலும், அவருடைய உதவியாளர்கள் மணிகாந்த் தாக்குர் மற்றும் ரஞ்சித் ராம் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய பாட்னா போலீஸ் அதிகாரி கார்த்திகேய சர்மா, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி இன்று 2 பிரசார பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.
    • ராகுல் இன்று பெகுசராய், ககாரியா ஆகிய 2 இடங்களில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.

    பீகார் சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வருகிற 6-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 2-வது கட்டமாக எஞ்சிய 122 இடங்களுக்கு 11-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    இதையொட்டி தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும், பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

    பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித்ஷா ஆகியோர் இன்று பீகாரில் முற்றுகையிட்டு பிரசாரம் செய்கிறார்கள்.

    பிரதமர் மோடி இன்று 2 பிரசார பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். ரோடுஷோவிலும் பங்கேற்கிறார். பாட்னாவில் இன்று மெகா ரோடுஷோ நடத்துகிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு அவரது 3-வது ரோடுஷோ இதுவாகும்.

    ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இங்கு ரோடு ஷோவில் ஈடுபட்டார். முன்னதாக ஆரா மற்றும் நவாடா ஆகிய 2 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார். மோடி ஏற்கனவே 2 முறை பீகாரில் பிரசாரம் செய்து இருந்தார்.

    இதேபோல மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முசாபர்பூர் மற்றும் வைஷாலி ஆகிய 2 இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

    இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி ஏற்கனவே பிரசாரம் செய்து இருந்தார். அவர் இன்று பெகுசராய், ககாரியா ஆகிய 2 இடங்களில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். தலைவர்கள் முற்றுகையால் பீகார் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    • வருகிற 6-ந்தேதி 121 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
    • நிதிஷ்குமார் அரசாங்கத்தின் கீழ் மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு மேம்பட்டுள்ளது.

    பீகாரில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. வருகிற 6-ந்தேதி 121 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    மீதி உள்ள 122 இடங்களுக்கு 2-ம் கட்டமாக வருகிற 11-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    இதையொட்டி தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெறுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும், முதலமைச்சருமான நிதிஷ்குமார் உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 160 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாட்டின் மிகவும் அரசியல் ரீதியாக விழிப்புணர்வு பெற்ற மாநிலங்களில் பீகாரும் ஒன்று. கடந்த 20 ஆண்டுகளில் பீகார் அடைந்துள்ள முன்னேற்றத்தை மக்கள் கண்டிருக்கிறார்கள்.

    லாலு பிரசாத், ராப்ரி தேவி ஆகியோர் பீகாரை பின்னோக்கி இழுத்து சென்றனர். ஆனால் இன்று அது எங்கே இருக்கிறது என்று பாருங்கள். நிதிஷ்குமார் அரசாங்கத்தின் கீழ் மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு மேம்பட்டுள்ளது என்று இளைஞர்கள் கூறி வருகின்றனர்.

    இதுவே முன்னேற்றத்திற்கு அடிப்படை என்று அவர்கள் கூறுவார்கள். கங்கை நதியின் கீழ் 4 பாலங்களை கட்டினோம். இன்னும் 10 பாலங்கள் கட்டுமானத்தில் இருக்கின்றன. இது சாத்தியமாகும் என்று யாரும் நினைக்கவில்லை.

    கடந்த ஆட்சியில் விவாதங்கள், கொள்ளை, கொலை, வழிப்பறி பற்றியதாக இருந்தது. ஆனால் இன்று விவாதங்கள் முன்னேற்றம் பற்றி மாறியுள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 160 தொகுதிகளில் வெற்றி பெற்று மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும்.

    நாங்கள் பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் செல்வதை பல முறை தெளிவுப்படுத்தினோம். அவரே முதலமைச்சர் ஆவார். வெற்றிக்கு பிறகு அரசியலமைப்பு சட்டப்படி நாங்கள் செயல்படுவோம். எங்கள் பலத்தை பற்றி நினைக்காமல் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதே பா.ஜ.க.,-வின் கொள்கை.

    குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். மாநிலத்தில் 2.8 கோடி குடும்பங்கள் உள்ளன. புதிதாக 2 கோடிக்கும் அதிகமான வேலை கொடுக்க வேண்டுமானால் பி, சி, டி பிரிவுகளில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.

    அதற்கு சராசரியாக ரூ.39 ஆயிரம் சம்பளம் என நிர்ணயித்து கொண்டாலும் மொத்தம் ரூ.12.85 லட்சம் கோடி தேவை. இது பீகாரின் பட்ஜெட்டை விட 4 மடங்கு அதிகமாகும். சாத்தியமில்லாத இந்த வாக்குறுதியை தேஜஸ்விக்கு ராகுலும், லாலுவுதான் அளித்திருப்பார்கள்.

    புலம்பெயர்வு குறைய பீகாரிலேயே சுய வேலைவாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும். மகாகத்பந்தன் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் காட்டு ராஜ்ஜியம் திரும்பும். எனவே மக்கள் வாக்களிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பீகார் மாநில தேர்தல் மத்தியில் பாஜக தலைமையிலான அரசை நிலைகுலையச் செய்யும்.
    • மத்திய அரசு நீண்ட காலம் நீடிக்கப்போவதில்லை.

    இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பூரினியா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அகிலேஷ் யாதவ் பேசியதாவது:-

    பீகார் மாநில தேர்தல் மத்தியில் பாஜக தலைமையிலான அரசை நிலைகுலையச் செய்யும். மத்திய அரசு நீண்ட காலம் நீடிக்கப்போவதில்லை. பீகார் மக்கள், மாநிலத்தின் எதிர்காலத்தை மேம்படுத்துபவர்கள் அல்ல. ஒட்டுமொத்த நாட்டையும் மேம்படுத்துவார்கள். உ.பி. மக்கள் அவாத்தில் பாஜகவை தோற்கடித்தனர். அதேபோல் பீகார் மக்கள் மகாத்தில் அவர்களை தோற்கடிப்பார்கள்.

    இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

    மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக-வுக்கு மிகவும் குறைவான இடங்களே கிடைத்தன. இதனால் பாஜக-வால் தனிப்பெரும்பான்மை றெ முடியாமல் போனது. 80 தொகுதிகளில் பாஜக 33 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சமாஜ்வாடி 37 இடங்களில் வெற்றி பெற்றது.

    • லாலு பிரசாத் கட்சி பீகாரில் மீண்டும் காட்டு ராஜ்ஜியத்தை கொண்டு வர விரும்புகிறது.
    • ஆர்.ஜே.டி. மற்றும் அதன் டிஎன்ஏ மாறவில்லை.

    பீகார் மாநிலத்தில் வருகிற 6ஆம் தேதி மற்றும் 11ஆம் தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் தலைவர்கள் தீவிர தேர்தல் பிராசரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மோசமான வானிலை காரணமாக சிவான் மன்றும் முசாபர்பூரில் நடைபெற்ற பேரணியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவால் நேரடியாக கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் காணொலி மூலம் பேசினார். அப்போது ஜே.பி. நட்டா பேசியதாவது:-

    ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சியின் கீழ் பீகார் காட்டு ராஜ்ஜியத்தை கண்டது. மாநிலத்தில் முழுமையான அராஜகம் நிலவியது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்தது. தொழிலதிபர்கள் கடத்தல் சம்பவம் அதிகரித்து கொண்டு வந்தது.

    ஷஹாபுதீனின் பயங்கரத்தை சிவான் கண்டிருந்தது. மீண்டும் ஒருமுறை அவரது மகனை சட்டசபை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் நிறுத்தியுள்ளது. லாலு பிரசாத் கட்சி பீகாரில் மீண்டும் காட்டு ராஜ்ஜியத்தை கொண்டு வர விரும்புகிறது. ஆர்.ஜே.டி. மற்றும் அதன் டிஎன்ஏ மாறவில்லை. அதனால்தான் ஷஹாபுதீன் மகன் ஒசாமா ஷஹாப் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது.

    இவ்வாறு ஜே.பி. நட்டா குற்றம்சாட்டினார்.

    மறைந்த முகமது ஷஹாபுதீன் கேங்ஸ்டராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். 

    • பீகார் சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வரும் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
    • தேசிய கட்சிகளின் தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பாட்னா:

    பீகார் மாநில சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வரும் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 2-வது கட்டமாக எஞ்சிய 122 இடங்களுக்கு 11-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    இதையொட்டி தேசிய கட்சிகளின் தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில், பீகாரின் சமஸ்திப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    நவம்பர் 6-ம் தேதி முதல் கட்டத் தேர்தல் இங்கு நடைபெறும். நவம்பர் 6-ம் தேதி பீகாரின் ஆட்சி யாருடைய கைகளில் இருக்கும் என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.

    15 ஆண்டுகளாக காட்டு ராஜ்ஜியத்தைப் பரப்பிய கைகளிலோ அல்லது 20 ஆண்டுகளாக நல்லாட்சியைக் கொண்டு வந்த தேசிய ஜனநாயக கூட்டணி கைகளிலா என்பதை நீங்கள் முடிவு செய்யவேண்டும்.

    கடந்த 20 ஆண்டுகளாக நிதிஷ் பாபுவும், 11 ஆண்டுகளாக பிரதமர் மோடியும் நிதிஷ் பாபுவும் இணைந்து பீகாரின் வளர்ச்சிக்கான எந்த முயற்சியையும் விட்டு வைக்கவில்லை.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள 5 கட்சிகளும் 5 பாண்டவர்கள் போல, ஒன்றாக தேர்தல் களத்தில் இறங்கிவிட்டன.

    நமக்கு முன்னால் மகாகட்பந்தன் கூட்டணி உள்ளது. அது எங்களுக்கு எதிராக போட்டியிடுவதற்குப் பதிலாக, தங்களுக்குள் போட்டியிடும் அளவுக்கு குழப்பத்தையும் உள்கட்சிப் பூசலையும் கொண்டுள்ளது என தெரிவித்தார்.

    ×