என் மலர்
ஆந்திர பிரதேசம்
- அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவை செய்து ஒன்றிணைப்பது காங்கிரஸ் கட்சி மட்டும் தான்.
- தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கு நானும் ஒரு காரணமாக இருந்தேன் .
திருப்பதி:
ஆந்திராவின் முன்னாள் முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டியின் மகளும் தற்போதைய முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையுமான ஒய்.எஸ். சர்மிளா நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி முன்னிலையில் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொண்டார்.
ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என எனது தந்தை கனவு கண்டார். அவரது கனவை நிறைவேற்ற அவர் வாழ்ந்த கட்சியான தாய் வீடான காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து இருக்கிறேன்.
நாட்டின் மிகப்பெரிய மத சார்பற்ற கட்சி காங்கிரஸ். காங்கிரஸில் தனக்கு வழங்கப்படும் எந்த பொறுப்பையும் நிறைவேற்றுவேன். அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவை செய்து ஒன்றிணைப்பது காங்கிரஸ் கட்சி மட்டும் தான்.
தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கு நானும் ஒரு காரணமாக இருந்தேன் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தற்போது திருப்பதி தேவஸ்தானம் மற்றும் வனத்துறை அளித்துள்ள அறிக்கை பக்தர்களின் பாதுகாப்புக்கு போதுமானதாக இல்லை.
- வனவிலங்குகள் சுதந்திரமாக நடமாடுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் தெரியப்படுத்த வேண்டும்.
திருப்பதி:
திருப்பதி அலிபிரி நடைபாதையில் நடந்து சென்ற 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்துச்சென்று கடித்து கொன்றது.
இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 6 சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டன. தொடர்ந்து சிறுத்தை, கரடி நடமாட்டம் உள்ளது.
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான முன்னாள் உறுப்பினர் பானு பிரகாஷ் ஆந்திர ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் நடைபாதையில் நடந்து செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை நிரந்தரமாக உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறி இருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை நேற்று ஆந்திரா ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் தற்போது திருப்பதி தேவஸ்தானம் மற்றும் வனத்துறை அளித்துள்ள அறிக்கை பக்தர்களின் பாதுகாப்புக்கு போதுமானதாக இல்லை.
வனவிலங்குகள் தாக்குதலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க திருப்பதி அலிபிரியில் இருந்து திருப்பதி மலை வரை 2 பக்கமும் இரும்பு வேலி மற்றும் சுரங்க நடைபாதை அமைப்பது குறித்து திருப்பதி தேவஸ்தானம், வனத்துறை, வனவிலங்கு நிர்வாகம் ஆகியவை இணைந்து மேலும் ஒரு கூட்டத்தை கூட்ட வேண்டும்.
கூட்டத்தில் பக்தர்களின் பாதுகாப்பு நிரந்தர தீர்வுக்கு அறிக்கை தயார் செய்ய வேண்டும். அந்த அறிக்கையை 6 வார காலத்திற்குப் பின்பு ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.
அதேபோல் வனவிலங்குகள் சுதந்திரமாக நடமாடுவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் தெரியப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- மதுபான பாட்டில்களை சுற்றி அமர்ந்து பிரியாணி சாப்பிடும் மாணவர்கள்.
- சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதால் அதிகாரிகள் விசாரணை.
2024 புத்தாண்டை மக்கள் ஆட்டம் பாட்டம், இசை நிகழ்சி, கேளிக்கை விருந்து என கோலாகலமாக வரவேற்றனர். புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு கொண்டாட்டத்தில் மதுபானம் முக்கிய இடம் பிடித்தது என்றால் இதை மிகையாகாது.
ஆனால் ஆந்திர மாநிலத்தில் பீர் பாட்டில்களுடன் மாணவர்கள் புத்தாண்டு கொண்டாடிய சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூட விடுதியில் பீர் பாட்டில்களை சுற்றி மாணவர்கள் அமர்ந்து பிரியாணி சாப்பிடும் வீடியோ ஒன்று வெளியானது. இதில் அதிர்ச்சியடைய கூடியது என்னவென்றால் அதில் இருந்த மாணவர்கள் அனைவரும் 6 முதல் 7-ம் வகுப்பு படிக்கக் கூடியவர்கள்.
7-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கையில் மது பாட்டில் என்றால்? சமூகம் எதை நோக்கி செல்கிறது என விமர்சனம் எழுந்தது.
அந்த வீடியோ தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை மெற்கொண்ட பிறகு, அனாகபல்லி எஸ்.பி. கே.வி. முரளி கிருஷ்ணா கூறுகையில் "தொடக்கத்தில் வெளியான தகவல் தவறானவை. மாணவர்கள் மது அருந்தவில்லை. மேலும் எந்தவிதமான போதைப்பொருட்கள் உட்கொள்ளவில்லை. இது தொடக்க விசாரணையில் தெரியவந்துள்ளது.
விடுதி அருகில் தங்கியுள்ள ஏ.சி. மெக்கானிக் மற்றும் கார் டிரைவர் ஆகியோர் மது அருந்திய பாட்டில்கள் அவை. ரீல் எடுப்பதற்காக மாணவர்கள் அந்த இடத்தில் அமர்ந்து, பிரியாணி சாப்பிடும்போது வீடியோ எடுக்கப்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.
இருந்த போதிலும் மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வேதனை அளிப்பாக உள்ளது. சமூக வலைதளங்களில் ரீல் போன்ற வீடியோக்கள் பதிவிட்டு அதிக லைக் வாங்குவதற்காக இதுபோன்ற செயல்களில் மாணவர்கள், இளைஞர்கள் ஈடுபட்டு விமர்சனத்திற்கு உள்ளாகுவது அடிக்கடி நடைபெற்று வருகிறது.
- திருப்பதி கோவிலில் கடந்த டிசம்பர் மாதம் 23-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசி தரிசனம் நடைபெற்றது.
- 17.81 லட்சம் பேர் அன்னபிரசாதமும், 35.60 லட்சம் பேர் லட்டு பிரசாதமும் பெற்றுள்ளனர்.
திருமலை:
திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மை அதிகாரி ஏ.வி.தர்மரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த டிசம்பர் மாதம் 23-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசி தரிசனம் நடைபெற்றது. இந்த 10 நாட்களில் 6 லட்சத்து 47 ஆயிரத்து 452 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் இடையூறு இன்றி, குறித்த நேரத்திற்குள் சுவாமியை வைகுந்த வாயில் வழியாக தரிசனம் செய்துள்ளனர்.
இந்த 10 நாட்களில் ரூ.40 கோடியே 20 லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. 17.81 லட்சம் பேர் அன்னபிரசாதமும், 35.60 லட்சம் பேர் லட்டு பிரசாதமும் பெற்றுள்ளனர். 2.14 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆந்திரா அருகே கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
- இந்த விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.
விஜயவாடா:
ஆந்திர மாநிலம் தேவாரப்பள்ளி நெடுஞ்சாலையில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 19 மாத குழந்தை உள்பட 3 பேர் பரிதாபமாக பலியாகினர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
விஜயவாடாவில் இருந்து ராஜமுந்திரி நோக்கிச் சென்ற காரின் டயர் வெடித்து தாறுமாறாக ஓடியதும், சாலையின் எதிர் திசையில் வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியை தொடங்கியவர்.
- ஆந்திர மாநில தேர்தல், மக்களவை தேர்தலை கணக்கில் கொண்டு காங்கிரஸ் கட்சி அவரை இணைக்கிறது.
ஆந்திர மாநில முதல்வராகவும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமாகவும் இருப்பவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவரது சகோதரி ஒய்.எஸ். சர்மிளா. இவர் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியை தொடங்கி அதன் தலைவராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் முழுப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த ஒரு மாதத்திற்குள், இணைய இருக்கிறார்.
வரவிருக்கும் மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, ஆந்திர மாநிலத்தில் சர்மிளாவிற்கு முக்கிய பதவி கொடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ள போராடி வரும் நிலையில், ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரானவர்கள், அக்கட்சியை விட்டு வெளியேற நினைப்பவர்கள் தங்களுடைய கட்சியில் இணையலாம் என காங்கிரஸ் நம்புகிறது.
- தொடர்ந்து 2025-ம் ஆண்டு மனிதனுடன் ககன்யான் விண்கலத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
- ஸ்க்ராம்ஜெட் என்ஜின்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படும் ஹைட்ரஜனுக்கு பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்துவது குறித்து முதல்கட்ட சோதனைகள் நடந்து முடிந்துள்ளது.
பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றிகரமாக ஏவுதலுக்குப் பிறகு, ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
இஸ்ரோ தனது முதல் 'எக்ஸ்-ரே போலரிமீட்டரை' வெற்றிகரமாக விண்ணில் ஏவியதன் மூலம் 2024 புத்தாண்டை வரவேற்றுள்ளது. பி.எஸ்.எல்.வி.யின் மற்றொரு வெற்றிகரமான பணி நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல் அர்ப்பணிக்கப்பட்ட அறிவியல் செயற்கைகோள் இதுவாகும். இந்த செயற்கைகோளின் சோலார் பேனல் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது. பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றிக்கு பங்காற்றிய இஸ்ரோ குழுவினருக்கு வாழ்த்துகள்.
இந்த வெற்றி இஸ்ரோவின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும். இதன்மூலம், பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வணிக ரீதியான பயன்பாட்டுக்கு மிகவும் நம்பகமானது என்பது நிரூபணமாகியுள்ளது. இந்த ஆண்டு முதல் இந்த ராக்கெட்டை முற்றிலும் வணிக ரீதியிலான உபயோகத்துக்கு பயன்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள செயற்கைகோள் ஒன்று பெண்களால் வடிவமைக்கப்பட்டது. இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதைக் காட்டுவதுடன், அனைத்து கருவிகளும், பல்வேறு சீர்திருத்தங்களை நிரூபிக்கின்றன.
பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டின் சுற்றுப்பாதையில் 4-வது கட்டத்தை எட்டிய உடன் என்ஜின் நிறுத்தி மீண்டும் இயக்கி நடத்தப்பட்ட சோதனை மூலம், விஞ்ஞானிகள் செயற்கைகோளின் உயரத்தை சுமார் 350 கிலோ மீட்டர் ஆக குறைத்தனர். பரிசோதனை தொகுதி-3 (போயம்-3) ஆய்வு வெற்றிகரமாக நடந்தது. எக்ஸ்போசாட் செயற்கைகோள் உலகளாவிய வானியல் சமூகத்திற்கு கணிசமான நன்மைகளை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்டிலும் போயம்-3-ஐ பயன்படுத்தி விண்வெளி நிறுவனம் இதுபோன்ற அறிவியல் பரிசோதனைகளை செய்தது. புவியில் இருந்து 530 கி.மீ.தொலைவு கொண்ட சுற்றுப்பாதைகளில் தான் அதிக அளவிலான செயற்கைகோள்கள், விண்வெளிக்கழிவுகள் உள்ளன. இதனால் 300 கிலோ மீட்டர் புவி தாழ்வட்டபாதையில் செயற்கைகோள்களை நிலைநிறுத்துவது குறித்து, தற்போது ஏவப்பட்ட ராக்கெட்டின் 4-வது நிலை (பி.எஸ் 4) எந்திரம் மூலம் வெற்றிகரமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விண்வெளி அடிப்படையிலான ஆய்வு சர்வதேச அளவில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த சூழலில், 'எக்ஸ்போசாட்' பணி ஒரு குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும். மனிதனை விண்ணுக்கு அனுப்பும், ககன்யான் விண்கலத்திற்கான 2 சோதனை ராக்கெட் இந்த ஆண்டு விண்ணில் செலுத்தி சோதனை செய்யப்பட உள்ளது. தொடர்ந்து 2025-ம் ஆண்டு மனிதனுடன் ககன்யான் விண்கலத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
அதேபோல், இந்த ஆண்டு இறுதிக்குள், பி.எஸ்.எல்.வி. எஸ்.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., ஸ்க்ராம்ஜெட் உள்ளிட்ட 15 திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பான ராக்கெட்டுகளை விண்ணில் ஏவுவதற்கான பணிகள் கைவசம் உள்ளன. அதேபோல் ஸ்க்ராம்ஜெட் என்ஜின்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படும் ஹைட்ரஜனுக்கு பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்துவது குறித்து முதல்கட்ட சோதனைகள் நடந்து முடிந்துள்ளது.
தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் ஏவுதளம் அமைப்பதற்கான வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்து உள்ளன. விரைவில் அடிக்கல் நாட்டும் பணி நடக்க இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிறுமிக்கு ஆறுதல் கூறிய போட்டோகிராபர் ஓட்டலில் சாப்பாடு வாங்கி தருவதாக அழைத்துச் சென்றார்.
- உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்த சிறுமி போலீசாரிடம் பேச முடியாத அளவுக்கு பாதிப்பு அடைந்து இருந்தார்.
திருப்பதி:
ஒடிசா மாநிலம், காலாஹண்டி மாவட்டம் பனிமுந்திராவை சேர்ந்தவர் 44 வயது காவலாளி.
இவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கஞ்சரபாலத்தில் தங்கி இருந்து அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.
இவரது 17 வயது மகள் துறைமுக குடியிருப்பில் உள்ள கடற்படை அதிகாரி வீட்டில் பணி பெண்ணாக வேலை செய்து வந்தார்.
சிறுமி உள்ளூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வருகிறார். கடந்த 17-ந் தேதி சிறுமி தனது காதலுடன் லாட்ஜிக்கு சென்றார்.
அப்போது இருவரும் உல்லாசமாக இருந்தனர். பின்னர் காதலன் தனது நண்பர்களுக்கு போன் செய்து லாட்ஜிக்கு வர வழைத்தார். சிறுமியை மிரட்டி காதலனின் நண்பரும் பலாத்காரம் செய்தார்.
பின்னர் லாட்ஜில் இருந்து வெளியே வந்த சிறுமி இது குறித்து தனக்கு தெரிந்த போட்டோகிராபர் ஒருவரிடம் கூறினார். சிறுமிக்கு ஆறுதல் கூறிய போட்டோகிராபர் ஓட்டலில் சாப்பாடு வாங்கி தருவதாக அழைத்துச் சென்றார்.
பின்னர் அங்குள்ள அறைக்கு அழைத்துச் சென்ற போட்டோகிராபர் மேலும் தனது 7 நண்பர்களை போன் செய்து வர வழைத்தார்.
8 பேரும் சேர்ந்து சிறுமியை 1 வாரம் அறையில் அடைத்து மாறி மாறி பலாத்காரம் செய்தனர். இதில் சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து பலாத்காரம் செய்த வாலிபர்கள் அவரை ஒரிசாவில் உள்ள சொந்த ஊரில் விட்டு விட்டு வந்தனர். வேலைக்குச் சென்ற மகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இது குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது இளம் பெண் தனது சொந்த ஊரில் இருப்பது தெரியவந்தது.
அவரை மீண்டும் விசாகப்பட்டினத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்த சிறுமி போலீசாரிடம் பேச முடியாத அளவுக்கு பாதிப்பு அடைந்து இருந்தார்.
பின்னர் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறுமியை பலாத்காரம் செய்த 8 வாலிபர்களை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர்.
- தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 22-ந் தேதி முதல் இன்று வரை வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதற்காக 9 இடங்களில் 4 லட்சம் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டது.
இந்த தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டும் 10 நாட்களாக தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். நேரடி இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
இதனால் பக்தர்கள் நேரடி இலவச தரிசனத்திற்கு வர வேண்டாம் என தேவஸ்தானம் அறிவித்தது. இந்த நிலையில் நேற்று இரவு புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் பகுதிக்கு சென்றனர்.
அங்கிருந்த அதிகாரிகள் நேரடி இலவச தரிசனத்திற்கு அனுமதி இல்லை என தெரிவித்தனர். மேலும் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
அப்போது பக்தர்கள் கோவில் ஊழியர்களுடன் கடும் வாக்குவாதம் செய்தனர். மேலும் திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நேரடி இலவச தரிசனத்திற்கு அனுமதி இல்லை என தொடர்ந்து தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இது பற்றிய தகவல் அறிந்த தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்த சம்பவத்தால் திருப்பதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைகோள் பொருத்தப்பட்டுள்ளது.
- செயற்கைகோளுடன், வெளிநாட்டு செயற்கைகோள்கள் சிலவற்றையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி உள்ளது.
அமெரிக்காவிற்கும், ரஷியாவிற்கும் இடையிலான பனிப்போரின்போது, ரஷியாவின் அணுசக்தி திட்டங்களை கண்காணிக்க அமெரிக்கா முடிவு செய்தது. இதையடுத்து 'வேலா' என்று அழைக்கப்பட்ட உளவு செயற்கைக்கோள்களை பூமியை சுற்றி ஏவியது.
ஒரு வேளை ரஷியா ரகசிய அணுசக்தி சோதனையில் ஈடுபட்டால், அதிலிருந்து வரும் காமா கதிர்களை அந்த செயற்கைக்கோள்கள் மூலம் கண்டறிய அமெரிக்கா திட்டமிட்டு இருந்தது. சந்தேகித்த வாறே காமா கதிர்களை அமெரிக்கா செயற்கைக்கோள் கண்டுபிடித்தது.
ஆனால் இந்த காமா கதிர்கள் ரஷியாவில் இருந்து வந்தவை அல்ல. மாறாக, பூமியையும், சூரிய குடும்பத்தையும் தாண்டி, விண்வெளியில் இருந்து வந்த காமா கதிர் வெடிப்புகள் ஆகும்.
இதையடுத்து அந்த காமா கதிர்கள் பற்றிய ஆய்வை அமெரிக்கா தீவிரப்படுத்தியது. பல வருட ஆய்வுக்கு பிறகு காமா கதிர் வெடிப்புகள் சூப்பர் நோவாக்கள் மற்றும் சூரியனில் கருந்துளைகள் உருவாகும்போது வெளி வருகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சூரியனின் கருந்துளையை படம் பிடிக்க உலக அளவில் விண்வெளி ஆய்வாளர்கள் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
அறிவியல் உலகின் பல ஆண்டு கனவு திட்டம் கடந்த 2019-ம் ஆண்டு நிறைவேறியது. கருந்துளையின் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டு விட்டதாக வானியலாளர்கள் அறிவித்தனர். கருந்துளையின் முதல் புகைப்படம் உலகம் முழுக்க சுமார் 8 தொலைநோக்கிகள் பயன்படுத்தி எடுக்கப்பட்டு உள்ளது.
ஆராய்ச்சியாளர்களால் மான்ஸ்டர் என அழைக்கப்படும் இந்த கருந்துளை பூமியில் இருந்து சுமார் 5.5 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது. இது சூரியனை விட சுமார் 650 கோடி மடங்கு பெரியது.
அதற்கு ஏ.ஆர்.2,665 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த துளை, பூமியை விட 19 மடங்கு பெரியதாகும். இந்தப் பகுதி சூரியனின் மற்றப் பகுதிகளை விட குளிர்ச்சியானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் இந்த கருந்துளை பகுதி சூரிய கதிர்களை உற்பத்தி செய்யும் பகுதி என்பது நாசாவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த பகுதி, பூமியை நோக்கி கொடிய கதிர்வீச்சுகளை வீசச் செய்கிறது. இந்த சீற்றங்கள் நமது சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய வெடிப்பு நிகழ்வுகளாக இருக்கும் என்றும் நாசா கூறியுள்ளது. இவை சில நிமிடங்களில் இருந்து பல மணி நேரங்கள் வரை நீடிக்கிறது என்றும் நாசா ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்மூலம் சூரியன் தனது வாழ்நாளின் இறுதி கட்டத்திற்குள் நுழைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எந்த நேரத்திலும் ஒரு பேரழிவு வெடிப்பு நிகழலாம் என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக சூரியனின் கருந்துளைகளை ஆய்வு செய்ய பல்வேறு நாடுகளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா சூரியனின் ஆய்வை இன்று வெற்றிகரமாக தொடங்கியது.
இதற்காக 'எக்ஸ்போசாட்' (எக்ஸ்-ரே போலாரி மீட்டா் சாட்டி லைட்) எனும் அதிநவீன செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான (இஸ்ரோ) வடிவமைத்து உள்ளது. அந்தச் செயற்கைக்கோள் மொத்தம் 469 கிலோ எடை கொண்டது.
எக்ஸ்போசாட் செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி.-சி58 ராக்கெட் மூலம் இன்று காலை 9.10 மணிக்கு விண்ணில் செலுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். இதை ஏவும் பணிக்காக 25 மணி நேர கவுன்டவுன் நேற்று காலை 8.10 மணிக்கு தொடங்கியது.
இன்று அதிகாலை எரிப்பொருள் நிரப்பும் பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செய்தனர். இதையடுத்து திட்டமிட்டபடி இன்று காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
குறிப்பிட்ட நிமிடங்களில் குறிப்பிட்ட பாதையில் அந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது. குறிப்பிட்ட இடைவெளிகளில் அதன் பகுதிகள் பிரிந்தன.
ஐந்து ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட எக்ஸ்போசாட், பூமியில் இருந்து சுமாா் 650 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதை இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் அறிவித்தனர். பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வரிசையில் இது 60-வது ராக்கெட் ஆகும்.
2024-ம் ஆண்டின் தொடக்கமான முதல்நாள் இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தி சாதனை படைத்துள்ளனர். சந்திரயான், ஆதித்யா செயற்கைக்கோள்களை தொடர்ந்து எக்ஸ்போசாட் வெற்றிகரமாக ஏவப்பட்டு இருப்பதன் மூலம் இந்தியர்களுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் புத்தாண்டு பரிசு அளித்து உள்ளனர்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சூரியனின் கருந்துளை மற்றும் நட்சத்திரங்களை இந்தியா ஆய்வு செய்ய இது தொடக்கமாக இருக்கும் என்பதால் இது விண்வெளி ஆய்வில் முக்கிய சாதனையாக கருதப்படுகிறது.
இதற்காக 'எக்ஸ்பெக்ட்' (எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ கிராபி), 'போலிக்ஸ்' (எக்ஸ்ரே போலாரிமீட்டா்) ஆகிய 2 சாதனங்கள் அந்த செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ளன. இவை விண்வெளியில் வியாபித்துள்ள ஊடுகதிா்களின் (எக்ஸ்-ரே) துருவ அளவு மற்றும் கோணத்தை அளவிட்டு ஆய்வு செய்யும்.
சூரியன் கருந்துளை தவிர நியூட்ரான் நட்சத்திரம் பற்றியும் எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் ஆய்வு செய்யும். நிலவில் தெரியும் நட்சத்திரங்கள் எல்லாம் ஒரே தன்மைகள் கொண்டவை அல்ல. சில நட்சத்திரங்கள் நீள நிறம் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும்.
இவற்றில் இருந்து சில நட்சத்திரங்கள் மாறுபட்டு வெள்ளை நிறத்துடன் சிறிய வடிவில் இருக்கும். இந்த நட்சத்திரங்களை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. இந்த நட்சத்திரங்கள் வெடிக்கும்போது என்ன நிகழும் என்பதை ஆய்வு செய்யவும் உலக விஞ்ஞானிகளிடம் போட்டி நிலவுகிறது.
நட்சத்திரங்கள் வெடிப்பதை சூப்பர் நோவா என்று சொல்வார்கள். வானில் எப்போதோ சூப்பர் நோவா வெடிப்பு ஏற்பட்ட இடத்தை நோக்கினால் மெல்லிய புகை மண்டலம் இருப்பது போன்று காட்சி அளிக்கும். அங்கு ஏற்கனவே நட்சத்திரம் இருந்த இடத்தில் அதாவது நட்சத்திரம் மடிந்துபோன இடத்தில் ஒரு நட்சத்திரம் இருக்கும். அதுவே நியூட்ரான் நட்சத்திரமாகும். வெடிப்புக்குப் பிறகு மிஞ்சுவதே நியூட்ரான் நட்சத்திரம்.
நியூட்ரான் நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் கதிரியக்கம் முக்கியமானது. இது பற்றியும் இஸ்ரோ விஞ்ஞானிகள் எக்ஸ்போ செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்ய உள்ளனர். அப்போது கருந்துளை வாயுக்களின் திரள் (நெபுலா) உள்பட பல்வேறு அம்சங்களை அந்த செயற்கைக்கோள் ஆராயும்.
இதைத் தவிர, பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் நான்காம் நிலையான பிஎஸ் 4 பகுதியில் 10 ஆய்வுக் கருவிகள் இணைத்து அனுப்பப்பட உள்ளன. இவை செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்ட பின்பு புவி தாழ்வட்டப்பாதைக்கு வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும்.
ஏற்கனவே விண்வெளியில் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆராய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோளின் தொடா்ச்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
- கடந்த டிசம்பர் மாதம் உண்டியல் காணிக்கையாக ரூ.116 கோடி கிடைத்தது.
- கோவில் வரலாற்றில் தொடர்ந்து 22-வது முறையாக உண்டியல் காணிக்கை ரூ.100 கோடியை தாண்டியது.
திருமலை:
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் உண்டியல் காணிக்கையாக ரூ.116 கோடி கிடைத்தது. இது, கோவில் வரலாற்றில் தொடர்ந்து 22-வது முறையாக உண்டியல் காணிக்கை ரூ.100 கோடியை தாண்டியது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2023-ம் ஆண்டு ஏழுமலையான் கோவிலில்2 கோடியே 52 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். ஒரு ஆண்டு உண்டியல் காணிக்கையாக ரூ.1,398 கோடி கிடைத்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி.சி-58 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
- பி.எஸ்.எல்.வி.சி-58 ராக்கெட் விண்ணில் ஏவுவதற்கான 25 மணிநேர கவுண்ட் டவுன் இன்று காலை 8.10 மணிக்கு தொடங்கியது.
திருப்பதி:
எக்ஸ்போ சாட் உள்பட 10 செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி.சி-58 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.
விண்வெளியில் உள்ள தூசு, நிறமாலை, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான நெபுலாவை எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் ஆய்வு செய்ய உள்ளது. பி.எஸ்.எல்.வி.சி-58 ராக்கெட் விண்ணில் ஏவுவதற்கான 25 மணிநேர கவுண்ட் டவுன் இன்று காலை 8.10 மணிக்கு தொடங்கியது.
இதையடுத்து, பி.எஸ்.எல்.வி. சி-58 விண்கலத்தின் மாதிரியுடன் திருப்பதி கோவிலில் இஸ்ரோ குழுவினர் வழிபாடு செய்தனர்.






