என் மலர்
இந்தியா

பீர் பாட்டில்களுடன் 7-ம் வகுப்பு மாணவர்கள்... போலீஸ் அதிகாரி கூறும் காரணம்....
- மதுபான பாட்டில்களை சுற்றி அமர்ந்து பிரியாணி சாப்பிடும் மாணவர்கள்.
- சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதால் அதிகாரிகள் விசாரணை.
2024 புத்தாண்டை மக்கள் ஆட்டம் பாட்டம், இசை நிகழ்சி, கேளிக்கை விருந்து என கோலாகலமாக வரவேற்றனர். புத்தாண்டுக்கு முந்தைய நாள் இரவு கொண்டாட்டத்தில் மதுபானம் முக்கிய இடம் பிடித்தது என்றால் இதை மிகையாகாது.
ஆனால் ஆந்திர மாநிலத்தில் பீர் பாட்டில்களுடன் மாணவர்கள் புத்தாண்டு கொண்டாடிய சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூட விடுதியில் பீர் பாட்டில்களை சுற்றி மாணவர்கள் அமர்ந்து பிரியாணி சாப்பிடும் வீடியோ ஒன்று வெளியானது. இதில் அதிர்ச்சியடைய கூடியது என்னவென்றால் அதில் இருந்த மாணவர்கள் அனைவரும் 6 முதல் 7-ம் வகுப்பு படிக்கக் கூடியவர்கள்.
7-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கையில் மது பாட்டில் என்றால்? சமூகம் எதை நோக்கி செல்கிறது என விமர்சனம் எழுந்தது.
அந்த வீடியோ தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை மெற்கொண்ட பிறகு, அனாகபல்லி எஸ்.பி. கே.வி. முரளி கிருஷ்ணா கூறுகையில் "தொடக்கத்தில் வெளியான தகவல் தவறானவை. மாணவர்கள் மது அருந்தவில்லை. மேலும் எந்தவிதமான போதைப்பொருட்கள் உட்கொள்ளவில்லை. இது தொடக்க விசாரணையில் தெரியவந்துள்ளது.
விடுதி அருகில் தங்கியுள்ள ஏ.சி. மெக்கானிக் மற்றும் கார் டிரைவர் ஆகியோர் மது அருந்திய பாட்டில்கள் அவை. ரீல் எடுப்பதற்காக மாணவர்கள் அந்த இடத்தில் அமர்ந்து, பிரியாணி சாப்பிடும்போது வீடியோ எடுக்கப்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.
இருந்த போதிலும் மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வேதனை அளிப்பாக உள்ளது. சமூக வலைதளங்களில் ரீல் போன்ற வீடியோக்கள் பதிவிட்டு அதிக லைக் வாங்குவதற்காக இதுபோன்ற செயல்களில் மாணவர்கள், இளைஞர்கள் ஈடுபட்டு விமர்சனத்திற்கு உள்ளாகுவது அடிக்கடி நடைபெற்று வருகிறது.






