search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குலசேகரன்பட்டினத்தில் விரைவில் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழா: இஸ்ரோ தலைவர்
    X

    குலசேகரன்பட்டினத்தில் விரைவில் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழா: இஸ்ரோ தலைவர்

    • தொடர்ந்து 2025-ம் ஆண்டு மனிதனுடன் ககன்யான் விண்கலத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
    • ஸ்க்ராம்ஜெட் என்ஜின்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படும் ஹைட்ரஜனுக்கு பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்துவது குறித்து முதல்கட்ட சோதனைகள் நடந்து முடிந்துள்ளது.

    பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றிகரமாக ஏவுதலுக்குப் பிறகு, ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    இஸ்ரோ தனது முதல் 'எக்ஸ்-ரே போலரிமீட்டரை' வெற்றிகரமாக விண்ணில் ஏவியதன் மூலம் 2024 புத்தாண்டை வரவேற்றுள்ளது. பி.எஸ்.எல்.வி.யின் மற்றொரு வெற்றிகரமான பணி நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல் அர்ப்பணிக்கப்பட்ட அறிவியல் செயற்கைகோள் இதுவாகும். இந்த செயற்கைகோளின் சோலார் பேனல் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது. பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றிக்கு பங்காற்றிய இஸ்ரோ குழுவினருக்கு வாழ்த்துகள்.

    இந்த வெற்றி இஸ்ரோவின் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும். இதன்மூலம், பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வணிக ரீதியான பயன்பாட்டுக்கு மிகவும் நம்பகமானது என்பது நிரூபணமாகியுள்ளது. இந்த ஆண்டு முதல் இந்த ராக்கெட்டை முற்றிலும் வணிக ரீதியிலான உபயோகத்துக்கு பயன்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

    ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள செயற்கைகோள் ஒன்று பெண்களால் வடிவமைக்கப்பட்டது. இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதைக் காட்டுவதுடன், அனைத்து கருவிகளும், பல்வேறு சீர்திருத்தங்களை நிரூபிக்கின்றன.

    பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டின் சுற்றுப்பாதையில் 4-வது கட்டத்தை எட்டிய உடன் என்ஜின் நிறுத்தி மீண்டும் இயக்கி நடத்தப்பட்ட சோதனை மூலம், விஞ்ஞானிகள் செயற்கைகோளின் உயரத்தை சுமார் 350 கிலோ மீட்டர் ஆக குறைத்தனர். பரிசோதனை தொகுதி-3 (போயம்-3) ஆய்வு வெற்றிகரமாக நடந்தது. எக்ஸ்போசாட் செயற்கைகோள் உலகளாவிய வானியல் சமூகத்திற்கு கணிசமான நன்மைகளை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்டிலும் போயம்-3-ஐ பயன்படுத்தி விண்வெளி நிறுவனம் இதுபோன்ற அறிவியல் பரிசோதனைகளை செய்தது. புவியில் இருந்து 530 கி.மீ.தொலைவு கொண்ட சுற்றுப்பாதைகளில் தான் அதிக அளவிலான செயற்கைகோள்கள், விண்வெளிக்கழிவுகள் உள்ளன. இதனால் 300 கிலோ மீட்டர் புவி தாழ்வட்டபாதையில் செயற்கைகோள்களை நிலைநிறுத்துவது குறித்து, தற்போது ஏவப்பட்ட ராக்கெட்டின் 4-வது நிலை (பி.எஸ் 4) எந்திரம் மூலம் வெற்றிகரமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    விண்வெளி அடிப்படையிலான ஆய்வு சர்வதேச அளவில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த சூழலில், 'எக்ஸ்போசாட்' பணி ஒரு குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும். மனிதனை விண்ணுக்கு அனுப்பும், ககன்யான் விண்கலத்திற்கான 2 சோதனை ராக்கெட் இந்த ஆண்டு விண்ணில் செலுத்தி சோதனை செய்யப்பட உள்ளது. தொடர்ந்து 2025-ம் ஆண்டு மனிதனுடன் ககன்யான் விண்கலத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

    அதேபோல், இந்த ஆண்டு இறுதிக்குள், பி.எஸ்.எல்.வி. எஸ்.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., ஸ்க்ராம்ஜெட் உள்ளிட்ட 15 திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

    இதுதொடர்பான ராக்கெட்டுகளை விண்ணில் ஏவுவதற்கான பணிகள் கைவசம் உள்ளன. அதேபோல் ஸ்க்ராம்ஜெட் என்ஜின்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படும் ஹைட்ரஜனுக்கு பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்துவது குறித்து முதல்கட்ட சோதனைகள் நடந்து முடிந்துள்ளது.

    தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் ஏவுதளம் அமைப்பதற்கான வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்து உள்ளன. விரைவில் அடிக்கல் நாட்டும் பணி நடக்க இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×