என் மலர்
ஆந்திர பிரதேசம்
- மின்சாரம் தாக்கியதில் பூசாரி வெங்கட்ரமணா, மணமகளின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
- சிகிச்சை பெற்று வருபவர்களில் 2 பேரும் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், ரணஸ்தலம் அடுத்த அல்லி வலசையை சேர்ந்தவர் லஷ்மி. இவரது மகனுக்கு அங்குள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தன. திருமண விழாவில் மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நேற்று காலை முகூர்த்தம் என்பதால் மணமக்கள் புத்தாடைகளுடன் மாலைகள் அணிந்து வந்து மணமேடையில் அமர்ந்தனர்.
அப்போது பூசாரி வெங்கட்ரமண ரெட்டி மைக்கேல் மந்திரங்களை ஓதிக்கொண்டு இருந்தார். 10 நிமிடத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்ட இருந்தார்.
இந்த நிலையில் பூசாரி வைத்திருந்த மைக்கில் திடீரென மின்சாரம் பாய்ந்தது. அப்போது பூசாரி மைக்கை தூக்கி வீசினார்.
மைக் அருகில் இருந்த சீதம்மா என்பவரை மின்சாரம் தாக்கியது. அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மின்சாரம் தாக்கியதில் பூசாரி வெங்கட்ரமணா, மணமகளின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆட்டோ மூலம் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சிகிச்சை பெற்று வருபவர்களில் 2 பேரும் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இறந்த பெண் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறிது நேரத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் திருமண மண்டபத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
- 3 நாட்கள் நடக்கும் வசந்தோற்சவம் நேற்று காலை தொடங்கியது.
- உற்சவர்களுக்கு திருமஞ்சனமும் நடந்தது.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் 3 நாட்கள் நடக்கும் வசந்தோற்சவம் நேற்று காலை தொடங்கியது.
வசந்தோற்சவத்தை நடத்த கவர்ச்சியான மண்டபம் அமைக்கப்பட்டது. அந்த மண்டபம் சப்தகிரியை பிரதிபலிக்கும் வகையில் காணப்படுகிறது.
அதில், திருப்பதி தேவஸ்தான தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் சீனிவாஸ் வழிகாட்டுதல் படி சேஷாசலம் வனப்பகுதியைப்போல் வடிவமைக்கப்பட்டது. அதற்காக 250 கிலோ வெட்டிவேர், 600 கிலோ பாரம்பரிய மலர்கள், 10 ஆயிரம் கொய்மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பச்சை மரங்கள், பலவண்ணப்பூக்கள் மற்றும் புலிகள், சிறுத்தைகள், குரங்குகள், நரிகள், மலைப்பாம்புகள், நல்ல பாம்புகள், மயில்கள், வாத்துகள், அன்னப்பறவைகள், மைனாக்கள், கிளிகள், ஒட்டகங்கள் எனப் பல்வேறு வகையான விலங்குகளின் உருவப்பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.
உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, சமேத மலையப்பசாமியை கோவிலில் இருந்து நேற்று காலை நான்கு மாடவீதிகள் வழியாக வசந்த மண்டபத்துக் கொண்டு வந்தனர். அங்கு உற்சவர்களுக்கு ஆஸ்தானமும், மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவர்களுக்கு திருமஞ்சனமும் நடந்தது.
முதலில் விஷ்வக்சேனர் ஆராதனை, புண்யாஹவச்சனம், நவகலசாபிஷேகம், ராஜோபசாரம் நடந்தது. பின்னர் சத்ர சாமர வியாஜன தர்பணாதி, நைவேத்தியம், தூப பிரசாதம் சமர்ப்பிக்கப்பட்டது.
அப்போது வேதப் பண்டிதர்கள் புருஷுக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், நீலசூக்தம், பஞ்சசாந்தி மந்திரங்கள் மற்றும் திவ்ய பிரபந்த பாசுரங்களை ஓதினார்கள். வசந்தோற்சவம் முடிந்ததும் மாலை வசந்த மண்டபத்தில் இருந்து உற்சவர்கள் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
- கணவன் மனைவி இடையே அரசியல் போர் ஏற்பட்டது.
- வேட்பாளர் பட்டியலில் வாணியின் பெயருக்கு பதிலாக அவரது கணவர் பெயர் வெளியிடப்பட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் தெக்கலி தொகுதி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஜில்லா பரிஷத் உறுப்பினராக இருப்பவர் வாணி.
இவரது கணவர் ஸ்ரீநிவாஸ். இவர் ஏற்கனவே 2001-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்றார். சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சியில் சேர்ந்தார். இதனையடுத்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜில்லா பரிஷ்த் துணைத் தலைவர் பதவிக்கு வாணி போட்டியிட்டார்.
இவரது செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் தெக்கலி தோகுதியில் போட்டியிட இந்த தடவை வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டு வந்தது.
கடந்த மாதம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் வாணியின் பெயருக்கு பதிலாக அவரது கணவர் பெயர் வெளியிடப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாணி கடந்த வாரம் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
அப்போது கட்சி தலைமை மறுபரிசீலனை செய்து தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் இல்லை என்றால் ஏப்ரல் 22-ந் தேதி கணவருக்கு எதிராக சுயேட்சையாக மனு தாக்கல் செய்யப்படும் என வீடியோ வெளியிட்டு அறிவித்தார்.
இதனால் கணவன் மனைவி இடையே அரசியல் போர் ஏற்பட்டது.
கணவன் மனைவி இருவரும் தற்போது தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
- ஜெகன்மோகன் ரெட்டி என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து போட்டியிட வாய்ப்பளித்தார்.
- நகரி தொகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.
தமிழக எல்லையில் உள்ள நகரி தொகுதியில் 3-வது முறையாக ரோஜா போட்டியிடுகிறார். அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
முன்னதாக ரோஜா நகரி புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். வேட்பு மனுவை கோவிலில் வைத்து மனமுருக சாமி தரிசனம் செய்தார்.
அங்கிருந்து திறந்த வேனில் நின்றபடி ரோஜா நகரி தாசில்தார் அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் சென்றார். இதில் ஆயிரக்கணக்கான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
வழி நெடுகிலும் கிரேன் மூலம் சுமார் 20 அடி உயரம் கொண்ட ராட்சத மாலைகள் அணிவிக்கப்பட்டன. ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் மலர் மாலை என ரோஜாவுக்கு விதவிதமான மாலைகள் கிரேன் மூலம் அணிவித்து வரவேற்றனர். செண்டை மேளம், தாரை தப்பட்டை மேளங்களுடன் ரோஜா தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்றார்.

அப்போது ஜெய் ரோஜாம்மா என தொண்டர்கள் கோஷம் எழுப்பிக் கொண்டே இருந்தனர். இதனால் நகரி சாலை அதிர்ந்தது.
இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் சென்று ரோஜா மனு தாக்கல் செய்தார்.
நகரி தொகுதியில் நான் 3-வது முறையாக போட்டியிடக் கூடாது என்பதற்காக எதிர்க்கட்சிகள் சதி செய்தன. எனக்கு சீட் கிடைக்காமல் செய்ய பலர் போட்டி போட்டுக் கொண்டு வேலை செய்தனர்.
ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து போட்டியிட வாய்ப்பளித்தார். நான் இந்த தொகுதியில் 3-வது முறையாகவும் வெற்றி பெறுவேன். மனு தாக்கலின் போது இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை.
இங்கு வந்துள்ள நகரி தொகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோவில் நிர்வாகம் சார்பில் பட்டு வஸ்துரங்கள் வழங்கப்பட்டது.
- சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து திருக்கல்யாணம் நடந்தது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் வெமுலாவில் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற ராஜராஜேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராம நவமி விழா விமரிசையாக நடந்தது.
ராம நவமி விழாவில் மும்பை, ஐதராபாத் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளில் இருந்து ஏராளமான திருநங்கைகள் குவிந்தனர்.
பல நூற்றாண்டுகள் பழமையான சடங்கின் ஒரு பகுதியாக சாமிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பட்டு வஸ்துரங்கள் வழங்கப்பட்டது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து திருக்கல்யாணம் நடந்தது.
அப்போது திருநங்கைகள் தங்களை மணப்பெண்களை போல உடை அணிந்து அங்கு திரண்டிருந்தனர். அவர்கள் சிவபெருமானை மணப்பதாக கூறி தாலிகட்டிக் கொண்டனர்.
கோவில் வளாகத்தில் குவிந்திருந்த திருநங்கைகள் ஒருவருக்கு ஒருவர் தாலி கட்டிக் கொண்ட நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித அரிசிகளை அர்ச்சகர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.
- சந்திரபாபு நாயுடு சர்மிளாவிற்கு பணம் வழங்கவில்லை என்றால் அவருக்கு எங்கே இருந்து இவ்வளவு பணம் வந்தது.
- சர்மிளா சந்திரபாபு நாயுடுவின் கை பாவையாக மாறி இருக்கிறார்.
திருப்பதி:
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மாநில பிரதிநிதியும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ரமேஷ் குமார் ரெட்டி கூறியதாவது:-
கடப்பா மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவர் சர்மிளாவுக்கு சந்திரபாபு நாயுடு ரூ.60 கோடி வழங்கி உள்ளார்.
சந்திரபாபு நாயுடு சர்மிளாவிற்கு பணம் வழங்கவில்லை என்றால் அவருக்கு எங்கே இருந்து இவ்வளவு பணம் வந்தது.
சந்திரபாபு நாயுடுவின் நாடகத்தில் சர்மிளா நடிக்கிறார். அவருக்கு முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
அவரது ஏற்பாட்டின் பேரிலேயே சர்மிளா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.
சர்மிளா சந்திரபாபு நாயுடுவின் கை பாவையாக மாறி இருக்கிறார். கடப்பா மாவட்டத்தில் 10 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்கள் சர்மிளாவிற்கு பணம் கொடுத்து போட்டியிடுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேர்தல் பிரசாரத்தின் போது ஆளுங்கட்சிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
- சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்று மனு தாக்கல் தொடங்கியது.
திருப்பதி:
ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தேர்தல் பிரசாரத்தின் போது ஆளுங்கட்சிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
இதேபோல் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ், மனைவி புவனேஸ்வரியும் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
பிரசாரத்தின் போது தேர்தல் விதிமுறையை மீறியதாக சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் லோகேஷ் மீது 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்று மனு தாக்கல் தொடங்கியது.
தங்கள் மீதான வழக்குகளால் தேர்தலில் மனுதாக்கல் செய்ய ஏதாவது சிக்கல்கள் ஏற்படுமா? என சந்திரபாபு நாயுடு தனது வக்கீல்கள் மூலம் ஆலோசனை நடத்தினார்.
- கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 4 ஆயிரம் கிலோ தங்கத்தை பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ளனர்.
- திருப்பதியில் நேற்று ஒரே நாளில் 58 ஆயிரத்து 690 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
குறிப்பாக தங்கம் காணிக்கை செலுத்துவது அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலை அதிகரித்தாலும் வேண்டுதலை நிறைவேற்ற பக்தர்கள் அதிக அளவில் தங்கத்தை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டில் 1,031 கிலோ தங்கத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இவற்றை தேவஸ்தான அதிகாரிகள் வங்கியில் டெபாசிட் செய்தனர். இதுவரை ரூ.8,496 கோடி மதிப்பிலான மொத்தம் 11 ஆயிரத்து 329 கிலோ தங்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதற்கு பிறகு தரிசனம் செய்து வரும் பக்தர்கள் அதிக அளவில் தங்கம் நன்கொடையாக வழங்கி வருகின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 4 ஆயிரம் கிலோ தங்கத்தை பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ளனர். தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் பக்தர்கள் அளிக்கும் தங்க காணிக்கையும் உயர்ந்து வருகிறது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதியில் நேற்று ஒரே நாளில் 58 ஆயிரத்து 690 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 20 ஆயிரத்து 744 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.
உண்டியல் காணிக்கையாக ரூ.3.02 கோடி வசூல் ஆனது. பக்தர்கள் சுமார் 6 மணி நேரம் வரை காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
- வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது.
- பிரம்மோற்சவ விழா கருட கொடியேற்றமும் நடந்தது.
திருமலை:
திருப்பதி மாவட்டம் சந்திரகிரி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது. அதையொட்டி நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் அங்குரார்ப்பணமும், நேற்று காலை 9.05 மணியில் இருந்து 10 மணி வரை விருஷப லக்னத்தில் பிரம்மோற்சவ விழா கருட கொடியேற்றமும் நடந்தது.
அதைத்தொடர்ந்து ராமநவமியான நேற்று மாலை 6.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை உற்சவர் கோதண்டராமர் அனுமன் வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கொடியேற்றும் நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் சீனிவாசலு, கோவில் ஆய்வாளர் ஹரிபாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- வேதப் பண்டிதர்கள் மந்திரங்கள் மற்றும் ராமாயண பாசுரங்களை ஓதினார்கள்.
- தங்க வாசலில் ராமநவமி ஆஸ்தானம் நடந்தது.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ராமநவமி விழா நடந்தது. அதையொட்டி அதிகாலை மூலவரை சுப்ர பாதத்தில் துயிலெழுப்பி தோமால சேவை, அர்ச்சனை செய்யப்பட்டது. கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் காலை 9 மணியில் இருந்து 11 மணி வரை உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், அனுமனுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

அப்போது வேதப் பண்டிதர்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தம் பாராயணம் செய்தனர். புருஷுக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், நீலசூக்தம், பஞ்சசாந்தி மந்திரங்கள் மற்றும் ராமாயண பாசுரங்களை ஓதினார்கள்.
அதைத்தொடர்ந்து மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரை ராமர், சிறப்பு அலங்காரத்தில் அனுமன் வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன்பிறகு இரவு 9 மணியில் இருந்து 10 மணி வரை கோவிலில் உள்ள தங்க வாசலில் ராமநவமி ஆஸ்தானம் நடந்தது.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திருமலை பெரிய ஜீயர் சுவாமி, திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி தம்பதியர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் திருப்பதி கோதண்டராமர் கோவிலில் நேற்று ராம நவமி விழா நடந்தது. அதிகாலை சுப்ரபாதம், மூலவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ஊஞ்சல் மண்டபத்தில் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், அனுமனுக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை 3 மணியில் இருந்து 4 மணி வரை திருப்பதியில் உள்ள பெரிய ஜீயர் சுவாமி மடத்தில் இருந்து அர்ச்சகர்கள் பட்டு வஸ்திரங்களை எடுத்து வந்து விமான பிரதட்சணம் செய்து மூலவர்களுக்கும், உற்சவர்களுக்கும் சமர்ப்பித்தனர்.
அதன்பிறகு ராமர் ஜென்ம புராணம், ஆஸ்தான நிகழ்ச்சிகள் நடந்தது. இரவு 7 மணியில் 9 மணி வரை உற்சவர் ராமச்சந்திரமூர்த்தி தனது பிரியமான அனுமன் வாகனத்தில் எழுந்தருளி நான்குமாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
- ராமநவமி, பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது.
- திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
சித்தூர்:
சித்தூர் கோதண்டராமர் கோவிலில் நேற்று ராமநவமி, பிரம்மோற்சவ விழா தொடங்கியது. அதையொட்டி உற்சவர் கோண்டராமர் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ராமநவமியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சித்தூர் கோதண்டராமர் கோவிலில் 11 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ராமநவமி, பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது.
நேற்று காலை கோதண்டராமர் கோவிலில் மூலவருக்கு சிறப்புப்பூஜைகள், ஆராதனை நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து காலை 10 மணியளவில் கருடசேவை நடந்தது. உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் கருடவாகனத்தில் எழுந்தருளி சித்தூர் நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல் ராம நவமியை முன்னிட்டு சித்தூர் கிரீம்ஸ்பேட்டையில் உள்ள வீரஆஞ்சநேயர் கோவிலில் காலை 8.30 மணியளவில் மூலவருக்கு அபிேஷகம், அலங்காரம், சிறப்புப்பூஜைகளும், காலை 9.30 மணியளவில் சீதா-ராமர் திருக்கல்யாணம் உற்சவமும், ராமர் பட்டாபிஷேகமும் நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி பா.ஜனதா அலுவலகம் திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் நேற்று ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பா.ஜனதா மாநில செயலாளர் கோலா.ஆனந்த் தலைமை தாங்கினார். அலுவலக வளாகத்தில் உள்ள ராமர் உருவப்படத்துக்கு ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி பா.ஜனதாவினர் சிறப்புப்பூஜை செய்தனர். பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.
- சீதா-ராமருக்கு திருக்கல்யாண உற்சவத்தை அர்ச்சகர்கள் நடத்தி வைத்தனர்.
- பக்தர்கள் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஜெய் ஸ்ரீராம் என பக்தி கோஷம் எழுப்பினர்.
ஸ்ரீகாளஹஸ்தி:
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவிலின் துணைக் கோவிலான ஸ்ரீகாளஹஸ்தி பட்டாபி ராமர் கோவிலில் நேற்று ராம நவமி விழா நடந்தது. அதையொட்டி உற்சவர்களான சீதா-ராமருக்கு பலவண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மேடையில் எழுந்தருளச் செய்தனர்.
முன்னதாக கணபதி பூஜை மற்றும் பல்வேறு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டு தீப தூப நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் முழங்க, சீதா-ராமருக்கு திருக்கல்யாண உற்சவத்தை அர்ச்சகர்கள் நடத்தி வைத்தனர்.
அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஜெய் ஸ்ரீராம் என பக்தி கோஷம் எழுப்பினர்.
திருக்கல்யாண உற்சவத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, செயல் அலுவலர் எஸ்.வி நாகேஸ்வரராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






