என் மலர்
ஆந்திர பிரதேசம்
- திருப்பதியில் நேற்று 86, 241 பேர் தரிசனம் செய்தனர். 31,730 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
- ரூ.3.65 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதம் பல்வேறு உற்சவங்கள் நடைபெற உள்ளது. அதன்படி வருகிற 3-ந் தேதி பாஷ்யகர்ல உற்சவம் தொடங்குகிறது. 4-ந் தேதி சர்வ ஏகாதசி, 10-ந்தேதி அட்சய திருதியை, 12-ந் தேதி பாஷ்யகர்ல சாற்றுமுறை, ராமானுஜ ஜெயந்தி, சங்கர ஜெயந்தி நடைபெற உள்ளது.
அதைத்தொடர்ந்து 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை பத்மாவதி பரிணய உற்சவம், 22-ந் தேதி நரசிம்ம ஜெயந்தி மற்றும் தரிகொண்டா வெங்க மாம்பா ஜெயந்தி, 23-ந் தேதி அன்னமாச்சாரியா ஜெயந்தி, கூர்ம ஜெயந்தி ஆகியவை தொடர்ந்து நடைபெற உள்ளதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதியில் நேற்று 86, 241 பேர் தரிசனம் செய்தனர். 31,730 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.65 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
- ஆட்டோ மற்றும் டாக்சி வாங்குவதற்கான மானியம் ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படும்.
- எஸ்.சி.எஸ்.டி வீடுகளுக்கு இலவச மின்சார திட்டம் அமல்படுத்தப்படும்.
திருப்பதி:
ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஆடை பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 3 தலைநகரங்கள் உருவாக்கப்படும்.கர்னூலை நீதித்துறை தலைநகராகவும், அமராவதியை சட்டமன்ற தலைநகராகவும் மாற்றப்படும்.
ஆந்திராவில் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும். கடப்பாவில் இரும்பு ஆலை தொடங்கப்படும். முதியோர் ஓய்வூதியம் ரூ.3,500 ஆக உயர்த்தப்படும்.
அம்மா ஓடி திட்டத்தில் ரூ.17 ஆயிரம் வழங்கப்படும்.அதில் ரூ.15 ஆயிரம் தாய்மார்கள் கணக்கில் சேர்க்கப்படும். பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
ஆட்டோ மற்றும் டாக்சி வாங்குவதற்கான மானியம் ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படும்.
வாகன மித்ரா திட்டத்தின் கீழ் லாரி மற்றும் டிப்பர் டிரைவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், ஆட்டோ டாக்சி டிரைவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை காப்பீடு அமல்படுத்தப்படும்.
எஸ்.சி.எஸ்.டி வீடுகளுக்கு இலவச மின்சார திட்டம் அமல்படுத்தப்படும்.
இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- தேர்தலில் யார் மிரட்டல் விடுத்தாலும் பவன் கல்யாணை வெற்றி பெற செய்ய வேண்டும்.
- பவன் கல்யாண் எப்போதும் மக்களின் குரலாகவும், அநீதியை எதிர்க்கும் அரசியல்வாதியாகவும் இருப்பார்.
திருப்பதி:
ஆந்திராவில் தேர்தல் தேதி நெருங்கி வருவதால் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
ஒரு புறம் அரசியல்வாதிகளும், மறுபுறம் சினிமா நடிகர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திராவில் பிரபல நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் பிதாபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
பவன் கல்யாணை ஆதரித்து நேற்று ஆந்திராவில் பிரபல நடிகரும், பவன் கல்யாணின் அண்ணன் மகனான வருண் தேஜ் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். கோடாவாலியில் ரோடு ஷோ நடத்தினார்.
அதைத் தொடர்ந்து கூட்டத்தில் வருண் தேஜ் பேசியதாவது, எனது தந்தையை பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
அதிகாரத்தை பொருட்படுத்தாமல் மக்களுக்காக போராடும் தலைவர் பவன் கல்யாண். எம்.பி., எம்.எல்.ஏ. யாகவோ இல்லாவிட்டாலும் விவசாயிகளின் பிரச்சனைகளுக்காக போராடியவர்.
தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு துணை நின்றவர். எப்போதும் மக்கள் மத்தியில் வளம் வரும் தலைவர் வெற்றி பெற வேண்டும்.
பவன் கல்யாண் மகனாக தேர்தல் பிரசாரம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பிதாபுரம் பகுதி மக்களின் அன்பும், பாசமும் தந்தையின் மீது என்றும் இருக்க வேண்டும்.
தேர்தலில் யார் மிரட்டல் விடுத்தாலும் பவன் கல்யாணை வெற்றி பெற செய்ய வேண்டும். பிதாபுரம் மக்களை பவன் கல்யாண் தனது குடும்ப உறுப்பினர்களாகவே கருதுகிறார்.
இங்குள்ள வாக்காளர்கள் பவன் கல்யாணை ஆசீர்வதித்து சட்டப்பேரவைக்கு அனுப்பினால் அவர் அனைவருக்கும் சேவகம் செய்வார். பவன் கல்யாண் எப்போதும் மக்களின் குரலாகவும், அநீதியை எதிர்க்கும் அரசியல்வாதியாகவும் இருப்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஏற்கனவே பிதாபுரத்தில் பவன் கல்யாண் சார்பில் நடிகர் நாகபாபு பிரசாரம் செய்து வரும் நிலையில் வரும் நாட்களில் மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நடிகர் பவன் கல்யாணை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளனர்.
- பழைய ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளும் திருப்பதி உண்டியலில் செலுத்தப்பட்டன.
- ரூ.500 கோடி வரை செலுத்தப்பட்ட பணத்தை மாற்ற ரிசர்வ் வங்கி ஒப்புக்கொள்ளவில்லை.
திருப்பதி:
திருப்பதியில் தினமும் பக்தர்கள் சராசரியாக ரூ.3.5 கோடி வரை உண்டியல் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இதன் மூலமாக ஆண்டுக்கு ரூ. ஆயிரம் கோடிக்கும் அதிகமாக தேவஸ்தானத்திற்கு வருவாய் கிடைத்து வருகிறது.
இதனிடையே ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. எனினும், திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பக்தர்கள் தொடர்ச்சியாக செலுத்தி வந்தனர்.
கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி வரை ரூ.3.20 கோடி 2 ஆயிரம் நோட்டுகள் உண்டியலில் செலுத்தப்பட்டன.
அவற்றை மாற்ற அனுமதிக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கோரியது. இதையடுத்து 5 தவணையாக பணத்தை மாற்ற ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது.
அதன்படி ரூ.3.20 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திருப்பதி தேவஸ்தானம் மாற்றியுள்ளது.
இதேபோல் பழைய ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளும் திருப்பதி உண்டியலில் செலுத்தப்பட்டன. ரூ.500 கோடி வரை செலுத்தப்பட்ட இந்த பணத்தை மாற்ற ரிசர்வ் வங்கி ஒப்புக்கொள்ளவில்லை.
ஆதலால் அவை இன்னமும் தேவஸ்தான கிடங்கில் மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதியில் நேற்று 57,909 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
32,403 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கையாக ரூ.3.81 கோடி வசூல் ஆனது. பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- ராஜசேகர ரெட்டி போன்ற பொம்மைகள் பொது மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
- ராஜசேகர ரெட்டி போல வேடமணிந்த தொண்டர்களுடன் சென்று பிரசாரம் செய்து வருகிறார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க காங்கிரஸ் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.
காங்கிரஸ் முன்னாள் முதல் மந்திரி ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி தற்போது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் முதல் மந்திரியாக உள்ளார். அவருடைய தங்கை சர்மிளா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்கிறார்.
மேலும் தேர்தல் பிரசாரத்தில் அவருடைய தந்தை ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி போன்ற பொம்மைகள் மற்றும் ராஜசேகர ரெட்டி போல வேடமணிந்த தொண்டர்களுடன் சென்று பிரசாரம் செய்து வருகிறார்.
ராஜசேகர் ரெட்டியின் உண்மையான வாரிசு நான் தான் அவருடைய கொள்கைகளை என்னால் மட்டுமே பின்பற்ற முடியும் என அவர் பேசி வாக்குறுதி அளிக்கிறார். ராஜசேகர ரெட்டி போன்ற பொம்மைகள் பொது மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
- தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின் போது மகளிர் குழுக்களுக்கு வட்டியில்லா கடன்கள் வழங்கப்பட்டன.
- ஆந்திராவில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச பஸ் பயணம்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடக்கிறது.
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தினந்தோறும் விதவிதமான அறிவிப்புகளை அறிவித்து வாக்காளர்களை கவர்ந்து வருகிறார்.
ஸ்ரீகாக்குளம் பகுதியில் பிரசாரம் செய்த சந்திரபாபு நாயுடு பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவேன் என வாக்குறுதி அளித்தார்.
தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின் போது மகளிர் குழுக்களுக்கு வட்டியில்லா கடன்கள் வழங்கப்பட்டன. அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்த தனி பஜார் நிறுவப்பட்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ஆந்திர மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு 3 சென்ட நிலத்தில் வீடுகள் கட்டித் தரப்படும்.
மேலும் முதியோர் ஓய்வூதியம் ரூ.4000 ஆக உயர்த்தப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.6000 வழங்கப்படும் என்றார். ஏற்கனவே ஆந்திராவில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச பஸ் பயணம்.
மாதந்தோறும் உதவித் தொகை என சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு மேலும் பெண்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
இதன் மூலம் பெண்களின் கவனம் ஒட்டுமொத்தமாக தெலுங்கு தேசம் கட்சி பக்கம் திரும்பி இருப்பதாக அந்த கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
- 3 நாள் வசந்தோற்சவம் நிறைவடைந்தது.
- உற்சவர்கள் புறப்பட்டு ஏழுமலையான் கோவிலுக்கு திரும்பினர்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 நாட்கள் வசந்தோற்சவம் நடந்து வந்தது. முதல் நாள் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி கோவிலில் இருந்து திருச்சி வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகள் வழியாக வசந்த மண்டபத்துக்கு சென்று வசந்தோற்சவம் கண்டனர்.
2-வது நாள் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேரில் எழுந்தருளி நான்கு மாடவீதிகள் வழியாக வசந்த மண்டபத்துக்கு சென்று வசந்தோற்சவம் கண்டனர்.
கடைசி நாளான நேற்று முன்தினம் உற்சவர்களான ஸ்ரீதேவி பூதேவி, மலையப்பசாமி மற்றும் சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் மற்றும் ருக்மணி, சத்தியபாமா ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் இருந்து புறப்பட்டு தனித்தனி திருச்சி வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகள் வழியாக வசந்த மண்டபத்தை அடைந்தனர்.
அங்கு மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவர்களான சாமிகள், தாயார்களை ஒரே மேடையில் வைத்து மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகிய நறுமண திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
வசந்தோற்சவம் முடிந்ததும் வசந்த மண்டபத்தில் இருந்து உற்சவர்கள் புறப்பட்டு ஏழுமலையான் கோவிலுக்கு திரும்பினர். இதோடு 3 நாள் வசந்தோற்சவம் நிறைவடைந்தது.
மேற்கண்ட நிகழ்ச்சியில் திருமலை பெரிய ஜீயர் சுவாமி, சின்னஜீயர் சுவாமி, தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி, தேவஸ்தான இணை அதிகாரி கவுதமி, தலைமை செய்தி மற்றும் மக்கள் தகவல் தொடர்பு அதிகாரி டி.ரவி, கோவில் துணை அதிகாரி லோகநாதன் மற்றும் அலுவலர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- வெயில் காரணமாக வெளியூர் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது.
- ரூ.300 டிக்கெட் மற்றும் இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பதி:
ஆந்திராவில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 105 முதல் 107 டிகிரி வரை சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் வீட்டிலிருந்து வெளியே வர அச்சப்படுகின்றனர்.
திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கடும் வெயில் காரணமாக அவதி அடைந்து வருகின்றனர். வெயில் காரணமாக வெளியூர் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது.
இன்று தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து காணப்பட்டது. ரூ.300 டிக்கெட் மற்றும் இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் 1½ மணி நேரத்தில் தரிசனம் முடிந்து வெளியே வந்தனர். எளிதில் தரிசனம் செய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பதியில் நேற்று 64,080 பேர் தரிசனம் செய்தனர். 25,773 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.66 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- குண்டூர் மக்களவை தொகுதியின் தெலுங்குதேசம் கட்சி வேட்பாளர் பெம்மசானி சந்திரசேகர் ஆவார்
- பெம்மசானி சந்திரசேகருக்கு அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்களில் முதலீடுகள் மற்றும் பங்குகள் உள்ளன.
அமராவதி:
நாட்டின் 18-வது மக்களவைக்கான தேர்தல் கடந்த 19-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவுடன் தொடங்கியது. ஜூன் 1-ந் தேதியுடன் வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில், 4-ந் தேதி முடிவுகள் வெளியாக உள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் போது வழங்கும் பிரமாண பத்திரத்தின் மூலம் அவர்கள் சொத்து விவரங்கள் வெளியாகின்றன. அப்படி வெளியாகும் வேட்பாளர்கள் சிலரின் சொத்து விவரங்கள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.
அந்த வகையில் ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் சொத்து விவரங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி அவர்தான் நாட்டின் பணக்கார வேட்பாளராக உள்ளார்.
அவர் குண்டூர் மக்களவை தொகுதியின் தெலுங்குதேசம் கட்சி வேட்பாளர் பெம்மசானி சந்திரசேகர் ஆவார். அவரது குடும்பத்திடம் மொத்தமாக ரூ.5,785 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது தனிப்பட்ட சொத்துகள் ரூ.2,448.72 கோடியாகவும், அவரது மனைவி ஸ்ரீரத்னா கோனேருவுக்கு ரூ.2,343.78 கோடி மதிப்புள்ள சொத்துகளும், அவரது பிள்ளைகளிடம் கிட்டத்தட்ட ரூ.1,000 கோடி சொத்துகளும் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டாக்டர், தொழில் அதிபர், அரசியல்வாதி என பன்முகங்களை கொண்ட பெம்மசானி சந்திரசேகருக்கு அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்களில் முதலீடுகள் மற்றும் பங்குகள் உள்ளன.
- தாலி கட்டிய பிறகு மணப்பெண் அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.
- போலீசார் சினேகாவின் தாய் மற்றும் சகோதரரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கடயம் பகுதியைச் சேர்ந்தவர் சினேகா. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடானந்து என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி சினேகா திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி நேற்று அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் சினேகா திருமணம் நடந்தது.
தாலி கட்டிய பிறகு சினேகா மணப்பெண் அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். வழக்கம்போல திருமண மண்டபத்தில் ஒரு புறம் விருந்து நடந்து கொண்டிருந்தது.
மாப்பிள்ளை வீட்டார் கும்பலாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் சினேகாவின் தாய் மற்றும் அவருடைய சகோதரர் திடீரென திருமண மண்டபத்திற்கு வந்தனர்.
மணப்பெண் அறையில் காதல் கணவருடன் இருந்த சினேகாவை அவருடைய சகோதரர் கையை பிடித்து வெளியே இழுத்து வந்தார். அதனை பார்த்து திடுக்கிட்ட அவருடைய நண்பர்கள் தடுக்க முயன்றனர். அவர்களை சினேகாவின் சகோதரர் கடுமையாக தாக்கினார்.
சினேகாவை அவரது சகோதரர், தாயார் இருவரும் சேர்ந்து மண்டபத்திற்கு வெளியே இழுத்து செல்ல முயன்றனர். அப்போது மாப்பிள்ளை வீட்டார் அவர்களை சூழ்ந்து கொண்டு விடாமல் தடுத்தனர்.
அவர்கள் மீது மிளகாய் பொடிகளை தூவினர். மேலும் நாற்காலிகளை தூக்கி வீசி அடித்தனர். இதனால் திருமண மண்டபத்தில் கூச்சல் குழப்பம் அலறல் சத்தம் என களேபரம் ஏற்பட்டது.
சினேகாவை அவருடைய சகோதரர் கையை பிடித்து இழுத்துச் சென்றார். கணவர் அவரைவிடாமல் பிடித்துக் கொண்டார். இருவரையும் சேர்த்து தரதரவென இழுத்து சென்றனர்.
இதை தடுக்க முயன்ற மாப்பிள்ளையின் நண்பர் ஒருவரை சினேகாவின் சகோதரர் கடுமையாக தாக்கினார். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.
திருமண மண்டபத்தில் இருந்தவர்கள் இதனை தடுத்து நிறுத்தினர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கடயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துளசிதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இது குறித்து மணப்பெண்ணிடம் முதலில் விசாரித்தனர்.
அப்போது அவர் தன்னை கட்டாயப்படுத்தி தாய் மற்றும் சகோதரர் இங்கிருந்து கடத்த முயற்சிப்பதாக தெரிவித்தார். போலீசார் சினேகாவின் தாய் மற்றும் சகோதரரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
அவர்கள் மீது தாக்குதல், கடத்தல் முயற்சி, மணப்பெண்ணின் நகை திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
மிளகாய் பொடி தூவி தாக்கி மணப்பெண்ணை கடத்த முயன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சினிமாவை மிஞ்சும் இந்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வருகிற 2029-ல் நாடாளு மன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை அமலுக்கு வரும்.
- மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் முறையான தரமான கல்வி வழங்கப்படும்.
திருப்பதி:
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தனது பிறந்த நாளை திருப்பதி அடுத்த கூடூரில் கொண்டாடினார்.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அரசு பஸ்சில் பெண்களுக்கு இலவசமாக பயண திட்டம் அமல்படுத்தப்படும்.
தகுதியுள்ள அனைத்து பெண் பயனாளிகளுக்கும் மாதந்தோறும் முதல் தேதியில் ரூ.4 ஆயிரம் வீட்டிலேயே நேரடியாக வழங்கப்படும். மகா சக்தி திட்டத்தின் மூலம் பெண்களை நாட்டிலேயே மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக மாற்றப்படுவார்கள். முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி சமூகத்தில் அனைத்து பிரிவினரையும் ஏமாற்றிவிட்டார்.
வருகிற 2029-ல் நாடாளு மன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை அமலுக்கு வரும். அப்போது பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.
தெலுங்கு தேசம் கட்சி எப்போதும் பெண்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும். மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் முறையான தரமான கல்வி வழங்கப்படும்.
தனது ஆட்சியில் மஞ்சள், குங்குமம் திட்டத்தில் பெண்களுக்கு திருமண நிதி உதவியாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. மத்திய அமைச்சரவையில் பெண் ஒருவர்தான் நிதி அமைச்சராக இருக்கிறார். அதேபோல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பெண்கள் தான் நிதி அமைச்சர்.
ஏழைகள் மற்றும் தெலுங்கு சமூகத்தின் மேம்பாட்டிற்காக எப்போதும் தனது நேரத்தை செலவிடுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சித்திரை மாத பவுர்ணமி கருடசேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
- ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருமலை:
திருமலையில் நடந்து வரும் வசந்தோற்சவத்தின் 2-வது நாளான நேற்று தங்கத்தேரில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி எழுந்தருளி வீதிஉலா வந்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) சித்திரை மாத பவுர்ணமி கருடசேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கத் தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்து வசந்த மண்டபத்தை அடைந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வசந்த மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு மாலை உற்சவர்கள் வசந்த மண்டபத்தில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாகக் கோவிலுக்கு திரும்பினர்.

வசந்தோற்சவத்தில் திருமலை பெரிய ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமி, திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி தம்பதியர், கோவில் துணை அதிகாரி லோகநாதன் மற்றும் அதிகாரிகள், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கருடசேவை நடப்பது வழக்கம். ஆனால், திருமலையில் வசந்தோற்சவம் நடப்பதால் இன்று (செவ்வாய்க்கிழமை) சித்திரை மாத பவுர்ணமி கருடசேவைைய திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதை, பக்தர்கள் கவனித்து தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






