என் மலர்
இந்தியா
- தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக எங்கள் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளேன்.
- அடுத்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் அதில் கலந்துகொண்டு போராட்டத்தைத் தொடர வேண்டும்.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, "நமது மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனைதான் தொகுதி மறுவரையறை. இதற்காக கட்சி வேறுபாடுகளை களைந்து போராடுவோம். பாஜக நம்மை பேசவே அனுமதிப்பதில்லை; அவர்கள் நினைப்பதை முடிவாக எடுக்கிறார்கள். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக எங்கள் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளேன். நீங்களும் உங்கள் மாநிலத்தில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்.
நியாயமான தொகுதி வரையறையை வலியுறுத்தி அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடத்தப்படும். அனைத்து கட்சிகளும் அதில் கலந்துகொண்டு போராட்டத்தைத் தொடர வேண்டும்" என்று தெரிவித்தார்.
- மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் தண்டனையா?
- கூட்டத்தை கூட்டி உள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டானுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னை:
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் சிங் மான் பேசியதாவது:-
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யக்கூடாது. இதனால் தமிழகம், பஞ்சாப் மட்டுமல்ல மக்கள் தொகையை கட்டுப்படுத்திய அனைத்து மாநிலங்களையும் பாதிக்கும். இந்த நடவடிக்கை மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் தண்டனையா?
எங்கெல்லாம் வெற்றி வாய்ப்பு உள்ளதோ? அங்கெல்லாம் அதனை தக்க வைக்க பா.ஜ.க. முயற்சி செய்கிறது. தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான நடவடிக்கைக்கு 100 சதவீதம் ஒத்துழைப்பு வழங்குவோம். இந்த கூட்டத்தை கூட்டி உள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டானுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- சுமார் ரூ.11 கோடி மதிப்பிலான பணக்கட்டுகள் எரிந்து நாசமானதாகவும், வீட்டில் மொத்தம் ரூ.37 கோடி அளவில் பணம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
- சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம், இந்த அறிக்கையை ஆராய்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்கும்.
புதுடெல்லி:
டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி யஷ்வந்த் வர்மா. அவரது வீட்டில் கடந்த 14-ந்தேதி தீ விபத்தின்போது ஒரு அறையில் இருந்து கட்டுக்கட்டாக பணம் மீட்கப்பட்டது. சுமார் ரூ.11 கோடி மதிப்பிலான பணக்கட்டுகள் எரிந்து நாசமானதாகவும், வீட்டில் மொத்தம் ரூ.37 கோடி அளவில் பணம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து நீதிபதி வர்மா அலாகாபாத் ஐகோர்ட்டுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பதுடன், இந்த விவகாரத்தில் விரிவான நீதி விசாரணை மேற்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு சம்மதித்து இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிடம் டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி டி.கே. உபத்யாய் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம், இந்த அறிக்கையை ஆராய்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்கும்.
- இந்த ரெயிலில் 1,116 பேர் அமர்ந்தபடியும், 3,798 பேர் நின்றபடியும் பயணம் செய்யலாம்.
- இந்த ரெயிலுக்கான கட்டண விவரத்தை இதுவரை ரெயில்வே நிர்வாகம் அறிவிக்கவில்லை.
சென்னை:
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதே போல சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, திருத்தணிக்கும் புறநகர் ரெயில் சேவைகள் உள்ளது. இதைத்தவிர கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கும் பறக்கும் ரெயில்கள் செல்கின்றன.
இந்த ரெயில்களில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். சென்னை மக்களின் வரப்பிரசாதமாக இந்த புறநகர் ரெயில்கள் இருந்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் முதல் முறையாக மெட்ரோ ரெயில்கள் போல முழுவதும் குளு, குளு வசதிகள் கொண்ட ஏ.சி. புறநகர் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதற்காக தானாக திறந்து மூடும் கதவு வசதியுடன் கூடிய 12 பெட்டிகள் கொண்ட ஏ.சி. ரெயில் தயாரிக்கப்பட்டது.
இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தற்போது இந்த ரெயில் தாம்பரம் ரெயில்வே பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் கோடை வெயில் கொளுத்த தொடங்கி உள்ளதால் இந்த குளு, குளு ஏ.சி ரெயில் எப்போது இயக்கப்படும் என பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.
தற்போது அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல் வாரத்தில் இருந்து இந்த ஏ.சி. ரெயில் கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு இடையே இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் தென்னக ரெயில்வே அறிவிக்க இருக்கிறது.
மற்ற புறநகர் மின்சார ரெயில்கள் போல நாள் முழுவதும் இந்த ரெயில் இயக்கப்படாது. காலை 5.45 மணி முதல் காலை 10.30 மணி வரையிலும், மாலை 3.45 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் இந்த ஏ.சி. ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இடையில் 5 மணி நேரம் இந்த ரெயிலில் கதவு, ஜன்னல் கண்ணாடி உள்ளிட்டவைகள் பராமரிப்பு செய்யப்படும்.
இந்த ரெயிலை பொறுத்தவரை கதவுகள் தானாக திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஜி.பி.எஸ். அடிப்படையிலான தகவல் தொழில்நுட்ப வசதி, அனைத்து பெட்டிகளிலும் சி.சி.டி.வி. கேமரா வசதிகளும் உள்ளது.
இந்த ரெயிலில் 1,116 பேர் அமர்ந்தபடியும், 3,798 பேர் நின்றபடியும் பயணம் செய்யலாம்.
இந்த ரெயில் எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, பல்லாவரம், தாம்பரம், பெருங்களத்தூர், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட 12 முக்கிய ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ரெயிலுக்கான கட்டண விவரத்தை இதுவரை ரெயில்வே நிர்வாகம் அறிவிக்கவில்லை. இதில் பயணம் செய்ய ரூ.30 முதல் ரூ. 50 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. பயணிகள் மத்தியில் குளு, குளு ரெயிலுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கூடுதலாக இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்ட்ரல்- அரக்கோணம் இடையேயும் ஏ.சி. ரெயில் இயக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
- மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
- சட்டசபை தேர்தல் குறித்து கட்சியினருக்கு முக்கிய ஆலோசனை.
சென்னை:
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகி இருக்கிறது.
இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
கூட்டத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து கட்சியினருக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.
தி.மு.க. கூட்டணியில் சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு கட்சியினர் தயாராக வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். வருகிற ஜூலை மாதம் தி.மு.க. சார்பில் மேல்-சபை எம்.பி.யாக இருக்கும் கமல்ஹாசன் சட்டசபை தேர்தலில் இரட்டைவெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை பெற்று போட்டியிட வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளார்.
இதற்காக சட்டசபை தேர்தல் நேரத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய அவர் திட்டமிட்டு உள்ளார். தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்கும் கூட்டத்தில் வியூகம் வகுக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சியை சட்டமன்ற தேர்தலுக்குள் பலப்படுத்த வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.
தேர்தலை எதிர்கொள் ளும் வகையில் நிர்வாகிகள் அனைவரும் கட்சிப் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்றும் கமல்ஹாசன் கூட்டத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். அரசியல், சினிமா என இரண்டிலும் கால் பதித்து வரும் கமல்ஹாசன் சட்ட சபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் தீவிர அரசியலில் ஈடுபடவும் முடிவு செய்தி ருக்கிறார்.
இதற்கான ஆயத்த பணி களை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மேற்கொண்டு வருகிறார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சியை கமல்ஹாசன் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கினார். அதன்பிறகு பாராளுமன்ற, சட்ட சபை தேர்தலை சந்தித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி குறிப்பிடத்தக்க சதவீத அளவுக்கு வாக்குகளை பெற்றாலும் தோல்வியையே சந்தித்துள்ளது.
இந்த நிலையில் வருகிற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் நீதி மையம் கட்சியின் குரலை சட்டமன்றத்தில் ஒலிக்கச் செய்துவிட வேண்டும் என்பதிலும் கமல்ஹாசன் கவனம் செலுத்தி உள்ளார்.
இதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் இன்றைய செயற்குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. முடிவில் முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
- பாகம்பாடி செல்லும் சாலையில் சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்த 3 நபர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
- தப்பிச் சென்ற ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சின்னசேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே குரால் மற்றும் பாக்கம்பாடி இந்த பகுதியை சுற்றியுள்ள வனப்பகுதியில் நேற்று இரவு வேல்முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கால சமுத்திரம் பகுதியில் இருந்து பாகம்பாடி செல்லும் சாலையில் சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்த 3 நபர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் கள்ளத் துப்பாக்கி இருந்தது தெரிய வந்தது. உடனே, அவர்களை மடக்கி பிடித்தபோது வேல்முருகனின் காலில் கள்ள துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டதாகவும் இருவரை பிடித்து உளுந்தூர்பேட்டை வனத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், அந்த 2 பேரின் பெயர் செல்லக்கண்ணு, சரவணன் எனவும், இவர்கள் எதற்காக கள்ளத் துப்பாக்கியுடன் வனப்பகுதியில் சுற்றி திரிந்தார்கள் என்பது போன்ற விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பிச் சென்ற ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வனத்துறை அதிகாரி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் சின்னசேலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
- ஆன்லைன் சூதாட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான் ஒரே தீர்வு.
- இதுவரை 3 கால கட்டங்களில் 84 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என்று 2021 ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அன்று தொடங்கி 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந் தேதி புதிய ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் இயற்றப்படும் வரை 29 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
அந்த சட்டத்தை கவர்னர் திரும்பி அனுப்பியதைத் தொடர்ந்து அதே சட்டம் 2023-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி மீண்டும் இயற்றப்பட்ட போது, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்திருந்தது.
அந்த சட்டத்திற்கு அதே ஆண்டின் ஏப்ரல் 10-ந் தேதி கவர்னர் ஒப்புதல் அளித்த போது 50 பேர் தற்கொலை செய்து கொண்டிருந்தனர்.
தி.மு.க. ஆட்சியில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என 2023-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு இதுவரை 24 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் இதுவரை 3 காலக் கட்டங்களில் 84 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் நிலையில், தவறான தகவல்களை அரசு அளிப்பதை ஏற்க முடியாது.
ஆன்லைன் சூதாட்டத்தில் தமிழக மக்கள் பணத்தை இழப்பதைத் தடுக்க ஆன்லைன் சூதாட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான் ஒரே தீர்வு ஆகும்.
ஆனால், தீர்ப்பளிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகப்போகும் நிலையில் இந்த விவகாரத்தில் தவறான தகவல்களை தெரிவிப்பதை விடுத்து, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- நாட்டின் வளர்ச்சிக்காக நாம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியுள்ளோம்.
- பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கான முக்கியமான கூட்டம் இது.
சென்னை:
சென்னையில் நடைபெற்று வரும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் காணொலி மூலம் ஓடிசா முன்னாள் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
* நாட்டின் வளர்ச்சிக்காக நாம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியுள்ளோம்.
* மக்கள் தொகையை கட்டுப்படுத்தியிருக்காவிடில் மக்கள் தொகை அதிகரித்து நாட்டின் வளர்ச்சி பாதித்திருக்கும்.
* மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வது நியாயமற்றது.
* பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கான முக்கியமான கூட்டம் இது என்றார்.
- குமரி கிழக்கு மாவட்ட தலைவர் கோபகுமார், இரணியலில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
- நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளிலும் பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர்.
நாகர்கோவில்:
தமிழகத்தில் எத்தனையோ தீர்க்கப்படாத பிரச்சனைகள் உள்ள நிலையில் பாராளுமன்ற தொகுதி மறு வரையறை கூட்டம் நடத்தப்படுவது தேவையற்றது என பா.ஜ.க. குறை கூறி வருகிறது. இந்த கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் இன்று பா.ஜ.க. சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடைபெறும் என்று மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார்.
அதன்படி இன்று (சனிக்கிழமை) தமிழகத்தில் பா.ஜ.க.வினர் தங்கள் வீட்டு முன்பு கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்திலும் நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து கருப்புகொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
குமரி கிழக்கு மாவட்ட தலைவர் கோபகுமார், இரணியலில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் அவரது வீட்டின் முன்பும், மாநில செயலாளர் மீனாதேவ் நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே உள்ள தனது வீட்டின் முன்பும் கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட துணை தலைவர் தேவ் மற்றும் பலர் கருப்புக்கொடியுடன் பங்கேற்றனர்.
மாவட்ட பொருளாளர் முத்துராமன், வெள்ளாடிச்சி விளை வீட்டு முன்பு கருப்பு சட்டை அணிந்து கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார். இதேபோல் நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளிலும் பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் கருப்புக் கொடி போராட்டம் நடத்தினர்.
மாநகராட்சி கவுன்சிலர்கள் ரோசிட்டா திருமால், ரமேஷ் உள்ளிட்ட பலரும் கருப்புக் கொடி போராட்டத்தில் பங்கேற்றனர். குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகளும் ராஜாக்கமங்கலம், அகஸ்தீசுவரம், தோவாளை உள்ளிட்ட பல பகுதிகளிலும் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
- திமுக ஆட்சியில் 120 படுகொலைகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன.
- தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நாளுக்கு நாள் சீர்குலைந்து வருகிறது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் கொலை மற்றும் கொள்ளைகள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை குறித்து அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகியுள்ளன.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பிந்தைய 4 ஆண்டுகளில் 6597 படுகொலைகள் நடைபெற்றிருப்பதாக மாநில குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்திருக்கிறது.
அதாவது ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் 4.54 கொலைகள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலைகளின் எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகரித்திருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கொடூரக் கொலைகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து வினா எழுப்பும் போதெல்லாம் தமிழ்நாட்டில் கொலைக்குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாகத் தோன்றினாலும் உண்மையில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்றும், முந்தைய ஆட்சியுடன் ஒப்பிடும் போது திமுக ஆட்சியில் கொலைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால், உண்மை நிலை அதற்கு மாறாக இருக்கிறது.
2021-ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், அந்த ஆண்டில் 1686, 2022-ம் ஆண்டில் 1690, 2023-ம் ஆண்டில் 1681, 2024-ம் ஆண்டில் 1540 என கடந்த 4 ஆண்டுகளில் 6597 படுகொலைகள் நடந்துள்ளன. முதலமைச்சரின் கூற்றுக்கு மாறாக முந்தைய ஆட்சியுடன் ஒப்பிடும் போது திமுக ஆட்சியில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
முந்தைய அதிமுக ஆட்சியில் 2016-ம் ஆண்டில் 1603, 2017-ம் ஆண்டில் 1560, 2018-ம் ஆண்டில் 1569, 2019-ம் ஆண்டில் 1745 என 6477 படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. அதிமுக ஆட்சியில் நிகழ்ந்ததை விட திமுக ஆட்சியில் 120 படுகொலைகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன.
சராசரி அடிப்படையில் பார்த்தால், அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் ஆண்டுக்கு 30 படுகொலைகள் அதிகமாக நடந்திருக்கின்றன. விழுக்காட்டின் அடிப்படையில் பார்த்தால் அதிமுக ஆட்சியின் முதல் 4 ஆண்டுகளை விட, திமுக ஆட்சியின் முதல் 4 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 2% கொலைகள் அதிகமாக நடந்திருக்கின்றன.
திமுக ஆட்சியில் உண்மையிலேயே சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்றால், கொலைகளின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டும். ஆனால், திமுக ஆட்சியில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் செல்கிறது.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நாளுக்கு நாள் சீர்குலைந்து வருகிறது என்பதற்கு திமுக அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தான் சான்று ஆகும்.
கொலை வழக்குகளில் கடுமையான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதாக திமுக அரசு கூறுகிறது. அதிலும் உண்மை இல்லை. கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை படுகொலை செய்தவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சேமலைக்கவுண்டன் பாளையம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமான் முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கிலும் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்த பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே செல்கிறது.
கொலைகளை தடுப்பதிலும், துப்புதுலக்குவதிலும் தமிழக காவல்துறை மிக மோசமாகத் தான் செயல்பட்டு வருகிறது. குற்றங்களைத் தடுப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, கொலைகளையும், கொள்ளைகளையும் தடுக்க முடியாமல் திணறி வருகிறது.
இதற்கு காரணம் திமுக அரசின் செயல்திறனற்ற தன்மை தான். தமிழக அரசும், காவல்துறையும் இனியாவது விழித்துக் கொண்டு குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் முன்னெடுப்பிற்கு பாராட்டுக்கள்.
- பா.ஜ.க. தலைமையிலான அரசு எப்போதும் மாநில அரசுகளின் கருத்துகளை கேட்பதில்லை, பேசவிடுவதும் இல்லை.
சென்னை:
சென்னையில் நடைபெற்று வரும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி பேசியதாவது:-
* தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் முன்னெடுப்பிற்கு பாராட்டுக்கள்.
* மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநில அரசுகளுக்கு தண்டனை வழங்குவதா?
* மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிராக கட்சி வேறுபாடுகளை களைந்து போராட வேண்டும்.
* பா.ஜ.க. தலைமையிலான அரசு எப்போதும் மாநில அரசுகளின் கருத்துகளை கேட்பதில்லை, பேசவிடுவதும் இல்லை.
* பா.ஜ.க. நினைப்பதையே முடிவாக எடுப்பதாக குற்றம்சாட்டினார்.
- தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை.
- பாதிப்புகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியதாவது:
* தொகுதி மறுவரையறை என்பது எண்ணிக்கை மட்டுமல்ல, இந்தியாவின் ஆன்மாவான கூட்டாட்சி சம்பந்தப்பட்ட விவகாரம்.
* தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு அர்த்தமுள்ள உரையாடல் மேற்கொள்ள வேண்டும்.
* தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை.
* தென் மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறைவது பா.ஜ.க.வின் ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும்.
* பாதிப்புகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
* ஏற்கனவே மத்திய அரசு நிதிகளை தராமல் நம்மை தண்டித்துள்ளது.
* மாநிலங்களின் ஒன்றியமே இந்திய நாடு.
* பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம்.
இவ்வாறு அவர் கூறினார்.






