என் மலர்
அழகுக் குறிப்புகள்
- 40 வயதை கடந்தது முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது இயற்கையான விசயம் தான்.
- முகம் நன்றாக இருக்கனும் என்றால் மனதை இளமையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இளமையை விரும்பாதவர்கள் யார் தான் இருக்கிறார்கள் இந்த உலகில். 40 வயதை கடந்ததும் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது என்பது இயற்கையான விசயம் தான். ஆனால் இப்போது 30 வயது, 20 வயதிலேயும் பலருக்கு முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. ஆனால் சிலர் அறுபது வயதில் கூட முகத்தை இளமையாக சின்ன குழந்தை மாதிரி வைத்திருப்பார்கள். இதற்கு என்ன காரணம் நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.
முகம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் மனதை இளமையாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அதனால் முகத்தை நல்லா வைத்திருக்க நினைப்பவர்கள் மனதை இளமையாக வைத்துக்கொள்ள வேண்டும். நல்ல ஆரோக்கியத்தை நாம் கடைபிடிக்க வேண்டும். அதற்கு நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும். நன்றாக உறங்க வேண்டும்.
அதேபோல் நம் முகத்தில் ஒரு இருக்கம், பரபரப்பு, டென்ஷன் எது இருந்தாலும் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும். அதேபோல் தசைகள் தளர்வுறும்போதும் சுருக்கங்கள் ஏற்படும். அதற்கு அடிக்கடி சிரித்துக்கொண்டு இருந்தாலே முகத்திற்கு நல்ல பயிற்சி. ஆனால் நாம் சிரிப்பை மறந்து திரிகிறோம்.
அடுத்ததாக நாம் முகத்திற்கு போடும் மேக்கப். இந்த மேக்கப்பில் உள்ள கெமிக்கல்ஸ். இதனால் நம் முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டும். மேக்கப் ரிமூவரை பயன்படுத்தும் போது அதில் உள்ள கெமிக்கல் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
அந்த காலத்தில் மேக்கப்பை அழிப்பதற்கு தேங்காய் எண்ணெய், அல்லது ஆலிவ் ஆயில் தான் தேய்ப்பார்கள். அதற்கு தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் கொடுத்து முகத்தில் உள்ள தசைகளை இறுகச்செய்து இன்னும் முகத்திற்கு பொலிவை கொடுக்கிறது. அதன்பிறகு காய்கறிகளான கேரட், உருளைக்கிழங்கு மற்றும் பழங்களான பப்பாளி, தக்காளி, வாழைப்பழம் இவற்றை பேஸ்ட் செய்தும் பயன்படுத்தலாம். மற்றும் பழவகைகளையும் முகத்திற்கு ஃபேஷியலாக பயன்படுத்தலாம். அல்லது கடலைமாவு, பால் சேர்த்து கலந்து அந்த பேஸ்டையும் வாரத்திற்கு இரண்டுமுறை முகத்திற்கு தடவி வர முகத்தில் உள்ள தசைகள் இறுக்கமாகி சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும்.
அதுமட்டுமல்லாமல் குளிர்ந்த தண்ணீரில் அடிக்கடி முகத்தை கழுவவேண்டும். இல்லையென்றால் ஐஸ்கியூப்பை கூட முகத்தில் தேய்த்து கழுவலாம். புதினா இலைகளை அரைத்து ஒரு ஐஸ்கியூப் பாக்சில் ஊற்றி எடுத்து தேவைப்படும் போது அதனை பயன்படுத்தலாம். நீங்க எப்போதெல்லாம் பிரஷ்சாக இருக்க நினைக்கிறீர்களோ அப்போதெல்லாம் இந்த கியூப்களை எடுத்து முகம் முழுக்க தடவினால் சுருக்கங்களில் இருந்து விடுபடலாம்.
இதோட இல்லாம பாசிபயிறு, கோதுமை, கடலைமாவு, ஓட்ஸ் இப்படி நம்ம வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு வாரத்திற்கு ஒருநாள் இந்த பொருளுடன் பன்னீர் அல்லது பாலில் குளைத்து பேக் போட்டு வந்தாலே முகம் இறுக்கமாக மாறும். மனம் தான் இறுக்கமாக இருக்க கூடாது. முகம் இறுக்கமாக இருந்தால் தான் வயதான தோற்றம் அவ்வளவு சீக்கிரமாக நமக்கு வராது.
- இந்தியர்களுக்கு சர்க்கரைநோய் வரும் தன்மை அதிகம்.
- நம் உடலியல் கடிகார சுழற்சியே மாறியிருக்கிறது.
பொதுவாகவே இந்தியர்களுக்கு சர்க்கரைநோய் வரும் தன்மை அதிகம். ஏனென்றால் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுப்பொருட்களையே நாம் அதிகம் உணவாக எடுத்துக்கொள்கிறோம். முன்பெல்லாம் 40- 45 வயதுக்குப் பிறகு சர்க்கரைநோய் இருக்கிறதா என்பதற்கான டெஸ்ட் செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். இப்போது 30 வயதை எட்டியதுமே சர்க்கரைநோய்க்கான டெஸ்ட் எடுக்கச் சொல்கிறோம்.
ஒருகாலத்தில் மனிதர்கள் வேட்டையாடி, அதில் கிடைத்த உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்தனர். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள். அளவுக்கு அதிகமான அந்த உணவு கொழுப்பாக உடலில் சேரும். கொழுப்பாக சேரும் அந்த தன்மை இன்றளவும் நம் மரபணுக்களில் இருக்கிறது.
நம்மில் பலரும் பசித்த பிறகு உணவு உண்ணும் பழக்கம் இல்லை. நேரத்துக்கு சாப்பிடுகிறோம். அப்படி சாப்பிடுவதால் தேவைக்கு அதிகமான உணவானது கொழுப்பாக போய் சேர்ந்துவிடுகிறது. அதனால் நமக்கு சர்க்கரைநோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம். அதனால்தான் 30 ப்ளஸ்சிலேயே சர்க்கரை நோய்க்கான பரிசோதனை செய்ய சொல்கிறோம்.
பெற்றோர் இருவரில் யாரேனும் ஒருவருக்கு சர்க்கரைநோய் இருந்தால் பிள்ளைகளுக்கும் அந்த நோய் பாதிக்க 60 சதவிகிதம் வாய்ப்பு உண்டு. பெற்றோர் இருவருக்குமே சர்க்கரைநோய் இருந்தால் அந்த வாய்ப்பு 90 சதவிகிதமாக அதிகரிக்கும்.
நம் வாழ்க்கைமுறையும் சர்க்கரைநோய் வருவதற்கான காரணங்களில் பிரதானமாக இருக்கிறது. உடலியக்கமே இல்லாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்வது, இரவில் தாமதமாகவும் அதிகமாகவும் சாப்பிடுவது, காலை உணவை தவிர்ப்பது, இரவில் கண்விழித்திருப்பது என நம் உடலியல் கடிகார சுழற்சியே மாறியிருக்கிறது.
இயற்கையோடு இணைந்த வாழ்க்கைக்குப் பழகும்போது சர்க்கரைநோய் உள்ளிட்ட பல பிரச்னைகளை வரவிடாமல் தடுக்க முடியும். ஸ்ட்ரெஸ்சும் மிக முக்கிய காரணம்.
ஏற்கெனவே நம் மரபணுக்களில் நீரிழிவுநோய்க்கான தன்மை இருக்கும்போது மேற்குறிப்பிட்ட வாழ்வியல் மாற்றங்களும் சேரும்போது 30 ப்ளஸ்சிலேயே சர்க்கரைநோய் பாதிக்கும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. எனவே பெற்றோருக்கு சர்க்கரைநோய் இருந்தால் 30 ப்ளஸ்சிலும், வாழ்வியல் மாற்றங்கள் இருப்பதாக உணர்பவர்கள் 40 ப்ளஸ்சிலும் நீரிழிவுக்கான பரிசோதனையைச் செய்து பார்ப்பது அவசியம்.
- வெயில் காலத்தில் அதிக வியர்வை தலையில் தங்குவதால் முடி உதிர்வு ஏற்படுகிறது.
- நிறைய பேருக்கு முடி உதிரும் கட்டம் கோடை காலத்தில் தொடங்குகிறது.
இளம்பிள்ளைகள் முதல், வயதானவர்கள் வரை எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை, முடி உதிர்வு. சில நாள்களுக்கு நன்றாக முடி வளரும், திடீரென்று முடி உதிரத் தொடங்கிவிடும். இதற்கு காரணம் என்னவென்றே புரியாது. பலவிதமான எண்ணெய் வகைகள், ஷாம்பூ போன்றவற்றை மாற்றி மாற்றிப் பயன்படுத்துவார்கள். முடி உதிர்வுக்கு மன அழுத்தம், சீரான பராமரிப்பின்மை, மரபணு, ஊட்டச்சத்துக் குறைபாடு என பல காரணங்கள் இருந்தாலும், பருவகால மாற்றம் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இதை ஆங்கிலத்தில் 'சீசனல் ஹேர்ஃபால்' என்று சொல்வார்கள். மழைக்காலங்களில் காற்றில் உள்ள கூடுதலான ஹைட்ரஜனை கிரகித்துக்கொண்டு தலை முழுக்க வறட்சி ஏற்பட்டு முடி உதிரும். அதேபோல வெயில் காலத்தில் அதிக வியர்வை தலையில் தங்குவதால் முடி உதிர்வு ஏற்படுகிறது. ஒவ்வொரு கால மாற்றத்தின் போதும் முடி உதிர்வது இயல்பானது தான். ஆனால் சிலருக்கு இது முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
"பொதுவாக நமது கூந்தல், வளரும் கட்டம், தலையில் தங்கும் கட்டம், உதிரும் கட்டம்என மூன்று சுழற்சி கட்டங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு நூறு நாள்களுக்கும் இந்த சுழற்சி மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் இந்தச் சுழற்சி எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது.
நிறைய பேருக்கு முடி உதிரும் கட்டம் கோடை காலத்தில் தொடங்குகிறது. ஏனெனில் அதிக வியர்வை தலையிலேயே தங்கி அந்த ஈரப்பதம் இருந்துகொண்டே இருப்பதால் முடி உதிரும் பிரச்னை ஏற்படும். குளிர்காலத்தில் முடி உடையும் பிரச்னை அதிகமாக இருக்கும். அதுவே நமக்கு முடி அதிகமாக உதிர்வது போலவும் தோன்றலாம். அத்துடன், நாம் அடிக்கடி தலைக்கு குளிக்கும்போது, தலை மற்றும் முடியில் வறட்சி உண்டாகும். நாம் பயன்படுத்தும் தண்ணீரில் உள்ள குளோரின், உப்பு போன்றவையும் நம் முடி உதிர்வுக்கு வழிவகுக்கும்.
பருவகால முடி உதிர்வு என்றாலும், ஒரு நாளைக்கு 50 முதல் 100 முடிகள்வரை கொட்டுவது இயல்பானது. அதற்கும் மேல் முடி உதிர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். முடியின் வேர்களில் ஏற்படும் குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் மற்றும் வைட்டமின் சார்ந்த பிரச்னைகள் இருந்தாலும் முடி அதிகமாக உதிரும்.
மைல்டான ஷாம்பூக்கள் மற்றும் நல்ல கண்டிஷனர்களை பயன்படுத்துவதால் முடி உதிர்வதைத் தடுக்கலாம். குளிப்பதற்கு முன்பு ஆயில் மசாஜ் செய்து ஹேர் வாஷ் செய்வது நல்லது. நீண்ட நேரத்திற்கு அந்த எண்ணெயோடு இருக்காமல் 10 முதல் ௧௫ நிமிடத்திற்குள் ஹேர் வாஷ் செய்து விட வேண்டும்.
தலைமுடி புரதத்தால் ஆனது. அதனால் உதிர்வைத் தடுப்பதற்கு புரதம் நிறைந்த உணவு முறையைப் பின்பற்றுவது மிகச் சிறந்த வழி. அதற்காக முட்டை, பச்சைப்பயிறு, பனீர், சிக்கன், சுண்டல், பருப்பு வகைகள் இவற்றை நம் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்த கேரட், நீர்ச்சத்துள்ள பழங்கள், பப்பாளி மற்றும் காய்கறிகளைச் சாப்பிட வேண்டும்.
வெளியே செல்லும்போது தலையில் அதிகமாக எண்ணெய் வைப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் வெளியே இருக்கும் தூசு நம் தலையில் தங்கி அதுவே பொடுகு அதிகமாக உருவாகக் காரணமாகிவிடும். வெளியே செல்லும் போது துணியால் தலைமுடியை முழுதாக மூடிக்கொள்வது நல்லது. அது வெயில், காற்று, தூசு என அனைத்து பிரச்னைகளில் இருந்தும், நம் கூந்தலை பாதுகாக்க உதவும்.
- வெயிலில் சுற்றுபவர்களுக்கு தோலில் வறட்சி மற்றும் பிக்மெண்டேஷன் ஏற்படும்.
- கேடு விளைவிக்க கூடிய யூவி கதிர்கள் சூரிய ஒளியில் இருப்பதை நாம் அறிவோம்.
சன்ஸ்கிரீன் லோஷன் என்பது சூரிய ஒளியினால் முகத்தில் ஏற்படக்கூடிய கருமையை நீக்க பயன்படுகிறது. பணிகள்காரணமாக சூரியவெளியில் சுற்றும் வேலை உள்ளவர்கள் கண்டிப்பாக சன்ஸ்கிரீன் பயப்படுத்த வேண்டும். அவ்வாறுவெயிலில் சுற்றுபவர்களுக்கு தோலில் வறட்சி மற்றும் பிக்மெண்டேஷன், தோல் உறிந்து வருவது போன்றவை ஏற்படும்.
சன்ஸ்கிரீன் இரண்டு வகைகளில் உள்ளன. ஒரு பிசிக்கல் சன்ஸ்கிரீன், மற்றொன்று கெமிக்கல் சன்ஸ்கிரீன். பிசிக்கல்சன்ஸ்கீர்னில் உள்ள மாலிக்கியூவில் சூரியஒளியினால் ஏற்படும் தாக்கத்தை உடனடியாக வெளியேற்றுகிறது. இந்த பிசிக்கல் சன்ஸ்கிரீனில் அவன் ஆக்சைடு, டைட்டானியம் டை ஆக்சைடு மற்றும் சின்க் ஆசைடு உள்ளது.
நமது சருமத்திற்கு கேடு விளைவிக்க கூடிய யூவி கதிர்கள் சூரிய ஒளியில் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். இதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன்பு சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம். அதுமட்டுமல்லாமல் யூவி கதிர்களுக்கு எதிரான இந்த பாதுகாப்பு அடுக்கை பராமரிக்க ஒவ்வொரு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் சன்ஸ்கிரீன் பயன்படுத்த பல நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
இதுவே மழைக்காலம் என்று வரும் பொழுது சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று பலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். ஆஃப்டர் சன்கேர் என்று சொல்லப்படும் சூரிய வெளிச்சத்திற்கு நமது சருமத்தை வெளிப்படுத்திய பிறகு சன் ஸ்கிரீன் மட்டுமே போதுமானதாக இருக்காது.
வானிலையை துளியும் பொருட்படுத்தாமல் சூரியனானது நமது சருமத்திற்கு கேடு விளைவிக்க கூடிய யூவி கதிர்களை ஆண்டு முழுவதும் தொடர்ந்து வெளியிடுகிறது. சூரிய கதிர்களால் நமது சருமம் சன்பர்ன் அல்லது வறண்ட சருமம் உருவாகலாம். இது நீண்ட காலத்திற்கு நிகழும் பொழுது முன்கூட்டிய வயதான அறிகுறிகள் முதல் சரும புற்றுநோய் வரை ஏராளமான ஆபத்துக்களை உண்டாக்கும்.
வழக்கமான எஸ்பிஎப் பயன்படுத்துவது இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான பாதுகாப்பை மட்டுமே வழங்கக்கூடியது. 90 சதவீத முன்கூட்டிய வயதான அறிகுறிகள் சூரியனின் விளைவுகளால் ஏற்படுபவை தான்! எனவே வீட்டை விட்டு வெளியேசென்று வீடு திரும்பிய பிறகு சருமத்திற்கு தேவையான பராமரிப்பை வழங்குவது மிகவும் அவசியம். இந்த காரணத்தை பூர்த்திசெய்யும் வகையில் ஏராளமான புராடக்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.
நீங்கள் எவ்வளவு நேரம் சூரிய வெளிச்சத்தில் இருக்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்கள் சருமத்திற்கு பொருந்தக்கூடிய சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம். இது தவிர வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய பிறகு நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்களும் உள்ளன.
மென்மையான எக்ஸ்ஃபோலியேட்டரை பயன்படுத்தி வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சருமத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களை அகற்றுவது அவசியம். சன்ஸ்கிரீனுடன் வைட்டமின்சி பயன்படுத்துவது சூரிய கதிர்களுக்கு எதிரான பாதுகாப்பை அதிகரிக்கிறது. சிறந்த ஆன்டிஆக்சிடென்டாக செயல்படுவதன் மூலம் வைட்டமின் சி யூவி கதிர்களால் உருவாக்கப்படும் ஃப்ரீ ரேடிக்கல்களை சமநிலைப்படுத்துகிறது. ஆகவே சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதற்கு முன்பு வைட்டமின் சி சார்ந்த சீரம் பயன்படுத்துவது உங்கள்
சருமத்தில் பல அதிசயங்களை செய்யக்கூடும். எனவே சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது மட்டுமே உங்கள் சருமத்தை பாதுகாக்க போதாது. கூடுதலாக 5 நிமிடங்கள் செலவு செய்வதால் உங்கள் சருமத்தை மென்மையாகவும், பொலிவுடனும் என்றும் இளமையாகவும் பார்த்துக் கொள்ளலாம்.
- வயதாகும்போது நம் சருமத்திற்கும் வயதாகிறது.
- வயதாகும்போது சருமம் ஈரப்பதத்தை இழக்கிறது.
வயதாகும்போது நமது வயதின் எண்ணிக்கை மட்டும் கூடுவதில்லை. நம் சருமத்திற்கும் வயதாகிறது. அதுவரை பொலிவாக இருந்த சருமத்தில் சுருக்கங்களும், கோடுகளும் அதிகரிக்கத் தொடங்கும். வயதாவதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால், நம் சருமத்திற்கு வயதாவதை தள்ளிப்போட முடியும். அதற்கான ஆன்டி ஏஜிங் சருமப் பராமரிப்பு முறைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
க்ளென்சர்
வயதாகும்போது சருமம் ஈரப்பதத்தை இழக்கிறது. இயற்கையாக முகத்தில் சுரக்கும் எண்ணெய் மற்றும் ஊட்டச்சத்துகள் போன்றவற்றையும் இழக்கிறது. அந்த காலகட்டத்தில் நுரை வரும் வகையிலான சோப்புகளை உபயோகிப்பது சருமத்துக்கு மென்மையாக இருக்காது. எனவே க்ரீம் க்ளென்சரை பயன்படுத்தலாம். க்ளென்சர்கள் சருமத்தின் மேற்பரப்பில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும். தினமும் காலையிலும், மாலையிலும் க்ளென்சரால் சருமத்தில் மெதுவாக மசாஜ் செய்து முகம் கழுவி வர வேண்டும்.
எக்ஸ்ஃபோலியேட்
எக்ஸ்ஃபோலியேட்டிங் என்பது தோலின் மேற்பரப்பில் உள்ள இறந்த செல்களை அகற்றுகிறது. இதனால் முகத்தில் அடைபட்ட சருமத் துளைகளை சுத்தம் செய்வதோடு, ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. சருமம் பிரகாசமாகும். இதற்கு ஸ்கிரப் பயன்படுத்தலாம். ஆனால் வாரத்திற்கு ஒன்று முதல் மூன்று முறை மட்டுமே எக்ஸ்ஃபோலியேட் செய்ய வேண்டும்.
முகத்தை கழுவியவுடன் சீரம் அப்ளை செய்வது நல்லது. வயதாகும்போது செல் மீளுருவாக்கம் குறையும். அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் குறையும். இதனால் சருமம் வறண்டு மந்தமாக தோற்றமளிக்கும். சீரம் சருமத்தை உடனடியாக மென்மையாக்கி, புத்துணர்ச்சியாக உணர வைக்கும்.
மாய்ஸ்ச்சரைசர்
சருமத்தை ஈரப்பதத்தோடு வைக்க மாய்ஸ்ச்சரைசர்கள் உதவும். காலை மற்றும் மாலை நேரத்தில் முகத்தில் மாய்ஸ்ச்சரைசரை பயன்படுத்தும்போது, முகத்தில் மட்டும் இல்லாமல், கழுத்து மற்றும் மார்பு பகுதியிலும் சேர்த்து அப்ளை செய்யலாம். ஏனெனில் இந்த பகுதிகளிலும் வறண்டு கோடுகள் விழ வாய்ப்புண்டு.
கண்களுக்குக் கீழே ஏற்படும் வீக்கங்கள், கருவளையம் மற்றும் கோடுகளை சரிசெய்வதும் முக்கியம். எனவே முகத்துக்கு அப்ளை செய்யும் க்ரீமை கண்களுக்கு கீழ் அப்ளை செய்யும்போது மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் அங்கு ரத்தம் ஓட்டம் கிடைக்கப்பெற்று கருவளையம் மற்றும் வீக்கம் குறையும்.
வயதான சரும தோற்றத்துக்கான மற்றொரு காரணம், முகத்தில் இயற்கையாக உருவாகும் எண்ணெய் உற்பத்தி குறைவது. தினமும் காலையில் மாய்ஸ்ச்சரைசர் அப்ளை செய்த பின் ஃபேஷியல் ஆயில் தடவுவதன் மூலம் ஆன்டி ஏஜிங் சருமத்தை சீரமைக்கலாம்.
ஹைட்ரேட்டிங் ஃபவுண்டேஷன்
சருமம் வறட்சியாக பொலிவிழந்து இருக்கும்போது, காஸ்மெடிக்கையும் அதற்கு தகுந்தார்போல் தான் பயன்படுத்த வேண்டும். உங்கள் ஸ்கின் டைப்புக்கு ஏற்றார்போல் ஹைட்ரேட்டிங் ஃபவுண்டேஷன் பயன்படுத்தலாம்.
தூங்குவதற்கு முன் மேக் அப்பை அகற்றுவது முக்கியம். நன்றாக முகத்தை கழுவி விட்டு தூங்கச் செல்லவும். இதனால் சருமத்தில் காஸ்மெடிக் ரசாயனங்களால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கலாம்.
தூக்கம் உங்கள் மனதுக்கு மட்டுமல்ல, சருமத்துக்கும் புத்துணர்ச்சி கொடுக்கக்கூடியது. சருமம் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ள நேரம் கொடுக்கிறது தூக்கம். அந்த நேரத்தில் சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை சரிசெய்ய நைட் க்ரீம் பயன்படுத்தலாம்.
- முதலில் ஹென்னாவை கலக்கி ஊறவைக்க வேண்டும்.
- 2 மணிநேரம் முதல் 4 மணிநேரமாவது அப்படியே வைக்க வேண்டும்.
இப்போதெல்லாம் சிறுவயதிலேயே நரைமுடி வருவது என்பது இயல்பாகி விட்டது. அது வருவதற்கு ஹெரிடிட்டி, டெஃபிஷியன்சி, நிறைய கெமிக்கல் கலந்த பொருட்களை உட்கொள்வது இந்த மாதிரி பல காரணங்களால் இளம்நரை ஏற்படுகிறது.
இளம் நரையை மறைப்பதற்காக கெமிக்கல் ஹேர் டையை பயன்படுத்தும் போது அது நிறைய பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது. ஸ்கின் இரிடேஷன், உடலில் கருப்பு தழும்புகள் ஏற்படுவது, உடல்நிலையை பாதிப்படைய செய்கிறது. அதுமட்டுமல்லாமல் நரைமுடியை இன்னும் அதிகமாக்கிவிடுகிறது. அதனால் இயற்கையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எவ்வாறு ஹேர் டை செய்யலாம் என்று பார்க்கலாம்.
மருதாணிபொடியும், அவுரி இலைபொடியையும் பயன்படுத்தி இயற்கையான முறையில் முடிக்கு கலரிங் செய்துகொள்ளலாம். அதற்கு முதலில் ஹென்னாவை கலக்கி ஊறவைக்க வேண்டும். அதற்கு இரும்பு பாத்திரமாக இருந்தால் வசதியாக இருக்கும். இதற்கு ஒரு இரும்பு கடாயில் சூடான ஒரு கப் தண்ணீர் ஊற்றவேண்டும். அதில் ஒரு ஸ்பூன் இன்ஸ்டண்ட் காபி பொடியை சேர்க்க வேண்டும். இதில் ஒரு அரை கப் அளவுக்கு ஹென்னா பொடியை சேர்க்க வேண்டும். இது கூடவே ஒரு ஸ்பூன் கறிவேப்பிலை பொடி சேர்க்க வேண்டும். கறிவேப்பிலை பொடி முடிவளர்ச்சிக்கு மிகவும் நல்லது. அதுமட்டுமல்லாமல் கலரிங்கை இன்னும் கருப்பாக்கி கொடுக்கும்.
பீட்ருட் எப்போதுமே ஒரு நல்ல நேச்சுரல் கலரிங்கை கொடுக்கும். எனவே ஒரு ஸ்பூன் பீட்ருட் பொடியை சேர்க்க வேண்டும். இது கட்டாயமல்ல, வேண்டுமென்றால் சேர்த்துக்கொள்ள வேண்டும். பீட்ருட் பொடியை அதிகமாகவும் கலந்துவிடக்கூடாது. இந்த கலவையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் மாதிரி கலக்க வேண்டும். இந்த கலவையை உடனடியாக தலையில் அப்ளை செய்யக்கூடாது. ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே வைக்க வேண்டும்.
இந்த கலவையை மறுநாள் காலையில் எடுத்து நன்றாக கலந்துவிட்டு அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்துகொள்ளவும். சைனஸ் பிரச்சினை இருப்பவர்கள் இரண்டு சொட்டு யூக்கலிப்டிஸ் ஆயில் அல்லது டீட்ரீ ஆயில் சேர்த்துக்கொள்ளலாம். இதுவும் முடிவளர்ச்சிக்கு நல்லது.
இந்த கலவையை எண்ணெய் இல்லாத சுத்தமான முடியில் தான் அப்ளை செய்ய வேண்டும். எண்ணெய் தேய்த்துவிட்டு அப்ளை செய்தால் கலர் ஒட்டாது. கைகளில் கலர் படியாமல் இருக்க கையுறை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தலைமுடியில் மட்டும் படுகிற மாதிரி எல்லா பகுதியிலும் தேய்க்க வேண்டும். நன்றாக எல்லா முடிகளிலும் படுகிறமாதிரி அப்ளை செய்ய வேண்டும். இந்த கலவையை முடிகளில் தேய்த்த பிறகு நல்ல கலரிங் ஆக வேண்டும் என்றால் குறைந்தது 2 மணிநேரம் முதல் 4 மணி நேரமாவது அப்படியே வைக்க வேண்டும். சைனஸ் பிரச்சினை இருந்தால் ஒரு மணிநேரம் வைத்தால் போதுமானது. 4 மணி நேரம் கழித்து நல்ல தண்ணீர் கொண்டு மட்டுமே அலசி எடுத்துக்கொள்ளவேண்டும். சோப்பு, ஷாம்பு, சீயக்காய் வகைகளைபயன்படுத்தக்கூடாது.
தலைமுடி பிரவுன் கலரில் இருக்கும். தலைமுடி கருப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இரண்டாவது கட்டமாக ஒரு பாத்திரத்தில் அரைகப் அளவுக்கு இண்டிகோ பொடியை எடுத்துக்கொள்ளவும் இதனை ஒரு டம்ளர் சுடுதண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு கலந்து (உப்பு கட்டாயம் சேர்க்க வேண்டும்) இண்டிகோ பொடியில் கலந்து 10 நிமிடம் மட்டுமே மூடி வைக்கவும். சூடான தண்ணீரில் மட்டும் தான் இண்டிகோ ஆக்டிவேட் ஆகும். இந்த கலவையையும் ஏற்கனவே ஹென்னா தடவி அலசிய முடியில் மறுபடியும் அப்ளை செய்ய வேண்டும்.
இந்த இண்டிகோ கலவையை நன்றாக முடியில் தடவி ஒன்றரை மணி நேரம் முதல் 3 மணிநேரம் வரை தலையில் ஊற வைத்து வெறும் தண்ணீரில் தான் கழிவ வேண்டும்., ஷாம்பு பயன்படுத்தக்கூடாது. இரண்டும் ஒரேநாளில் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. அடுத்தடுத்த நாள் பயன்படுத்தலாம். ஆனால் இடையில் ஷாம்பு போடுவதோ, தலையில் எண்ணெய் தேய்ப்பதோ கூடாது. வெள்ளைமுடியோ, இளம் நரை பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஹேர் பேக் பயன்படுத்தி நீங்களும் பயன்பெறுங்கள்.
- முகம் எப்பொழுதும் பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
- ஃபேஷியல் ஐஸ் கியூபை முகம், கை, கழுத்து பகுதியில் மசாஜ் கொடுத்து 10 நிமிடம் கழித்து கழுவவும்.
ஏதாவது ஒரு சுப நிகழ்ச்சிகளுக்கு கிளம்ப வேண்டும் என்று சொன்னாலே பெண்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள். காரணம் அவர்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது தான். அதிலும் இந்த மாதம் அனைத்து விதமான சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும் மாதமாக இருப்பதால், இதற்காக அடிக்கடி பியூட்டி பார்லர் சென்று ஃபேசியலோ, பிளீச்சிங்கோ செய்து கொண்டு இருப்பார்கள். அதற்கு பதிலாக வீட்டிலேயே நாம் அருமையான ஒரு ஃபேஸ் பேக்கை தயார் செய்து போட்டோம் என்றால் முகம் எப்பொழுதும் பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். அந்த வகையில் 5 நிமிடம் அல்லது 10 நிமிடம் மட்டும் செலவு செய்து ஒரு குளோயிங் ஃபேஷியல் பண்ற மாதிரி ஒரு ஆர்கானிக்கான ஃபேஷியல் எப்படி செய்யலாம் என்று தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.
தேவையான பொருட்கள்:
கற்றாலை ஜெல்- 2 ஸ்பூன்
பீட்ருட் பொடி- 2 ஸ்பூன்
கஸ்தூரி மஞ்சள் பொடி- 1 ஸ்பூன்
ஆரஞ்சு தோல் பொடி- 2 ஸ்பூன்
கடலைமாவு- 2 ஸ்பூன்
சந்தனப்பொடி- ஒரு ஸ்பூன்
ரோஸ் வாட்டர்- தேவையான அளவு
செய்முறை:
ஒரு மிக்சி ஜாரில் கற்றாலையில் உள்ள ஜெல் பகுதியை மட்டும் பிரித்து எடுத்து சேர்த்துக்கொள்ளவும், பின்னர் கொடுக்கப்பட்டுள்ள பொடி வகைகளான பீட்ருட் பொடி, ஆரஞ்சுதோல் பொடி, கஸ்தூரிமஞ்சள், சந்தனப்பொடி, கடலைமாவு ஆகியவற்றை சேர்க்கவும். இறுதியாக இதில் ரோஸ்வாட்டர் சேர்த்து பேஸ்ட் மாதிரி அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை ஒரு சிலிகான் ஐஸ் டிரேயில் ஊற்றி வைத்து அதனை ஃப்ரிட்ஜில் ஃப்ரீசரில் வைத்து வைத்துக்கொள்ளவும். குளிக்கப்போகும் போதும் இந்த ஃபேஷியல் ஐஸ் கியூபை எடுத்து முகத்திற்கும், கைகளுக்கும் ஒரு மசாஜ் கொடுத்து 10 நிமிடம் கழித்து கழுவவும். இதனை தொடர்ந்து முகத்திலும், கழுத்து பகுதியிலும் பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை பார்க்கலாம். 10 நிமிடத்தில் ஒரு நல்ல தீர்வை பெறலாம்.
- துளசியில் இருக்கும் ஆன்டி-செப்டிக் தன்மை சரும பிரச்சினைகளை தடுக்கக்கூடியது.
- துளசி ஃபேசியல் செய்தால் முகப்பருக்கள், தழும்புகள் மறையும்.
துளசியில் இருக்கும் ஆன்டி-செப்டிக் தன்மை சரும பிரச்சினைகளை தடுக்கக்கூடியது. ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளுடன் சிறிதளவு தயிர் சேர்த்து பசை போல் அரைக்கவும். அதை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரம் 3 முறை இவ்வாறு செய்து வந்தால் முகப்பருக்கள், அவற்றால் உண்டாகும் தழும்புகள் நீங்கும்.
எண்ணெய்ப்பசை நீங்க:
ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை பசை போல அரைத்து, அதனுடன் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு கலக்கவும். இதை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரம் 2 முறை இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்ப்பசை நீங்கும்.
முகச்சுருக்கம் மறைய:
ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி குளிர வைக்கவும். அதைக்கொண்டு முகத்தை கழுவவும். தினமும் இதுபோல் செய்து வந்தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறைந்து இளமை அதிகரிக்கும்.
முகம் பொலிவு பெற:
சிறிதளவு துளசி இலைகளை தண்ணீரில் போட்டு அது நன்றாக கொதித்த பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி குளிர வைக்கவும், அந்த தண்ணீருடன் சிறிதளவு சந்தனம் சேர்த்து ஃபேஸ்பேக் தயாரிக்கவும். அதை முகத்தில் பூசி 10 நிமிடங்களுக்கு பிறகு தண்ணீரில் கழுவவும். அவ்வப்போது இவ்வாறு செய்து வருவதால் முகத்தின் பளபளப்பு அதிகரிக்கும்.
முகத்தில் கரும்புள்ளிகள் மறைய:
சிறிதளவு துளசி இலைகளை நன்றாக அரைத்து, அதனுடன் ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் கலந்து முகத்தில் பூசவும். அது நன்றாக உலர்ந்த பின்பு ஈரமான துணியால் மென்மையாக துடைத்து எடுக்கவும். பிறகு சிறு துண்டு பஞ்சை ரோஸ்வாட்டரில் தோய்த்து அதைக்கொண்டு முகத்தை துடைக்கவும். இதுபோல் வாரத்திற்கு முறை செய்து வந்தால் சருமத்தில் உள்ள கருமை நீங்கும்.
முகத்தில் உள்ள வறட்சி நீங்க:
2 சிட்டிகை துளசி பொடியுடன், 1 டீஸ்பூன் முல்தானி மெட்டி, 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து முகத்தில் பூசவும். ௧௫ நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்தால் சரும வறட்சியை போக்கி, முகத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கலாம்.
சருமம் புத்துணர்ச்சி பெற:
சிறிதளவு துளசி மற்றும் புதினாவுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பசை போல அரைக்கவும். அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூசி நன்றாக உலர்ந்த பிறகு கழுவவும், இதனால் சருமம் புத்துணர்ச்சியாக இருக்கும்.
- தக்காளியில் பீட்டா கரோட்டின் அளவு அதிகமாக உள்ளது.
- தக்காளியில் உள்ள சாலிசிலிக் அமிலம், முகப்பருக்களை விரட்டுகிறது.
தக்காளியில் பீட்டா கரோட்டின் அளவு அதிகமாக உள்ளது. இது நம் சருமத்தை சூரிய வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும். நம் சருமமானது சுருக்கத்தில் இருந்து நீங்கவும், எண்ணெய் வழியாமல் இருக்கவும் தக்காளி பழத்தினை விழுதாக அரைத்து முகத்தில் போட்டு அரை மணிநேரம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் பளபளப்பு தன்மையை பெறும்.
தக்காளியில் உள்ள லைகோ பீன் என்னும் ஆன்டி ஆக்சிடன்ட், சருமத்தை, விரைவில் முதிர்ச்சி ஆகாமல் பார்த்துகொள்ளும். புறஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. தக்காளியில் உள்ள சாலிசிலிக் அமிலம், முகப்பருக்களை விரட்டுகிறது.
பழுத்த தக்காளியை பசைப்போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். ஒரு நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை நிறம் மறையும்.
அதேபோல் தங்காளி ஜூஸ் 3 ஸ்பூன், உருளைகிழங்கு ஜூஸ் 2 ஸ்பூன் எடுத்து அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் அழுக்குகள் நீங்கி பளபளப்பாக இருக்கும்.
- நல்ல பிராண்ட் சன்ஸ்கிரீன்களையே வாங்குங்க. காலாவதி தேதி பார்க்க மறந்துடாதீங்க….
- சன்ஸ்கிரீனை தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு தான் நீங்க வெளியில் செல்ல வேண்டும்.
சூரியனின் புற ஊதா கதிர்களின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளில் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீன் லோஷன்களை பயன்படுத்துவது மிகவும் முக்கியம். எப்போதும் புதிய சன்ஸ்கிரீன் லோஷன்களை உபயோகிப்பதே நல்லது. ஏற்கெனவே வாங்கி, சென்ற ஆண்டு பயன்படுத்தி மிச்சமான சன்ஸ்கிரீன் போடுவதை தவிர்க்கவும். முக்கியமாக, மருத்துவர் ஆலோசனைப்படி, நம் சருமத்துக்கு ஏற்ற சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுப்பது நல்லது.
* நல்ல பிராண்ட் சன்ஸ்கிரீன்களையே வாங்குங்க. காலாவதி தேதி பார்க்க மறந்துடாதீங்க….
* சன்ஸ்கிரீனில் குறிப்பிடப்பட்டிருக்கும் `எஸ்பிஎஃப்' 15, 30, 50 என்ற ரகங்களில் இருக்கும். இந்த எண்தான், அந்த சன்ஸ்கிரீன் எந்த அளவு வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் என்பதற்கு அடையாளம். `எஸ்பிஎஃப்' 15 உள்ள சன்ஸ்கிரீன், வெயிலில் இருந்து ஒரு மணி நேரம் பாதுகாப்பு அளிக்கும். நம்ம ஊரு வெயிலுக்கு குறைந்தது 30 எஸ்பிஎஃப் சிறந்தது.
* முகத்துக்கு மட்டும்மல்ல வெயில்படும் எல்லா இடங்களிலும் (கழுத்து, கை, கால்) சன்ஸ்கிரீன் லோஷன் தடவலாம்.
* சன்ஸ்கிரீனை தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு தான் நீங்க வெளியில் செல்ல வேண்டும்.
* என்னதான் நீங்க சன்ஸ்கிரீன் பயன்படுத்தினாலும், வெயிலில் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் செல்வதை தவிர்த்து விடுங்கள். தொடர்ந்து வெயிலில் இருந்தால், மூன்று மணி நேரம் கழித்து முகத்தை கழுவி மீண்டும் சன்ஸ்கிரீன் அப்ளை செய்து கொள்ளுங்கள்.
தரமான பிராண்டட் சன்ஸ்கிரீன் லோஷன்களை பயன்படுத்தவும். தற்போது, ஆர்கானிக் புராடக்டுகளிலும் சன்ஸ்கிரீன்கள் கிடைக்கின்றன. உங்களுக்கு ஏற்ற சன்ஸ்கிரீன்களை எத்தனை வருடங்கள் பயன்படுத்தலாம் என்று பரிசோதித்து வாங்குங்கள்.
- வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யக்கூடிய ஃபேஸ்பேக்குகள்.
- தேன் மற்றும் ஓட்ஸ் இரண்டுமே சருமத்திற்கு நன்மை அளிக்கின்றன.
தேன் ஆன்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது. இது சருமத்திற்கு ஊட்டம் அளித்து ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. ரசாயனமில்லாத மேக்கப்புக்கு நீங்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கையான ஃபேஸ் பேக் இங்கே உள்ளது. இந்த ஃபேஸ் பேக் வறண்ட மற்றும் டி ஹைட்ரேட்டிங் சருமம் உள்ளவர்களுக்கு சிறப்பாக வேலை செய்யும். வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யக்கூடிய சருமத்தை பாதுகாக்கும் ஃபேஸ்பேக்குகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தயிர், தேன் தலா ஒரு தேக்கரண்டி எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கலந்து சுத்தமான முகத்தில் தடவும். பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். தயிர் சருமத்தின் வறட்சியை போக்குவது மட்டுமின்றி அதில் உள்ள லாக்டிக் அமிலம் மற்றும் புரோ பயாடிக்குகள் வறண்ட சருமத்தை மென்மையாக்கி வீக்கத்தை தடுக்கும், தேன் முகம் மிருதுவாக இருப்பதற்கும் மற்றும் ஈரப்பதத்தை அளிப்பதற்கும் வழங்குகிறது.
சமையல் அறையில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி வீட்டிலேயே சுலபமாக ஸ்க்ரப் ஒன்றை தயார் செய்யலாம். வீட்டில் உள்ள ஓட்ஸ் மற்றும் தேன் பயன்படுத்தி ஸ்க்ரப் செய்ய கற்றுக்கொள்ளுங்கள். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புதுப்பொலிவைத்தரும். ஒரு டீஸ்பூன் ஓட்சை மிக்சியில் அரைத்து அதில் இரண்டு டீஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இதை முகத்தில் தடவி கைகளால் மென்மையாக தேய்க்கவும் 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும் இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் போதுமானது.
தேன் மற்றும் ஓட்ஸ் இரண்டுமே சருமத்திற்கு நன்மை அளிக்கின்றன. முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெய்யை சுத்தம் செய்து புதிய பொலிவைத்தரும். அதேசமயம் தேன் நம் முகத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குகிறது.
முட்டையின் வெள்ளைக்கரு ஒரு டேபிள் ஸ்பூன், தேன் ஒரு டீஸ்பூன், கற்றாழை ஒரு ஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் அடித்துக்கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறியதும் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த மாஸ்கை முகத்தில் பூசுவதால் வறண்ட தன்மை நீங்கி முகத்துக்கு பொலிவு கிடைக்கும். இது சருமத்தில் காணப்படும் அதிகப்படியான வறட்சி தன்மையை உறிஞ்சுவதோடு அழுக்கையும் அகற்றும்.
ஒரு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டேபிள் ஸ்பூன் தேன், ஒரு பெரிய பழுத்த தக்காளி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவலாம் முகம் பளிச்சென மாறும். சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றும். எண்ணெய் பசையை நீக்கும் சிறந்த டோனராகவும் செயல்படும். இயற்கையாகவே பளபளப்பான சருமம் பெற இந்த பேக் உதவி செய்யும்.
- பாதம் மிகவும் வறண்டதாகவும், வெடித்தும் காணப்படலாம்.
- நம் உடலின் மற்ற பாகங்களை போல் பாதங்களில் எண்ணெய் சுரப்பிகள் இல்லை.
பொதுவாக கால் பாதங்கள் பற்றி நாம் பெரிதாக கவனத்தில் எடுத்துக்கொள்வது இல்லை. இதனால், பாத சருமம் மிகவும் வறண்டதாகவும், வெடித்தும் காணப்படலாம். இது பதங்களின் அழகை மட்டுமல்லாமல், அவற்றின் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
உங்கள் பாதங்களில் வறண்ட சருமம் இருப்பது வருத்தமாகவும் சில சமயங்களில் அறுவருப்பாகவும் இருக்கும். நம் உடலின் மற்ற பாகங்களை போல் பாதங்களில் எண்ணெய் சுரப்பிகள் இல்லை. அதனால், விரைவில் வறண்டு, அரிப்பு ஏற்படுகிறது.
இந்த பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கான முதல் படி, உங்கள் பாதங்களை சுத்தமாகவும், உலர்ந்ததாகவும் வைத்திருப்பதுதான். வறண்ட பாதங்களில் இருந்து விடுபட உதவும் பாதத்தை பராமரிக்கும் பேக்குகள்.
தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் பேக்
தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் பேக் உங்கள் கால்களின் வறண்ட, கடினமான சருமத்திற்கு ஆழமான நீரேற்றத்தை வழங்குகிறது. வெதுவெதுப்பான நீரில் உங்களது பாதத்தினை அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் பாதங்களை துடைத்து விட்டு ஒரு சிறிய கிண்ணத்தில், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உங்கள் கால்களில் தடவி, வறண்ட சருமத்தில் நன்கு தேய்த்து, 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.
அந்த பேக் சற்று உலர்ந்ததும், இரண்டு கால்களிலும் தடிமனான காலுறைகளை அணிந்து, ஒரு இரவு முழுவதும் பேக்கை அப்படியே விட்டு விட வேண்டும். மறுநாள் காலையில், உங்கள் கால்களை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். அதன்பிறகு ஒரு துணியால் துடைத்து காலில் தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாலை ஜெல்லை தடவலாம்.






