என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    • ஒவ்வாமையினாலும் கழுத்து கருப்பாகிவிடுகிறது.
    • நாள்பட்ட கருமையாக இருந்தால் கூட கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்தால் நிவாரணம் கிடைக்கும்.

    பொதுவாக இந்த கழுத்து பகுதிகளில் கருமை நிறம் படிவதற்கு என்ன காரணம் என்றால் நல்ல சூரிய வெளிச்சம் படுறது இல்லை. ஆண்களாக இருந்தால் காலர் துணி கழுத்தை மறைத்துக்கொள்வதாலும், பெண்களுக்கு அவர்களி அணியக்கூடிய அணிகலன்களில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள். பெண்களுக்கு கழுத்தில் அணியக்கூடிய ஜெயின் எப்போதும் அணிந்து கொண்டே இருப்பதால் அது கழுத்தில் பதிந்து பதிந்து கருப்பாகிவிடும்.

    அப்படி இல்லையென்றால் சில பெண்களுக்கு ஏற்படக்கூடிய ஒவ்வாமையினாலும் கழுத்து கருப்பாகிவிடுகிறது. அதாவது சிலர் கவரிங் ஜெயின்களை பயன்படுத்துவதாலும் கழுத்து கருப்பாகிவிடுவதுண்டு. இப்படி நிறைய காரணங்கள் இருக்கிறது கழுத்தில் கருமை நிறம் ஏற்படுவதற்கு அதனால் ஆரம்பத்திலேயே நாம் அதை கவனித்தால் எளிதில் அதில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அல்லது நாள்பட்ட கருமையாக இருந்தால் கூட கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்தால் நிவாரணம் கிடைக்கும்.

    நம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே இந்த தீர்வினை பெறலாம். அதற்கு காய்ச்சாத பசும்பால் அல்லது பாக்கெட் பாலை ஒரு பஞ்சில் தொட்டு கழுத்தில் உள்ள கருமையான இடங்களில் தடவி மசாஜ் செய்தால் நாள்பட நாள்பட கருமை நிறம் மறைந்துவிடும். இதில் வேண்டுமென்றால் ரோஸ்வாட்டரும் சேர்த்துக்கொள்ளலாம்.

    முகத்திற்கு ஃபேசியல் போடுகிற மாதிரி கழுத்தில் உள்ள கருமை நிறம் மாறுவதற்கு ஒரு முறை இருக்கிறது. அதற்கு ஒரு பாத்திரத்தில் சுடுதண்ணீர் எடுத்து அதில் ஒரு டவள் கொண்டு கழுத்தை முதலில் நன்றாக துடைத்து எடுக்க வேண்டும். அதன்பிற ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி ஒருபகுதியில் வெள்ளை சர்க்கரையை தொட்டு கழுத்துப்பகுதியில் உள்ள கருப்பு பகுதியில் 10 நிமிடம் நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும். அதன்பிறகு டவள் கொண்டு சுடு தண்ணீரில் முக்கி நன்றாக துடைத்து எடுக்க வேண்டும்.

    கடலை மாவு அல்லது முல்தானிமெட்டி இவை இரண்டில் எது உங்களுக்கு கிடைக்கிறதோ அதனை கொண்டு ரோஸ்வாட்டரில் கலந்து பேக் மாதிரி கழுத்தும் பகுதியில் அப்ளை செய்ய வேண்டும். 10-ல் இருந்து 15 நிமிடத்திற்கு பிறகு ஈரமான டவள் கொண்டு நன்றாக துடைத்து எடுக்க வேண்டும். இதை தொடர்ந்து வாரத்திற்கு 2 அல்லது மூன்று முறை செய்து வந்தால் ரொம்ப சீக்கிரமாகவே கழுத்து பகுதியில் உள்ள கருமை நிறம் மறைந்துபோகும்.

    இதன்பிறகு தேன், எலுமிச்சை சாறு, சர்க்கரை இது மூன்றையும் சேர்த்து ஒரு பேக்காக செய்து கூட நாம் இந்த கருமை நிறத்தை போக்க முடியும். இரவு தூங்க செல்வதற்கு முன்பு இந்த கற்றாலை ஜெல்லை தடவி வரலாம். அதேபோல் ரோஜா இதழ் அதுடன் பால் சேர்த்து பேஸ்ட் மாதிரி அரைத்து அதையும் தடவி ஒருமணிநேரம் கழித்து கழுவி வந்தாலும் நல்ல மாற்றத்தை பார்க்க முடியும்.

    அதேபோல் தயிர் மற்றும் மஞ்சள் சேர்த்தும் அதில் எலுமிச்சை பழத்தை கொண்டும் கழுத்தில் உள்ள கருமை நிறம் மறைய ஸ்க்ரப் செய்து வந்தாலும் கழுத்தில் உள்ள கருமை நிறம் மாறும். இந்த கருமை நிறம் மாறுவதுமட்டுமில்லாமல் வெள்ளையாக மாறுவதற்கு கோதுமைமாவு, ஓட்ஸ் இதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கி அதை ஒரு பேக் செய்து போட்டு வந்தாலும் கழுத்தில் உள்ள கருமை நிறம் மறைந்து வெண்மை ஆவதற்கு நல்ல பலன் கொடுக்கும்.

    • பெண்களின் கண்களை பற்றி பேசாத அறிஞர்களே இருக்கமாட்டார்கள்.
    • கண்களுக்கு தேவையான ஓய்வை நாம் அளிக்கும் போது கண்கள் பொலிவுடன் இருக்கும்.

    பொதுவாக ஒரு பெண்ணை பற்றி பேசும்போது அவளின் கண்களை பற்றி பேசாத அறிஞர்களே இருக்கமாட்டார்கள். ஒருவருடைய பார்வை என்பது மிகவும் முக்கியமானது. ஆனால் இன்றைக்கு பலபேருடைய கண்களை பார்த்தால் கண்களில் சோர்வு தான் இருக்கிறது. எப்போதும் தூங்காததுபோல் கண்ணுக்கு கீழ் கருவளையம் ஏற்படுகிறது. கண்கள் மிகவும் ஆரோக்கியம் இழந்து காணப்படுகிறது.

    இதற்கு பல காரணங்களை சொல்லலாம். கண்ணுக்கு அழகை தருவது எப்போது என்றால் அதற்கு தேவையான ஓய்வை நாம் அளிக்கும் போது கண்கள் பொலிவுடன் இருக்கும். நன்றாக தூங்கவில்லை என்றாலும் கண்ணுக்கு அது ஆரோக்கிய குறைவுதான். அதனால் முடிந்தவரை நன்றாக தூங்க வேண்டும்.

    ஆனால் நாங்கள் நன்றாக தூங்குகிறோம், ஆனால் எப்போது கண்களில் ஒருவித எரிச்சல் இருக்கிறது. கண்களில் குளுமை இல்லை. கண் வறட்சியாக இருக்கிறது என்றால் முதலில் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். உடல் சூட்டை தணித்து கண்களையும் குளுமைப்படுத்தும்.

    இரண்டாவதாக முக்கியமான பொருள் உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய். இப்போது வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை தனித்தனியே துருவி எடுத்து பிழிந்தால் நன்றாக சாறு நமக்கு கிடைக்கும். இப்போது வெள்ளரிக்கா சாறு ஒரு ஸ்பூன் என்றால், உருளைக்கிழங்கு சாறும் ஒரு ஸ்பூன் எடுக்க வேண்டும். அதன்பிறகு அதனுடன் பன்னீர் அல்லது ரோஸ் வாட்டர் இதையும் ஒரு ஸ்பூன் எடுக்க வேண்டும். இந்த மூன்றையும் சம அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நல்ல பஞ்சில் இந்த சாற்றில் ஊறவிட்டு அந்த நனைந்த பஞ்சினை எடுத்து இரவு படுக்க செல்வதற்கு முன்னர் கண்களில் 20 நிமிடம் ஒற்றிக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு செய்யும் போது நமது கண்கள் மிகவும் குளிர்ச்சியடைந்து காணப்படும். எவ்வளவு உடல் சூடு இருந்தாலும் இதை வைத்த எடுத்த உடனேயே உங்களது கண்கள் குளிர்ச்சியாக இருக்கும். கண்கள் குளிர்ச்சியாக இருந்தால் காட்சியும் குளிர்ச்சியாக இருக்கும். நாமும் எல்லோரையும் கனிவுடன் பார்க்கலாம். இதனை குழந்தைகளுக்கும் தாராளமாக பயன்படுத்தலாம். தொடர்ந்து நாம் இதனை 2 நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தி வந்தால் கண்டிப்பாக கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையங்களையும் இது நமக்கு போக்கி கொடுக்கும்.

    • முகம் பளீச்சென்று இருந்தாலே அதுவும் ஒரு அழகுதான்.
    • கடலைமாவை பயன்படுத்தி முகத்திற்கு பயன்படக்கூடிய ஃபேஸ் பேக் தயாரிக்கலாம்.

    முகம் பளீச்சென்று இருந்தாலே அதுவும் ஒரு அழகுதான். வெள்ளையாக இருந்தால் தான் அழகு என்பது தவறான கருத்து. முகம் எப்போதும் பொலிவாக இருக்கவும், பார்த்தவுடனேயே பளீச்சென்று இருப்பதற்கு நிறைய கிரீம், பவுடர் போன்றவற்றை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

    நம்ம வீடுகளில், இருக்கின்ற சில பொருட்களை கொண்டு எளிமையான முறையில் நம்மை நாம் பராமரிக்கலாம். முந்தைய காலங்களில் எல்லாம் இப்படி தெருவுக்கு தெரு பார்லர்கள் இல்லையே. அனைவரும் வீடுகளில் கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டே பெண்கள் தங்களை அழகுபடுத்தி வந்தனர்.

    கடலைமாவை பயன்படுத்தி முகத்திற்கு பயன்படக்கூடிய ஃபேஸ் பேக் தயாரிக்கலாம். ஒவ்வொரு சருமத்திற்கும் ஏற்ற வகையில் கடலைமாவை பயன்படுத்தி ஃபேஸ் பேக் தயார் செய்யலாம்.

    வறண்ட சருமத்திற்கு கடலைமாவுடன் வாழைப்பழம், கற்றாலை ஜெல் பயன்படுத்தலாம். அல்லது சென்சிட்டிவ் ஸ்கின் என்றால் கடலைமாவுடன் பன்னீர் ரோஜா இதழ் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்துகொள்ளலாம். ஆயில் சருமம் என்றால் கடலை மாவுடன் டீ டிக்காசன் சேர்த்து ஃபேஸ் பேக் போடலாம். சாதாரண சருமத்திற்கு பாதாம் ஆயில், முல்தானிமெட்டி ஆகியவற்றை கடலை மாவுடன் சேர்த்து ஃபேஸ் பேக் தயார் செய்யலாம்.

    வயதுக்கு வந்த பெண்குழந்தைகளுக்கும் பெரிய பிரச்சினையே முகத்தில் உள்ள முகப்பருக்கள் தான். முகப்பருக்கள் நிறைய இருப்பவர்கள் கடலைமாவினை கிரீன் டீயில் கரைத்து அதை முகத்தில் பேக்காக போட்டு வந்தால் நாளடைவில் முகப்பருவில் இருந்தும், அதனால் ஏற்படக்கூடிய தழும்புகளில் இருந்தும் விடுபடலாம். இந்த பேக்கை போட்டு வெதுவெதுப்பான நீரில் ஸ்க்ரப் செய்து கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால் முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் எல்லாம் நீங்கி முகம் பளீச்சென்று இருக்கும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டுமுறை பயன்படுத்தி வந்தால் நல்ல தீர்வினை கொடுக்கும்.

    • குறைந்தபட்சம் 15-30 நிமிடங்கள் வரை இந்த பெடிக்யூர் முறையை மேற்கொள்ளலாம்.
    • உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்களை வெளியிடவும் தூண்டும்.

    முக அழகுக்கு முக்கியத்துவம் தருவது போலவே பாதங்களின் பராமரிப்பும் முக்கியமானது. பாதங்களை அழகுபடுத்திக்கொள்ளவும், பராமரிக்கவும், பெண்களின் முதல் சாய்ஸ் எப்போதுமே பெடிக்யூர் தான். பார்லர்களில் உபகரணங்களை பயன்படுத்தி செய்வது போலவே தற்போது, இந்த முறையை கொண்டும் செய்கின்றனர். அது தான் மீன் ஸ்பா!

    பெரிய மால்கள், பார்லர்கள் என ஆண்-பெண் வேறுபாடு இயலாமல் இந்த மீன் ஸ்பா பிரபலமாகி வருகிறது. அது குறித்த சில விஷயங்களை இங்கு பார்க்கலாம்.

    மீன் ஸ்பா என்றால் என்ன? மீன் ஸ்பா என்பதை மீன் பெடிக்யூர் என்றும் சொல்லலாம். ஒருவர் தனது கால்களை மீன்கள் நிரப்பப்பட்ட தண்ணீர் தொட்டியில் வைக்கும் போது கால்களை, மீன்கள் சுத்தம் செய்யத் தொடங்கும். இதற்கு, காரா ரூபா என்ற மீன்களைப் பயன்படுத்துகின்றனர். இவை கால்களை சுத்தப்படுத்துவதற்காகவே பிரத்யேகமாக வளர்க்கப்படுகின்றன.

    குறைந்தபட்சம் 15-30 நிமிடங்கள் வரை இந்த பெடிக்யூர் முறையை மேற்கொள்ளலாம், இதற்கு ரூ.500 முதல் ரூ.800 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. முதன்முதலில், துருக்கியில் தான் இந்த மீன் ஸ்பா முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர், சிரியா, ஜோர்டன், இஸ்ரேல், ஈராக் உள்பட பல்வேறு நாடுகளில் பிரபலமானது. இது தற்போது, இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. மீன்களை தவிர இதில் வேறு எந்த உபகரணங்களோ, கிரீம் போன்றவையோ பயன்படுத்தப்படுவதில்லை.

    மீன் ஸ்பாவின் நன்மைகள்:

    முறையாக சுத்தம் செய்யப்படாத பாதத்தில் பாத வெடிப்பு, அலர்ஜி உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அதில் பல இறந்த செல்கள் தேங்கும். நம் கால்களில் உள்ள இறந்த செல்கள் நாள் மீன்களின் பிரதான உணவு என்பதால் அவற்றை முழுமையாக நீக்க மீன் ஸ்பா சிறந்தது.

    காரா ரூபா மீனுக்கு, 'டாக்டர் பிஷ்' என்ற பெயரும் உண்டு, ஏனெனில், இது நம் காலில் உள்ள வறண்ட சருமத்தை சரி செய்து, புத்துயிர் அளிக்கிறது. எக்சிமா, சொரியாசிஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளை குணப்படுத்தும் ஆற்றலும் இதற்கு உண்டு. மீன்கள் நம் கால்களில் சிறந்த அழுத்தத்தை கொடுத்து, நுணுக்கமாக மசாஜ் செய்கிறது.

    இதனால் நம் கால்களில் ரத்த ஓட்டம் அதிகரித்து, காலின் வறண்ட பகுதி மேம்படுகிறது. தண்ணீர் தொட்டியில் கால்களை வைக்கும்போது பல மீன்கள் நம் கால்களை கடிக்கும். இது நமக்கு வலிக்காமல் கிளர்ச்சியூட்டும் விதமாக இருக்கும். உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்களை வெளியிடவும் தூண்டும். இதன்மூலம் மன அழுத்தம் குறைந்து, மன ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு பல்வேறு காரணங்களால் கால் கரடுமுரடாக இருக்கும். அவர்கள் மீன் ஸ்பா மேற்கொள்ளும்போது காலில் உள்ள இறந்த செல்கள் மட்டுமின்றி. சரும வறட்சியும் நீங்கும்.

    இதனால், கால்களுக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டு கடுமையான தோல் மென்மையாக மாறும். பாத எரிச்சலும் நீங்கும். நன்மைகள் பல இருந்தாலும் கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் இதில் உண்டு. கடுமையான தோல் நோய்த் தொற்று உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், இதய நோய் பாதிப்பு கொண்டவர்கள் மீன் ஸ்பா மேற்கொள்வதைத் தவிப்பது சிறந்தது.

    அதேபோல், மீன் ஸ்பாவுக்குப் பயன்படுத்தப்படும் நீர். அடிக்கடி மாற்றப்படுகிறதா என்பதையும், தண்ணீர் தொட்டிகளின் சுத்தத்தையும் உறுதி செய்ய வேண்டும். நீரில் உள்ள அழுக்குகள், சுகாதாரமற்ற பொருட்கள் நம் ஆரோக்கியத்தையும் பாதிக்கவும் வாய்ப்புள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    • பெண்களுக்கு சிறுவயதிலேயே கைகளில் இருக்கும் தோல் சுருங்கி போய் காட்சியளிக்கும்.
    • முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பை கைகளுக்கு கொடுப்பது கிடையாது.

    பொதுவாக, வயதாகும்போது நமது உடலில் பல மாற்றங்கள் நிகழ்கிறது. அதில் ஒன்று தான் தோல் சுருக்கும். இது வயதாகும்போது வருவது இயல்பான ஒன்றாக இருந்தாலும், ஒரு சில பெண்களுக்கு சிறுவயதிலேயே கைகளில் இருக்கும் தோல் சுருங்கி போய் காட்சியளிக்கும். இதற்கு காரணம் உடலில் நீரிழப்பு, கைகளை அடிக்கடி கழுவுதல், பாத்திரங்கள் கழுவுதல் போன்றவை ஆகும். இருப்பினும், சில பெண்கள் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பை கைகளுக்கு கொடுப்பது கிடையாது.

    ஏனென்றால், முகம் அழகாக தெரிந்தால் போதும் என்று நினைப்பது தான். அதுமட்டுமல்லாமல், அதற்கு தனியாக செலவு செய்ய வேண்டியிருக்குமே என்றும் நினைப்பார்கள். பார்லருக்கு போய் அதையும் இதையும் செய்றதுக்கு பதிலாக வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்தியே கைகளில் இருக்கும் சுருக்கங்களை போக்கி அழகான சருமத்தை பெற முடியும்.

    மேலும் உங்களது சருமத்தை மினுமினுப்பாகவும் பொலிவுடனும் வைத்துக்கொள்ளலாம். இவ்வாறு இயற்கை பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்தவதால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது.

    எலுமிச்சை ஸ்க்ரப்:

    நமது சருமத்தில் இருக்கும் அழுக்கு, இறந்த செல்களை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த எலுமிச்சை ஸ்க்ரப் தான். அதற்கு ஒரு கப்பில் 3 அல்லது 4 ஸ்பூன் சர்க்கரையும், 2 ஸ்பூன் எலுமிச்சை சாற்றையும் நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். பின்னர், கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவிவிட்டு, இந்த கலவை கைகளில் தடவி 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். காய்ந்தவுடன் சாதாரண தண்ணீரில் கைகளை கழுவிவிடுங்கள். இதை வாரத்தில் இரண்டு முறை தொடர்ந்து செய்து வர மென்மையான கைகளை பெறலாம்.

    பால்

    பால் ஒரு சிறந்த மாய்ஸ்ச்சரைசர். இதை சரும பராமரிப்புக்கு பயன்படுத்தும்போது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும், சருமத்துக்கு ஈரப்பதம் கிடைக்கவும் உதவும். முதலில் எலுமிச்சை ஸ்க்ரப் செய்துக் கொள்ளவும். பின்னர், ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் பால், அதனுடன் பாதாம் எண்ணெய் இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவையில் ௧௫ அல்லது 20 நிமிடங்களுக்கு கைகளை அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் கைகளை வெளியே எடுத்து குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு 4 அல்லது 5 முறை செய்துவர கைகளில் உள்ள சுருக்கங்கள் மறையத் தொடங்கும்.

    அன்னாசி கூழ்:

    வைட்டமின் சி சத்து நிரம்பியுள்ள அன்னாசி பழத்தை சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை அளிக்கக்கூடியது. முதலில் அன்னாசி பழத்தை நன்றாக கூழ் போன்று பிசைந்துக் கொள்ளவும். அந்த கூழை கைகள் முழுக்கத் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின் குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவி விடவும். மென்மையான மற்றும் சுருக்கமில்லாத கைக்கு இந்த ஹேண்ட் மாஸ்க்கை தினமும் பயன்படுத்தலாம்.

    ஆலிவ் ஆயில்:

    தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன் ஆலிவ் எண்ணெயைக் கொண்டு கைகளை மசாஜ் செய்துக் கொள்ளுங்கள். பின்னர், பருத்தி கையுறைகளை அணிந்து அவற்றை இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். மீண்டும் காலையில் வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவிக் கொள்ளுங்கள். இதை தினமும் செய்துவர கைகளை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றும்.

    வாழைப்பழம்:

    மேற்கூறிய எதுவும் செய்ய முடியாதவர்கள் வாழைப்பழத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாழைப்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது, அவை சுருக்கங்களை எதிர்த்துப் போராடுவதற்கு ஏற்றதாக அமைகின்றன. வாழைப்பழத்தை நசுக்கி கூழ் போன்று செய்து கொள்ளவும். அந்த கூழை உங்கள் கைகளில் தடவி காய்ந்தவுடன் கழுவிவிடுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை செய்துவர மென்மையான கைகளை பெறலாம்.

    • இயற்கையான ஸ்கின் ஒயிட்னிங் கிரீம்.
    • காலை மாலை இருவேளையும் பயன்படுத்தலாம்.

    சரும அழகை மேம்படுத்த பல கிரீம்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், அவை அனைத்தும் செயற்கையாக கலக்கப்படும் கெமிக்கல் ஏராளம். இதனால், நன்றாக இருக்கும் சருமம் கூட மோசமாகவிடுகிறது. எனவே, அவற்றை தடுக்க இனி வீட்டிலேயே இயற்கையான ஸ்கின் ஒயிட்னிங் கிரீமை தயாரித்து பயன்படுத்தலாம். இது முழுக்க முழுக்க வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்தி தயாரிப்பதால், எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. இதை உடல் முழுவதும் எந்த பகுதியில் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரே வாரத்தில் அப்பகுதியில் இருக்கும் கருமை நீங்கி சருமம் ஜொலிப்பதை நீங்களே கண்டு ஆச்சரியப்படுவீர்கள். வாங்க! இதற்கு என்னென்ன பொருட்கள் தேவை மற்றும் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பன்னீர் ரோஸ் - 3 பூக்கள்

    ரோஸ் வாட்டர் - 2 ஸ்பூன்

    கற்றாழை ஜெல் - 1 ஸ்பூன்

    கிளிசரின் - 1 ஸ்பூன்

    வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் - 2

    பாதாம் எண்ணெய் - 1 ஸ்பூன்

    செய்முறை:

    முதலில் நாம் எடுத்து வைத்துள்ள பன்னீர் ரோஜாவை பிரித்து எடுத்துக்கொள்ளுங்கள். அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு, மையாக பசைபோன்று அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், அதில் 2 ஸ்பூன் அளவிற்கு ரோஸ் வாட்டர் ஊற்றி மீண்டும் அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அந்த விழுதை ஒரு வெள்ளை துணியில் கொட்டி நன்றாக பிழிந்து சாற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

    பின்னர் அதில் பாதாம் எண்ணெய், கற்றாழை ஜெல், கிளிசரின் மற்றும் 2 வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் இருக்கும் ஜெல் ஆகியவற்றை சேர்த்து ஒரு ஸ்பூனை பயன்படுத்தி நன்றாக அடித்துக் கலக்க வேண்டும். இவ்வாறு அடித்துக் கலக்கும்போது ஜெல் ரோஸ் கலரில் கிடைக்கும். இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் ரோஸ் க்ரீம் தயார்.

    எப்படி பயன்படுத்துவது?

    தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு முகத்தை நன்றாக கழுவி விட்டு நாம் தயாரித்து வைத்துள்ள க்ரீமை அப்ளை செய்து கொள்ள வேண்டும். அடர்த்தியாக அப்ளை செய்யக்கூடாது. அதாவது, நாம் முகத்தில் சீரம் எப்படி பயன்படுத்துவோமோ அதேபோல் அப்ளை செய்ய வேண்டும். அதாவது, க்ரீமை விரலால் தொட்டு முகத்தில் ஆங்காங்கே புள்ளிகள் வைத்து அப்படியே தடவ வேண்டும்.

    இவ்வாறு செய்யும்போது முகம் இந்த க்ரீமை அப்படியே உறிஞ்சிக் கொள்ளும். அதன்பிறகு தூங்க செல்லலாம். வேண்டுமென்றால், காலை மாலை இருவேளையும் பயன்படுத்தலாம். மேலும், உடல் முழுவதும் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். விரைவில் சருமம் ஜொலி ஜொலிப்பாக மாறும். ஆனால், தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

    • கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை ஃபிரஸ்சாக வைத்திருக்க உதவுகிறது.
    • பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

    மஞ்சளில் இருக்கக்கூடிய ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் சருமத்தில் ஏற்படக்கூடிய அலர்ஜிகளில் இருந்து நம்மை காத்திடும். வெள்ளரியை பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள் அத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் ஃபேஸ் மாஸ்க்காக போட வேண்டும். நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம்.

    கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை ஃபிரஸ்சாக வைத்திருக்க உதவுகிறது. வெள்ளரிச்சாறுடன் கற்றாழை ஜெல் கலந்து தினமும் இரவு படுப்பதற்கு முன்னால் தடவிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவி விடலாம். இது சருமத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மட்டுமல்ல சரும சுருக்கங்கள் ஏற்படாமலும் தடுத்திடும்.

    உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும். பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

    வேப்பிலையும், வெள்ளரியும் முதலில் ஒன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் தனியாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னரத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதனை முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்து வந்தால், உங்கள் முகம் பளிச் பளிச்தான்.

    • சுருக்கங்கள் வராமல் சருமத்தைப் பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
    • முகம் நீர்ச்சத்தோடு நல்ல மாய்ஸ்ச்சராக இருக்கும்.

    சிலருக்கு நல்ல கலராக இருக்க வேண்டும் என்பது ஆசையாக இருக்கும். ஆனால் சிலருக்கோ இருக்கும் கலர் போதும் ஆனால் சருமத்தில் எந்த பருக்கள், தழும்புகள், கரும்புள்ளிகள், சுருக்கங்கள் வராமல் சருமத்தைப் பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற விருப்பம் இருக்கும். இதில் இரண்டாவது விருப்பம் மிகவும் ஆரோக்கியமான ஒன்று. சருமம் கலராக இருக்கிறதோ இல்லையோ ஆரோக்கியமாக மற்ற பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது முக்கியம்..

    அரிசி கழுவிய தண்ணீர்

    முகம் கழுவுவதற்கு நாம் விதவிதமாக சோப்புகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால் கொரிய பெண்களோ அரிசி கழுவிய தண்ணீரே முகம் கழுவுவதற்கு சிறந்த கிளன்சராக பயன்படுத்துகிறார்கள். ஏனெனில் அது சருமத்தை நீண்ட நேரம் நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவி செய்யும்.

    ஒரு ஸ்பூன் அரிசியை ஒரு கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து விட வேண்டும். பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி முகம் கழுவுவதற்குப் பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள வறட்சி நீங்கி, முகம் நீர்ச்சத்தோடு நல்ல மாய்ஸ்ச்சராக இருக்கும்.

    கிரீன் டீ ஐஸ்கியூப்

    கிரீன் டீயில் நிறைய ஆன்ட்டி ஆக்சிடென்ட்களும் ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகளும் ஆன்டி - மைக்ரோபியல் பண்புகளும் அதிகமாக இருக்கின்றன. இது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவது மட்டுமின்றி சருமத்தையும் டீடாக்ஸ் செய்ய உதவி செய்யும்.

    ரெண்டு ஸ்பூன் கிரீன் டீ சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு ஆற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை பிரிட்ஜில் ஐஸ் க்யூப் டிரேவில் ஊற்றி ஃப்ரீசரில் வைக்கவும். அது ஐஸ் ஆன பிறகு அந்த ஐஸ் கட்டிகளை எடுத்த சருமத்தில் நன்கு மசாஜ் செய்து வர சருமத்துளைகள் திறந்து அதில் உள்ள மாசுக்கள் வெளியேறும் கண் முக வீக்கங்கள் குறையும் சருமம் பொலிவுடன் பளிச்சென்று இருக்கும்.

    எலுமிச்சை - தேன் மாஸ்க்

    நம்முடைய சரும துளைகளுக்குள் நாம் பயன்படுத்தும் சரும பராமரிப்பு பொருட்கள் சுற்றுச்சூழலில் இருந்து வரும் மாசுக்கள் ஆகியவை படிந்திருக்கும். அதனால் சரும துளைகளுக்குள் இருக்கும் மாசுகளை வெளியேற்றவும் இறந்த செல்களை நீக்கி புதிய செல்கள் உருவாவதற்கும சருமம் சரியாக சுவாசிப்பதற்கு இடமளிப்பதும் அவசியம். அதற்கு மிகச்சிறந்த ஒன்றாக இந்த எலுமிச்சை - தேன் மாஸ்க் இருக்கும்.

    இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் ஒரு ஸ்பூன் அளவு தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். முகத்தை நன்கு கழுவி விட்டு இந்த கலவையை அப்ளை செய்து 10-15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்பு விரல்களால் லேசாக மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் முகத்தை நன்கு கழுவி கொள்ளுங்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த மாஸ்கை முகத்தில் அப்ளை செய்து வரும் பொழுது சருமத்தில் உள்ள பெரிய துளைகள், பள்ளங்கள் ஆகியவை சிறிதாக ஆரம்பிக்கும். சருமம் சுத்தமாகும்.

    சரும பராமரிப்பு முக பராமரிப்பு என்று சொன்னாலே நம்முடைய முழு கவனமும் முகத்தில் தான் இருக்கிறதே தவிர கண்களைப் பற்றி நாம் பெரிதாக கண்டு கொள்வதே இல்லை.. ஆனால் கண்கள் தான் முகத்தின் உயிராக இருக்கிறது என்பதை உணர வேண்டும். கண்ணுக்கு கீழ் கருவளையம், கண்களுக்கு கீழ் உள்ள வீக்கமாகி அவற்றை குறைக்க உருளைக்கிழங்கு அற்புதமான ஒரு வீட்டு வைத்தியம் என்று சொல்லலாம்.

    உருளைக்கிழங்கு

    உருளைக்கிழங்கை தோல் சீவி விட்டு வட்ட வடிவில் மெலிதான துண்டுகளாக நறுக்கி கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஓய்வெடுங்கள். இப்படி செய்யும் போது கண்கள் குளிர்ச்சி அடைவதோடு கண்களைச் சுற்றிலும் உள்ள கருவளையங்கள் நீங்கும். சருமத்தை பட்டு போன்ற மென்மையாகவும் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள கொரிய பெண்கள் தயிரை பயன்படுத்துகிறார்கள். தயிர் அவர்களுடைய சரும பராமரிப்பில் மிக முக்கிய இடத்தைப் பெற்று இருக்கிறது.

    இரண்டு ஸ்பூன் தயிருடன் கால் ஸ்பூன் அளவு கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்கு கலந்து அதை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருங்கள். பிறகு மென்மையாக மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவி வைத்து கொள்ளலாம். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த தீர்வாகவும் சருமத்தை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ளவும் மாய்ஸ்ச்சராக வைத்துக் கொள்ளவும் இது உதவி செய்யும். இரவு தூங்க செல்வதற்கு முன்பு முகத்தை நன்கு கழுவி விட்டு கற்றாழை ஜெல்லை முகத்தில் அப்ளை செய்வது கொரிய பெண்களின் மிக முக்கியமான இரவு நேர சரும பராமரிப்பு ஆகும்.

    கற்றாலை ஜெல்

    இரவு முழுவதும் சருமத்தில் கற்றாழை ஜெல்லை அப்ளை செய்திருக்கும் பொழுது அது சருமத்தில் உள்ள காயங்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் ஆகியவற்றைப் போக்கவும் நல்ல ஹீலிங் பண்பு கொண்டிருப்பதால் சருமத்தில் உள்ள அரிப்புகள் மற்றும் பிரச்சனைகளைத் தீர்க்கவும் உதவியாக இருக்கும். கொரியப் பெண்களின் சரும பராமரிப்பில் ஷீட் மாஸ்க் களுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இந்த சீட் மாஸ்குகள் சருமத்தின் வறட்சியைப் போக்குவதோடு சருமத்தை எப்போதும் நீர்ச்சத்துடன் வைத்திருக்க செய்யும்.

    இன்னொரு முக்கியமான விஷயம் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க இந்த சீட் மாஸ்குகள் பயன்படும். அதிலும் வெள்ளரிக்காய் உட்பொருளாக சேர்க்கப்பட்ட ஷீட் மாஸ்குகளைப் பயன்படுத்தும்போது சருமம் மென்மையாகவும் நெகிழ்வுத் தன்மையுடனும் மாறும். சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், மூக்கை சுற்றிலும் உள்ள வெண்புள்ளிகள் ஆகியவற்றைக் குறைக்க முட்டையின் வெள்ளைக் கருவைப் பயன்படுத்தலாம்.

    முட்டையின் வெள்ளை கரு மாஸ்க்.

    பளபளப்பாக கண்ணாடி போல இருந்தாலும் வறட்ச்சியாகவும் இருக்காது, அதிக எண்ணெய் பசையுடனும் இருக்காது. சருமத்தின் பிஎச் அளவை சமநிலையில் பராமரிக்கும். அதற்கு அவர்கள் பயன்படுத்தும் மிக முக்கியமான மாஸ்குகளில் ஒன்று தான் முட்டையின் வெள்ளை கரு மாஸ்க்.

    முட்டையின் வெள்ளைக் கருவை தனியே பிரித்து எடுத்து, நன்கு ஸ்பூனால் பீட் செய்து முகம் மற்றும் மூக்கு பகுதிகளில் நன்கு அப்ளை செய்து 20 நிமிடம் வரை அப்படியே ஊற விட்டு விட வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து பீல் ஆப் மாஸ்க் போல அதை உரித்து எடுத்து விட்டு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விட்டுப் பாருங்கள். முதல் முறை அப்ளை செய்யும்போதே நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.

    சரும பராமரிப்புகளில் நம்மில் பெரும்பாலானோர் கண்டுகொள்ளாமல் விடும் விஷயம் இந்த மசாஜ் தான். எவ்வளவு சரும பராமரிப்புகள் செய்தாலும் சருமத்தை சரியாக மசாஜ் செய்யவில்லை என்றால் சருமத்தில் இரத்த ஓட்டம் சீராக இருக்காது. சருமத்தின் ரத்த ஓட்டத்தை சீராக்கி சருமத்தை மென்மையாகவும் நெகிழ்வுத் தன்மையுடனும் மாய்ஸ்ச்சராகவும் வைத்துக் கொள்வதற்கு மசாஜ் மிக முக்கியம்.

    • முடிஉதிர்வு பிரச்சினை மன உளைச்சலை ஏற்படுத்திவிடும்.
    • வழுக்கை விழுந்த தலையில் கூட முடிவளரும்.

    பொதுவாக தலைமுடி உதிர்வதை ஒரு வயதிற்கு மேல் நம்மால் நிறுத்தமுடியாது. குழந்தைப்பேறு, வயோதிகம், உடல்நலப்பிரச்சினை, சத்துக்கள் குறைவது போன்ற காரணங்களால் முடி உதிர்வை தடுக்க முடியாது. பலபேருக்கு அதுவே மன உளைச்சலை ஏற்படுத்திவிடும். இப்படி முடி அதிகமாக கொட்டுகிறதே என்ன செய்வது என்று புரியாமல் யோசித்துக்கொண்டு இருப்பார்கள்.

    கைமேல் பலன் தரக்கூடிய மிக அருமையான தீர்வை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். வழுக்கை விழுந்த தலையில் கூட முடிவளரும் அளவுக்கு இந்த தீர்வு இருக்கும். நமது வீட்டு அடுப்படியில் இருக்கும் சின்ன வெங்காயம் தான் இந்த தீர்வை தருகிறது. இதில் இருக்கக்கூடிய சல்பர் தான் முடிவளச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

    சல்பர் நம் தலையில் ஏற்படக்கூடிய புண், பொடுகு மற்றும் முடிகொட்டுவதற்கு காரணமான தொற்றுகளை அழிப்பதற்கு இந்த சல்பர் உதவுகிறது. இந்த சின்னவெங்காயத்தை எவ்வாறு பயன்படுத்வேண்டும் என்றால் இதனை நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். சின்ன வெங்காயத்தில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பசைபோல் அரைத்து எடுக்க வேண்டும்.

    இதில் உள்ள சாறினை பிழிந்து எடுத்து அதனை தலையில் உள்ள முடிகள் மற்றும் அதன் வேர்களில் படுமாறு நன்றாக தேய்த்துக்கொள்ள வேண்டும். முடிந்தால் ஒரு 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். அதன்பிறகு ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். புண். பொடுகுத்தொல்லை இருப்பவர்கள் கொஞ்சம் அரிப்பு காணப்படும். அதை பொறுத்துக்கொண்டு ஒருமணிநேரம் ஊறவைக்க வேண்டும். கண் எரிச்சல் இருக்கும் அதனால் எந்த பிரச்சினையும் ஏற்படாது. அதன்பிறகு ஒரு மைல்டான ஷாம்பு போட்டு தலைமுடியை அலச வேண்டும்.

    சிலர் எனக்கு சளித்தொல்லை, சைனஸ் பிரச்சினை இருக்கிறது. நாங்கள் எப்படி ஊறவைத்து குளிப்பது என்று கேட்கலாம். அவர்களை இந்த சின்ன வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து தடவுவதற்கு பதிலாக அவர்கள் சின்ன வெங்காயத்தை சிறிதளவு ஒன்றிரண்டாக தட்டி அதனை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி அதனை தடவி வரலாம்.

    இதனுடன் சேர்த்து எலுமிச்சை சாறு அல்லது புதினா சாறு ஆகியவற்றையும் தலையில் தடவி வரலாம். இதனை சாறு எடுத்து தடவி வந்தால் மட்டுமே முடியில் எந்த வெங்காய சக்கைகளும் படியாமல் இருக்கும். இதனை தொடர்ந்து ஒரு 6 மாதத்திற்கு பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வது குறைந்து முடிவளர ஆரம்பிக்கும். முடி இல்லாமல் வழுக்கை விழுந்தவர்கள் கூட தொடர்ந்து இந்த மாதிரி பயன்படுத்தி வந்தால் நல்ல பலனை பெறலாம்.

    • கொரிய பெண்களின் வயதை சட்டென்று கணித்து கூறிவிட முடியாது.
    • முதுமை பருவ பெண்களின் முகமும் ஒருசேரவே காட்சி அளிக்கும்.

    கொரிய பெண்களின் வயதை சட்டென்று கணித்து கூறிவிட முடியாது. இளம் வயது பெண்களின் தோற்றமும், முதுமை பருவத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் பெண்களின் முகமும் ஒருசேரவே காட்சி அளிக்கும். அந்த அளவுக்கு அவர்களின் முகத்தோற்றம் பிரகாசத்தில் ஜொலிக்கும். முகப்பருக்கள், சுருக்கங்கள் எதுவும் தெரியாத அளவிற்கு நேர்த்தியாக சருமத்தை பராமரிப்பார்கள். செயற்கை அழகுசாதன பொருட்களை நாடாமல் இயற்கை பொருட்களை நாடுவதுதான் அவர்களது அழகின் ரகசியத்திற்கு காரணம்.

    பொதுவாகவே வயது அதிகரிக்கும்போது சரும சுருக்க பிரச்சினை எட்டிப்பார்க்கும். சருமத்திற்கு போதிய கவனம் செலுத்தாதது, ரசாயனங்கள் அதிகம் கலந்த கிரீம்களை பயன்படுத்துவது, போதிய நீர்ச்சத்து, ஊட்டச்சத்து இல்லாதது போன்ற காரணங்களால் இளம் பருவத்திலேயே பலருக்கும் சரும சுருக்கம் எட்டிப்பார்க்க தொடங்கிவிடும்.

    கொரிய பெண்கள் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதில்லை. அதற்கு முறையான சரும பராமரிப்பும், இயற்கை அழகு சாதன பொருட்களும்தான் காரணம். சருமத்திற்கு அவர்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்கள் என்ன தெரியுமா? முட்டையும், காபி தூளும், தக்காளியும்தான். ஆம்! அவற்றை கொண்டே தங்கள் சருமத்தை பொலிவாக்குகிறார்கள்.

    நன்மைகள்:

    இந்த ஃபேஸ் மாஸ்கை பயன்படுத்தி வந்தால் சருமத்தில் படர்ந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கிவிடும். சரும சுருக்கத்தையும், ஆரம்ப நிலையில் சருமத்தில் தென்படும் நுண்ணிய கோடுகளையும் குறைக்கும். சருமத்தை இளமை பொலிவுடன் தக்கவைக்க துணைபுரியும். சருமத்தில் ஆரம்ப நிலையில் ஏற்படும் சுருக்கங்களை சரி செய்யும் தன்மை முட்டையின் வெள்ளைக்கருவுக்கு உண்டு. அது சரும துளைக்குள் ஆழமாக சென்று அதில் படிந்திருக்கும் அழுக்குகளை வெளியேற்றி, சருமத்தை சுத்தம் செய்துவிடும். அந்த ஃபேஸ் மாஸ்கை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    முட்டை -1 (வெள்ளைக்கரு மட்டும்)

    காபி தூள் - 1 டீஸ்பூன்

    தக்காளி ஜூஸ் - 2 டீஸ்பூன்

    செய்முறை:

    * முட்டையின் வெள்ளைக்கருவை நுரை வருவது போல் நன்றாக அடித்து கலக்கிக்கொள்ளுங்கள்.

    * அதனுடன் தக்காளி ஜூஸ் மற்றும் காபி தூளை சேர்த்து கிளறுங்கள். முகத்தில் தடவும் பதத்துக்கு தயார்படுத்திக்கொள்ளுங்கள்.

    * முகம் துடைக்க பயன்படுத்தும் டவலை வெந்நீரில் முக்கி அதனை நன்றாக பிழிந்து கொள்ளுங்கள்.

    * அந்த டவல் முகத்தில் ஒற்றி எடுக்கும் அளவுக்கு வெதுவெதுப்பாக இருக்க வேண்டும். அந்த பதத்தில் முகத்தின் அனைத்து பகுதிகளிலும் அழுத்தி எடுங்கள்.

    * பின்பு முட்டை, காபி தூள் பேஸ்டை முகம் முழுவதும் தடவிக்கொள்ள வேண்டும்.

    * 20 நிமிடங்கள் கழித்த பிறகு நன்கு உலர்ந்திருக்கும். அதனை எடுத்தால் அப்படியே பிரிந்து வந்துவிடும். அதனை மெதுவாக பிரித்தெடுத்துவிட்டு சாதாரண நீரில் முகத்தை கழுவினால் போதுமானது.

    * வாரத்திற்கு இரண்டு முறை இந்த ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தலாம். அதன் மூலம் சருமத்தில் படர்ந்திருக்கும் அழுக்குகள், மாசுக்களை எளிதாக அப்புறப்படுத்திவிடலாம்.

    • அழகிற்கு அழகு சேர்ப்பதில் சிகை அலங்காரமும் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • கொண்டை அலங்காரங்களுக்கு இன்றும் மவுசு அதிகம்.

    ஆடை அணிகலன்களோடு பெண்களின் அழகிற்கு அழகு சேர்ப்பதில் சிகை அலங்காரமும் முக்கிய பங்கு வகிக்கிறது. எத்தனையோ வகையான சிகை அலங்காரங்கள் இருந்த போதும் சில தலைமுறைகளுக்கு முன்னாள் பிரபலமாக இருந்த கொண்டை அலங்காரங்களுக்கு இன்றும் மவுசு அதிகம்.

    நவீன இந்திய கொண்டை

    குட்டையான மற்றும் அடர்த்தியான முடி உள்ள பெண்களுக்கு இந்த வகையான கொண்டை பொருத்தமாக இருக்கும். பண்டிகைகள் மற்றும் பொதுவான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது அலங்கரித்துக்கொள்ள இது சரியான தேர்வாகும். கவுன்கள் மற்றும் முழங்கால் வரையிலான ஆடைகள் அணியும்போது இந்த வகையான சிகை அலங்காரம் கூடுதல் அழகு சேர்க்கும். ஓவல், வட்டம் மற்றும் வைரவடிவ முகத்தோற்றம் கொண்ட பெண்கள் நவீன இந்திய கொண்டை அலங்காரத்தை தேர்வு செய்யலாம்.

    பன் கொண்டை

    எல்லா வயது பெண்களுக்கும் பொருத்தக்கூடிய எளிமையான கொண்டை வகை இது. பார்ட்டிகளுக்கும், பயணங்களுக்கும், அலுவலக நிகழ்ச்சிகளுக்கும் இந்த வகை கொண்டை அலங்காரம் ஏற்றதாக இருக்கும். திருமண நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் போது பன் கொண்டையில் பூக்கம் மற்றும் அணிகலன்கள் கொண்டு அலங்கரித்தால் பார்ப்பவர்களின் கண்களைக் கவரும்.

    டாப் பன் கொண்டை

    டாப் பன் கொண்டை அலங்காரம் பார்ட்டிகள். திருமண வரவேற்புகள் மற்றும் மேற்கத்திய பின்னணி கொண்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது அலங்கரித்துக்கொள்ள சரியான தேர்வாகும். நீளமான முடி கொண்ட பெண்களுக்கு இந்த வகை கொண்டை அழகுக்கு அழகு சேர்க்கும்.

    ஆஃப் பன் கொண்டை

    ஆஃப் பன் கொண்டை எனப்படும் இந்த கொண்டை இன்றைய இளம் பெண்களிடம் பிரபலமாக உள்ளது. விருந்துகளில் கலந்து கொள்பவர்களுக்கும், பயணம் செய்பவர்களுக்கும் இது சிறந்த தேர்வாகும். குட்டையான அல்லது நடுத்தரமான நீளம் கொண்ட கூந்தல் உள்ள பெண்களுக்கு இந்த வகை கொண்டை மிகவும் பொருத்தமாக இருக்கும்.

    சைடு பன் கொண்டை

    பக்கவாட்டு கொண்டை எனப்படும் இந்த கொண்டை அலங்காரம் நேர்த்தியான மற்றும் அழகான தோற்றம் அளிக்கும். இந்த வகை சிகை அலங்காரம் விருந்துகள், திருமணங்கள், குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது அலங்கரித்துக்கொள்ள ஏற்றது.

    லோ பன் கொண்டை

    கனமான அலங்கார பொருட்கள் இல்லாமல் எளிமையாக செய்யப்படும் இந்த வகை கொண்டை அலங்காரம் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் அல்லது சாதாரண பண்டிகை நாட்களில் கலந்துகொள்வதற்கு ஏற்றது.

    மெஸ்ஸி டாப் பன் கொண்டை

    நேரமில்லாமல் அவசரமாக கிளம்பக்கூடிய நிகழ்வுகளுக்கு ஏற்ற கொண்டை அலங்காரம் இது. சில நொடிகளில் செய்யக் கூடிய இந்த வகை சிகை அலங்காரம் எளிமையாக இருந்தாலும் உங்களுக்கு வசீகரமான தோற்றத்தை கொடுக்க கூடியது.

    • மழைக்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியை தடுக்கிறது.
    • இறந்த செல்களை அகற்ற உதவுகிறது.

    ஓட்சில் உள்ள சபோனின் எனும் மூலக்கூறு சருமத்தில் ஆழமாக ஊடுருவி சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. இது சருமத்தை மென்மையாகவும், நீரேற்றத்துடனும் வைக்க உதவுவதோடு மழைக்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியை தடுக்கிறது.

    ஓட்சில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தை புத்துணர்ச்சி அடையச் செய்து அதில் படித்திருக்கும் இறந்த செல்களை அகற்ற உதவுகிறது. ஓட்சுடன் தயிர், வாழைப்பழம், பால், தேன், எலுமிச்சம் பழச்சாறு, ரோஸ் வாட்டர் ஆகியவற்றை ஃபேஸ் மாஸ்க் தயாரித்து பயன்படுத்துவது குறித்து தெரிந்துகொள்வோம்.

    ஓட்ஸ் மற்றும் தயிர் ஃபேஸ் மாஸ்க்

    பொடியாக அரைத்த ஒருகப் ஓட்ஸ் ஒரு கப் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்பு அதில் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய், ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பசை போல தயாரிக்கவும். இந்த கலவையை முகத்தில் பூசி ௧௦ நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவவும், இந்த ஃபேஸ்பேக்கினை வார்த்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வரலாம்.

    ஓட்ஸ் மற்றும் வாழைப்பழ ஃபேஸ் மாஸ்க்

    பொடியாக அரைத்த ஓட்ஸ் ஒரு கப், நன்றாக பழுத்த வாழைப்பழம் இவை இரண்டையும் மிக்சியில் போட்டு அரைக்கவும். அதனுடன் வெதுவெதுப்பான பால் சிறிதளவு சோர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சருமத்தில் ஏற்படும் தழும்புகளை குணப்படுத்தும். 'விட்டமின் சி' முகத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும் பிரீ ரேடிக்கல்களை அழிக்கும்.

    ஓட்ஸ் மற்றும் தேன் ஃபேஸ் மாஸ்க்

    2 கப் ஓட்சுடன், ஒரு கப் பால் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பசை போல தயாரிக்கவும். அதை, முகத்தில் பூசி ௧௫ நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த ஃபேஸ்பேக்கை வாரத்திற்கு 5 முறை பயன்படுத்தலாம்.

    ஓட்ஸ் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் மாஸ்க்

    2 டேபிள் ஸ்பூன் ஓட்சில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். அது ஆறிய பிறகு 2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் ௨ டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த ஃபேஸ்பேக்கை முகம், கை மற்றும் கழுத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழிந்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

    ஓட்ஸ் மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் மாஸ்க்

    ஒரு டீஸ்பூன் பொடியாக அரைத்த ஓட்ஸ், ஒரு டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் அதில் தேவையான அளவு ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசவேண்டும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

    ×