என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    தோசை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு கேரட், தக்காளி சேர்த்து சத்தான கலர்புல்லான தோசை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை அரிசி - 1 கப்
    புழுங்கல் அரிசி - 1 கப் [வேண்டுமெனில், அரை கப் அவல் கூட சேர்த்துக் கொள்ளலாம்]
    தக்காளி - 1
    கேரட் துருவியது - இரண்டு கப்
    மிளகு - 1 டீஸ்பூன்
    சிவப்பு மிளகாய் - 6
    பெருங்காயத் தூள் - சிறிது  
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு.



    செய்முறை

    அரிசியை நன்றாக கழுவி மூன்று மணி நேரம் ஊற வைத்து தோசை மாவு பதத்தில் அரைத்து கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட், தக்காளி, மிளகாய், மிளகு, பெருங்காயம், உப்பு ஆகியவற்றை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    அரைத்த விழுதை மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடைசியாக இதில் கொஞ்சம் கொத்தமல்லி தழைகளை சேர்த்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சூப்பரான கேரட் - தக்காளி தோசை ரெடி.

    இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. விருப்பப்பட்டால் தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் கைவிரல்கள், மணிக்கட்டுகள், முழங்கைகள் கழுத்து, புஜம், தோள்பட்டை, மார்பு, வயிறு பலம் பெறும்.
    பெயர் விளக்கம் : ‘அஷ்டாங்க’ என்றால் எட்டு அங்கம் என்றும் ‘நமஸ்கார’ என்றால் வணக்கம் என்றும் பொருள். இந்த ஆசனத்தில் கால் விரல்கள், முழங்கால்கள், உள்ளங்கைகள், மார்பு, தாடை அல்லது நெற்றி ஆகிய உடலின் எட்டு பகுதியும், திரையில் தொடும்படி  வைத்து வணங்குவதால் அஷ்டாங்க நமஸ்காராசனம் என்ற பெயர் அமைந்துள்ளது.

    செய்முறை : ஐந்தாம் நிலையிலிருந்து முழங்கால்களை தரையில் ஊன்றி மார்பு, தாடை அல்லது நெற்றி தரையில் தொடும்படி வைக்கவும். மூச்சை வெளியே விடவும்.

    மந்திரத்தைக் கூறி சக்கரத்தை நினைக்கவும்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம் :  எட்டு அங்கங்களை தரையில் தொடும்படி செய்வதன் மீதும் மணிபூர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக்குறிப்பு :
    இந்த ஆசனத்தில் கால் விரல்கள், முழங்கால்கள், உள்ளங்கைகள், மார்பு, தாடை அல்லது நெற்றி ஆகிய எட்டு அங்கங்களும் தரையில் தொடும்படி இருக்க வேண்டும். ஆரம்பப் பயிற்சியில் வயிற்றை தரையில் படாதவாறு வைத்து இடுப்பை மேலே தூக்கி உடலின் எட்டு அங்கங்களையும், தரையில் தொட இயலாதவர்கள் முழு உடலையும் தரையில் படும்படி படுத்த நிலையில் வைத்து சில நாட்கள் பயிற்சி செய்யலாம்.

    பயன்கள் :
    கைவிரல்கள், மணிக்கட்டுகள், முழங்கைகள் கழுத்து, புஜம், தோள்பட்டை, மார்பு, வயிறு பலம் பெறும்.

    சமீப காலமாக பள்ளி, கல்லூரிகளிலேயே மாணவர்கள் மனதில் வன்முறை சம்பவங்கள் புகுந்து இருப்பது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
    சமீபத்தில் சென்னையில் கல்லூரி தொடங்கிய முதல் நாளில் பட்டாக்கத்திகளுடன் மாணவர்கள் பஸ்சில் பயணம் செய்து போலீசில் பிடிபட்ட சம்பவம் பெற்றோர்கள் மட்டுமில்லாமல் கல்வியாளர்களிடமும் கதிகலங்க வைத்திருக்கிறது. பேனா பிடித்த கையில் பட்டா கத்தியை பிடிக்கலாமா? என பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

    கல்லூரியில் படிக்க சொல்லி யாரும் கட்டாயப்படுத்தமாட்டார்கள். பள்ளியில் இருபாலர் படித்தாலும் அங்கு கட்டுப்பாடு உண்டு. ஆனால் கல்லூரியில் இருபாலரும் நண்பர்களாக பழகுவதற்கு தடை எதுவும் இல்லை.

    ‘டீன்ஏஜ்’ பருவத்தில் கல்லூரிக்கு பயணிக்கும் மாணவ-மாணவிகள் சில நேரங்களில் காதல் வலையில் வீழ்ந்துபோகிறார்கள். வேறு சிலர் தகாத நட்பு வட்டாரங்களால் போதை பழக்கத்தில் மூழ்கிவிடுவதும் உண்டு. எனினும் மாணவர்களை செம்மைப்படுத்துவது கல்லூரி பருவம் தான்.

    சமீப காலமாக பள்ளி, கல்லூரிகளிலேயே மாணவர்கள் மனதில் வன்முறை சம்பவங்கள் புகுந்து இருப்பது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. மாணவர்களின் மனதில் வன்முறை புகுந்து இருப்பதற்கு பள்ளி, கல்லூரிகளில் சரியான முறையில் நீதிபோதனைகள், விளையாட்டுகள் கடைபிடிக்கப்படுவதில்லை என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். முன்பெல்லாம் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடங்களை கற்பிப்பதோடு, பழங்கால நீதிகதைகளை எடுத்துரைப்பார்கள்.

    விளையாட்டுக்கு என்று ஒதுக்கப்படும் நேரத்தில் மாணவர்கள் மைதானத்தில் விளையாடி நட்பு பாராட்டினார்கள். ஆனால் இன்று அந்த விளையாட்டுக்கு ஒதுக்கப்படும் நேரம், மற்ற பாடங்களின் ஆசிரியர்களால் ஆக்கிரமிக்கப்படுகிறது.

    அது மட்டுமின்றி, முன்பு வீடுகளுக்கு சென்றாலும் பெற்றோர்களின் அரவணைப்பு, தெருக்குழந்தைகளுடன் விளையாடி மகிழும் அனுபவம் கிடைக்கும். இன்றோ, பள்ளி முடிந்த பிறகும் எந்திரத்தனமாக பள்ளி குழந்தைகள் டியூசன், வீட்டு பாடங்களில் முடக்கப்படுகின்றனர்.



    வீடுகளில் தனிமையில் இருக்கும் குழந்தைகள் வீடியோ கேம், தொலைக்காட்சிகளில் வரும் சண்டை காட்சிகளை அப்படியே மனதுக்குள் நிறுத்தி கொள்ளுவதும், வன்முறையில் மாணவர்கள் ஈடுபடுவதற்கு தூண்டுகோலாக இருப்பதாக மனோதத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 2012-ம் ஆண்டு சென்னை பாரிமுனையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இந்தி ஆசிரியை 9-ம் வகுப்பு படிக்கும் மாணவனால் வகுப்பறையிலேயே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தான் சரியாக படிக்காததை பெற்றோரிடம் கூறி கண்டித்ததால் கொலை செய்ததாக மாணவன் கூறினான்.

    2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந்தேதி தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் கல்லூரி முதல்வரை அந்த கல்லூரி மாணவர்களே திட்டமிட்டு கொலை செய்தனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவனை பள்ளியின் வகுப்பறையில் வைத்தே கொடூரமாக பிற மாணவர்கள் குத்தி கொலை செய்தனர். இப்படி பல சம்பவங்களை அடுக்கி கொண்டே செல்லலாம்.

    கல்லூரி மாணவர்கள் ஒருவருக்கொருவர் நான் தான் பெரியவன். நான் சொல்வதை தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிற மாணவர்களை அணுகும்போது மோதல் போக்கு ஏற்படுகிறது. இத்தகைய போக்குடன் இருக்கும் மாணவர்கள் தங்களின் பாதையை மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.

    தாங்கள் கல்வி கற்க பெற்றோர் தங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை செலவழிக்கிறார்கள் என்பதை பரிபூரணமாக உணர்ந்தால் தான் பேனா பிடிக்க வேண்டிய வயதில் பட்டா கத்தியை பிடிக்க மாட்டார்கள்.

    இன்றைய காலக்கட்டத்தில் பள்ளி படிக்கும் பருவத்திலேயே மாணவர்களுக்கு நீதிபோதனை, விளையாடும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். கல்லூரி செல்லும் மாணவர்களும் தங்கள் குடும்ப கவுரவத்தை காப்பாற்ற படிப்பில் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும்.

    பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் அன்றாட செயல்பாடுகளை கவனிக்க வேண்டும். கல்லூரி பேராசிரியர்களும் மாணவர்களை தங்கள் பிள்ளைகள் போல் கருதி அன்பு கட்டளையுடன் கல்வியையும், வாழ்வியலையும் போதித்தால் நிச்சயம் இன்றைய மாணவர்கள் தங்களை திருத்தி கொள்வார்கள்.

    -ஸ்ரீமன் 
    புகைபிடிக்காதவர்களை ஒப்பிடும் போது புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு 45 சதவீத வாய்ப்புகள் அதிகம்.
    நீரிழிவு நோயாளிகளுக்கு புகைப்பழக்கம் உடல்ரீதியாக பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். புகைபிடிக்காதவர்களை ஒப்பிடும் போது புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு 45 சதவீத வாய்ப்புகள் அதிகம். புகைப்பழக்கம் உள்ளவர்களின் வயிற்றில் கொழுப்பு குறிப்பாக ஆண்களுக்கு சேகரமாகும். அதனால் இயற்கையான இன்சுலின் சுரப்பு குறையும். பெண்கள் கர்ப்பக்காலத்திலும், பேறுகாலத்திற்குப் பிறகும் நிகோடின் உடலில் சேர்வதால் பி செல் குறைபாடும் நீரிழிவும் ஏற்படுகிறது.

    இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 50 முதல் 60 சதவீதம் பேர் புகைபிடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். புகையிலை நிறுவனங்கள் தொடர்ந்து தீவிரமாக விளம்பரங்களை வெளியிடும் வரையில் இந்தியாவில் புகைபிடிப்பவர்கள் குறையப்போவதில்லை. உலகிலேயே இந்தியாதான் புகையிலைப் பொருட்களை தயாரிப்பதிலும் பயன்படுத்துவதிலும் 2-ம் இடத்தில் உள்ளது. 40 சதவீதம் பேர் இந்தியாவில் பீடி புகைக்கிறார்கள். புகைபிடிக்கும் ஒரு நீரிழிவு நோயாளியின் இதயம் மற்றும் தமனியின் ஆரோக்கியம், மற்ற புகைபிடிப்பவரை விட 2 மடங்கு அதிக பாதிப்புக்குள்ளாகிறது. நீரிழிவு பாதிப்புக்குள்ளானவர்கள், நீரிழிவு நோயைத் தடுக்க நினைப்பவர்கள் இருதரப்பினருமே புகைபிடிப்பதை கைவிடவும், குறைக்கவும் முயல வேண்டும். புகை பிடிக்கும் ஒருநபர் தாமாகவே முன்வந்து புகைபிடிப்பதை நிறுத்துவதே முதல் முயற்சியாக இருக்கும்.

    நீரிழிவு நோய் சத்தமில்லாமல் கொல்லும் தன்மை கொண்டது. ஏனென்றால் கண்கள், சிறுநீரகம், பாதம், நரம்புகளை அது பாதிக்கும் தன்மை கொண்டது. எதிர்பாராதவிதமாக, பல நீரிழிவு நோயாளிகள், இந்தப் பிரச்சினைகள் அவர்களைத் தாக்க ஆரம்பித்தவுடன்தான் அந்நோயையே கண்டுபிடிக்கிறார்கள்.

    நீரிழிவு நோயை மோசமாக மேலாண்மை செய்வதால், எதிர்காலத்தில் சந்திக்கப் போகும் பிரச்சினைகள்:- கட்டுப்படுத்தப்படாத ரத்த சர்க்கரை கண்ணின் உள்படலத்தை, குறிப்பாக விழித்திரையை பாதிக்கும். இந்த நிலைக்கு டயாபடிக் ரெட்டினோபதி என்று பெயர். டயாபடிக் ரெட்டினோபதியின் ஆரம்ப நிலைகளில் எந்த நோய் அறிகுறியும் தெரியாது. உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறது என்றால், ஆண்டுக்கு ஒரு முறையாவது உங்கள் கண்களை பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

    உடல்உறுப்புகளுக்கு செல்லும் நரம்புகளுக்கு நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படுத்துவது “டயாபடிக் நியூரோபதி“. இதன் காரணமாக கை, பாதங்கள் மரத்துப் போதல் அல்லது ஜிவுஜிவு உணர்வு போன்றவை ஏற்படலாம். கால்களில் இருந்து நமக்குத் தெரியாமலேயே செருப்பு நழுவிப் போதல் அல்லது பாலுணர்வு படிப்படியாக குறைதல் போன்றவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். மோசமான நியூரோபதி, பாதங்களுக்கு ரத்தவோட்டத்தை குறைத்து, உயிருக்கு உலை வைக்கும்.
    பாசிப்பருப்பில் பாயாசம் வச்சு சாப்பிட்டு இருப்பீங்க.. பக்கோடா செஞ்சிருக்கீங்களா… சூப்பரான சுவையுடன் மொறுமொறுனு பிரமாதமா இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பாசிப்பருப்பு - 1/2 கப்
    பெரிய வெங்காயம் - 1 1/2
    பச்சைமிளகாய் - 2
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    இஞ்சி - சிறிய துண்டு
    தனியா - 1 டீஸ்பூன்
    உப்பு - 1 டீஸ்பூன்



    செய்முறை :

    பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

    பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    இஞ்சியை துருவிக் கொள்ளவும்.

    பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.

    பாசிப்பருப்பு ஊறியதும் தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு அதனுடன் தனியா, உப்பு, இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.

    அரைத்த பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு பிசைந்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து எண்ணெயில் உதிர்த்து விடவும்.

    இரண்டு பக்கமும் வெந்து பொன்னிறமானதும் எடுக்கவும்.

    சுவையான பாசிப்பருப்பு பக்கோடா தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    “வரவர குடும்பத்தில் எனக்கு மரியாதையே இல்லை” என புலம்பும் ஆண்கள் பெருகிவிட்டார்கள். உண்மையில் ஆண்கள் ஓரங்கட்டப்படுகிறார்களா? என்பதை குடும்ப சூழல்களின் ஊடே ஊடுருவிப் பார்க்கலாமா?...
    “வரவர குடும்பத்தில் எனக்கு மரியாதையே இல்லை” என புலம்பும் ஆண்கள் பெருகிவிட்டார்கள். உண்மையில் ஆண்கள் ஓரங்கட்டப்படுகிறார்களா? என்பதை குடும்ப சூழல்களின் ஊடே ஊடுருவிப் பார்க்கலாமா?...

    ஆண்கள் எப்போதும் தங்களை யாராவது கவனித்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தங்கள் நலனில் அக்கறை கொள்ளும் வகையில் குடும்பத்தினரின் செயல்பாடுகள் அமைந்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்படி நடந்து கொள்ளாவிட்டால் குடும்பத்தில் இருந்துதான் நிராகரிக்கப்பட்டதாக கருதுகிறார்கள். தனிமை உணர்வு அவர்களை ஆட்கொண்டு விடுகிறது. இப்படிப்பட்ட மனநிலை எல்லா ஆண்களுக்கும் உண்டு.

    ‘இந்தக் குடும்பத்தின் முக்கிய நிர்வாகி நான்தான். என்னால் தான் குடும்பத்தின் வரவு, செலவு அனைத்தும் நடக்கிறது. இந்த குடும்பத்திற்கே நான் தான் பாதுகாப்பு. நான் தான் தலைவன். அதனால் குடும்ப உறுப்பினர்கள் தனக்கு முக்கியத்துவம் தர வேண்டும்’ என்று ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள். அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் இந்த எதிர்பார்ப்பு எல்லை மீறிப் போய்விடக் கூடாது. மற்றவர்கள் வருந்தும்படி அவர்களுடைய செயல்பாடுகள் அமைந்துவிடக் கூடாது. குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் கவனிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு வரும் ஒவ்வொரு விஷயங்களை கையாள வேண்டியிருக்கும். அவரவர் வேலையில் தீவிர கவனம் செலுத்தும்போது மற்றவர்கள் நலனில் கவனம் செலுத்த முடியாத சூழல் நேரலாம். குடும்பத் தலைவனும் இதற்கு விதி விலக்கல்ல. அதை சரிவர புரிந்து கொள்ளாமல் மனதை குழப்பிக்கொள்ளக் கூடாது.

    ‘வர வர என்னை யாரும் இந்த வீட்டில் மதிப்பதே இல்லை. கொஞ்சம் கூட என் மேலே யாருக்கும் அக்கறை கிடையாது. என்னை கவனித்துக் கொள்வதை விட என்ன பெரிய வேலை? நான் ஒருத்தன் இந்தக் குடும்பத்துக்காக மாடாய் உழைக்கிறேன். எனக்காக சின்ன வேலை செய்வது கூட உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது. நான் மட்டும் இல்லேன்னா... உங்க நிலைமை என்னவாகும் என்பதை யோசிச்சு பாருங்க’ என்பது போன்ற புலம்பல்கள் பெரும்பாலான குடும்பத் தலைவர்களிடமிருந்து வருவது சகஜம். இது பெண்களை எந்த அளவிற்கு பலவீனப்படுத்துகிறது என்பது அவர்களுக்கே புரிவதில்லை.



    பெரும்பாலான ஆண்கள் வெளி இடங்களில் மற்றவர்களை அதிகாரம் செய்யும் நிலையில் இருப்பார்கள். அதுபோல் வீட்டில் உள்ளவர்கள் தமக்குப் பணிந்து நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒரு வகை மனநிலை. இந்த விஷயத்தில் மற்றவர்கள் சவுகரியம், அசவுகரியங்கள் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.

    “ஒரு காலத்தில் பெண்கள் வீட்டில் இருந்தார்கள். அப்போது ஆண்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இப்போது பெண்களும் வெளியில் சென்று வேலை செய்கிறார்கள். வீட்டிற்கு வந்தால் அவர்களும் அதே மனநிலையில் தான் இருப்பார்கள். அவா்களை கவனித்துக்கொள்ளவும் வீட்டில் ஆள் தேவை. ஆனால் அவர்கள் தங்களையும் கவனித்துக் கொண்டு மற்றவர்களையும் கவனிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

    அது பற்றி ஆண்கள் சிந்திப்பதே இல்லை. தங்கள் விருப்பப்படி எதுவும் நடக்காவிட்டால் முகத்தை தூக்கிவைத்துக் கொண்டு பெண்களை குறை சொல்ல தொடங்கி விடுவார்கள். இந்த நிலை மாறினால்தான் பெண்களுக்கு கொஞ்சம் மன ஆறுதலாக இருக்கும். ஆண்களும் காலத்திற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போது தான் வாழ்க்கைப் பயணம் சுகமாக இருக்கும்” என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

    தங்களுக்கு வயது அதிகரித்துக் கொண்டிருப்பது போலவே, மனைவிக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது என்ற விஷயம் ஆண்கள் மனதில் பதிவதில்லை. நிறைய பேர் திருமணமான புதிதில் வேலை வாங்கியது போலவே எப்போதும் வேலை வாங்கிக் கொண்டிருப்பார்கள். அதில் சிறு தவறு நடந்தாலும், ‘தன்மேல் அக்கறை இல்லை’ என்று மனைவியை குறை சொல்வார்கள். ஆண்களின் இந்த மனநிலை பெண்களை குற்ற உணர்வுக்கு ஆளாக்கி, மன அழுத்தத்தில் தள்ளி விடுகிறது. கணவன் வருத்தப்படும்படி தான் ஏதோ பெரிய தவறு செய்து விட்டதைப் போல உணர்கிறார்கள். அவர்களுடைய இயல்பையும், இயலாமையையும் ஆண்கள் புரிந்து கொள்வதில்லை.



    ஆண்கள் அனுசரணையாக நடந்து கொள்ளும் பட்சத்தில்தான் பெண்களின் உடல்நலனும், மனநலனும் பாதுகாக்கப்படும். கவனிப்பு, பாதுகாப்பு, பராமரிப்பு, உபசரிப்பு என்பது குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் பொதுவானது. தன்னை அக்கறையாக கவனித்துக் கொள்ளும் மனைவியால் ஏதோ ஒரு காரணத்தால் முடியாமல் போகும்போது அதனை பெரிதுபடுத்தக்கூடாது. தான் ஏதோ ஒதுக்கப்பட்டதைப் போல மனச்சோர்வு அடையக்கூடாது. மற்றவர் தன்னை கவனித்துக் கொள்ளும் அளவுக்கு தான் ஒன்றும் பலவீனமாகி விடவில்லை என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் குடும்ப நலனுக்காக பெண்கள் செய்யும் தியாகங்கள் புரியும். அதேவேளையில் ஆண்களால் தங்கள் துணை, தன்னை ஒதுக்குவதற்கான குறைந்தபட்சமாக சில காரணத்தைக் கூட சொல்ல முடியாது.

    குடும்பத்தில் அனைவரும் முக்கியம். அதில் ஒருவரை மட்டும் பிரத்யேகமாக கவனிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும்போது மற்ற வேலைகளை ஒதுக்க வேண்டி இருக்கும். அதனை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். குடும்ப நலனுக்காக சில பழக்க வழக்கங்களை பெண்கள் மாற்றிக் கொள்வதுபோல, ஆண்களும் சில விஷயங்களில் மாறித்தான் ஆக வேண்டும்.

    வெளியில் பல பணிகளை செய்து முடித்து வீடு திரும்பும்போது வீட்டில் நிம்மதியும், அக்கறையும் தேவை என்பது நியாயமானது தான். ஆனாலும் வீட்டில் உள்ள பெண்களின் நிலைமையையும் உத்தேசித்து நடந்துக் கொள்ள வேண்டும்.

    பெண்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் போது கூட அதைப்பற்றி கவலைப்படாமல் வழக்கமான உபசாரங்கள் கிடைக்கவில்லையே என்று கோபிக்கும் ஆண்கள், தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். அதுதான் மகிழ்ச்சியான குடும்பத்திற்கு மிகவும் அவசியமானது. 
    காதுகளின் ஆரோக்கியம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? எதனால் செவித்திறன் குறைகிறது? இத்தகைய பாதிப்பில் இருந்து காதுகளை எவ்விதம் பாதுகாப்பது என்பது குறித்து காண்போம்.
    செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வம் செவிச்செல்வம் என்றார் திருவள்ளுவர். அதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. பொதுவாக, கேட்கும் திறனுக்கும், பேச்சுத் திறனுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. பிறக்கும் போதே குழந்தைகளின் காதுகள், கேட்கும் சக்தியை இழந்து விட்டால் அவர்களுக்கு பேச்சு வராது. அதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் கேட்கும் திறன் எவ்வளவு முக்கியம் என்று.

    கேட்கும் திறனால் மட்டுமே மொழித்திறன் உருவாகி குழந்தை பேச தொடங்குகிறது. இத்தகைய கேட்கும் திறன் கொண்ட காதுகளின் ஆரோக்கியம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? எதனால் செவித்திறன் குறைகிறது? இத்தகைய பாதிப்பில் இருந்து காதுகளை எவ்விதம் பாதுகாப்பது என்பது குறித்து காண்போம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் சுபாஷினி கூறியதாவது:-

    மனித உடலில் காதுகள் ஒரு இன்றியமையாத உறுப்பு என்று சொன்னால் அது மிகையில்லை. காதுகளுக்கு கேட்கும் திறன் மட்டுமல்லாது இன்னும் சில திறன்களும் இருக்கிறது. அவைகள், உடலின் சமநிலையை பாதுகாத்தல், கட்டுப்படுத்துதல் போன்ற முக்கிய பணிகளையும் செய்கின்றன.

    உடலின் சமநிலை மாறுபடும்போது, தள்ளாட்டம், தலைச்சுற்றல், கிறுகிறுப்பு ஆகியவை வந்துவிடும். அதுமட்டுமின்றி தூங்கி எழும்போதும், ஒரு பக்கம் சாய்வதாலும் உடலின் சமநிலை மாறுபட்டு கிறுகிறுப்பு வர வாய்ப்புள்ளது. குறிப்பாக சொல்வதென்றால், நாம் நேராக நிற்கவும், தள்ளாடாமல் நடப்பதற்கும் காதுகள் மிக அவசியமாகிறது.

    பொதுவாக காதுகளின் அமைப்பு 3 பிரிவுகளாக உள்ளது. ஒன்று, வெளிக் காது. 2-வது நடுக்காது. 3-வது உள்காது. வெளிக்காது என்பது, செவி மடலில் இருந்து காது சவ்வு பகுதி வரை இருக்கும். நடுக்காது, ஜவ்வு பகுதியில் இருந்து காது நரம்பு தொடங்கும் பகுதி வரை இருக்கும். உள்காது, காது நரம்பில் இருந்து மூளை நரம்பு மண்டலம் வரை இருக்கும். இதில் செவிப்பறை என்பது நடுக்காதில் இருக்கும்.

    இத்தகைய முக்கியத்துவம் பெற்ற காதுகளுக்குள் புகும் ஒலி அலைகளின் சத்தம் 20 முதல் 20 ஆயிரம் ஹெட்ஸ் (அளவீடு) வரை தான் இருக்க வேண்டும். இந்த அளவீடு ஒலி அலைகளுக்கு சத்தம் குறைவாக இருந்தால் கேட்காது.

    காதுகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் விஷயங்கள் நிறைய உள்ளன. அடிக்கடி சளிப்பிடித்தல், தொண்டை வலி, விபத்து போன்ற காரணங்களால் காதுகள் பாதிக்கப்படும். பொதுவாக நடுக்காதுக்கும், மூக்குக்கும் இடையே ஒரு துளை இருக்கும். அதன்வழியே கிருமிகள் எளிதாக நடுக்காதை சென்றடைந்து விடும். அந்தக்கிருமிகள் நடுக்காதில் உள்ள செவிப்பறையை தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் கேட்கும் திறன் குறையும். இதுபோன்ற பாதிப்புகள் குழந்தைகளுக்கு அதிகம் வரும்.

    பெரியவர்களை பொறுத்தவரை, அடிக்கடி சளிப்பிடித்தல், மூக்கு தண்டு வளைதல், மூக்கில் கட்டி, சைனஸ் தொந்தரவு, பிற கட்டிகள், கிருமி தொற்று போன்ற காரணங்களால் கேட்கும் திறன் பாதிக்கும். காது வலியுடன் சீழ் வடியும், சிலருக்கு நரம்புகள் பாதிக்கப்பட்டு முகவாதம் வரலாம். கண் இமைகள் மூடாமல் போகும் வாய்ப்பும் உள்ளது. அப்போதும் சரிவர கவனிக்காமல் போனால் மூளையில் சீழ் கட்டிகள் தோன்றலாம். அதனால் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு கோமா நிலைக்கு தள்ளப்படலாம்.



    பொதுவாக காதுகள் பாதிக்கப்படும் போது, முதலில் தலைவலி, காது வலி ஏற்படும். காதுக்குள் கொப்பளங்கள் தோன்றும். அதற்கடுத்த நிலையில் சீழ் வடியும். இதுபோன்று அறிகுறிகள் தோன்றினால் தாமதிக்காமல் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக காதுகளை பொறுத்தவரை பாதுகாப்பு என்பது முக்கியமானது.

    அதிக சத்தத்தை கேட்கக் கூடாது. அவ்வாறு சத்தத்தை கேட்க நேர்ந்தால் காதில் முன்னெச்சரிக்கையாக பஞ்சை வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் வாகனங்களில் உள்ள காற்று ஒலிப்பான் (ஏர்ஹாரன்) மற்றும் கூம்புவடிவ ஒலி பெருக்கி சத்தமும் ஆகாது. காதை சுத்தப்படுத்த குச்சி, பட்ஸ் உபயோகிக்க கூடாது. சாதாரணமாக, விபத்தில் காதில் அடிபடாமல் பார்த்து கொள்ள வேண்டும். அடிக்கடி சளிப்பிடிக்க விடாமல் எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது.

    வாகனங்களில் போகும்போது காற்றின் வேகத்தில் பூச்சிகள் காதுக்குள் செல்ல வாய்ப்பிருக்கிறது. மேலும் தூங்கும் போது காதில் எறும்பு, சிறு பூச்சிகள் நுழைய வாய்ப்புள்ளது. அதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதேபோல் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு இவற்றை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    அவ்வாறு இல்லையென்றால் தலையின் அடிப்பகுதி பாதிக்கப்படுவதுடன், மத்திய நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும். இதுதவிர வயதானவர்களுக்கு காதில் புற்றுநோய்க்கிருமி தொற்றும் ஏற்படலாம்.

    பொதுவாக குழந்தைகள் பிறந்த சில மாதங்களில் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசினாலும் 1½ வயதில் சரளமாக பேச ஆரம்பிக்கும். 2 வயதில் அதற்கு சிந்திக்கும் திறன் வளரும். பரம்பரை வழியாக, சொந்தத்தில் திருமணம் செய்வதால் பிறவிக்குறைபாடாக காதுகேளாமை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அவ்வாறு பிறவிக்குறைபாடுகளுடன் பிறந்த குழந்தையை 3 மாதங்களில் கண்டறிந்து விடலாம்.

    அதன்பிறகு ஒரு வருடத்தில் ஆடியோகிராம், பெரா ஆகிய 2 பரிசோதனைகள் மூலம் காதின் எந்தப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறியலாம். பொதுவாக பிறவிக்குறைபாடுள்ள குழந்தைகளுக்கு உள்காதில் மற்றும் நரம்பில் தான் பிரச்சினைகள் இருக்கும்.

    பொதுவாக காதுகளை பாதுகாக்க மற்ற சிறப்பு பயிற்சிகள் ஏதும் கிடையாது. ஆனால் தலைசுற்று, கிறுகிறுப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள சிறப்பு பயிற்சிகள் இருக்கிறது. கண்களுக்கு ஓய்வு கொடுப்பதை போன்று காதுகளுக்கு ஓய்வு கொடுக்க முடியாது. அதற்கு ஓய்வே கிடையாது. 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டு தான் இருக்கும். அதனால் தான் தூங்கும் போது கூட ஏதாவது ஒரு சத்தம் கேட்டால் விழித்து கொள்கிறோம்.

    ஹெட்போனில் தொடர்ந்து பாட்டு கேட்டுக்கொண்டே தூங்குவதாலும், அதிக சத்தமாக வைத்து பாட்டு கேட்பதாலும், குறிப்பிட்ட மருந்து, மாத்திரையை தொடர்ந்து சாப்பிடுவதாலும் காது நரம்புகள் வலுவிழந்து போகிறது. இதனால் காதுகளின் செவித்திறன் குறைந்து போகும். இதற்கு ஓட்டோடாக்சிசிட்டி என்று பெயர்.



    தலையில் மூளைக்கு அருகில் கண், காது, மூக்கு போன்ற உறுப்புகள் உள்ளது. அதனால் மிகுந்த எச்சரிக்கையாக இந்த உறுப்புகளை பாதுகாக்க வேண்டியது அவசியம். அதனால் ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டாலும் அதனருகில் இருக்கும் மற்ற உறுப்பும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பல்வலி வந்தால் தலைவலி வரும். கழுத்து வலி வந்தால் காது வலி வரும். இந்த பாதிப்பை ரெபர்டு ஆட்டாலாஜியா என்று மருத்துவம் கூறுகிறது.

    காதுகள் எப்போதும் உலர்வாக இருக்க வேண்டிய பகுதி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதனால் குளிர் காற்று, குளிர்ந்தநீர் காதுக்குள் போகக்கூடாது. அது காதின் ஆரோக்கியத்தை கெடுத்து பாதிப்பை உண்டாக்கும். அம்மை நோயை அலட்சியப்படுத்தக்கூடாது. அதனாலும் காதுகளுக்கு பாதிப்பு ஏற்படும். உள்காதில் நீர் கோர்த்தால் காது கேட்காது. அப்போது இரைச்சல், தலைச்சுற்றல், கிறுகிறுப்பு ஆகிய பாதிப்புகள் ஏற்படும்.

    காது தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ளும் திறன் கொண்டது. அதற்காக காதுக்குள் ‘செரூமன்‘ என்னும் ஒருவகை திரவம் சுரக்கிறது. அந்த திரவம் காதை சுத்தப்படுத்தும். ஒரு சிலருக்கு ‘செரூமன்‘ திரவத்தால் அழுக்கு சேருவதுண்டு. அதனை அகற்ற மருத்துவரின் துணையோடு காதுக்குள் ஊசி மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்ய வழி இருக்கிறது.

    ‘ரூபெல்லா‘ எனும் வைரஸ் கிருமி பாதிப்பு ஏற்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு காது கேட்காமல் போகும். அதற்காக முன்னெச்சரிக்கையாக வளர்இளம் பெண்களுக்கு ரூபெல்லா தடுப்பு ஊசி போடுவது நடைமுறையில் உள்ளது. இதனால் காது கேளாமை என்னும் பிறவிக்குறைபாட்டை தடுத்து விடலாம்.

    அதிக சத்தமான இடி மற்றும் பட்டாசு வெடிப்பதை கேட்டால் காது சவ்வு கிழிந்து விடும். சில தொழிற்சாலைகளில் உள்ள எந்திரங்களில் இருந்து அதிக சத்தம் வரும். இதுபோன்ற அதிக சத்தத்தை தொடர்ந்து கேட்பதால் காதின் செவித்திறன் பாதிக்கப்படும். அதனால் அங்கு பணியாளர்கள் உள்பட அனைவரும் வருடம் ஒரு முறை செவித்திறன் குறித்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    அதேபோல் குழந்தைகள் விளையாட்டாக சிறு பொருட்களை காதுக்குள் போட்டுக்கொள்வார்கள். அதனை வெளியில் சொல்லவும் தெரியாது. அதுபோன்ற சமயத்தில் பெரியவர்கள் அதனை கண்டறிந்து டாக்டரிடம் சென்று அதற்கு உரிய முறையில் சிகிச்சை எடுத்து அதனை அகற்ற வேண்டும். கையில் கிடைத்த சிறு பொருட்களை கொண்டு காதை குடையக்கூடாது. அதிக நேரம் ஒரே காதில் வைத்து செல்போன் பேசக்கூடாது. இவ்வாறு காதுகள் விஷயத்தில் அக்கறை செலுத்தினால் காதுகளை பாதுகாக்கலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    பச்சை பட்டாணியில் கீர் என பலர் வியப்பது தெரிகிறது. இன்று இந்த பச்சை பட்டாணியில் சுவையான கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பச்சைப்பட்டாணி - 1 கப்,
    பச்சைப்பட்டாணி வேக வைக்க தண்ணீர் - 1 கப்,
    உப்பு - கொஞ்சம்,  
    பால் - அரை கப்.

    கீர் தயார் செய்ய

    பால் - 2 கப்,
    சர்க்கரை - ¾கப் ,
    பிஸ்தா - தேவையான அளவு,
    பாதாம் - தேவையான அளவு,
    குங்குமப்பூ - சிறிதளவு,
    ஏலக்காய் தூள் - கொஞ்சம்



    செய்முறை

    வேக வைத்த பட்டாணியை ஆறவைத்து பின் அதனை கொஞ்சம் பால் விட்டு நல்ல கூழாக அரைத்து கொள்ளவும்.

    பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியில் நெய் விட்டு மசித்த பட்டாணி கூழை போட்டு நன்கு கிளறவும்.

    இந்த கலவை கட்டியானவுடன் 2 கப் பாலில் முதலில் ½கப் பால் விட்டு கிளறவும்.

    பின் கொஞ்ச நேரம் கழித்து ½ கப் பால் விட்டு கிளறவும்.

    நன்கு கொதித்தபின் சர்க்கரை போட்டு கிளறவும்.

    பின் மீதமுள்ள பாலை விட்டு கிளறவும். நன்கு கொதித்து முட்டை விடும் சமயத்தில் நறுக்கிய பாதாம், பிஸ்தா மற்றும் ஏலக்காய் தூள், குங்குமப்பூ போட்டு கிளறி பரிமாறவும்.

    பசுமையான பச்சை பட்டாணி கீர் செய்து பிரிட்ஜில் வைத்தும் குளிர்ச்சியான நிலையிலும் பரிமாறலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் நீரிழிவு பிரச்சனை, கர்ப்ப காலத்தின் எந்த நேரத்திலும் வெளிப்படலாம். கவனமாக இருந்தால் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.
    தாயாகப் போகிறோம் என்கிற மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் போதே, திடீரென சில மாற்றங்கள் நிகழும். சோதனை முடிவுகளும் சோதனைக்கு உள்ளாக்கும். ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் நீரிழிவு பிரச்சனை, கர்ப்ப காலத்தின் எந்த நேரத்திலும் வெளிப்படலாம்.

    குடும்பத்தில் நீரிழிவு பின்னணி இருக்கிறதா? தாய்மைக்குத் தயாராகும் போதே, இது பற்றி மகப்பேறு மருத்துவரிடம் தயங்காமல் தெரிவித்து விடுங்கள். கர்ப்பம் தரித்தது அறிந்ததும் செய்யப்படும் முதல் ஆலோசனை தொடங்கி, ஒவ்வொரு முறையும் நீரிழிவு விஷயமும் கவனத்தில் கொள்ளப்படும்.

    * மகப்பேறு மருத்துவரே முதல் கட்ட ஆலோசனைகளை அளித்தாலும், பின்னர் நீரிழிவு மருத்துவர், டயட்டீசியன், பிசியோதெரபிஸ்ட் ஆகியோரும் இணைந்து உதவுவார்கள்.

    * குடும்ப நீரிழிவு பின்னணி உள்ளவர்களுக்கு கர்ப்பம் தரிக்கும் முன்பே இது பற்றி தெளிவாக அறிவுறுத்தப்படும்.

    * கர்ப்ப காலத்திலும் பிரசவத்திலும் நீரிழிவு காரணமாக ஏற்படும் விளைவுகள் பற்றியும், அதைத் தவிர்க்கும் வழிகள் பற்றியும் விளக்கப்படும்.

    * வீட்டிலேயே குளுக்கோமீட்டர் பயன்படுத்தி சோதிக்கும் முறைகள் பற்றி அறிவுறுத்தப்படும்.

    * அல்ட்ரா சவுண்ட் மூலம் கரு வளர்ச்சி சோதிக்கப்படும்.

    * பிரசவ குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில் திட்டமிடப்படும்.

    * எதிர்காலக் குழப்பங்கள் குறித்தும் அவற்றைப் போக்கும் வழிகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்படும்.



    * கர்ப்ப கால நீரிழிவு உள்ளவர்களில் 10-25 சதவிகிதத்தினரை Pre-eclampsia பிரச்னை தாக்குகிறது. இது உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற நிலை.

    * நோய்த்தொற்று மற்றும் அதனால் ஏற்படும் வீக்கம்... தாய்க்கு மட்டுமல்லாமல் கருவுக்கும் தொற்றக்கூடும்.
    * குழந்தை பிறந்த உடன் அதீத ரத்தப்போக்கு
    * சிசேரியன் செய்ய வேண்டிய நிலை

    * எடை கூடுதல்
    * உயர் ரத்த அழுத்தம்
    * கரு கலைதல்
    * மூன்றாவது ட்ரைமஸ்டரில் குழந்தை இறத்தல்
    * டைப் - 2 நீரிழிவாக மாற்றம் அடைதல்

    * வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அதிக இன்சுலின் தேவைப்படுதல்
    * ரெட்டினோபதி எனும் விழித்திரை நோய் ஏற்படுதல்
    * நெப்ரோபதி எனும் சிறுநீரகப் பிரச்னைகள் உண்டாகுதல்... சிறுநீரகச் செயல் இழப்புக்கான அறிகுறிகள் தோன்றுதல்
    * கரோனரி ஆர்டரி எனும் இதயப் பிரச்னை வலுவடைதல், ஏற்கனவே பிரச்னை அதிகம் இருப்பின் பிரசவ மரணம் ஏற்படுதல்
    * கார்டியோமையோபதி எனும் இதயத்தசை நோய் ஏற்படுதல்.
    உடல் அழகில் அக்கறையை காட்டும் பெரும்பாலானோர் மூக்கை பராமரிப்பதில் காண்பிப்பதில்லை. வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தியே மூக்குக்கும், முக அழகுக்கும் பொலிவு சேர்க்கலாம்.
    உடல் அழகை மேம்படுத்துவதற்கு காண்பிக்கும் அக்கறையை பெரும்பாலானோர் மூக்கை பராமரிப்பதில் காண்பிப்பதில்லை. ஒருசிலர் மூக்கை சுற்றி கரும்புள்ளிகள் படர்ந்திருக்கும். அழுக்குகள் சேர்ந்தும் அவதிக்குள்ளாக்கும். அது முக அழகுக்கு பங்கம் விளைவிக்கும். வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியே மூக்குக்கும், முக அழகுக்கும் பொலிவு சேர்க்கலாம்.

    அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்துக்கொள்ள வேண்டும். வெந்நீர் சற்று ஆறியதும் அதனை மற்றொரு பாத்திரத்தில் ஊற்றிக்கொள்ள வேண்டும். அகன்ற போர்வையை தலையில் மூடி முகத்தில் நீராவி படியும்படி ஆவி பிடிக்க வேண்டும். நீராவியால் சருமத்திற்கு எரிச்சலோ, காயமோ ஏற்பட்டு விடக் கூடாது. 10-15 நிமிடங்கள் தொடர்ந்து நீராவியை மூக்கு பகுதியில் நுகர்ந்துவிட்டு டவலால் துடைக்க வேண்டும். ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் மூக்குப் பகுதி சுத்தமாக இருக்கும்.

    மூக்கில் படர்ந்திருக்கும் கரும்புள்ளிகளை போக்க பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். இரண்டு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை நீரில் குழைத்து மூக்கில் பசை போல் தடவிக்கொள்ள வேண்டும். சில நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் இறந்த செல்கள் நீங்கிவிடும். மூக்கு பகுதியில் உள்ள அழுக்குகள் அகன்றுவிடும். கரும்புள்ளிகளும் மறையத் தொடங்கும். பேக்கிங் சோடாவுடன் வினிகரும் சேர்த்து பயன்படுத்தலாம்.



    மூக்கில் ஆங்காங்கே தென்படும் கருப்பு நிற புள்ளிகளை போக்குவதற்கு ஓட்ஸையும் உபயோகிக்கலாம். இரண்டு டேபிள் ஸ்பூன் ஓட்ஸுடன் மூன்று டேபிள்ஸ்பூன் தயிர், சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை மூக்கின் மேல் பூசி சில நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வரலாம்.

    ஓட்ஸுடன் தக்காளி, தேனையும் பயன்படுத்தலாம். 4 தக்காளி பழங்களை ஜூஸாக்கி அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு ஓட்ஸ் கலந்து குழைத்து முகத்தில் தடவ வேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட வேண்டும். வாரம் ஒரு முறை செய்து வந்தால் போதும். மூக்கு பொலிவுடன் காட்சியளிக்கும்.

    முட்டையின் வெள்ளைக்கருவை மூக்கில் விரல்களால் அழுத்தி தடவ வேண்டும். அது உலர்ந்ததும் மீண்டும் ஒருமுறை வெள்ளைக்கருைவ பூச வேண்டும். இரண்டு மூன்று முறை இவ்வாறு செய்து விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட வேண்டும். இரண்டு வாரம் தொடர்ந்து செய்துவந்தால் கரும்புள்ளிகளுக்கு தீர்வு காணலாம். 
    தினமும் ஏதாவது சூப் குடிப்பது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று பச்சை சுண்டைக்காய் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வேக வைத்த பாசிப்பருப்பு தண்ணீர் - ஒரு கப்,
    பச்சை சுண்டைக்காய் - ஒரு கப்,
    பூண்டு பல்  - 4,
    வெங்காயம், தக்காளி தலா - ஒன்று,
    மஞ்சள் தூள் - சிட்டிகை,
    வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    மிளகுத்தூள், உப்பு - தேவைக்கு.



    செய்முறை :

    பூண்டு, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் வெண்ணெய் விட்டு உருக்கியதும் பூண்டு, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் இறக்கி ஆறிய பிறகு மிக்சியில் விழுதாக அரைத்து எடுக்கவும்.

    அடி கனமான பாத்திரத்தில் சுண்டைக்காயுடன் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

    பிறகு அதனுடன் அரைத்த விழுது, பாசிப்பருப்பு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும், மேலே மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

    சத்தான பச்சை சுண்டைக்காய் சூப் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.


    தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களுக்கும், இன்னல்களுக்கும் ஆதரவு அளிக்கவும், அறிவுரை கூறவும் சகோதரர்கள், சகோதரிகள், உறவினர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை குழந்தைகளுக்கு வரும்.
    வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சியின் பாதையில் பரபரப்பாய் நடைபோடும் மனிதன் தன் மூதாதையர்கள் வாழ்க்கையை நினைத்து பார்க்க சற்று நேரம் ஒதுக்க வேண்டும். அவர்கள் காலத்தில் குடும்பம் என்றால் அண்ணன், அக்காள், தங்கை, தம்பி என்று பெரிதாக இருந்தது. பெரும்பாலும் கூட்டுக்குடும்பமாகவே வாழ்ந்தனர். அவர்கள் தங்கள் உறவுகளை மேம்படுத்தும் வகையில் ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக பழகினர். இதனால் குடும்பத்தில் உறவுகள் என்னும் பாலம் கட்டுறுதி மிக்கதாக அமைந்திருந்தது.

    விசேஷ நிகழ்ச்சியில் உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வேலைகளை செய்து தங்களுடைய சொந்தம், பந்தங்களை வரவேற்று உபசரிப்பதில் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் உறவுகள் வலுப்பெற்றன. துன்பங்கள் இன்பமாகின. உதவும் மனப்பான்மையை குழந்தைகள் கற்க வாய்ப்பு கிடைத்தது.

    ஆனால் தற்போது வீடுகளில் ஒரு குழந்தை போதும் என்றும் தம்பதியினர் முடிவு செய்து, குடும்பம் என்னும் பெரிய வட்டத்தை சிறிதாக மாற்றி விட்டனர். காரணம் பொருளாதார நெருக்கடி, வேலைக்கு சென்று வருமானம் பெற்றால் தான் வாழ முடியும் என்ற நிலை. ஒற்றை குழந்தைக்கு சகோதர பாசம் எட்டாக்கனியாகிவிடுகிறது. பரபரப்பாக இருக்கும் பெற்றோரால், தந்தை-தாயின் பாசமும் குழந்தைகளுக்கு தெரியாமல் போய்விடுகிறது. அப்படிப்பட்ட குழந்தைகள் காலப்போக்கில் தனிமையை விரும்பும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

    பள்ளி விடுமுறை காலங்களில் கூட உறவினர் வீடுகளுக்கு செல்வதை பெற்றோர் தவிர்ப்பதால், எதிர்காலத்தில் சித்தப்பா, சித்தி, மாமா, அத்தை என்ற உறவு முறை தெரியாமலே குழந்தைகள் வாழ வேண்டிய நிலை ஏற்படுமோ என்ற அச்சம் தொற்றி இருக்கிறது.

    இந்த நிலை மாற பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு, சொந்த பந்தங்களை யார் என்று எடுத்துக்கூற வேண்டும். அவ்வப்போது உறவினர் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அப்போது தான் சகோதர உறவுகள் வளரும். தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களுக்கும், இன்னல்களுக்கும் ஆதரவு அளிக்கவும், அறிவுரை கூறவும் சகோதரர்கள், சகோதரிகள், உறவினர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை குழந்தைகளுக்கு வரும். எனவே, மறைந்து வரும் உறவுகளை மேம்படுத்தி மீண்டும் புத்துணர்ச்சியோடு மலரச் செய்வோம்.

    -இளவளவன் 
    ×