என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    சுகப்பிரசவத்தை அனைத்து தம்பதிகளும் விரும்புகிறார்கள். இதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், அதற்காக கணவனும், மனைவியும் என்ன முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் என்பது முக்கியம்.
    இன்றைக்கு இணையதளம் இலவசமாக கிடைப்பதால், அதை ஆக்கப்பூர்வமாக எதற்கெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று பலரும் யோசிப்பதில்லை. மாறாக, எதற்கெடுத்தாலும் இணையதளத்தை நாடுகிறார்கள். வரைமுறையின்றி எதை வேண்டுமானாலும் பார்க்கிறார்கள். இது பல நேரங்களில் விபரீதத்தில் முடிந்துவிடும்.

    அப்படி ஒரு விபரீத விளையாட்டு ஒரு ஆசிரியையின் உயிரை விலையாக்கி இருக்கிற செய்தி கவலையை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் ஆசிரியை ஒருவருக்கு சுகப்பிரசவம் நடக்க வேண்டும் என்பதற்காக, அவருடைய கணவர் சமூகவலைத்தளத்தை பார்த்து நண்பரின் துணையோடு வீட்டிலேயே பிரசவம் பார்த்தார். அழகான குழந்தையும் பிறந்தது. ஆனால், குழந்தையை பெற்றெடுத்த தாய் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் நிச்சயம் எளிதில் கடந்துபோகக் கூடியதில்லை. சுகப்பிரசவத்தை அனைத்து தம்பதிகளும் விரும்புவார்கள்; விரும்புகிறார்கள். இதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், அதற்காக கணவனும், மனைவியும் என்ன முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் என்பது முக்கியம் அல்லவா?

    பொதுவாகவே இன்றைய சமூகத்தில் ஒரு கருத்து நிலவுகிறது. எதற்கெடுத்தாலும் பழைய காலத்தையும் நிகழ்காலத்தையும் ஒப்பிட்டு பேசுகிறார்கள். ‘மருத்துவ வசதி இல்லாத அந்த காலத்தில் வீட்டிலேயே 10-க்கும் அதிகமான பிள்ளைகளை சுகப்பிரசவத்தில் பெற்றெடுத்தார்கள். ஆனால் மருத்துவத்துறை அபரிமித வளர்ச்சியை அடைந்திருக்கும் நிகழ்காலத்தில், மருத்துவமனையில் பெரும்பாலும் ‘சிசேரியன்’ மூலம் தானே பிரசவம் நடக்கிறது?’ என்று அலட்டிக்கொள்கிறார்கள். அதாவது, டாக்டர்கள் வேண்டுமென்றே ‘சிசேரியன்’ மூலம் பிரசவம் பார்ப்பதாக ஒரு மனநிலை சமூகத்தில் புரையோடிக் கிடக்கிறது.

    இப்படி பழையகாலத்தை நிகழ்காலத்தோடு தொடர்புபடுத்துவதே முதலில் தவறு. அந்த காலத்தில் உடல் உழைப்பை நம்பி தான் நம் முன்னோர்கள் இருந்தார்கள். ஆண்களும், பெண்களும் சரிக்கு சமமாக வேலை செய்தார்கள். ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை சாப்பிட்டு ஆரோக்கியமான வாழ்வு வாழ்ந்தார்கள். இதனால் அவர்களுக்கு சுகப்பிரசவம் சாத்தியமாயிற்று.

    அந்த காலத்தில் மருத்துவமனைகளும் வெகுகுறைவு. இதனால் வேறுவழியும் இல்லை. அவர்கள் வீட்டில் தான் பிரசவம் பார்த்தாக வேண்டும். ஆனால் இன்றைய நிலை அப்படியானதல்ல. ஊருக்கு ஊரு மருத்துவமனைகள் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது, நாம் வீட்டிலேயே பிரசவம் பார்க்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்படவில்லை.

    இதையெல்லாம் விட முக்கியமான ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். முன்பு வீட்டில் சுகப்பிரசவம் பார்த்தார்கள் என்று நாம் சொல்கிறோம். உண்மை என்னவென்றால், அப்போது பிரசவத்தின்போது தாய் இறப்பதும், பிறந்த குழந்தை இறப்பதும் அதிகமாக இருந்தது.

    15 குழந்தைகள் பெற்றிருந்தால் 3 குழந்தைகள் பல வீடுகளில் பிறக்கும்போதே இறந்திருந்தன. 1000 பிரசவங்களில் சுமார் 300 தாய்மார்கள் வரை இறப்பை சந்தித்தனர். ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய புள்ளி விவரங்களை பாருங்கள் இது புலப்படும்.

    ஆனால், இன்றைக்கு மருத்துவம் வளர்ந்துவிட்டது. பிரசவத்தின்போது, தாய் இறப்பு விகிதமும், சேய் இறப்பு விகிதமும் பல மடங்கு குறைந்துவிட்டது. இந்த புள்ளி விவரங்கள் இந்தியா மட்டுமின்றி ஒவ்வொரு நாடுகளிலும் பின்பற்றப்படுகின்றன. ஆனால் இதை யாரும் கருத்தில் கொள்வதில்லை.

    சுகப்பிரசவம் வேண்டும் என்பதற்காக எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், மருத்துவர்களின் ஆலோசனையும் இன்றி வீட்டில் சுயமாக பிரசவம் பார்ப்பது அறிவுடமை ஆகாது. யூடியுப் போன்ற சமூகவலைத்தள வீடியோக்களை நம்பினால் ஏமாந்துதான் போவோம்.

    இன்றைக்கும் மேலைநாடுகள் சிலவற்றில் வீட்டில் பிரசவம் பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் மிகுந்த முன்னேற்பாடுகளோடு இதை செய்கிறார்கள். இதற்காக மருத்துவர்களின் ஆலோசனைகளை தொடர்ந்து பெறுகிறார்கள். அதுமட்டுமின்றி பிரசவத்தின்போது அரசு பயிற்சி பெற்ற நர்சுகள் வீடுகளுக்கு வந்து பிரசவம் பார்க்கிறார்கள்.

    ஆனால், இங்கே அதற்கான வாய்ப்புகள் இருக் கிறதா? என்பதை நாம் பார்க்க வேண்டும்.

    பொதுவாக, சுகப்பிரசவம் வேண்டும் என்றால், ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அன்றைய காலத்தில் ஆரோக்கியம் இருந்தது. ஆனால் மருத்துவம் வளரவில்லை. இன்றைக்கு மருத்துவம் வளர்ந்துவிட்டது. ஆனால் மனிதனின் ஆரோக்கியம் குறைந்துவிட்டது.

    எல்லாவற்றுக்கும் பழைய காலத்தை ஒப்பிடும் நாம், அவர்கள் வாழ்ந்த ஆரோக்கிய வாழ்வை பெற எதையும் செய்வதில்லை. பிறகு சுகப்பிரசவம் மட்டும் வேண்டுமென்றால் எப்படி முடியும்?

    பொதுவாக சுகப்பிரசவம் நடக்க வேண்டுமென்றால் ரத்தத்தில் 12 கிராம் அளவுக்கு ஹீமோகுளோபின் இருக்க வேண்டும். கருவறையில் இருந்து முதலில் குழந்தையின் தலை வெளியே வர வேண்டும். பிரசவமான 15 நிமிடங்களுக்குள் நஞ்சு வெளியே வர வேண்டும். அல்லது, வெளியே எடுக்கப்பட வேண்டும். இல்லாதபட்சத்தில் அதிகபடியான உதிரப்போக்கு காரணமாக தாய் உயிரிழக்க நேரிடும்.

    திருப்பூரில் நடந்த சம்பவத்தில் நஞ்சு வெளியே வராததால் தான் அந்த ஆசிரியை இறந்தார். ஒருவேளை அவருக்கு ஆஸ்பத்திரியில் பிரசவம் நடந்திருந்தால், இன்றைக்கு அவர் தனது குழந்தையை கொஞ்சிக்கொண்டு இருந்திருப்பார்.

    அனைத்திலும் புதுமைக்கு மாறிவிட்டு, பிரசவம் மட்டும் வீட்டில் சுகமாக நடக்க வேண்டும் என்பது சாத்தியமற்றது. நம் மனமும், உடலும் மாறிவிட்டன. இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் மட்டுமே இயற்கை நமக்கு அருள்புரியும்.

    சிசேரியன் பிரசவங்கள் குறைய வேண்டும். சுகப்பிரசவம் நடக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு; அதுதான் விருப்பமும் கூட. ஆனால் அதற்கு தேவையான நடவடிக்கையில் ஈடுபட வேண்டியது கணவனும், மனைவியும் தான்.

    இதற்கு, கருத்தரிப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்பே சரியான திட்டமிடல் அவசியம். ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடுவது மற்றும் உடற்பயிற்சி செய்வது தொடர்பாக மருத்துவர்களின் ஆலோசனையை கேட்டு கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால், குனிந்து, நிமிர்ந்து வேலை பார்க்க வேண்டிய அவசியமில்லாத இக்காலகட்டத்தில், உடற் பயிற்சி அவசியமாகிறது. அதே போல, கர்ப்ப காலங்களில் மருத்துவர்களிடம் முறையாக ஆலோசனை பெற்று பின்பற்ற வேண்டும். பிரசவத்துக்கு 10 நாட்களுக்கு முன்பே, சுகப்பிரசவம் ஏற்படுமா? அல்லது சிக்கலான பிரசவமாக இருக்குமா? என்பது தெரிந்துவிடும். இதை மருத்துவரிடம் கேட்டறிந்து, அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை குடும்பத்தினரோடு சேர்ந்து மேற்கொள்ள வேண்டும். இதையெல்லாம் செய்தால் சுகப்பிரசவம் நிச்சயம் சாத்தியமே.

    மகப்பேறு மருத்துவர் சாய் பிரசன்னா குமார்
    நிஜத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக பாடம் நடத்துவது உளவியல் முறைப்படி தவறாகும். மாணவர்களின் திறனை உளவியல் தேர்வுகள் மூலம் அறிந்து அதற்கேற்ப பயிற்சி வழங்க வேண்டும்.
    மாணவர்கள் நாட்டின் எதிர்காலத் தூண்கள். அவர்களை நல்வழிப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு அதிகப்படியான பயிற்சிகளை வழங்குவதை ஏராளமான பள்ளிகள் வாடிக்கையாக வைத்துள்ளன. குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்துடன் பெற்றோரும் இதை பொறுத்துக் கொள்வது உண்டு. ஆனால் குழந்தைகளின் மனம் இதை பொறுத்துக் கொள்ளுமா? என்பதே இங்கு யோசிக்கப்பட வேண்டும்.

    மாணவர்கள் வெறும் மதிப்பெண்களை வாங்கி பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் எந்திரங்களல்ல. மாணவர் நலன் கருதிய ஆராய்ச்சிகளெல்லாம், ஒவ்வொரு மாணவரின் மனநிலைக்கு ஏற்ப பயிற்சி அளிக்க வேண்டும் என்றே சொல்கிறது. ஆனால் மாணவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளும் நிலையில் பெற்றோரும், பள்ளி நிர்வாகங்களும் இருக்கிறார்களா? என்பது கேள்விக்குறிதான்.

    நிஜத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக பாடம் நடத்துவது உளவியல் முறைப்படி தவறாகும். மாணவர்களின் திறனை உளவியல் தேர்வுகள் மூலம் அறிந்து அதற்கேற்ப பயிற்சி வழங்க வேண்டும். பின்தங்கிய மாணவர்களை மனதைக் காயப்படுத்தாமல் அவர்களின் திறன் வளர்ச்சிக்கான பயிற்சிகளை வழங்க வேண்டும். மேலும் அவர்கள் எத்தகைய திறனில் சிறந்து விளங்குகிறார்களோ, அது சார்ந்த பாடங்களையும், பயிற்சிகளையும் வழங்கி அவர்களையும் மேம்பட்டவர்களாக உயர்த்த வேண்டும்.

    மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்ய பள்ளிகள் செய்ய வேண்டிய சில உளவியல் பயிற்சிகளை இங்கு பார்ப்போம்...

    பலம் பலவீனம் அறிதல்

    பாடங்கள் படிக்கும் திறனை வைத்து மாணவரின் பலம் பலவீனத்தை அளவிடுவதையே பெரும்பாலான பள்ளிகள் வாடிக்கையாக வைத்திருக்கின்றன. நிஜத்தில் அது புத்திசாலித்தனத்தை அறியும் பயிற்சியாக கூட இருப்பதில்லை என்பதே உண்மை. உளவியல் ரீதியாக ஒருவரின் பலம் பலவீனத்தை அறிய வேண்டுமானால் முதல் இரண்டு வாரங்களுக்காவது பாடங்கள் நடத்தாமல் மாணவர்களோடு பழக வேண்டும் அல்லது பாடங்களை விளையாட்டு கலந்த பயிற்சியோடு வழங்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் உடல் ரீதியான பலமும், மனம் ரீதியான பலம்-பலவீனங்களும் தெரியவரும். அதுதான், ஒரு மாணவர் கணிதத் திறனில் சிறந்து விளங்குகிறாரா, அறிவியலில் நாட்டம் கொண்டிருக்கிறாரா?, சமூக பண்பாட்டை கடைப்பிடிக்கிறாரா? என்பதை தெரிந்து கொள்ள உதவும்.

    எழுத்து வடிவில் நடத்தப்படும் உளவியல் தேர்வுகளைவிட, செயல்பாட்டின் அடிப்படையில் நடத்தப்படும் உளவியல் தேர்வுகள் மாணவர்களின் திறனை நன்கு மதிப்பிட உதவும். இந்த மதிப்பீடு மாணவர்களை வகைப்படுத்தவோ, புறக்கணிக்கவோ பயன் படக்கூடாது. அவர்களின் திறனை வளர்ப்பதற்காக, ஊக்குவிப்பதற்காக பயன்பட வேண்டும்.

    னிநபர் பாடங்கள்

    ஏற்கனவே சொன்னதுபோல, பாடத்திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் பொருத்தமானதல்ல. நாம் உருவத்தில்தான் ஒற்றுமை கொண்ட மனிதர்கள். அதிலும்கூட பல வேற்றுமைகள் இருக்கலாம். உள்ளத்தால் ஒவ்வொருவரும் வேறு வேறானவர்கள். கருத்தொற்றுமை கொண்டவர்கள் இருந்தாலும், அவர்கள் அனைவருமே ஒரே மனப்போக்கு கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள். பாடங்கள் எப்படி பல உட்பிரிவுகளாக பிரிந்து கொண்டே செல்கிறதோ, அதுபோலவே மாணவர்களும் விருப்பத்தாலும், திறன்களாலும் வேறுபட்டவர்களே. அவர்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டங்கள் ஆகாது.



    அடிப்படைப் பாடத்திட்டங்கள் அனைவருக்கும் பொதுவானவை என்றாலும், கணக்கு வராததற்காக ஒரு மாணவனை கடிந்துகொண்டே இருப்பது தேவையற்றது. கணிதம் தெரிந்தவர்கள் கணிதத்தை ஆண்டால், அறிவியல் தெரிந்தவர்கள் அறிவியலை ஆளலாம். அனைத்தையும் அறிந்து கொண்டு அகிலத்தையே ஆட்டிப்படைக்க ஒருவராலும் முடியாது.

    எனவே மாணவர் விருப்பத்தின் அடிப்படையில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் மாணவரின் திறனுக்கேற்ப பாடச்சுமையை கூட்டி, குறைத்து கொடுக்க வேண்டும். விருப்பப்பாடத்தில் திறமைகளை வளர்க்கவும், மற்ற பாடங்களில் அடிப்படையை அறியவும் வித்திட்டாலே அவர் சிறந்த நிலையை எட்டிவிடுவார்.

    வகுப்பறை மட்டுமே போதனைக்கூடமல்ல...

    தொடர்ந்து வகுப்பறையிலேயே பாடங்கள் நடத்தப்படுவதும், உளவியல் முறையில் தவறானதாகும். எல்லாவற்றையும் எழுத்துகளிலேயே கற்றுக் கொடுத்துவிட முடியாது. போதனையால் மட்டும் புத்திசாலித்தனத்தை வளர்க்க முடியாது. வகுப்பறை மட்டுமே போதுமென்றால் பள்ளிகளில் மைதானங்கள் தேவையிருக்காது. ஒரு மனமாற்றத்துக்காக, புத்துணர்ச்சிக்காக விளையாட்டு வகுப்புகளை வைத்திருக்கும் பள்ளிகள், வகுப்பறையைத் தாண்டிய கற்பித்தலுக்கு வந்தால் மாணவர்களின் திறன் பலமடங்கு உயரும் என்கிறது உளவியல் முறை. வாரத்திற்கு ஒன்றிரண்டு விளையாட்டு நேரம், வருடத்திற்கு ஒரு சுற்றுலா என்பதைக் கடந்து, “பயிற்சி வழி படிப்பு, உலா வந்து உவகையுடன் கல்வி” என்பதே மாணவர் திறனை வளர்க்க உளவியல் சொல்லும் தீர்வு.

    முன்னேற்றங்களை அளவிடல்

    மதிப்பெண் உயர்வதை வைத்தே பெற்றோரும், ஆசிரியரும் மாணவரின் திறனை, முன்னேற்றத்தை அளவிடுகிறார்கள். ஒரு மாணவனை மீண்டும் தேர்வெழுத வைத்தால் அதே மதிப்பெண் பெறுவார் என்பது சாத்தியமில்லை. ஆனால் திறன் அடிப்படையில் முன்னேற்றத்தை வளர்ப்பது, பயந்த மனிதனுக்கு பயத்தை போக்கியது போன்ற வீரத்தை வளர்ப்பதாகும். அது அவனுக்கு தோல்வி என்ற நினைப்பே வராமல் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். எந்தச் சூழலிலும் வெற்றியை நோக்கி நடைபோடும் தைரியத்தை வளர்க்கும். அத்தகைய அபார ஊக்கம், மாணவர்களை அவரவர் உளவியல் அடிப்படையில் உற்சாகப்படுத்தும்போதே நிகழ்கிறது. மாற்றுவழியில் மாணவர் திறனை மாற்றியமைப்பதே முன்னேற்றப்படியாகும்.

    பள்ளிகளும், பெற்றோரும் மாணவர்களை மதிப்பெண்களுக்காக தயார்படுத்தாமல், இப்படி உளவியல் ரீதியில் தயார் படுத்தினால், ஒவ்வொருவரும் முதன்மை மாணவர்களாக உயர்ந்து இந்த சமூகத்தையே உயர்த்துவார்கள் என்பதில் ஐயமில்லை! 
    உடலின் உள்ளோ, வெளியோ ஏற்படும் வீக்கங்களை அதிகம் கவனம் செலுத்தாது இருப்பதன் காரணமே உடல் தன்னால் ஆன பாதுகாப்பு போராட்டத்தில் செயலிழக்கின்றது.
    இன்றைய பல ஆய்வுகள் வருமுன் காப்போனாக பல நோய் தவிர்ப்பு முறைகளைப் பற்றி தீவிர ஆய்வுகள் செய்து வருகின்றது. அதில் நம் முன்னோர்கள் கடை பிடித்த சில வழி முறைகளையும், நோய் பாதிப்பு காலத்தில் அவர்கள் கடை பிடித்த மருத்துவ முறைகளையும் விஞ்ஞான ரீதியான ஆய்வுகளையும் ஆராய்ந்து வருகின்றது.

    உடலின் உள்ளோ, வெளியோ ஏற்படும் வீக்கங்களை அதிகம் கவனம் செலுத்தாது இருப்பதன் காரணமே உடல் தன்னால் ஆன பாதுகாப்பு போராட்டத்தில் செயலிழக்கின்றது. அதன் காரணமாகவே மறதி நோய், இருதய பாதிப்பு, சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    கீழ்கண்ட அறிகுறிகள் இருக்கின்றதா?

    * சதா உடல் வலி
    * சோர்வு
    * அலர்ஜி
    * கிருமி, பூஜ்ஞை, வைரஸ் பாதிப்புகள்
    * ஆர்த்ரைட்டிஸ் பிரச்சினை
    * அடிக்கடி நெஞ்சு எரிச்சல்
    * புற்று நோய்
    * உயர் ரத்த அழுத்தம்
    * எலும்பு தேய்மானம்
    * இருதய பாதிப்பு
    * சிறுநீரக பை கிருமி தாக்குதல்
    * சரும பாதிப்புகள், பரு உட்பட

    இத்தகு பாதிப்புகள் இருந்தால் குறிப்பிட்ட ஒரு பொருளை உபயோகிக்கச் சொல்கின்றனர். இதனை சீனர்கள் வெகு காலமாக பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர். பெயரைக் கேட்டால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். வீக்கத்தினை குறைத்து ஆரோக்கியத்தினை கூட்டும் என ஆய்வுகள் கூறும் அந்த பொருளின் பெயர் ‘மஞ்சள்’. இதிலுள்ள ‘குர்குயின்’ எனும் பொருள்தான் மிகப்பெரிய நன்மையினை மனித சமுதாயத்திற்குச் செய்வதாகக் கூறுகின்றனர்.

    அன்றாடம் சமையலில் மஞ்சளை சேர்ப்பதும், மஞ்சள் பூசி குளிப்பதும் நெடுங்காலமாக நம் நாட்டில் பழக்கத்தில் இருந்து வரும் ஒன்று. மஞ்சளும், குங்குமமும் (மஞ்சள் கொண்டு தயாரிப்பது) மிக மங்களகரம் என்றே வழக்கத்தில் உள்ளது. மஞ்சளின் முக்கியத்துவத்தினை நாமே முதலில் உணர்த்தியவர்கள் என்றாலும் இன்று அது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது நமக்கு பெருமையே. ஆனால் அது மட்டும் போதாது. முறையாக அதனை பயன்படுத்த வேண்டும்.

    நாகரீகம் என்ற பெயரில் அனைத்து நன்மை தரும் நமது உணவு முறைகளை மாற்றியதன் விளைவே இன்று அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன.

    ஆக நம் பாரம்பரிய உணவு முறைக்கு மாறுங்கள். உணவில் மஞ்சள், ஜீரகம், மிளகு, இஞ்சி, எலுமிச்சை பழம் இவற்றினை அன்றாடம் உபயோகியுங்கள். பொதுவில்

    * அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகள்
    * அதிக எடை
    * அதிக மனஉளைச்சல்
    * சுற்று சூழல் நஞ்சு
    * உணவு அலர்ஜி
    * தேவையான அளவு தூக்கமின்மை.

    இவைகளே வீக்கங்களுக்கு காரணமாகின்றன எனவும் ஆய்வுகள் கூறுகின்றன. இவற்றினை சரி செய்ய ஆரம்பித்தால் நோயின்றி ஆரோக்கியமாய் வாழ முடியும்.
    ஆரோக்கியமான உணவுக்கும், ஆஸ்துமாவுக்கும் தொடர்பு இருக்கிறது. தொடர்ந்து ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ஆஸ்துமா தொந்தரவு 30 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது.

    உலகளவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் தாக்கும் நோய்கள் பட்டியலில் ஆஸ்துமாவும் இணைந்திருக்கிறது. சத்தான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் ஆஸ்துமாவை தடுக்க முடியும். பழங்கள், காய்கறிகள், முழு தானிய வகைகளை சாப்பிடுவதன் மூலம் சுவாச கோளாறு, நெஞ்சுவலி போன்ற பிரச்சினைகளில் இருந்து ஓரளவு நிவாரணம் பெறலாம். ஆரோக்கியமான உணவுக்கும், ஆஸ்துமாவுக்கும் தொடர்பு இருக்கிறது. தொடர்ந்து ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ஆஸ்துமா தொந்தரவு 30 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது.

    ஆஸ்துமா பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் உப்பு, சர்க்கரை போன்றவற்றை குறைத்துக்கொள்வது நல்லது. ஒமேகா 3 அமிலம் நிறைந்த மீன்வகைகள், பெர்ரி பழங்கள், பால், கேரட், அவகெடோ போன்றவற்றை சாப்பிடலாம். துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், உலர் பழவகைகள், சூப்புகள், உருளைக்கிழங்கு சேர்த்த உணவுகள், பாலாடைக்கட்டி, காளான், சோயா சாஸ் போன்றவைகளை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். இவை ஆஸ்துமாவின் வீரியத்தை அதிகப்படுத்திவிடும்.
    குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று ஸ்வீட் கார்ன், சீஸ் சேர்த்து நக்கட்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ஸ்வீட் கார்ன் முத்துக்கள் - 1 கப்
    மக்காச்சோள மாவு - 4 தேக்கரண்டி
    உருளைக்கிழங்கு - 1
    பிரெட் தூள் - கால் கப்
    சீஸ் துருவல் - கால் கப்
    மைதா மாவு - கால் கப்
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    ஸ்வீட் கார்னை வேகவைத்து ஆறியதும் மிக்சியில் போட்டு போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுது, மசித்த உருளைக்கிழங்கு, சீஸ் துருவல், மிளகாய்த்தூள், சோள மாவு, உப்பு, சேர்த்து நன்றாக பிசையவும்.

    பிறகு மாவை விரும்பிய வடிவில் உருட்டி வைக்கவும்.

    அகலமான தட்டில் மைதா மாவுடன், பிரெட் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

    உருட்டிய நக்கட்ஸ்களை மைதா கலவையில் புரட்டி எடுத்து வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.

    வாணலியில் எண்ணெயை காய விட்டு உருட்டி வைத்த நக்கட்ஸ்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான ஸ்வீட் கார்ன் சீஸ் நக்கட்ஸ் ரெடி. சாஸ் உடன் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    `நேத்து வச்ச மீன் குழம்பு இன்னும் சுவை…’ என்று கேட்க நன்றாக இருக்கலாம். ஆனால் எந்த உணவையும் சமைத்த உடனேயே சாப்பிடுவதுதான் நல்லது.
    `நேத்து வச்ச மீன் குழம்பு இன்னும் சுவை…’ என்று கேட்க நன்றாக இருக்கலாம். ஆனால் எந்த உணவையும் சமைத்த உடனேயே சாப்பிடுவதுதான் நல்லது.

    எந்த வகை உணவாக இருந்தாலும் அதிலிருக்கும் மினரல்ஸ் மற்றும் வைட்டமின் சத்துக்கள் சமைத்த உடன் வெளிவரும் என்பதால், சமைத்த சூடு அடங்குவதற்குள் சாப்பிட்டால் சத்துக்கள் அனைத்தும் உடலில் சேரும். உணவு ஆறிய பின்னர் சாப்பிடுவதால் அது வெறும் சக்கைதான். அதை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடுவது அதைவிட வேஸ்ட்! சுவையும் இருக்காது.

    பிரியாணி, மீன், கோழி, மட்டன் குழம்பு மற்றும் பிற அசைவ உணவுகளை நாள்விட்டு சாப்பிட்டால் சில நேரங்களில் `புட் பாய்ஷன்’ ஆகவும் மாறலாம். இதனால் உடலில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். குறிப்பாக அலர்ஜி மற்றும் தோல் நிறம் மாறும். அதேபோல், காய்கறிகளை நறுக்கி பிரிஜ்ஜில் வைத்து அப்புறம் சமைப்பது, குழம்பை பிரிஜ்ஜில் வைத்து, அடுத்த நாள் சூடாக்கி சாப்பிடுவது என்பதெல்லாம் நோய்களை நாமே தேடிக்கொள்வதற்கு சமம்!
    கருவில் ஜனித்த பெண் சிசுவை அழிப்பதில் தொடங்கி மரணம் வரை பெண்களைப் பின் தொடரும் வன்முறை, வக்கிரங்களின் வகைகளைப் பட்டியலிட்டால் தீராது.
    கருவில் ஜனித்த பெண் சிசுவை அழிப்பதில் தொடங்கி மரணம் வரை பெண்களைப் பின் தொடரும் வன்முறை, வக்கிரங்களின் வகைகளைப் பட்டியலிட்டால் தீராது. அதில் சமீபகாலமாக இணைந்திருக்கிறது ஸ்பை கேம் போர்ன். ஒரு பெண்ணை அவரது சம்மதம் இல்லாமலோ சம்மதத்தோடோ நிர்வாணமாகப் படம் பிடித்துவிட்டு, பிறகு அவரது சம்மதம் இல்லாமலேயே அதை வெளியில் பரப்புவதன் பெயர்தான் ஸ்பை கேம் போர்ன்.

    இதை, பழிவாங்கும் போர்ன், அதாவது Revenge Porn என்றும் அழைக்கிறார்கள். இப்படியான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் அந்தப் பெண்ணுக்கு நன்கு தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என இருவகையாக உள்ளனர். துணிக் கடைகளில், தியேட்டர், பூங்கா, பொது நீச்சல் குளம் போன்றவற்றின் கழிப்பறைகளில் கேமராவை ரகசியமாக ஒளித்து வைத்து படம் பிடித்து அதைப் பரப்பும் சைக்கோக்கள் ஒருவகை. தன் காதலியாகவோ மனைவியாகவோ இருந்தபோது எடுத்த அந்தரங்கமான வீடியோக்கள், படங்களை பின்னர் அப்பெண்ணின் சம்மதம் இல்லாமலேயே பரப்புபவர்கள் இரண்டாவது வகை.



    இந்தியாவைப் பொறுத்தவரை இரண்டாவது வகையான வீடியோக்கள்தான் அதிகமாகப் பரப்பப்படுகின்றன என்பதுதான் குரூரமான உண்மை. அந்தரங்கம் புனிதமானது என்பார்கள். தன்னை நம்பி வரும் ஒரு பெண்ணை அவளது விருப்பத்துடனோ விருப்பமின்றியோ வீடியோ எடுப்பதே தவறான விஷயம்தான். அதைப் பிற்பாடு வெளியில் பரப்புவது என்பது சைக்கோதனத்தின் உச்சம். இந்தியாவில் இப்படியான குற்றங்களுக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் உள்ளன.

    ரிவென்ஜ் போர்ன் தொடர்பான புகார்கள் தர பாதிக்கப்பட்ட பெண்தான் செல்ல வேண்டும் என்றில்லை. அவர் சார்பாக வேறு யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். அவசியம் எனில் வழக்கை ஒரு பெண் போலீஸ் அதிகாரி விசாரிக்கவும் கோரிக்கை வைக்கலாம். இவை எல்லாம் சட்டத்தில் உள்ளன. ஆனால், நடைமுறையில் இப்படியான குற்றங்களுக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை உள்ளதா எனப் பார்த்தால் கிட்டத்தட்ட ஜீரோதான் பதில்.


    இணையதளத்தின் வருகைக்குப் பின் ஆறாகப் பெருகும் பாலியல் வீடியோக்களின் வெள்ளத்தில் பாதிக்கு மேல் இப்படியான கேண்டிட் போர்ன்கள்தான். இவற்றுக்கு எதிராக மிகக் குறைந்த பெண்களே வழக்குத் தொடுக்கிறார்கள். பெண்கள் இதை தங்களுக்கு ஏற்பட்ட மானக்கேடு எனக் கருதாமல், தனக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று கருதும் நிலை இங்கு வரவேண்டும். அப்படி துணிச்சலாகப் புகார் தரும் பெண்களுக்கு இயல்பான எதிர்காலம் உத்தரவாதமாக்கப்பட வேண்டும். இந்த சமூக முதிர்ச்சி ஏற்படாத வரை எத்தனை சட்டங்கள் இருந்தாலும் இந்த அநீதி தீராது என்பதே கசப்பான உண்மை. 
    காலையில் டிபனாகவும், மாலையில் ஸ்நாக்ஸாகவும் சாப்பிட சத்தான உணவு இந்த அரிசி கடலைப்பருப்பு உருண்டை. இன்று இந்த உருண்டை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - ஒரு கப்,
    துருவிய இஞ்சி, மாங்காய் - சிறிதளவு,
    ஊற வைத்த கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    பச்சை மிளகாய், கொத்தமல்லி விழுது - சிறிதளவு,
    நெய் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    பச்சரிசியை வெறும் கடாயில் போட்டு வறுத்து ரவை போல் உடைத்து கொள்ளவும்.

    இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவிட்டு, ஒரு டீஸ்பூன் நெய், ஊற வைத்த கடலைப்பருப்பு, உப்பு, துருவிய இஞ்சி, மாங்காய், பச்சை மிளகாய் - கொத்தமல்லி விழுது, பச்சரிசி ரவை சேர்த்துக் கைவிடாமல் கிளறி தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.

    பின்னர் இந்த மாவை உருண்டைகளாகப் பிடித்து, 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

    இதை சட்னி அல்லது சாஸுடன் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் வெளியே செல்லும்போது பிறர் தம்மிடம் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பாகுபடுத்தப் பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டும்.
    நாள்தோறும் வெளியாகும் குற்றச்செய்திகள் நம்மைக் கூசச்செய்கின்றன. அவற்றுள் பெரிதும் நம் உள்ளத்தைப் பதறச் செய்பவை சிறு பிள்ளைகள் மீதான பாலியல் வன்முறையும், பள்ளிப் பிள்ளைகள் தற்கொலையுமே. இரண்டு துயர நிகழ்ச்சிகளும் உடனடிக் கவனம் செலுத்திக் களையப்பட வேண்டுமல்லவா?

    ஆண், பெண் வேறுபாடு பற்றிய தெளிவுகூட இல்லாத சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பவர்களுள் அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மிகுதி எனும் செய்தி ஆணினத்துக்கே ஒரு மாபெருங் களங்கமாகும். குற்றம் செய்தவர்களைச் சட்டம் தண்டிக்கும். ஆனால் குற்றத்துக்குக் காரணமாக விளங்கும் சூழல்களைத் தெரிந்துகொண்டு அவற்றை நீக்குவது பெற்றோர்களின் பொறுப்பாகும்.

    பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கவனத்துடன் பார்த்துக்கொண்டால் இந்தக் கொடுமை நிகழாமல் செய்துவிடலாமே. அதற்காகப் பிள்ளைகளை வீட்டுக்குளேயே பூட்டிவைக்க வேண்டும் என்று பொருளல்ல. அவர்களுக்குத் தெளிவும் புரிந்துணர்வும் ஏற்படுத்த வேண்டியது பெற்றோர் கடமையல்லவா?

    வெளியே செல்லும்போது பிறர் தம்மிடம் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பாகுபடுத்தப் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். குறிப்பாகப் பெண் குழந்தைகளை வெறித்துப் பார்த்தல், முறைத்துப்பார்த்தல், உடலைத் தடவுதல், பிறர் அறியாமல் தீண்டுதல், கேலி செய்வதைப் போல சீண்டுதல் ஆகியவை தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள் என்பதைக் குழந்தைகளுக்குப் புரியவைக்க வேண்டும்.

    சிறுவர்களாக இருந்தாலும், சிறுமிகளாக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயங்களை உணர்த்த வேண்டும். இவற்றைப் பெற்றோர்களே செய்ய முடியும்; செய்யவேண்டும். அப்படி விரும்பத்தகாத செயல்கள் நடந்தால் உடனே தங்களுக்குத் தெரியப்படுத்துமாறு குழந்தைகளை அன்புடனும், பரிவுடனும் கேட்டுக்கொள்ள வேண்டும்.

    வீட்டில் தொலைக்காட்சி பார்ப்பதற்கு நேரத்தைச் செலவழிக்கும் பெற்றோர்கள் மிகுதி. அந்த நேரத்தைக் குறைத்துக்கொண்டு பிள்ளைகளோடு மனம்விட்டுப் பழகுவதற்கும் பேசுவதற்கும் நேரம் ஒதுக்கக்கூடாதா? அவ்வாறு பழகாததால் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும், இடைவெளி ஏற்பட்டுவிடுகிறது.

    பல நேரங்களில் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் வரும் கதைமாந்தர்களிடம் பிள்ளைகளுக்கு ஏற்படும் ஈடுபாடு கூடப் பெற்றோர்களிடம் ஏற்படாமல் போய்விடுகிறதே...! ஏன்?

    வீட்டுக்கு வெளியே தங்களுக்கு ஏற்படும் தொல்லைகளைப் பெற்றோரிடம் எடுத்துக் கூறும் தைரியம் குழந்தைகளுக்கு இல்லை. பெற்றோர்களின் நெருக்கமும் அன்பும் பரிவுமே பிள்ளைகளுக்கு இந்தத் துணிவை ஏற்படுத்தும். இந்தத் துணிவைப் பெற்றோர் உருவாக்காததால் பிள்ளைகள் சின்னச்சின்னச் சிக்கல்களுக்குக்கூடப் பயந்து உடனடியாகத் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

    “பாதகம் செய்வாரைக் கண்டால்
    பயங் கொள்ளலாகாதுபாப்பா
    மோதி மித்துவிடு பாப்பா-அவர்
    முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா” எனச் சிறுவர், சிறுமிகளுக்குத் துணிவு ஏற்படுத்தப் பாரதியார் வழிகாட்டுவது இன்றைய சூழலுக்கு மிகப் பொருத்தமாக விளங்குகிறது.



    தாயும் தந்தையும் வேலைக்குப் போகும் குடும்பங்களில் போதிய நேரமின்மையால் பிள்ளைகளின் மேல் அதிகக் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது. முக்கியமாக, இத்தகைய குடும்பங்களில் வார விடுமுறை நாட்களில் பெற்றோர் பிற பணிகளில் கவனத்தைச் சிதறவிடாமல் பிள்ளைகளுக்காகவே தங்கள் நேரத்தைச் செலவிட வேண்டும்.

    பிள்ளைகளுக்கு உண்மையாகவே ஊட்டமளிப்பது பெற்றோரின் அரவணைப்பும் அன்பும் பரிவுமேயாகும். இவற்றைப் புரிந்துகொள்ளாமல் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுப்பது மட்டுமே பெற்றோரின் பணி என்று பலர் கருதிவிடுகிறார்கள்.

    முதலில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தாங்களே நல்ல முன்மாதிரியாக விளங்க வேண்டும். அம்மாவும் அப்பாவும் ஓயாமல் சண்டை போட்டுக்கொள்ளும் வீடுகளில் பிள்ளைகளுக்கு ஏற்படும் மன உளைச்சல், அவர்கள் அறியாமலேயே அவர்களை மனநோயாளிகள் ஆக்கிவிடுகின்றது.

    “நீ அம்மா கட்சியா, அப்பா கட்சியா?” என்று வீட்டிலேயே அரசியல் மோதல் உருவாகுவது வீட்டுக்கும் நல்லதல்ல, நாட்டுக்கும் நல்லதல்ல. பிள்ளைகளின் வருங்காலம் கருதியும் நாட்டின் எதிர்காலம் கருதியும் பிள்ளைகளை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்க்கு உரியது.

    “ஏடு தூக்கிப் பள்ளியில்
    இன்று பயிலும் சிறுவரே
    நாடு காக்கும் தலைவராய்
    நாளை விளங்கப் போகிறார்” என்னும் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பாடல் பெற்றோர்களுக்கான அறிவுரையாகவும் விளங்குகிறது.

    “இன்று குழந்தைகளுக்கு நல்ல வழியைக் காட்டி வளர்த்தால் நாளைக்கு அவர்கள் நாட்டுக்கே வழிகாட்டியாகத் திகழ்வார்கள்” என்னும் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் கருத்து இங்குக் குறிப்பிடத்தக்கது.

    மராட்டியச் சிங்கம் சிவாஜி குழந்தையாக இருந்தபோது அவரது தாய் ஜீஜாபாய் கூறிய வீரசாகசக் கதைகளே சிவாஜியைத் தலைசிறந்த வீரனாக உருவாக்கின. தேசத் தந்தை காந்தி சிறுவயதில் தாயாரிடம் கேட்ட அறிவுரைதான் அவரை மகாத்மா எனும் மாண்புநிலைக்கு உயர்த்தியது. ‘நவ இந்தியாவின் சிற்பி’ நேரு ஒரு சிறந்த தலைவராக உருவாக அவரது தந்தை மோதிலால் நேருவே காரணம்.

    இவ்வாறு தலைவர்கள், அறிஞர்கள் பலரின் உருவாக்கத்திற்குப் பெற்றோரின் பங்களிப்பு முதன்மையான காரணமாக விளங்கியதனை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.

    ‘தாயும் தந்தையுமே குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள். அதற்காகப் பிரம்பைக் கையில் தூக்கவேண்டும் என்று எண்ணவேண்டாம். கண்டிப்பாகச் சொல்வதை விடக் கனிவாகச் சொல்வது மனத்தில் பதியும். அவர்களிடம் நண்பர்களாகப் பழகுங்கள். தங்கள் சொந்த புத்தியைக் கொண்டு சிந்திக்கப் பழக்குங்கள். சீர்தூக்கி ஆராயத் தெரிந்துகொண்டால் குழந்தைகள் கல்வியில் மட்டுமல்ல வாழ்விலும் வெற்றி அடைவார்கள்’ என்னும் தந்தை பெரியாரின் அறிவுரையைப் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

    மறைமலை இலக்குவனார்
    பெண்களின் மெல்லிய இடுப்பிற்கு ஆதாரமாக அணியக்கூடிய நகைதான் ஒட்டியாணம். தங்க ஒட்டியாணங்கள் அனைத்து வயது பெண்களுக்கு ஏற்றவாறு எடை, நீள அகலம் கொண்டவாறு உருவாக்கப்படுகிறது.
    பாரம்பரிய நகை வகைகள் ஒவ்வொன்றும் பெண்களின் ஒவ்வொரு அங்கத்திற்கும் தனிப்பட்ட வகையிலும் உடல் நலனை பாதுகாக்கும் தன்மை கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், பெண்களின் மெல்லிய இடுப்பிற்கு ஆதாரமாக அணியக்கூடிய நகைதான் ஒட்டியாணம். இடுப்போடு ஒட்டி கொண்டிருக்கும் வகையில் அணியும் ஆடையின் மேல் அணிகின்ற நகைதான் ஒட்டியாணம்.

    முந்தைய நாள்களில் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், திருமணமான பெண்டீர் என அனைத்து வயது பெண்களும் ஒட்டியாணம் அணிந்து வந்துள்ளனர். நாளடைவில் ஒட்டியாணம் என்பது அதிக பயன்பாட்டில் இல்லாமல் இருந்தன. சிலர் குடும்ப நகையாக ஒட்டியாணத்தை பாதுகாத்து தொடர்ந்து அணிந்து வந்தனர். அதன்பின் தங்க ஒட்டியாணங்கள் என்பது மாறுபட்டு வெள்ளியில் செய்து தங்க முலாம், கவரிங் என்றவாறும், பிற மணிகள், முத்துகளால் செய்யப்பட்ட இமிடேட் ஒட்டியாணங்களாக கிடைக்கின்றன. ஒட்டியாணங்கள் தற்போது மீண்டும் விரும்பி அணிகின்ற நகைாயய் இருக்கின்றன. இதனால் நகை விற்பனையாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் அதிநவீன வடிவமைப்பு மற்றும் கூடுதல் கலைதன்மை கொண்டவாறு ஒட்டியான்களை உருவாக்கின்றனர்.

    ஒட்டியாணங்கள் என்பது தற்போது மிக எடை குறைந்த அளவிலும், அதே நேரம் பெரிய பாந்தமான தோற்ற அமைப்பிலும் உருவாக்கப்படுகின்றன. தங்க ஒட்டியாணங்கள் அனைத்து வயது பெண்களுக்கு ஏற்றவாறு எடை, நீள அகலம் கொண்டவாறு உருவாக்கப்படுகிறது.

    அஷ்டலட்சுமி ஒட்டியாணங்கள்

    அஷ்டலட்சுமி ஒட்டியாணங்கள் என்பவை ஒவ்வொரு லட்சுமி உருவங்கள் இணைந்தவாறு உள்ளன. அதாவது ஆறு இதழ் பூ அமைப்புடன் கூடிய தட்டு பகுதியின் நடுவில் மகாலட்சுமியும் இதன் வலது புறம், இடது புறமாக மற்ற லட்சுமிகளும் வரிசை கிரமமாக ஒரே அளவில் இணைக்கப்படும். இதன் பிறகு தகடு அமைப்பும் இணைத்து கட்டும் கயிறு பகுதியும் உள்ளன. லட்சுமியின் அழகை மேம்படுத்த சிகப்பு, பச்சை கற்கள் ஆங்காங்கே பதியப்பட்டும், கீழ் சிறு மணிகள் தொங்க விடப்பட்டும் உள்ளன. அப்படியே தத்ரூபமான மகாலட்சுமியும், அதனுடன் இணைந்த அஷ்டலட்சுமியும் சிற்ப வேலைப்பாட்டுடன் செதுக்கப்பட்டுள்ளன.



    மகாலட்சுமியும் அன்னபட்சியும் இணைந்த ஒட்டியாணங்கள்

    ஒட்டியாணத்தின் நடுப்புறம் பெரிய மகாலட்சுமி இரு பக்கமும் யானையுடன் காட்சி தருகிறார். அதன் இருபுறமும் அன்னபட்சிகள் அழகுடன் சிற்பங்களாய் அணிவகுக்கின்றன. டெம்பிள் ஜுவல்லரி அமைப்பில் கலைநய செதுக்கல்கள் மட்டுமின்றி தகடு அமைப்பின் மேற்புறம் மகாலட்சுமி உருவம் மற்றும் அன்னபட்சி இணைக்கப்பட்ட ஒட்டியாணம் கிடைக்கின்றன. இதில் மகாலட்சுமி மற்றும் தன்னபட்சிகள் அனைத்தும் அழகிய கற்கள் பதித்தவாறும் ஒட்டியாணம் உள்ளன. வெள்ளை, பச்சை, சிகப்பு கற்கள் பதியப்பட்ட லட்சுமி உருவம் அதிக ஜொலிப்புடன் காட்சி தருகின்றன.

    விதவிதமான பேன்சி ஒட்டியாணங்கள்

    பழைய ஒட்டியாண அமைப்பில் இருந்து மாறுபட்டு செயின் அமைப்பிலான பேன்சி ஒட்டியாணம் இளம் வயது பெண்களை அதிகம் கவர்கின்றன. இந்த ஒட்டியாணம் இடுப்போடு இறுக்கி பிடிக்கும் அமைப்பில் இல்லாது இருப்பினும் வலது புறம் சற்று தளர்வாக தொங்கும் அமைப்பில் உள்ளன. சில நடுப்பகுதியில் கற்கள் பதித்த டிசைன் செய்யப்பட்டு முற்றிலும் செயின் கயிறு அமைப்புடன் உள்ளன. சில பேன்சி ஒட்டியாணங்கள் மெல்லிய பட்டை செயினுடன் நடுப்பகுதி அழகிய எனாமல் பூக்கள் மற்றும் தொங்கும் குஞ்சரங்கள் உள்ளவாறு காட்சி தருகின்றன.

    கற்கள் பதித்த ஒட்டியாணங்கள்

    முற்றிலும் கற்கள் பதித்த ஒட்டியாணங்கள் மெல்லிய அமைப்பில் உருவாக்கப்படுகின்றன. இதில், பூக்கள், மயில், அன்னபட்சி அழகுடன் உள்ளவாறும் அதில் பல வண்ண கற்கள் பதித்து மெருகேற்றப்பட்டுள்ளன. சில அகலமான வலை பின்னல் அமைப்பில் உருவாக்கப்பட்டு அதன் நடுவே பெரிய இரட்டை மயில் கற்கள் பதித்தவாறும் அதன் சுற்று பகுதிகள் கொடிகள், பூக்கள் உள்ளவாறும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு என தனிப்பட்ட சிறிய அளவிலான தங்க ஒட்டியானங்கள் கிடைக்கின்றன. ஒட்டியாணம் பெண்களின் இடுப்பழகை மேம்படுத்தும் நகையாக உள்ளது. 
    கால் வீக்கம் என்பது சாதாரண விஷயமல்ல. கர்ப்ப காலத்தில் கால்கள் வீங்கினால் 75 சதவீதம் உடலில் ஏதாவது ஒரு பிரச்சனை தலை எடுக்கிறது என்றுதான் அர்த்தம்.
    கால் வீக்கம் என்பது சாதாரண விஷயமல்ல. கர்ப்ப காலத்தில் கால்கள் வீங்கினால் 75 சதவீதம் உடலில் ஏதாவது ஒரு பிரச்சனை தலை எடுக்கிறது என்றுதான் அர்த்தம். அதற்கான காரணம் அறிந்து சிகிச்சை பெறவேண்டியது முக்கியம். அப்போதுதான் பிரசவத்தில் சிக்கல் இருக்காது.

    கர்ப்ப கால கால்வீக்கத்துக்குப் பல தரப்பட்ட காரணங்கள் இருப்பதால், ஒவ்வொருவருக்கும் காரணம் வேறுபடும். எனவே, காரணம் தெரிந்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். அதற்கு மார்பு எக்ஸ்ரே, இசிஜி, எக்கோகார்டியோகிராபி, வயிற்று அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் முழுமையான ரத்தப் பரிசோதனைகள் அவசியப்படும்.

    பொதுவாக, கர்ப்பிணிகள் பகலில் சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும். இரவில் நன்றாகத் தூங்க வேண்டும். நின்றுகொண்டே பணி செய்கிறவர்களுக்கும், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கிறவர்களுக்கும் கால்களில் வீக்கம் ஏற்படுவதுண்டு. இவர்கள் நீண்ட நேரம் தொடர்ந்து நின்று கொண்டிருப்பதைத் தவிர்த்து, சிறிது நேரம் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டாலோ, கால்களை நீட்டி உட்கார்ந்து கொண்டாலோ, கால்களை கால் மனையில் வைத்து உயர்த்திக் கொண்டாலோ கால் வீக்கம் குறைந்து விடும்.



    தரையில் அமரும்போது கால்களைக் குறுக்காக மடக்கி உட்கார வேண்டாம். இரவில் உறங்கும்போது, கால்களுக்குத் தலையணை வைத்துக் கொண்டாலும் கால் வீக்கம் குறையும். பகலில் பணிகளுக்கு இடையில் சிறிது நேரம் நடப்பது நல்லது. கர்ப்ப கால உடற்பயிற்சிகளைச் செய்வதும் முக்கியம். முறையான யோகாவும் நீச்சல் பயிற்சியும் மிக நல்ல பயிற்சிகள்.

    கர்ப்பிணிகள் சத்துள்ள சரிவிகித உணவுகளைச் சாப்பிட்டால், சத்துக்குறைவு காரணமாக ஏற்படும் கால் வீக்கத்தைத் தவிர்க்கலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி உப்பைக் குறைத்துக் கொள்வதும் பொட்டாசியம் அதிகமுள்ள வாழைப்பழம் போன்ற பழங்களைச் சாப்பிடுவதும் நல்லது. அதிகம் காபி குடிக்கக்கூடாது. தேவையான அளவுக்குத் தண்ணீர் அருந்துவது முக்கியம்.

    இடுப்பில் இறுக்கமான ஆடைகளை அணிவது கூடாது. இறுக்கமான காலணிகளை அணிவதும் கூடாது. ஹைஹீல்ஸ் செருப்புகளை அணியவே வேண்டாம். மருத்துவர் யோசனைப்படி ‘ஸ்டாக்கிங்ஸ்’ எனப்படும் கால் மீளுறைகளை அணிந்து கொள்ளலாம். பகலில் வெயிலில் அதிகம் அலைவதைத் தவிர்க்க வேண்டும்.
    பல மணி நேரம் உட்கார்ந்து கொண்டே குளிந்து வேலை செய்பவர்களுக்கு இந்த ஆசனம் மிகவும் பயனுள்ளதாகிறது. எவ்வளவு நாள்பட்ட கழுத்து வலி, முதுகு வலியானாலும் இந்த ஆசனப் பயிற்சியின் மூலம் நீக்கிக் கொள்ள முடிகிறது.
    பெயர் விளக்கம்: ‘புஜங்க’ என்றால் பாம்பு என்று பொருள். பாம்பு படம் எடுப்பது போல் இந்த ஆசனம் அமைந்துள்ளதால் புஜங்காசனம் என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை: மேல்கண்ட மகராசனத்தில் குப்புறப்படுத்து கைகளை நீட்டி வைத்தது போல செய்யவும். பிறகு கைகளை மடக்கி உள்ளங்கைகளை மார்புக்கு நேராக தரைவிரிப்பின் மேல் பலமாக ஊன்றி வைக்கவும்.

    மூச்சை உள்ளுக்கு இழுத்து தலையை தரையிலிருந்து மேலே தூக்கி நெஞ்சை உயர்த்தி வயிறு வரை மெல்ல உயர்த்திக் கொண்டு போய் நிறுத்தவும், மூச்சை வெளியே விட்டு தலையையும், முதுகையும் முடிந்த அளவு பின்னோக்கி வளைத்து மார்பை நன்றாக விரிக்கவும். முழங்கைகள் உடலோடு ஒட்டியபடி இருக்கட்டும். தொப்புளுக்கு கீழே அடிவயிற்றிலிருந்து கால்விரல்கள் வரைக்கும் உள்ள உடல் பகுதி தரைவிரிப்பின் மேல் பதிந்தவாறு இருக்கட்டும்.

    கண்களால் புருவ நடுவை பார்க்கவும். இந்த ஆசன நிலையில் சாதாரண மூச்சுடன் 20 முதல் 30 வினாடி இருக்கவும். பிறகு நிதானமாக மூச்சை வெளியே விட்டுக் கொண்டு தலையை கீழே இறக்கி அதிலிருந்து முதல் நிலைக்கு வரவும், இந்த ஆசனத்தை மேற்கண்ட முறைப்படி 24 முறை பயிற்சி செய்யலாம்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம்: அடிவயிறு மற்றும் தண்டுவடத்தின் மீதும், ஆக்ஞா அல்லது சுவாதிஷ்டான சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக் குறிப்பு: புஜங்காசனம் செய்யும் போது ஆரம்பத்தில் சிலருக்கு கழுத்தில் வலியும், கைகளில் நடுக்கமும் உண்டாகலாம். ஆனாலும் தொடர்ந்து செய்து வந்தால் இந்த குறைபாடுகள் நீங்கி விடும். சிலருக்கு முதுகையும் தலையையும் பின்னால் வளைக்கும் போது குதிகால்கள் சேர்ந்திராமல் விலகிப் போகும் அப்படி விலகி இருந்தால் ஆசனம் செய்வது சுலபமாகும். ஆனால் அப்படிச் செய்யாமல் குதிகால்களை சேர்த்து வைத்தே பயிற்சி செய்ய முயற்சிக்க வேண்டும். முழங்கால்களை விறைப்பாக வைத்துக் கொள்ளவும்.

    தடைக்குறிப்பு:
    வயிறு, குடல் புண், குடல் பிதுக்கம், விரைவாதம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.

    பயன்கள்: பல மணி நேரம் உட்கார்ந்து கொண்டே குளிந்து வேலை செய்பவர்களுக்கு இந்த ஆசனம் மிகவும் பயனுள்ளதாகிறது. எவ்வளவு நாள்பட்ட கழுத்து வலி, முதுகு வலியானாலும் இந்த ஆசனப் பயிற்சியின் மூலம் நீக்கிக் கொள்ள முடிகிறது. கழுத்து நரம்புக் கோளாறு இடம் விலகிப் போன முதுகெலும்பின் டிஸ்க் தொந்தரவு உள்ளவர்களுக்கு நன்மை அளிக்கிறது.

    அஜீரணம், பசி மந்தம், மலச்சிக்கல், வயிற்றில் வாயுவினால் உண்டாகும் கோளாறுகள், இருதய பலவீனம், மூத்திரக் கோளாறு, மார்பு வலி நீங்கும், வயிற்றிலுள்ள உறுப்புகளும், சுரப்பிகளும் புத்துயிர் பெறும். சிறுநீரகம், கல்லீரல், குடல்கள், பிறப்புறப்பு, கணையம் மற்றும் அட்ரீனல் சுரப்பிகளுக்கும் ரத்த ஓட்டம் அதிகமாகி அவ்வுறுப்புகள் நல்ல ஆரோக்கிய நிலையில் இருக்கச் செய்கிறது. பெண்களின் கருப்பைக்கு சக்தி அளிப்பதில் புஜங்காசனம் மிகச் சிறந்தது. மாதவிலக்கு மற்றும் வெள்ளைப்படுத்தலை குணப்படுத்துகிறது. 
    ×