search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Home Made Snacks"

    குழந்தைகளுக்கு பாஸ்தா, சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த இரண்டையும் சேர்த்து சூப்பரான பாஸ்தா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மக்ரோனி பாஸ்தா - 1 கப்
    சீஸ் - 1/2 கப்
    உருளைக்கிழங்கு - 1
    குடை மிளகாய் - 2 டேபிள்ஸ்பூன்
    தக்காளி சாஸ் - 1 டேபிள்ஸ்பூ
    சில்லி ஃப்ளேக்ஸ் அல்லது மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
    மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன்
    எண்ணெய் - பொரிப்பதற்கு
    பிரெட் க்ரெம்ப்ஸ் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் மக்ரோனி பாஸ்தாவை 5 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து தேவையான உப்பு சேர்த்து வேக வைத்து, வடிகட்டி கொள்ளவும். தண்ணீர் நன்கு வடிய வேண்டும். வெந்த பாஸ்தாவை கைகளால் நன்கு மசித்துக் கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    அகலமான பாத்திரத்தில், சீஸ், தக்காளி சாஸ், மிளகாய் தூள் / சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு, நறுக்கிய குடை மிளகாய், ஒரிகானோ, மைதா மாவு மற்றும் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடைசியாக அதனுடன் மசித்த பாஸ்தாவை போட்டு எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாக கைகளால் பிசையவும்.

    இதை சிறு உருண்டைகளாக உருட்டி பிரெட் க்ரெம்ப்ஸில் புரட்டி எடுக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து, உருண்டைகளை பொன் நிறம் ஆகும் வரை வேக விட்டு பொரித்து எடுக்கவும். தீயை குறைத்து வைத்து பொரிக்கவும்.

    சுவையான பாஸ்தா சீஸ் பால்ஸ் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வாழைப்பூவில் வடை, பொரியல் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வாழைப்பூவை வைத்து பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்  :

    வாழைப்பூ - 1
    வெங்காயம் - 2
    கடலைமாவு - 200 கிராம்
    அரிசி மாவு - 50 கிராம்
    கொத்தமல்லி, கறிபேப்பிலை - சிறிதளவு
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
    மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
    பெருங்காயம் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    வெண்ணெய் - 1 ஸ்பூன்
    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு



    செய்முறை :

    வாழைப்பூவை சுத்தம் செய்து ஆய்ந்து கழுவி வைத்துக் கொள்ளவும்

    வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாழைப்பூவை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி வைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வதக்கிய வாழைப்பூவை போட்டு அதனுடன் கடலை மாவு, மிளகாய் தூள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், அரிசி மாவு, வெண்ணெய், பெருங்காயம் தூள் அனைத்தையும் சிறிதளவு தண்ணீர் விட்டு பக்கோடா மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவினைக் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்து எடுக்கவும்.

    சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் வாழைப்பூ பக்கோடா ரெடி

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று ஸ்வீட் கார்ன், சீஸ் சேர்த்து நக்கட்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ஸ்வீட் கார்ன் முத்துக்கள் - 1 கப்
    மக்காச்சோள மாவு - 4 தேக்கரண்டி
    உருளைக்கிழங்கு - 1
    பிரெட் தூள் - கால் கப்
    சீஸ் துருவல் - கால் கப்
    மைதா மாவு - கால் கப்
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    ஸ்வீட் கார்னை வேகவைத்து ஆறியதும் மிக்சியில் போட்டு போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுது, மசித்த உருளைக்கிழங்கு, சீஸ் துருவல், மிளகாய்த்தூள், சோள மாவு, உப்பு, சேர்த்து நன்றாக பிசையவும்.

    பிறகு மாவை விரும்பிய வடிவில் உருட்டி வைக்கவும்.

    அகலமான தட்டில் மைதா மாவுடன், பிரெட் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

    உருட்டிய நக்கட்ஸ்களை மைதா கலவையில் புரட்டி எடுத்து வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.

    வாணலியில் எண்ணெயை காய விட்டு உருட்டி வைத்த நக்கட்ஸ்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான ஸ்வீட் கார்ன் சீஸ் நக்கட்ஸ் ரெடி. சாஸ் உடன் பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பலவிதமான மசாலாவில் செய்த சமோசாவை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று குழந்தைகளுக்கு விருப்பமான இனிப்பு சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - ஒரு கப்
    உப்பு - ஒரு சிட்டிகை
    ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
    மஞ்சள் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை
    தேங்காய்த் துருவல் - அரை கப்
    பன்னீர் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
    வறுத்த பிரெட் தூள் (Toasted bread crumbs) - கால் கப்
    சர்க்கரை - அரை கப்
    ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
    உடைத்த நட்ஸ் (அக்ரூட், பாதாம் முந்திரி) - 2 டேபிள்ஸ்பூன் (வறுக்கவும்)
    எண்ணெய் - தேவையான அளவு 



    செய்முறை :

    மைதா மாவுடன் உப்பு, ஆலிவ் எண்ணெய், ஃபுட் கலர் சேர்த்து ஐஸ் வாட்டர் தெளித்துக் கெட்டியாகச் சப்பாத்தி மாவுப் பதத்துக்கு நன்றாக அடித்துப் பிசையவும்.

    இந்த மாவின் மேலே சிறிதளவு எண்ணெய் தடவி ஈரத்துணியில் சுற்றி அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

    தேங்காய்த் துருவலுடன் பன்னீர் துருவல், சர்க்கரை, ஏலக்காய்த்தூள், உடைத்த நட்ஸ் வகைகள், வறுத்த பிரெட் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதுவே இனிப்புப் பூரணம்.

    பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக்கி நீளவாக்கில் சப்பாத்தியாகத் தேய்க்கவும்.

    தோசைக்கல்லில் எண்ணெய் தடவி, சூடானதும் இந்தச் சப்பாத்திகளைப் போட்டு இருபுறமும் லேசாக... அதாவது அரை நிமிடம் சூடு செய்து எடுக்கவும். (முழுவதும் வேகவிடக் கூடாது).  

    இதன்மீது ஈரத்துணியை வைத்து மூடவும் (அப்படியே வைத்தால் காய்ந்துவிடும்; சமோசா மடிக்க வராது. தேவைப்படும்போது பயன்படுத்தலாம்).

    பிறகு, சப்பாத்திகளை இரண்டாக நீளவாக்கில் வெட்டவும். ஓரம் முழுவதும் தண்ணீர் தடவவும். நேர்க்கோடாக இருக்கும் பகுதியை நடுவில் கொண்டுவந்து முக்கோணம் போல் செய்து மைதா பசையால் ஒட்டவும்.

    இதன் நடுவே சிறிதளவு இனிப்புப் பூரணம் வைத்து ஓரங்களை அழுத்தி ஒட்டி மூடவும். மீதமுள்ள சமோசாக்களையும் இதே மாதிரி தயாரிக்கவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, தயாரித்த சமோசாக்களைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.  

    சூப்பரான ஸ்நாக்ஸ் இனிப்பு சமோசா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சாதம், காய்கறிகள் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்த இரண்டையும் சேர்த்து கட்லெட் போல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நன்கு வேகவைத்த சாதம் - ஒன்றரை கப்
    உருளைக்கிழங்கு - ஒன்று
    குடைமிளகாய் (நறுக்கியது) - 2 டீஸ்பூன்
    வேகவைத்து, மசித்த கேரட், பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன்
    கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
    சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை -  சிறிதளவு
    வெங்காயம் - 1
    எண்ணெய் - 4 டீஸ்பூன்
    பிரெட் தூள், உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சாதத்தை நன்றாக மசித்துக்கொள்ளவும் (அரைக்க வேண்டாம்; கையால் மசித்தால் போதும்).

    கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

    பிறகு, அதில் வேகவைத்த சாதம், மசித்த உருளைக்கிழங்கு, காய்கறி, நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து மேலும் வதக்கவும்.

    அடுப்பிலிருந்து இறக்கி, ஆறியதும் கையால் நன்றாகப் பிசைந்து விரும்பிய வடிவத்தில் கட்லெட்டுகளாக செய்யவும்.

    லேசாக பிரெட் தூளில் புரட்டி எடுத்து வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு அதில் செய்து வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாகும் வரை டோஸ்ட் செய்து எடுத்து, லஞ்ச் பாக்ஸில் வைத்துக் கொடுத்தனுப்பவும்.

    சூப்பரான சூப்பரான ஸ்நாக்ஸ் வெஜிடபிள் ரைஸ் கட்லெட் ரெடி.

    ஒரு கைப்பிடி சாதம்கூட சாப்பிடாத குழந்தைகளை ஒரு கப் சாதம் சாப்பிட வைக்க இது எளிய முறை. சாதம், காய்கறிகள் எல்லாம் இதனுள்ளேயே இருப்பதால் தேவையான சத்தும் கிடைக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×