என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    இந்த ஆசனம் முதுகெலுப்பின் கீழ் பகுதியில் ஏற்படும் வலியை நீக்குகிறது. இடம் விலகிப் போன முதுகெலும்பின் டிஸ்க் தொந்தரவு உள்ளவர்களுக்கு பயனுள்ளது.
    பெயர் விளக்கம்: ‘அர்த்த’ என்றால் பாதி என்றும் ‘சலப’ என்றால் வெட்டுக்கிளி என்றும் பொருள். இந்த ஆசனம் சலபாசனத்தின் பாதி நிலை ஆசனமாக இருப்பதால் அர்த்த சலபாசனம் என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை: முதலில் மேல்கண்ட மகராசனத்தில் செய்தது போல தரை விரிப்பின் மேல் குப்புறப்படுத்து கைகளை நீட்டி வைக்கவும். தலையை மேலே தூக்கி தாடையை தரை விரிப்பின் மேல் வைக்கவும். கைகளை உடலுக்கு பக்கவாட்டில் நேராக நீட்டி வைத்து, பிறகு இடுப்பை தூக்கி இரண்டு கைகளையும் உடலுக்கு அடியில் வைக்கவும், உள்ளங்கைகள் மேல் நோக்கியபடி இருக்கட்டும்.

    கை விரல்களை மடக்கியோ அல்லது நீட்டியோ வைக்கவும். பிறகு மூச்சை உள்ளுக்குள் இழுத்து நிறுத்தி கைகளை தரையில் அழுத்தி வலது காலை தரை விரிப்பிலிருந்து மேலே தூக்கி 45 டிகிரி அளவு உயர்த்தவும். காலை அந்த அளவுக்கு தூக்க முடியாதவர்கள் முடிந்த அளவு காலை உயரமாக தூக்கி நிறுத்தவும். காலை மடக்காமல் வைத்திருக்க வேண்டும். இந்த ஆசன நிலையில் 10 முதல் 30 வினாடி நிலைத்திருக்கவும். பிறகு காலை கீழே இறக்கி தரை விரிப்பின் மேல் வைத்து மூச்சை வெளியே விடவும்.

    பிறகு மேல் கண்ட முறைப்படி இடது காலை தூக்கி செய்யவும். இந்த ஆசனத்தை இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி இரண்டு முதல் நான்கு முறை பயிற்சி செய்யவும்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம்: கீழ் முதுகு, அடிவயிறு, இடுப்பு, கைகள் மற்றும் தாடையின் மீதும், விசுத்தி சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக் குறிப்பு: சிலருக்கு காலை உயர்த்தும் போது முழங்கால் நேராக இல்லாமல் மடங்கிய நிலையில் இருக்கும். பழகப் பழக சரியாக வந்துவிடும்.

    தடைக்குறிப்பு: இருதய பலகீனம், உயர் ரத்த அழுத்தம், இருதயக் கோளாறு, குடல்புண், குடல் பிதுக்கம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.

    பயன்கள்: முதுகெலுப்பின் கீழ் பகுதியில் ஏற்படும் வலியை நீக்குகிறது. இடம் விலகிப் போன முதுகெலும்பின் டிஸ்க் தொந்தரவு உள்ளவர்களுக்கு பயனுள்ளது. இடுப்பு நரம்புகள் வலுப்பெறும்.
    டயட்டில் இருப்பவர்கள், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது இந்த கோதுமை பேன் கேக். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - ஒரு கப்,
    வெங்காயம் - 1,
    தக்காளி - 1,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    பச்சை மிளகாய் - 2,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :


    வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், சீரகம், மஞ்சள் தூள், உப்பு, கொத்தமல்லித்தழை, மிளகாய் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    அதனுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைத்து கொள்ளவும்.

    தோசைக் கல்லை காய வைத்து மாவை சற்று கனமான சிறிய தோசைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆண்கள் வெளியே செல்லும்போது அணியும் ஷூக்கள் அதிக கவனத்தை ஈர்க்கின்றன. ஆண்களின் அழகை மாற்றும் ஸ்டைலை மேம்படுத்தும் வகையில் ஷூக்கள் இருப்பது அவசியமாகிறது.
    ஆண்கள் வெளியே செல்லும்போது அணியும் ஷூக்கள் அதிக கவனத்தை ஈர்க்கின்றன. ஆண்களின் அழகை மாற்றும் ஸ்டைலை மேம்படுத்தும் வகையில் ஷூக்கள் இருப்பது அவசியமாகிறது. எனவே, ஒவ்வொரு ஆண் மகனும் அணிய ஏற்ற ஸ்டைலான ஷூ எனும்போது ஏழு வகையான ஷூக்கள் கட்டாயம் ஒவ்வொரு ஆணிடமும் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு விழாக்கள் மற்றும் அலுவலகப்பணிகள் என்பதுடன் தினசரி ஜாக்கிங், ரன்னிங் போன்றவைக்கு அணிய ஏற்றவாறும் ஷூ இருத்தல் வேண்டும். வெவ்வேறு விதமான ஷூ வகைகள் என்பது ஒவ்வொரு விதமான வடிவமைப்பு மற்றும் சிறப்பு மிக்க அழகுடன் காட்சி அளிக்கின்றன.

    லேஸ் கொண்டு கட்டக்கூடிய பிரோக்

    இன்றைய நாளில் அனைவரும் விரும்பி அணியும் பிரோக் வகை ஷூ என்பது லேஸ் கயிறு கொண்டு இறுக கட்டும் அமைப்பிலான ஷூ வகை. இதனை பெரும்பாலும் பார்மல் மற்றும் கேஸ்வல் வகை ஆடைகளுக்கு இணையாக அணிந்து கொள்ளலாம். பிரவுன் பிரோக் ஷூக்கள் பார்மல் நிகழ்வுகளுக்கும், லைட் பிரவுன் கேஷ்வல் நிகழ்வுகளுக்கும் அணிந்து கொள்ளலாம். கருப்பு நிற பிரோக் ஷூக்கள் சூட் போன்ற ஆடைகளை அணியும்போது அணிய ஏற்ற ஷூவாக உள்ளது. எப்படி இருப்பினும் ஒரு பிரோக் வகை ஷூ வைத்திருப்பது நமக்கு உதவிகரமாக இருக்கும்.

    சூப்பரான சுக்கா ஷூ

    சுக்கா ஷூக்கள் தற்காலத்தில் மிக பிரபலமாக உள்ளது. முன்பு 40-களில் அதிக பிரபலமானதாக இருந்தது. இந்த ஷூ குறுகிய குழல் வடிவ உள்நுழைவு பகுதி மற்றும் கணுக்கால் வரை நீண்ட பூட் அமைப்பில் மூன்று அல்லது இரண்டு லேஸ் ஐலெட் உள்ளவாறு உள்ளது. கேஸ்வல் வகை ஆடைக்கு மிக கச்சிதமான ஷூ சுக்கா. ஜீன்ஸ் மற்றும் சினோஸ், போலோ ஷார்ட் போன்றவை அணியும்போது சுக்கா ஷூ சரியானதாக இருக்கும்.

    லெதர் பூட்

    அனைத்து ஆடைகளுக்கு ஏற்ற வகை ஷூ எனும்போது லெதர் பூட் சிறப்பானதாக அமையும். பூட் வகை ஷூக்களை சேகரிப்பதில் பல ஆண்களும் ஆர்வமாகவே உள்ளனர். ஒவ்வொரு வண்ண பூட்ஸ்களும் ஒவ்வொரு விதமான அழகை தரும். கணுக்கால் மேல் வரை நீண்ட பூட்ஸ் மற்றும் நிறைய லேஸ் ஐலெட்களுடன் காணப்படும் பூட்ஸ் கருப்பு மற்றும் பிரவுன் நிறத்தில் வழவழப்பான வடிவமைப்புடன் காணப்படுகிறது. இதில் தோல் வகையை பொருத்து அதன் ஆயுட்காலம் மற்றும் பளபளப்பு வரையறை செய்யப்படும்.



    ஒயிட் லோ டாப் டிரையனர்

    மிக அழகிய கேஸ்வல் போன்ற தோற்றத்தை தருவதுடன் பார்த்தவர் அனைவரும் மூக்கில் மேல் விரல் வைக்கக்கூடியது இந்த ஒயிட் லோ டாப் டிரையனர். கருப்பு ஜீன்ஸ் பேண்ட்களுக்கு அணிய ஏற்ற வகையில் ஒயிட் டிரையனர் சிறந்த அழகுடன் திகழ்கிறது.

    பல வண்ணங்களில் கிடைக்கும் லோபர்ஸ்

    ஸ்கான்டிவிபனின் அடிப்படையில் உருவான நவீன லோபர்ஸ் தற்போது அதிக விருப்பமான ஷூ ஆகும். கீழ் இறக்கப்பட்ட அமைப்பு மற்றும் லேஸ் இல்லாத ஷூவான லோபர்ஸ் நவீன வகை ஆடை அனைத்திற்கும் ஏற்ற அமைப்பாகும். பிரவுன் நிற லோபர்ஸ் கேஸ்வல் மற்றும் பார்மல் நிகழ்வுகளுக்கு ஏற்றதாகும். மிகச்சிறந்த வெள்ளை, பீஜ் மற்றும் பச்சை நிறங்களுடன் பார்கெண்டி நிறமும் கிடைக்கின்றன.

    ழகிய ஆக்ஸ்போர்டு ஷூ


    ஆக்ஸ்போர்டு ஷூக்கள் மூடப்பட்ட லேஸ் அமைப்புடன் உள்ளது. அதாவது பிளைன் ஷூ வகையான இது தோலால் செய்யப்படுகிறது. சில ஆண்டுகளில் பல துணிகள் மற்றும் சிறந்த வடிவமைப்புகளில் ஆக்ஸ்போர்டு ஷூ உருவாக்கப்படுகின்றன. டேன் மற்றும் கருப்பு நிறத்தில் கிடைக்கும் ஆக்ஸ்போர்டு ஷூக்கள் பார்மல் மற்றும் கேஷ்வல் ஆடைக்கு ஏற்றதாகவும், அழகாகவும் உள்ளது.

    ரன்னிங் ஸ்நிக்கர்ஸ்

    பிரகாசமான வண்ண கலவையுடன் கிடைக்கும் ரன்னிங் ஸ்நிக்கர்ஸ் மிக கச்சிதமான ஷூ வகையாக உள்ளது. மிக சிறந்த மிருதுவான ஷூ என்பதுடன் அதிக நாள் உழைக்கக்கூடியதாக உள்ளது. எந்த வகை ஆடைகளுக்கும் ஏற்ற ரன்னிங் ஸ்நிக்கர்ஸ் என்பது அனைத்து வகை நிகழ்வுகளுக்கும் அணிய ஏற்ற வகையாக உள்ளது. ஆண்களுக்கான ஷூக்கள் என்பதில் மேற்கூறிய ஷூ வகைகள் கட்டாயமாக இருக்க வேண்டியதாக உள்ளன. 
    மகளிர் நிம்மதியாக எந்த வகை மன இறுக்கமும் இன்றி தாய்ப்பால் அளிக்கும் சூழ்நிலையை இல்லத்திலும் பணியாற்றும் இடங்களிலும் ஆண்கள் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
    நாளை (ஆகஸ்டு 1-ந் தேதி) உலக தாய்ப்பால் தினம்.

    குழந்தைக்குத் தாய்ப்பாலை ஊட்ட வேண்டிய ஊக்கத்தையும் சூழ்நிலையையும் பெற்ற தாய்க்கு நாம் ஏற்படுத்த வேண்டும். அதற்கு வேண்டிய மனநலம், சத்துணவு, தண்ணீர், போதிய நம்பிக்கை யாவையும் தாய்க்குக் குறையாமல் அமைய ஊக்குவிக்க வேண்டும். குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே தாய்ப்பாலை ஊட்டத் தொடங்கலாம். குழந்தை பசிக்காக அழும்போதெல்லாம் பால் கொடுப்பதே சிறந்த முறையாகும்.

    குழந்தை இரண்டு அல்லது மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை பால் அருந்தும். ஒவ்வொரு முறையும் முதலில் சில மணித்துளிகளே குடிக்கும். பிறகு 15 முதல் 20 மணித்துளிகள் தொடர்ந்து பால் அருந்தும். பசிக்காகக் குழந்தை அழுதால் குழந்தைக்குப் பால் கொடுப்பதில் தவறில்லை. சில குழந்தைகள் இரவு நேரங்களிலும் பாலுக்காக அழும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இப்பழக்கம் தானே நின்று விடும்.

    இயல்பாகவே குழந்தைகள் தாமாகவே தமக்கென்ற ஒரு நெறிமுறைக்கு வந்துவிடும். இரண்டு, மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பால் அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும். இரண்டு, மூன்று மாதத்திற்கு மேல் இரவில் பால் அருந்துவதையும் நிறுத்தி நிம்மதியாக உறங்கும்.

    ஒவ்வொரு பக்கமாகக் குழந்தைக்கு முழுமையாகப் பால் ஊட்ட வேண்டும். குழந்தை ஒழுங்காகப் பாலை உறிஞ்சுமானால் பால் சுரப்பது எளிதாகும். ஒவ்வொரு முறையும் முழுமையாக உறிஞ்சிப் பாலுண்ணும் திறனை இயல்பாகவே குழந்தைக்குக் கற்பிக்கலாம். குழந்தைக்குப் போதுமான வசதியான உடை அணிவது அவசியம். குழந்தையை வெது வெதுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    போதுமான சத்துணவும், அடிக்கடி பாலூட்டும் பழக்கமும் பால் சுரப்பதைப் பெருக்குகின்றன. பால் உற்பத்தியை மருந்துகள் மூலம் அதிகமாக்க முயல்வது தேவையற்றது. பேறுகாலத்தில் பேதலித்து நிற்கும் தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டுவதால் மனத்தெளிவையும் பெறுவர்.

    சில குழந்தைகள் பால்குடிக்க ஆரம்பித்தவுடனே தூங்கி விடும். அக்குழந்தைகளை எழுப்பி வயிறு நிறையப் பாலூட்ட வேண்டும். குழந்தை பாலை குடிக்கும்வரை அளவுக்கதிகமான பால் சுரப்பினால் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். அப்போது சில வினாடிகள் இடைவெளிவிட்டுக் குழந்தைக்குப் பாலூட்ட வேண்டும்.

    குழந்தை பாலைக் குடிக்கும்பொழுது காற்றையும் உறிஞ்சிவிடும். அதனால் குழந்தையை முதுகில் தட்டி ஏப்பமிட வைக்க வேண்டும். இவ்வாறு செய்யவில்லையென்றால் குழந்தை குடித்த பாலை உடனே வாந்தி எடுத்துவிடும். இந்த வாந்தி எடுத்த பொருள் சுவாசப் பைக்குள் போகவும் நேரிடும். குழந்தை ஏப்பம் விட்டபிறகு குழந்தையை அதன் வலது பக்கத்திலோ குப்புறவோ படுக்க வைக்கவேண்டும். இவ்வாறு படுக்க வைப்பதால் உணவு குடல் வழியே செல்ல வசதியாகவுமிருக்கும்.

    குறைமாதக் குழந்தைகளாலும் பிளவுபட்ட உதடுகளுடைய குழந்தைகளாலும் தொடக்கத்தில் பாலை உறிஞ்சிக் குடிக்க இயலாது. அப்பொழுது தாய் தன் பாலைக் கையால் கறந்து கொடுக்கவேண்டும். அலுவலகத்திற்குச் செல்லும் மகளிர் கையால் கறந்த பாலைப் புட்டிகளில் சேகரித்துக் குளிர்பதனப் பெட்டியில் வைத்துத் தேவைப்படும்போது குழந்தைக்குப் புகட்டச் செய்யலாம்.

    எப்போதும் தாய்ப்பால் தான் ஊட்ட வேண்டுமென்று அனைவரும் இப்போது வலியுறுத்தி வருவதால் எவ்வாறேனும் முயற்சி செய்து தாய்ப்பாலைச் சுரக்க வைப்பதுதான் ஒரு தாயின் இன்றியமையாத கடமையாகும். ஒரு குவளை பால் பழச்சாறோ வேறு சுவை நீர்களையோ தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் ஒரு தாய் அருந்தவேண்டும்.



    தாய்ப்பால் கொடுக்கும் இடைவெளி அதிகமாக இருந்தால் குழந்தைக்கு அவ்வப்போது பாலூட்டு முறையைக் கடை பிடிக்க வேண்டும். முதலிலிருந்தே இரு பக்க மார்பகங்களில் இருந்தும் பாலூட்டும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

    பால் உருவாக்கத்துக்குக் குழந்தை, தாய் ஆகிய இருவருடைய ஒத்துழைப்பும் தேவை. குழந்தை மட்டும் உறிஞ்சிக் கொண்டிருந்தால் சிறிதளவு பாலிற்கு மேல் அதற்குக் கிடைக்காது. அதே போல, ஒரு தாய் தன்னால் தேவையான பாலை உற்பத்தி செய்ய முடியாது என்று நினைத்தாலோ, அஞ்சினாலோ பால் சுரப்பது குறைந்துவிடும். ஆகையால் அத்தாய் எந்த வகையான மனச்சோர்வுமில்லாமல் நெஞ்சுரத்தோடு திகழவேண்டும்.

    குழந்தை நல மருத்துவர், மருத்துவக்கல்லூரிகள், தாய்சேய் நல மருத்துவமனைகள் ஆகியவற்றில் தாய்பால் தவிரப் பிற செயற்கைப் பாலால் நேரும் கேடுகளை வலியுறுத்த வேண்டும். பள்ளிக்கூட அளவிலேயே தாய்ப்பாலின் பெருமையைப் பரப்ப வேண்டும். வளமான நாடுகளில் தாய்மார்கள் தாய்ப்பாலின் சிறப்பை உணர்ந்து குப்பிப் பாலைத் தவிர்ப்பது போலவே வறுமையில் அகப்பட்டுத் தவிக்கும் நாடுகளைச் சேர்ந்த தாய்மார்களுக்கு இக்கருத்தை ஊட்டவேண்டும்.

    கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதைப் போல எளியவர்கள் வறுமையாளர்கள் என்ற வேறுபாடில்லாமல் அனைத்துத் தாய்மார்களுக்கும் இயல்பாய்ச் சுரக்கும் தாய்ப்பாலைப் போற்றும் எண்ணம் உருவாக வேண்டும். அலுவலக வாழ்க்கை வாழும் தாய்மார்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் அளிப்பதில் இடையூறுகள் நேரலாம். அலுவலக அன்னையர் தாய்ப்பால் அளிப்பதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்கித் தரவேண்டும்.

    நீண்ட பேறுகால விடுப்பை கருவுற்ற தாய்மார்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் வழங்க வேண்டும். இத்தாய்மார்களுக்கு கணவன்மார்களின் ஒத்துழைப்பும் தேவையாகும். அவர்களும் குழந்தை வளர்ப்பில் ஆர்வம் கொண்டு மனைவி மனநிறைவுடன் செயல்பட உதவ வேண்டும்.

    அதே போல, மகளிர் நிம்மதியாக எந்த வகை மன இறுக்கமும் இன்றி தாய்ப்பால் அளிக்கும் சூழ்நிலையை இல்லத்திலும் பணியாற்றும் இடங்களிலும் ஆண்கள் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தாய்ப்பால் புகட்டும் இயல்பைப் போற்றும் நெறி வளர்ந்திருப்பதையும் நாம் ஊட்டிய தாய்ப்பால் மானத்தையும் வீரத்தையும் ஒருசேர ஊட்டும் உரமுடையதென்பதை ஒரு தாய் புறநானூற்றில் சூளுரைக்கும் காட்சியையும் நினைத்து மகிழலாம்.

    உலகளாவிய நிலையில் தாய்மையைப் போற்றும் நெறியில் தமிழகம் பலருக்கு வழிகாட்டியாக விளங்கியது; தொடர்ந்தும் விளங்க வேண்டும் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது.

    நம் நாட்டில் குழந்தை பிறந்தபோது, 80 முதல் 90 சதவீதம் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள், ஆறாவது மாதத்தில் 30 முதல் 40 சதவீதம் கூட தாய்ப்பால் குடிப்பதில்லை என்று புள்ளி விவரம் கூறுகிறது. இதனால் இன்னும் நம் நாட்டில் குழந்தைகளின் வளர்ச்சியும் நோயின்மையும் அறிவுடைமையும் போதிய முன்னேற்றம் அடையாமலிருப்பதை அறிந்து திகைப்படைகிறோம்.

    அனைத்து மக்களுக்கும் இச்செய்தியை ஆழமாக அறிவுறுத்தித் தாய்ப்பாலையே ஓராண்டு வரையிலாவது குழந்தைகள் அருந்தினால் எதிர்காலத் தமிழ்நாடு இளையச் செல்வங்கள் ஆற்றலோடும் அறிவுத்திறனோடும் நாட்டின் நன்மணிகளாக மிளிர்வார்கள். இந்த நற்போக்கு நன்கு வளர்க!

    மருத்துவர் தாரா நடராசன், முன்னாள் முதல்வர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவக் கல்லூரி
    ஆஸ்டியோ நெக்ரோஸிஸ் அவேஸ்குலர் நெக்ரோஸிஸ் ரத்த ஓட்டக் குறைபாடு காரணமாக எலும்புத்திசுக்கள் அழிவதே இந்நோய். இந்த நோய்கான சிகிச்சை முறையை பார்க்கலாம்.
    ஆஸ்டியோ நெக்ரோஸிஸ் அவேஸ்குலர் நெக்ரோஸிஸ் ரத்த ஓட்டக் குறைபாடு காரணமாக எலும்புத்திசுக்கள் அழிவதே இந்நோய், உடனே தடுக்கப்படாவிட்டால், எலும்புகள் சிறுசிறு துண்டுகளாக உடைந்து நொறுங்கும் அபாயம் ஏற்படும்.

    பொதுவாக, இந்நோய் இடுப்பில் ஏற்படும். தவிர, தோள், மணிக்கட்டு, முழங்கால் ஆகிய இடங்களிலும் வரலாம். முழு ஆரோக்கியம் உடையவர்களுக்கு இந்நோய் வராது; ஆரோக்கிக் குறைபாடு உடையவர்களுக்கும், விபத்து காரணமாக காயம் அடைந்தவர்களுக்கும் வாய்ப்பு அதிகம்.

    தொடை எலும்பு உடைவதால் எலும்புக்கு வரும் ரத்தத்தின் அளவு குறைந்து, இந்நோய் வரலாம். இடுப்பு, எலும்பு இடம் பெயரும் நபர்களில் 20 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு இந்நோய் வருகிறது.

    நீண்ட நாட்கள் ஸ்டிராய்டு மருந்து எடுத்துக் கொள்பவர்களுக்கு இந்நோய் வரலாம். இம்மருந்துகளால், ரத்தக் குழாய்களில் படியும் கொழுப்புச்சத்தைக் கரைக்கும் ஆற்றலை உடல் இழக்கிறது. அதனால் கொழுப்புச் சத்து படிவதால், ரத்தக் குழாய்கள் சுருங்கி, ரத்த ஓட்டம் தடைபடுகிறது. நாளடைவில் எலும்புகள் சிதைகின்றன.

    அதிகம் மது அருந்துபவர்களுக்கும், ரத்தக் குழாய்களில் கொழுப்புச் சத்து படிவது நேர்கிறது; அவர்களுக்கும் இந்நோய் வரும் வாய்ப்பு அதிகம். ரத்தம் உறைவது, வீக்கம், ரத்தக் குழாய்களில் வீக்கம் ஆகியன காரணமாகவும், எலும்புக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறையும்.

    சில வியாதிகள் காரணமாகவும் இந்நிலை வரலாம். அவை:-

    பரம்பரை காரணமாக வரும் வளர்ச்சிதை மாற்றக் குறைபாடு காரணமாகவும் உறுப்புக்களில், கொழுப்பு சத்துக் கள் படியலாம்.
    ரத்த சோகை காரணமாக வர லாம்.
    கணையத்தில் ஏற்படும் வீக்கம் காரணமாக வரலாம்.
    எச்.ஐ.வி. தொற்று காரண மாக வரலாம்.
    கதிர்வீச்சு சிகிச்சையால் வரலாம்.

    ஆட்டோ இம்யூன் நோய் எனப்படும் உடலின் நோய் எதிர்ப்புத்திறனே உடலுக்கு எதிராக மாறும்போது உண்டாகும் நோய் களில் வரலாம்.உடற்பகுதிகள், திடீரென அழுத்தப் படும்போது, இயல்புநிலை மாறி அழுத்தப்படும் நோய் வருகிறது; அப்போது ரத் தத்தில் வாயுக் குமிழ்கள் உருவாகும்.மேற்கூறிய நோய்கள் காரண மாக, இவ்வியாதி உருவாகலாம். நோய்வரக் காரணமான நோயைக் கண்டறிந்து, அதற்கு முதலில் சிகிச்சை தர வேண்டும்.

    அறிகுறிகள்:

    ஆரம்ப கட்டத்தில், அறிகுறிகள் ஏதும் தென்படா விட்டாலும், நாட்கள் கழியும்போது, பாதிக்கப்பட்ட எலும்பு அதிக அழுத்தம் பெறும்போது வலியுண்டாகும்; வலி நிரந்தரமாகும்; எலும்பும், அதன் பக்கத்திலிருக்கும் மூட்டுக்களும் பாதிக்கப்படும் போது, அவற்றை அசைப்பது கடினமாகி விடும்; ஆரம்ப கட்டத்திலிருந்து, தீவிர நிலை அடைய, பல மாதங்கள்ஆகலாம்.

    சிகிச்சை:

    பாதிக்கப்பட்ட இடங்களின் செயல்பாட்டை உண்டாக்குவது
    எலும்புகள் மேலும் சேதமடையாமல் காப்பாற்றுவது
    வலியைக் குறைப்பது
    ஆகியன சிகிச்சையின் நோக்கம் ஆகும்.

    சிகிச்சை எவ்வளவு தூரம் பலன் தரும் என்பது:

    அவரவர் வயது, நோயின் தீவிரம், பாதிக்கப்பட்ட இடத்தைப் பொறுத்து, பாதிப்பின் அளவைப் பொறுத்து, பாதிப்பிற்கான காரணத்தைப் பொறுத்து அமையும்.
    பாதிப்பிற்கான காரணம் அறியப்பட்டபின் பாதிப்பை நீக்குவதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்படும். எடுத்துக்காட்டாக, ரத்தம் உறைந்து கட்டியாவதன் காரணமாக இந்நோய் உண்டாகி இருந்தால், ரத்தக் கட்டிகளைக் கரைப்பதற்கான மருந்துகள் தரப்படும்.

    ரத்தக்குழாய்களில் வீக்கம் நோய்க்கு காரணமாக இருந்தால், வீக்கத்தை குறைக்கும் மருந்துகள் தரப்படும். ஆரம்ப கட்டத்தில் இந்நோய் இருப்பது அறியப்பட்டால், வலியைக் குறைப்பதற்கும் மருந்துகள் தரப்படும். பாதிக்கப்பட்ட மூட்டுக்களை அசைப்பதற்கு, பயிற்சிகள் சொல்லிக் கொடுக்கப்படும். தகுந்த உபகரணங்களை உபயோகித்து, பாதிக்கப்பட்ட இடம் அதிகம் அழுத்தப்படாமல் செயல்பட வைப்பர்.(எ.காட்டு ஊன்றுகோல்,) அறுவை சிகிச்சையின்றி வேறு முறைகளால் இந்நோய் தீவிரமாவது தடுக்கப்பட்டாலும், பெரும்பாலானவர்களுக்கு, அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.

    அறுவை சிகிச்சை வகைகள்:

    ஆரோக்கியமான எலும்பை ஓரிடத்தி லிருந்து எடுத்து, பாதிக்கப்பட்ட எலும்புக்கு மாற்றாக வைப்பர்.
    பாதிக்கப்பட்ட மூட்டினை வெளியேற்றிவிட்டு செயற்கையாக முட்டியை பொறுத்துவது.
    எலும்பின் உட்பகுதியின் ஒரு பகுதியை வெளியே எடுத்து விட்டு, உள்ளே புது ரத்தக் குழாய்கள் உருவாக இடம் தருவது.
    இடுப்பிலிருக்கும் ரத்த ஓட்டம் குறைந்து எலும்பை நீக்கி விட்டு, அதற்குப் பதிலாக ரத்த ஓட்டம் அதிகம் உள்ள எலும்பை மாற்றி அமைப்பது.

    ஆயுர்வேத சிகிச்சை:

    3 தோஷங்களின் பங்கு:

    ஆயுர்வேத சித்தாந்தப்படி, வாத தோஷ நிலைப்பாடு உடலின் எந்த இடத்தில் மாறுபடுகிறதோ, அதிகமாகிறதோ, அங்கு திசுக்களின் அழிவு நேருகிறது; அதனால் நெக்ரோஸிஸ் வியாதி உண்டாகிறது.

    வாத தோஷம் நிலைப்பாடு மாறுபடுவது, இந்நோய்க்கு அடிப்படைக் காரணமானாலும், சில சமயங்களில் பித்த தோஷம் இவ்வியாதியைத் தூண்டக் காரணமாகின்றது.

    ரத்தக் குழாய்களில் கொழுப்புச் சத்து படிந்து, ரத்த ஓட்டம் தடைபட கபதோஷம் காரணமாகின்றது. ஆகவே, வாத தோஷ நிலைப்பாட்டை சமனப்படுத்தி, திசுக்கள் மேலும் அழியாமல் காக்க வேண்டும்.

    பித்த தோஷம், வியாதியை, தூண்டாமல் காக்க வேண்டும். கபதோ ஷத்தைச் சமனம் செய்து, மீண்டும் ரத்தக் குழாய்களில் படிந்த கொழுப்பு படிமத்தைக் கரைக்க வேண்டும். எலும்புத் திசுக்களுக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்ய வேண்டும். அழிந்த திசுக்களைப் புதுப்பிக்க வேண்டும். பிற காரணங்கள் ஏதும் இருந்தால் அதற்கான சிகிச்சை முறைகளைப் பின்பற்ற வேண்டும்.



    நோய்க்கு அடிப்படையான காரணங்களை அறிந்து சிகிச்சை தருவது:

    எலும்பு முறிவு ஏற்பட்டு அதனால் எலும்புத் திசுக்களுக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப் படுகிறதா? என்பதை அறிந்து, எலும்பு முறிவை முதலில் சரி செய்ய வேண்டும். மூட்டுக்கள் ஏதாவது இடம் பெயர்ந்திருந்தால், அதைச் சரி செய்ய வேண்டும். நோயாளி ஸ்டீராய்டு மருந்து எடுத்துக் கொண்டிருந்தால், அதை மெதுவாக் குறைத்து, பின் முழுதும் நிறுத்தி, ஸ்டீராய்டு மருந்துக்கு பதிலாக ஆயுர்வேத மருந்து கொடுத்து எந்த வியாதிக்காக ஸ்டீராய்டு மருந்து கொடுக்கப்பட்டதோ, அவ்வியாதியைக் குணமாக்க வேண்டும்.

    நோயாளி அதிகமாக மது அருந்திக் கொண்டிருந்தால், அதை நிறுத்த வேண்டும். இவை தவிர வேறு காரணங்கள் இருந்தால், அதற்கு தகுந்து சிகிச்சை தரப்பட வேண்டும். நோய் ஆரம்ப கட்டத்தில் இருப்பின், ஆயுர்வேத சிகிச்சை நல்ல பலன் தரும்; நோய் முற்றிய நிலையில், நோய் காரணமாக, ரத்தக் குழாய்களும், எலும்பும் மேலும் சேதம் அடையாமல் மட்டும் தடுக்கலாம். சிலசூழலில் அறுவை சிகிச்சையும் அவசியமாகலாம். இவையெல்லாவற்றையும் கருத்தில் கொண்டே ஆயுர்வேத சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும்.

    ஆயுர்வேத மருந்துகள்:

    குக்குறுதிக்தகம் கஷாயம், யோகராஜ குக்குறுரதிக்தகம் கஷாயம், கந்த தைலம், ராசனாபஞ்சகம் கஷாயம், தன்வந்த்ரம் (101) தசமூல கஷாயம்.

    வெளியே தடவ:

    முறிவெண்ணை, தன்வந்த்ரம் தைலம், பலா அஷ்வகந்தாதி தைலம், தசமூல சூரணத்தை பாலில் அரைத்து பத்து போடலாம். பாதிக்கப்பட்ட இடத்தில் மேற் சொன்ன முறிவெண்ணை, தன்வந்த்ரம் தைலம் ஆகியவற்றை(பிச்சு) துணியில் நனைத்துப் போடலாம். வாயு அதிகம் உண்டாகிய பொருட்களை உண்ணக்கூடாது.

    சையாட்டிக் நோய்க்கான சிகிச்சை முறை

    சையாட்டிக் நோயை குணப்படுத்தும் ஆயுர்வேத சிகிச்சை முறையை பற்றி காண்போம். பஞ்சகர்மா சிகிச்சை முறை மூலமும், உள்ளே சாப்பிடக் கொடுக்கும் மருந்துகள் மூலமும் சையாட்டிகா நோய்க்கு, ஆயுர்வேதம் நல்ல தீர்வு காண்கின்றது.(கிரித்ரசி) ஆயுர்வேதம் சையாட்டிகாவை கிரித்ரசி என்று கூறுகிறது. இதற்கு கழுகு என்று பொருள். பாதிக்கப்பட்ட நோயாளியின் நடை கழுகின் நடைபோன்று இருக்கும்; மேலும் பாதிக்கப்பட்ட நரம்பு கழுகின் அலகினைப் போன்று இருக்கும்.

    ஆயுர்வேதம், சையாட்டிகா நோய், வாத தோஷம் நிலை மாறுபடுவதால் வருவதாக கொள்கிறது. உடலின் அசைவுகளுக்கும், செயல்பாடுகளுக்கும் காரணமானது வாத தோஷம்; கபதோஷம் உடலின் பகுதிகளின் உராய்வுக்கும், உடலில் உள்ள திரவங்களுக்கும் காரணமானது. வாத தோஷ மாறுதலோடு, சில சமயம் கபதோஷ மாறுபாடு காரணமாகவும் சையாட்டிகா நோய் வரும்.

    ஆயுர்வேதம், நிலைமாறுபாடு ஏற்பட்டுள்ள வாத தோஷம் அல்லது வாத கப தோஷங்களை நிலைப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதன்மூலம் ஆரோக்கியத்தை மீட்கிறது.ஆயுர்வேத சிகிச்சை, மூன்று நிலைகளைக் கொண்டது. முதலில் சோதனம் என்னும் கழிவு நீக்கம் மேற்கொள்ளப்படும். செரிமானக் கோளாறு, வளர்ச்சிதை மாற்றக் கோளாறு மற்றும் நோயின் காரணமாக உண்டாகும் கழிவுகளை வெளியேற்றுவது முதன்மையானது.சமனம் என்னும் மாறுபட்ட செயல்பாடுகளுக்கான காரணிகளை சரிபடுத்துதல்.

    ரசாயனம் என்னும் புத்துணர்வு சிகிச்சை. நோய்வாய்ப்பட்ட திசுக்களை மேம்படுத்தி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்.

    சிகிச்சைகள்:

    இலைக்கிழி, நவரக்கிழி, பிழிச்சல், தாரா வஸ்தி ஆகிய சிகிச்சை முறைகள், நோயாளி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும்போது தரப்படும்.

    மூலிகைகள்:

    துத்தி(சாரணை) நொச்சி, ஆமணக்கு, முருங்கை, சித்தரத்தை, நாவல் உளுந்து ஆகியவை பலன் தருவன.

    மருந்துகள்:

    யோகராஜ குக்குறு, கோக்ஷீர குக்குறு, பிரசாரின்யாதி கஷாயம், சஹஸ்ராதி கஷாயம், ராசன ஏலண்டாதி கஷாயம், புனர்னவாதி கஷாயம், ராசன ஷபீதக கஷாயம் ஆகியன பலன் தரும்.

    எடுத்துக் கொள்ளக் கூடிய உணவுகள்:

    உளுந்து, கொள்ளு, கோதுமை, சிவப்பரிசி, நெல்லிக்காய், திராட்சை, முரு-ங்கை, மாதுளை, புடலை, பால், நெய்.

    மேலே தடவ:

    * தில தைலம், ஏரண்ட தைலம் ஆகியவற்றை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவலாம். * மாமிச சூப் கொண்டு தாரா செய்யலாம். * தன ஆம்லா தைலம் கொண்டு தாரா செய்யலாம். * தவிர்க்க வேண்டிய பொருட்கள்: * நிலக்கடலை, கடலைப்பருப்பு, ராஜ்மா ஆகியவை.

    தவிர்க்க வேண்டியவை:

    * அதிகமான உடற்பயிற்சி * இயற்கை உபாதைகளை அடக்குதல் * பகல் தூக்கம் * இரவில் விழித்திருத்தல் * வாகனங்களில் அதிகம் பயணித்தல் (குதிரை, பைக்) ஆகியவை கண்டிப்பாக தவிர்க்கபட வேண்டும்.

    -டாக்டர். ஜெ. விஜயாபிரியா
    (போன் 0422-2367200, 2313188, 2313194)
    தோசை, இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த இறால் முருங்கைக்காய் கிரேவி. இன்று இந்த கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முருங்கைக்காய் - 1
    இறால் - கால் கிலோ
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    பொடித்த மிளகு சீரகம் - 2 ஸ்பூன்
    மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
    கரம் மசால் பொடி - அரை ஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
    எண்ணெய் - 2 ஸ்பூன்
    அரைத்த தேங்காய் விழுது - 2 ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு,
    கடுகு - அரை ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் கொஞ்சம் வதங்கியவுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், பொடித்த மிளகு சீரகம் சேர்த்து வதக்கவும்.

    பின் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்கு வதங்கியவுடன் முருங்கைக்காய் இறால் சேர்த்து கிளறி விடவும்.

    5 நிமிடம் கழித்து கரம் மசாலா சேர்த்து, தேவைாயன அளவு தண்ணீர், அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கடாயை மூடிவைத்து 15 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும்.

    எண்ணெய் ஓரங்களில் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சுவையான இறால் முருங்கைக்காய் கிரேவி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஒருவருடைய சிந்தனைகளையும் குணங்களையும் பட்டை தீட்ட அவரை நன்கு உணர்ந்த ஒரு நண்பர் தேவைப்படுகின்றார். மகிழ்வை, துக்கத்தைப் பகிர மற்ற உறவுகளைவிட மனித மனம் நாடுவது நட்பெனும் உறவைதான்.
    ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற் கதவுகள். நட்பு என்பது ஒரு கொண்டாட்டம். இன்பத்தில் மட்டுமல்ல துளையிடும் வலிகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், நட்பு அவசியமாகிறது. வாழ்க்கை ஓட்டத்தைப் பூவனமாக்குவதும் நட்பு.

    இத்தகு நட்பு இறுக்கமாக இல்லாமல் ஒருவர் தளர்ந்து கொடுப்பதாலேயே கிடைக்கிறது. ஒருவரை வாசித்து நட்பு பெறுவது கடினம். நாம் காட்டும் ஈடுபாட்டால் மட்டுமே நட்பு மலர்கிறது.

    நட்பில் பல பரிமாணங்கள் உண்டு இருவருக்கிடையே ஏற்படும் நட்பு, இருபாலருக்கு இடையே ஏற்படும் நட்பு, இரு குழுக்களிடையே ஏற்படும் நட்பு அல்லது பல குழுக்களிடையே ஏற்படும் நட்பு, இரண்டு நாடுகளுக்கு இடையே ஏற்படும் நட்பு, பிற உயிர்களிடத்து ஏற்படும் நட்பென நட்பின் தன்மை மிக உன்னதமானதாகும். நட்பு வயது, மொழி, இனம் அறியாது.

    ஒருவருடைய சிந்தனைகளையும் குணங்களையும் பட்டை தீட்ட அவரை நன்கு உணர்ந்த ஒரு நண்பர் தேவைப்படுகின்றார். மகிழ்வை, துக்கத்தைப் பகிர மற்ற உறவுகளைவிட மனித மனம் நாடுவது நட்பெனும் உறவைதான். இலக்கியங்கள் வழியும், வரலாறு வழியும் நட்பின் உன்னதப் பதிவுகளை நாம் அடையாளம் காண முடிகின்றது.

    வள்ளுவப் பெருந்தகை நட்பு, நட்பாராய்தல், தீ நட்பு, கூடாநட்பு என்ற நிலையில் நட்பினை நன்கு விளக்கி உள்ளார். ஒத்த உணர்ச்சிதான் நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும். நட்புக்கு இலக்கணமாக, சான்றாக வாழ்ந்தவர்கள் பலர் உண்டு.

    மிகுந்த தமிழ் ஞானமும், புலமையும் கொண்ட அவ்வைக்கு, தமிழ் பற்றாலும், அவரின் புலமையின் பால் ஈர்க்கப்பட்ட நட்பினாலும் அரிய வகை நெல்லிக் கனியைக் அதியமான் கொடுத்தான். அவன் ஒரு அரசன். அதனை அவனே உண்டிருக்கலாம். அதை யாரும் தடுத்திட போவதில்லை. இருந்தும் தான் இல்லை என்றால், இந்நாட்டுக்கு மற்றொரு அரசன் கிடைப்பான். அவ்வை வாழ்ந்தால் தமிழ்வாழும். தமிழால் பின்வரும் சந்ததியினர் வாழ்வர் என்ற உயரிய நோக்கிலும், அவர்மீது கொண்ட நட்பின் தகைமையாலும் நெல்லிக்கனியை கொடுத்தான்.

    அதியமானின் செயலும், அச்செயலைக் கண்ட அவ்வை ‘சிவபெருமான் போல் நீ நீடுழி காலம் வாழ்க’ என வாழ்த்திய தன்மையும் நினைக்கும் போதெல்லாம் இனிக்கும்.

    இன்றைய காலச்சூழலில் ஆண், பெண் நட்பு போற்றத்தக்கதா? அது ஆரோக்கியமானதா? என்ற கேள்வி பலரிடம் உள்ளது. நம்பிக்கையின் அடிப்படையில் சுயநலமற்று துளிர்விட்டு தழைக்கும் போது ஆண், பெண் நட்பு ஆரோக்கியமானதே.



    சுதந்திர போராட்ட வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற வீரமங்கை வேலுநாச்சியார், தனது கணவன் முத்துவடுகநாதர் ஆங்கிலப் படைத்தளபதிகள் ஸ்மித், பாஞ்சோர் ஆகியோரால் கொல்லப்பட்ட நிலையில், ஆங்கில அரசுக்கு எதிராக குறுநில மன்னர்களை ஒருங்கிணைத்து மைசூர் மன்னன் ஐதர் அலியுடன் நட்புறவு கொண்டு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சிவகங்கை சீமையை வெற்றி கொண்ட செய்தியை எதற்குள் அடக்குவது? இச்செயலை போற்றாமல் இருக்க முடியாது.

    அரசியலில் கொள்கை ரீதியாக முரண் கொண்டவர்கள்கூட நட்பு ரீதியாக அன்புள்ளம் கொண்டு வாழ்ந்ததை அறியமுடிகிறது. இப்படியான நட்புகளை காணும் போது நட்பின் உண்மைத் தன்மையையும் உறுதிப்பாட்டையும் தெரிந்துகொள்ள முடிகிறது.

    கிராமம், நகரம், நாடு தாண்டி உலகளாவிய நட்புறவை ஆரோக்கியத்துடன் பெற்றுத்தருவதில் விளையாட்டு முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒலிம்பிக் போன்ற விளையாட்டுகள் மூலம் நாடுகளுக்கு இடையே பலமான நட்புணர்வு கிடைக்கிறது என்பது உண்மை. தமிழன் அன்று தெற்காசிய நாடுகளோடு கொண்டு இருந்த வாணிப சிறப்பை யாவரும் அறிவோம். நட்புறவுக்கும் வாணிபம் முக்கியப் பங்கு வகிக்கின்றது.

    இவற்றைப் போன்றே ஊர் திருவிழாக்கள் மூலமாகவும், இல்லங்களில் நடக்கும் இன்ப, துன்ப நிகழ்வுகளின் மூலமாகவும் நட்புறவு மிக அழகாக கிடைப்பதுடன் விடுபட்ட உறவுகளை புதுப்பித்துக் கொள்ளும் இடமாகவும் இவ்விடங்கள் திகழ்கின்றன.

    மனிதர்களுக்கு இடையேயான நட்புறவைத் தாண்டிபிற உயிர்களையும் தன்னுயிர் போல் கருதி பறவைகள், விலங்குகள், செடி, கொடிகளிடம் மனிதன் ஏற்படுத்திக் கொள்ளும் நட்பினால் மனிதன் ஒருபடி நிலை உயர்ந்து மேன்மை அடைகிறான். இந்த நட்புணர்வால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகின்றது. மற்ற உயிரினங்கள் மனிதர்களிடம் நம்பிக்கையையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ளும் போது மனிதர்களிடம் நட்பாகின்றன.

    மாவீரன் அலெக்சாண்டரை இந்திய துணை கண்டம் வரை போர்களுடனே சுமந்து வந்த பூசிப்பலா என்ற குதிரை அவருடைய பழக்கத்தாலும், செயலாலும் மிக சிறந்த நண்பனாக விளங்கியது. அந்த குதிரை 30 வயதில் இறக்கும் போது அலெக்சாண்டர் ஒரு நகரத்திற்கு பூசிப்பலா என்று பெயரிட்டு மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

    காலம் கடந்தும் நண்பனின் நினைவினை ஊட்டும் கடிதங்கள் பெட்டியில் கிடந்த காலம் மாறி, அலைபேசி உலகில் வாழ்ந்தாலும் சில அடிப்படை நிகழ்வுகளும், செய்திகளும் மாறுவதில்லை. அலைபேசியின் வழியும் போற்றத் தகுந்த வலுவான நட்பினை அடையாளம் கண்டு நட்புறவை ஏற்படுத்திக் கொள்வது அதனை பயன்படுத்தும் ஒவ்வொருவரின் கையில் உள்ளது.

    தங்களது பிள்ளைகளை சீர்திருத்திட முடியாத சூழலில் பெற்றோர்கள் அவர்களின் நண்பர்களை அணுகி பிள்ளையை சீர்திருத்த முனையும் காட்சியை இன்றளவும் காண முடிகின்றது. நட்பு அத்தகைய வல்லமை பெற்றது. அதே நிலையில் மன ஒற்றுமை இல்லாதவர்களுடைய நட்பு தீராத துன்பத்தை தரும்.

    எந்தவித எதிர்பார்ப்பும், சுயநலமும் இல்லாத கனிந்த நட்பு மிக சிறந்த நட்பாகும். இத்தகைய நட்பினை அடையாளம் கண்டு கரம் பிடித்து வாழ்வின் வெளிச்சத்தைப் பரிசாகப் பெறுவோம்.

    பு.இந்திராகாந்தி, உதவிப் பேராசிரியை
    இதயம் பலவீனமாக உள்ளவர்களும், அதிக படபடப்பு உள்ளவர்களும் தினமும் இரு வேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் பட படப்பு நீங்கும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
    பேரிக்காய் ஆப்பிள் வகையைச் சார்ந்தது எனினும் ஆப்பிளில் இல்லாத விட்டமின் ஏ இதில் உள்ளது. ஆப்பிளை விட இது விலை மலிவு என்றாலும் ஆப்பிளைவிட பல மருத்துவக்குணங்கள் உடையது. பேரிக்காய் கிடைக்கும் காலத்தில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் கிடைக்கும்.

    எலும்புகள், பற்கள் பலப்படும். இதயம் வலுவாகும். இரைப்பை, குடல், பிற ஜீரண உறுப்புகளை பலமாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

    இதை அடிக்கடி உண்ணும்போது நன்கு பசியும் எடுக்கும். ஜீரணமும் நன்றாக ஆகும். வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் ஆற்றல் பேரிக்காய்க்கு உண்டு.

    திடீரென இதயம் சிலருக்கு படபடக்கும். மனதில் அச்சம் தோன்றும், வியர்வை ஏற்படும், கை, கால் உதறும் இப்படிப்பட்டவர்கள் பேரிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டால் இந்தப் பலவீனங்கள் நீங்கும். மன உறுதியும், மனத்தெம்பும் ஏற்படும். சிறுவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டியது. அவர்கள் எலும்புகளும், பற்களும் பலமாக இருக்கவும் பல நோய்கள் வராமல் இருக்கவும் பேரிக்காய் துணை செய்யும்.



    கர்ப்பிணிகள் பேரிக்காயைச் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை நல்ல திடமாக, ஆரோக்கியமாக இருக்கும். பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் பேரிக்காய் நல்ல நண்பன். தாய்மார்கள் அடிக்கடி சாப்பிட்டால் பால் சுரப்பு அதிகமாகும்.

    அதிக சத்து நிறைந்ததும், சுவையானதுமான பேரிக்காய் மலைப் பகுதிகளில் விளையக் கூடியது. பேரிக்காய் தோலில் அதிக அளவு உள்ள ஊட்டச் சத்துகள் புற்றுநோய் மற்றும் இதய நோயை குணப்படுத்துகின்றன என்று புதிய மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

    பேரிக்காயில் உள்ள நார்ச்சத்து உடலுக்கு நன்மை தருகிறது. தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது. குறைந்த கலோரி கொண்ட பேரிக்காய் உடல் பருமனை குறைக்கிறது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பினை அகற்றுகிறது. இதில் வைட்டமின் சி செறிந்துள்ளது.

    இதயம் பலவீனமாக உள்ளவர்களும், அதிக படபடப்பு உள்ளவர்களும் தினமும் இரு வேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் பட படப்பு நீங்கும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். வளரும் குழந்தைகளுக்கு கால்சியம், இரும்புச் சத்துக்கள் அவசியம் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன.

    பேரிக்காய் ஒரு சில மாதங்கள் மட்டுமே கிடைக்கும். கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப் பின்பு படுக்கைக்கு செல்லும் முன்பு சாப்பிடக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். 
    பல்வேறு வகையான புட்டு சாப்பிட்டு இருப்பீங்க. இன்று ரவையில் புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த முறை செய்வது மிகவும் எளிமையானது.
    தேவையான பொருள்கள் :

    ரவை - 250 கிராம்
    சர்க்கரை - 1 கப்
    தேங்காய் - அரை மூடி ,
    உப்பு - ஒரு சிட்டிகை
    நெய் - 1 ஸ்பூன்



    செய்முறை :

    தேங்காயை துருவிக்கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் ரவையை போட்டு உதிர் உதிராக வாசனை வரும்வரை வறுக்கவும்.

    வறுத்த ரவை ஆறியதும் தண்ணீரில் உப்பு சேர்த்து தெளித்து பிசிறிக் கொள்ளவும்.

    இத்துடன் சர்க்கரை, துருவிய தேங்காய், நெய் கலந்து, வைத்து கொள்ளவும்.

    பிசறி வைத்த மாவை புட்டு வேக வைக்கும் குழாயில் போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சுவையான ரவா புட்டு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெண்கள் கைகளின் அளவை குறைத்து, அதில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்க போதுமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.
    பெண்கள் கைகளின் அளவை குறைத்து, அதில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்க போதுமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். சரி, கைகளின் எடையை குறைக்க கீழ்கூறிய சில வகை உடற்பயிற்சியை செய்து பாருங்கள்.

    நெஞ்சை பந்தின் மேல் அமுக்குதல்

    இந்த உடற்பயிற்சியில் ஈடுபட்டால் ட்ரைசெப்ஸ், தோள்பட்டைகள், நெஞ்சு, மைய தசைகள் மற்றும் கால்கள் வலுவடையும். இதனை ஆரம்பிக்க மேல்புற முதுகு மற்றும் தலையை பந்தின் மீது வைத்திடுங்கள். அதே போல் உடம்பின் கீழ் பகுதியை தாங்க கால்களை தரையில் வைத்து ஒரு பாலத்தின் வடிவில் இடுப்பை உயர்த்திக் கொள்ளுங்கள். முழங்கைகளை மடக்கி உடல் எடையை நெஞ்சுக்கு கொண்டு வாருங்கள். எடையை கூரையை நோக்கி அழுத்தி, உங்கள் நெஞ்சு தசைகளை அழுத்தி, உங்கள் கைகளை நேராக நீட்டிக் கொள்ளுங்கள்.

    அப்ரைட் ரோ

    இந்த உடற்பயிற்சி மேல்புற முதுகு, தோள்பட்டைகள் மற்றும் பைசெப்களுக்கு வலுசேர்க்கும். டம்ப் பெல்லை இரண்டு கைகளிலும் தூக்கி கொண்டு நேராக நிற்க வேண்டும். அப்படி நிற்கும்போது, கால்கள் இடுப்பை விட்டு விலகி விரிந்திருக்க வேண்டும். முழங்கைகளை தோள்பட்டை வரை உயர்த்தி, எடையை ஒன்றாக நெஞ்சு வரை கொண்டு வாருங்கள். மீண்டும் எடையை ஆரம்பித்த நிலைக்கு கொண்டு வாருங்கள். இதனை தொடர்ந்து சில முறை செய்யலாம்.



    நகரும் பலகை

    இந்த உடற்பயிற்சி மேல்புற கைகளை வலுவடைய செய்யும். ஒரு பலகையின் நிலையை போல் இருந்து, இதனை தொடங்க வேண்டும். இந்த பயிற்சியை செய்ய கைகளை ஒன்றின் பின் ஒன்றாக உடலுடன் சேர்த்து அசைக்க வேண்டும்.

    டம்ப் பெல் பென்ட் ஓவர் ரிவர்ஸ் ப்ளைஸ்

    இந்த உடற்பயிற்சி கைகள், தோள்பட்டைகள் மற்றும் முதுகு பக்கத்தை வலுவடையச் செய்யும். தோள்பட்டையின் அகலத்திற்கு கால்களை விரித்து தரையில் நின்றபடி இடுப்புக்கு கீழ் குனிந்து, உடல் தரைக்கு இணையான நிலையில் இருக்கும்படி இதனை ஆரம்பியுங்கள். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் வளையுங்கள்.

    இரண்டு கைகளிலும் டம்ப் பெல்ஸ்களை வைத்துக் கொண்டு, இரண்டு கைகளையும் நேராக தரையை நோக்கி நீட்டிடுங்கள். நேராக வைத்திருக்கும் கைகளை மெதுவாக உயர்த்தி வானத்தை நோக்கி மேலே தூக்குங்கள். கைகள் தோள்பட்டைக்கு நேரான நிலையில் செல்லும் வரை, அதனை உயர்த்துங்கள். பின் கைகளை மெதுவாக கீழிறக்குங்கள். இதனை சிலமுறை தொடர்ந்து செய்யுங்கள்.
    கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு கடுகு எண்ணெய் தீர்வு தருகிறது. கடுகு எண்ணெயை பயன்படுத்தி எப்படி கூந்தல் பிரச்சனையை தடுக்கலாம் என்று பார்க்கலாம்.
    கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு கடுகு எண்ணெய் தீர்வு தருகிறது. இன்று கடுகு எண்ணெயை பயன்படுத்தி எப்படி கூந்தல் பிரச்சனையை தடுக்கலாம் என்று விரிவாக கீழே பார்க்கலாம்.

    * வாரம் இருமுறை கடுகு எண்ணெயை தலையில் தேய்த்து குளித்தால் வயதானாலும் நரை முடி எளிதில் வராது. கடுகு எண்ணெயை லேசாக சூடுபடுத்தி தலையில் மசாஜ் செய்தால் நரை முடி மறையும்.

    * ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த எண்ணெயை உபயோகித்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும். வட இந்தியர்களில் கூந்தல் அழகிற்கு இதுதான் காரணம்.



    * கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் ஈரப்பதம் அதிக நேரம் கூந்தலில் நீடிக்கும். எளிதில் வறட்சி அடையாது.

    * பொடுகு அரிப்பினால் கூந்தல் ஆரோக்கியமற்றதாக காணப்பட்டால் கடுகு எண்ணெய் கொண்டு தினமும் மசாஜ் செய்ய குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

    * மெலிதான கூந்தல் இருந்தால் வாரம் மூன்று நாட்கள் கடுகு எண்ணெய் கொண்டு ஆயில் மசாஜ் செய்து குளித்து வர கூந்தல் அடர்த்தி அதிகரிக்கும்.

    * கூந்தலில் நுனி அடிக்கடி பிளவு உண்டானால் அதிகமாக முடி உதிர்தல் ஏற்படும். இதனை தடுக்க கடுகு எண்ணெயால் மசாஜ் செய்து வர நுனி பிளவு நீங்கும்.
    மசாலா தோசை, பொடி தோசை, ரவா தோசை என பலவிதமான தோசைகளை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று குதிரைவாலி அரிசி, தக்காளி சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குதிரைவாலி அரிசி - 4 கப்
    உளுந்து - 1 கப்
    தக்காளி - 2
    இஞ்சி - சிறிய துண்டு
    வெங்காயம் - 1
    கறிவேப்பிலை - சிறிதளவு
    வெந்தயம் - கால் டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குதிரைவாலி அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் 3 மணிநேரம் ஊறவைத்து தோசைக்கு அரைப்பது போல் அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவில் உப்பு சேர்த்து கலந்து 4 மணிநேரம் புளிக்க விடவும்.

    தக்காளி, இஞ்சி, சீரகத்தை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த விழுதை புளித்த மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சத்தான குதிரைவாலி தக்காளி தோசை ரெடி.

    இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. விருப்பப்பட்டால் தேங்காய் சட்னியுடன் சுவைக்கலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×