என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    மட்டன் கீமாவில் கோலா உருண்டை, கிரேவி, புலாவ் செய்து இருப்பீங்க. இன்று மட்டன் கீமா தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோசை மாவு - தேவையான அளவு
    மட்டன் கொத்துகறி - 150 கிராம்
    பச்சை மிளகாய் - 2
    வெங்காயம் - 2
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    மிளகு தூள் - 1 ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    பட்டை - 1
    கிராம்பு - 2
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மட்டன் கொத்துகறியை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    கடாயை அடுப்பில் வைத்து, அதில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

    இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்சை வாசனை போனவுடன் கொத்துகறி மசாலா துாள்கள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, அடுப்பை சிம்மில் வைத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மட்டன் நன்கு வேகும் வரை பிரட்ட வேண்டும். மட்டன் வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.

    பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவைக் தோசையாக ஊற்றி அதன் மேல் தூவியது போல் மட்டன் கீமாவை போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றவும். வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

    சுவையான மட்டன் கீமா தோசை ரெடி

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெற்றோர் குழந்தைகள் தவறைத் திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும். பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது.
    * குழந்தை தவறைத் திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும். பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது.

    * தண்டனையின் அளவு குற்றத்தைப் பொறுத்ததாக இருக்க வேண்டும். மாறாக பெற்றோரின் மன நிலையைப் பொறுத்ததாக இருக்கக் கூடாது.

    * தண்டனை குழந்தை செய்த தவறைப் புரிய வைப்பதாக இருக்க வேண்டும். உடலைக் காயப்படுத்துவதாக அமையக் கூடாது.

    * தண்டித்த உடனே பாசத்தைக் காட்டாது, குழந்தை தன தவறைப் புரிந்து கொண்டவுடன் அதிகப் பாசத்தைக்காட்டலாம்.

    * தண்டனை கொடுத்தது குழந்தை செய்த தவறுக்குத்தான், அதன் மீதுள்ள வெறுப்பினால் அல்ல என்பதைக் குழந்தைக்குப் புரிய வைக்க வேண்டும்.

    * குழந்தை தவறு செய்தால் உடனே தண்டிக்க வேண்டும். நீண்ட நேரம் கழித்துத் தண்டிப்பது முறையல்ல.

    * குழந்தை தவறு செய்தால், தொடர்ந்து தண்டிக்க வேண்டும். ஒரு முறை தண்டிப்பதும், மறுமுறை ஊக்குவிப்பதாகவும் இருந்தால் குழந்தையின் தவறுகள் தொடரும்.

    * குழந்தை மீது பாசம் உள்ளவர்கள் தண்டித்தால் உடனடி பலன் கிடைக்கும். தொடர்ந்து வெறுப்புக் காட்டி வருபவர் தண்டித்தால் எதிர் விளைவுகள் தான் உருவாகும்.

    * குழந்தையைத் தண்டிக்கும் முன் செய்த தவறு பற்றியும் கொடுக்கப் போகும் தண்டனை பற்றியும் குழந்தையிடம் சொல்லி விட வேண்டும்.

    * தண்டனைக்கு உடல் ரீதியான அணுகு முறையை விட மனரீதியான அணுகு முறையே சிறந்தது.

    வெளியில் செல்லும் போது ஏற்படும் தூசியால் சிலருக்கு முகம் களையிழந்து காணப்படும். அவர்களின் முகத்தில் ஒளியேற்ற இதோ ஆரஞ்சு பேஷியல்..
    ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் "ப்ளிச்" ஆகிவிடும். தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது.

    சிலருக்குக் கண்களுக்குக் கீழ், இரண்டு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும் அந்தக் கருமையை விரட்டியடிக்க ஒரு டிப்ஸ்.
    1 வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது - கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து, எங்கெல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்யுங்கள் கருமை ஓடிவிடும்.

    ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் சம அளவு எடுத்து அதனுடன் ஆரஞ்சு சாறு கலந்து,முகம் மற்றும் கழுத்தில் அப்ளை பண்ணி 15 நிமிடம் கழித்து நன்கு கழுவ வேண்டும்.

    வாரத்திற்கு ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பியூட்டிபார்லர் போகாமல் பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும்.

    ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் ஸ்பூன், கசகசா விழுது ஒரு ஸ்பூன், சந்தனத்தூள் கால் ஸ்பூன் அனைத்தையும் சேர்த்து கெட்டியான விழுதாக்கிக் கொள்ள வேண்டும்.

    தினமும் இரவு தூங்கப் போகும்போது, பருக்கள் வந்த இடத்தில் அப்ளை பண்ணி காய்ந்ததும் முகத்தை நன்கு கழுவ வேண்டும். இந்த சிகிச்சையால் வடு மறைவதுடன், பருக்களும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.
    டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகு, உருளைக்கிழங்கு சேர்த்து பரோட்டா செய்தும் சாப்பிடலாம். இன்று இந்த பரோட்டா செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்  :

    கோதுமை மாவு - அரை கப்
    கேழ்வரகு மாவு - அரை கப்
    உப்பு - தேவையான அளவு
     
    ஸ்டஃப்பிங்க்கு...

    உருளைக்கிழங்கு - 1
    கரம்மசாலாத்தூள் - அரை ஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 ஸ்பூன்
    ஒமம் - கால் ஸ்பூன்



    செய்முறை :

    கோதுமை மாவு, ராகி மாவு இரண்டையும் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரத்திற்கு மூடி ஊற விடவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.

    மசித்த உருளைக்கிழங்குடன் உப்பு, கரம்மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, ஒமம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    மாவை சமஅளவு உருண்டைகளாக பிரித்து உருட்டி, பூரி அளவிற்கு திரட்டி உருளைக் கலவையை நடுவில் வைத்து நன்றாக மூடி கையால் தட்டி மெதுவாக திரட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்து மாவிலும் செய்து வைக்கவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் பரோட்டாவை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி சிறிதளவு எண்ணெய் விட்டு 2 பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    சுவையான ராகி ஆலு பரோட்டா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த ஆசனம் நுரையீரல் சம்பந்தமான கோளாறு உள்ளவர்களுக்கு நன்மையளிக்கிறது. கழுத்து, தோள்கள், முதுகு ஆரோக்கியமாக இருக்கும். கழுத்து வலி, முதுகுவலி இடுப்பு வலி நீங்கும்.
    பெயர் விளக்கம்: மார்ஜாரி என்றால் பூனை என்று பொருள். பூனை முதுகை மேல் நோக்கியும் கீழ்நோக்கியும் வளைப்பது போல் இந்த ஆசனம் அமைந்திருப்பதால் மார்ஜாரி ஆசனம் என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை: தரை விரிப்பின் மேல் மண்டியிட்டு அமரவும். (வஜ்ராசனம் பிருஷ்டத்தை தூக்கி முழங்கால்களில் நிற்கவும்).

    முன் வளைந்து தோள்களுக்கு நேராக உள்ளங்கைகளை தரையில் பதிக்கவும். கைகளை நேராக்கவும், கை, மணிக்கட்டுகளுக்கு நேராக இருக்கும்படி அகற்றி வைக்கவும். உடல் முன்னோக்கியோ, பின் நோக்கியோ போகாதபடி இடுப்பிலிருந்து புஜம் வரைக்கும் உள்ள உடல் பாகம் சமமாக இருக்கட்டும். இது மார்ஜாரி ஆசனத்தின் முதல் நிலை.

    மூச்சை உள்ளுக்குள் இழுத்து, தலையை மேலே உயர்த்தவும். அதே சமயம் முதுகை கீழ்நோக்கி நன்றாக வளைக்கவும். இந்த நிலையில் 35 வினாடி மூச்சை அடக்கி வைக்கவும். மூச்சை வெளியே விட்டு தலையை இரு கைகளுக்கு இடையில் உள் நோக்கி வளைத்து முதுகை மேலே தூக்கவும். இந்த நிலையில் மீண்டும் மூச்சை உள்ளுக்கு இழுக்காமல் 35 வினாடி அப்படியே இருக்கவும்.

    இது மார்ஜாரி ஆசனத்தின் ஒரு சுற்று பயிற்சி ஆகிறது. இந்த ஆசனத்தை மேற்கண்ட முறைப்படி 5 முதல் 10 சுற்று பயிற்சி செய்யலாம்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம்: முதுகு, இடுப்பு, கழுத்து, மூச்சு மற்றும் சுவாதிஷ்டான சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக் குறிப்பு: இந்த ஆசனத்தில் மூச்சை அடக்காமல் நிலை 6ல் நிதானமாக மூச்சை உள்ளுக்குள் இழுத்தும் நிலை 7ல் நிதானமாக மூச்சை வெளியே விட்டும் தொடர்ந்து 10 முதல் 20 முறை பயிற்சி செய்யலாம்.

    பயன்கள்: நுரையீரல் சம்பந்தமான கோளாறு உள்ளவர்களுக்கு நன்மையளிக்கிறது. கழுத்து, தோள்கள், முதுகு ஆரோக்கியமாக இருக்கும். கழுத்து வலி, முதுகுவலி இடுப்பு வலி நீங்கும். 
    பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதன் மூலம் மார்பக புற்றுநோய் வருவதற்கான ஆபத்தை குறைக்க முடியும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
    மார்பக புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இறக்கும் பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிற காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதன் மூலம் மார்பக புற்றுநோய் வருவதற்கான ஆபத்தை குறைக்க முடியும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அவற்றுள் ஆன்டிஆக்சிடென்ட் மற்றும் நுண் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அவை மார்பக புற்றுநோய் பாதிப்பில் இருந்து காக்க உதவுகின்றன. அத்தகைய உணவு வகைகள் குறித்து பார்ப்போம்.

    கிரீன் டீ, உலகளவில் பரவலாக பருகப்படும் ஆரோக்கிய பானம். இதில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்ட், உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் திறன் கொண்டது. அது மார்பக புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் தாக்கும் அபாயத்தை குறைக்க உதவுகிறது. மரபணுக்கள் சேதம் ஆகாமல் தடுக்கவும் துணைபுரிகிறது. கிரீன் டீயை தொடர்ந்து பருகிவந்தால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். உடல் எடை குறைப்புக்கும் கைகொடுக்கும். ஆனால் தரமான கிரீன் டீயை வாங்கி பயன்படுத்த வேண்டும்.

    உடலில் புற்றுநோய் செல்களின் அசாதாரண வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் காய்கறி வகையை சேர்ந்த பிராக்கோலிக்கு இருக்கிறது. மார்பகம், சிறுநீர்பை, நுரையீரல் போன்ற உறுப்புகளில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதில் அது முக்கியபங்கு வகிக்கிறது.



    காளான்களை தொடர்ந்து உணவில் சேர்ப்பதும் அவசியமானது. காளான்களை தினமும் உணவில் சேர்க்கும் பெண்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு குறைவாக இருக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மாதவிடாய் சுழற்சி முடிவடையும் நிலையில் இருக்கும் பெண்கள் காளான்களை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

    தக்காளி பழங்களை வேகவத்து உணவில் சேர்த்தால் உடல்நலம் மேம்படும். அதிலிருக்கும் லீகோபின் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டாக செயல்படுகிறது. பெண்களின் உடலில் லீகோபின் அதிகம் சேர்ந்தால், அவர்களுக்கு மார்பக புற்றுநோய் அபாயம் 22 சதவீதம் குறையும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    கேரட்டில் கரோட்டினாய்டு நிறைந்திருக்கிறது. உடலில் அதிக அளவு கரோட்டினாய்டுகள் இருந்தால் மார்பக புற்றுநோய்க்கான அபாயம் 28 சதவீதம் குறையும். அதனால் பெண்கள் கேரட்டை அதிகம் சாப்பிடுவது நல்லது.
    தொடர்ந்து துரித உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மூளையின் வளர்ச்சி தடைபடும், அதன் அளவும் சுருங்க தொடங்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
    துரித உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு தருபவை. அவை மூளையின் செயல்பாட்டுக்கும் பங்கம் விளைவிக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து துரித உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மூளையின் வளர்ச்சி தடைபடும், அதன் அளவும் சுருங்க தொடங்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

    இதுபற்றி ஊட்டச்சத்து நிபுணர் மோனிஷா கூறுகையில், ‘‘அளவுக்கு அதிகமாக துரித உணவுகளை சாப்பிடுவது மூளையின் வளர்ச்சியை பாதிக்கும். அதனால் ஞாபகத்திறனும் குறையும். தொடர்ந்து துரித உணவுகளை சுவைத்தால் டோகோமைன் என்ற ரசாயனம் சுரக்கும். இது துரித உணவுகளை சாப்பிட தூண்டிக்கொண்டே இருக்கும். அதனால் துரித உணவுகள் சாப்பிடுவதை குறைப்பது கடினமான காரியமாகிவிடும்.’’ என்கிறார்.

    மூளையின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். காலி பிளவரில் ஊட்டச்சத்துகளும், தாதுக்களும் நிறைந்திருக்கின்றன. இவை மூளையின் நலனையும் பாதுகாக்கும். அதேபோல் தினமும் காலையில் ஆறு பாதாம் பருப்புகளை சாப்பிடுவது நல்லது. அது நினைவாற்றலை அதிகப்படுத்த உதவும்.

    இதில் ஏ, டி ஆகிய வைட்டமின்கள், புரதச்சத்து, நல்ல கொழுப்பு போன்றவை நிறைந்திருக்கின்றன. இவை ஒட்டுமொத்த உடல் நலனையும் மேம்படுத்த உதவும். பூண்டுவை தினமும் சமையலில் சேர்த்துக்கொள்வது அவசியமானது. அது மூளை சுருங்குவதை தடுக்கும். முட்டைக்கும் மூளையை சுருங்காமல் பாதுகாக்கும் ஆற்றல் இருக்கிறது. அதனால் தினமும் ஒரு முட்டையாவது சாப்பிட்டு வர வேண்டும். கோழி இறைச்சியும் மூளைக்கு நல்லது. அதில் புரதம், தாதுக்கள், வைட்டமின்கள் உள்ளடங்கி இருக்கிறது. 
    தோசை, இட்லி, சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த தக்காளி ஊறுகாய். இன்று இந்த ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தக்காளி - 1 கிலோ
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க
    சர்க்கரை (சீனி) - கொஞ்சம்
    வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    வெந்தயத்தை வெறும் கடாயில் போட்டு வறுத்து பொடித்து கொள்ளவும்.

    தக்காளியைக் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

    அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டுத்தாளித்த பின்னர் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி ஓரளவு வதங்கியதும் அதில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி ஓரளவு வதங்கியவுடன் சர்க்கரை (சீனி) யையும், வெந்தயப் பொடியையும் சேர்க்கவும். கலவையை சுவை பார்த்து, தேவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.

    அடிப்பிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறிவிடவும்.

    தக்காளியில் உள்ள நீர் எல்லாம் வற்றி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

    சூப்பரான தக்காளி ஊறுகாய் ரெடி.

    சூடு ஆறியபின் பாட்டில்களில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக்கொள்ளவும். சில வாரங்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இன்றைய சூழ்நிலையில் திருமணத்தின் போது மணமக்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஓரளவு தயாராவதைப்போல, திருமணத்திற்குப் பின் இருவரும் நிதி சார்ந்த விஷயங்களுக்கும் தயார் ஆவது நல்லது.
    இன்றைய இளைய தலைமுறையினர் தெளிவாக இருப்பதுபோல வெளியில் காட்டிக்கொண்டாலும், அவர்கள் நிதி சார்ந்த விஷயங்களில் நிறைய கஷ்டப்படுகிறார்கள். இவர்களுடைய எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அது வெளியே தெரியும் போது பூதாகரமாகி இறுதியில் விவாகரத்து வரை வந்து நிற்கிறது.

    கணவன், மனைவி ஆளாளுக்கு கண்டிஷன் போட்டுக் கஷ்டப்பட்டு வாழ்வதை விட ஆரம்பத்திலிருந்தே நிதி சார்ந்த விஷயங்களில் சற்று கவனத்தைச் செலுத்தி சந்தோஷமாகக் குடும்பம் நடத்த சில முக்கியமான விஷயங்களைப் பார்ப்போம்.

    1. திருமண வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக வாழ் நாள் முழுவதும் கஷ்டப்படும் சூழ்நிலைக்குச் சென்று விடாதீர்கள். ஒவ்வொரு மாதமும் வருமானத்திற்கு அதிகமாகச் செலவு செய்யாதீர்கள். உங்கள் வருமானம் என்னவோ அதை முதலில் உணர்ந்து அந்த வரம்பிற்குள் வாழக் கற்றுக்கொள்ளுங்கள்.

    2. அவசரகாலம் என்பது எல்லோருக்குமே வரக்கூடிய ஒன்றுதான். இதில் ஏழை, பணக்காரன் என எந்தவிதமான பாகுபாடும் இல்லை. ஆகையால் வேலை இழப்பு, அவசர மருத்துவ சிகிச்சை என எந்த ஒரு அவசரத் தேவையாக இருந்தாலும் 'எமர்ஜென்சி ஃபண்ட்' அதாவது அவசரத் தேவைக்கான முதலீட்டை மேற்கொள்ளத் திட்டமிடுங்கள்.

    3. உங்கள் குழந்தைகளின் எதிர்கால கல்விச் செலவு மற்றும் திருமணத்திற்காக ஆரம்பத்திலிருந்தே சிறுக சிறுக சேமிக்கத் திட்டமிடுங்கள். இதைப்போல வீடு வாங்கும் திட்டம் என எதுவாக இருந்தாலும் கணவன், மனைவி இருவரும் ஆலோசித்து சேமிக்கத் துவங்குங்குகள்.



    4. திருமணத்திற்கு முன் உங்கள் நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ நீங்கள் அடிக்கடி கடன் வாங்கி இருக்கலாம்; அதைச் சரியாக திருப்பிச் செலுத்தியும் இருப்பீர்கள். ஆனால், திருமணத்திற்குப் பிறகாவது எதற்கெடுத்தாலும் கடன் என்ற நிலையைத் தவிருங்கள்; கடன் வாங்காமல் வாழ்க்கையை இன்பகரமாக வாழ பழகிக்கொள்ளுங்கள்.

    5. திருமணத்திற்கு முன் நீங்கள் ப்ளேபாயாக கூட இருந்திருக்கலாம். ஆனால், திருமணத்திற்கு பின்பும் நீங்கள் நிதி சார்ந்த விஷயங்கள் எதுவும் தெரியாமல் ஸ்கூல் பாயாக இருந்தால் சற்று கடினமே. ஆகையால் நிதி சார்ந்த விஷயங்கள் எதுவாக இருந்தாலும் அதை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்குங்கள். தினமும் எவ்வளவு செலவு செய்கிறோம்; எதற்காகச் செலவு செய்கிறோம் என்பதைக் குறித்துக்கொள்ளுங்கள். தேவையற்ற செலவுகளைத் தவிருங்கள். நிதி சார்ந்த விஷயங்களில் உங்களுக்குத் தேவையானதை தேடித் தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக நிதி சார்ந்த புத்தகங்களை இன்றிலிருந்தாவது படிக்கத் துவங்குங்கள்.

    6. கணவன், மனைவி இருவரும் வாழ்க்கையின் இறுதி தருவாயிலும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த அவசியம் செய்ய வேண்டியது ஓய்வுக்காலத்திற்கான திட்டமிடுதலே. ஆகையால் திருமணம் முடிந்த ஆண்டே ஒவ்வொரு மாதமும் உங்களுடைய மாதாந்திர சம்பளம் எதுவாக இருந்தாலும் உங்கள் பணத்தை சிறிது சிறிதாக ஒய்வுக்காலத்திற்காக சேமிக்கத் திட்டமிடுங்கள். இல்லையெனில் இது சார்ந்த முதலீட்டுத் திட்டங்களிலோ அல்லது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலோ முதலீடுகளை மேற்கொள்ள ஆரம்பியுங்கள்.

    7. இன்றைய சூழ்நிலையில் திருமணத்தின் போது மணமக்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஓரளவு தயாராவதைப்போல, திருமணத்திற்குப் பின் இருவரும் நிதி சார்ந்த விஷயங்களுக்கும் தயார் ஆவது நல்லது. ஏனெனில் மணமக்கள் இருவரும் வெவ்வேறு சூழலில் வளர்ந்தவர்கள், வாழ்ந்தவர்கள். திருமண வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பார்கள். அதைப்போல நிதி சார்ந்த விஷயங்களில் இருவரில் ஒருவாரது இதை உணர்ந்தால்தான் வாழ்க்கை நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருக்கும்.

    மண வாழ்க்கை முறிய ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால், கணவன், மனைவி இடையே உறவு நீடிக்க எல்லையற்ற அன்பு காட்டுவதைப்போல நிதி சார்ந்த விஷயங்களில் இருவரும் கவனமாகவும், கட்டுப்பாட்டுடனும் இருப்பது மிக முக்கியம். 
    மஞ்சள் கறைகள் பற்களுக்கு பின் தானே உள்ளது என்று நினைத்து பலரும் சாதாரணமாக உள்ளனர். ஆனால் இது அப்படியே நீடித்தால், அதனால் பற்களில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும்.
    ஒருவருக்கு வாய் பராமரிப்பு என்பது மிகவும் இன்றியமையாதது. வாயில் பிரச்சனைகள் இருந்தால், அதனால் உடலில் பல பிரச்சனைகள் மிகவும் வேகமாக வரக்கூடும். மேலும் வாய் பிரச்சனை ஒருவரின் அழகையும் கெடுக்கும். அப்படி வாயில் இருக்கும் இன்று வரை பலரும் சாதாரணமாக நினைத்து விட்டுக் கொண்டிருக்கும் ஒன்று தான் பற்களின் பின் உள்ள மஞ்சள் கறைகள். இந்த மஞ்சள் கறைகள் பற்களுக்கு பின் தானே உள்ளது என்று நினைத்து பலரும் சாதாரணமாக உள்ளனர். ஆனால் இது அப்படியே நீடித்தால், அதனால் பற்களில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும். இந்த பிரச்சனைக்கு தீர்வு தரும் இயற்கை வழிமுறைகளை பார்க்கலாம்.

    * பேக்கிங் சோடாவிற்கு பற்களில் உள்ள கறைகளைப் போக்கும் சக்தி உள்ளது. அதற்கு 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து, ஈரமான டூத்பிரஷ் பயன்படுத்தி, பற்களைத் தேய்க்க வேண்டும். இப்படி வாரத்திற்கு 1-2 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

    * 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 15-20 நிமிடம் கொப்பளித்து, பின் துப்ப வேண்டும். அடுத்து பிரஷ் கொண்டு எப்போதும் போன்று பற்களைத் துலக்க வேண்டும். இப்படி தினமும் காலையில் எழுந்ததும் செய்து வந்தால் பற்களின் பின் உள்ள மஞ்சள் கறைகள் நீங்குவதோடு, ஈறு பிரச்சனைகளும் அகலும்.



    * கொய்யா இலையை வாயில் போட்டு சிறிது நேரம் மென்று, பின் அதனை துப்ப வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பற்களின் பின் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும்.

    * கிராம்பை பொடி செய்து, ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, பற்களில் தடவி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் இருமுறை செய்து வந்தால், கிராம்பில் உள்ள உட்பொருட்கள் பற்காறை மற்றும் மஞ்சள் கறைகளை நீக்குவதோடு, வாய் துர்நாற்றத்தையும் போக்கும்.

    * 2 டீஸ்பூன் வெள்ளை வினிகரில், 1 டீஸ்பூன் உப்பு மற்றும் 1/2 கப் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து கலந்து, தினமும் இருமுறை அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இதன் மூலமும் பற்களின் பின் உள்ள மஞ்சள் நிற கறைகளை நீக்கலாம்.
    சாதம், பூரி, நாண், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த முட்டை கீமா. இன்று இந்த கீமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    முட்டை - 3
    பச்சை பட்டாணி - 1/2 கப்
    தக்காளி - 1
    மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
    மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை - சிறிது

    தாளிக்க :

    எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
    பிரிஞ்சி இலை - 1
    பட்டை - 1 இன்ச்
    கிராம்பு - 2
    அன்னாசிப்பூ - 1
    பெரிய வெங்காயம் - 1



    செய்முறை  :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முட்டையை வேக வைத்து வெந்ததும் தோலுரித்து கேரட் துருவும் துருவியில் துருவிக்கொள்ளவும்.

    தக்காளியை மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானதும் ப்ரெஷ் பட்டாணி சேர்த்து கிளறவும்.

    பட்டாணி வெந்ததும் அரைத்து வைத்துள்ள தக்காளி கலவையை சேர்த்து பச்சை வாடை போகும் வரை கிளறவும்.

    பச்சை வாடை போனதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மல்லித்தூள் மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    மசாலா வாடை போனதும் அதனுடன்  துருவி வைத்திருக்கும் முட்டை துருவல் சேர்க்கவும்.

    இறுதியில் கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.

    சாதம், பூரி, சப்பாத்திக்கு சுவையான முட்டை கீமா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சரியான வயதில் கழிவறைப் பழக்கங்களை கற்றுக் கொடுப்பது, அவர்களின் பிற்கால ஆளுமை வளர்ச்சியை நிர்ணயிக்கும்.
    குழந்தை பிறந்த நாள் முதல் சிறுநீர் கழிப்பதும், மலம் கழிப்பதும் கட்டுப்பாட்டில் இல்லாத அனிச்சை சொல்களாகும். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் கழிவு நீக்கம் செய்து கட்டுப்பாடு இல்லாமல் வளரும் குழந்தைகளின் அந்நடத்தையை நெறிப்படுத்தி அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    சரியான கழிவறை நடத்தையை குழந்தை கற்றுக்கொள்வது பெற்றோரின் மகிழ்ச்சியை அதிகரிக்கும். சரியான சமயத்தில் கழிவறைப் பழக்கங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது, அவர்களின் பிற்கால ஆளுமை வளர்ச்சியை நிர்ணயிக்கும். 18 மாதங்கள் முடிந்தவுடன் இப்பயிற்சியை பெற்றோர் குழந்தைகளுக்கு அளிக்கத் துவங்குவது பொருத்தமானதாகும்.

    குழந்தை தன் உடலியக்கத்தில் நடைபெறும் மாற்றங்களை புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவு வளர்ச்சியும், தன் உடல் தசைகளை கட்டுப்படுத்தும் திறனைப் பெற்றிருப்பதும், உட்கார்ந்து எழுவது போன்ற உடல் திறனை பெறுவதும் கழிவறை பழக்க பயிற்சிக்கு அவசியம்.

    இம்மூன்றும் 18 மாதங்கள் முடிந்தவுடன்தான் சாத்தியம் என்பது குழந்தை மருத்துவர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களின் கருத்து.

    பெற்றோர் மிகுந்த கண்டிப்புடன் கழிவறைக்குத்தான் செல்ல வேண்டும் என திடீரென கட்டாயப்படுத்துவதும், குழந்தைகள் அவ்வாறு செய்யவில்லை எனில் அவர்களை தண்டிப்பதும் உடனடியாக குழந்தைகளிடத்தில் ஆளுமைப் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும்.

    கட்டாயப்படுத்தாமல் படிப்படியாக குழந்தைகளின் கழிவறை நடத்தைகளை நெறிப்படுத்துவது மிகவும் எளிமையானது. குழந்தைகளுக்கு அவர்களே எளிதாக கழட்டிக் கொள்ளும் வகையில் எலாஸ்டிக் வைத்த உடைகளை அணிவிப்பது, உட்கார்ந்து மலம் கழிக்க வசதியாக உபகரணங்களை பயன்படுத்துவது ஆகியவை அவசியம்.



    குழந்தைகளின் நடத்தையை மிக உன்னிப்பாக கவனித்துக்கொண்டே வரும் பெற்றோர் சிறுநீர் கழிக்கவோ அல்லது மலம் கழிக்கவோ குழந்தைகள் விரும்புகிறார்கள் என்ற அறிகுறி தென்பட்டால் உடனடியாக அவர்களை கழிவறைக்கு தூக்கிச் செல்ல வேண்டும்.

    குழந்தை தானே கழிவறை செல்ல வேண்டும் என்று தெரிவித்தாலோ அல்லது நாம் எதிர்பார்த்த வகையில் தன் உடையை கழற்றினாலோ, கழிவறையை நோக்கிச் சென்றாலோ அந்நடத்தையை பாராட்டி ஊக்குவிக்க வேண்டும்.

    தொடர்ந்து இவ்வாறு பழக்கப்படுத்தி வந்தால் விரைவில் குழந்தைகள் தங்கள் கழிவறை நடத்தையை மேம்படுத்திக் கொள்ளும்.

    கழிவறைப் பழக்கத்தை கற்றுக் கொடுப்பதிலிருந்தே பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு முறையையும், அவர்களின் ஆளுமையையும் அறியலாம். குழந்தைகளின் கழிவறை நடத்தையை நெறிப்படுத்துவதில் மிகுந்த கண்டிப்புடன் நடந்துகொள்ளும் பெற்றோர் பிற எல்லா விஷயத்திலும் அவ்வாறே நடந்து கொள்வர்.

    குழந்தையின் கழிவறைப் பழக்கத்தை நெறிப்படுத்துவதில் கரிசனத்துடன் நடந்து கொள்ளும் பெற்றோர் குழந்தைகளின் எல்லா விஷயத்திலும் பாசத்துடனும் அரவணைப்புடனும், அதே சமயத்தில், நல்ல பழக்கங்களை உருவாக்குவதில் உறுதியாகவும் இருப்பர்.

    விரைவிலேயே நல்ல கழிவறை நடத்தையை கற்றுக் கொண்ட குழந்தைகள் தானே தன்னை கவனித்துக் கொள்ள முடியும் என்ற உணர்வு பெற்று தனித்தியங்கும் ஆளுமைப்பண்பினை வளர்த்துக்கொள்ளும். பெற்றோர்களையே எல்லாவற்றிற்கும் சார்ந்திராமல் தனிமனிதனாக உருவாக சரியான வயதில் கழிப்பறை நடத்தைகளை கற்றுக் கொடுப்பதை துவங்குங்கள்.
    ×