என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    இந்த முத்திரையை 10 நிமிடங்கள் செய்தால், உடலில் உள்ள உயிர் சக்தி (Energy level) அதிகரிக்கும். இந்த முத்திரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    செய்முறை :

    சுண்டு விரல், மோதிர விரல், கட்டை விரல் என மூன்று விரல்களின் நுனிகள் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக வைத்திருப்பது மிக முக்கியம்.

    பிராண முத்திரையைச் செய்யும்போது, கை நடுக்கம் ஏற்பட்டால், செய்வதை நிறுத்தவும். பிராண சக்தி அதிகமாகிவிட்டதை கைநடுக்கத்தின் மூலம் உடல் உணர்த்துகிறது. அதீத இயக்கங்கள் (Aggressive behaviour) கொண்டவர்கள், இதை செய்யக் கூடாது.

    வயதானவர்கள் இரவு 8 மணிக்கு மேல் இந்த முத்திரையைச் செய்ய வேண்டாம். தூக்கம் கலைந்துவிடும்.

    பலன்கள் :

    இந்த முத்திரையை 10 நிமிடங்கள் செய்தால், உடலில் உள்ள உயிர் சக்தி (Energy level) அதிகரிக்கும். பிரச்சனைகளின் வீரியம் குறையும். இடுப்பு, முதுகு வலிகளால் அவதிப்படும் போது, இந்த முத்திரையைச் செய்துவந்தால், வலியின் வீரியம் குறைந்து, நாளடைவில் குணமாகும்.

    கண்ணாடி அணிந்திருப்பவர்கள், தினமும் 40 நிமிடங்கள் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பிராண முத்திரை செய்தால், பார்வைத் திறன் மேம்படும்.  கிட்டப்பார்வை, தூரப் பார்வை பிரச்சனைகள் சரியாகும். தொடர்ந்து 40 நிமிடங்கள் செய்ய முடியவில்லை எனில், ரிலாக்ஸ் செய்துகொண்டு மீண்டும் செய்யலாம். 10 நிமிடங்களாகப் பிரித்தும் செய்யலாம்.

    சிலருக்கு இந்த முத்திரை செய்யும்போது கண் எரிச்சல், கண்களில் நீர் வழிதல், கண் பொங்குதல் போன்ற பிரச்சனைகள் வரலாம். ஒரு பஞ்சை, சாதாரண நீரில் நனைத்து, கண்களின் மேல் வைத்துக்கொள்ளவும். பிறகு, இளஞ்சூடான நீரில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் வைக்க வேண்டும். இப்படி மூன்று நிமிடங்கள் வரை செய்ய, கண் பிரச்னைகள் சரியாகும். இரவு நேரம், பௌர்ணமி நிலவை 15 நிமிடங்கள் பார்த்தாலும் இந்த மூன்று பிரச்சனைகளும் சரியாகிவிடும்.
    மனநலத்தை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதை, என்ன மாதிரியான கவனிப்பு கொடுக்கப்படுகிறது என்பதை வறுமை, கல்வியறிவு போன்றவையே தீர்மானிக்கின்றன.
    உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரப்படி, நம் நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்ட மனநோயாளிகளில், 10 சதவீதத்தினருக்கு மட்டுமே மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் வசதி கிடைக்கின்றது. மீதி பேர் அதாவது, பெருவாரியான மனநோயாளிகள் தங்கள் வீட்டிலேயே அவர்களின் குடும்பத்தாரால் பராமரிக்கப்படுகின்றனர்.

    மனநோய் என்பது பேய் பிடித்தல், முற்பிறவியில் செய்த பாவங்களின் பலன், பில்லி சூனியம் போன்றவற்றால் வருவது என இந்தியாவின் பல பகுதிகளில் பாரம்பரியமாக நம்பப்படுகிறது. வேரூன்றி இருக்கும் பரவலான மூடநம்பிக்கைகள், தவறான தகவல்கள் ஆகியவற்றால் இத்தகைய உளவியல் பிரச்சினைகளுக்கு பணம் பறிக்கும் சாமியார்கள், மந்திரவாதிகள் ஆகியோரின் உதவியைத்தான் முதலில் நாடுகிறார்கள். உளவியல் நிறுவனம் ஒன்று, 198 மனநோயாளிகளுக்கான சிகிச்சைகள் குறித்து செய்த மதிப்பாய்வில் 45 சதவீதத்தினர் சாமியார்களிடம்தான் முதன்முதலில் போயிருக்கிறார்கள் என்பது தெரிந்தது.

    இந்தியாவின் மிக மிக குறைந்த அளவிலான நிதியே மனநலத்துக்கு ஒதுக்கப்படுகிறது. ஒரு லட்சம் மக்களுக்கு 0.036 சதவீதம் என்ற அளவில்தான் மனநல மருத்துவர்கள் இருக்கிறார்கள். 2001-ல் செய்யப்பட்ட ஓர் ஆய்வில், மனப்பிறழ்வு போன்ற நோய்களுக்கு மரபணு, தலைமுறை ஆகியவற்றை காரணமாக உயர்கல்வி பெற்றவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். படிக்காதவர்கள், குறைந்த படிப்புள்ளவர்கள் பேய், பிசாசு இவற்றை காரணமாக காட்டுகிறார்கள். மனநலத்தை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதை, என்ன மாதிரியான கவனிப்பு கொடுக்கப்படுகிறது என்பதை வறுமை, கல்வியறிவு போன்றவையே தீர்மானிக்கின்றன.

    மனநோயாளிகள் பற்றிய தவறான புரிதல்களுக்கு ஆண்டாண்டு காலமாக நம்முள் பதிந்துள்ள மூட நம்பிக்கைகள், அறியாமை இவையே காரணம். ஆரம்பத்திலேயே அறிகுறிகளை கண்டுபிடித்து தரமான சிகிச்சை அளிப்பதை தடுப்பதும் இவையே. மனநோய் ஓர் அவமான சின்னமாக கருதப்படுவதால், பல தருணங்களில் மனநோயாளிகள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுகின்றனர்.

    அதிலும் பெண் நோயாளிகள் இருந்தால் குடும்பத்தினர் அவமானமாக கருதி அவர்களை மறைத்துவைக்கிறார்கள். மனநோய் சிகிச்சையில் முக்கியமான விஷயம், சில மாதங்கள் கழித்தே பலனை அறிய முடியும் என்பதால், மனநோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் மருந்து தொடர்ந்து வெகுநாட்களுக்கு, நாள் தவறாமல் உட்கொள்ள கொடுக்கப்பட வேண்டும். ஆனால், மிக வேகமாக பலனை எதிர்பார்க்கும் பலர், பாதியிலேயே சிகிச்சையை கைவிடுகின்றனர். குடும்பத்தினர் கொஞ்சம் அக்கறையோடு செயல்பட்டால், பலரை மனநோயிலிருந்து மீட்டெடுக்க முடியும்.
    வெஜ், சிக்கன், மட்டன் பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மட்டன் கொத்துக்கறியை வைத்து சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் கொத்துக்கறி - 250 கிராம்
    சீரக சம்பா அரிசி - 300 கிராம்
    சின்ன வெங்காயம் - 100 கிராம்
    இஞ்சி - பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை - 4 டீஸ்பூன்
    புதினா - சிறிதளவு
    பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
    பிரிஞ்சி இலை - ஒன்று
    பெரிய வெங்காயம் - 2
    தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 2
    மிளகாய்த்தூள் - தேவையான அளவு
    கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
    எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
    நெய் - தேவையான அளவு
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை:


    தக்காளி, வெங்காயம், ப.மிளகாய நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

    புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி வைக்கவும்.

    கொத்துக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    சின்ன வெங்காயத்தை தோல் உரித்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.

    குக்கரை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றிச் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளித்து சேர்த்து தாளித்த பின்னர் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி - பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து மட்டனையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

    இதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து அரைத்து வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து, தீயைக் குறைத்து 15 நிமிடங்கள் வதக்கவும்.

    எண்ணெய் பிரிந்து வரும்போது தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதி வந்ததும் அரிசியைப் போட்டு அரிசி முக்கால் பதம் வரும் வரை வேகவிட்டு, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நெய் விட்டு நன்கு புரட்டவும்.

    பின்னர் குக்கரை மூடி, `வெயிட்’ போட்டு, தீயைக் குறைத்து, 15 நிமிடங்களுக்குப் பிறகு இறக்கினால்... கமகம மட்டன் கொத்துக்கறி பிரியாணி ரெடி.

    குறிப்பு: சீரக சம்பா அரிசியை 10 நிமிடங்கள் தண்ணீரில் போட்டு எடுத்துக் களையவும். அரிசி ஒரு பங்குக்கு, 2 பங்கு தண்ணீர் போதுமானது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அதிகம் படித்த ஆண்கள்கூட பெண்களை புரிந்துகொள்வதில் பின்தங்கித்தான் இருக்கிறார்கள். பெண்களை சரியாக புரிந்துகொள்ள முடியாத ஆண்களால் மணவாழ்க்கையில் வெற்றியடைய முடிவதில்லை.
    அதிகம் படித்த ஆண்கள்கூட பெண்களை புரிந்துகொள்வதில் பின்தங்கித்தான் இருக்கிறார்கள். பெண்களை சரியாக புரிந்துகொள்ள முடியாத ஆண்களால் மணவாழ்க்கையில் வெற்றியடைய முடிவதில்லை. வெளியே அவர்கள் அன்னியோன்யமான தம்பதிகள்போல் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் புகைச்சல் இருந்துகொண்டேதான் இருக்கும். பெண்களை புரிந்துகொள்ளத் தெரிந்த ஆண்களால், மனைவியிடம் இயல்பான உறவினை மேற்கொள்ள முடியும். அவர்களால் மணவாழ்க்கையையும் மகிழ்ச்சிக்குரியதாக அமைத்துக்கொள்ள முடியும்.

    பெரும்பாலான ஆண்கள் செல்போனுக்கு, மனைவியைவிட அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். செல்போன் கையில் இருந்தால் உலகையே மறந்துவிடுகிறார்கள். கண் நிறைந்த மனைவியை அருகில் வைத்துக்கொண்டு, செல்போனில் கண்டதையும் பார்த்துக்கொண்டிருப்பதை எந்த பெண்ணாலும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. சில ஆண்கள் காது வலித்து, வாய் சோர்ந்து போகும் அளவுக்கு செல்போனில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். பேசுபவர்கள் யாராக இருந்தாலும், பேசும் நேரம் என்பது முக்கியம். வீட்டில் உட்கார்ந்துகொண்டு மனைவி வெறுத்துப்போகும் அளவுக்கு ஆண்கள் வெளிநபர்களிடம் பேசிக்கொண்டிருக்கக்கூடாது.

    மனைவி பெரும்பாலும் கணவர் எப்போது வீட்டிற்கு வருவார் என்று எதிர்பார்த்துக்கொண்டிருப்பார். அவரிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்களை வைத்துக்கொண்டு காத்திருப்பார். அப்படிப்பட்ட சூழலில் கணவர் போனில் பேசிக்கொண்டோ, எதையாவது பார்த்துக்கொண்டோ இருந்தால் கணவர் தன்னை மதிக்கவில்லை என்ற முடிவுக்கு மனைவி வந்துவிடுவார்.

    கம்ப்யூட்டரே கதி என்று கிடக்கும் ஆண்களையும் பெண்களுக்கு பிடிப்பதில்லை. இப்போது காதலிக்க விரும்பும் பெண்கள்கூட வலைத்தளத்தில் அதிக பொழுதை செலவிடும் இளைஞர்கள் பக்கம் திரும்பிப்பார்க்காமல் சென்றுவிடுகிறார்கள். அவர்களுக்கு பெண்களின் இதயத்தைவிட இணைய தளத்தையே அதிகம் பிடிக்கும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டார்கள்.

    அதனால் பெண்களை கவர விரும்பும் ஆண்கள், இணையதள மோகத்தில் இருந்து விடுபடுவது அவசியமாகிறது. அதுபோல் இப்போது திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள், தங்களை பெண் பார்க்க வரும் இளைஞர்களிடம் தனியாக சந்தித்து பேசும்போது இணையதள மோகம் பற்றி வெளிப்படையாகவே கேட்டுவிடுகிறார்கள். கம்ப்யூட்டர், செல்போன் போன்றவைகளே கதி என்று கிடக்கும் ஆண்களை விபரம் தெரிந்த பெண்கள் கணவராக ஏற்றுக்கொள்வதில்லை.



    தான் சொல்லுவதைதான் மனைவி கேட்க வேண்டும் என்ற பிடிவாதம் ஆண்களுக்கு உண்டு. முக்கியமான விஷயங்களை பற்றி முடிவெடுக்கும்போதுகூட பலர் மனைவியிடம் கருத்து கேட்பதில்லை. தானாக முடிவினை எடுத்துவிட்டு, பின்பு மனைவியிடம் தகவல் மட்டும் கூறினால் போதும் என்று அவர்கள் நினைத்துவிடுகிறார்கள். மனைவிகள் இப்போது முடி வெடுக்கும் அளவுக்கு தெளிவாக இருப்பதால், தங்களிடம் தகவல்கள் மட்டும் சொல்லும் கணவர்களை அவர்களுக்கு பிடிப்பதில்லை. தொடர்ந்து மனைவியிடம் தகவல் மட்டுமே சொல்லும் கணவராக நீங்கள் இருந்தால், நீங்கள் உங்கள் மனைவியிடம் அபிமானத்தை இழந்துகொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

    கர்வம் என்பது ஆண்களில் சிலரது பிறவிக் குணம். ஒவ்வொரு செயலிலும் அவர்களது இந்த கர்வம் முன் வந்து நிற்கும். அதை கம்பீரம் என்று தவறாக கருதிவிடுகிறார்கள். தெளிந்த சிந்தனையும், அறிவார்ந்த செயலும்தான் ஆண்களுக்கு கம்பீரமே தவிர, நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அகந்தை கொள்வது கம்பீரம் அல்ல. கர்வம் கொண்டவர்கள் அற்ப விஷயத்திற்கெல்லாம் நீயா நானா என்று போட்டி போடுவார்கள். அதன் மூலம் நிம்மதியை இழந்துகொண்டிருப்பார்கள். அதனால் ஆண்களின் அகந்தை பெண்களுக்கு பிடிக்காது.

    தங்கள் உறவுகளைப் பற்றி பெருமையாகவும், மனைவியின் உறவுகளைப் பற்றி ஏளனமாகவும் பேசும் கணவன்மார்கள் இன்றும் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் சாதிக்கப்போவது எதுவுமில்லை. நாளடைவில் மனைவியின் அன்பைதான் இழக்க நேரிடும். அவர் அன்பை இழப்பது மட்டுமல்ல, அவர் யாரை எல்லாம் புகழ்ந்து பேசுகிறாரோ அவர்களையும் தனது மனைவி எதிரியாக கருதுவார் என்பதை ஆண்கள் மறந்து விடக்கூடாது. அதனால் ஏளன பேச்சு குடும்பத்தை கூறுபோட்டுவிடும் என்பதை உணருங்கள்.

    மனைவியோடு பிரச்சினை என்று வந்துவிட்டால் அந்தப் பிரச்சினையை மட்டும் பேசி தீர்க்க வேண்டும். அதுதான் புத்திசாலி ஆண்களுக்கு அழகு. ஆனால் பெரும்பாலான ஆண்கள் பழைய சம்பவங்களை எல்லாம் நினைவில் வைத்துக்கொண்டு மனைவியை திருப்பி அடிப்பார்கள். அதுமட்டுமல்ல மனைவியின் அண்ணன், தம்பி, அம்மா, அப்பா, குடும்பம், பூர்வ ஜென்ம உறவுகளைக் கூட வம்பிற்கு இழுப்பார்கள். இப்படிப்பட்ட வம்பு மனிதர்களை பெண்கள் நம்பி வாழ்வதில்லை.

    பெண்களுக்கு வேகமாகவும், சரியாகவும் முடிவெடுக்க தெரியும். ஆனால் சில நேரங்களில் அவர்கள் முடிவெடுக்க தெரியாதவர்கள் போல் திணறுவார்கள். அதற்கு காரணம் சமூகம்தான். பெண்களுக்கு முடிவெடுக்கத் தெரியாது என்று காலங்காலமாக கூறிவந்ததால், அவர்கள் சில நேரங்களில் முடிவெடுக்கும்போது பதற்றம் அடைகிறார்கள். அப்படிப்பட்ட பெண்களிடம், ‘உன்னாலும் முடியும். தைரியமாக முடிவெடு’ என்று சொல்லும் கணவரை, மனைவிக்கு பிடிக்கும். ‘நான் சொல்வதை மட்டும் கேள். முடிவெடுக்கும் விஷயங்களில் எல்லாம் நீ தலையிடாதே!’ என்று சொல்லும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது.



    கொடுத்த வாக்குறுதியை மறக்கும் ஆண்கள் பெண்களின் அபிமானத்தை இழந்துவிடுவார்கள். வாக்குறுதி என்பது சமாதானம் செய்வதற்காக தரப்படுவதல்ல. காப்பாற்றப்பட வேண்டிய சத்தியம். பெரும்பாலான ஆண்கள் வாக்குறுதி கொடுத்துவிட்டு அதை மறந்து விடுகிறார்கள். சிலர், ‘அப்படி நான் எந்த வாக்குறுதியும் கொடுத்ததில்லை’ என்று மறுப்பார்கள். வாக்குறுதிகளை மறப்பவர்கள் மீதும், மறுப்பவர்கள் மீதும் பெண்கள் நம்பிக்கைவைக்கமாட்டார்கள்.

    மனைவிக்கு பாதுகாப்பு தருவதாக சொல்லிக்கொண்டு அளவுக்கு அதிகமாக அடக்கு முறையை கையாளும் கணவனை மனைவிக்குப் பிடிக்காது. பாதுகாப்பு நடவடிக்கை என்பது சுதந்திரத்தை பறிப்பதாக மாறிவிடக்கூடாது.

    வார விடுமுறை என்பது தனக்கு மட்டுமே சொந்தமானது என்று பல ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நாளிலும் பெண்கள் வீட்டுவேலை செய்ய வேண்டும். தாங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று ஆண்கள் கருதுகிறார்கள். தொலைக்காட்சியில் விளையாட்டு பார்க்க வேண்டும் என்பதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். லேட்டாக எழுந்து சில சமயம் குளிப்பது கூட கிடையாது. படுக்கையிலேயே பெட்காபி, டிபன் எல்லாம் நடக்கும். இதெல்லாம் மனைவிக்கு பிடிக்காது. அதுபோல் வார விடுமுறை நாளில் காலையிலே எழுந்து குளித்து தயாராகி, மனைவியை அம்போ என்று விட்டுவிட்டு, நண்பர்களைத் தேடிப் போய்விடும் ஆண்களையும் அவர்களுக்கு பிடிக்காது.

    வீட்டில் எவ்வளவு இடமிருந்தாலும் ஈரமான டவலை வரவேற்பறையில் உள்ள சோபாவில் தான் சில ஆண்கள் போடுவார்கள். அதுபற்றி கேள்வி கேட்க முடியாது. கேட்டால், ‘நான் அவசரமாக வெளியே போகிறேன். நீ வீட்டில்தானே இருக்கிறாய். இதைகூட நீ செய்யக் கூடாதா?’ என்று எதிர்கேள்வி கேட்பார்கள். இப்படிப்பட்டவர்கள் மனைவியிடம் எரிச்சலையே சம்பாதிப்பார்கள்.

    இதையெல்லாம் விட பெரிய தொல்லை வீட்டிற்கு அடிக்கடி நண்பர்களை அழைத்து வருவது. அந்த நண்பர்கள் முன்னிலையில் மனைவியிடம் இதை செய் அதை செய் என்று உத்தரவும் போடுவார்கள். இப்படிப்பட்ட கணவர்களை மனைவிகள் சுமையாகத்தான் கருதுவார்கள் என்பதை தாமதமாகத்தான் ஆண்கள் புரிந்துகொள்கிறார்கள் என்பது கவனிக்கத் தகுந்த உண்மை. 
    பனிக்காலத்தில் ஃபிரெஷ்ஷாக வெளியில் கிளம்பினாலும், கைகளிலும் கால்களிலும் வெள்ளைத்திட்டுக்கள் தெரியும். இவற்றையெல்லாம் தேங்காய் எண்ணெயை வைத்தே சரிசெய்து கொள்ளலாம்.
    பனிக்காலம் தலைக்காட்ட ஆரம்பித்துவிட்டது. ஃபிரெஷ்ஷாக வெளியில் கிளம்பினாலும், கைகளிலும் கால்களிலும் வெள்ளைத்திட்டுக்கள் தெரியும். வாயைச் சுற்றி இழுப்பது மாதிரி இருக்கும். முகத்தில் ஆரம்பித்து கால் பாதம் வரை சருமம் வறண்டு காணப்படும். சருமத்தில் மெல்லிய கோடுகள், சுருக்கம் தெரியும். இவற்றையெல்லாம் வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே சரிசெய்து கொள்ளலாம்.

    பனிக்காலத்தில் காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம், நம்முடைய சருமத்தின் எண்ணெய்ப்பசையை உலரச் செய்துவிடும். அதனால்தான், சருமம் வறண்டு சுருங்கி விடுகிறது. தினமும் குளிப்பதற்கு முன்பு, முகம், கை, கால் ஆகிய பகுதிகளில் தேங்காய் எண்ணெயைத் தடவி சூடு பறக்கத் தேயுங்கள். 10 நிமிடம் ஊறவிட்டு, பிறகு குளியுங்கள். இப்படிச் செய்தால் குளித்தப் பிறகு சருமத்தில் வெள்ளைத்திட்டுக்கள் ஏற்படாது.

    தினமும் இதைச் செய்யமுடியாதவர்கள், வாரம் இரண்டு முறை நல்லெண்ணெய்யைத் தலை முதல் கால் வரை தடவி, அரை மணி நேரம் ஊறவிட்டு, பச்சைப்பயிறு மாவால் தேய்த்துக் குளியுங்கள். கடலைப்பருப்பு மாவு சருமத்தின் எண்ணெய்ப்பசையை உறிஞ்சிவிடும் என்பதால், அதைப் பயன்படுத்தாதீர்கள். அதேபோல, எண்ணெய் தடவாமலும், பாசிப்பருப்பு மாவை சருமத்தில் தேய்த்துக் குளிக்காதீர்கள். சருமம் இன்னும் உலர்ந்துவிடும்.



    குளித்துவிட்டு வெளியே வந்தவுடன், உடம்பில் இருக்கும் ஈரத்தை முழுமையாகத் துடைக்காமல், தேங்காய் எண்ணெயை இரண்டு விரல்களால் தொட்டு எடுத்து, உடல் முழுக்க தடவுங்கள். ஐந்து விரல்களையும் விட்டால், எண்ணெய் அதிகம் வந்துவிடும். 'எண்ணெய் வேண்டாம்' என்பவர்கள், பாடிலோஷன் பயன்படுத்தலாம். 'கை கால் மட்டும்தான் அதிகம் வறண்டுபோகிறது. உடம்பு வறலவில்லை' என்பவர்கள், அந்தப் பகுதிகளில் மட்டும் எண்ணெய் தடவிக்கொள்ளலாம். பிடிக்காதவர்கள், கை காலுக்கு மட்டும் கடையில் விற்கப்படும் க்ரீமைப் பயன்படுத்தலாம்.

    நீங்கள் என்னென்ன பழங்களைச் சாப்பிடுகிறீர்களோ, அவற்றின் சில துண்டுகளை அரைத்து, பால் ஏடுடன் கலந்து, முகம், கை கால் என வெளியே தெரியக்கூடிய பகுதிகளில் அடிக்கடி தடவிவந்தால், பனிக்காலத்திலும் உங்கள் சருமம் வறண்டுபோகாமல் இருக்கும். கொட்டும் பனியிலும் உங்கள் அழகு கொஞ்சும்.
    பள்ளி அட்மிஷனுக்கு முன்பாக, அந்தப் புதிய சூழலுக்கு குழந்தைகள் ஈடுகொடுக்க இயலும் அளவுக்கு அவர்களின் உடல்நலன் மற்றும் மனநலனை உறுதிசெய்துகொள்ள வேண்டியது அவசியம்.
    இன்றைய குழந்தைகள் இரண்டு வயதிலேயே ப்ளே ஸ்கூலில் சேர்க்கப்படுகின்றனர். இரண்டரை வயது முதல் கேஜி வகுப்புகளில் அனுமதிக்கப்படுகின்றனர். பள்ளி அட்மிஷனுக்கு முன்பாக, அந்தப் புதிய சூழலுக்கு அவர்களால் ஈடுகொடுக்க இயலும் அளவுக்கு அவர்களின் உடல்நலன் மற்றும் மனநலனை உறுதிசெய்துகொள்ள வேண்டியது அவசியம்.

    * பயண தூரம் குறைவாக / வீட்டுக்கு அருகில் இருக்கும் பள்ளியில் குழந்தைகளைச் சேர்ப்பது நலம். இதனால், அலைச்சல்/அசதியைத் தவிர்க்கலாம்.

    * குழந்தைகளைத் தங்கள் அரவணைப்பில் மட்டுமே வைத்து வளர்க்கும் பெற்றோர், பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாக அவர்களை நண்பர்கள் வீடு, உறவினர்கள் வீடு என்று சில மணி நேரமாவது அழைத்துச் சென்று, அங்கிருக்கும் பெரியவர்கள், குழந்தைகளுடன் பழகவைக்க வேண்டும்.

    * கிண்டர் கார்டன், கேஜி வகுப்புகளில் குழந்தைகளை மதிய வேளைகளில் சிறிது நேரம் உறங்கவைக்கலாம். எனவே, பள்ளி செல்வதற்கு முன்னர், வீட்டிலும் அவர்களை அதே நேரத்தில் உறங்கவைத்துப் பழக்கலாம்.

    * ஆரம்பத்தில் சில வாரங்களுக்குக் குழந்தைகள் பள்ளி செல்ல மறுத்து அடம்பிடித்து அழுவது இயல்பானதே. அதுவே மாதங்களைக் கடந்தும் அழுகை தொடர்ந்தால், என்ன பிரச்னை என்பதைக் குழந்தையிடமும் பள்ளித் தரப்பிடமும் விசாரிக்க வேண்டும், குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.



    * பென்சில், சாக்பீஸ் உள்ளிட்ட பொருள்களைக் கடிக்கும் மற்றும் சாப்பிடும் பழக்கம் (Pica) சில குழந்தைகளுக்கு இருக்கும். இதை முன்பே சரிசெய்ய வேண்டும். பள்ளித் தரப்பிடம் தெரிவித்துக் குழந்தைக்கு இந்தப் பழக்கம் இருக்கிறதா எனக் கண்காணிக்கச் சொல்லலாம்.

    * தன் பார்வையில் படும் கவர்ச்சிகரமான பொருள்களைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள நினைப்பது சில குழந்தைகளின் இயல்பு. இந்தப் பழக்கம் பள்ளியில் நிகழ்வது நல்லதல்ல. இதனால், பள்ளியில் சேர்க்கும் சில மாதங்களுக்கு முன்பே, செய்முறையுடன் விளக்கி, ‘இது தவறு’ எனக் குழந்தைக்குப் புரியும்படிப் பெற்றோர் தீர்க்கமாகப் புரியவைக்க வேண்டும்.

    * சில குழந்தைகள் மற்றவர்களை அடிப்பது, கையில் உள்ளதைப் பிறரின் மீது எறிவது என்று மூர்க்கமாக இருப்பார்கள். பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பாகப் பெற்றோர், கதைகள், தொடர் உரையாடல்கள், தேவைப்பட்டால் கண்டிப்பின் மூலம் இவற்றையெல்லாம் மட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.

    * பசித்தால் சொல்லத் தெரிவது, தானே சுயமாகச் சாப்பிடுவது, சிறுநீர் மற்றும் மலம் வந்தால் பாத்ரூம் சென்று கழிப்பது, சளி வந்தால் கைக்குட்டை கொண்டு துடைத்துக் கொள்வது, சாப்பிடும் முன், பின் கைகளைக் கழுவுவது உள்ளிட்ட அவசியமான பழக்கங்களைப் பள்ளிக்கு அனுப்புவதற்கு முன் கற்றுக்கொடுத்திருக்க வேண்டும்.

    * குழந்தையின் வயதுக்கு ஏற்றாற்போல, பெற்றோரின் மொபைல் எண், வீட்டு முகவரி ஆகியவற்றை மனப்பாடமாகச் சொல்லக் கற்றுக்கொடுத்திருக்க வேண்டும். அதேபோல, பெற்றோர் சார்பாக யாராவது தன்னைப் பள்ளியிலோ, வேறெங்கும் வெளியிடத்திலோ வந்து அழைத்தால், அவர்களிடம் பாஸ்வேர்டு சொல்லச் சொல்லிக் கேட்கப் பழக்க வேண்டும். (அந்த பாஸ்வேர்டை, ஏற்கெனவே பெற்றோர் குழந்தைக்குச் சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும்)

    * வாரம் ஒருமுறை நகம் வெட்டுவது, குழந்தைக்குத் தொந்தரவு தராத வகையிலான ஹேர்கட் போன்றவை முக்கியம். பெண் குழந்தைகளுக்கு தொங்கட்டான், ஜிமிக்கி, செயின் போன்ற அணிகலன்கள் விளையாடும்போது/சண்டையிடும்போது இழுக்கப்பட்டு விபரீதமாக வாய்ப்புள்ளது என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
    குழந்தைகளுக்கு வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் அருமையான சூப் இது. இன்று இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை சுண்டைக்காய் - 50 கிராம்,
    வேக வைத்த பாசிப்பருப்பு தண்ணீர் - ஒரு கப்,
    தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று,  
    எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - ஒன்று,  
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    மிளகு - சீரகப்பொடி,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சை சுண்டைக்காயை நன்கு கழுவி, பின்னர் நசுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    அனைத்தும் நன்றாக வதங்கியதும் நசுக்கிய சுண்டைக்காயை போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நன்கு வேகவிடவும்.

    பிறகு, உப்பு, பாசிப்பருப்பு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி, மிளகு, சீரகப்பொடி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி பரிமாறவும்.

    வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும் அருமையான சூப் இது!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அறிகுறிகளுடன் கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
    20% பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நீர்க்கட்டிகள் தானாக மறைவதில்லை. இவற்றைப் போக்க அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது., அல்லது புற்று நோய்க்கான அறிகுறிகளாக இவை மாறுகிறது. அல்லது உடல் நலத்தில் பாதிப்பை உண்டாக்குகிறது. சில நேரங்களில் இந்த நீர்க்கட்டிகள், கருப்பை பைப்ராய்டு, அல்லது மாதவிடாய்க்கு முந்தைய பாதிப்பு(வயிறு மந்தம் மற்றும் இடுப்பு வலி) ஆகியவற்றுடன் இணைந்து கொண்டு பாதிப்பைத் தருகிறது.

    “மாதவிடாய் வருவதும் போவதும் இயல்பு என்பது போல் இந்த கட்டியும் அதனால் உண்டாகும் வலியும் மறைய வேண்டும் இல்லையா?. ஒருவேளை இந்த வலி மறையாமல் இருந்தால் குறைந்த பட்சம் அல்ட்ரா சவுண்ட் செய்து பார்ப்பது நல்லது. கீழே கொடுக்கப்பட்டுள்ள 6 அறிகுறிகளுடன் கூடிய கருப்பை நீர்க்கட்டிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    * இடுப்பு பகுதிக்கு கீழே, வலது அல்லது இடது புறத்தில் வலி இருப்பது கருப்பை நீர்க்கட்டி இருப்பதற்கான பொதுவான அறிகுறியாகும். இந்த பகுதியில் அல்லது வேறு இடத்தில் திடீரென்று பாரமாக இருப்பது போல் நீங்கள் உணரலாம். உடற்பயிற்சியின் போது அல்லது பாலியல் தொடர்பின் போது இந்த கனத்தை உங்களால் உணர முடியும்.

    கனமாக இருக்கும் அந்த பகுதியில் ஒருவித வலி தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கும். மாதவிடாய் முடிந்த பின்னும் அந்த வலி நீடித்து இருக்கும். இந்த வலி மிகவும் அதிகமாகும்போது நீங்கள் கருப்பை முறுக்கத்தால் பாதிக்கப்படுவீர்கள். இந்த கட்டி வளர்ச்சியுற்று பெரிதாகும் போது தானாக முறுக்கி, இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. இதனால் வலி இன்னும் தீவிரமடைகிறது. இந்த நிலை ஏற்படும்போது அவசர சிகிச்சை பிரிவிற்கு செல்வது மிகவும் நல்லது.



    * வயிறு வீக்கமடைவது என்பது ஒரு தெளிவற்ற அறிகுறி. அதன் அளவைச் சார்ந்து கருப்பை நீர்க்கட்டியுடன் இதனை தொடர்பு படுத்தலாம். பெரும்பாலான பெண்கள் 10செமீ க்கு குறைவான அளவு நீர்க்கட்டிகளைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் சில கட்டிகள் ஒரு தர்பூசணி அளவிற்கு பெரிதாக வளரும் தன்மை கொண்டவை. பல பெண்கள் இதனை எடை அதிகரிப்பு என்று கூறுவார்கள். ஆனால் அடிவயிற்று வலி மற்றும் வீக்கம் என்பது வயிறில் வேறு ஏதோ ஒன்று உருவாவதன் காரணமாக இருக்கலாம். வயிற்று பகுதியில் மட்டும் எடை அதிகரித்து காணப்பட்டால் அல்லது உங்கள் எடை அதிகரிப்பிற்கு காரணம் தெரியாமல் இருந்தால் அது எச்சரிக்கை மணி அடிப்பது போன்றதாகும்.

    * கருப்பை பைப்ராய்டு கட்டியைப் போல் கருப்பை நீர்க்கட்டியும் வயிறு கனமான உணர்வைத் தரும். “ஒரு நீர்க்கட்டி வயிற்றின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து ஒரு அழுத்தத்தை தரும் உணர்வாகும்”. இது மலச்சிக்கல் போன்ற உணர்வைத் தரும். இரண்டு கருப்பையிலும் கட்டிகள் உள்ளவரை, இடுப்பின் ஒரு பக்கம் மட்டுமே இத்தகைய உணர்வு தோன்றும். சிறுநீர் கழிப்பதில் அல்லது மற்ற செயல்பாடுகளில் வேறு எந்த பிரச்சனையும் இல்லாமல், ஆனால் வயிறு கனத்த உணர்வு மட்டும் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு நீடித்தால் கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.

    * தொற்று (ஆனால் சிறுநீர் வெளியேறாது). கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதை வெளிப்படுத்தும் மற்றொரு அறிகுறி, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றுவது. உங்கள் சிறுநீர்ப்பையை ஒட்டி கட்டி தோன்றியிருந்தால், உங்களுக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றும். சில பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழித்தாலும், ஒவ்வொரு முறை சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் இருக்கும். நீர்க்கட்டி சிறுநீர் பாதையை தடுப்பதால் இந்த பாதிப்பு உண்டாகும். சிறுநீரகம் தொடர்பான கோளாறுகள் தோன்றும்போது மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது.

    * கருப்பையில் நீர்க்கட்டிகள் பெரிதாக வளரும்போது, கருப்பைக்கு பின், சரியாக கருப்பை வாய் அருகே வளர்ந்து இருந்தால் உறவின் போது வலி தோன்றலாம். ஆகவே உடனடியாக பெண் மருத்துவரை அணுகி, உங்கள் பிரச்சனைக்கு தீர்வு பெறலாம்.

    * உங்கள் இடுப்பு பகுதியில் அதிக இடமில்லாத காரணத்தால், கட்டி வளர்ந்து பெரிதாகும்போது, இடுப்பில் கட்டி இருக்கும் இடத்தைப் பொறுத்து முதுகு அல்லது கால் வலி உண்டாகலாம். அதாவது, இந்த கட்டிகள், இடுப்பின் பின்புறம் ஓடும் நரம்பை சுருக்கி விடுவதாக அவர் கூறுகிறார். உங்கள் இடுப்பு வலிக்கான காரணத்தை மருத்துவரால் அறிய முடியாவிட்டால், அது நீர்கட்டியின் ஆதாரமாக இருப்பதற்கான வாய்ப்புகளாக இருக்கலாம்.
    இந்த முத்திரை நல்ல நினைவாற்றல் கிடைக்கும். கோபம், வெறுப்பு, நாட்டமின்மை, ஹிஸ்டீரியா போல் செயல்படுவது, எதற்கெடுத்தாலும் பயம் கொள்வது போன்ற எதிர்மறை குணங்கள் நீங்கும்.
    செய்முறை :

    வலது கையின் மேல் இடது கையைக் குறுக்காக வைத்துக் கட்டை விரலை ஒன்றின் மீது ஒன்றாக வைக்கவும். மார்பு பகுதிக்கு நேராக வரும்படி வைத்துக்கொள்ளவும்.

    மனதில் தன்னம்பிக்கை, உற்சாகம் ஏற்படும். கற்பனைத் திறன் வளரும். தினமும் 10 முதல் 15 நிமிடம் பழகினால் போதும். மாற்றங்களை உடனடியாகக் காணலாம்.

    அரையில் அமர்ந்து கொண்டோ அல்லது சேரில் அமர்ந்து கொண்டோ இநத் முத்திரையை செய்யலாம். நேரம் கிடைக்கும் போது எல்லாம் இந்த முத்திரையை செய்யலாம்.

    பலன்கள் :

    நல்ல நினைவாற்றல் கிடைக்கும். கோபம், வெறுப்பு, நாட்டமின்மை, ஹிஸ்டீரியா போல் செயல்படுவது, எதற்கெடுத்தாலும் பயம் கொள்வது போன்ற எதிர்மறை குணங்கள் நீங்கும்.

    பரபரப்பான மனதை கட்டுக்குள் கொண்டு வரும். மனத்தெளிவு, கண்களில் பிரகாசம், மனோபலம், அறிவுக் கூர்மை ஆகியவற்றை அளிக்கும்.

    உடலாகிய ஸ்தூல சரீரம், வெளிமன, ஆழ்மன உணர்வுகள் ஆகியவற்றில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து ஒருநிலைப்படுத்துகிறது. மனதில் தன்னம்பிக்கை, உற்சாகம் ஏற்படும்.
    இரவு நேர வேலைக்கு உடலும், மனதும் ஒத்துழைக்கும் விதத்தில் பழக்கவழக்கங்களிலும், உணவு விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.
    பகல் பொழுதில் வேலை பார்த்துவிட்டு இரவில் தூங்கி ஓய்வு எடுக்கும் விதமாகத்தான் நமது உடல் அமைப்பு இருக்கிறது. இருப்பினும் பொருளாதார நிலை கருதி நிறைய பேர் இரவு பணியில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். இரவு நேர வேலைக்கு உடலும், மனதும் ஒத்துழைக்கும் விதத்தில் பழக்கவழக்கங்களிலும், உணவு விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

    * இரவு வேலைக்கு செல்பவர்கள் இரவு உணவை, காலை உணவுபோல் கருதி சத்தாக சாப்பிட வேண்டும். நிறைய பேர் இரவில் பசி எடுக்கக்கூடாது என்பதற்காக இரவு உணவை தாமதமாக உட்கொள்வார்கள். அது தவறான பழக்கம். இரவு 7.30 மணி முதல் 8 மணிக்குள் சாப்பிட்டுவிட வேண்டும்.

    * இரவில் அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அரிசி சாதம், பருப்பு குழம்பு, தீயில் வேகவைக்கப்படும் கோழி இறைச்சி உள்ளிட்ட புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். அவை தூக்க உணர்வில் இருந்து விடுபட வைக்கும்.

    * இரவில் விழித்திருக்கும்போது உடலில் வறட்சி தன்மை தோன்றும். அதை போக்க ஒரு டீஸ்பூன் நெய் சாப்பிடுவது நல்லது. அது வறட்சி தன்மையில் இருந்து உடலை சமநிலைப்படுத்த உதவும்.



    * இரவில் வேலைக்கு செல்வதற்கு முன்பாக எண்ணெயில் வறுத்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இரவு நேரத்தில் செரிமான அமைப்பு ஓய்வெடுக்கும் நிலையில் இருக்கும் என்பதால் உணவு ஜீரணமாகுவது கடினமாகிவிடும். எண்ணெய் வகை உணவுகளை சாப்பிடுவது இரைப்பைக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். உடல் பருமன் பிரச்சினையும் தோன்றும்.

    * இரவு நேரத்தில் பசி உணர்வு அதிகமாக இருக்கும். பசியை போக்குவதற்கு சமோசா, பர்கர் போன்றவற்றை சாப்பிடக்கூடாது. வறுகடலை வகைகள், பாதாம், முந்திரி பருப்பு வகைகளை அளவோடு சாப்பிடுவது நல்லது. அவை உடல் எடையை சீராக பராமரிக்க உதவும். நொறுக்குத்தீனிகள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தையும் கட்டுப்படுத்தும்.

    * இரவு பணியில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் டீ, காபி வகைகளை குறிப்பிட்ட நேர இடைவெளியில் தொடர்ந்து பருகுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அதற்கு பதிலாக நீர் மற்றும் ஜூஸ் வகைகள் பருகலாம்.

    * இரவு பணியில் இருப்பவர்கள் பழங்கள், காய்கறி, ஜூஸ் வகைகள், கோதுமை பிரெட்டுகள், உலர் திராட்சை, தானிய வகை சாலட்டுகள், வறுத்த தானியங்கள், பாலாடை கட்டி, குறைந்த கொழுப்பு கொண்ட பால், அவித்த முட்டை, மீன், கோழி இறைச்சியில் தயாரிக்கப்பட்ட சாண்ட்விச்சுகள், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை சாப்பிடலாம்.
    உருளைக்கிழங்கு மசாலா தோசை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று உருளைக்கிழங்கு, பன்னீர் சேர்த்து ஸ்டப்ஃடு தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - 3 கப் உளுத்தம்
    பருப்பு - 1 கப்
    உருளைக்கிழங்கு - 4
    பன்னீர் - 1/2 கப்
    வெங்காயம் - 3
    பச்சை மிளகாய் - 4  
    கடுகு - 1 டீஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    வெந்தயம் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    வெண்ணெய் - 1/2 கப்



    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.

    பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இரவில் அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தை நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், அதனை கிரைண்டரில் போட்டு, நைஸாக தோசை மாவு பதத்திற்கு அரைத்து, அதில் உப்பு சேர்த்து கலந்து, 4-5 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின், வெங்காயம் ப.மிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

    வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பன்னீர், மசித்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கி, இறக்க வேண்டும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் வெண்ணெய் ஊற்றி, உருகியதும், தோசை மாவால் தோசை ஊற்றி சுற்றி சிறிது வெண்ணெய் போட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுக்க வேண்டும்.

    பின் அந்த தோசை ஒரு தட்டில் வைத்து, அதன் நடுவில் வதக்கி வைத்த பன்னீர், உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து அதில் வதக்கி சுற்றி தேய்த்து, சுருட்டி பரிமாற வேண்டும்.

    இதேப் போல் வேண்டி அளவில் தோசை ஊற்றி, சாப்பிடலாம்.

    இப்போது சுவையான பன்னீர் - உருளைக்கிழங்கு ஸ்டப்ஃடு தோசை ரெடி.

    இதனை தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை அதிகம் கொண்ட பண்டங்கள் ஒரு வகையில் நமக்கு இன்பத்தை தந்தாலும், மறுபுறத்தில் நமக்கு பல பின் விளைவுகளை ஏற்படுத்தும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    குலாப் ஜாமூன், லட்டு, ஜிலேப்பி போன்ற சுவைமிக்க இனிப்பு வகைகளை நாம் அதிகம் விரும்பி உண்ணுவோம். இவற்றை செய்து வைத்தாலே நமக்கு நாக்கில் எச்சி ஊறும். சர்க்கரை அதிகம் கொண்ட பண்டங்கள் ஒரு வகையில் நமக்கு இன்பத்தை தந்தாலும், மறுபுறத்தில் நமக்கு பல பின் விளைவுகளை ஏற்படுத்துமாம்.

    நாம் சர்க்கரையை சாப்பிடும் போது, நமது உடலில் கொழுப்புகள் அதிக அளவில் சேர தொடங்கும். சர்க்கரையை அதிகமாக சாப்பிட்டால் கொழுப்பின் அளவும் அதிகரிக்க கூடும். இதனால் தான், சர்க்கரை நோயாளிகளை இனிப்பு பண்டங்களை தவிர்க்க வேண்டும் என்கின்றனர். ஏனெனில், இவை சர்க்கரையின் அளவை அதிகரித்து இதய நோய்களையும் உருவாக்கி விடும்.

    நாம் சர்க்கரை சாப்பிடும் போது, அவை வயிற்றுக்குள் சென்று செரிமான மண்டலாத்தை அடைந்து விடும். சிறுகுடலில் உள்ள நொதிகள் அவற்றை குளுக்கோஸாக மாற்றி ரத்தத்தின் வழியாக மற்ற உறுப்புகளுக்கு அனுப்பி, இறுதியில் அவை ஆற்றலாக மாறி விடும்.

    கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும், இன்சுலின் அளவையும் தொடர்ந்து கண்காணித்து கொண்டே இருக்கும். அதாவது, நீங்கள் அதிக அளவில் சர்க்கரை சாப்பிட்டால் அவை உடலின் முழு செயல்பாட்டையும் பாதிக்கும் என்பதை இவை உணர்த்துகிறது.



    சர்க்கரையை அதிகமாக சாப்பிடுவதால் இன்சுலின் உற்பத்தி சீர்கேடு அடையும். அதாவது, இவை ஹார்மோன்களிலும் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பதையே இவை உணர்த்துகிறது. இதனால், பல வித நோய்களின் வருகை படிப்படியாக அதிகரிக்க தொடக்கி விடும்.

    மிக விரைவிலே வயதானவரை போன்று மாற்ற கூடிய தனித்தன்மை இந்த சர்க்கரைக்கு உள்ளது. அத்துடன் சருமத்தின் அழகும் மெல்ல மெல்ல குறைய தொடங்கி விடுமாம்.

    சர்க்கரை நோய் வந்துவிட்டால், கூடவே இந்த ஞாபக மறதி, மன அழுத்தம் போன்ற பல பிரச்சினைகள் அடுக்கி கொண்டு வந்து விடுமாம்.

    நீரிழிவு நோய் இருக்கும் பலருக்கு இதயம் சார்ந்த நோய்களும் இருக்க கூடும். சர்க்கரையை அதிக அளவில் எடுத்து கொண்டால், இதய பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். சர்க்கரை வெறும் சர்க்கரையை சாப்பிடாமல், குளிர்பானமாகவோ, இனிப்பு உணவாகவோ, சாப்பிட்டாலும் பாதிப்பு அதிகம்.

    மனிதனின் மனிதனின் நாக்கு ஒரு முறை ஒரு பொருளை சுவை கண்டு, பிடித்து விட்டால் அதனை அவ்வளவு சீக்கீரம் விட தோணாது. ஏனெனில், நீங்கள் உங்களை கட்டுப்படுத்தி குறைந்த அளவில் சர்க்கரையை எடுத்து கொண்டால், எந்த வித பெரிய ஆபத்தும் வராது.  
    ×