என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
நவக்கிரகங்களில் இது செவ்வாய்க்கு உரிய தலம் ஆகும். இங்கு உள்ள இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது ஐதீகம். இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம் முதலானவையும் கூட அகலும் என்பர்.
சுவாமி : அருள்மிகு வைத்தியநாத சுவாமி.
அம்பாள் : அருள்மிகு தையல் நாயகி.
மூர்த்தி : பஞ்சமூர்த்திகள், முத்துக்குமார சுவாமி, அங்காரகன் (செவ்வாய்) தன்வந்திரி, ஜடாயு பத்ரகாளி, அறுபத்து மூவர்.
தீர்த்தம் : சித்தாமிர்த தீர்த்தம்.
தலவிருட்சம் : வேம்பு மரம்.
தலச்சிறப்பு : சடாயு என்னும் புள் (பறவை), இருக்கு வேதம் (ரிக்குவேதம்), முருகவேல், சூரியனாம் ஊர் ஆகிய நால்வரும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கியதால் இத்தல நாயகர் புள்ளிருக்குவேளூர் எனவும் திருபுள்ளிருக்குவேளூர் என தனிச் சிறப்புடனும் அழைக்கப்படுகின்றார். உயிர்களின் தீராத நோய்களைத் தீர்க்கும் பொருட்டு, உமை தையல் நாயகியாய்த் தைல பாத்திரமும், சஞ்சீவியும் வில்வ மரத்தடி மண்ணும் கொண்டுவர இறைவன் இங்கு வைத்தியநாதராக எழுந்தருளிய தலம்.
இன்றும் நோய் தீர்க்கும் தலமாக அமைந்து உள்ளதால் பக்தர்கள் கார்த்திகை தோறும் இங்கு பெருமளவில் வந்து வழிபடுகின்றனர். இங்கு உள்ள செல்வ முத்துக்குமார சுவாமி மிகவும் பிரசித்தி பெற்ற தெய்வம் ஆவார். கார்த்திகை தோறும் இவருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. சந்தனக் குழம்பு, மண் உருண்டை, சித்தாமிர்தம் ஆகியன நோய் தீர்க்கவல்லன, நவக்கிரகங்களில் இது செவ்வாய்க்கு உரிய தலம் ஆகும். இங்கு உள்ள இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது ஐதீகம். இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம் முதலானவையும் கூட அகலும் என்பர்.
தல வரலாறு : முன்னொரு காலத்தில் அங்காரகனுக்கு வெண்குஷ்ட நோய் வந்தது. அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது. வைத்தீசுவரன் கோயில் சென்று ஒரு மண்டலம் சித்தாமிர்த குளத்தில் குளித்து விட்டு வைத்தியநாத சுவாமியை வணங்கினால் ரோகம் குணமாகிவிடும் என்று கேட்டது. இதை அடுத்து அங்காரகனும் இங்கு வந்து வழிபட்டு நோய் குணமானது. இந்த வைத்தியத்துக்கு சுவாமி மருந்து தயார் செய்த போது பார்வதி தைல பாத்திரம் கொண்டு வந்ததால் அம்பாளுக்கு தைலநாயகி என்று பெயர் வந்தது.
வழிபட்டோர் : இராமர், ஜடாயு, சுப்பிரமணியர், சூரியன், அங்காரகன், தன்வந்தரி.
பாடியோர் : திருஞானசம்பந்தர், அப்பர், காளமேகப் புலவர், குமரகுருபரர், அருணகிரிநாதர், வடுகநாத தேசிகர்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.
பூஜை விவரம் : ஆறு கால பூஜை, அர்த்தசாம பூஜையின் போது செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். இதனைப் புனுகு காப்பு தரிசனம் என்பர்.
கோவில் முகவரி :
அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோவில்,
வைத்தீஸ்வரன் கோவில் - 609 117,
சீர்காழி வட்டம், நாகை மாவட்டம்.
தொலைபேசி எண் : 04364 - 279423.
சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூச திருவிழா வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வருகிற 19-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அன்று காலை 6 மணிக்கு மேல் காலை 7 மணிக்குள் மகர லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு அபிஷேகமும், 6 மணிக்கு தீபாராதனையும், இரவு 8 மணிக்கு மரகேடயத்தில் அம்மன் வீதிஉலாவும் நடைபெறுகிறது.
இதுபோல் தினமும் காலையில் பல்லக்கில் அம்மன் புறப்பாடு நடைபெறுகிறது. தொடர்ந்து 2-ம் நாள் முதல் 8-ம் நாள் வரை முறையே சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், வெள்ளி சேஷ வாகனம், வெள்ளி குதிரை வாகனம் ஆகியவற்றில் இரவு 8 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடைபெறும்.
திருவிழாவின் 9-ம் நாளான 27-ந்தேதி(புதன்கிழமை) காலை 10 மணிக்கு பல்லக்கில் அம்மன் திருவீதி உலாவும், மாலை 5 மணிக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு அம்மன் தெப்பத்தில் எழுந்தருளி காட்சிஅளிக்கிறார். பின்னர் இரவு 11 மணிக்கு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார்.
திருவிழாவின் 10-ம் நாளான 28-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 7.31 மணிக்கு மேல் காலை 8.30 மணிக்குள் தைப்பூசத்திற்காக கோவிலிலிருந்து கண்ணாடி பல்லக்கில் அம்மன் எழுந்தருளி வழிநடை உபயங்கள் கண்டருள்கிறார். பின்னர் நொச்சியம் வழியாக வடதிருக்காவிரிக்கு சென்றடைகிறார். அங்கு மாலையில் தீர்த்தவாரி கண்டருள்கிறார். பின்னர் இரவு 10 மணிக்கு மேல் இரவு 11 மணி வரை ஸ்ரீரங்கம் ெரங்கநாதரிடம் சீர் பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மகாஅபிஷேகம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து அதிகாலை 3 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
29-ந்தேதி(வெள்ளிக்கிழமை) வடதிருக்காவிரியிலிருந்து அம்மன் கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக வழிநடை உபயங்கள் கண்டருளி இரவு 11 மணிக்கு ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார். அதைத்தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று கொடிமரத்திற்கு அம்மன் புறப்பாடாகி கொடிபடம் இறக்கப்படுகிறது. இரவு 12 மணிக்கு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து கோவிலை சென்றடைகிறார். தொடர்ந்து நடை சாத்தப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் கோவில்பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை வரை திருவாபரணங்களுடன் ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்கலாம். வருகிற 20-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படுகிறது.
திருவனந்தபுரம் :
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகள் பிரசித்தி பெற்றவையாகும். இந்த பூஜை காலங்களில் நடை திறந்திருக்கும் நாட் களில் தினமும் லட்சக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.
கொரோனா காரணமாக முதலில் தினமும் 1000 பக்தர்களுக்கும், பின்னர் 2 ஆயிரம் பக்தர்களுக்கும், மகரவிளக்கு பூஜை காலத் தில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதனால் பக்தர்கள் கூட்டத்துடன் காணப்படும் சபரிமலை இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் வெறிச் சோடி காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன் தினம் மகரஜோதி தரிசனம் நடந்தது. அன்றைய தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டிருந்ததால் அவர்கள் மட்டுமே மகரஜோதியை தரிசிக்க முடிந்தது. மகரஜோதி தெரிவதற்கு முன்னதாக பந்தளம் அரண்மனையில் இருந்து கொண்டுவரப்படும் திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டது.
மகரஜோதி தரிசனம் முடிந்ததும் திருவாபரணங்களுடன் ஐயப்பனை பக்தர்கள் தரிசிப்பார்கள். இன்றும், நாளையும் உச்ச பூஜை மற்றும் மாலை நேர பூஜையின் போது ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவித்து தீபாராதனை காட்டப்படும்.
கொரோனா காரணமாக இந்த ஆண்டு புஷ்பாஞ்சலி நடத்தப்படவில்லை. நாளை மாலை புஷ்பாஞ்சலி நடத்தப்படும் நேரத்தில் ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்படும். நாளை வரை திருவாபரணங்களுடன் ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்கலாம்.
நாளை மறுநாள் (18-ந் தேதி) வரை நெய் அபிஷேகம் நடைபெறும். வருகிற 19-ந் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். மகரவிளக்கு பூஜை முடிந்து வருகிற 20-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படுகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் பாரிவேட்டை வைபவம் கண்டருளினார்.
பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் நாட்களில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சிறப்பு புறப்பாடுகளும், வைபவங்களும் நடக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் சங்கராந்தி மண்டபம் சென்று வந்தார்.
நேற்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு காலை 6 மணியளவில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 6.45 மணிக்கு கனுமண்டபம் வந்தார். அங்கு அவருக்கு சிறப்பு திருவாராதனங்கள் நடந்தன.
பின்னர் மதியம் 1 மணியளவில் நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டு பாரிவேட்டை நடத்தியபடி ரெங்கா, ரெங்கா கோபுரம் அருகிலுள்ள திருவந்திக்காப்பு மண்டபம் வரை உலா வந்து ரெங்க விலாச மண்டபத்தில் எழுந்தருளினார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மதியம் 2 மணியளவில் மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் அசோக்குமார், அறங்காவலர்கள் ரங்காச்சாரி, டாக்டர் சீனிவாசன், கவிதா ஆகியோர் தலைமையில் கோவில் அர்ச்சகர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், கைங்கர்யபரர்கள் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.
சில எளிய பரிகாரங்களை நாம் செய்து வந்தால் நம் துன்பங்கள் குறைய வாய்ப்புள்ளது. அப்படி ஒவ்வொரு ராசியினரும் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்களை இங்கு பார்க்கலாம்...
ஒரு மனித பிறப்பில் அவர் பெறக்கூடிய நல்ல பலன்களும், திய பலன்களும் அவரவர் செயல்களைப் பொறுத்தும், சுய ஜாதகத்தைப் பொறுத்தும் தான் அமையும் என்பது ஜோதிட விதி. இருப்பினும் நம் சில எளிய பரிகாரங்கள் நாம் செய்து வர நம் துன்பங்கள் குறைய வாய்ப்புள்ளது. அப்படி ஒவ்வொரு ராசியினரும் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்களை இங்கு பார்ப்போம்...
மேஷ ராசியினர் கஷ்டமான நேரத்தில் கூட வாழ்வில் நல்ல பலனைப் பெற, தங்களுடைய உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு பொருளாதார ரீதியில் உதவுவது தான் மிகச் சிறந்த பரிகாரமாகும். ராசி அதிபதி செவ்வாய் பகவானின் அருள் பெற உடன் பிறந்தவர்களுக்கு உதவி செய்வது தான் மிகச் சிறந்த பரிகாரம்.
ரிஷப ராசிக்காரர்களின் ராசி அதிபதி சுக்கிர பகவான். அதனால் வெள்ளிக்கிழமை தோறும் அவருக்கு விருப்பமான வெள்ளை நிற பூக்களை கொண்டு கையில் ஏந்தியவாறு, ஓடும் ஆற்று நீர், ஓடையில் நின்று “ஓம் சுக்ராயே நமஹ்” என்ற மந்திரத்தை 6 முறை துதித்துவிட்டு அந்த பூக்களை நீரில் விட வேண்டும். வெள்ளை நிற உணவு பொருள், தானியங்களைத் தானமாக அளிக்கலாம்.
மிதுன ராசியினர் தினமும் மகாலட்சுமியை வணங்குவது அவசியம். பழனி முருகனை வணங்குவதும், ஒரு நாள் அங்கு சென்று தங்கி முருகனை வணங்கி யாசகர்களுக்கு அன்னதானம் அளிப்பதால் நாம் செய்த பாவ தோஷங்கள் நீங்கி வாழ்வில் பல்வேறு வகையில் நன்மைகள் ஏற்படும்.
கடக ராசியினர் சந்திர தரிசனம் செய்வது சிறப்பானது. இந்த ராசியினர் பச்சை மற்றும் வெள்ளை நிற ஆடைகள், கைக்குட்டைகள் பயன்படுத்தி வருவதால் பல்வேறு வகையில் பாதங்கள் நீங்கி அதிர்ஷ்ட வாய்ப்புகள், நன்மைகள் உண்டாகும்.
சிம்ம ராசி அதிபதி சூரியன். ஒவ்வொரு மாதமும் வளர்பிறையின் 7ம் நாள் குளித்து சுத்தமாக சூரிய நமஸ்காரம் செய்து வழிபடுவதும், சூரிய நாராயணரை வணங்குதல், மகா விஷ்ணுவை வழிபடுவது மிக அவசியமாகும்.
கன்னி ராசியினர் நவகிரகங்களில் புதன் பகவானை வழிபடுவது அவசியம். இவர்கள் வசிக்குமிடம் நெரிசலான பகுதியாக இல்லாமல், சற்று காற்றோட்டமும், நெருக்கமில்லாத பகுதியில் வசிப்பது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும்.
துலாம் ராசி நாதன் சுக்கிர பகவான் (வெள்ளி கிரகம்). உங்கள் வாழ்நாளில் எப்போதும் நல்ல பலன்களைப் பெற வேண்டுமெனில் வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை நிற கன்றுக் குட்டியை ஈன்ற பசுமாட்டிற்கு அகத்திக் கீரை, பழங்களை வழங்குவதால் நல்ல பலன்கள் பெறலாம்.
விருச்சிக ராசியினர் எப்போதும் சுப பலன்களைப் பெற வேண்டுமென்றால் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அவசிய உங்களின் குல தெய்வ கோயிலுக்கு சென்று படையலிட்டு வழிபாடு செய்து வருவது அவசியம்.
தனுசு ராசி அதிபதி குரு பகவான். அதனால் தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமைகளில் உங்களால் முடிந்தளவு அன்னதானம் செய்வதும், மஞ்சள் நிற பூக்களால் குரு பகவானை வழிபடுதல், இனிப்பு பதார்த்தங்களைப் பக்தர்களுக்கு நைவேத்தியமாக வழங்குவதும், நெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் மிக நல்ல பலனைத் தரும்.
மகர ராசியினர் தங்களின் வாழ்வில் சிறப்பான அதிர்ஷ்ட பலன்களைப் பெற வேண்டுமெனில் வெள்ளிக்கிழமை தோறும் முருகப் பெருமானையும், சனிக் கிழமைகளில் ராமர், அனுமன் வழிபாடு செய்வதால் மிக சிறப்பான பலன்களைப் பெற முடியும்.
கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். அதனால் சனிக்கிழமை தோறும் சிவ வழிபாடு செய்து, நவகிரகங்களில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதும், காலை உணவு உண்ணும் முன் காகத்திற்கு வைத்து விட்டு சாப்பிடுவது சிறந்தது.
மீன ராசிக்கு அதிபதி குரு பகவான். நீங்கள் குருவின் அருள் பெற சித்தர்களின் ஜீவ சமாதி இடங்களில் வழிபடுவதும், குரு பகவானுக்குரிய கோயிலுக்கு சென்று வழிபடுவதால் உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றங்களைப் பெறலாம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாட்டுப்பொங்கல் அன்று பார்வேடு உற்சவம் நடந்தது. பார்வேடு மண்டபத்தில் உற்சவர்களை வைத்து ஆஸ்தானம், சிறப்புப்பூஜைகள், நைவேத்தியம் செய்யப்பட்டது.
திருமலை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மகர சங்கராந்தி பண்டிகை முடிந்ததும் மறுநாளான நேற்று மாட்டுப்பொங்கல் அன்று பார்வேடு உற்சவம் நடந்தது. அதையொட்டி திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் உள்ள ஆண்டாள் சன்னதியில் இருந்து, அவர் சூடிக்கொடுத்த பூமாலை, துளசி மாலை ஆகியவற்றை திருமலைக்குக் கொண்டு வந்து, பெரிய ஜீயர் மடத்தில் வைத்தனர். அங்கு சிறப்புப்பூஜைகள் செய்து, பெரிய ஜீயர் சுவாமிகள் தனது தலையில் சுமந்தபடி ஊர்வலமாக கோவிலுக்குள் கொண்டு வந்தார். அவருடன் சின்னஜீயர் சுவாமிகள், கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் உடன் வந்தனர்.
அதைத்தொடர்ந்து காலை ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகள் மூலவர் ஏழுமலையானுக்கு சூட்டப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. மதியம் கோவிலில் இருந்து உற்சவர்களான மலையப்பசாமி, ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோரை தனித்தனி தங்கத் திருச்சி வாகனத்தில் வைத்து, திருமலையில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பார்வேடு மண்டபத்துக்கு மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அங்கு தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டிக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செய்தனர்.
பார்வேடு மண்டபத்தில் உற்சவர்களை வைத்து ஆஸ்தானம், சிறப்புப்பூஜைகள், நைவேத்தியம் செய்யப்பட்டது. நைவேத்தியம் செய்த பொருட்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மாலை 5 மணியளவில் பார்வேடு மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக கோவிலுக்குள் உற்சவர்களை கொண்டு வந்தனர். ஊர்வலம் புறப்பட்டதும் உற்சவர் மலையப்பசாமி, ஈட்டியால் புலியை வேட்டையாடும் நிகழ்ச்சியை அர்ச்சகர் ஒருவர் நடித்துக் காட்டினார். பார்வேடு உற்சவத்தில் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி சாமி புறப்பாடு நகர் வீதிகளில் வலம்வருவது தவிர்க்கப்பட்டு உள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் 10 நாட்கள் தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான தெப்பத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் உள்திருவிழாவாக தொடங்கியது. இதனையொட்டி உற்சவர் சன்னதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க தெய்வானையுடன் சுப்பிரமணியசாமி கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு தங்க மூலம் பூசப்பட்ட கம்பத்தில் பால் பன்னீர் இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் காலை 9.15 மணிக்கு கொடியேற்றப்பட்டது. திருவிழாவையொட்டி சாமி புறப்பாடு நகர் வீதிகளில் வலம்வருவது தவிர்க்கப்பட்டு உள்ளது. அதேசமயம் கோவிலுக்குள் சாமி புறப்பாடு நடக்கிறது.
மேலும் ஜி.எஸ்.டி. ரோடு வளாகத்துக்குள் அமைந்துள்ளன தெப்பத்தில் சாமி எழுந்தருள்வது தவிர்க்கப்பட்டு உள்ளது.
நடராஜர் தன்னுடைய நடனத்தால் சிறப்பித்த ஐந்து திருத்தலங்கள், ‘பஞ்ச சபைகள்’ என்றும், ‘ஐம்பெரும் சபைகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன. மேற்கண்ட ஐந்து சபைகள் உள்ள திருத்தலங்களை சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
நடராஜர் தன்னுடைய நடனத்தால் சிறப்பித்த ஐந்து திருத்தலங்கள், ‘பஞ்ச சபைகள்’ என்றும், ‘ஐம்பெரும் சபைகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன. சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய இந்த ஐந்து திருத்தலங்களும், முறையே பொற்சபை, வெள்ளிசபை, ரத்தின சபை, தாமிர சபை, சித்திர சபை என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. மேற்கண்ட ஐந்து சபைகள் உள்ள திருத்தலங்களை சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
வெள்ளி சபை : சிவபெருமானின் திருவிளையாடல்கள் பெரும்பாலும் நடைபெற்ற இடமாக மதுரை திருத்தலம் திகழ்கிறது. மீனாட்சி அம்மனின் அரசாட்சியும், அருளாட்சியும் நிறைந்திருக்கும் மதுரையில்தான் மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த ஆலயம்தான் நடராஜரின் திருநடனம் கண்ட ‘வெள்ளி சபை’யாக திகழ்கிறது. இதனை ‘வெள்ளியம்பலம்’, ‘வெள்ளி மன்றம்’ என்றும் அழைப்பார்கள். இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் நடராஜப் பெருமான், தன் பக்தனான பாண்டிய மன்னனின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, வலது காலை ஊன்றி, இடது காலை தூக்கி நடனம் புரியும் நிலையில் காட்சி தருகிறார். இங்கு இறைவனின் நடனம் ‘சந்தியா தாண்டவம்’ என்று அழைக்கப்படுகிறது. பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்களுக்கு, தில்லையில் காட்டியதுபோலவே இங்கும் இறைவன் தனது திருநடனத்தை காட்டி அருள் செய்தார்.
சித்திர சபை : தென்காசி மாவட்டம் திருக்குற்றாலத்தில் அமைந்திருக்கிறது, குற்றாலநாதர் திருக்கோவில். இது அகத்திய முனிவர் வழிபாடு செய்த திருத்தலம் ஆகும். இங்கு சிவபெருமான் நடனம் புரிந்த இடம், ‘சித்திர சபை’ என்று வணங்கப்படுகிறது. இங்கு எமனை காலால் எட்டி உதைத்த ஈசன் தன் மனைவி பார்வதியுடன், மார்கண்டேயருக்கு அருளியபடி சித்திர வடிவில் காட்சியளிக்கிறார். இங்கு இறைவன் ஆடிய நடனத்திற்குப் பெயர் ‘திரிபுர தாண்டவம்’ என்பதாகும். இந்த தாண்டவத்தை கண்டுகளித்த பிரம்மதேவன், தானே இறைவனின் திருநடனத்தை ஓவிய வடிவில் வடித்ததாக கருதப்படுகிறது. அந்த இடமே சித்திர சபை. இதனை ‘சித்திர அம்பலம்’, ‘சித்திர மன்றம்’ என்றும் அழைப்பார்கள்.
பொற்சபை : கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ளது, திருமூலட்டநாதர் ஆலயம். இப்படிச் சொன்னால் பலருக்கும் தெரியாதுதான். சிதம்பரம் நடராஜர் கோவில் என்று சொன்னால்தான் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். இங்கு அருள்பாலிக்கும் ஆடல் அரசனான நடராஜர் வீற்றிருக்கும் இடமே, ‘பொற்சபை’ என்று அழைக்கப்படுகிறது. இதனை ‘பொன்னம்பலம்’, ‘கனக சபை’, ‘பொன் மன்றம்’ என்ற பெயர்களாலும் அழைப்பார்கள். இறைவன் தனது திருநடனத்தை, பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்களுக்கு காட்டி அருளிய தலம் இதுவாகும். இந்த தலத்தில் நடராஜர், தனது இடது காலை ஊன்றி, வலது காலைத் தூக்கி நடனம் ஆடுகிறார். இத்தல இறைவன் ஆடும் நடனம் ‘ஆனந்தத் தாண்டவம்’ ஆகும்.
தாமிர சபை : திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் முக்கியமான திருத்தலங்களில் ஒன்று, காந்திமதி உடனாய நெல்லையப்பர் திருக்கோவில். இங்கு நடராஜர் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கும் இடத்திற்கு ‘தாமிர சபை’ என்று பெயர். இதற்கு ‘தாமிர அம்பலம்’, ‘தாமிர மன்றம்’ என்ற பெயர்களும் உண்டு. இந்த சபையில், இறைவன் தன் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி திருநடனம் புரிகின்றார். இந்த நடனத்திற்கு ‘திருத் தாண்டவம்’ என்று பெயர்.
ரத்தின சபை : திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ளது, வடாரண்யேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயத்தில் காளியுடன் போட்டி நடனம் ஆடிய சிவபெருமான், முடிவில் தன்னுடைய ஒரு காலை தலைக்குமேல் தூக்கி ஆடி, காளிதேவியை வெற்றிகொண்டார் என்று தல புராணம் சொல்கிறது. இந்த ஆலயத்தின் இறைவன் - வடாரண்யேஸ்வரர், இறைவி - வண்டார்குழலி அம்மை. இங்கு இறைவன் நடனம் ஆடிய இடம் ‘ரத்தின சபை’ எனப்படுகிறது. ‘ரத்தின அம்பலம்’, ‘மணி மன்றம்’ என்ற பெயர்களும் இதற்கு உண்டு. இங்குள்ள இறைவன் எட்டு கரங்களுடன், வலது காலை தரையின் ஊன்றி இடது காலால் காதணியை மாட்டும் தோரணையில் காட்சியளிக்கின்றார். காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து சென்று, இங்குள்ள நடராஜரின் திருவடியில் அமர்ந்து, அனுதினமும் அவரது திருநடனத்தைக் காணும் பேறு பெற்றார். இங்கு இறைவன் ஆடும் நடனம் ‘ஊர்த்துவ தாண்டவம்’ என்று போற்றப்படுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கடலில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டதால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
காணும் பொங்கலை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடந்து மற்றகால பூஜைகள் நடந்தது.
பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் பரிவேட்டைக்காக கோவிலில் இருந்து புறப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி கிரிபிரகாரம் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும் கோவிலை சேர்ந்தார்.
காணும் பொங்கலை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்தனர். அதிகாலையில் இருந்தே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கடலில் புனித நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடற்கரைக்கு யாரும் செல்லாத வகையில் போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். இதனால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் மேற்பார்வையில், கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைைமயில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் சுவாமி வெள்ளிக்குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் பொங்கலுக்கு மறுநாள் கரிநாளில் சுவாமி வெள்ளிக்குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம் ஆகும். நெல்லையப்பர் குதிரையில் வேட்டைக்கு செல்லும்போது காந்திமதி அம்பாள், கரிநாளில் வேட்டைக்கு செல்லக்கூடாது என தடுக்கிறார்.
தடையை மீறி, நெல்லையப்பர் பரி வேட்டைக்கு சென்று விடுகிறார். இதனால் கோபமடைந்த அம்பாள், நெல்லையப்பர் வேட்டை முடித்து திரும்பும்போது, கோவில் கதவை மூடியதாகவும், அதன்பின் சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பட்ட, திருமுருகன் பூண்டி பதிகம் பாடிய பின் கோவில் நடை திறந்ததாகவும் ஆன்மிக வரலாறு கூறுகிறது.
இதையொட்டி நேற்று நெல்லையப்பர் கோவிலில் இருந்து சுவாமி நெல்லையப்பர், சந்திரசேகரர் உற்சவ மூர்த்தியாக வெள்ளிக்குதிரை வாகனத்தில் கண்ணப்ப நாயனாருடன் புறப்பட்டு சென்றார். பின்னர் பழைய பேட்டையில் அமைந்துள்ள பரிவேட்டை மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் நெல்லையப்பர் கோவிலுக்கு திரும்பினார். சுவாமி கோவிலுக்கு வந்த போது, அம்பாளின் ஊடலினால், சுவாமி சன்னதி கதவு பூட்டப்பட்டிருந்தது. அதன்பின் சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச்செய்த பதிகம் பாடி ஊடல் தீர்த்து வைத்தப்பின், கோவில் கதவு திறந்து சுவாமி கோவிலுக்குள் நுழைந்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வில்லுக்குறி, மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை ஆகியவை நடந்தது. தொடர்ந்து தூத்துக்குடி மறைமாவட்டம் ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்கி திருவிழா கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றினார். நிகழ்ச்சியில், பங்குத்தந்தை ஜெயக்குமார், இணைப்பங்குத்தந்தை ஷிஜின், அருட்பணியாளர் எக்கர்மன்ஸ் மைக்கேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான பத்தர்கள் கலந்து கொண்டனர். விழா வருகிற 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
விழாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு திருப்பலி, குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்குதல், மாலை 6 மணிக்கு நற்கருணை பவனி, நற்கருணை ஆசீர் போன்றவை நடக்கிறது.
புனித செபஸ்தியார் நினைவு தினமான 20-ந் தேதி காலை 6 மணிக்கு திருப்பலி, தொடர்ந்து புனிதரின் அருளிக்கம் முத்தம் செய்தல், மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலியும் நடக்கிறது.
23-ந் ேததி காலை 6 மணிக்கு முதல் திருவிருந்து வழங்கும் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனையும், இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி மற்றும் வாணவேடிக்கையும் நடைபெறும்.
இறுதி நாளான 24-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு திருவிழா திருப்பலி, காலை 8.30 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலி, மதியம் 1 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறுகிறது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்ராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் காலை தாமரைக் குளக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது குளக்கரையில் சிறப்பு அலங்காரத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு அடுத்த நாள் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நேற்று திருவூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வரலாற்று கதை கூறப்படுகிறது. அதாவது பிருங்கி என்ற முனிவர் அருணாசலேஸ்வரரை மட்டுமே வணங்கி வந்துள்ளார். ஒரு சமயத்தில் அருணாசலேஸ்வரரும், அம்மனும் ஒன்றாக இருந்தபோது அவர் வண்டு உருவில் அருணாசலேஸ்வரரை மட்டும் சுற்றி வந்து வணங்கி இருக்கிறார். இதனால் சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு பின்னர் கூடல் ஏற்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த ஊடல் மற்றும் கூடலை விளக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருவூடல் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது.
மேலும் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கோவிலில் உள்ள நந்திகளுக்கு வடை, அதிரசம், முருக்கு, காய், கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டு, பூ மாலைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
சாமி, அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் திருவூடல் விழாவுக்கு புறப்பட்டனர். அதிகாலையில் நந்திக்கு தரிசனம் கொடுத்து விட்டு திட்டி வாயிலில் சூரிய பகவானுக்கும் காட்சி கொடுத்து மாடவீதியை 3 முறை சுற்றி வந்தனர். அதைத்தொடர்ந்து இரவு சுமார் 7 மணி அளவில் திருவூடல் தெருவில் திருவூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருவூடல் திருவிழாவின் போது சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு அம்மன் மீண்டும் கோவிலுக்கு சென்று விட்டார். அருணாசலேஸ்வரர் மட்டும் குமரக்கோவிலுக்கு சென்று விட்டார். அங்கிருந்து இன்று (சனிக்கிழமை) பக்தர்கள் கிரிவலம் செல்வது போன்று அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்வார். கிரிவலம் முடித்து விட்டு கோவிலுக்கு வரும் போது சாமி சன்னதியில் மறுவூடல் நடக்கும். இதனுடன் திருவூடல் திருவிழா முடிகிறது.
மேலும் விடுமுறை தினமான நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஆரணி கோட்டை அறம் வளர்த்த நாயகி உடனுறை கைலாயநாதர் சிவன் கோவிலில் மாட்டுப் பொங்கலையொட்டி திருவூடல் விழா நடைபெற்றது. கோவில் வெளிப்புறத்தில் அமைந்துள்ள அதிகாரநந்திக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, தொடர்ந்து நந்திக்கு காய்கறிகள், மலர்கள், இனிப்பு, கார வகைகளால், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் சாமியை ராஜகோபுரத்தின் வழியாக அதிகார நந்தி காட்சிதரும்படி அலங்கரித்து வலம் வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் புதுகாமூர் பகுதியில் அமைந்துள்ள புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில், சைதாப்பேட்டை பூமிநாதர் கோவில், மெய்யூர் மெய்கண்டீஸ்வரர் கோவில், சேவூர் - பையூர் பகுதியிலுள்ள விருபாட்சீஸ்வரர் கோவில், எஸ்.வி. நகரம் பகுதியில் உள்ள திரைகேபேஸ்வரர் சிவன் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் திருவூடல் விழா நடைபெற்றது.






