என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பிரம்மோற்சவ விழா திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் கைலாசகிரி மலைக்கு கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது
    ஸ்ரீகாளஹஸ்தி :

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் விரைவில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்க உள்ளது. பிரம்மோற்சவ விழாவின்போது சாமி, அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கும். அந்தத் திருக்கல்யாண உற்சவத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும் வந்து பங்கேற்குமாறு முன்கூட்டியே அழைப்பு விடுப்பதற்காக கைலாசகிரி மலைக்கு கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். அதன்படி கைலாசகிரி மலைக்கு கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி மாட்டுப்பொங்கலையொட்டி நேற்று நடந்தது. அதில் கோவில் நிர்வாக அதிகாரி பெத்திராஜு, ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதன்ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.

    உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் கோவிலின் அலங்கார மண்டபத்தில் இருந்து மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க ராஜகோபுரம் வழியாக 4 மாட வீதிகளில் வலம் வந்து, பஜார் தெரு, தெலுங்கு கங்கை கால்வாய் அலுவலகம் வழியாக 16 கிலோ மீட்டர் தூரத்துக்கு கிரிவலம் சென்றனர். வழிநெடுகிலும் உள்ள சன்னதிகளில் சிறப்பு பூஜை செய்து கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. கிரிவலம் வந்த பக்தர்களுக்கு கோவில் சார்பில் குடிநீர், மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.
    விருத்தாசலம் அடுத்த கோணான்குப்பம் கிராமத்தில் புனித பெரிய நாயகி அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    விருத்தாசலம் அடுத்த கோணான்குப்பம் கிராமத்தில் புனித பெரிய நாயகி அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆண்டு பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டுக்கான பெருவிழா நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சேலம் மறை மாவட்ட முன்னாள் மேதகு ஆயர் சிங்கராயர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. 

    தொடர்ந்து வாணவேடிக்கையுடன் ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் புனித பெரியநாயகி அன்னை ஓவியம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இதில் ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா பாலதண்டாயுதம், ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி மோகன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், விருத்தாசலம் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் மற்றும் மங்கலம்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய விழாவான தேர் பவனி, வருகிற 23-ந்தேதி இரவு 9 மணியளவில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் அருட்பணி தேவ சகாயராஜ் மற்றும் திருத்தலத்தின் உதவி பங்குத்தந்தை அருட்பணி அலெக்ஸ் ஒளில் குமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    சத்யநாராயணனுக்கு உகந்த இந்த அஷ்டோத்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் வறுமை ஒழியும். செல்வம் பெருகும்.
    ஓம் ஸத்ய தேவாய நம
    ஓம் ஸத்யாத்மனே நம
    ஓம் ஸத்ய பூதாய நம
    ஓம் ஸத்ய புருஷாய நம
    ஓம் ஸத்ய நாதாய நம
    ஓம் ஸத்ய ஸாக்ஷிணே நம
    ஓம் ஸத்ய யோகாய நம
    ஓம் ஸத்ய ஜ்ஞானாய நம
    ஓம் ஸத்யஜ்ஞானப்ரியாய நம
    ஓம் ஸத்யநிதயே நம

    ஓம் ஸத்ய ஸம்பவாய நம
    ஓம் ஸத்ய ப்ரபவே நம
    ஓம் ஸத்யேஸ்வராய நம
    ஓம் ஸத்ய காமினே நம
    ஓம் ஸத்ய பவித்ராய நம
    ஓம் ஸத்ய மங்களாய நம
    ஓம் ஸத்ய கல்பாய நம
    ஓம் ஸத்ய ப்ரஜாபதயே நம
    ஓம் ஸத்ய விக்ரமாய நம
    ஓம் ஸத்ய ஸித்தாய நம

    ஓம் ஸத்ய அச்யுதாய நம
    ஓம் ஸத்ய வீராய நம
    ஓம் ஸத்ய போகாய நம
    ஓம் ஸத்ய தர்மாய நம
    ஓம் ஸத்ய க்ரஜாய நம
    ஓம் ஸத்ய ஸந்துஷ்டாய நம
    ஓம் ஸத்ய வராஹாய நம
    ஓம் ஸத்ய பாராயணாய நம
    ஓம் ஸத்ய பூர்ணாய நம
    ஓம் ஸத்ய ஒளஷதாய நம

    ஓம் ஸத்ய சாஸ்வதாய நம
    ஓம் ஸத்ய ப்ரவர்தனாய நம
    ஓம் ஸத்ய விபவே நம
    ஓம் ஸத்ய ஜேஷ்டாய நம
    ஓம் ஸத்ய ஸ்ரேஷ்டாய நம
    ஓம் ஸத்ய விக்ரமினே நம
    ஓம் ஸத்ய தன்வினே நம
    ஓம் ஸத்ய மேதாய நம
    ஓம் ஸத்ய தீராய நம
    ஓம் ஸத்ய க்ரதுவே நம

    ஓம் ஸத்ய ஸுசாய நம
    ஓம் ஸத்ய கலாய நம
    ஓம் ஸத்ய வத்ஸலாய நம
    ஓம் ஸத்ய வாஸவே நம
    ஓம் ஸத்ய மோகாய நம
    ஓம் ஸத்ய ருத்ராய நம
    ஓம் ஸத்ய ப்ரும்ஹணே நம
    ஓம் ஸத்ய அம்ருதாய நம
    ஓம் ஸத்ய வேதாங்காய நம
    ஓம் ஸத்ய சதுராத்மனே நம

    ஓம் ஸத்ய போக்த்ரே நம
    ஓம் ஸத்ய அர்சிதாய நம
    ஓம் ஸத்யேந்திராய நம
    ஓம் ஸத்ய ஸங்காய நம
    ஓம் ஸத்ய ஸ்வர்காய நம
    ஓம் ஸத்ய நியமாய நம
    ஓம் ஸத்ய வேதாய நம
    ஓம் ஸத்யவேத்யாய நம
    ஓம் ஸத்ய பீயூஷாய நம
    ஓம் ஸத்ய மாயாய நம

    ஓம் ஸத்ய மோஹாய நம
    ஓம் ஸத்ய ஸுரநந்தாய நம
    ஓம் ஸத்ய ஸாகராய நம
    ஓம் ஸத்ய தபஸே நம
    ஓம் ஸத்ய ஸிம்ஹாய நம
    ஓம் ஸத்ய ம்ருகாய நம
    ஓம் ஸத்ய லோக பாலகாய நம
    ஓம் ஸத்ய ஸ்திராய நம
    ஓம் ஸத்யௌஷதாய நம
    ஓம் ஸத்ய திக்பாலகாய நம

    ஓம் ஸத்ய தனுர்தராய நம
    ஓம் ஸத்ய புஜாய நம
    ஓம் ஸத்ய வாக்யாய நம
    ஓம் ஸத்ய குரவே நம
    ஓம் ஸத்ய ந்யாயாய நம
    ஓம் ஸத்ய ஸாக்ஷிணே நம
    ஓம் ஸத்ய ஸம்விருதாய நம
    ஓம் ஸத்ய ஸம்ப்ரதாய நம
    ஓம் ஸத்ய வஹ்னயே நம
    ஓம் ஸத்ய வாயவே நம

    ஓம் ஸத்ய சிக்ஷராய நம
    ஓம் ஸத்யானந்தாய நம
    ஓம் ஸத்ய நீரஜாய நம
    ஓம் ஸத்ய ஸ்ரீபாதாய நம
    ஓம் ஸத்ய குஹ்யாய நம
    ஓம் ஸத்யோதராய நம
    ஓம் ஸத்ய ஹ்ருதயாய நம
    ஓம் ஸத்ய கமலாய நம
    ஓம் ஸத்ய நாலாய நம
    ஓம் ஸத்ய ஹஸ்தாய நம

    ஓம் ஸத்ய பாஹவே நம
    ஓம் ஸத்ய ஜிஹ்வாய நம
    ஓம் ஸத்ய முக்காய நம
    ஓம் ஸத்ய தம்ஷ்டராய நம
    ஓம் ஸத்ய நாஸிகாய நம
    ஓம் ஸத்ய ஸ்ரோத்ரே நம
    ஓம் ஸத்ய சக்ஷுஷே நம
    ஓம் ஸத்ய ஸிரஸே நம
    ஓம் ஸத்ய மகுடாய நம
    ஓம் ஸத்யாம்பராய நம

    ஓம் ஸத்ய ஆபரணாய நம
    ஓம் ஸத்ய ஆயுதாய நம
    ஓம் ஸத்ய ஸ்ரீவல்லபாய நம
    ஓம் ஸத்ய குப்தாய நம
    ஓம் ஸத்ய த்ருதாய நம
    ஓம் ஸத்யபாமா ரதாய நம
    ஓம் ஸத்ய கரஹரூபிணே நம
    ஓம் ஸத்ய நாராயணஸ்வாமி தேவதாப்யோ நமோ நம!
    டி.என்.பாளையம் அருகே வனப்பகுதியில் உள்ள கோவிலில் உருவபொம்மைகள் வைத்து பக்தர்கள் வினோத வழிபாடு செய்தனர்.
    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தை அடுத்த புஞ்சைதுறையம்பாளையம் வனப்பகுதியில் நவக்கிணறு மாதையன் (ஈஸ்வரன்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் அன்று பக்தர்கள் பல்வேறு உருவபொம்மைகள் வைத்து வழிபாடு நடத்துவார்கள்.

    அதேபோல் இந்த ஆண்டு மாட்டு பொங்கலான நேற்று டி.என்.பாளையம் சுற்று வட்டாரப்பகுதிகளான கொண்டையம்பாளையம், கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், பங்களாப்புதூர், நஞ்சை புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற தவிறு பிள்ளை பொம்மை, காவல் நாய்பொம்மை, விநாயகர் பொம்மை, பசு பொம்மை என பல விதமான வண்ணங்கள் பூசப்பட்ட களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளை கால்நடையாகவும், 2 மற்றும் நான்கு சக்கர வாகனங்களிலும் வைத்து அடர்ந்த வனப்பகுதிக்குள் எடுத்து சென்றனர்.

    பின்னர் அந்த பொம்மைகளை மாதையனுக்கு படைத்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுமாறும், நேர்த்திக்கடனை செலுத்தியும் வழிபட்டனர். இது குறித்து கோவிலின் பூசாரி முருகனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    எனது முன்னோர்கள் உள்பட 3 தலைமுறைகளுக்கும் மேலாக இக்கோவிலில் பக்தர்கள் வழிபடுவது வழக்கம். ஒரு நாள் அவர்கள் லிங்கத்தை தலைசுமையாக எடுத்து கொண்டு கோவில் அருகே சென்றபோது தண்ணீர் தாகம் எடுத்தது. இதனால் கிணற்றில் நீர் அருந்த லிங்கத்தை ஒரு இடத்தில் வைத்துவிட்டு சென்று விட்டனர்.

    தண்ணீர் அருந்திவிட்டு வந்து லிங்கத்தை எடுக்க முயன்றுள்ளனர். ஆனால் அதை எடுக்க முடியவில்லை. அப்படியே நிலத்தில் வேரூன்றி விட்டது. இதைத்தொடர்ந்து அந்த இடத்தில் புதிதாக கோவில் கட்டி, ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடத்துகின்றனர்.

    கோவிலின் முகப்பு பகுதியில் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் எப்போதும் தண்ணீர் வற்றியதே கிடையாது. எனவே அந்த கிணற்றை நவக்கிணறு என அழைத்தனர். இது தவிர கோவிலின் நுழைவு பகுதியில் 30 அடியில் கிணறு ஒன்று உள்ளது. அதிலும் தண்ணீர் வற்றியது கிடையாது. மேலும் பக்தர்கள் எதை நினைத்து வேண்டுகின்றனரோ அவை நிறைவேறுகிறது.

    இவ்வாறு கோவில் பூசாரி கூறினார்.
    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மேளதாளத்துடன் கோபூஜையில் வைக்கப்பட்டிருந்த புனிதநீர் கோமாதாவிற்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் கோசாலையில் ஆண்டுதோறும் கோ பூஜை, மாட்டு பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் தமிழக முதல்- அமைச்சரின் உத்தரவுப்படி கோ பூஜை, மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது.

    சுசீந்திரம் கோவில் கோசாலையில் உள்ள 17 மாடுகளுக்கும் கொம்புகளில் வர்ணம் பூசி மாலை அணிவித்து நெத்தி பட்டம் சூட்டி. பரிவட்டம் கட்டி. வஸ்திரங்கள் சாத்தி கவுரவிக்கப்பட்டன.

    முன்னதாக கோவில் முகப்பில் கணபதி பூஜையும். லட்சுமி பூஜையும் நடந் தது. கோவில் வாசல் முன்பு 17 மாடுகளுக்கும் பொங்கல் விடும் வகையில் 17 பெண்கள் பொங்கல் பானை வைத்து கரும்பு, மஞ்சள் குலை நட்டு விளக்கேற்றி பொங்கலிட்டனர். சூடம் ஏற்றி பொங்கலிடும் நிகழ்ச்சியை தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்.

    மேளதாளத்துடன் கோபூஜையில் வைக்கப்பட்டிருந்த புனிதநீர் கோமாதாவிற்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பொங்கலிட்ட பெண்களுக்கு தளவாய்சுந்தரம் பரிசு வழங்கினார்.
    தஞ்சை பெரியகோவிலில் மாட்டு பொங்கல் விழாவையொட்டி தலா 100 கிலோ காய்-கனிகளால் எளிய முறையில் நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெரியகோவில் ஆயிரம் ஆண்டுகளை கடந்து இன்றும் வானுயர காம்பீரமாக காட்சி அளிக்கிறது. உலக பிரசித்த பெற்ற தஞ்சை பெரியகோவிலில் மிகப்பெரிய நந்தி பெருமான் சிலை உள்ளது. மாட்டு பொங்கல் விழாவையொட்டி ஆண்டுதோறும் நந்தி பெருமானுக்கு 1 டன் காய்கறி, பழங்கள், மலர்கள், இனிப்புகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, நந்தி பெருமானுக்கு முன்பு 108 பசுக்கள் வரிசையாக நிறுத்தி பிரமாண்டமாக வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு தொடர் மழை, கொரோனா தொற்று காரணமாக மாட்டு பொங்கல் விழாவையொட்டி மிக எளிமையான முறையில் நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நேற்றுகாலை நந்தி பெருமானுக்கு பால், மஞ்சள், திரவிய பொடி, தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் முட்டைகோஸ், உருளை கிழங்கு, பூசணிக்காய், கேரட், பீட்ரூட், வாழைக்காய், வெள்ளரிக்காய், சவ்சவ், பாகற்காய் உள்ளிட்ட 100 கிலோ காய்கள், மாதுளை, ஆரஞ்சு, ஆப்பிள், வாழைப்பழம், அன்னாசி, கொய்யாப்பழம், உள்ளிட்ட 100 கிலோ பழங்கள் மற்றும் குறைந்த அளவிலான மலர்கள், சந்தனத்தால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கன்றுடன் கூடிய ஒரு பசு மாட்டை அழைத்து வந்து நந்தி சிலைக்கு முன்பு நிறுத்தி கோ பூஜை செய்யப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமானை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி நந்தி பெருமான் மண்டப தூண்களில் கரும்புகளும், வாழைகளும் கட்டப்பட்டிருந்தன. அலங்காரம் செய்யப்பட்ட காய்கறி, பழங்கள் பக்தர்களுக்கு இன்று(சனிக்கிழமை) பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கோ பூஜை விழா நடைபெற்றது. அதைதொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலிலிருந்து வன்னி மரத்திற்கு சென்றடைந்தார்.
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கல் அன்று கோபூஜை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று கோ பூஜை விழா நடைபெற்றது. முன்னதாக பொங்கல் படையலிட்டு சர்க்கரைப்பொங்கல் மற்றும் வாழைப்பழங்கள் ஆகியவை மாடுகளுக்கு கொடுக்கப்பட்டன. 

    அதைதொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலிலிருந்து வன்னி மரத்திற்கு சென்றடைந்தார். பின்னர் அங்கிருந்து தேரோடும் வீதி வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவில் மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் அசோக்குமார் தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
    வீட்டில் வராஹி அம்மனை விரதம் இருந்து வழிபடும் போது சில விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    வராகி வழிபாடு வீட்டில் செய்ய ஒரு தனி இடம் அமைத்துக்கொள்ள வேண்டும். எந்த இடத்தில், எந்த நேரத்தில் செய்கிறோமோ அதே இடத்தில் தான் தினசரி செய்ய வேண்டும். வழிபாட்டிற்கு வராகி அம்மன் படம், அல்லது விளக்கு ஜோதி வடிவாகவே வழிபடலாம். காலை, மாலை குளிக்கின்றபோது தண்ணீரில் துளசி, வில்வம் ஒரு கைபிடி போட்டு குளிக்க வேண்டும். பூஜை அறையில் வராகி படத்தை வைப்பதை காட்டிலும், தனி அறையில் பூஜை செய்வதுதான் சிறப்பு. 

    அன்னைக்கு அருகில் ஒரு விநாயகர் சிலை அல்லது படத்தை வசதிக்கு ஏற்றார்போல் வைத்துக்கொள்ளலாம். தினசரி பூஜை செய்யும் இடத்தில் பன்னீரில் மஞ்சள் தூள் கலந்து, 5 ஏலக்காய் நுணுக்கி அதில் போட்டு அந்த தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். வெள்ளிக்கிழமை, பஞ்சமி தோறும் மாவிலை தோரணம் கட்ட வேண்டும். பூஜை செய்யும் போது நீலம் மற்றும் சிகப்பு நிற ஆடையை பயன்படுத்தலாம். சுத்தமான மஞ்சள், குங்குமம் பூஜைக்கு பயன்படுத்த வேண் டும்.

    பூஜைக்கு தேவையான பொருட்கள், நைவேத்தியம் எல்லாம் சேகரித்து வைத்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும். முதலில் குருவை மானசீகமாக வழிபாடு செய்து ‘குருவடி சரணம் திருவடி சரணம்’ என்று 9 முறை கூறவும். பின்பு விநாயகருக்கு அருகம்புல் கொண்டு 21 முறை ‘விநாயகா நம’ என கூறி அர்ச்சிக்க வேண்டும். விநாயகருக்கு தீபாராதனை காண்பித்து நைவேத்தியம் சமர்ப்பிக்க வேண்டும். 

    வராகி அன்னையை துளசி, வில்வம், நீலசங்கு பூ மூன்றையும் கலந்து வராகி மூல மந்திரம் மற்றும் வராகி மாலை பாடி அர்ச்சனை செய்ய வேண்டும். பூஜையில் அமர்ந்த பின் எழக்கூடாது. அர்ச்சனை முடித்த பிறகு அன்னைக்கு பிடித்த நைவேத்தியம் வைத்து தீபாராதனை காட்டி தரையில் விழுந்து வணங்க வேண்டும். பின் நைவேத்தியம் பகிர்ந்து கொடுத்து நாமும் உண்ணலாம்.
    அனுமன் செய்த அற்புதங்களின் அடிப்படையில் அவரது சில வடிவங்கள் சிறப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன. அவற்றை இங்கே பார்க்கலாம்.
    ராமாயண இதிகாசத்திலும், மகாபாரதத்தில் சில பகுதிகளிலும் காணப்படுபவர், அனுமன். ராமாயணத்தில் ராமனின் சிறந்த பக்தனாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டவர். இந்த அனுமன், சிவபெருமானின் வடிவாக அவதரித்தவர் என்றும் புராணங்கள் எடுத்துரைக்கின்றன. அனுமன் செய்த அற்புதங்களின் அடிப்படையில் அவரது சில வடிவங்கள் சிறப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன. அவற்றை இங்கே பார்க்கலாம்.

    வீர ஆஞ்சநேயர்

    சிறுவயதில் தான் செய்த தவறின் காரணமாக, முனிவர் ஒருவரின் சாபத்தைப் பெற்றார், அனுமன். அந்த சாபத்தின் காரணமாக அவர் அதுவரைப் பெற்றிருந்த சக்திகள் அனைத்தையும் மறந்து போனார். அது ராமபிரானின் வருகைக்குப்பிறகே வெளிப்பட்டது. சீதையைக் கடத்திச் சென்ற ராவணன், அவளை தென்திசை நோக்கி தூக்கிச் சென்றதாக மட்டுமே தகவல் கிடைத்தது. ஆனால் சீதை எங்கிருக்கிறாள் என்பது எவருக்கும் தெரியவில்லை. அதனால் அதை அறிந்து கொண்டு வரும்படி அனுமனுக்கு உத்தரவிடப்பட்டது. அங்கு செல்ல நடுவில் இருக்கும் கடலைக் கடந்து செல்ல வேண்டும். அது எவராலும் சாத்தியமில்லையே.. அனுமனும் கூட ஒருநொடி என்ன செய்வது என்று திகைத்து நின்றார். அப்போது ஜாம்பவான், அனுமனின் கடந்த காலத்தையும், முனிவரின் சாபத்தால் அவர் மறந்த சக்திகளை பற்றியும் எடுத்துரைத்தார். இதையடுத்து அவரது வீரமும், வலிமையும் நினைவுக்கு வந்து விஸ்வரூப வடிவம் எடுத்தார். இந்த வடிவத்தையே, ‘வீர ஆஞ்சநேயர்’ என்று அழைக்கிறார்கள். இவரை வழிபட்டால் தைரியம் வந்து சேரும்.

    பஞ்சமுக ஆஞ்சநேயர்

    இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்பதற்காக, ராவணனுக்கும் ராமனுக்கும் இடையே போர் நடைபெற்றது. ராவணனின் தரப்பில் பல அரக்கர்கள், மாய மந்திரங்களின் மூலமாக ராமரின் படையை தகர்க்க நினைத்தனர். அவர்களில் ஒருவன்தான், ‘மயில் ராவணன்.’ அவனை அழிப்பதற்காக ஆஞ்சநேயர் எடுத்த அவதாரமே ‘பஞ்சமுக ஆஞ்சநேயர்’ வடிவமாகும். இந்த அனுமனை வழிபடுவதால், பில்லி, சூன்யம், மாய மந்திரங்களால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

    யோக ஆஞ்சநேயர்

    ராமநாமத்தைக் கேட்பதற்காகவே, பூலோகத்தில் தங்கியவர் ஆஞ்சநேயர். சீதாதேவியிடம் இருந்து சிரஞ்சீவியாக வாழும் வரத்தைப் பெற்ற அனுமன், இன்றளவும் அரூபமாக இந்த பூலோகத்தில் வாழ்ந்து வருவதாக ஐதீகம். பக்தர்கள் கூறும் ராமநாமம் தன்னுடைய காதில் ஒலிக்க வேண்டும் என்பதற்காகவும், தன்னுடைய தவம் கலையாமல், ராமனை நினைத்தபடியே இருக்க வேண்டும் என்பதற்காகவும், யோக நிஷ்டையில் அமர்ந்திருக்கும் அனுமனை, ‘யோக ஆஞ்சநேயர்’ என்று அழைக்கிறோம். இந்த ஆஞ்சநேயரை வழிபாடு செய்து வந்தால், மன அமைதியும், மன உறுதியும் கிடைக்கும்.

    பக்த ஆஞ்சநேயர்

    ராமரின் முதன்மை பக்தனாக புகழப்படுபவர், அனுமன். ராமர் ஒரு காரியத்தை சொல்லும் முன்பாகவே, குறிப்பறிந்து அதைச் செய்து முடிக்கும் ராமரின் தூதனாகவும் அவர் இருந்தார். ராமரை, எங்கும் எதிலும் காண்பவர் அனுமன். ராமநாமம் சொல்லி வணங்கும் பக்தர்களுக்கு அனுமனின் ஆசீர்வாதம் நிச்சயமாக உண்டு. ராம அவதாரம் முடிந்து வைகுண்டம் திரும்ப நினைத்த ராமபிரான், அனுமனையும் தன்னுடன் வந்துவிடும்படி அழைத்தார். ஆனால் ராமநாமம் எங்கும் ஒலிக்கப் போகும் பூலோகத்தில் அதைக் கேட்டபடியே இருப்பதே தனக்கு ஆனந்தம் என்று மறுத்துவிட்டார், அனுமன். அப்படிப்பட்ட அனுமன், தன்னுடைய இரு கரங்களையும் கூப்பியபடி அருளும் வடிவத்தை ‘பக்த ஆஞ்சநேயர்’ என்கிறார்கள். இவரை வழிபட்டு வந்தால் நினைத்தது நிறைவேறும்.

    சஞ்சீவி ஆஞ்சநேயர்

    ராவணன் அனுப்பிய படைகளுடன், ராம- லட்சுமணர்களும், வானரப் படையினரும் போரிட்டுக் கொண்டிருந்தனர். அன்று ராவணனின் மகன் இந்திரஜித் போரிட வந்திருந்தான். அவன் மாயக் கலைகளில் வல்லவன். அவன் மறைந்திருந்து எய்த நாகாஸ்திரம் ஒன்று தாக்கியதில், லட்சுமணன் மூர்ச்சை அடைந்தான். லட்சுமணனை பிழைக்க வைக்க அரிய வகை மூலிகைகள் தேவைப்பட்டது. அது சஞ்சீவி மலையில் இருப்பதாகவும், அதைக் கொண்டு வரும்படியும் அனுமன் பணிக்கப்பட்டார். இதையடுத்து அங்கு சென்ற அனுமன், மூலிகையைத் தேடித் தேடி பறிக்க நேரம் இல்லாமல், சஞ்சீவி மலையை அப்படியே பெயர்த்து எடுத்துக் கொண்டு வந்தார். மலையை தன் கையில் தாங்கியபடி பறக்கும் ஆஞ்சநேயரை, ‘சஞ்சீவி அனுமன்’ என்று அழைப்பார்கள். இவரை வழிபாடு செய்வதால், நோய் நொடிகள் விலகும்.
    தை மாதத்தில் (ஜனவரி - பிப்ரவரி) வரும் முக்கியமான சுபமுகூர்த்த நாட்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    17.1.2021 ஞாயிறு சதுர்த்தி சதயம் சித்த காலை மணி 7-8

    25.1.2021 திங்கள் துவாதசி மிருசீர்ஷம் அமிர்த காலை மணி 6-7.30

    27.1.2021 புதன் சதுர்த்தசி புனர்பூசம் சித்த காலை மணி 9-10

    1.2.2021 திங்கள் சதுர்த்தி உத்திரம் சித்த காலை மணி 6-7.30

    3.2.2021 புதன் சஷ்டி சித்திரை சித்த காலை மணி 9-10.30

    8.2.2021 திங்கள் துவாதசி மூலம் சித்த காலை மணி 6-7.30

    10.2.2021 புதன் சதுர்த்தசி உத்திராடம் அமிர்த காலை மணி 9-10
    காஞ்சிபுரம் அருகில் உள்ள திருச்சங்கமங்கை என்ற பகுதியில் வாழ்ந்தவர், சாக்கிய நாயனார். இவரது வாழ்வில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடலை பார்க்கலாம்.
    காஞ்சிபுரம் அருகில் உள்ள திருச்சங்கமங்கை என்ற பகுதியில் வாழ்ந்தவர், சாக்கிய நாயனார். இவர் பவுத்த மதத்தை தழுவியவர். அதனால்தான் பெரிய புராணத்தை எழுதிய சேக்கிழார் பெருமானால், ‘சாக்கிய நாயனார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளார். ‘பவுத்தம்’ என்பதற்கு ‘சாக்கியம்’ என்ற பொருள் உண்டு.

    இளைஞராக இருந்த சாக்கிய நாயனாருக்கு, ஞானத் தேடல் அதிகரித்தது. அவர் இனி ஒரு பிறப்பு வேண்டாம் என்று கருதினார். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தேடத் தொடங்கினார். இதற்காக பல சமய நூல்களையும் கற்கத் தொடங்கினார். அதன் ஒரு கட்டமாக சைவ சமய நூல்களையும் படித்தார். அதில் ஒரு தெளிவைக் கண்டார். பிறவிப் பெருங்கடலைக் கடக்க சிவனே வழி என்று உணர்ந்தார்.

    சாக்கிய கோலத்தில் இருந்ததாலும், அங்கு சாக்கியர்கள் அதிகமாக வசித்து வந்த காரணத்தாலும், ஈசனை வழிபாடு செய்வதை மறைமுகமாக, யாரும் அறியாத வகையில் செய்து வந்தார். தினமும் சிவலிங்க தரிசனம் செய்த பிறகுதான், உணவு உண்ண வேண்டும் என்ற உயர்ந்த பழக்கத்தை பின்பற்றினார்.

    ஒரு நாள் பரந்த வெட்ட வெளியில் சாக்கிய நாயனார் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கண்ணில் வழிபாடு ஏதுமின்றி கிடந்த சிவலிங்க திருமேனி தென்பட்டது. பராமரிப்பின்றி காணப்பட்ட அந்த லிங்கத்தை நினைத்து சாக்கிய நாயனார் உள்ளம் நொறுங்கினார். பின்னர் அதை தூய நீரால் நீராட்டி, மலர்கள் சாத்தி பூஜிக்க வேண்டும் என்று நினைத்தார். அந்த பரந்துவிரிந்த வெட்ட வெளியில் நீரும் இல்லை, மலர் கொண்ட மரங்களும் இல்லை.

    இதையடுத்து ஈசன் மீது கொண்ட அன்பு மிகுதியால், கீழே கிடந்த கல்லை எடுத்து, ‘சிவாயநம’ என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி, அதை சிவலிங்கத்தின் மீது வீசினார். தன்னை கடுமையாக வழிபட்டால் கூட அதை கனிவாக ஏற்றுக்கொள்பவர் சிவபெருமான். அதனால்தான், சாக்கிய நாயனார் எறிந்த கல், கயிலையில் வாழும் ஈசனின் பாதங்களில் பொன்மலராக தஞ்சம் அடைந்தது.

    பொதுவெளியில் இறைவனை பூஜிப்பதற்காக இதைச் செய்தாலும், பிறர் பார்க்கும் போது கல்லால் எறிவது போலத்தான் தோன்றும். அதனால் நமக்கு பாதகம் இல்லை என்று கருதிய சாக்கிய நாயனார், இந்த வழிபாட்டையே தினமும் செய்ய முன்வந்தார். தினமும் அந்த சிவலிங்கம் இருக்கும் இடத்திற்கு வருவார். சிவனை வழிபட்டு ஐந்தெழுத்து மந்திரம் உச்சரித்தபடி, கற்களை சிவலிங்கம் மீது எறிந்துவிட்டு, பின்னர்தான் வீட்டிற்குச் சென்று உணவு உண்பார். பல நாட்கள் இப்படியே கடந்த நிலையில் ஒரு நாள், சிவபெருமானையே எப்போதும் சிந்தையில் நினைத்தபடி இருந்த சாக்கிய நாயனார், அந்த ஆனந்தத்தில் சிவ பூஜை செய்வதற்கு மறந்து போனார். அதற்கு முன்பாகவே உணவருந்த அமர்ந்து விட்டார். உணவை எடுத்து வாயில் வைக்கப்போன தருவாயில், ஈசனை வழிபடாதது அவர் நினைவுக்கு வந்தது.

    உணவை அப்படியே வைத்து விட்டு, சிவலிங்கத்தை நோக்கி விரைந்தார். தான் வர தாமதமானதற்கு ஈசனிடம் மன்னிப்பு கேட்ட சாக்கிய நாயனார், கீழே கிடந்த சில கற்களை எடுத்து, அதை சிவலிங்கத்தின் மீது வீசி எறிந்தார். அப்போது அவரது பக்தியில் மகிழ்ந்து போன ஈசன், தன் மனைவி பார்வதியுடன் இடப வாகனத்தில் தோன்றி சாக்கிய நாயனாருக்கு அருள்காட்சி கொடுத்தார். மேலும் அவர் எதற்காக இந்த சிவ வழிபாட்டை இதுநாள் வரை மேற்கொண்டாரோ, அந்த முக்தியையும், சாக்கிய நாயனாருக்கு அருளினார்.

    சாக்கிய நாயனார், கல் எறிந்து வழிபட்டதாக சொல்லப்படும் சிவபெருமான், காஞ்சிபுரம் அடுத்துள்ள கோனேரிக்குப்பம் என்ற ஊரில் வீற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தக் கோவிலில் அருளும் இறைவனின் திருநாமம், ‘வீரட்டானேஸ்வரர்’ என்பதாகும். சாக்கிய நாயனார் கல் எறிந்ததன் அடையாளமாக, இங்குள்ள லிங்கத்தின் மீது கல் பட்ட வடு புள்ளி புள்ளியாக காணப்படுகிறது. மேலும் இறைவனின் சன்னிதிக்கு எதிரில் கையில் கல்லுடன் சாக்கிய நாயனாரின் திருமேனியும் காணப்படுகிறது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா இன்று இரவு நடக்கிறது. இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு அடுத்த நாள் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுகிறது.

    கோவில் தல வரலாறுபடி, பிருங்கி முனிவர் அண்ணாமலையாரை மட்டுமே வணங்கி வந்துள்ளார். ஒரு சமயத்தில் அண்ணாமலையாரும், அம்மனும் ஒன்றாக இருந்தபோது வண்டு உருவில் அண்ணாமலையாரை மட்டும் சுற்றி வந்து வணங்கி இருக்கிறார்.

    அதனால் அண்ணாமலையாருக்கும் அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு கூடல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மனித வாழ்வில் கணவன்- மனைவிக்கு இடையே ஊடல் ஏற்பட்டு, பிறகு கூடல் ஏற்படுவதும் வாழ்வின் ஒரு நிலை என்பதை பக்தர்களுக்கு விளக்குவதும் திருவூடலாகும். திருவூடல் திருவிழா இன்று இரவு நடக்கிறது.

    விழாவை முன்னிட்டு அதிகாலையிலேயே அருணாசலேஸ்வரர் கோவில் நடை திறக்கப்பட்டு சாமி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து மாட்டுப்பொங்கலை முன்னிட்டு நந்திகளுக்கு வடை, அதிரசம், முருக்கு, காய்கறிகளால் செய்யப்பட்ட மாலைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சாமி, அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் திருவூடல் விழாவுக்கு புறப்பட்டனர்.

    அதிகாலையில் நந்திக்கு தரிசனம் கொடுத்து விட்டு திட்டி வாயிலில் சூரிய பகவானுக்கும் காட்சி கொடுத்து மாடவீதியில் எழுந்தருளினர்.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணி அளவில் திருவூடல் தெருவில் திருவூடல் திருவிழா நடக்கிறது.

    பக்தர்கள் கொட்டும் பனியை பொருட்படுத்தாமல் கிரிவலம் சென்று வருகின்றனர். இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
    ×