search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "spiritual stories"

  சுவாமி விவேகானந்தர் தனது சீடர்களிடம் கீழே கொடுக்கப்பட்டுள்ள சம்பவத்தை பல முறைகள் மேற்கோள் காட்டி அன்றாட வாழ்வில் ஆன்மிகத்தை கடைப்பிடிப்பதை உதாரணமாக குறிப்பிடுவது வழக்கம்.
  சுவாமி விவேகானந்தர் பற்றி அனைவருமே அறிந்திருப்போம். இந்திய மண்ணின் ஆன்மிக பாரம்பரியத்தை உலக மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக, அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த சர்வமத மாநாட்டில் பல உரைகளை ஆற்றினார். சிகாகோ நகரில் நடந்த பெரிய கண்காட்சியின் அங்கமாக சர்வ மதங்களின் உலக பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் விதத்தில் அந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அருமையான உரைகளை அதில் நிகழ்த்தி, உலகத்தின் கவனத்தை ஈர்த்தார் என்பது வரலாறு.

  அதன் பின்னர் பல ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் விருந்தினராக, சமூகத்தில் புகழ் பெற்றவர்களால் அழைக்கப்பட்டார். அந்தவகையில் 1896-ம் ஆண்டு பாரீஸ் நகரத்திற்குச் சென்று ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் தியான வகுப்புகள் நடத்தினார். ஓய்வு நேரங்களில் நகர்ப்புறத்தை சுற்றிப் பார்ப்பதுடன் பல்வேறு தரப்பு மக்களுடனும் பழகி, அவர்களது வாழ்க்கை முறைகள் பற்றி அறிந்து கொள்வதும் அவரது வழக்கம்.

  ஒரு முறை, வாடகைக்கு எடுக்கப்பட்ட குதிரைகள் இழுக்கும் கோச் வண்டி ஒன்றில், பாரீஸ் நகரத்தை சுற்றி பார்க்கும் விதமாக தன் சீடருடன் சென்று கொண்டிருந்தார். கோச் வண்டியை ஓட்டிச் சென்ற வண்டிக்காரர், பாதி வழியில் வசதியான உடை அணிந்த இரண்டு குழந்தைகளையும், அவர்களை அழைத்து வந்த பெண்ணையும் பார்த்தார். அவர்கள் பணக்கார வீட்டு பிள்ளைகள் போல் இருந்தார்கள்.

  வண்டியை ஓர் ஓரமாக நிறுத்திய அவர், இறங்கி சென்று அந்த பிள்ளைகளை கட்டிக்கொண்டு தட்டிக்கொடுத்தார். அவர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு திரும்பி, மீண்டும் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றார். அன்றைய ஐரோப்பிய நாகரிகத்தின்படி வண்டிக்காரர் தன்னிச்சையாக வண்டியை நிறுத்துவது அநாகரிகமாக கருதப்பட்டது. அவற்றை கவனித்துக் கொண்டிருந்த விவேகானந்தரின் சீடர் “அவர்கள் யார்?” என்று கேட்டார்.

  அந்தப் பிள்ளைகள் தன்னுடைய மகன் மற்றும் மகள் என்றும், அழைத்து வந்தது தனது மனைவி என்றும் வண்டிக்காரர் தெரிவித்தார்.

  “அவர்களை பார்த்தால் பெரிய பணக்கார வீட்டு பிள்ளைகள்போல் இருக்கிறதே. நீங்கள் ஒரு சாதாரண கோச் வண்டியை தானே ஓட்டிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்று சீடர் வியப்புடன் கேட்டார்.

  அவரை கோச் வண்டி ஓட்டுபவர் திரும்பி, கூர்ந்து கவனித்து விட்டு, பாரீஸில் பிரபலமாக இருந்த ஒரு வங்கியின் பெயரை குறிப்பிட்டு “அந்த வங்கி பற்றி ஏதாவது உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டார்.

  “ஆமாம். நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அது பெரிய வங்கியாக இருந்தது. எனக்கும் கூட அதில் ஒரு கணக்கு இருந்தது. ஆனால் இப்போது அந்த வங்கி திவாலாகி விட்டது போல் தெரிகிறதே?” என்றார் சீடர்.

  அதை கேட்டுவிட்டு வண்டியோட்டுபவர் அமைதியாக, “நான்தான் அந்த வங்கிக்கு சொந்தக்காரன். அந்த வங்கி இப்போது கொஞ்சம் சிரமமான நிலையில் இருக்கிறது. அதன் பங்குகளை எல்லாம் வசூல் செய்து கடன்களை எல்லாம் அடைக்க சிறிது காலம் ஆகலாம். அந்த நிலையில் மற்றவர்களுக்கு நான் எந்த விதத்திலும் சுமையாக இருக்க விரும்பவில்லை. அதனால், இந்த கிராமத்தில் உள்ள ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்தேன். என்னிடம் இருந்த சொத்துக்கள் எல்லாவற்றையும் விற்று விட்டு, ஓரளவு பிரச்சினைகளை சமாளித்தேன். தற்போது இந்த கோச் வண்டியை வாடகைக்கு ஓட்டுவதன் மூலம் குடும்ப செலவுகளை சமாளித்து கொண்டிருக்கிறேன்” என்ற வண்டிக்காரர் மேலும் தொடர்ந்தார்.

  “என் மனைவியும் அவளால் இயன்ற அளவு கொஞ்சம் சம்பாதிக்கிறாள். எங்களது இருவரது வருமானத்தில் குழந்தைகளுக்கு ஆகும் செலவுகளை சரி செய்து கொண்டிருக்கிறோம். கடன்களை முற்றிலும் அடைத்தவுடன், மீண்டும் வங்கியை திறந்துவிடுவேன்” என்றார் வண்டிக்காரர்.

  நடந்தவை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த சுவாமி விவேகானந்தர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். “ஆகா..! இந்த மனிதர் அல்லவா உண்மையான வேதாந்தி! அன்றாட வாழ்வில் வேதாந்த கருத்தை நடைமுறைப்படுத்தி வரும் இவரது தன்னம்பிக்கை நிச்சயம் போற்றுதலுக்கு உரியது. பெரிய அந்தஸ்தில் இருந்து விழுந்தும்கூட, அவர் சூழ்நிலை கைதியாக மாறிவிடவில்லை. என்ன ஒரு ஆச்சரியம்..! இவரே உண்மையான வேதாந்தி” என்று வாழ்த்தியதுடன் அவரது வீட்டுக்கும் சென்று அவரை பெருமைப்படுத்தினார்.

  சுவாமி விவேகானந்தர் தனது சீடர்களிடம் இந்த சம்பவத்தை பல முறைகள் மேற்கோள் காட்டி அன்றாட வாழ்வில் ஆன்மிகத்தை கடைப்பிடிப்பதை உதாரணமாக குறிப்பிடுவது வழக்கம்.
  கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுட் காலம், உடல் வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும். (பாகவத புராணம் 12.2.1)
  ரிஷிகளும், முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறியும் சக்தியைப் பெற்றிருந்தனர். அவர்களின் அதீத அறிவாற்றலினால் கண்டறியப்பட்ட பல உண்மைகள், இன்று அறிவியல் பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றன. வேதங்களை நான்காக பகுத்தவர் வியாசர். இதனால் அவரை ‘வேதவியாசர்’ என்று அழைத்தனர். அவர் எழுதிய நூல்களில் சிறப்பு மிகுந்த நூல் பாகவத புராணம். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் இயற்றிய இந்த நூலில் கலியுகம் பற்றிய சில குறிப்புகள் காணப்படுகின்றன. அவை இப்போது நடை முறையில் இருக்கும் சில விஷயங்கள் பொருந்திப் போகின்றன என்பதுதான் ஆச்சரியப்பட தக்க விஷயம். அவற்றை கொஞ்சம் பார்க்கலாம்.

  கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுட் காலம், உடல் வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும். (பாகவத புராணம் 12.2.1)

  கலியுகத்தில், பொருட் செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும். ஒருவனின் முறையான பழக்க வழக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் அடிப்படையில் அவன் மதிப்பிடப்படமாட்டான். மேலும், சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அடிப்படையிலே செயல்படும். (பாகவத புராணம் 12.2.2)

  வெற்றி என்பது வஞ்சகமும் சூழ்ச்சியும் நிறைந்திருக்கும். (பாகவத புராணம் 12.2.3)

  ஒருவரின் புறத்தோற்றத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு, அவரை பண்டிதர் என்று மக்கள் நம்புவார்கள். கண்களால் காணும் வித்தைகளுக்கு மயங்கி, தவறான போலி குருக்களை நம்பி வழிதவறி செல்வார்கள். வெறும் வாய் வார்த்தைகளில் ஜாலங்கள் செய்பவர், கற்றுணர்ந்த பண்டிதராக போற்றப்படுவார். (பாகவத புராணம் 12.2.4)

  கலியுகத்தின் பிடியில் சிக்கியிருக்கும் சிலர் பொருட்செல்வம் (பணம்) இல்லாதவனைத் தீண்டத்தகாதவன் என்று வெறுத்து ஒதுக்குவர். குளிப்பதாலும், அலங்காரம் செய்து கொள்வதாலும் மட்டுமே ஒருவன் சுத்தமடைந்து விட்டான் என எண்ணிக் கொள்வார்கள். (பாகவத புராணம் 12.2.5)

  அலங்காரம் செய்தவர்கள் எல்லாம், அழகானவர்களாக அறியப்படுவார்கள். முரட்டுத்தனமான பேச்சு, உண்மை என்று எளிதில் நம்பப்படும். வயிற்றை நிரப்புவது மட்டுமே வாழ்க்கையின் குறிக்கோளாக அமையும். பல மதங்கள், ஆட்களை சேர்த்துக் கொள்வதையும், பெருக்கிக் கொள்வதையும் மட்டுமே லட்சியமாக கொண்டிருக்கும். (பாகவத புராணம் 12.2.6)

  உலகத்தில் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் நிறைந்துவிடுவர். தன் சமூகத்தினிடையே தன்னை பலமானவன் என்று காட்டிக்கொள்பவன், அரசாளும் அதி காரத்தைப் பெற்றிடுவான். (பாகவத புராணம் 12.2.7)

  ஊழல் நிறைந்த அரசாங்கத்தால், நியாயமற்ற கொடுமையான வரிகள் மக்கள் மீது திணிக்கப்படும். இதனால் மக்கள் உண்ண உணவின்றி இலை, வேர், விதை போன்றவற்றை உண்ணத் தொடங்குவார்கள். அரசின் அலட்சியப் போக்கினால், கடுமையான பருவநிலை மாற்றத்திற்கு ஆளாகி, துன்பமிகு வாழ்க்கையில் சிக்கிக் கொள்வார்கள். (பாகவத புராணம் 12.2.9)

  கடுங்குளிர், புயல், கடும் வெப்பம், கனமழை, உறைபனி, வெள்ளம் போன்ற பல இயற்கை பேரிடர்களில் சிக்கி மக்கள் தவிப்பார்கள். இதனால் பசி, தாகம், நோய், பயம், சச்சரவு போன்ற கடுந்துன்பங் களிலும் சிக்கிக் கொள்வார்கள். (பாகவத புராணம் 12.2.10)

  கலியுகத்தின் கொடுமை அதிகரிக்கையில், மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டு களாக குறையும். (பாகவத புராணம் 12.2.11)

  தன்னை ஊட்டி வளர்த்த பெற்றோர்களை இறுதி காலத்தில் கவனித்துக் கொள்ளும் தர்மத்தை மகன் மறப்பான். (பாகவத புராணம் 12.3.42)

  பொருளுக்காக மனிதன் இன்னொரு மனிதனிடம் வெறுப்பு, பொறாமை போன்ற உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்வான். நட்பு என்ற உயரிய பண்பை போற்றாமல், தன் சுற்றத்தாரையும் உறவினரையும் கூட கொல்லத் துணிவான். (பாகவத புராணம் 12.3.41)

  வெறும் பகட்டுக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே பலரும் தானம் அளிப்பார்கள். தற்பெருமைக்காக மட்டுமே நோன்பு இருப்பார்கள். தர்மத்தைப் பற்றிய அறிவாற்றல் இல்லாதவர்கள் மதங்களை உருவாக்கி மக்களைக் கவர்ந்து தவறான அதர்ம பாதைக்கு இழுத்துச் செல்வார்கள். (பாகவத புராணம் 12.3.38)

  தனக்கு இனி பயன்பட மாட்டான் என்ற பட்சத்தில், தனக்கு இத்தனை காலமாக உழைத்து தந்த தொழிலாளிகளை முதலாளி கைவிடுவான். இத்தனை காலம் பால் கொடுத்த பசுவிடம் பால் குறைந்துவிட்டால், அந்தப் பசுக்களும் கொல்லப்படும். நன்றிக்கடன் மறக்கப்படும். (பாகவத புராணம் 12.3.36)

  நகரங்களில் கொள்ளையர்கள் அதிகரிப்பர்; வேதங்கள் கயவர்களால் தங்கள் சுயநல கோட்பாடு களைப் பரப்ப, பொய்யான முறையில் மொழிப் பெயர்க்கப்படும். அரசியல்வாதிகள் மக்களை மெல்லமெல்ல பலவிதமாக கொடுமை செய்வார்கள். போலி ஆச்சாரியர்கள் தோன்றி பக்தர்களை உபயோகப்படுத்தி, தங்கள் வயிறுகளையும் காமத்தையும் பூர்த்தி செய்து கொள்வார்கள். (பாகவத புராணம் 12.3.32)

  சரி.. இவற்றில் இருந்து எப்படி தப்பிப்பது என் கிறீர்களா? அதற்கு இறைவனை சரணடைவதைத் தவிர வேறு உபாயம் இல்லை.

  கலியுகம் துன்பங்கள் நிறைந்தது. ஆனாலும் நான்கில் ஒரு பங்கு தர்மம் இருக்கும். கலியுக துன்பங்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள கண்டிப்பாக, நமக்கு ஈஸ்வரனின் துணை தேவை. மழைத் துளி படாமல் இருக்க குடை உதவுவது போல, இறைவனிடம் காட்டும் பக்தி துன்பங்கள் நம்மீது படாமல் பாதுகாக்கும்.

  கடகம் ராமசாமி
  சிவபெருமான் மேல் கொண்ட பக்தியால் யானை, சிலந்தி இரண்டு உயிரினங்களும் போட்டி போட்டு சேவை செய்த கதையையும், அவற்றிற்கு சிவபெருமான் புரிந்த திருவருளையும் பார்க்கலாம்.
  வெண்ணாவல் காட்டில் யானை ஒன்று வசித்து வந்தது. முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் அந்த யானை ஒரு நாள் சிவலிங்கத்தை கண்டது. உடனே யானை அங்கேயே தங்கி விட்டது. தினந்தோறும் காவிரி ஆற்றுக்கு சென்று நீராடிவிட்டு தனது தும்பிக்கையால் நீரை எடுத்துக்கொண்டு சில பூக்களையும் தளிர்களையும் காய்கனி கிழங்குகளையும் பறித்துக்கொண்டு வந்து, லிங்கத்திருமேனி மீது விழுந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தி விட்டு வணங்குவதை வழக்கமாக கொண்டது. இத்திருப்பணி பல ஆண்டுகளாக நடந்து வந்தது.

  யானை திருப்பணி செய்து கொண்டிருந்த அதே கால கட்டத்தில் ஒரு சிலந்தியும் அங்கு வந்து சேர்ந்தது. அதுவும் முற்பிறவியில் ஏற்பட்ட விதி வசத்தால் சிவத்தொண்டு செய்தது. சிலந்தி தன் வாய்நூலால் தினமும் சிவபெருமானுக்கு அழகிய பந்தலமைத்து மரச்சருகுகள் மற்றும் குப்பைகள் லிங்கம் மீது விழ விடாமல் காத்து வந்தது. மரத்தின் மீது அமர்ந்தால் சிவ அபசாரம் ஏற்படும் என கருதி பணி முடிந்ததும் வேறு இடத்திற்கு சென்று தங்கியது. சிலந்தியின் வலைப்பின்னலை பல நாட்கள் யானை பிய்த்து எறிந்தது. ஆனால் மறுநாள் சிலந்தி மீண்டும் வலை பின்னியது.

  சிவபெருமான் மீது கொண்டிருந்த பக்தியால் யானையும், சிலந்தியும் ஒருவர் செய்வது இன்னொருவருக்கு தெரியாமல் செய்த திருப்பணிகள் நீடித்து வந்தது. ஒரு நாள் யானை சினங்கொண்டு வலைப்பின்னலை தனது தும்பிக்கையால் பிய்த்து எறிந்தபோது சிலந்தி யானையின் தும்பிக்கை துவாரம் வழியாக புகுந்து தலையின் உச்சியில் போய் கடித்தது. உயிர் நிலையில் சிலந்தி கடித்ததால் யானை மரணத்தை தழுவியது. தும்பிக்கையில் இருந்து வெளியே வர முடியாமல் சிலந்தியும் உயிரை மாய்த்துக்கொண்டது.

  தன் மீது உள்ள பக்தியால் இந்த இரண்டு உயிரினங்களும் போட்டி போட்டு சேவை செய்து உயிரை இழந்ததை சிவபெருமான் அறிந்தார். அவற்றின் பக்தியை மெச்சி யானையை கயிலாயத்தில் பூத கண தலைவனாக நியமித்தார். சிலந்தியை சோழ மன்னனாக பிறக்க திருவருள் செய்தார். அன்று முதல் வெண்ணாவல்காடு திரு ஆனைக்காவாக பெயர் மாறியது.
  ஒரு மனிதன் சித்த நிலை அடைவது, பல பிறவிகளாக அவன் செய்த தியானம், தவம், நற்செயல், தானதர்மம் போன்றவையே அவனை இறைநிலையான சித்த நிலைக்கு அழைத்து செல்லும்.
  ஒரு மனிதன் சித்த நிலை அடைவது, ஒரே பிறவியில் கிடைக்கும் பொக்கிஷம் இல்லை. பல பிறவிகளாக அவன் செய்த தியானம், தவம், நற்செயல், தானதர்மம் போன்றவையே அவனை இறைநிலையான சித்த நிலைக்கு அழைத்து செல்லும்.

  உதாரணமாக புத்தர் ஞானம் பெறுவதற்கு முன்பாக, அவர் அதற்கு முன்பு எடுத்த முன்னூறு பிறவிகள் அவருக்கு புலப்பட்டதாம்.

  அதேபோல தான் பல பிறவிகளில் பெற்ற ஞானம், தவவலிமை ஆகியவற்றுடன் தான் ஒருவன் பிறப்பான். ஆனால் அவை அனைத்தும் பல பூட்டுகளால், அவனுள்ளேயே அடைத்து வைக்கப்பட்டிருக்கும்.

  உதாரணமாக பண ஆசை, பெண் ஆசை, பொருள் ஆசை போன்ற எல்லா ஆசைகளும் அவனுக்குள் எழும். அவையெல்லாம் அவன் அனுபவித்து வெறுத்து வர வேண்டும் என்பதற்காக தரப்படுபவையே.

  அருணகிரிநாதர் முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்கு முன்பாக, பெண் பித்தனாக இருந்தார். அவர் சகோதரி கூறிய ஒரு வார்த்தை, அவர் பெண் ஆசையை வெறுக்க காரணமாக அமைந்தது. பின் மகானாக மாறி பல சித்துகளையும் முருகப்பெருமானிடம் பெற்றார். அதனால் தான் ‘நதி மூலம் ரிஷி மூலம் பார்க்காதே’ என்றார்கள். முன்கால கர்மவினையானது, நம்மை பக்குவ நிலைக்கு அழைத்துச் செல்வதற்காக கடுமையானதாகவும், மோசமானதாகவும் இருக்கலாம் அதை நாம் பார்ப்பதில் பலனில்லை. சமைத்த உணவே நாவிற்கு ருசியை கொடுக்கும். சமைக்கும் முன் அதன் ருசியை அறிய இயலாது.

  அதுபோல ஒவ்வொறு ஆசையையும் வெறுக்க வெறுக்க ஒவ்வொறு பூட்டாக உடைபடும். அனைத்து பூட்டுகளும் உடைபடும் போது, மனம் உடலோடு அலையும்.

  ஆமாம்.. அனைத்தையும் வெறுத்து, துறந்த மனிதன் ஏதோ ஒன்றைத் தேடி அலைந்து திரிவான். அவன் ஓடி, ஓடி ஒடுங்கும் நிலையில், குரு தன் கருணையால் அதை திறந்து விடுவார். அக்கணம் முதல் காற்றாட்டு வெள்ளம் போல் ஞானம் பெருக்கெடுத்து ஓடும். பலரின் ஆன்ம தாகங்களையும் கூட அவன் தீர்த்துவைப்பான். சிலரை தன்னோடு ஞான ஆற்றில் அடித்தும் செல்வான். அவனே சித்தன் என்று அழைக்கப்படுவான்.
  அகங்கார துறவி அவர் இனத்தின் மீது கொண்டிருந்த கர்வத்தையும், பிறரை அவர் தாழ்வாக நினைப்பதை எப்படி சீடன் அவருக்கு உணர்த்தினான் என்பதையும் பார்க்கலாம்.
  அழகு மலர்களும் அன்பான விலங்குகளும் சூழ்ந்த அந்த அடர் வனத்தில் நெடுங்காலமாக ஆன்மிக தவம் புரிந்து ஞானியான துறவி ஒருவர் இருந்தார். அவரைக் காண மக்கள் விரும்பினாலும் முற்றும் துறந்தவரான அவர் ஊர் வாழ்க்கையை விரும்பாததால் யாரையும் காண விரும்பாமல் சிந்தனை முழுவதும் சிவனே என்று வாழ்ந்து வந்தார். ஆனாலும் அவரின் தவவலிமையால் அவரின் புகழ் எப்படியோ மக்களிடம் பரவியது. அவரின் பெயரே ‘வனத்துறவி’ என்றாயிற்று.

  வனத்தின் அருகில் இருந்த ஊரில் வசித்து வந்த ஆனந்தன் என்ற இளைஞன், இறை சிந்தனை மிகுந்து துறவியாகும் ஆர்வத்தில் இருந்தான். வனத் துறவியைப் பற்றி கேள்விப்பட்டு அவரையே தன் குருவாக ஏற்க விருப்பம் கொண்டான்.

  வனத்திற்குச் சென்று துறவியுடன் தங்கினான். அவர் பாராமுகம் காட்டினாலும், அவருக்குத் தேவையான சேவைகளை செய்து அவரின் மனதில் இடம் பிடித்தான். இருவரும் குருவும் சீடனுமாக நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டனர். ஆன்மிக வாயிலாக குருவுடன் ஒத்துப் போன இளைஞனால், தான் பிறந்த இனத்தின் மீது கர்வம் கொண்டிருந்த துறவியையும், பிறரை அவர் தாழ்வாக நினைப்பதையும் அவனால் ஏற்க முடியவில்லை.

  எப்படியாவது தனது குருவின் உயர்வு, தாழ்வு எண்ணத்தை, அகங்காரத்தை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அதற்கான நாளும் நெருங்கியது.

  ஒரு முறை துறவிக்கு திருவண்ணாமலை ஈசனை வணங்க வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. இதற்காக துறவியும், இளைஞனும் காட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலை நோக்கி புறப்பட்டனர்.

  வழியில் பிறரிடம் பிச்சை கேட்டு வாங்கி உணவருந்தினர். அப்போதும் கூட உயர்வானவர்களைப் பார்த்தே பிச்சை வாங்கி உண்டார் துறவி. அதைக் கண்டு இளைஞன் வருந்தினான்.

  ஒரு இடத்தில் இரண்டு பாதைகள் பிரிந்தது. எந்த திசையில் செல்வது என்று இருவருக்குமே தெரியவில்லை. தோராயமாக ஒரு பாதையைத் தேர்வு செய்து சென்றனர். ஆனால் அது ஆள் நடமாட்டம் இல்லாத பாதையாக இருந்தது. வன விலங்குகளின் ஒலி கேட்டுக் கொண்டே இருந்தது.

  ஒரு கட்டத்தில் இருவருக்கும் பசி, களைப்பு ஏற்பட்டது. உணவருந்த ஏதாவது கிடைக்குமா? என்று ஏங்கினர். களைப்பு மிகுதியில் ஒரு மரத்தின் அடியில் ஒதுங்கி உட்கார்ந்தனர்.

  அப்போது அங்கு விலங்குகளை வேட்டையாட வந்த வேடன், இருவரையும் பார்த்து, ‘இந்த அடர்ந்த காட்டில் எப்படி வந்து சிக்கினீர்கள்?’ என்று கேட்டான்.

  விவரம் அறிந்து கொண்ட வேடம், துறவியையும், இளைஞனையும் தன்னுடைய குடிலுக்கு அழைத்துச் சென்றான். இளைஞன் உற்சாகமாகச் சென்றாலும், துறவி வேண்டா வெறுப்பாகத் தான் உடன் சென்றார். ஏனெனில் வேடன் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவனாயிற்றே.

  பசி மயக்கத்தில் இருந்த துறவிக்கும், இளைஞனுக்கும் வேடனின் மனைவி சூடான உணவை பரிமாறினாள்.

  நன்றி உணர்வுடன் ஆனந்தன் அந்த உணவை ரசித்து ருசித்துக் கொண்டிருக்க, துறவியும் வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக உணவை உண்டார். பசி தீர்ந்ததும், சரியான பாதையில் அவர்கள் இருவரையும் வேடன் அனுப்பி வைத்தான்.

  செல்லும் வழியில் “என்ன ஆனந்தா பசி தீர்ந்ததா?” என்று கேட்டார் குரு.

  “ஆம் குருவே! அற்புதமான ருசியுடன் அருமையான வெல்லம் போன்ற உணவு” பதிலளித்தான் சீடன்.

  “என்னவோ போ.. பசியில உனக்கு ருசி கூட தெரியல.. வேட்டையாடிய உணவைக் கொண்டு சமைத்ததோ என்னவோ, சாக்கடை மண்ணு மாதிரி அவ்வளவு துர்நாற்றம்” முகம் சுளித்தபடி கூறினார் துறவி.

  பசிக்கு உணவிட்டவர்களுக்கு நன்றி சொல்லாவிட்டாலும், இழிவாக பேசாமல் இருக்க துறவிக்கு தெரியவில்லையே என்று இளைஞன் வருந்தினான்.

  துறவி மீண்டும் தொடர்ந்தார். “சரி.. நீ சாப்பிட்ட உணவை வெளியேற்று. அது வெல்லமாக வருகிறதா? விவகாரமாக வருகிறதா? என்று பார்ப்போம்” என்றார்.

  குருவின் கட்டளையை மீறாத சீடனாய் ஆனந்தனும் மூச்சை இழுத்துப்பிடித்து உண்ட உணவின் சிறு பகுதியை வெளியேற்றினான். அதிர்ந்து போனார் துறவி. காரணம் வெல்லம் கலந்த பாயசமாக வந்தது உணவு.

  “பார்த்தீர்களா குருவே! நான் சொன்னது சரியானது” என்ற இளைஞன் “நீங்கள் சாப்பிட்டதும் இதே உணவுதானே, உங்களுக்கு மட்டும் எப்படி அது மண்ணாகும்” என்றான்.

  எதிர்பாராத விதமாக வாந்தி எடுத்த துறவியின் வாயில் இருந்து சாக்கடை நாற்றத்துடன் உணவு வந்து விழுந்தது. அது அந்த இடத்தையே அசுத்தமாக்கியது.

  அதைப் பார்த்த இளைஞன், “குருவே! தங்களின் மனதில் இருந்த அகங்காரமே இப்படி சாக்கடையாக நாற்றம் அடிக்கிறது. வேடனை பசியைத் தீர்க்க வந்த சகமனிதனாகத் தான் நான் பார்த்தேன். ஆனால் நீங்களோ அவனை தீண்டத்தகாத மனிதனாகத்தான் நினைத்தீர்கள். இனியாவது உங்கள் மனதிலிருக்கும் அகங்காரத்தை ஒழித்து மகானாக மாறவேண்டும்” என்றான்.

  குரு தன் தவறை உணர்ந்து வருந்தினார்.
  உலகத்தில் இரண்டற கலந்திருக்கும் இறைவன் தனியாக பிரிந்து நமக்குக் காட்சி தருவார். அப்போது கடவுளை காணலாம். இதை உணர்த்து ஆன்மிக கதையை பார்க்கலாம்.
  சீடன் ஒருவன் தன்னுடைய குருவிடம் தன் மனதில் இருந்த நெடுநாள் சந்தேகத்தை கேட்டான்.

  “குருவே! கடவுளை காண முடியுமா?”

  சீடனின் கேள்விக்கு பதிலளிக்க விரும்பிய குரு, ஒரு பாத்திரத்தில் தண்ணீரையும், கையில் சிறிது உப்பையும் எடுத்தார். கையில் இருந்த உப்பை சீடனிடம் காட்டி, “இந்த உப்பை உன்னால் பார்க்க முடிகிறதா?” என்றார்.

  “ஆம்” பதிலளித்தான் சீடன்.

  இப்போது குரு கையில் இருந்த உப்பை, தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் போட்டு, கலக்கி விட்டார்.

  “இப்போது உன்னால் உப்பை பார்க்க முடிகிறதா?”

  சீடனிடம் இருந்து “பார்க்க முடியவில்லை” என்ற பதில் வந்தது.

  “அப்படியானால் இந்த தண்ணீரில் உப்பு இல்லையா?” குரு கேட்டார்.

  “உப்பு தண்ணீரோடு கலந்துவிட்டது. அதனால் கண்களால் காண முடியவில்லை” என்றான் சீடன்.

  இப்போது குரு விளக்கத் தொடங்கினார், “எப்படி உப்பு இருந்தும், அதை கண்களால் காண முடியவில்லையோ அதேபோலத் தான், கடவுள் பிரபஞ்சத்தில் எல்லாவற்றிலும் இரண்டறக் கலந்திருக்கிறார். அவரை கண்களால் காண முடியாது.”

  விளக்கமளித்த குரு, உப்பு கலந்த தண்ணீர் இருந்த பாத்திரத்தை சூடாக்கினார். பாத்திரத்தில் இருந்த நீர் முழுவதும் வற்றி, உப்பு மட்டும் மீதம் இருந்தது.

  “இப்போது உப்பை பார்க்க முடிகிறதா?”

  “ஆம்.. பார்க்க முடிகிறது”

  “தண்ணீரில் உப்பு கலந்தபோது உப்பை காண இயலாததைப் போல, கடவுள் இந்த உலகத்தில் இரண்டறக் கலந்திருப்பதால் அவரைக் காண முடியாது. அதே வேளையில் நம்முடைய உலகப்பற்று குறையும்போது, மனதில் இருந்து உலகியல் எண்ணங்கள் வற்றி மனம் தூய்மை நிலையை அடையும் போது, நம் ஐம்புலன்களும் கட்டுப்படும்போது, உலகத்தில் இரண்டற கலந்திருக்கும் இறைவன் தனியாக பிரிந்து நமக்குக் காட்சி தருவார். அப்போது கடவுளை காணலாம்.”

  குருவின் விளக்கத்தால், சீடனின் மனம் தெளிவுபெற்றது.

  மகாவிஷ்ணுவின் தீவிர விசுவாசியும் பக்தனுமாகிய ராதாகிருஷ்ணனுக்கு மகாவிஷ்ணுவும், சனி பகவானும் நிகழ்த்திய திருவிளையாடலை பார்க்கலாம்.
  ஒரு சமயம் தன் அலுவல்களைக் கவனிக்கப் வேகமாக புறப்பட்ட சனிபகவானை, இடையில் வந்து தடுத்து நின்றார், விஷ்ணு பகவான். சனியின் பார்வை தெய்வத்திடம் பலிக்காது என்பதால் நேராக நின்ற பெருமாளிடம், “ஐயனே! என்னைத் தடுத்து நிறுத்தும் காரணம் என்ன?” என்று கேட்டார்.

  “நீ யாரைப் பிடிப்பதற்காக இவ்வளவு அவசரமாகச் சென்று கொண்டிருக்கிறாய் என்பதை தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார் மகா விஷ்ணு.

  புன்னகையுடன் வினவிய பெருமாளைப் பார்த்த சனி “உமக்குத் தெரியாததைப் போன்று கேட்கலாமா? நீங்கள் இங்கு என்னைப் போக விடாமல் தடுக்கும் காரணமும் அதுவே அல்லவா? இருந்தாலும் கூறுகிறேன். உம்முடைய தீவிர விசுவாசியும் பக்தனுமாகிய ராதாகிருஷ்ணன் எனும் ஆலயத்திருப்பணி செய்யும் மனிதரைப் பிடிக்கும் காலம் இது. அதற்காகவே செல்கிறேன்” என்று பதிலளித்தார்.

  உடனே பெருமாள், “அதைப்பற்றி பேசவே உன்னைத் தடுத்து நிறுத்தினேன். அவன் மனிதரில் மாணிக்கம். என் மேல் உள்ள பக்தியால் பார்ப்பவரிடம் எல்லாம், என் பெருமைகளை எடுத்துக்கூறி பக்தி மார்க்கத்தை வளர்த்து வருகிறான். மேலும் நான் குடியிருக்கும் பழுதடைந்த ஆலயங்களை எல்லாம் பிறரிடம் கையேந்தி கொடைகள் பெற்று, புதுப்பித்து திருப்பணிகள் செய்து வருகிறான். நீ அவனைத் துன்பப்படுத்துவதை எப்படி என் மனம் பொறுக்கும்?” என்றார்.

  ஆனால் சனி கடமையில் சுத்தமானவன் அல்லவா? “பெருமாளே! அந்த ஈசனே சொன்னாலும் என் கடமைதான் எனக்கு முக்கியம். ஆனாலும் உங்கள் மனம் கவர்ந்த பக்தனுக்காக நீங்கள் கவலைப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை. ஆகவே ஏழரை வருடங்களுக்குப் பதில் ஏழரை மாதங்கள் அவனைப் பிடித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

  பெருமாளோ, “இல்லை.. இல்லை.. அவ்வளவு கஷ்டங்களை அவன் தாங்க மாட்டான். ஒரு ஏழரை நாழிகை மட்டும் அவனைப்பிடித்து உன் கடமையை ஆற்று” என கேட்க, சனிக்கு பெரும் மகிழ்ச்சி “நல்லது.. ஏழரை நாழிகையில் அவனைப்படுத்தும் பாட்டைக் காண தயாராக இருங்கள். வருகிறேன்” என்று சொல்லி அங்கிருந்து புறப்பட்டார் சனி.

  பெருமூச்சு விட்ட பெருமாளும், நடப்பதைக் காணும் ஆவலில் பூலோகம் வந்தார்.

  அங்கு கடமையே என்று விஷ்ணு சுலோகங்கள் சொல்லி, காலை வழிபாட்டை முடித்த ராதாகிருஷ்ணன் புதியதாக கட்டத் தொடங்கி இருக்கும் ஆலயத்தின் கணக்குகளை பார்க்கத் தொடங்கினார். இதுதான் சமயமென்று அவரைப் பிடித்தார் சனீஸ்வரன்.

  அப்போது அங்கு வந்த இருவர் நன்கொடை என்று சொல்லி ஒரு மூட்டையை அவரிடம் தந்து வணங்கி விட்டு அவசரமாக சென்றனர். அதை அப்புறம் பிரிக்கலாம் என்றெண்ணி, மீண்டும் கணக்குகளை பார்க்கத் தொடங்கியவரை மீண்டும் அழைத்தது ஒரு குரல்.

  நிமிர்ந்து பார்த்தவரை என்னவென்று கேள்வி எழுப்பக்கூட அனுமதிக்காமல், அடித்து துவைத்து அரசவைக்கு இழுத்துச்சென்று, அரசன் முன் நிறுத்தினான் ஒரு காவலாளி.

  அங்கு இருந்த பணக்கார சீமாட்டி, “இதோ.. இவர்தான் கடைசியாக கோவிலுக்கு நன்கொடை என்று என் இல்லத்திற்கு வந்தவர். இவர்தான் அந்த நகைகளை எடுத்திருக்க வேண்டும்” என்று குற்றம் சாட்டினாள்.

  ராதாகிருஷ்ணன் பதறினார். “ஐயோ! என்ன இது. நான் எதற்கு உங்கள் நகைகளை எடுக்கிறேன். பகவான் புண்ணியத்தில் மூன்று வேளை உணவுடன், இருக்க ஆலயம், உடுக்க காவித் துணி உள்ளது. எனக்கு எதற்கு உங்கள் நகை. நான் குற்றமற்றவன்.”

  ஆனால் ராதாகிருஷ்ணன் இருந்த இடத்தில் இருந்து, காவலாளி கொண்டு வந்திருந்த மூட்டை, அந்தப் பெண்மணியின் குற்றச்சாட்டை நிரூபிப்பதாக இருந்தது. அதற்குள் அந்தப் பெண்மணியின் நகைகள் இருந்தன.

  சனீஸ்வரனின் விளையாட்டு தொடங்கி விட்டது..

  நகைகளைத் திருடிய குற்றத்திற்காக ராதாகிருஷ்ணனுக்கு சவுக்கடிகளும் சாணிக்கரைசலும் பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது. ஊர் மக்கள் அவரைத் தூற்றினர்.

  மனம் ஒடிந்த அந்த விஷ்ணு பக்தர்கள் ஆலய திருக்குளம் முன்பாக நின்றார். “பெருமாளே! என் நினைவு தெரிந்த நாள் முதல் உன்னைத்தவிர வேறொன்றும் என் சிந்தையில் நிறுத்தியதில்லை. இந்தப் பழியையும் நீ எனக்குத் தந்த பரிசாகவே நினைக்கிறன். ஆனாலும் பழியோடு வாழ்வதை விட உன் காலடியில் சேர்கிறேன்” என்றபடி குளத்தில் மூழ்கி இறக்கப் போனார்.

  அப்போது ஒரு அசரீரி அவரை தடுத்து நிறுத்தியது. ‘நான் சனீஸ்வரன்! உங்களின் இந்த துயரத்துக்கு நானே காரணம். பெருமாள் மீதான உங்களின் பக்தியால் பெருமாளின் வேண்டுகோளை ஏற்று வெறும் ஏழரை நாழிகை மட்டுமே, இத்துன்பங்களை நீங்கள் அனுபவிக்க நேர்ந்தது. இனி உங்கள் மேல் உள்ள பழிச்சொல் நீங்கும்.”

  அந்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தனர், அரசரும், பணக்கார பெண்மணியும். சற்று முன்புதான் நகையைத் திருடிய உண்மையான திருடர்கள் பிடிப்பட்டதாகவும், அவர்கள் தான் நகையை வைத்திருந்தால் மாட்டிக்கொள்வோம் என ரதாகிருஷ்ணனிடம் நன்கொடையாக அளித்ததை ஒப்புக்கொண்டதையும் தெரிவித்தனர். இருவரும் அந்த பக்தரிடம் மன்னிப்பும் கோரினர். ஊர் மக்களுக்கு விஷயம் தெரிந்து அனைவரும் விஷ்ணு பக்தரை மரியாதையோடு வரவேற்றனர். 
  நம்முடைய முன்னோர்களின் காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு தங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை வைத்ததற்கு காரணம் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
  ஒரு மன்னன் பெருமாளிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தான். தினமும் பெருமாளை வணங்காமலும், அவரது திருநாமங்களை உச்சரிக்காமலும் அவனுக்கு எந்த வேலையையும் செய்ய முடியாது. ஆனாலும் அவனின் முன் வினை அவனை தொடர்ந்தது. அதன் பலனாக அவன் பல நோய்களால் அவதிப்பட்டான். தன்னால் சரிவர நாட்டை கவனிக்க முடியாது போகவே, தன் மூத்த மகனுக்கு பட்டம் சூட்டிவிட்டு, படுத்த படுக்கையாக கிடந்தான்.

  அந்நிலையிலும் அவனுக்கு திருமாலின் பெயர் மட்டும் மறக்கவில்லை. அச்சுதா... அச்சுதா... என் வாழ்வை முடித்து விடு. உன்னோடு சேர்த்துக் கொள், என சதா நேரமும் புலம்பிக்கொண்டே இருந்தான்.ஒருநாள் ஒரு முனிவர் அரண்மனைக்கு வந்தார். அவரிடம், "சுவாமி, நோயின் கொடுமையை சகிக்க முடியவில்லை. என் உயிர் பிரிய மறுக்கிறதே" என அழுதான். முனிவர் அவன் நிலை கண்டு அவனை தேற்றி , "மன்னா! நீ அன்னதானம் செய்தாயா?" என்றார்.

  மன்னனும் ஆமாம் சுவாமி! தினமும் அந்தணர்களுக்கும், ஏழைகளுக்கும் வயிறார உணவு படைக்கிறேன், என்றான். "சரி ,இனிமேல் அப்படி செய்யாதே! அரை வயிற்றுக்கு உணவிடு. அரைகுறையாக உணவிட்டால், சாப்பிடுவோர் உனக்கு சாபமிடுவர். சாபத்தின் கடுமையால் இறந்து போவாய்" என்றார் முனிவர். அவர் சொன்னதில் மன்னனுக்கு உடன்பாடு இல்லையென்றாலும், ஒரு மகானே சொல்கிறாரே என ஏற்றுக்கொண்ட மன்னன் அரை சாப்பாடு போட உத்தரவு போட்டான்.

  சாப்பிட்டவர்கள் சபித்தார்கள். ஆனாலும், மன்னனின் உயிர் பிரியவில்லை.இதென்ன ஆச்சரியம், என வியாதியின் கொடுமையையும், சாபத்தையும் சேர்த்து அனுபவித்த சூழ்நிலையில், முனிவர் மீண்டும் வந்தார்."சுவாமி! நீங்கள் சொன்னது போல செய்தும் உயிர் பிரியவில்லையே" என்றான் மன்னன். "மன்னா! நானும் வரும் வழியில் தான் கவனித்தேன். உன் ஏவலர்கள் தானமிடும் போது, அச்சுதா... அச்சுதா என பரந்தாமனின் பெயரைச் சொல்லி உணவிடுகின்றனர். அச்சுதன் என்று பெயர் சொன்னால், உயிர் பிரியாது. பரந்தாமன் அவர்களைக் கைவிடுவதில்லை. இனி நீ பெருமாள் பெயரைச் சொல்வதையும் நிறுத்து" என்றார்.

  அதிர்ச்சியடைந்த மன்னன் மறுத்து விட்டான். "எனக்கு இன்னும் அவஸ்தை அதிகரிக்குமானாலும் பரவாயில்லை. இந்த நோய் நீடித்து விட்டு போகட்டும். ஆனால், பகவான் பெயரைச் சொல்வதை மட்டும் என்னால் நிறுத்த முடியாது. நீண்டநாளாக ஏற்பட்ட பழக்கத்தை அவ்வளவு எளிதில் ஒருவரால் விட்டுவிட முடியாது" என சொல்லிவிட்டான். மன்னனுடைய மன உறுதியை கண்டு மகிழ்ந்த பரந்தாமனும் மன்னன் முன் தோன்றி, அவனைப் பாராட்டி, வைகுண்டத்தில் வாழும் பாக்கியத்தையும், பிறவா நிலையும் தந்து மகிழ்ந்தார்.

  கடவுளின் நாமத்துக்கு தான் எவ்வளவு சக்தி. நம்முடைய முன்னோர்களின் காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு தங்கள் இஷ்ட தெய்வத்தின் பெயரை வைத்த காரணமும் இது தான். இறைவன் திருநாமத்தை திரும்பத் திரும்பச் சொன்னால் அவன் அருளுக்கு பாத்திரம் ஆவோம்.

  ×