search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    யானை, சிலந்தியின் பக்தியை மெச்சிய சிவபெருமான்
    X

    யானை, சிலந்தியின் பக்தியை மெச்சிய சிவபெருமான்

    சிவபெருமான் மேல் கொண்ட பக்தியால் யானை, சிலந்தி இரண்டு உயிரினங்களும் போட்டி போட்டு சேவை செய்த கதையையும், அவற்றிற்கு சிவபெருமான் புரிந்த திருவருளையும் பார்க்கலாம்.
    வெண்ணாவல் காட்டில் யானை ஒன்று வசித்து வந்தது. முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் அந்த யானை ஒரு நாள் சிவலிங்கத்தை கண்டது. உடனே யானை அங்கேயே தங்கி விட்டது. தினந்தோறும் காவிரி ஆற்றுக்கு சென்று நீராடிவிட்டு தனது தும்பிக்கையால் நீரை எடுத்துக்கொண்டு சில பூக்களையும் தளிர்களையும் காய்கனி கிழங்குகளையும் பறித்துக்கொண்டு வந்து, லிங்கத்திருமேனி மீது விழுந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தி விட்டு வணங்குவதை வழக்கமாக கொண்டது. இத்திருப்பணி பல ஆண்டுகளாக நடந்து வந்தது.

    யானை திருப்பணி செய்து கொண்டிருந்த அதே கால கட்டத்தில் ஒரு சிலந்தியும் அங்கு வந்து சேர்ந்தது. அதுவும் முற்பிறவியில் ஏற்பட்ட விதி வசத்தால் சிவத்தொண்டு செய்தது. சிலந்தி தன் வாய்நூலால் தினமும் சிவபெருமானுக்கு அழகிய பந்தலமைத்து மரச்சருகுகள் மற்றும் குப்பைகள் லிங்கம் மீது விழ விடாமல் காத்து வந்தது. மரத்தின் மீது அமர்ந்தால் சிவ அபசாரம் ஏற்படும் என கருதி பணி முடிந்ததும் வேறு இடத்திற்கு சென்று தங்கியது. சிலந்தியின் வலைப்பின்னலை பல நாட்கள் யானை பிய்த்து எறிந்தது. ஆனால் மறுநாள் சிலந்தி மீண்டும் வலை பின்னியது.

    சிவபெருமான் மீது கொண்டிருந்த பக்தியால் யானையும், சிலந்தியும் ஒருவர் செய்வது இன்னொருவருக்கு தெரியாமல் செய்த திருப்பணிகள் நீடித்து வந்தது. ஒரு நாள் யானை சினங்கொண்டு வலைப்பின்னலை தனது தும்பிக்கையால் பிய்த்து எறிந்தபோது சிலந்தி யானையின் தும்பிக்கை துவாரம் வழியாக புகுந்து தலையின் உச்சியில் போய் கடித்தது. உயிர் நிலையில் சிலந்தி கடித்ததால் யானை மரணத்தை தழுவியது. தும்பிக்கையில் இருந்து வெளியே வர முடியாமல் சிலந்தியும் உயிரை மாய்த்துக்கொண்டது.

    தன் மீது உள்ள பக்தியால் இந்த இரண்டு உயிரினங்களும் போட்டி போட்டு சேவை செய்து உயிரை இழந்ததை சிவபெருமான் அறிந்தார். அவற்றின் பக்தியை மெச்சி யானையை கயிலாயத்தில் பூத கண தலைவனாக நியமித்தார். சிலந்தியை சோழ மன்னனாக பிறக்க திருவருள் செய்தார். அன்று முதல் வெண்ணாவல்காடு திரு ஆனைக்காவாக பெயர் மாறியது.
    Next Story
    ×