என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்ப திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்ப திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தெப்ப திருவிழாவையொட்டி இன்று முதல் 24-ந் தேதி வரை காலை, மாலையிலுமாக கோவிலுக்குள் உள்ள திருவாட்சி மண்டபத்தில் மட்டுமே சுவாமி எழுந்தருளுதல் நடைபெறும். 

    சாமி புறப்பாட்டில் தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதே சமயம் கோவிலுக்குள் கருவறையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
    குமரி மாவட்டம் திருவட்டாரில் பிரசித்தி பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புதிய கொடிமரம் நாட்டுவிழா வருகிற 25-ந்தேதி நடக்கிறது.
    குமரி மாவட்டம் திருவட்டாரில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், 13 மலைநாட்டு திருப்பதிகளில் ஒன்றாகவும் இந்த கோவில் திகழ்கிறது.

    இத்தகைய சிறப்பு மிக்க கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 416 ஆண்டுகள் ஆகிறது. எனவே, கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறையும் பக்தர்கள் சங்கமும் முயற்சி மேற்கொண்டனர்.

    இதையடுத்து திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் தொடங்கின. மேலும் 2007-ம் ஆண்டு முதல் இங்கு திருப்பணிகள் நடந்து வருகிறது.

    திருப்பணிகளை முடித்து இந்த ஆண்டுக்குள் கும்பாபிஷேகம் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக கோவிலில் புதிய கொடிமரம் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதற்காக கேரளாவில் இருந்து 2 ஆண்டுகளுக்கு முன் கொடிமரம் கொண்டு வரப்பட்டு அது எண்ணெய் தொட்டியில் போடப்பட்டுள்ளது. தற்போது கொடிமரத்தை நிறுவும் பணிகள் தொடங்கி உள்ளது. அதன்படி வருகிற 25-ந் தேதி கொடிமரம் நாட்டப்பட உள்ளது.

    கொடிமரம் நாட்டும் விழாவையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறப்பு, காலை 6 மணி முதல் ஸத்சங்க நாமம், 7 மணிக்கு கொடிமர சடங்குகள், 9.50 முதல் 10.20 மணிக்குள் கொடிமரம் நடப்படுகிறது. தொடர்ந்து ராமநாத பிரார்த்தனை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் மோகன்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
    அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சொல்ல வேண்டிய சூரிய மந்திரம், மற்றும் பரிகார முறைகள் என்ன என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்..
    சிலர் அரசு வேலை தான் வேண்டும் என்ற லட்சியத்தில் அதற்கான தேர்வை எழுதி வெற்றி பெற அதற்காக கடுமையாக படித்தும், முயன்றும் வருகின்றனர். அப்படி அரசு வேலைக்கு முயற்சி செய்யக் கூடிய நபர்கள் அவர்கள் தேர்வுக்காக படிப்பது அல்லது உடல் கட்டுமானமோ மேற்கொள்ளுவது வழக்கம்.

    அவர்கள் அனைவரும் அரசு வேலைக்கான முயற்சி ஒரு புறம் செய்து கொண்டிருந்தாலும், மறுபுறம் கீழே குறிப்பிட்ட எளிய பரிகாரத்தை செய்து வர அவர்களுக்கு விரைவில் நல்ல பலனை பெறுவதை பார்க்கலாம்.

    சூரிய பகவானுக்குரிய நாள் ஞாயிறு. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய ஹோரையான காலை 6 மணி முதல் 7 மணி வரை வீட்டு மாடியில் ஒரு தீபத்தை ஏற்றி சூரியனை பார்த்தபடி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி உங்கள் வேண்டுதலை வைக்க வேண்டும். மாடி இல்லாதவர்கள் வெட்ட வெளியில் கூட செய்யலாம்.

    தீபம் ஏற்றும் போது ஏதேனும் நைவேத்தியம் வைத்து வணங்கவும். (கல்கண்டு, பொரிகடலை சர்க்கரை). நாம் இறைவனுக்கு படைக்கக் கூடிய நைவேத்தியம் எப்போதும் வீணாக்கக் கூடாது.

    சூரிய பகவானை வணங்கி விட்டு அவருக்குரிய காயத்திரி மந்திரம் உள்ளிட்ட மந்திரங்களை உச்சரிக்கலாம். இந்த வழிபாட்டை 20 நிமிடம் செய்வது உகந்தது. ஒவ்வொரு வாரமும் இந்த வழிபாட்டை தொடர்ச்சியாக செய்து வர விரைவில் நல்ல பலனை காணலாம்.

    உங்கள் ஜனன கால ஜாதகத்தில் சூரிய தசை நடப்பவர்கள், சூரியன் நீசமாக இருந்தால் அல்லது நீச கிரகத்துடன் சேர்ந்து இருப்பினும், அல்லது பகை நிலையில் இருந்தாலோ, மறைந்து இருந்தாலோ செய்யலாம்.

    மேலும் அரசு பதவியில் இருப்பவர்கள், அதிகாரமிக்க பதவிக்கு முயல்பவர்களும், ஆளுமை திறன் கூடுவதற்கும், தந்தை மகன் உறவு நிலை சீராகவும், அதிகாரம் பெறவும், அரசு சார்ண்ட வேலைக்கு முயற்சி செய்பவர்கள் மட்டுமல்லாமல், அரசு சார்ந்த ஏதேனும் வேலை நமக்கு நடக்க வேண்டுமென்றால் சாதகமாக முடியவும், கண் கோளாறு தீர என பல்வேறு பிரச்சினைகளுக்குச் சூரிய வழிபாடு நல்ல தீர்வைத் தரும்.

    காயத்ரி மந்திரம் 

    ஓம் பாஸ்கராய வித்மஹே
    திவாகராய தீமஹி
    தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

    சூரிய பகவான் மந்திரம்

    காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்
    பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்
    வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
    தேசிகா எனைரட்சிப்பாய் சேங்கதிரவனே போற்றி
    பரமத்திவேலூர் பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் தேர்த்திருவிழா கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கலந்து கொண்டனர்.
    பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் தேர்த்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று காலை 11.15 மணிக்கு மேல் 12 மணிக்குள் மீன லக்கனத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கலந்து கொண்டனர்.

    இரவு அன்னவாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) வருகிற 20-ந் தேதி வரை தினந்தோறும் காலை 8 மணிக்கு பல்லக்கு உற்சவமும், இரவு 7 மணிக்கு சிம்ம வாகனம், சிறிய திருவடி அனுமந்த வாகனம், பெரிய திருவடி கருடசேவை, சேஷ வாகனம், யானை வாகனம், புஷ்ப விமானத்தில் புறப்பாடு மற்றும் குதிரை வாகனத்தில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    21-ந் தேதி அதிகாலை 3.30 மணிக்கு சாமி தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 4 தேர் வடம்பிடித்து இழுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 22-ந் தேதி காலை பல்லக்கு உற்சவமும், இரவு 7 மணிக்கு கெஜலட்சுமி வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், 23-ந் தேதி மாலை 6 மணிக்கு வசந்த உற்சவமும், 24-ந் தேதி மாலை 6 மணிக்கு புஷ்பயாகமும், 25-ந் தேதி இரவு 7 மணிக்கு சாமி புறப்பாடும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் தெருவீதி வலம் வருதலும் நடைபெறுகிறது.
    சாமிதோப்பில் அய்யா வைகுண்டர் சாமி தலை மைப்பதி உள்ளது. இங்கு வருடந்தோரும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங் களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருட தை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தை முன் னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பும், தொடர்ந்து அய்யாவுக்கு பணிவிடையும் அதிகாலை 6 மணிக்கு கொடிப்பட்டம் தயாரித்தலும் கொடிப் பட்டம் பள்ளியறை வலம் வருதலும் நடை பெற்றது. பின்னர் அய்யா வழி பக்தர்களின் அய்யா சிவ சிவா அரகரா அரகரா என்ற பக்தி கோ‌ஷத்துடன் திருக்கொடியேற்றம் நடைபெற்றது.

    பால.பிரஜாபதி அடிகளார் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு இனிமம் வழங்குதலும், வாகன பவனியும் நடை பெற்றது. காலை 10 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் தெருவீதி வலம் வருதலும் நடைபெறுகிறது.

    விழாவின் இரண்டாம் நாளான நாளை காலைமாலை பணிவிடையும் இரவு அய்யா சக்கர வாகனத்தில் பவனி வருதலும் நடைபெறுகிறது. விழா தொடர்ந்து பதினொரு நாட்கள் நடைபெறுகிறது. வருகிற 22-ம் தேதி வெள்ளிக்கிழமை எட்டாம் திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை நான்கு மணிக்கு அய்யா வைகுண்ட சுவாமி அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாக னத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும் பக்தர்களின் சுருள் ஏற்பு நிகழ்ச்சியில் நடைபெறுகிறது.

    வருகிற 25ம் தேதி 11ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

    விழா நாட்களில் தினமும் காலைமாலை பணிவிடையும் பகலில் உச்சி படிப்பும், இரவு வாகன பவனியும் தொடர்ந்து அன்னதர்மமும் நடைபெறுகிறது.
    பொன்னப்பநாடார் காலனி அற்புத குழந்தைஏசு ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பலி நிகழ்ச்சியில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
    நாகர்கோவில் பொன்னப்பநாடார் காலனியில் உள்ள அற்புத குழந்தைஏசு ஆலய திருவிழா மற்றும் இறை சமூக பெருவிழா நேற்று தொடங்கியது. விழா 17-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. நேற்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, நவநாள் ஆகியவை நடந்தது.

    தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. அருட்பணியாளர் ஜோன்ஸ் ஜீனியர் பங்கேற்று கொடியை ஏற்றி வைத்தார். ஆயர் இல்ல முப்பணிக்குழு இயக்குனர் மரிய வின்சென்ட் எட்வின் அருளுரையாற்றினார். பின்னர் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் பங்கு மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, நவநாள், ஆகியவை நடக்கிறது. 16-ந் தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து கூட்டு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஆடம்பர மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 17-ந் தேதி காலை 7 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலி, மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் ஆகியவை நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை பங்குதந்தை தேவதாஸ், பங்கு பேரவை துணைத்தலைவர் பனிபிச்சை, செயலாளர் ஆண்டனி பென்சிக், பொருளாளர் ராஜன், துணை செயலாளர் அமலா மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள் செய்துள்ளனர்.
    திருப்பதியில் பொங்கல் பண்டிகையையொட்டி 36 ஆயிரத்து 439 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரூ.2.5 கோடி உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

    திருப்பதி 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஆன்லைன் மூலம் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகள் மூலம் குறைந்த அளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    அதிகாலையில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக வரும் முதியவர்கள் மற்றும் குழந்தைகள், பெண்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    கடும் குளிரை பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று 36 ஆயிரத்து 439 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 12,920 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    ரூ.2.5 கோடி உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

    இதே போல் திருச்சானூர், பத்மாவதி தாயார் கோவில் சீனிவாச மங்காபுரம் வெங்கடேச பெருமாள் கோவில், காளஹஸ்தி உள்ளிட்ட கோவில்களில் நேற்று அதிகளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    நாகூர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் வருகிற 23-ந்தேதி சந்தன கூடு ஊர்வலம் நடைபெறுகிறது.
    நாகையை அடுத்த நாகூரில் உலக பிரசித்தி பெற்ற தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு நாள்தோறும் வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான 464-வது கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    தற்போது கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊர்வலம் அதிக அளவில் நடத்த வேண்டாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து நாகை ஜமாத்தில் இருந்து தர்காவில் உள்ள 5 மினராக்களில் ஏற்றப்படும் கொடிகளை அலங்கரிக்கப்பட்ட 5 கப்பல்களிலும், ஒரு செட்டி பல்லக்கு, சாம்பிராணி பல்லக்கு ஆகிய 7 பல்லக்கு மட்டும் கொண்டு வர நாகை மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.

    இதையடுத்து மாலை நாகையில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து நாகூரை சென்றடையும். ஊரடங்கு சூழ்நிலையை கருத்தில் கொண்டு நாகூரில் முக்கிய வீதிகளுக்கு ஊர்வலம் நகரின் பல பகுதிகளுக்கு செல்லாமல் அலங்கார வாசலோடு ஊர்வலம் நிறைவுபெறுகிறது. கப்பலில் இருந்து கொடிகள் இறக்கப்பட்டு தர்காவில் உள்ள 5 மினராக்களிலும் தர்கா கலிபா மஸ்தான் சாஹிப் துவா ஓதிய பிறகு 5 மினராக்களில் ஒரே நேரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவை முன்னிட்டு வருகிற 22-ந்தேதி இரவு பீர் அமர வைத்தல் நிகழ்ச்சியும், 23-ந்தேதி சந்தன கூடு ஊர்வலமும், 24-ந்தேதி சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெறும். 25-ந்தேதி பீர் கடற்கரை செல்லும் நிகழ்ச்சி, 27- ந்தேதி கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
    திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசாமி கோவில் ஆண்டாளுக்கும், தேவநாதசாமிக்கும் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கடலூர் அருகே திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இந்த கோவிலில் 3 நாட்கள் நடைபெறும் ஆண்டாள் நீராடல் உற்சவம் கடந்த 11-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

    விழாவின் 3-ம் நாளான நேற்று போகி பண்டிகையை முன்னிட்டு ஆண்டாளுக்கும், தேவநாதசாமிக்கும் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. அதன்பிறகு மாலை மாற்றும் நிகழ்ச்சியை தொடர்ந்து, ஆண்டாள் தேவநாதசாமியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) தேவநாதசாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது.

    இங்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். ஆஞ்சநேயர் சாமிக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    நேற்றுமுன்தினம் அமாவாசை தினம் வந்ததால், ஜெயந்தி விழா சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மட்டும் கொண்டாடப்படவில்லை. அதற்கு பதிலாக மூலநட்சத்திரம் நேற்றும் வந்ததால் கேரள பஞ்சாங்க முறைப்படி நேற்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா தாணுமாலயசாமி கோவிலில் கொண்டாடப்பட்டது.

    அதன்படி அதிகாலை 5 மணிக்கு ராமபிரானுக்கு அபிஷேகம், காலை 8 மணிக்கு 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய், பால், தயிர், களபம், சந்தனம், குங்குமம், பச்சரிசி மாவு, எலுமிச்சை பழம் சாறு, கரும்புச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், மாதுளைச் சாறு, தேன், விபூதி உள்பட 16 வகையான பொருட்கள் அடங்கிய சோடசஅபிஷேகம் நடைபெற்றது.

    இந்த அபிஷேகத்தை காண அதிகாலையிலேயே திரளான பக்தர்கள் சுசீந்திரத்திற்கு வந்தனர். முன்னதாக நீலகண்டசாமி கோவிலில் இருந்து மேளதாளத்துடன் அபிஷேக பொருட்கள் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் மற்றும் பக்தர்களால் கொண்டு வரப்பட்டு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடந்தது.

    நண்பகல் 12 மணிக்கு விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார். மாலையில் ஆஞ்சநேயருக்கு பஜனையும், சந்தனகாப்பு அலங்காரத்துடன் பிச்சி, மல்லிகை, ரோஜா, தாமரை, பச்சை, கனகாம்பரம், சிவந்தி, முல்லை, கொழுந்து, மருக்கொழுந்து, துளசி உள்பட பலவகை மலர்களால் புஷ்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிகளில் குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, கோட்டாட்சியர் மயில், அறங்காவலர் குழு தலைவர் சிவ குற்றாலம், உறுப்பினர்கள் அழகேசன், ஜெயச்சந்திரன், சதாசிவம், குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஏ. அசோகன், குமரி கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், மாவட்ட விவசாய அணி பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய துணை தலைவர் சாஜின்காந்தி, அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அவைத்தலைவர் தம்பித்தங்கம், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கந்தன், ஒன்றிய செயலாளர் குமரகுரு, பேரூர் செயலாளர் குமார், கிளைச்செயலாளர் மணி, நிர்வாகிகள் சுரேஷ், கோபால் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    கொரோனா விதிகளை கடைபிடிப்பது தொடர்பாக பேரூராட்சி அலுவலகத்தின் வெளியே ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும், கைகளை சுத்தம் செய்த பிறகு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும், முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவிப்பு செய்யப்பட்டது.

    மேலும் முககவசம் அணியாமல் வந்த சில பக்தர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வினியோகம் செய்யப்பட்டது.
    சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை பார்க்கலாம்.
    சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் அருள்செய்கிறார். நாயை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ராகு கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சண்டிகை விளங்குகிறாள்.

    "ஓம் மங்களேஷாய வித்மஹே
    சண்டிகாப்ரியாய தீமஹி
    தந்நோ ஸம்ஹார பைரவ ப்ரசோதயாத்

    ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே
    மஹாதேவி ச தீமஹி
    தந்நோ சண்டி ப்ரசோதயாத்."
    தர்மபுரி மாவட்டத்தில் மோதூர் பகுதியில் மாட்டு பொங்கல் விழாவின் போது இந்த வினோத வழிபாடு இப்போதும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
    தர்மபுரி மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பகுதிகளில் ஒன்றாக இருப்பது மோதூர் கிராமம். இந்த பகுதி கடந்த 2,500 ஆண்டுகளுக்கு முன்பு சங்க கால அதியமான் மன்னர்களின் ஆட்சி மையமாக விளங்கியது.

    இந்த பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரமாக அந்த காலத்தில் மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் இருந்தன. இதனால் கால்நடைகளை வளர்ப்பதிலும், அவற்றை நோய்களில் இருந்து பாதுகாப்பதிலும் இந்த பகுதியை சேர்ந்த மக்கள் அதிக கவனம் செலுத்தினார்கள். இந்த பகுதியில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது பழங்காலத்தில் முக்கிய பிரச்சினையாக இருந்தது.

    அந்த காலத்தில் இங்கு வந்து தங்கிய ஒரு சன்னியாசி கால்நடைகளை பாதுகாக்க சில வழிமுறைகளை கூறியுள்ளார். அதன்படி கிராம மக்கள் கூடும் இடத்தில் கற்களை நட்டு வைத்து அவற்றின் மீது மஞ்சள், குங்குமம் கலந்த தண்ணீரை நூற்றுக்கணக்கான குடங்களில் ஊற்றுவார்கள். அப்போது கீழே ஓடும் தண்ணீரை 4 புறமும் மண் கரை அமைத்து தேக்குவார்கள். அங்கு பொங்கல் வைத்து பூஜை நடத்துவார்கள்.

    பின்னர் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் தண்ணீருக்குள் ஆடு, மாடுகளை நடக்க விடுவார்கள். அப்போது அந்த தண்ணீரை தீர்த்தமாக கால்நடைகள் மீது தெளிப்பது வழக்கம். இவ்வாறு செய்யும் போது கால்நடைகளை நோய் தாக்காது என்பது நம்பிக்கை. இந்த வழிபாடு நடத்தப்படும் பகுதியில் நடப்பட்டுள்ள கற்கள் சன்னியாசி கல் என அழைக்கப்படுகிறது. மோதூர் பகுதியில் மாட்டு பொங்கல் விழாவின் போது இந்த வினோத வழிபாடு இப்போதும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
    ×