search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெரிய கோவிலில் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்த போது எடுத்த படம்.
    X
    பெரிய கோவிலில் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்த போது எடுத்த படம்.

    தஞ்சை பெரிய கோவிலில் 100 கிலோ காய்- கனிகளால் நந்திக்கு அலங்காரம்

    தஞ்சை பெரியகோவிலில் மாட்டு பொங்கல் விழாவையொட்டி தலா 100 கிலோ காய்-கனிகளால் எளிய முறையில் நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெரியகோவில் ஆயிரம் ஆண்டுகளை கடந்து இன்றும் வானுயர காம்பீரமாக காட்சி அளிக்கிறது. உலக பிரசித்த பெற்ற தஞ்சை பெரியகோவிலில் மிகப்பெரிய நந்தி பெருமான் சிலை உள்ளது. மாட்டு பொங்கல் விழாவையொட்டி ஆண்டுதோறும் நந்தி பெருமானுக்கு 1 டன் காய்கறி, பழங்கள், மலர்கள், இனிப்புகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, நந்தி பெருமானுக்கு முன்பு 108 பசுக்கள் வரிசையாக நிறுத்தி பிரமாண்டமாக வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு தொடர் மழை, கொரோனா தொற்று காரணமாக மாட்டு பொங்கல் விழாவையொட்டி மிக எளிமையான முறையில் நந்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நேற்றுகாலை நந்தி பெருமானுக்கு பால், மஞ்சள், திரவிய பொடி, தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் முட்டைகோஸ், உருளை கிழங்கு, பூசணிக்காய், கேரட், பீட்ரூட், வாழைக்காய், வெள்ளரிக்காய், சவ்சவ், பாகற்காய் உள்ளிட்ட 100 கிலோ காய்கள், மாதுளை, ஆரஞ்சு, ஆப்பிள், வாழைப்பழம், அன்னாசி, கொய்யாப்பழம், உள்ளிட்ட 100 கிலோ பழங்கள் மற்றும் குறைந்த அளவிலான மலர்கள், சந்தனத்தால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கன்றுடன் கூடிய ஒரு பசு மாட்டை அழைத்து வந்து நந்தி சிலைக்கு முன்பு நிறுத்தி கோ பூஜை செய்யப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமானை தரிசனம் செய்தனர். விழாவையொட்டி நந்தி பெருமான் மண்டப தூண்களில் கரும்புகளும், வாழைகளும் கட்டப்பட்டிருந்தன. அலங்காரம் செய்யப்பட்ட காய்கறி, பழங்கள் பக்தர்களுக்கு இன்று(சனிக்கிழமை) பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.
    Next Story
    ×