என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ரேணூகாம்பாள் கோவிலுக்கு நேற்று ஏராளமான பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வாகனங்களில் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
    கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ரேணூகாம்பாள் கோவிலுக்கு நேற்று ஏராளமான பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வாகனங்களில் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

    கோவில் ராஜகோபுரம் முன்பு போக்குவரத்துக்கு இடையூறாக பேரிகார்டுகள் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் பூ மற்றும் பழம் வியாபாரம் செய்து வருகின்றனர்.

    ராஜகோபுரம் கட்டும் பணிக்காக பாதுகாப்பு கருதி பேரிகார்டுகள் வைக்கப்பட்டது. பணிகள் நிறைவடைந்தும் கொரோனா கட்டுப்பாடு காரணமாக பேரிகார்டுகள் அகற்றப்படாமல் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
    தை மாதத்தில் வரும் முக்கியமான விசேஷங்களும், விரதங்களை பற்றியும் விரிவாக பார்க்கலாம்.
    தை 1, ஜனவரி 15, புதன்  : பஞ்சமி. தஞ்சை மாவட்டம் செந்தலை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ரிஷப வாகனத்தில் காட்சி கொடுத்தல், பொங்கல் பானை வைக்க உகந்த நேரம் காலை 9- 10. திருவையாறு ஸ்ரீதியாகராஜர் ஆராதனை, திருவாய்மொழிச்சாற்றுமுறை. உத்திராயண புண்ணிய காலம்.
    தை  2, ஜனவரி 16, வியாழன் : சஷ்டி. திருவண்ணாமலை ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர் உண்ணாமலையம்மன் திருவூடல் திருவிழா.  கனுமாட்டு பொங்கல்.
    தை  3, ஜனவரி 17, வெள்ளி : சப்தமி. மதுரை ஸ்ரீ செல்லத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி.
    தை  4, ஜனவரி 18, சனி : அஷ்டமி. குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
    தை  5, ஜனவரி 19, ஞாயிறு : நவமி, தசமி. திருவஹிந்திரபுரம் ஸ்ரீதேவநாதஸ்வாமி வெண்ணையாற்று உற்சவம். திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் மணலூர்பேட்டை தீர்த்தவாரி. கீழ்த் திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நதி எதிரில் ஸ்ரீஹனுமாருக்குத் திருமஞ்சன சேவை.
    தை  6, ஜனவரி 20, திங்கள் : ஏகாதசி. திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர், காந்திமதியம்மன் இருவருக்கும் திருமஞ்சன சேவை. ஸ்மார்த்த ஏகாதசி.
    தை  7, ஜனவரி 21, செவ்வாய் : துவாதசி. சேங்காலிபுரம் ஸ்ரீமுத்தண்ணாவாள் ஆராதனை. சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். வைஷ்ணவ ஏகாதசி.
    தை  8, ஜனவரி 22, புதன் : திரயோதசி. காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள். மதுரை ஸ்ரீகூடலழகர் இத்தலங்களில் திருவாய்மொழித் திருநாள் உற்சவ சேவை. பிரதோஷம். மதுரை ஸ்ரீசெல்லத்தம்மன் ரிஷப சேவை. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு.
    தை  9, ஜனவரி 23, வியாழன் : சதுர்த்தசி. பழூர் ஸ்ரீகோவிந்த தாமோதர ஸ்வாமி ஆராதனை. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் புறப்பாடு. ஆருத்திரா அபிஷேகம்.  திருப்பதி ஸ்ரீஏழுலையப்பன் புஷ்பாங்கி சேவை. மாத சிவராத்திரி.
    தை  10, ஜனவரி 24, வெள்ளி : திருவையாறு அமாதீர்த்தம், தை அமாவாசை. ஸ்ரீரங்கம், ஸ்ரீமத் ஆண்டவன் வராஹ மகாதேசிகன் திருநட்சத்திரம், ராமேஸ்வரம் ஸ்ரீராமர் வெள்ளி ரதம், திருநெல்வேலி நெல்லையப்பர் பத்ரதீபம்.ஸர்வ சிவாலயங்களிலும் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு அபிஷேகம். ஆருத்ரா தரிசனம்.
    தை  11, ஜனவரி 25, சனி : பிரதமை. கெர்ப்போட்ட நிவர்த்தி. திருநாங்கூரில் 11 கருட சேவை. திருவோண விரதம். இஷ்டி காலம்.
    தை  12, ஜனவரி 26, ஞாயிறு : துவிதியை.
    தை  13, ஜனவரி 27, திங்கள் : திரிதியை. திருப்போரூர் ஸ்ரீமௌன ஸ்வாமிகள் குரு பூஜை. திருப்பரங்குன்றம் ஸ்ரீமுருகப் பெருமான் வெள்ளி பூத வாகனத்தில் திருவீதியுலா.
    தை  14, ஜனவரி 28, செவ்வாய் : திரிதியை. கல்லிடைக்குறிச்சி ஸ்ரீசிவபெருமான் புறப்பாடு. தேரெழுந்தூர் ஸ்ரீஞானசம்பந்தர் புறப்பாடு. சதுர்த்தி விரதம்.
    தை  15, ஜனவரி 29, புதன் : சதுர்த்தி. வசந்த பஞ்சமி, ஹரதத்தர் ஆராதனை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை.
    தை  16, ஜனவரி 30, வியாழன் : பஞ்சமி . பழநி, திருவிடைமருதூர், எண்கண் ஆகிய சிவஸ்தலங்களில் தைப்பூச உற்சவாரம்பம். காஞ்சி ஸ்ரீஉலகளந்த பெருமாள்
    உற்சவாரம்பம்.
    தை  17, ஜனவரி 31, வெள்ளி : சஷ்டி. மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வராள் வெள்ளி சிம்மாசனத்தில் புறப்பாடு. சஷ்டி விரதம்.
    தை  18, பிப்ரவரி 01, சனி : சப்தமி. காஞ்சிபுரம் கடுக்களூர் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் ரதஸப்தமி, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கலசபாக்க தீர்த்தவாரி. செந்தலை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கந்தர்வ பெண் சந்திரரேகைக்கு காவேரியில் தீர்த்தம் கொடுத்தல்.
    தை  19, பிப்ரவரி 02, ஞாயிறு : அஷ்டமி. மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வராள் ரிஷப வாகனத்தில் பவனி. சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை.
    தை  20, பிப்ரவரி 03, திங்கள் : நவமி. பழநி வேளூர் தை கிருத்திகை. பழனி ஸ்ரீஆண்டவர் வௌ்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.
    தை  21, பிப்ரவரி 04, செவ்வாய் : தசமி. ராமேஸ்வரம் ரதம். காஞ்சிபுரம் ஸ்ரீஉலகளந்த பெருமாள் புறப்பாடு.
    தை  22, பிப்ரவரி 05, புதன் : ஏகாதசி. காஞ்சி சிவகங்கை தெப்பல், திருவெண்காடு சுப்ரமண்ய கனபாடிகள் டிரஸ்ட் 82ம் வருடம் சதுர்வேத பாராயணத்துடன் கூடிய மகாருத்ர யாகம், கோவை 10 திருப்பேரூர் எனும் மேலை சிதம்பர க்ஷேத்திரத்தில் தை 22ந் தேதி புதன் முதல் மாசி 3 சனிக்கிழமை வரை (05 -02-2020  15-02-2020) நடைபெறுகிறது. ஸர்வபீஷ்ம ஏகாதசி.
    தை  23, பிப்ரவரி 06, வியாழன் : துவாதசி. சுக்லபட்ச மகா பிரதோஷம். திருச்சேறை ஸ்ரீசாரநாதர் சூர்ணாபிஷேகம். ஸ்ரீவராஹத் துவாதசி.  
    தை  24, பிப்ரவரி 07, வெள்ளி : திரயோதசி. திருச்சேறை ஸ்ரீசாரநாதர் பருத்திசேரி எழுந்தருளல். கோயம்புத்தூர் ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கல்யாணம்.
    தை  25, பிப்ரவரி 08, சனி : சதுர்த்தசி. தீர்த்தவாரி, பழநி திருத்தேர், திருவிடைமருதூர் ஸ்ரீமஹாலிங்கசுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் ரிஷப லக்னத்தில் பஞ்சமூர்த்திகளுடன் காவேரியில் தீர்த்தம் கொடுத்தருளல், இரவு வெள்ளி ரதக்காட்சி, காஞ்சி வெள்ளிரிஷபம் பஞ்சமூர்த்தி உற்சவம், காஞ்சி ஸ்ரீகச்சபேஸ்வரர் ஒட்டிவாக்கம் திருவூறல் உற்சவம், காஞ்சி ஸ்ரீதேவராஜ ஸ்வாமி அனந்தசரஸ் தெப்பல், சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளி அம்மனுக்கு 46ம் ஆண்டு மகா அபிஷேகம், செறுவாமணி கிராமம் ஆலாத்தூர் ஸ்வாமிகள் ஆராதனை. தைப்பூசம், வடலூர் ஸ்ரீராமலிங்க சுவாமிகள் ஜோதி தரிசனம், ராமேஸ்வரம் பிள்ளையார் தெப்பம். பௌர்ணமி.
    தை  26, பிப்ரவரி 09, ஞாயிறு : பௌர்ணமி. எண்கண் ஸ்ரீமுருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தருளல். காஞ்சி பெருந்தேவி தெப்பம். ஸ்ரீமூஷ்ணம் ஸ்வேத நதித்தீர்த்தம்.
    தை  27, பிப்ரவரி 10, திங்கள் : பிரதமை. மகா பஹூள பிரதமை. திருமழிசையாழ்வார். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.
    தை  28, பிப்ரவரி 11, செவ்வாய் : துவிதியை. வைத்தீஸ்வரன் கோயில் ஸ்ரீசெல்வமுத்துக்குமாரஸ்வாமி பவனி. தென்காசி ஸ்ரீவிஸ்வநாதர் லட்ச தீபக் காட்சி.
    தை  29, பிப்ரவரி 12, புதன் : திரிதியை, சதுர்த்தி. க்ருஷ்ணபட்ச (ஸங்கடஹர) சதுர்த்தி.
    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது. நேற்று தை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை யொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது. 

    இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியார்கள் குடம், குடமாக பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 

    பின்னர் மலர் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏராளமான பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமிதரிசனம் செய்தனர்.
    கொரோன வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
    கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலோ 2 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் இந்தியா, இலங்கை நாடுகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொள்வார்கள்.

    இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு நடைபெற இருந்த கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா ரத்து செய்யப்படுவதாக யாழ்ப்பாணம் மறைமாவட்டம் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து யாழ்ப்பாணம் மறை மாவட்டம் மூலம் சிவகங்கை மறைமாவட்ட ஆயருக்கும், ராமேசுவரம் புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தைக்கும் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் ‘‘இந்த ஆண்டு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால் சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா ரத்து ெசய்யப்படுவதாகவும், அடுத்த ஆண்டு திருவிழா நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதால் இரு நாட்டை சேர்ந்த மீனவர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    ஏற்கனவே கடந்த வாரம் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி 26, 27 ஆகிய இரண்டு நாட்கள் திருவிழா நடைபெறும் எனவும் அதில் நெடுந்தீவு பங்குக்கு உட்பட்ட 150 பேர் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திருவிழா முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    கண்ணமங்கலம் அருகே உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமராயபெருமாள் கோவிலில் தைமகர உற்சவ விழா நடைபெற்றது.
    கண்ணமங்கலம் அருகே உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் ஊமைக்கு வாய்கொடுத்த உத்தமராயபெருமாள் கோவிலில் நேற்று தைமகர உற்சவ விழா நடைபெற்றது.

    விழாவையொட்டி சாமிக்கு திருமஞ்சன அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் வசதிக்காக ஸ்ரீதேவி பூதேவி சமேத உத்தமராயபெருமாள் மலையடிவாரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

    விழாவை முன்னிட்டு 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கார்த்திகேயன், ஆய்வாளர் நடராஜன் மற்றும் பலர் செய்திருந்தனர்.
    அலைமோதிய கூட்டத்தினால், பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்தனர்.
    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் வருகிற 22-ந்தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    அதன்படி நேற்று ஏராளமான பக்தர்கள் மயில் காவடி, தீர்த்தக்காவடி, இளநீர் காவடி உள்ளிட்ட காவடிகளை எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். சில பக்தர்கள் அலகு குத்தி வந்தனர். மதுரையை சேர்ந்த பக்தர் ஒருவர் 22 அடி நீள அலகு குத்தி வந்தது பரவசத்தை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே தொடர் விடுமுறை காரணமாக நேற்று காலை முதலே தரிசனத்துக்காக பழனியில் பக்தர்கள் குவிந்தனர். மேலும் அடிவார பகுதி முழுவதும் கூட்ட நெரிசல் காணப்பட்டது.

    இதேபோல் பாத விநாயகர் கோவில் அருகிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட இருமடங்கு அதிகமாக இருந்தது. மேலும் மலைக்கோவில் வெளிப்பிரகாரத்திலும் கூட்டம் அலைமோதியது.

    பக்தர்கள் வருகை வழக்கத்தைவிட இருமடங்கு இருந்ததால் மின் இழுவை ெரயில் நிலையம், ரோப்கார் நிலையம் மற்றும் தரிசன வழிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது.

    இதனால் சுமார் 3 மணி நேரம் காத்திருந்த பின்னரே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் பெரும்பாலானோர் இடும்பன் மலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதில் ஒரு சில பக்தர்கள் ஆபத்தான முறையில் பாறையில் அமர்ந்து செல்பி எடுத்து வருகின்றனர். இதனால் இடும்பன் மலை கோவிலில் கூடுதல் போலீசாரை நியமித்து கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.
    மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் சப்பர முகூர்த்த விழா நடந்தது. இதில் ஆயிரம் பொன் சப்பரத்திற்கு வேண்டிய மூங்கில் சேகரிக்கும் பணி நடந்தது.
    மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாணம் முடிந்ததும் அதைத்தொடர்ந்து கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆண்டுதோறும் நடைபெறும். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்பார்கள். இதற்கிடையே வருகிற ஏப்ரல் மாதம் கள்ளழகர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற உள்ளது.

    மேலும் 108 வைணவ தலங்களில் ஒன்றானதும், பிரசித்தி பெற்றதுமான அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா மிக முக்கியமானதாகும். இந்த திருவிழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சப்பர முகூர்த்த விழா நேற்று காலை கள்ளழகர் கோவிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் நடந்தது.

    அப்போது கோவிலில் சப்பர முகூர்த்த விழா மேளதாளம் முழங்க தொடங்கியது. இதில் ஆயிரம் பொன் சப்பரத்திற்கு வேண்டிய மூங்கில் சேகரிக்கும் பணி நடந்தது. தொடர்ந்து பட்டர்களின் வேதமந்திரங்கள் முழங்க ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது.

    மேலும் கள்ளழகர் கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் கூடலழகர் கோவிலிலிருந்தும் பட்டர்கள் வந்து கலந்து கொண்டு சித்திரை திருவிழாவை சிறப்பாக நடத்துவது என கலந்து ஆலோசனை செய்தனர். இதில் கோவில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்களும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    மதுரையை மன்னர்கள் ஆண்ட காலத்தில் நடந்த சித்திரை திருவிழாவில் பிரமாண்டமாக ஆயிரம் பொன் செலவில் 3 மாதங்கள் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களால் செய்யப்பட்ட சப்பரத்தில் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளுவார். ஆயிரம் பொன் செலவில் செய்யப்படுவதால் இதற்கு ‘ஆயிரம் பொன் சப்பரம்’ என்ற பெயர் வந்தது. ஆனால் தற்போது கள்ளழகர் வைகை ஆற்றில் சப்பரம் இல்லாமல் தங்க குதிரை வாகனத்திலேயே எழுந்தருள்கிறார். இருப்பினும் சம்பிரதாயமாக இன்றளவும் ஆயிரம் பொன் சப்பரம் செய்யும் சப்பர முகூர்த்தத்துடன் திருவிழா தொடங்குகிறது.
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் தை தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9 மாதங்களுக்கு பிறகு சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    பஞ்சபூத தலங்களில்நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் ஆகும். இக்கோவிலில் ஆண்டு தோறும் தை தெப்ப திருவிழா 12 நாட்கள் நடைபெறும். இந்தாண்டு தை தெப்ப திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினர். அப்போது கொடிமரத்திற்கு புனிதநீர் கொண்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. பின்னர் சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் 4-ம் பிரகாரத்தில் வீதிஉலா வந்து கோவிலை வந்தடைந்தனர்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 9 மாதங்களுக்கு பிறகு நேற்று தான் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. தெப்ப உற்சவத்தையொட்டி தினமும் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருவர். தை தெப்ப உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் 27-ந் ந்தேதி நடைபெறுகிறது.

    அன்று மாலை 7 மணியளவில் திருவானைக்காவல் டிரங்க் ரோடு அருகே உள்ள ராமதீர்த்த குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி தெப்ப உற்சவம் கண்டருளுவர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    மயிலாடுதுறை புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவில் நடந்த தேர் பவனி மற்றும் திருப்பலியில் திரளானோர் பங்கேற்றனர்.
    மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அந்தோணியார் ஆலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி மற்றும் சிறப்பு திருப்பலி நேற்று முன்தினம் இரவு தஞ்சாவூர் மறைமாவட்ட முதன்மைகுரு ஞானபிரகாசம் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. ஆலய பங்குத்தந்தை பிரிட்டோ அடிகளார் திருவிழா தொடக்க உரையாற்றி வரவேற்றார்.

    ஆத்துக்குடி பங்குத்தந்தை ஆரோக்கியசாமி அடிகளார், மயிலாடுதுறை உதவி பங்குத்தந்தை கஸ்மீர்ராஜ் அடிகளார் இணைந்து நிறைவேற்றிய திருப்பலியில் தஞ்சை நடுவண் இடைநிலை கல்வி வாரிய நிர்வாகி ஜார்ஜ் அடிகளார் சிறப்புரையாற்றினார். திருப்பலியில், உலகையே அச்சுறுத்தி வரும் நோய்த்தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும், உலக அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் நிலைத்திடவும், மக்களின் வாழ்வாதாரம் காக்கப்படவும் சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றன.

    தொடர்ந்து ஆலய வளாகத்தில் தேர் பவனி நடைபெற்றது. பங்குதந்தை பிரிட்டோ அடிகளார் தேர்களை புனிதம் செய்தார். புனித மைக்கேல் சம்மனசு, மாதா, அந்தோணியார் உருவம் தாங்கிய மூன்று தேர்கள் ஆலய வளாகத்தை சுற்றி பவனி வந்தது. இதில், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், பாடகற்குழுவினர், பலிபீட சிறுவர்கள் மற்றும் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    கொடியேற்றத்துடன் தொடங்கிய 10 நாளான நேற்று ஆண்டு திருவிழாவில், தினசரி நவநாள் ஜெபம், மன்றாட்டு மாலை, திருப்பலி உள்ளிட்ட மறைநிகழ்வுகளை தொடர்ந்து கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பங்குத்தந்தை பிரிட்டோ அடிகளார் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
    சிலருக்கு ராகு தோஷம், கால சர்ப்ப தோஷம் இருக்கும். அந்த தோஷம் உள்ளவர்கள் கெடு பலன்கள் குறைவதற்காக நாம் தினமும் பாராயணம் செய்ய வேண்டிய மந்திரத்தை இங்கு பார்ப்போம்.
    சிலருக்கு ராகு தோஷம், கால சர்ப்ப தோஷம் இருக்கும். சிலருக்கு ராகு கேது பெயர்ச்சியின் போது சிலருக்கு மோசமான பலன்கள் ஏற்படக்கூடிய அமைப்பு இருந்தால், அந்த தோஷங்களும், கெடு பலன்கள் குறைவதற்காக நாம் தினமும் பாராயணம் செய்ய வேண்டிய மந்திரத்தை இங்கு பார்ப்போம்.

    இந்த மந்திரத்தை நாம் சொல்லி வர தோஷங்கள் விலகி, நம் வாழ்வில் நன்மைகள் வந்து சேரும்.

    ராகு மந்திரம்

    ராஹுர் தானவ மந்த்ரீச ஸிம்ஹிகா சித்த நந்தன: |
    அர்த்தகாய: ஸதா க்ரோதி சந்திராதித்ய விமர்தன: ||
    ரௌத்ரோ ருத்ரப்ரியோ தைத்ய ஸ்வர்பானுர் பானுபீதித: |
    க்ராஷ ராஜ: ஸுதா பாயீ ராகாதித்ய பிலாஷுக: ||

    பொருள்:

    ராகு என்பவர் அசுர மந்திர, தாயான சிம்ஹிகையின் மனதை மகிழ்ச்சிபடுத்துகிறவன். பாதி உடல் கொண்டவன், கோபத்தை கொண்டவனான இவன், சந்திர, சூரியர்களை பிடிக்கக்கூடிய பயங்கரர்.
    ருத்திரனின் பிரயமுள்ளவனாக இருக்கக் கூடியவர், திதியின் புத்திரன்
    சொர்க்கத்தில் பிரகாசிக்கக் கூடியவனாகவும், சூரியனுக்கு பீதியை கொடுக்க வல்லவன்,
    அமிர்தத்தை குடித்தவனும், பெளர்ணமியை எதிர்நோக்கி இருப்பவனாவார்.

    ராகு மந்திரம்

    ஓம் ராகு தேவாய நமோ நமஹ

    ராகு காயத்ரி மந்திரம்:
    ஓம் நாகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி
    தந்நோ ராகு ப்ரசோதயாத்

    ராகு தோஷம் மட்டும் உள்ளவர்கள் இந்த மந்திரத்தை ஜெபித்து வந்தால் ராகுவால் ஏற்படக்கூடிய துன்பங்கள் நீங்கி நன்மை உண்டாகும்.

    திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கிரிவலம் சென்றார். வழிநெடுகிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்படுவதால் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி சுமார் 14 கிலோ மீட்டர் கிரிவலம் சென்று வருகின்றனர்.

    கார்த்திகை தீபம் முடிந்த அடுத்த நாளும், மாட்டுப்பொங்கலுக்கு அடுத்த நாளும் வருடத்தில் 2 முறை பக்தர்களை போலவே அருணாசலேஸ்வரரும் மலையை சுற்றி கிரிவலம் செல்வது வழக்கம்.

    பிருங்கி முனிவர் என்பவர் அருணாசலேஸ்வரை மட்டுமே வணங்கி வந்துள்ளார். ஒரு சமயத்தில் அருணாசலேஸ்வரரும், அம்மனும் ஒன்றாக இருந்த போது வண்டு உருவில் மாறி அருணாசலேஸ்வரரை மட்டும் சுற்றி வந்து வணங்கியிருக்கிறார். இதனால் சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு பின்னர் கூடல் ஏற்பட்டதாக ஐதீகம். இது மனித வாழ்வில் கணவன்-மனைவிக்கு இடையே ஊடல் ஏற்பட்டு கூடல் ஏற்படுவது வாழ்வின் ஒரு நிலை என்பதை உணர்த்துகிறது.

    இந்த ஊடல் மற்றும் கூடலை விளக்கும் வகையில் பொங்கலுக்கு அடுத்த நாள் திருவண்ணாமலையில் திருவூடல் திருவிழா நடக்கும். இந்த திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது சாமிக்கும், அம்மனுக்கும் ஊடல் ஏற்பட்டு கோவிலுக்கு அம்மன் சென்று விட்டார். அருணாசலேஸ்வரர் குமரக்கோவிலுக்கு சென்று விட்டார்.

    dஅங்கிருந்து நேற்று காலையில் அருணாசலேஸ்வரர் கிரிவலம் புறப்பட்டார். வழிநெடுகிலும் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர்.

    மதியம் சாமி மீண்டும் கோவிலை அடைந்தார். அப்போது கோவில் வளாகத்தில் மறுவூடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர் விடுமுறையாலும், காணும் பொங்கல் என்பதாலும், மறுவூடல் விழா என்பதாலும் திருவண்ணாமலை கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு அவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
    தொடர் விடுமுறை காரணமாக திருத்தணி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் குவிந்தனர். சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான சுப்பிரமணிய சாமி கோவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மலை மீது அமைந்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த 4 நாட்களாக விடப்பட்ட தொடர் விடுமுறை காரணமாக, நேற்று பெருமளவில் பக்தர்கள் திருத்தணி முருகன் கோவிலில் குவிந்தனர்.

    திரளான பக்தர்கள் கோவிலை நோக்கி படையெடுத்ததன் காரணமாக கோவில் ஊழியர்கள் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

    இதையடுத்து, சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விரைவு தரிசனம் செய்ய ரூ.150 கட்டணம் செலுத்தி சென்ற பக்தர்கள், சுமார் 1 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக காலையில் மூலவர் சுப்பிரமணிய சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின்னர், அவருக்கு தங்க ஆபரணங்கள் மற்றும் ஜரிகை அங்கவஸ்திரம் அணிவிக்கப்பட்டது.

    ×