என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    இந்திர ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தால், நரகத்தில் இடர்படும் நமது முன்னோர்களும் விடுதலையாகி நலம் பெறுவார்கள்; நாமும் நலம் அடையலாம்.
    மாதத்திற்கு இரண்டு முறை ஏகாதசி திதி வரும். அதன்படி வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வரும். ஒரு சில வருடங்கள் 25 ஏகாதசிகள் கூட வருவதுண்டு. மாதந்தோறும் வரும் ஒவ்வொரு ஏகாதசியும் சிறப்புக்குரியவைதான். அவற்றுள் ஐப்பசி மாத ஏகாதசிகள் மிகவும் பெருமை வாய்ந்தவைகளாகும். இந்த மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசியை ‘இந்திர ஏகாதசி’ என்று அழைக்கிறார்கள். இந்த ஏகாதசியின் சிறப்புகள் பற்றி இப்போது பார்க்கலாம்.

    ஐப்பசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியை, இந்திர ஏகாதசி என்று அழைப்பார்கள். இந்த ஏகாதசியை நாரதர் வெளிப்படுத்தினார். மாஹிஷ்மதி என்ற நகரை இந்திரசேனன் என்ற மன்னன் நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தான். ஒரு நாள் அவனுடைய அரசவைக்கு நாரத முனிவர் வந்தார். மாமுனியைப் பார்த்ததும், இந்திரசேனன் மிகுந்த மரியாதையுடன் அவரை வரவேற்று உயர்ந்த ஒரு ஆசனத்தில் அமரச் செய்தான்.

    பின்னர் நாரதர் வருகையின் நோக்கத்தை மன்னன் கேட்டான். அப்போது நாரதர், “மன்னா! நான் இப்போது எமலோகத்தில் இருந்து வருகிறேன். அங்கு உன் தந்தை நரகத்தில் கடுந்துயரை அனுபவித்து வருகிறார். அவர், ‘என் மகனிடம் சொல்லி, இந்திர ஏகாதசி விரதத்தைச் செய்யச் சொல்லுங்கள். அவன் பூலோகத்தில் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால், நான் இங்கு நரகத்தில் இருந்து விடுதலை பெறுவேன். என்னை கரையேற்றும்படி என் பிள்ளையிடம் சொல்லுங்கள்’ என்று என்னிடம் சொல்லி அனுப்பினார். அதைச் சொல்வதற்காகவே தற்போது நான் வந்தேன்” என்று கூறினார்.

    தன் தந்தை நரகத்தில் படும் துயரைக் கேட்டு இந்திரசேனன் மனம் வருந்தினான். இருப்பினும் தந்தை விடுதலைப் பெறுவதற்கு ஒரு வழி இருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தான். இந்திர ஏகாதசியை கடைபிடிக்கும் வழிமுறையையும் நாரதரிடம் கேட்டறிந்தான். அவர் கூறியபடியே விரதத்தை செய்து முடித்தான். அதன் பலனாக இந்திரசேனனின் தந்தை நரகத்தில் இருந்து விடுதலை ஆகி, சொர்க்கத்தை சென்றடைந்தார்.

    இன்றும் பல குடும்பங்களில் ஓரளவுக்கு வசதிகள் இருந்தும், குடும்பத்தில் நிம்மதி இல்லாத தன்மை நிலவுகிறது. இதுபற்றி விவரம் அறிந்த ஜோதிடர்களிடம் போய் கேட்டால், ‘பித்ருக்களின் சாபமே இதற்குக் காரணம்’ என்று கூறுவார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால், நரகத்தில் இடர்படும் நமது முன்னோர்களும் விடுதலையாகி நலம் பெறுவார்கள்; நாமும் நலம் அடையலாம்.
    கொரோனா பரவல் தடுப்பு பணி காரணமாக மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் பக்தர்கள் செல்ல தடையும் விதிக்கப்பட்டு இருக்கிறது.
    கோவையில் புகழ்பெற்ற மருதமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    தற்போது கொரோனா பரவல் காரணமாக தைப்பூச திருவிழா நடைபெற கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 21-ஆம் தேதி இரவு வாஸ்து பூஜை நடைபெறுகிறது. மறுநாள் காலை தைப்பூச திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.

    தொடர்ந்து தினமும் காலை, மாலை யாகசாலை பூஜைகளும், 28-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் சுப்ரமணிய சுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து சிறிய தேரில் சுப்பிரமணிய சுவாமி- வள்ளி, தெய்வானையுடன் வீதி உலா வருகின்றார்.

    கொரோனோ வைரஸ் பரவல் காரணமாக தைப்பூச தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    இது குறித்து கோவில் உதவி ஆணையாளர் (பொறுப்பு) விமலா கூறியதாவது:-

    ஆண்டுதோறும் மருதமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அத்துடன் முருகன் கோவில்களில் தைப்பூச தேரோட்டம் நடத்த தடை விதித்து உள்ளது. எனவே மருதமலை முருகன் கோவிலில் வருகிற 28-ந் தேதி நடக்க இருந்த தைப்பூச தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    ஆனால் சுப்ரமணிய சுவாமி- வள்ளி,தெய்வானை திருக் கல்யாணம் நடைபெறுகிறது. அதுபோன்று பெரிய தேரோட்டம் நடப்பதற்கு பதிலாக சிறிய தேரில் சுப்ரமணிய சுவாமி- வள்ளி, தெய்வானையுடன் வீதியுலா வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை. நிகழ்ச்சி முடிந்தவுடன் பக்தர்கள் காலை 8 மணிக்கு மேல் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    அதுபோன்று பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் கோவில் வளாகத்திற்குள் தங்குவதற்கு அனுமதி இல்லை. தைப்பூசத்தன்று காலை 8 மணி அளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    அன்றைய தினம் பால்குடம், பால்காவடி எடுத்து வருபவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் நடைபெற வேண்டிய நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்திலேேய தீர்த்தவாரி நடந்தது.
    திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரருக்கு தை மாதம் 5-ந்தேதியன்று மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றிலும், ரத சப்தமி நாளில் கலசபாக்கம் செய்யாற்றிலும், மாசி மகத்தன்று பள்ளி கொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதமநதியிலும் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி தை மாதம் 5-ந்தேதியன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் நடைபெற வேண்டிய தீர்த்தவாரி நிகழ்ச்சி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை கோவில் வளாகத்தில் நடத்த கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தை மாதம் 5-ம் நாளான நேற்று காலையில் கோவிலில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு தீபாராதனை நடந்தது.

    பின்னர் தென்பெண்ணையாற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள மகிழ மரத்தின் அருகில் வைத்து சாமியின் சூலத்திற்கு மங்கல வாத்தியங்கள் முழங்க தீர்த்தவாரி செய்யப்பட்டது.

    தொடர்ந்து சூலத்திற்கு பால், மஞ்சள், சந்தனம் போன்றவற்றின் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் தென்பெண்ணையாற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரால் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

    வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடி புனித பெரிய அந்தோணியார் தேவாலயத்தில் 5 மின்ரத பவனி விசுவாச வளாகத்தில் இருந்து புறப்பட்டு தேவாலயத்தை சுற்றி வந்தது.
    வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடியில் பழமை வாய்ந்த புனித பெரிய அந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 16-ந் தேதி புனிதரின் ஆடம்பர கொடியேற்றத்துடன் தொடங்கியது. 17-ந் தேதி திருவிருந்து திருப்பலி நடந்தது. நேற்று அதிகாலையில் 5 மின்ரத பவனி விசுவாச வளாகத்தில் இருந்து புறப்பட்டு தேவாலயத்தை சுற்றி வந்தது.

    மாலையில் புனித பெரிய அந்தோணியார், அன்னை வேளாங்கண்ணி, புனித ராயப்பர், சிறிய அந்தோணியார், புனித வனதூதர் ஆகிய புனிதர்களின் சிலைகளுடன் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேர் பவனி தேவாலயத்தை சுற்றி வந்தது. இத்திருவிழாவில் திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, சென்னை மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை மறை வட்ட முதன்மை குரு, பங்குத்தந்தை, உதவி பங்குத்தந்தை மற்றும் இறைமக்கள் செய்து இருந்தனர்.
    சேத்துப்பட்டு பேரூராட்சி பழம்பேட்டை பகுதியில் உள்ள பாஞ்சாலி அம்மன் கோவிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு பாஞ்சாலி அம்மன் ஊர்வலம் நடந்தது.
    சேத்துப்பட்டு பேரூராட்சி பழம்பேட்டை பகுதியில் உள்ள பாஞ்சாலி அம்மன் கோவிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு பாஞ்சாலி அம்மன் ஊர்வலம் நடந்தது.

    இதையொட்டி பாஞ்சாலி அம்மன், கிருஷ்ணர், அர்ஜூனன், பீமன், தர்மன் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து கிராம தேவதையாக விளங்கும் பாஞ்சாலி அம்மனுக்கு படையலிட்டனர்.

    அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அர்ஜூனன், பாஞ்சாலி அம்மன், கிருஷ்ணர் ஆகிய உற்சவ மூர்த்திகளை புஷ்ப பல்லக்கில் வைத்து வீதி உலா நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்தனர்.

    திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதி முன் மண்டப நுழைவு வாயிலில் 12 அடி உயரம், 8 அடி அகலத்தில் கல்நிலை அமைக்கப்படுகிறது.
    திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதி முன் மண்டப நுழைவு வாயிலில் 12 அடி உயரம், 8 அடி அகலத்தில் கல்நிலை அமைக்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழா நடந்தது. அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர் தலைமை தாங்கி, கல் நிலை நடும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    பொதுச்செயலாளர் பொன்னுத்துரை, இணை தலைவர்கள் பேராசிரியர் விஜயகுமார், பால்சாமி, அய்யாப்பழம், ராஜதுரை, துணை செயலாளர் ராஜேந்திரன், இணை செயலாளர்கள் தங்கம், செல்வின், வரதராஜ பெருமாள், ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்ட ஆலோசகர் வக்கீல் சந்திரசேகரன், நிர்வாக குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, இளங்கோ மற்றும் பேராசிரியர் ஸ்ரீமதி, சங்கரன், கணேசன், கண்ணன், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    சாணார்பட்டி அருகேயுள்ள கணவாய்பட்டி ஊராட்சி கொரசினம்பட்டியில் அத்தி விநாயகர், வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    சாணார்பட்டி அருகேயுள்ள கணவாய்பட்டி ஊராட்சி கொரசினம்பட்டியில் அத்தி விநாயகர், வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்தல், கணபதி பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று காலை 10 மணியளவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் தொழிலதிபர் அமர்நாத், அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் கே.சுப்பிரமணி, கிழக்கு மாவட்ட இளைஞரணி இணைச்செயலாளர் இளம்வழுதி, கணவாய்பட்டி ஊராட்சி தலைவர் நிஷா, ஒன்றிய கவுன்சிலர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ‘படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பம். அவனது குடும்பத்தின் மீது அன்பு காட்டுபவனே அவனது படைப்பில் அவனுக்கு மிகவும் விருப்பத்திற்குரியவன்' என்று இஸ்லாம் சொல்கிறது.
    உலகம் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளில் முதன்மையானது ‘சுற்றுச்சூழல் சீர்கேடு’ ஆகும். இதுபற்றியும், பூமி வெப்பமாவது குறித்தும்தான் அனைவரும் இன்று அதிகமாக விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். தொழிற்சாலை கழிவுகள், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாடு, கதிரியக்க கசிவுகள், மலைகள் - காடுகள் அழிப்பு, நீர்நிலைகளை பாழ்படுத்துதல், பிளாஸ்டிக் பயன்பாடு, வாகனங்களின் புகை போன்ற பல்வேறு காரணங்களால் சுற்றுச்சூழல் இன்று சீர்கெட்டு போயுள்ளது.

    புவியை காப்பதில், சூழல் சீர்கேடுகளை தடுப்பதில் நாம் தீவிரம் காட்ட வேண்டும். குறிப்பாக இஸ்லாமியர்கள் இது குறித்து அதிகம் அக்கறை கொள்ள வேண்டும். ஏனென்றால் பூமியையும், சூழலையும் பற்றி அதிகமாக பேசும் மார்க்கமாக இஸ்லாம் இருக்கிறது. ‘படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பம். அவனது குடும்பத்தின் மீது அன்பு காட்டுபவனே அவனது படைப்பில் அவனுக்கு மிகவும் விருப்பத்திற்குரியவன்' என்று இஸ்லாம் சொல்கிறது.

    படைப்புகள் என்றால் மனிதன் மட்டுமல்ல மரங்கள், காடுகள், மலைகள், நீர்நிலைகள், ஜீவராசிகள் என அனைத்துமே இறைவனின் படைப்புதான். இதன்மீது அன்பு காட்டுபவனையே இறைவன் விரும்புகிறான் என்பது இஸ்லாத்தின் வலியுறுத்தலாகும்.

    மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளும் வாழ ஏற்ற இடம்தான் இந்த பூமியாகும். இது சீராக இயங்குவதற்கு நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவை அவசியமானதாக இருக்கிறது. இவைகளை மனிதன் தனது சுயநலத்திற்காக அழிக்க முற்படும்போதுதான் சூழல் பிரச்சினைகள் மேலெழும்புகின்றன.

    உலகில் மனித வாழ்வு நிலைத்திருக்க, சூழல் பாதுகாப்பு மிக அவசியமானதாக இருக்கின்றது. சுற்றுச்சூழல் பாதிக்கப் படுவதற்கு முதன்மையானகாரணமாக இருப்பது வளர்ச்சி என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களேயாகும். இதற்காக காடுகள் அழிக்கப்படுகின்றன, மரங்கள் வெட்டப்படுகின்றன, நீர்நிலைகள் தூர்ந்துப்போகச் செய்யப் படுகின்றன.

    அதனால்தான் இஸ்லாம் மரம் நடுவதையும், இயற்கை வளங்களை காப்பதிலும் அதிக அக்கறையை காட்டிட சொல்கிறது. ‘ஒருவர் ஒரு மரத்தினை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்கு கிடைக்கும்' என்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள் (நூல்: புகாரி).

    ‘அடுத்த நொடியில் உலகம் அழியும் என்றிருந்தாலும் ஒரு ஈத்த மரக்கன்று என் கரத்தில் இருந்தால் நான் அதை நட்டு விடுவேன்' என்று நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

    அதேபோல் ‘வழிப்போக்கர்களுக்கும், பிராணிகளுக்கும், நிழல் தரக்கூடிய வகையில் வெட்டவெளியில் நிற்கக்கூடிய மரம் ஒன்றை யார் அநியாயமாக வெட்டுகிறாரோ அவரது தலையைப் பிடித்து இறைவன் நரகில் தள்ளுவான்' என்று இஸ்லாம் எச்சரிக்கை செய்கிறது.

    மரங்கள் நடுவது என்று மட்டுமல்ல குளங்கள், குட்டைகள், ஆறுகள், ஓடைகள், கிணறுகள் என அனைத்து இயற்கை வளங்கள் பாதுகாப்பு பற்றியும் இஸ்லாம் முக்கியத்துவம் கொடுத்து பேசுகிறது. ‘பூமியில் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதில் நாசம் செய்யாதீர்கள்' என்றும், ‘அவன்தான் உங்களை பூமியிலிருந்து படைத்தான்; அதனை வளப்படுத்துமாறு கேட்டுக்கொண்டான்' என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.

    பூமியை வளப்படுத்த வேண்டும் என்றால், பாதுகாக்க வேண்டும் என்றால் பூமியை தாங்கி நிற்கும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் விஷயங்களில் இருந்து விலகி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குறிப்பாக மரங்கள் நடுவதிலும், காடுகள் அழிப்பை தடுப்பதிலும், காற்று மாசு உள்ளிட்ட பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதிலும் அதிக அக்கறையை காட்டிட வேண்டும்.

    - வி. களத்தூர் பாரூக்.
    சபரிமலை கோவில் மண்டல, மகர விளக்கு சீசன் நாளையுடன் நிறைவடைகிறது. இன்று மட்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
    சபரிமலை :

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் களபாபிஷேகம் நடைபெற்றது. தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் நடைபெற்ற களபாபிஷேகத்தில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதிகள் பிரதீப்குமார் வர்மா, சுரேஷ் வர்மா ஆகியோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து மன்னர் குடும்ப பிரதிநிதிகள், வழக்கமான பாரம்பரிய முறைப்படி, தந்திரி, மேல்சாந்தி, கீழ்சாந்திகள் ஆகியோருக்கு பண முடிப்புகளை வழங்கினர்.

    இன்று (செவ்வாய்க்கிழமை)கோவிலில் நெய்யபிஷேகம் நடைபெறாது. பக்தர்கள் இன்று வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நடப்பு மண்டல மகர விளக்கு பூஜைகளின் நிறைவாக இன்று இரவு மாளிகப்புரத்தம்மன் கோவிலில் குருதி சமர்ப்பன சடங்கு நடைபெறும். அதில் பந்தளம் மன்னர் குடும்ப பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.

    நாளை (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடைபெறும். 6 மணிக்கு பந்தளம் மன்னர் குடும்ப பிரதிநிதிகள் சாமி தரிசனம் செய்த பிறகு நடை அடைக்கப்படும். அப்போது சன்னிதானத்தில் மற்ற பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பின்னர் ஐயப்பன் கோவில் கருவறையின் சாவி முறைப்படி மன்னர் குடும்ப பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்படும். அதனை மீண்டும் கோவில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி பெற்றுக் கொள்வார்.

    அதை தொடர்ந்து ராஜ குடும்ப பிரதிநிதிகளின் தலைமையில் சன்னிதானத்தில் இருந்து திருவாபரணங்கள் தாங்கிய பேழையுடன் ஊர்வலம் பந்தளம் நோக்கி புறப்படும். அத்துடன் 2020-2021 மண்டல மகர விளக்கு சீசன் நிறைவு பெறும்.

    மீண்டும் மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பிப்ரவரி மாதம் 12-ந் தேதி திறக்கப்படும்.
    ஜனவரி மாதம் 19-ம் தேதியில் இருந்து ஜனவரி மாதம் 25-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    19-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * சஷ்டி விரதம்
    * பிள்ளையார் நோன்பு
    * சிறிய நகசு
     * சந்திராஷ்டமம் - மகம், பூரம்

    20-ம் தேதி புதன் கிழமை :
     
    * சப்தமி
    * மரணயோகம்
    * சந்திராஷ்டமம் - பூரம், உத்திரம்
     
    21-ம் தேதி வியாழக்கிழமை :

    * அஷ்டமி
    * சித்தயோகம்
    * சந்திராஷ்டமம்- உத்திரம், அஸ்தம்

    22-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

    * நவமி
    * சித்தயோகம்
    * சந்திராஷ்டமம் - அஸ்தம், சித்திரை

    23-ம் தேதி சனிக்கிழமை :

    * கார்த்திகை விரதம்
    * அமிர்த யோகம்
    * சந்திராஷ்டமம் - சித்திரை, சுவாதி

    24-ம் தேதி ஞாயிற்று கிழமை :

    * சர்வ ஏகாதசி
    * கரிநாள்
    * சந்திராஷ்டமம் - சுவாதி, விசாகம்

    25-ம் தேதி திங்கள் கிழமை  :

    * சுபமுகூர்த்த நாள்
    * வாஸ்து நாள்
    * சித்தயோகம்
    * சந்திராஷ்டமம் - விசாகம், அனுஷம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது கொடிமரத்திற்கும், சாமிக்கும் சிறப்பு பூஜையுடன், தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த ஆண்டு தை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சாமி சன்னதியில் உள்ள கொடி மரத்தில் காலை 10.40 மணிக்கு மேல் 11.04 மணிக்குள் மீன லக்னத்தில் கொடியேற்றம் நடந்தது. அங்கு மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர் சாமியும் எழுந்தருளினார்.

    அப்போது கொடிமரத்திற்கும், சாமிக்கும் சிறப்பு பூஜையுடன், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழா நடைபெறும் 12 நாட்களும் காலை, இரவு என இரு வேளையும் சாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். விழாவில் வருகிற 23-ந் தேதி சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையும், 24-ந் தேதி வலைவீசி அருளிய லீலையும் நடைபெறுகிறது.

    தெப்பத்திருவிழாவிற்கு முன்னோட்டமாக தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி வருகிற 26-ந் தேதி நடக்கிறது. அதைத் தொடர்ந்து 27-ந்தேதி சிந்தாமணியில் கதிரறுப்பு திருவிழா நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா காமராஜர் சாலையில் உள்ள தெப்பத்தில் வருகிற 28-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சாமி அதிகாலை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்பாடாகி தெப்பக்குளத்தை சென்றடைவர். அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சாமியும், அம்மனும் காலை 10.35 மணி முதல் 11.59 மணிக்குள் எழுந்தருளி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.

    காலை 2 முறையும், இரவு ஒரு முறையும் சாமி தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். அதன்பின்னர் இரவு 7 மணிக்கு மேல் சாமி தங்கக்குதிரை வாகனத்திலும், அம்மன் அவுதா தொட்டிலிலும் எழுந்தருளி மீண்டும் கோவிலுக்கு புறப்படுவார்கள். அன்றைய தினம் சாமி தெப்பத்திற்கு சென்று மீண்டும் கோவிலுக்கு திரும்பும் வரை அன்று முழுவதும் நடை சாத்தப்பட்டிருக்கும்.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    ஆத்மநாதவனம் சமுக்தியாம்பிகை கோவிலில் பூசணி தீபம் ஏற்றியும், பாலாபிஷேகம் செய்தும், தொழில் தடை, கல்வித்தடை, கடன் மற்றும் பணப்பிரச்சினைகளிலிருந்து விடுபட வழிபாடு செய்கின்றனர்.
    கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் அங்கலக்குறிச்சியில் மேற்கு தொடர்ச்சி மலை சாரலில் எழில் மிகு இயற்கை சூழலில் மூலிகைகள் நிறைந்த தாடகை மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ஆத்ம நாதவனம். இங்கு சமுக்தியாம்பிகை, கால சம்ஹார பைரவர், சரபேஸ்வரர் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். 

    திருக்கோவிலின் அம்பிகைக்கு தேங்காய் மாலை வழிபாடு பக்தர்களால் நடத்தப்படுகிறது. இவ்வழிப்பாட்டின் மூலம் திருமணத்தடை நீக்கி, குழந்தையின்மை நீங்குவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

    இக்கோவிலின் பைரவ மூர்த்தியானவர் 8 அடி உயரத்தில் 8 கைகளுடன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். எங்கும் காணமுடியாத வண்ணம் பைரவரின் நாய் வாகனமானது சுவாமியின் திருமுகத்தை பார்த்தபடி இருப்பது தனிச்சிறப்பாகும். 

    தேய்பிறை அஷ்டமியன்று திரளாக பக்தர்கள் பூசணி தீபம் ஏற்றியும், பாலாபிஷேகம் செய்தும், தொழில் தடை, கல்வித்தடை, கடன் மற்றும் பணப்பிரச்சினைகளிலிருந்து விடுபட வழிபாடு செய்கின்றனர். 

    தேய்பிறை அஷ்டமியன்று மட்டையுடன் கூடிய முழுத் தேங்காயை பைரவரிடம் சமர்பித்து தங்களது கோரிக்கையை பிரார்த்திக்கின்றனர். பின்னர் அத்தேங்காயை வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். அக்கோரிக்கை நிறைவேறிய பின்பு அந்த தேங்காயை மீண்டும் கோவிலில் செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

    இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சரபேஸ்வரர் சிலை, சித்தர்களால் வழங்கப்பட்டது. இவ்விக்கிரகம் போல் வேறு எங்கும் இல்லை என்பது தனிச்சிறப்பாகும். நீரால் சூழப்பட்டுள்ள சிறு கருவறையில் சரபேஸ்வரர் அருள்பாலிக்கிறார். ஒரு சிறு பாலத்தின் வழியே அர்ச்சர்கள் சென்று பூஜை செய்கின்றனர். உடல், மனநோய் மற்றும் கெட்ட சக்திகளின் தொல்லையில் இருந்து விடுபடவும் பவுர்ணமி இரவில் பல மூலிகைகளால் ஆன அவுஷதா அபிஷேகம் நடைபெறுகிறது. 

    இந்த அவுஷதா அபிஷேகம் இக்கோவிலில் மட்டுமே நடைபெறுவது தனிச்சிறப்பாகும். பல்வேறு மூலிகைகளைக் கொண்டு கோவிலிலேயே தயாரிக்கப்படும் பச்சை நிற குங்குமம் அம்பிகையின் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இங்கு தேய்பிறை அஷ்டமி, ஜாம பூஜை மற்றும் பவுர்ணமியன்று வழங்கப்படும் சித்த மூலிகை தீர்த்தம் பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்குகிறது. பொள்ளாச்சியில் இருந்து ஆழியார் மற்றும் கோட்டூர் செல்லும் பஸ்களின் மூலம் அங்கலக்குறிச்சி சென்று அங்கிருந்து ஆட்டோ, கார் மற்றும் நடைப்பயணம் மூலம் ஆத்மநாத வனத்தை அடையலாம். 

    ஆலய தொடர்புக்கு- 94895 09305 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
    ×