search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாம்
    X
    இஸ்லாம்

    பூமியையும், சூழலையும் பற்றி அதிகமாக பேசும் இஸ்லாம்

    ‘படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பம். அவனது குடும்பத்தின் மீது அன்பு காட்டுபவனே அவனது படைப்பில் அவனுக்கு மிகவும் விருப்பத்திற்குரியவன்' என்று இஸ்லாம் சொல்கிறது.
    உலகம் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளில் முதன்மையானது ‘சுற்றுச்சூழல் சீர்கேடு’ ஆகும். இதுபற்றியும், பூமி வெப்பமாவது குறித்தும்தான் அனைவரும் இன்று அதிகமாக விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். தொழிற்சாலை கழிவுகள், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாடு, கதிரியக்க கசிவுகள், மலைகள் - காடுகள் அழிப்பு, நீர்நிலைகளை பாழ்படுத்துதல், பிளாஸ்டிக் பயன்பாடு, வாகனங்களின் புகை போன்ற பல்வேறு காரணங்களால் சுற்றுச்சூழல் இன்று சீர்கெட்டு போயுள்ளது.

    புவியை காப்பதில், சூழல் சீர்கேடுகளை தடுப்பதில் நாம் தீவிரம் காட்ட வேண்டும். குறிப்பாக இஸ்லாமியர்கள் இது குறித்து அதிகம் அக்கறை கொள்ள வேண்டும். ஏனென்றால் பூமியையும், சூழலையும் பற்றி அதிகமாக பேசும் மார்க்கமாக இஸ்லாம் இருக்கிறது. ‘படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பம். அவனது குடும்பத்தின் மீது அன்பு காட்டுபவனே அவனது படைப்பில் அவனுக்கு மிகவும் விருப்பத்திற்குரியவன்' என்று இஸ்லாம் சொல்கிறது.

    படைப்புகள் என்றால் மனிதன் மட்டுமல்ல மரங்கள், காடுகள், மலைகள், நீர்நிலைகள், ஜீவராசிகள் என அனைத்துமே இறைவனின் படைப்புதான். இதன்மீது அன்பு காட்டுபவனையே இறைவன் விரும்புகிறான் என்பது இஸ்லாத்தின் வலியுறுத்தலாகும்.

    மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளும் வாழ ஏற்ற இடம்தான் இந்த பூமியாகும். இது சீராக இயங்குவதற்கு நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவை அவசியமானதாக இருக்கிறது. இவைகளை மனிதன் தனது சுயநலத்திற்காக அழிக்க முற்படும்போதுதான் சூழல் பிரச்சினைகள் மேலெழும்புகின்றன.

    உலகில் மனித வாழ்வு நிலைத்திருக்க, சூழல் பாதுகாப்பு மிக அவசியமானதாக இருக்கின்றது. சுற்றுச்சூழல் பாதிக்கப் படுவதற்கு முதன்மையானகாரணமாக இருப்பது வளர்ச்சி என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களேயாகும். இதற்காக காடுகள் அழிக்கப்படுகின்றன, மரங்கள் வெட்டப்படுகின்றன, நீர்நிலைகள் தூர்ந்துப்போகச் செய்யப் படுகின்றன.

    அதனால்தான் இஸ்லாம் மரம் நடுவதையும், இயற்கை வளங்களை காப்பதிலும் அதிக அக்கறையை காட்டிட சொல்கிறது. ‘ஒருவர் ஒரு மரத்தினை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்கு கிடைக்கும்' என்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள் (நூல்: புகாரி).

    ‘அடுத்த நொடியில் உலகம் அழியும் என்றிருந்தாலும் ஒரு ஈத்த மரக்கன்று என் கரத்தில் இருந்தால் நான் அதை நட்டு விடுவேன்' என்று நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

    அதேபோல் ‘வழிப்போக்கர்களுக்கும், பிராணிகளுக்கும், நிழல் தரக்கூடிய வகையில் வெட்டவெளியில் நிற்கக்கூடிய மரம் ஒன்றை யார் அநியாயமாக வெட்டுகிறாரோ அவரது தலையைப் பிடித்து இறைவன் நரகில் தள்ளுவான்' என்று இஸ்லாம் எச்சரிக்கை செய்கிறது.

    மரங்கள் நடுவது என்று மட்டுமல்ல குளங்கள், குட்டைகள், ஆறுகள், ஓடைகள், கிணறுகள் என அனைத்து இயற்கை வளங்கள் பாதுகாப்பு பற்றியும் இஸ்லாம் முக்கியத்துவம் கொடுத்து பேசுகிறது. ‘பூமியில் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதில் நாசம் செய்யாதீர்கள்' என்றும், ‘அவன்தான் உங்களை பூமியிலிருந்து படைத்தான்; அதனை வளப்படுத்துமாறு கேட்டுக்கொண்டான்' என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.

    பூமியை வளப்படுத்த வேண்டும் என்றால், பாதுகாக்க வேண்டும் என்றால் பூமியை தாங்கி நிற்கும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் விஷயங்களில் இருந்து விலகி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குறிப்பாக மரங்கள் நடுவதிலும், காடுகள் அழிப்பை தடுப்பதிலும், காற்று மாசு உள்ளிட்ட பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதிலும் அதிக அக்கறையை காட்டிட வேண்டும்.

    - வி. களத்தூர் பாரூக்.
    Next Story
    ×