search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்ராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் காலை தாமரைக் குளக்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது குளக்கரையில் சிறப்பு அலங்காரத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு அடுத்த நாள் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நேற்று திருவூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வரலாற்று கதை கூறப்படுகிறது. அதாவது பிருங்கி என்ற முனிவர் அருணாசலேஸ்வரரை மட்டுமே வணங்கி வந்துள்ளார். ஒரு சமயத்தில் அருணாசலேஸ்வரரும், அம்மனும் ஒன்றாக இருந்தபோது அவர் வண்டு உருவில் அருணாசலேஸ்வரரை மட்டும் சுற்றி வந்து வணங்கி இருக்கிறார். இதனால் சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு பின்னர் கூடல் ஏற்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த ஊடல் மற்றும் கூடலை விளக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருவூடல் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது.

    மேலும் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கோவிலில் உள்ள நந்திகளுக்கு வடை, அதிரசம், முருக்கு, காய், கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டு, பூ மாலைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    சாமி, அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் திருவூடல் விழாவுக்கு புறப்பட்டனர். அதிகாலையில் நந்திக்கு தரிசனம் கொடுத்து விட்டு திட்டி வாயிலில் சூரிய பகவானுக்கும் காட்சி கொடுத்து மாடவீதியை 3 முறை சுற்றி வந்தனர். அதைத்தொடர்ந்து இரவு சுமார் 7 மணி அளவில் திருவூடல் தெருவில் திருவூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    திருவூடல் திருவிழாவின் போது சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு அம்மன் மீண்டும் கோவிலுக்கு சென்று விட்டார். அருணாசலேஸ்வரர் மட்டும் குமரக்கோவிலுக்கு சென்று விட்டார். அங்கிருந்து இன்று (சனிக்கிழமை) பக்தர்கள் கிரிவலம் செல்வது போன்று அருணாசலேஸ்வரர் கிரிவலம் செல்வார். கிரிவலம் முடித்து விட்டு கோவிலுக்கு வரும் போது சாமி சன்னதியில் மறுவூடல் நடக்கும். இதனுடன் திருவூடல் திருவிழா முடிகிறது.

    மேலும் விடுமுறை தினமான நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    ஆரணி கோட்டை அறம் வளர்த்த நாயகி உடனுறை கைலாயநாதர் சிவன் கோவிலில் மாட்டுப் பொங்கலையொட்டி திருவூடல் விழா நடைபெற்றது. கோவில் வெளிப்புறத்தில் அமைந்துள்ள அதிகாரநந்திக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, தொடர்ந்து நந்திக்கு காய்கறிகள், மலர்கள், இனிப்பு, கார வகைகளால், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் சாமியை ராஜகோபுரத்தின் வழியாக அதிகார நந்தி காட்சிதரும்படி அலங்கரித்து வலம் வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் புதுகாமூர் பகுதியில் அமைந்துள்ள புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில், சைதாப்பேட்டை பூமிநாதர் கோவில், மெய்யூர் மெய்கண்டீஸ்வரர் கோவில், சேவூர் - பையூர் பகுதியிலுள்ள விருபாட்சீஸ்வரர் கோவில், எஸ்.வி. நகரம் பகுதியில் உள்ள திரைகேபேஸ்வரர் சிவன் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் திருவூடல் விழா நடைபெற்றது.
    Next Story
    ×